disalbe Right click

Tuesday, January 17, 2017


சுனில் பார்தி மிட்டல் - ஏர்டெல் அதிபர்

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!

கையில் ஒன்றுமே இல்லாமல் தந்தையிடம் இருந்து வாங்கிய 15,000 ரூபாய்  பணத்துடன் தொழில் தொடங்கலாம் என்று பஞ்சாப் லூதியானாவிலிருந்து கிளம்பிய இளைஞர் இவர். இன்று பில்லியன் டாலர் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். பார்தி குழுமம் என்ற ஆலமரத்தின் ஆணிவேர், அந்த நிறுவனத்தைத் தொடங்கிய சுனில் பார்தி மிட்டல்.

   சைக்கிள் பாகங்கள் விற்றவர்!

1976-ல் 18 வயது நிரம்பிய இளைஞர் கல்லூரியின் கடைசி நாளை முடித்துவிட்டு வெளியே வந்தார். அவருடைய கையில் எதுவுமே இல்லை. ஆனால், கண்கள் நிறைய கனவு இருந்தது. அவரது குடும்பத்தில் அவர்தான் முதன்முறையாக பிசினஸ் செய்யலாம் என்று புறப்பட்ட முதல் தொழில் முனைவர். 

தந்தையிடம் இருந்து வாங்கிய 15,000 ரூபாய் பணத்தை வைத்து சைக்கிளின் ஒரு பாகமான க்ராங்க் ஷாஃப்ட்டை உற்பத்தி செய்து விற்கத் தொடங்கினார். ஒரு லாரியில்  பொருட்களை எடுத்துக்கொண்டு போய் நேரடியாக அவரே விற்பார். இரண்டு வருடத்தில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், நூல் உற்பத்தி போன்ற பிசினஸில் இறங்கினார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த தொழிலில் அவருக்கு திருப்தியே ஏற்படவில்லை.

வளர்ச்சிக்கு மிக முக்கியமான அளவுகோல்,  விற்பனைதான். சைக்கிள் தொழில் அவருக்குக் கைகொடுப்பது போல் இல்லை. அதை விட்டுவிட்டு, வாய்ப்புகளைத் தேடி 1980-ல் மும்பைக்கு ரயில் ஏறினார். சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட முனைந்தபோதுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

   கற்றுக்கொடுத்த சர்வதேச வர்த்தகம்!

ஜப்பானின் சுஸூகி மோட்டார்ஸுடன் சேர்ந்து ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்து விற்கும் பிசினஸைத் தொடங்கினார். சர்வதேச வர்த்தகமானது அவருக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி, பிராண்டிங் செய்வது எப்படி என்பது போன்ற பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. சர்வதேச சந்தையில் தொழில் செய்தபோதுதான் வாய்ப்புகள் எங்கே எல்லாம் இருக்கிறது, அவற்றை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுஅவருக்குத் தெரிந்தது.

மேலும், முதன்முறை தொழில் செய்யவரும் பலருக்கும் இருக்கும் பிரச்னை அவருக்கும் இருந்தது. ஒன்று, வாய்ப்பை சுவீகரித்துக் கொள்வதற்குத் தேவையான முதலீடு அவரிடம் இல்லை; இரண்டு, பிசினஸை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான, திறமையான நபர்களைக் கொண்ட குழு.
இந்த இரண்டு  பிரச்னையையும் தாண்டி வர அவர் ஒரு வழி கண்டுபிடித்தார். பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்வதுதான் அது.

ஆனால், அவர் தொழில் செய்ய வந்த போது, பல தொழில்கள் அரசு கட்டுப் பாட்டிலும், சில தொழில் அதிபர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. அவ்வளவு எளிதில் யாரும் தொழில் துறை சார்ந்த தொழில்களைப் பெரிய அளவில் தொடங்கிவிட முடியாது. என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்தன. அப்படி இருந்த பல தடைகளை எல்லாம் மீறித்தான் தொழில் செய்வதற்கான அனுமதியை வாங்கினார் சுனில். 

   டெலிகாம் துறையின் முதல் முயற்சி!

1991 – 92 இடைப்பட்ட காலம்தான் சுனில் மிட்டலின் வாழ்க்கையில் மறக்கமுடியாத பொற்காலம். அப்போதுதான் மொபைல் நெட்வொர்க்குகளுக்கான டென்டரை அரசு அறிவித்தது. அப்போது பெரிய நிறுவனங்கள் எல்லாம் பின்வாங்கியது. சுனில் மிட்டல் துணிந்து இறங்கினார். இரண்டு, மூன்று வருடங்களில் டென்டர் எடுத்த பிற நிறுவனங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. ஆனால், பார்தி நிறுவனம் டெலிகாம் துறையில் பல கஷ்டங்களுக்கு இடையே தொடர்ந்து செயல்பட்டு வந்தது.  

1983-ல் முதல் புஷ் பட்டன் டெலிபோனையும், கார்ட்லஸ் போன் மற்றும் ஃபேக்ஸ் மெஷின் போன்றவற்றையும் அவர்தான் இந்தியாவுக்குக்  கொண்டு வந்தார். 2003-ல் இருந்துதான் பார்தி ஏர்டெல் என்ற பிராண்டின் கீழ் சேவையைத் தரத் தொடங்கியது. இன்று இந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர் உருவாக்கிய ஏர்டெல் சாம்ராஜ்யத்தின் சேவையைவிட அதிக சேவை தர வேறு எந்த டெலிகாம் நிறுவனமும் இல்லை.

அசாத்திய திறமை!

2000 – 2005 இடைப்பட்ட காலத்தில் பார்தி செல்லுலார் அடைந்த வளர்ச்சி எவராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. 2005-ல் இந்தியாவில் அசைக்க முடியாத ஆலமரமாக பார்தி ஏர்டெல் நின்றது. அவர் டெலிகாம் துறையில் நுழைந்த அதே சமயம், வேறு சில நிறுவனங்களும் டெலிகாம் துறையில் இருந்தன. ஆனால், அந்த நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு தரமான சேவையை எல்லாத் தரப்பினருக்கும் அளித்ததுதான் சுனில் மிட்டலின் வெற்றிக்கு முக்கிய காரணம்!  

   நோ சொல்லவும் தெரியும்!

ஒரு நல்ல பிசினஸ்மேனுக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அது சுனிலுக்கு கைவந்த கலையாக இருந்தது. தன் வளர்ச்சிக்காக சரியான நிறுவனங் களுடன் கூட்டு வைத்துக்கொண்ட சுனில், அதேநேரத்தில் உள்நோக்கத்தோடு அணுகும் பிசினஸ் டீலிங்ஸைத் தவிர்க்கவும் தெரிந்து வைத்திருந்தார்.

இந்தியாவில் 2ஜி அலைக்கற்றை மட்டுமே இருந்த சமயம், 3ஜி அலைக்கற்றைக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்தது. வேறு யாரேனும் அந்த இடத்தைப் பிடிப்பதற்குள் ஏர்டெல் அதைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார் சுனில். அப்போது ரத்தன் டாடா தானாகவே முன்வந்து ரூ.1,500 கோடி தருவதாக அறிவித்தார். அதற்கு சுனில் சொன்ன பதில் அனைவரையும் திடுக்கிட வைத்தது.

“பிரதமரின் நிவாரண நிதித் திட்டம் இருக்கிறது. நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் அதற்குக் கொடுக்கலாம்” என்றார். பின்னர் ரத்தன் டாடா தருவதாகச் சொன்ன தொகையைவிட 80%  கூடுதலாகவே சுனில் மிட்டல் முதலீடு செய்தார். அதன் மதிப்பு 2012-ல் ரூ.14,000 கோடியாக உயர்ந்தது.

   நெருக்கடிகளுக்கு ஆளான ஏர்டெல்!

2008-க்குப் பிறகு டெலிகாம் துறையில் பெரிய அளவில் போட்டி ஆரம்பித்தது. ஏர்டெல்லுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வரிசை கட்டின. அவை பெரும் பணத்தை முதலீடு செய்து ஆஃபர்களை அள்ளித் தந்தன. மக்களும் ஆஃபர்களைப் பார்த்து, அந்த நிறுவனங்களின்  நெட்வொர்க்குகளுக்குத் தாவினர். மெள்ள அவற்றின் சந்தை மதிப்பு உயர ஆரம்பித்தது. ஏர்டெல் சந்தை மதிப்பு குறைய ஆரம்பித்தது.

ஆனால், அந்த நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளிவிட்டனவே தவிர, சேவையில் தரம் இல்லாததால் தடுமாற ஆரம்பித்தன. ஆஃபர்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் அவர்களின் திட்டம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தரத்திலும், சேவையிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாமல் மேலும் மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியதால், சுனில் தனது நிறுவனத்தை மக்கள் மனதில் இடம்பெறச் செய்தார். 

   நிறுவன அரசியலுக்குள் சிக்கிய தருணம்!

பார்தி குழுமம் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், அதன் நிறுவனத்துக்குள்ளேயே அரசியல் நடக்க ஆரம்பித்தது. உயர் அதிகாரிகளிடையே முரண்பாடுகளும், பிரச்னைகளும் அதிகமாகின. திறமையானவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இதனால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்க சுனிலுக்கு இரண்டு வருடங்கள் ஆனது.

 உயர் அதிகாரிகள் உள்பட நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களை எல்லாம் பாரபட்சமின்றி வெளியேற்றினார். 

திறமையானவர்களை உள்ளே கொண்டு வந்தார். தொழிலில் பொறுப்புகளைச் சரியான நபரிடமே கொடுத்திருந்தாலும் அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார். 

நேரத்தை விற்றுப் பணக்காரர் ஆனவர்!

பிசினஸ் நடத்துவது எப்படி என்பதை  சுனிலிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று 40 வருட அனுபவம் கொண்ட டுவா கன்சல்டிங் தாளாளர் பி.கே. சிங்கால் கூறுகிறார். காரணம், சுனிலின் பிசினஸ் டீலிங் பேசும் அணுகுமுறைதான்.

அவர் தனது பார்ட்னர்களுடன் பிசினஸ் டீலிங் பேசும்போது, “நான் நிமிடங்களை உற்பத்தி செய்து விற்கிறேன். அதை உற்பத்தி செய்வதற்கான மெஷின்களை நீங்கள் எனக்கு சப்ளை செய்யுங்கள். ஆனால், விற்பனை ஆகும் நிமிடங்களுக்கு மட்டுமே நான் பணம் தருவேன்” என்பாராம். அவருடைய இந்த ‘மினிட்ஸ் ஃபேக்டரி’ பிசினஸ் மாடல்தான் சர்வதேச டெலிகாம் துறைக்கே முன்மாதிரியாக மாறியது.

   உலகின் நான்காவது பெரிய நிறுவனம்!

இன்று 35 கோடி வாடிக்கையாளர்களுடன் உலகின் மூன்றாவது பெரிய டெலிகாம் கம்பெனியாக இருக்கிறது ஏர்டெல்.  அவருடைய சொத்து மதிப்பு சுமார் 39,000 கோடி ரூபாய்க்கு மேல். பார்தி நிறுவனத்தின் நிகர வருமானம் சுமார் 91,000 கோடி ரூபாய்க்கு மேல். 
சுனில் மிட்டல் டெலிகாம் துறைக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். 

பிசினஸில் வெற்றி பெற முதலீடு முக்கியமில்லை, வித்தியாசமான அணுகுமுறைதான் அவசியம் என்கிற பாடத்தை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

**************************************************ஜெ.சரவணன்
 நன்றி : நாணயம் விகடன் - 15.01.2017

காலையில் சாப்பிடாவிட்டால் என்னாகும்?


காலையில்  சாப்பிடாவிட்டால் என்னாகும்?

காலையில் சாப்பிடாவிட்டால்...

மனித இனத்தை வாழ வைப்பது உணவு. மனித இனம் உணவுக்காகவே, அடிப்படையில் உழைக்கிறது. ஆனால் தற்போதைய அவசர உலகில், நம்மில் பலருக்கு உணவு உண்பதுகூட அவசரமாகிவிட்டது அல்லது காலம் தவறிச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பாலோர் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதற்குப் பலரும் கூறும் காரணம், உடல் எடை குறைப்பு.

ஆனால், அப்படிச் செய்வதால் எந்த நோக்கத்துக்காக உணவை ஒதுக்குகிறோமோ, அதுவே எடையை அதிகரித்துவிடும் ஆபத்து இருக்கிறது.

எப்படியென்றால் ஒரு பொழுது உணவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுபொழுது சாப்பிடும்போது அதிகப் பசி வேட்கையால் நம்மை அறியாமலேயே சற்று அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.

அதேபோல், ஒரு வேளை உணவை ஒதுக்கும் பழக்கத்தை நீண்டகாலம் கடைப்பிடித்துவந்தால், வயிற்றுப்புண் வரும் சாத்தியம் அதிகம். சத்துக் குறைபாடு உண்டாகும் சாத்தியமும் உள்ளது.

பிரச்சினை என்ன?

உடலில் உணவு செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியக்கூடிய ‘மெட்டபாலிஸம்' எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். காலை உணவை நாட்படத் தவிர்க்கும்போது, உணவிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸை கிரகிக்க உதவும், கணையத்திலிருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும்.

அறியாமையால் இதைச் சில காலம் தொடர்ந்து செய்தோமானால், நம்முடைய சர்க்கரையைப் பயன்படுத்தக்கூடிய திறன் இன்சுலினுக்கு இல்லாமல் போகும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20 சதவீதம் அதிகச் சாத்தியம் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன
.
தற்போதைய ஆராய்ச்சிகள் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. பெரும்பாலும் இரவு உணவை உண்ட பிறகு உறங்கி விடுகிறோம். காலை எழுந்து வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலோர் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையே உள்ள இடைவெளிதான், ஒரு நாளில் உடலில் உணவு உண்ணாமலிருப்பதில் மிக அதிகம். அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்' என்கிறார்கள். அதாவது ‘பிரேக் தி ஃபாஸ்ட்டிங்' என்பதே இதன் அர்த்தம். விரதத்தை முறிப்பது. எனவே, இந்த நிலையில் உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.

உணவுத் திணிப்பு

இன்னும் சிலரோ காலை உணவைக் கட்டாயமாகச் சாப்பிட வேண்டுமே என்கிற கடமைக்காக அவசர அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு, விழுங்க முடியாத குறைக்குத் தண்ணீரையும் சேர்த்துக் குடித்துச் செல்கின்றனர். இப்படிச் செய்வதும் தவறே… நன்றாக மென்று சாப்பிடும்போதுதான், நம் வாயிலிருந்து சுரக்கும் உமிழ்நீரிலிருந்தே செரிமானம் ஆரம்பிக்கத் தொடங்கும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் அடைந்து உடலில் சேரும்.

நன்கு மென்று, மெதுவாகச் சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் நம் மூளைக்கு ‘போதும்' என்னும் கட்டளையைப் பிறப்பிப்பதாகவும், இதனால் அதிகம் சாப்பிடாமல் இருக்க முடியும் எனவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது? (Journal of Clinical Endocrinology & Metabolism, July 2, 2013). உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

மேலும் தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள் சரியான நேரத்துக்கு, சரியான உணவை - முக்கியமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் குறிப்பிட்ட அளவில் மட்டும் சாப்பிட்டுவந்தால் தொப்பை மேலும் அதிகரிக்காது, குறையவும் வாய்ப்பு உண்டு.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

ஆங்கிலத்தில் உணவு உண்பது பற்றி பிரபலப் பழமொழி ஒன்று உண்டு:

“அரசனைப் போலக் காலை உணவை உண்ணுங்கள்,

இளவரசனைப் போல மதிய உணவை உண்ணுங்கள்,

இரவு பரம ஏழையைப்போல உண்ணுங்கள்”

என்பதே அது.

அதாவது, காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும். மதிய உணவைக் காலை உணவின் அளவைவிடவும் குறைவாக உண்டால் ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்னும் பழமொழியில் சிக்காமல், வேலைகளில் கவனம் செலுத்தலாம்.

இரவு மிதமாக உணவு உட்கொண்ட பின் உறங்கச் செல்லும்போது, எந்தவித செரிமானத் தொந்தரவும் இல்லாமல் நல்ல உறக்கம் வரும்.

ஆனால், இந்தப் பழமொழியை அப்படியே தலைகீழாக நாம் கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலோர் இரவுதான் அதிக அளவு சாப்பிடுகிறார்கள். இது ‘நைட் ஈட்டிங் சிண்ட்ரோம்' எனப்படுகிறது. விழித்திருப்பதைவிட உறக்கத்தில் உடல் அசைவுகள் குறைவாக இருப்பதால், இரவு அதிகம் உண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஆழ்ந்த தூக்கமும் வராது. இதைத் தவிர்க்க உண்ட உடனேயே தூங்கச் செல்லாமல், சிறு நடை போட்ட பிறகு உறங்கலாம்.

சாப்பிடும் முறை: 

சித்த மருத்துவம் காட்டும் வழி

சித்த மருத்துவத்தில் காலை, மதியம், இரவு எந்த வகையான உணவுப் பண்டங்களைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

காலை:

 பயறு வகைகள், கடலை, உளுந்து, எள்ளு, மொச்சை உணவு வகைகளை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றுடன் இணைத்து உட்கொள்ளலாம். மேற்கூறியவை செரிப்பதற்குச் சற்றுக் கடினமாக உள்ள உணவுகள். சுக்கு, மிளகு போன்றவை இந்த உணவுகளில் உள்ள கடினத் தன்மையைக் குறைக்கத் தேவையான செரிமானச் சுரப்புகளைத் தூண்டும் பண்பு கொண்டவை. காலையில் இவற்றைச் சாப்பிட்டுவிட்டு உழைத்தால் உடலில் சத்தும் நிறைந்து தங்கும். உணவு செரிமானம் அடைவதும் எளிதாக இருக்கும்.

மதியம்: 

கிழங்கு வகைகள், பழ வகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். இந்த உணவு வகைகள் அனைத்தும் மந்தப் பதார்த்தங்கள். இவற்றிலும் பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்துச் சமைக்கும்போது, மந்தத் தன்மை மட்டுப்படும். மேலும் சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் செரிமானம் எளிதில் நடைபெறும்.

இரவு: 

அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வேகவைத்த உணவு வகைகள் போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும்.

தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என வகுத்துள்ளதை நவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் சிறப்பாகப் பொருந்தும். நம் நாட்டு உணவை நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுவோம், நோய்களில் இருந்து விலகி நிற்போம்.

கட்டுரையாளர், 
டாக்டர் திருவருட்செல்வா சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.01.20147

Monday, January 16, 2017

தழும்பை மறைக்கும் லேசர் சிகிச்சை


தழும்பை மறைக்கும் லேசர் சிகிச்சை

கல்லூரி மாணவி ஒருவருக்கு, ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், முகத்திலும், கழுத்திலும் காயமேற்பட்டு, சில நாட்களில் சரியானது. ஆனால், காயத்தால் ஏற்பட்ட தழும்பு மட்டும் ஆறாமல், அவரையும், அவரது பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
இவ்வகையான காயங்களால், ஆறு மாதத்தில் தழும்பு பெரிதாவது நின்றுவிடும். இதை, 'ஹைப்பர் ட்ராபிக்' தழும்பு என்போம். ஆறு மாதங்களுக்கு பின்னும் வளர்ந்து கொண்டே செல்லும் தழும்புகளை, 'கீலாய்டு' தழும்பு என்கிறோம். இத்தகைய தழும்புகள், பாதிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, சாதாரண திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
விபத்து, தீக்காயம் அல்லது சாதாரண காயங்கள் பட்ட இடத்தில் திசுக்கள் இறுகுவதால், செயல்பட முடியாமல் போகும். அங்கிருக்கும் நரம்புகளும் பாதிப்படைவதால், வலி இருந்து கொண்டே இருக்கும்; பார்க்கவும் அருவருப்பாக இருக்கும். இதற்காக, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 
இந்த சிகிச்சையில், உடலின் மற்ற பகுதியில் இருந்து தோல் மற்றும் சதையை அறுத்தெடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இதனால், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடம் மட்டும் அல்லாது, அறுவை சிகிச்சைக்காக சதை எடுக்கப்பட்ட இடமும் குணமாக வேண்டும். 
ஆனால், தற்போது, 'லேசர் ஸ்கார்' விரிவாக்கம் சிகிச்சையின் மூலம், பாதிக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்டிருக்கும் நிறமாற்றத்தை சரிசெய்ய முடியும். அதுமட்டுமல்லாமல், அதிக அழுத்தமாக இருக்கும் இடத்தை மென்மையாக்கலாம். 
இதில், மிக சாதாரண மயக்க நிலையிலும், மரத்துப் போகும் ஊசியும் போட்டு, தீப்புண் தழும்பு, நிறமாற்றம், வளர் தழும்பு, திசுவறைப் பெருக்கம், அறுவை சிகிச்சை தழும்புகள், புற்று நோய்க்காக எடுத்துக் கொள்ளப்பட்ட சிகிச்சையில் ஏற்படும் தழும்புகளுக்கும் சிகிச்சை அளிக்கலாம்.இதற்காக, ஒரு நாள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து, வீட்டிற்கு திரும்பி விடலாம். இந்தச் சிகிச்சையின் சிறப்பே, தழும்புகளை அகற்றுவது தான்!
எஸ்.கிருத்திகா ரவீந்திரன், 
அழகு சீரமைப்பு நிபுணர், சென்னை.

74027 23411
நன்றி : தினமலர் நாளிதழ் - 13.01.2016

Sunday, January 15, 2017

திருநங்கைகள் நல வாரியம்


திருநங்கைகள் நல வாரியம்

இந்த உலகத்தில் ஆணாகவுமில்லாமல், பெண்ணாகவுமில்லாமல் 
திருநங்கையாக மாறி, பிறந்த வீட்டிலும், சமூகத்திலும் ஆதரவு இல்லாமல்  பரிதாபமாக வாழ்கின்ற இவர்களுக்கு நமது தமிழக அரசு ஒரு நல வாரியத்தை அமைத்து அவர்கள் வாழ்க்கை சிறக்க உதவி வருகின்றது. உங்களுக்குத் தெரிந்து யாராவது இருந்தால், அவர்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி கீழ்க்கண்ட சலுகைகளை பெற உதவுங்கள்.

*********************************அன்புடன் செல்வம்பழனிச்சாமி*******

மாற்றுப்பாலினத்தைச் சார்ந்த 4 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இருபாலரைத் தவிர மூன்றாம் பாலினமான திருநங்கை, திருநம்பி, கோத்தி உள்ளிட்டோரை மாற்றுப் பாலினத்தோர் என அரசு வகைப்படுத்தியுள்ளது.  

இவர்களுக்கென மாநில சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது.

சுயதொழில் துவங்க ரூ.20 ஆயிரம்  வரை கடனுதவி,

தையல் இயந்திரங்கள் வழங்குதல்,

சிகிச்சை மற்றும் பாலின அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு வரும் திருநங்கைகள்  தங்குவதற்கென தற்காலிக விடுதி,

அடையாள அட்டை

இலவச பட்டா வழங்குதல்,

வீடு  வழங்கும் திட்டம்,

சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல்,

ரேஷன் கார்டு  வழங்குதல்

வாரியம் வழங்கி்ய உதவிகள்

இந்த வாரியமானது கடந்த 2012 முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை இனம் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு என அடையாள அட்டைகளையும் வழங்கி வருகிறது.
இதுவரை, சென்னை-794, கோவை-332, மதுரை-274, நாமக்கல்-159, விழுப்புரம்-175, சேலம்-189, விருதுநகர்-175 என 32 மாவட்டங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 719 மாற்றுப்பாலினத்தவர்களை கண்டறிந்து உறுதிசெய்துள்ளது.

மேலும், திருநங்கைகள் சமூகத்தில் சக மனிதர்களைப் போல் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது.

அடையாள அட்டை

தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் சமூகநலம், சத்துணவு திட்டத் துறை சார்பில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில், பிறப்பு பெயர், அரவாணி பெயர், தற்போதைய, நிரந்தர முகவரி, உறுப்பினர் எண், உறுப்பினர், மாவட்ட சமூக நல அலுவலரின் கையொப்பம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இதன்மூலம், 1,559 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், 1,084 திருநங்கைகளுக்கு வீட்டு மனைப் பட்டாவும், 108 திருநங்கைகளுக்கு தையல் இயந்திரமும், 659 திருநங்கைகளுக்கு காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்பு வீடுகள்

133 திருநங்கைகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ 99 லட்சத்து 75 ஆயிரத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்

40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
திருநங்கைகள் சுய உதவிக்குழு

இதுவரை, 442 திருநங்கைகளுக்கு ரூ. 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெட்டிக்கடை, மளிகைக்கடை, உணவகம், துணி வியாபாரம், பால் வியாபாரம், வேளாண் பொருள்கள் விற்பனை, அழகு நிலையம், சோப்பு வியாபாரம், செங்கல் சூளை அமைத்தல் உள்ளிட்ட சுய தொழில்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன
தகவல் : http://ta.vikaspedia.in/ இணையதளத்திலிருந்து.

ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்ய


ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்ய 
வாடகை வீடுகளில்தான் அதிக மக்கள் வசித்து வருகிறார்கள். தொழில் நிமித்தமாகவோ அல்லது வசதி குறைவு காரணமாகவோ அடிக்கடி வீடுகளை மாற்ர வேண்டிய சூழ்நிலைக்கு நாம் அனைவருமே ஆளாகிறோம்.

வீடு மாறினால், நமது முகவரியும் தானாகவே மாறிவிடுகிறது. நாம் பயன்படுத்துகின்ற குடும்ப அட்டை, கேஸ் இணைப்பு அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு, ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில்  நமது புதிய முகவரியை மாற்றுவது மிகவும் அவசியம். 

முகவரி மாற்றம் செய்யாவிட்டால்  சில சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆகையால், வீடு மாறினால் ஒவ்வொருவரும் தஙளுக்குண்டான மேற்கண்ட ஆவணங்களில்  கண்டிப்பாக முகவரி மாற்றம்  செய்ய வேண்டும். 

கேஸ் இணைப்பு அட்டையில் முகவரி மாற்றம் செய்ய

இதனை மாற்றம் செய்ய யாரும் சொல்ல வேண்டியதில்லை. வீடு மாறியவுடன் கேஸ் இணைப்பு அட்டையில் எல்லோருமே தானாகவே முகவரி மாற்றம் செய்வதுவிடுவார்கள். குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்த பத்திர நகல் அல்லது மின்கட்டண நகல் அல்லது நகராட்சி வீட்டுவரி ரசீது நகல் இணைத்து தங்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கும் ஏஜென்சியின் மேலாளரிடம்  விண்ணப்பிக்க வேண்டும். உடனே மாற்றம் செய்து தந்து விடுவார்கள்.   இதில் சிரமம் ஏதுமில்லை.
குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய

தற்போது நீங்கள் குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தத்தின் நகல் அல்லது நகராட்சியில் கட்டிய வீட்டுவரி ரசீது, முகவரி மாற்றம் செய்யப்பட்ட  கேஸ் இணைப்பு அட்டையின் நகல் ஆகியவற்றை இணைத்து தங்களது குடும்ப அட்டை ஒரி்ஜினலை இணைத்து ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் போதும். 
சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளர் அ்வர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பத்தை  நேரில் கொடுப்பவர்களுக்கு அவர்கள் ஒரு டோக்கன் வழங்குவார்கள். அதில் எந்த தேதியில் வாங்க அங்கு மறுபடியும் வர வேண்டும் என்று குறித்திருப்பார்கள். ஒரு வாரத்திற்குள் தங்கள் குடுமப அட்டையில் புதிய முகவரியை எழுதி “சீல்” வைத்து கொடுப்பார்கள்.

அதன் பிறகு தங்கள்  பழைய முகவரிக்குட்பட்ட ரேசன் கடைக்குச் சென்று, அங்குள்ள கோப்பில் தங்கள் பெயரை நீக்க விண்ணப்பிக்க வேண்டும். நீக்கிய பிறகு அதற்கு அவர்களிடம் ரசீது பெற வேண்டும். 

அவர்களிடம் அதனை பெற்று தங்களுடைய புதிய முகவரிக்கு உட்பட்ட ரேசன் கடையிலும் அதனை தெரிவித்து பெயர் பதிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான்  உங்களுக்கு ரேசன் கடையில் பொருட்கள் வழங்குவார்கள்.

 வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய

வேறு சட்டமன்ற தொகுதிக்கு அல்லது அதே தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்குண்டான படிவம் 8 A –ஐ நீங்கள் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
நீங்கள் மாநகராட்சிப் பகுதிக்குள் வசித்து வருபவராக இருந்தால், உங்கள் பகுதிக்குரிய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். 

மற்ற மாவட்டங்களில் வசிப்பவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் (படிவம்  8 A ) விண்ணப்பத்தைப் பெற்று சமர்ப்பிக்கலாம். 

நீங்கள்  உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை அல்லது தாலுகா அலுவலகத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற விபரத்தை

http://elections.tn.gov.in/ 

என்கிற இணைய தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய

குடும்ப அட்டை நகல்,  மின் கட்டண ரசீது,  நகராட்சியில் கட்டிய வீட்டு வரி ரசீது ஆகியவற்றின் நகலுடன் பழைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் என்.ஓ.சி. (No objection Certificate) ) வாங்கி அதன் நகலையும் இணைத்து புதிய முகவரிக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் (கிரேடு  I/II) அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதன் மூலம் ஓட்டுநர் உரிமத்தில் பிழையாக உள்ள தனது பெயரையோ, பிறந்த தேதியையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, , முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால், அதற்குண்டான ஆதார நகலையும் இணைத்து, விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். 

வங்கிக் கணக்கில் முகவரி மாற்றம் செய்ய

கணக்கு இருக்கும் வங்கிக்குச் சென்று வங்கிக் கிளையை மாற்றம் செய்து தரக் கோரி குடும்ப அட்டை நகல்,  மின் கட்டண ரசீது,  நகராட்சியில் கட்டிய வீட்டு வரி ரசீது நகல் ஆகியவற்றை இணைத்து உங்களது வங்கியின் மேலாளர் அவர்களிடம் விண்ணப்பித்தால் போதும், உங்கள் வங்கிப் புத்தகத்தில் புதிய முகவரியை பிரிண்ட் செய்து கொடுத்து விடுவார்கள்.
புதிய முகவரி வேறு ஊரில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களது பழைய வங்கியின் மேலாளர் அவர்களிடம் உங்கள் சேமிப்பு கணக்கை புதிய முகவரியிலுள்ள அவர்களது வங்கிக்கு மாற்றம் செய்து தர வேண்டி மேலே கண்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பத்து நாட்களுக்குள் மாற்ரம் செய்து கொடுத்து விடுவார்கள்.

பான்கார்டில் முகவரி மாற்றம் செய்ய 

பான்கார்டில் முகவரி மாற்றம் செய்ய அதன்  
 https://tin.tin.nsdl.com என்ற

இணைய முகவரிக்குச்  சென்று PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும். 

இந்த விண்ணப்பத்தில் "update communication address" என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய

ஆதார் அட்டையில் முகவரி  மாற்றம் செய்ய நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.
http://uidai.gov.in/update-your-aadhaar-data.html 

என்கிற இத்தளத்திற்குச் சென்று ஆன்லைன் வழியாக அப்டேட் செய்துகொள்ளலாம். 

 ஆன்லைனில் விண்ணப்பித்து இதனை செய்வதற்கு தங்களுக்கு தெரியவில்லை என்றால் அருகிலுள்ள “கம்ப்யூட்டர் செண்டரை” அணுகுங்கள். 

இதன் மூலம் அட்டையில் பிழையாக உள்ள உங்கள் பெயரையோ, பிறந்த தேதியையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, செல்போன் எண்ணையோ  மற்றும் முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால், அதற்குண்டான ஆதார நகலையும் இணைத்து, கொடுத்தால் போதும். 

பதிவுத் தபாலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: http://uidai.gov.in/images/application_form_11102012.pdf

தமிழில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

UIDAI Regional Office
Khanija Bhavan, 
No.49, 3rd Floor,
South Wing Race Course Road, 
Bangalore – 01080-22340862

ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

UIDAI Regional Office,
5th 7th Floor, 
MTNL Building,
B D Somani Marg, 
Cuff Parade, 
Mumbai – 400 005
போ்ன்:  022 – 22186168

மேலும் விவரங்கள் பெற கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-300-1947, 
இணையதளம் :help@uidai.gov.in

பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் செய்ய

உங்களியமுள்ள  அனைத்து ஆவணங்களிலும் முகவரியை மாற்றம் செய்துவிட்டு இறுதியாகத்தான் பாஸ்போர்ட் முகவரியை மாற்ற வேண்டும். 
ஏனென்றால், பாஸ்போர்ட் முகவரி மாற்றத்துக்குத் ஆவணங்கள் அதிகம் தேவைப்படுகிறது.
.
முகவரி மாற்றம் செய்யப்பட்ட குடும்ப அட்டை நகல், பான் கார்டு நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஓட்டுநர் உரிமம் நகல் மற்றும் வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து தங்கள் மாவட்டத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் விண்ணப்பிக்கலாம். 

இவற்றுக்கு ஃபார்ம் 2 – ஐ பயன்படுத்த வேண்டும்.

ஆவணங்களில் முகவரியை மாற்ற விரும்புவோர்களின் கனிவான கவனத்திற்கு. 

மேற்கண்ட வரிசைப்படி ஆவணங்களில் முகவரிகளை மாற்ற வேண்டும். அது உங்களுக்கு நேரத்தை மிச்சமாக்கும்.

*****************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Saturday, January 14, 2017

கிரயப் பத்திரத்தைச் சரிபார்க்க

கிரயப் பத்திரத்தைச் சரிபார்க்க 


ஒரு சொத்தானது விற்பனையாளரிடம் இருந்து நாம் வாங்குவதற்குக் கிரையப்  பத்திரம் மூலம்  மாற்றம் செய்யப்படுகிறது. 

இதற்கு கிரையப் பத்திரத்துக்கான முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணத்தை அப்பத்திரம் பதிவு செய்யும்போது பதிவு அலுவலகத்தில் நாம் செலுத்த வேண்டும். 

நமது தமிழ்நாட்டில் சொத்து வழிகாட்டு மதிப்பின் மேல், 1ஓ ரூபாய்க்கு 7ரூ முத்திரைத் தாள் மற்றும் 1ரூ பதிவுக் கட்டணம் ஆக மொத்தம் 8% கட்டணத்தை நாம் கிரையப் பத்திரத்துக்குச் செலுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் கிரையப் பத்திரத்தில் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் மற்றும் அடையாள அட்டை எண்,  பத்திரப் பதிவு துறையின் மூலம் இணைக்கப்படுகின்றன. அதற்கு முன்பு வெறும் பெயர்கள், கையெழுத்துக்கள் அல்லது கைரேகைகள் மட்டுமே இருக்கும்.

தற்போது சில மாநிலங்களில் சாட்சிகளின் புகைப்படமும் கிரையப் பத்திரத்தில் ஒட்டப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

இன்னும் சில மாநிலங்களில் உதாரணமாக  மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிரையப் பத்திரம் பதிவுசெய்யும் முன்பு இணையதளத்தில் அந்தக் கிரையப் பத்திரத்துக்கான முழு விவரங்களையும் கண்டிப்பாக முன்கூட்டியே பதிவுசெய்ய வேண்டும். 

அதாவது விற்பனையாளர் பற்றிய விபரம், வாங்குபவர் பற்றிய விபரம்,  சொத்து பற்றிய விபரம், கிரையப் தொகை, முத்திரை வரி செலுத்தும் விவரம், சாட்சிகள் பற்றிய விபரம் போன்ற விவரங்களை கிரையப் பத்திரம் பதியும் முன் அதற்குண்டான இணைய தளத்தில் முழுமையாக பூர்த்திசெய்ய வேண்டும்.இதனால் மோசடி பதிவுகள் தவிர்க்கப்படுகிறது

கிரையப் பத்திரத்தில் என்னென்ன  கவனிக்க வேண்டும்?

➽  முத்திரைத் தாள் மூலமாகவோ, வரைவோலை அல்லது இ-ஸ்டாம்பிங் முறை மூல்மாகவோ முத்திரை வரி முறையாக செலுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
# சொத்தினை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் 
பெயர்கள் பிழையின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும்.

➽ சொத்தினை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் 
அடையாள அட்டை நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

➽ விற்பனையாளரின் வாங்குபவரின் கையோப்பங்கள் மற்றும் புகைப்படங்கள், இருவரது அடையாள அட்டை எண்கள் இடம் பெற வேண்டும். 

➽ எந்த ஒரு நிபந்தனையும்   கிரையப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கக் கூடாது.

➽  ஒரு வேளை  பிற்காலத்தில்  விற்பனையாளாரின் சொத்து உரிமையில் ஏதாவது பிரச்சினை எழுந்தால் தகுந்த நஷ்ட ஈட்டினை சொத்தினை வாங்குபவர்களுக்கு அந்த சொத்தினை விற்பவர்களால்  வழங்கப்படும் என்று கிரையப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

➽ சொத்து விவரங்கள், அளவுகள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

➽ற்பனையாளருக்கு அச்சொத்து வந்த முறையினை  கிரையப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

➽ ஒரு வேளை பவர் பத்திரம் மூலம் கிரையப் பத்திரம் பதிவுசெய்தால், முகவருக்குக் கிரையம் செய்யும் அதிகாரம் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 மேலும் சொத்தின் உரிமையாளர் பவர் பத்திரத்தை ரத்து செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

 அதே போல்  சொத்தின் உரிமையாளர்   உயிருடன் உள்ளாரா என்பதையும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உரிமையாளர் உயிருடன் இல்லை என்றால், பவர் பத்திரம் செல்லாததாகி விடும்.

கிரையப் பத்திரம்-அசல் தன்மையை சரிபார்க்கும் முறை

நீங்கள் முதலில் சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தின் நகல் ஆவணம் விண்ணப்பித்துப் பெற வேண்டும். 

அந்த நகல் ஆவணத்தை விற்பனையாளரின் ஆவணத்துடன்  ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும்.

இதன்மூலம் நீங்கள் வாங்கப்போகும் சொத்து பத்திரமானது (விற்பளையாளரின் கிரையப் பத்திரம்) அசல் பத்திரம்தானா என்று உறுதி செய்து கொள்ளலாம்.

வில்லங்கச் சான்றிதழ் எடுத்து பார்க்க வேண்டும்.

நகல் ஆவணம்  1) நகல் ஆவணம், 2) கையால் எழுதப்பட்ட (Manual) நகல் ஆவணம் என்று இரண்டு வகைப்படும்.

 சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நீங்கள் பெற்ற நகல் ஆவணம் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் ஒத்திருக்க வேண்டும்.

கையால் எழுதப்பட்ட நகல் ஆவணத்தை சொத்து விற்பனையாளரின் அசல் ஆவணத்துடன் ஒப்பிடும்போது விற்பனையாளரின் பெயர் வாங்குபவரின் பெயர், கிரையத் தொகை, சொத்து விபரம் ஆகியவற்றை கவனமாக சரிபார்க்க வேண்டும். 

மேலும் பத்திரத்தாளின் எண், பத்திர மதிப்பு, பத்திரத் தாள் முத்திரை, பத்திரத் தாள் விற்பனையாளர் முத்திரை, பத்திர எண், தொகுதி எண் மற்றும் பக்கம் எண் போன்ற விவரங்கள் அசல் பத்திரம் மற்றும் கையால் எழுதப்பட்ட நகல் ஆவணம் ஒப்பிடும்போது சரியாக உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வழக்கின் ஆவணங்களை கேட்பவருக்கு வழங்கவேண்டும்



வழக்கின் ஆவணங்களை  கேட்பவருக்கு வழங்கவேண்டும்
குற்ற வழக்கில் தொடர்பில்லாத நபருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், அமைச்சர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நடந்த வழக்கில், அந்த ஏழு போரையும் தலைமை நீதித்துறை நடுவர் விடுதலை செய்தார். 

அந்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டி இருப்பதால், அந்த குற்ற வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் வேண்டி இருப்பதால், அந்த குற்ற வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தின் நகல்களை தனக்கு வழங்க வேண்டுமென்று சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் j.m. ஆறுமுகம் அவர்கள் மனு தாக்கல் செய்தார். 

அவ்வாறு ஆவன நகல்களை வழங்க முடியாது என்று சேலம் தலைமை நீதித்துறை நடுவர் வழக்கறிஞரின் அந்த மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கறிஞர் j.m. ஆறுமுகம் அவர்கள் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் அசல் மனு என் ( Crl.O.P.No) 18533/2007 (27.02.2008) மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நீதியரசர் m. ஜெயபால் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதியரசர் m. ஜெயபால் அவர்கள் (27.02.2008) அன்று வழங்கிய தீர்ப்பின் விவரம் பின் வருமாறு : 

“ வழக்கில் தொடர்பில்லாதவர்களுக்கு அது தொடர்பான ஆவணங்களை அளிக்க முடியாது என்ற உயர்நீதிமன்ற விதி சேலம் நீதிமன்றத்திற்கு பொருந்தாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நோக்கம் குறித்து நீதிமன்றங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். 

வழக்கு தொடர்பான விவரங்களை அதில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அறிந்து கொள்ள உரிமை உண்டு. 

ஆகையால், மனுதாரர் கேட்டுள்ள ஆவணங்களை சேலம் தலைமை நீதித்துறை நடுவர் அளிக்க வேண்டும்.

மாநில மனித உரிமை ஆணையம்

மாநில மனித உரிமை ஆணையம்
அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல்  இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா?
காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம். 
மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும். 
புகார் அனுப்ப என்ன செய்ய வேண்டும்?
 அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல் 
  அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.
  மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.
  அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.
  புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள்.
ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத் தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
ஆணையர் அவர்கள்,
மாநில மனித உரிமை ஆணையம்,
143, P.S.குமாரசாமிராஜா சாலை,
திருவரங்கம் மாளிகை,
கிரீன்வேஸ் ரோடு,
R.A.புரம்,
சென்னை-600 028.
  இந்த புகாரை சாதாரணமாகவே எழுதி அனுப்பலாம்.
  மனு ஸ்டாம்ப் ஏதும் ஒட்டத் தேவையில்லை.
  புகார் தெளிவாக, முழுமையாக எழுதப்பட வேண்டும்.
  வேறு (நீதிமன்றம்) எங்கும் புகார் அனுப்பி விசாரணை நிலுவையில்  இருக்கக்கூடாது.
 தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தால் மாநில மனித உரிமை ஆணையம் அந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்காது.
 மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருந்தால் தேசிய மனித உரிமை ஆணையம் அந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்காது.
  பொது (அரசு) ஊழியருக்கு எதி்ராக இல்லாத புகார் ஏற்றுக் கொள்ளப்படாது.
 புகார் பதிவு செய்யப்பட்ட 7 நாட்களுக்குள் விசாரணை மேற்கொள்ளப்படும்.
  மனித உரிமை மீறலுக்கு எதி்ராக இல்லாத புகார் ஏற்றுக் கொள்ளப்படாது.
Phone : 91-44-2495 1484
Fax     : 91-44-2495 1486 
E-mail : shrc@tn.nic.in   
மேலதிக விபரங்களுக்கு......

Friday, January 13, 2017

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவச் செலவு என்பது திடீரென வரக் கூடியது. ஆதலால் மருத்துவக் காப்பீட்டு எடுத்து வைத்துக் கொள்வது மிக நல்லது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் நம்மிடம் பிரீமியத் தொகை பெற்றுக் கொண்டு காப்பீடு அளிக் கின்றன. அதுவும் சில நோய்களுக்குள், அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகளுக்கு மட்டுமே. அதுபோல பொருளாதார வசதி இல்லாத ஏழை களுக்காகக் கொண்டு வரப்பட்டது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது என்ன?
நமக்கு ஏற்படும் சில மருத்துவ உதவிகளுக்குத் தேவையான பணத்தை அரசே செலுத்துவதுதான் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
தகுதிகள்
இத்திட்டத்தின் பயனைப் பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருவானம் 72,000 ரூபாய்க்குக் கீழே இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனில் கிராம நிர்வாக அலுவலரிடமும், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் எனில்தாசில்தாரிடமும் வருமானச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கவேண்டும். குடும்ப அட்டை இருக்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பயனைப் பெற முடியும்.
எங்கே விண்ணப்பிப்பது?
ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும் காப்பீட்டுத் திட்ட மய்யம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்குச்  சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைக் கொடுக்கவும், 
பின்னர் அவர்கள் சொல்லும் தேதியில் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும். புகைப்படம் எடுக்கப்பட்டதும் ஓரிரு நாட்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.
பயனை எப்படி பெறுவது?
இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்பெற முடியும். இதன் மூலம் கீழ்க்கண்ட சிகிச்சைகளைப் பெற முடியும். 
இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவைச் சிகிச்சை,
புற்றுநோய் மருத்துவம், 
சிறுநீரக நோய்கள், 
மூளை மற்றும் நரம்பு மண்டலம், 
கண் நோய் சிகிச்சை, 
இரைப்பை (ம) குடல் நோய்கள்,
ஒட்டுறுப்பு (பிளாஸ்டிக்) அறுவைச் சிகிச்சைகள் , 
காது, மூக்கு மற்றும் தொண்டை நோய்கள், 
கருப்பை நோய்கள், 
ரத்த நோய்கள்.
மருத்துவமனை செல்லும்போது கவனிக்க வேண்டியவை
சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் முதல் நாள் முதல் சிகிச்சைமுடிந்து வீட்டுக்கு அனுப்பப்படும் நாளிலிருந்து  5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் வழங்கப்படும். 
இலவச சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் முன் அந்த மருத்துவமனையில் காப்பீடுத் திட்ட அலுவலரைச் சந்தித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். 
ஏனெனில் ஒரே சிகிச்சை வெவ்வேறு மருத்துவமனைகளில் வெவ்வேறு கட்டணங்கள் பெறப்படுவதுண்டு.
மேலதிக விவரங்களுக்கு
இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மேற்கொண்டு விவரங்களைப் பெறவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
http://www.cmchistn.com/ இத்தளத்திற்குச் செல்லலாம்.
1800 425 3993 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு
நன்றி : விகாஸ்பீடியா
****************************************************************
குறிப்பு:
இந்தத் திட்டத்தின் காப்பீட்டு நிறுவனத்துடனான உடன்படிக்கை ஜனவரி 10, 2017 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
இந்தக் காப்பீட்டு நிறுவனம், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1.50 லட்சம் காப்பீட்டு தொகை, ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: 
முதல் முறையாக இந்தத் திட்டத்தில், தமிழகத்தில் குடியேறி 6 மாதத்துக்கும் மேல் வசிக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்கள் முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு, தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள்.
 மேலும், மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும்.
நன்றி : தினமணி நாளிதழ் - 14.01.2017
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற 7373004974 என்ற செல் நம்பரிலும், 04562 252507 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் அறியலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 10.03.2017