நோயாளிகளின் உரிமைகள்
நன்றி குங்குமம் டாக்டர் (சிறப்பு கட்டுரை)
‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி... அசராம அடிக்கறது பாபா பாலிசி’ என்ற ரஜினி டயலாக் மாதிரி ‘நோயாளிகள் கொஞ்சம் அசந்தால்.. அசராமல் அடிப்பதுதான் பல மருத்துவமனைகளின் பாலிசி’யாக இருக்கிறது. நாம் ஏமாளியாக இருந்துகொண்டு மற்றவர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லைதான்.
ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு விழிப்புணர்வோடு இருந்தால் மருத்துவமனைகளின் மோசடிகளிலிருந்து தப்பிக்க முடியும்’ என்பதற்கான வழிமுறைகளை விளக்குகிறார் நுகர்வோர் அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன்.
* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986-ன்படி நோயாளிகளுக்குப் பல உரிமைகள் உள்ளன. இதன்படி மருத்துவ அஜாக்கிரதை, அலட்சியம் என்பதின் கீழ் மருத்துவ சேவை குறைபாடுகள் குறித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றம் அல்லது மாநில மற்றும் தேசிய அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் புகார் மற்றும் மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் பெறலாம். இந்தச் சட்டத்தின்படி உள்ள உரிமைகளைப் பற்றி பார்ப்போம்.
* ஒரு மருத்துவரிடம் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு, உடல் மற்றும் மனதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும் நோயாளிகளைத் தாக்கவோ, காயப்படுத்தவோ, இழிவான சொற்களால் புண்படுத்திப் பேசவோ கூடாது. அவர்களது உடலை மிகுந்த கவனத்துடன் மருத்துவ சேவையாளர்கள் கையாள வேண்டும்.
* தீ, வெள்ளம், அசுத்தமான தண்ணீர், மின்சாரக் கசிவு, தாவரக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளால் நோயாளிகளுக்கு ஆபத்து ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும்.
மருத்துவ சாதனங்கள், மருத்துவமனை படுக்கைகள் முதல் எந்திரங்கள், மின்சார சாதனங்கள் மற்றும் ரசாயனங்களால் பாதிப்புகள் ஏற்படாதவாறு அவற்றை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும்போது தப்பிக்க தகுந்த வழிகள் இருக்க வேண்டும்.
* மருத்துவமனையில் நோயாளியின் தேவைகளுக்கான தண்ணீ–்ர், படுக்கை போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் தொற்றுநோய் கிருமிகளால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகம். அதனால் கழிவுகளை சரியான முறையில், முழுமையாக நீக்கி மருத்துவமனை சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
*தகுதியில்லாத, போதுமான பயிற்சியில்லாத மருத்துவர்களால் நோயாளிகள் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே, மருத்துவ சாதனங்களை இயக்குபவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்றவர்களை வேலையில் திறமை உள்ளவர்களாகவும், சேவை மனப்பான்மை உள்ளவர்களாகவும் நியமிக்க வேண்டும்.
*அவசர சிகிச்சைக்குத் தேவையான உயிரூட்டும் மாத்திரைகள், ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காப்பு சாதனங்கள் போன்ற எல்லா வசதிகளும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
*நோயாளிக்கு தனது நோய் குறித்த ரகசியங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உண்டு. அவர்களுடைய உடல்நிலை, நோய் மற்றும் தனிப்பட்ட விவரங்களை மருத்துவமனை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அவர்களுடைய அனுமதி பெற்ற நபர்களிடமே எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை முடிவுகள், நோய் சம்பந்தமான பிற ஆவணங்கள் மற்றும் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும்.
*மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்களுக்கும்கூட அவரது அனுமதி பெற்றே அவரது மருத்துவ சிகிச்சை ஆவணங்களை கொடுக்க வேண்டும். உடல், மன பரிசோதனையின் போது நோயாளிகளை சங்கடப்படுத்தாமல் பரிசோதனை செய்ய வேண்டும். பெண் நோயாளிகளின் பரிசோதனையின்போது அவரது உறவினர் அல்லது பெண் பணியாளரை அமர்த்திக் கொள்வது அவருக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும்.
*நோயாளிகளை மரியாதையுடன் அழைக்க வேண்டும். நடத்த வேண்டும்.மருத்துவ சிகிச்சை சாதி, மத, இன, கலாச்சார மற்றும் நிற வேறுபாடின்றி கொடுக்க வேண்டும். அவர்கள் மருத்துவமனையில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், தங்கள் நண்பர்கள், உறவினர்களைப் பார்க்கும் உரிமை உண்டு.
*நோயாளிக்கு தங்கள் நோய், அதற்கான சிகிச்சை, சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து பெறும் உரிமை உண்டு.
*சிகிச்சைக்கு சம்மதிப்பதைப் போல, சில சிகிச்சைகளுக்கு மறுப்பு தெரிவிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு. மாற்று சிகிச்சை பெறவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறவும் அவர்களுக்கு உரிமை உண்டு. நோயாளிகள் மனநிலை குழம்பி இருந்தால் அவரது நெருங்கிய உறவினரை முடிவு எடுக்கச் சொல்லலாம்.
* எக்ஸ்ரே, வீடியோ, சி.டி., பயாப்சி போன்ற தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை யின் ஆவணங்களை இரண்டாவது மருத்துவக் கருத்து (Second opinion)) கேட்பதற்காக, மருத்துவமனையிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் உரிமை உண்டு.
* மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் தகுதிகளைப் பற்றி அறிய உரிமை உண்டு.
*மருத்துவமனைகள் கொடுக்கும் கட்டண ரசீதில், மாத்திரைகள், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை மற்றும் அறை வாடகை கட்டணங்களை தனித் தனியாக குறிப்பிட வேண்டும். மேலும், மருத்துவர் கட்டணம், மருத்துவமனையின் கட்டணத்தையும் தனித் தனியாக குறிப்பிட வேண்டும்.
* மருத்துவ சேவை பற்றிய குறைகளை சொல்வதற்கான அதிகாரிகள் யார், எங்கே இருப்பார்கள் என்பதை மருத்துவமனை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
*மருத்துவக் காப்பீடு செய்த நோயாளிகள், தங்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையும், மருத்துவர்களும் காப்பீட்டில் இருந்து எவ்வளவு தொகை பெற்றார்கள் என்பதை அறியும் உரிமை உண்டு.
* சிகிச்சை அளிக்கும் மருத்துவர் இல்லாத நேரங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. நோய் அதிகமாகாமல் இருக்க செவிலியர்கள் மற்றும் மருத்துவ மனை பணியாளர்கள் பின்பற்றும் முறைகளை தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. உறுப்பு மாற்று சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளி்ன் போதும் செலுத்தப்படும் ரத்தத்தின் தூய்மை குறித்த தகவலை தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு.
*மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பரிசோதனைகளுக்கு நோயாளிகளை உட்படுத்தும்போது பரிசோதனைக்காகவே மருந்துகள் கொடுக்கப்படுகிறது என்பதை அவர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். மருத்துவப் பரிசோதனை ஆராய்ச்சிக்கு உட்படவோ, உட்படாமல் இருப்பதற்கோ அவர்களுக்கு உரிமை உண்டு.
*நோயாளிகள் மருத்துவமனையில் இறக்கும்போது, அவரது உடலை கண்ணியமான முறையில் கொடுக்க வேண்டும். அவர் இறந்த நேரம் குறித்த சரியான தகவலை அவரது குடும்பத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
*பிரேதப் பரிசோதனை செய்யும் முன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு, சரியான நேரத்தில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். சிலர் இறந்தபிறகு தங்கள் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவார்கள். அதற்கு ஏற்றார்போல் மருத்துவமனை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூளைச்சாவு ஏற்பட்டபின் நன்றாக இயங்கும் மற்ற உறுப்புகளை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளையும் மருத்துவமனை விரைந்து எடுக்க வேண்டும்.
*நோயாளிகள் இறந்த பின்னரும், அவரது நோய் பற்றிய பல விஷயங்களை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும். அவர் அனுமதி கொடுத்தவர்களிடம் மட்டுமே மருத்துவ ஆவணங்களின் உண்மை நிலை குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும். இறந்த நோயாளிகளின் உரிமைகளை,அவர்களது உறவினர்கள் கேட்டுப் பெறுவதற்கு உரிமை உண்டு.
நன்றி : தினகரன் நாளிதழ் - 10.01.2017