disalbe Right click

Thursday, January 19, 2017

கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை!


கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை! 

நலம் நல்லது-54 
நம் பாரம்பர்யம், கருத்தரித்த பெண்களுக்காக எத்தனையோ வைத்திய முறைகளைத் தேடித்தேடிச் சொல்லியிருக்கிறது. அவற்றையெல்லாம் நவீன மருத்துவ முறை வந்த பிறகு, நாம் மறந்துவிட்டோம். 
கர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும். அவற்றைப் புறக்கணிக்கவே கூடாது. 

மகப்பேறு மருத்துவம், மிக அவசியமான ஒன்று. குடும்ப மருத்துவரை அணுகி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிந்துகொள்வது; தன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைச் சரிபார்ப்பது; சர்க்கரைநோய் இருக்கிறதா, உயர் ரத்த அழுத்தத்தின் அளவு என்ன என அறிந்துகொள்வது; தொற்றுநோய் ஏதாவது இருக்கிறதா எனப் பரிசோதனை செய்வது... எல்லாமே கர்ப்பிணிப் பெண்ணுக்கு முக்கியம்தான். 

ஆனால், பெண் கருத்தரித்திருக்கும் காலம் முழுவதும் மருத்துவமனையையும் மருத்துவரையும் மட்டுமே நம்பி இருக்கும் சூழல் இன்று இருக்கிறது. 

நம் தமிழர் மருத்துவம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சில நல்ல வழிகளைக் காட்டியிருக்கிறது. அவற்றைப் பின்பற்றினால் பிரசவம் சுகமாகும். அவற்றில் சில... 

* கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட வேண்டும். கர்ப்பகால வாந்தி, ரத்தசோகை, முதல் ட்ரைமெஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுக்கள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். 

* காரணமற்ற வெள்ளைப்போக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுந்தங்கஞ்சி சிறந்த தீர்வைத் தருபவை. 
* கர்ப்பகால ஆரம்பத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கர்ப்பப்பையில் ஏற்படும் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நல்லது. 

* தாமரைப்பூ, தக்கோலம், நெய்தல் கிழங்கு, செங்கழுநீர்க் கிழங்கு ஆகியவை கர்ப்பகால சங்கடங்களில் இருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். இவை ஃபோலிக் அமிலம் நிறைந்தவை; வலி நிவாரணி தன்மை உடையவை; வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் உடையவை. இரும்பு மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்தவை. 

* வண்ணங்கள் நிறைந்த பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி சாதம் ஆகியவை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடவேண்டியவை. 

* விலை உயர்ந்த எந்த டானிக்குகளும் தர முடியாத பயனை, முருங்கைக்கீரை, பாசிப் பருப்பு கலந்த பொரியல், கேழ்வரகு அடை ஆகியவை தந்துவிடும். 

* முன் பக்கம் சிறுநீர்ப்பையும் பின் பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால், முறையே நீர்ச் சுருக்கமும் மலச்சிக்கலும் ஏற்படுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு, தினமும் நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு ஆகியவற்றைச் சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். 

* கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு சர்க்கரைநோய் (Gestational Diabetes) ஏற்படும். இதற்காகக் கலங்கத் தேவையில்லை. இந்தப் பெண்களுக்கு உரிய மருத்துவமும் வெள்ளைச் சர்க்கரை சேர்க்காத உணவையும் கொடுக்கவேண்டியது அவசியம். தினமும் உணவில் வெந்தயத்தையும் கறிவேப்பிலைப் பொடியையும் சேர்த்துக்கொள்வது கூடுதலாக நல்லது. 

அறிவியல் வசதி இல்லாத அந்தக் காலத்திலேயே 

`செப்பியதினம் ஒன்றில் கடுகு போலாம்’ என 23 மி.மீ அளவே இருக்கும் கர்ப்பப்பையையும்,
`பூவிலே இரண்டு திங்கள் கழுத்துண்டாம், 
புகழ் சிரசு முறுப்பாகும்’ என 
ஐந்தாம் மாதம் காது, மூக்கு உதடும், 
ஏழாம் மாதம் தலைமுடியும் தெரியும் என, 
கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு அகத்தியர் வல்லாதியிலும், 
பராசர சேகரத்திலும், 
யூகி சிந்தாமணியிலும் 
சொன்னவர்கள் நம் சித்தர்கள். 

அவர்கள் சொன்ன வழிமுறைகளைக் கடைப்பிடிப்போம்! ஆரோக்கியமான பிரசவத்துக்கு வழி வகுப்போம்! 

தொகுப்பு: பாலு சத்யா

நன்றி : விகடன் செய்திகள் -20.01.2017

நல்ல தேனை கண்டறிவது எப்படி?


நல்ல தேனை கண்டறிவது எப்படி?

தேன், நினைத்தாலே இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேனை விரும்பாதவர்கள் குறைவு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்த தேனில் கலப்படம் என்பதும் ஹைதர்காலத்து பழைய சமாச்சாரம்தான். 

இன்றைய வர்த்தகமயமான சூழலில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் பெருகிவிட்டது. கூடவே கலப்படமும் இவற்றில் நிறையவே நடப்பதாகக் கூறப்படுகின்றது. இவை கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு வண்ணமயமான ஸ்டிக்கர்களுடன் கணஜோராக காட்சியளிக்கின்றன. 

கிட்டத்தட்ட  எல்லா பாட்டில்களின் லேபிளின் மீதும் 'ஒரிஜுனல் நேச்சுரல் ஹனி' என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சூப்பர்மார்க்கெட்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தேனின் பளபளப்பான நிறம் நம் அனைவரின் கண்களையும் ஈர்க்கவே செய்கின்றது.  ஆனால், எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன்தான். 

வணிக நோக்கத்துக்காக சில நிறுவனங்கள் தேனில் வெள்ளை சர்க்கரையைக் கலந்து விற்பனை செய்து வருகின்றன. தங்களது வியாபாரத்தைப் பெருக்க, இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தனியார் நிறுவனங்கள் சாமர்த்தியமாக மீறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.

 இதுபோன்ற கலப்படங்களின் விளைவாக தேனுக்கான மகத்துவமும், மருத்துவ குணமும் இல்லாமல் போகிறது. மேலும் தேனில் மற்ற சில கலப்படங்களும் நடக்கின்றன. இந்தக் கலப்படங்களைக் கண்டறிவது எப்படி, நல்ல தேனை எப்படிக் கண்டுப்பிடிப்பது போன்ற விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். 

➽* ஒரு  சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும்.  தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. கரைந்து போகாமல் நேராக பாத்திரத்தின் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.

➽*சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாக சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமானது. 

➽* சிறிதளவு தேனை எடுத்து வாணலியில் சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். பின்னர் அடுப்பை அணைத்து விடவேண்டும். சுத்தமானதாக இருந்தால்,  சில மணி நேரங்களானதும், பழைய அடர்த்தியை  அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.

➽* தேனை கண்ணாடி ஜாரில் ஊற்றி, சில மணிநேரம் வைத்திருக்க வேண்டும். சுத்தமான தேனாக இருந்தால், அடர்த்தி ஒரே சீராக இருப்பதுடன், நிழல் போன்ற அடுக்குப் படலம் ஏற்படாது. தேனின் நிறம் ஒரே சீராக இருக்கும். கலப்படம் செய்த தேனின் அடர்த்தி மாறுபடும். 

➽* சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும். 

➽* சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து  மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக உடனே ஒட்டாமல் குமிழ் போல பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போல பாத்திரத்தில்  சமநிலையில் இருக்கும்.

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

நன்றி : விகடன் செய்திகள் - 19.01.2017

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், தொடரும் தடை


அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், தொடரும் தடை

தமிழகத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக வீட்டு மனை ‘லே – அவுட்’ ஆக மாற்றப்பட்டு, அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்பட்ட நிலையில், விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத மனைகளாக மாற்றி விற்பனை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 
அதேசமயம், ‘2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகளை, மறு பத்திரப் பதிவு செய்ய விலக்கு அளிக்கப்பட வேண்டும்’ என தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்வதற்கு கூடுதல் விவரங்களைக் கேட்டனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். கூடுதல் விவரங்களை அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டதால், வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தது. 

இந்த நிலையில், இந்த பிரச்னையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வக்கீல் யானை ராஜேந்திரன், புதிதாக இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘‘முறையாக அங்கீகாரம் பெற்று வீட்டுமனைகளை உருவாக்கவேண்டும் என்றால், ஒரு ஏக்கர் நிலத்துக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவு செய்ய வேண்டும். அதை செய்யாமல், முறைகேடாக     லே -அவுட்களுக்கு அங்கீகாரம் பெற்றுவிடுகின்றனர். எனவே, மனைகளுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். விவசாயம் செய்யப்படாமல் தரிசு நிலமாகக் கிடந்தால், அதை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கானது கடந்த 9-ம் தேதியன்று தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி     எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் ஒருவர், ‘‘பல அடுக்கு மாடி வீடுகளை என் கட்சிக்காரர் கட்டி உள்ளார். பத்திரப் பதிவுக்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளதால், இந்த வீடுகள் எல்லாம் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளன’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘அந்த அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் அங்கீகாரம் பெற்ற வீட்டுமனையா?’’ என்று கேட்டனர். அதற்கு, ‘‘அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை’’ என்றார் வக்கீல்.

‘‘இப்படி விளைநிலங்களில் கட்டடங்கள் கட்டினால் விவசாயம் என்னவாகும்? நாளை உணவுக்கு என்ன செய்வீர்கள்?’’ என்று நீதிபதிகள் கேட்டனர்.

அப்போது மற்றொரு வக்கீல், ‘‘உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவினால், நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் இருவர் இறந்துள்ளனர்’’ என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், ‘‘நிலத்தை வாங்கும் போது அது எந்த வகையானது என்று பார்க்க வேண்டும். அதைச் செய்யாமல், இதுபோன்ற குற்றச்சாட்டைச் சுமத்தக்கூடாது. இவர்களுக்காக சட்டத்தை வளைக்க வேண்டும் என்கிறீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன், ‘‘உயர் நீதிமன்றம் தடை விதித்ததால்தான், சுமார்  3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட்டன. மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அண்மையில் அறிவித்தது. இந்தப் பணத்தை மாற்ற கால அவகாசமும் வழங்கியது. இந்த கால அவகாசத்தின்போது, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக உள்ள விவசாய நிலத்தை வாங்கி இருப்பார்கள். நீதிமன்றம் விதித்த தடையால் இந்த விளைநிலங்கள் தப்பித்துள்ளன’ என்றார்.

தமிழகத்தில் நிலங்களை எவ்வாறு வகைப்படுத்துவது, அங்கீகாரமற்ற மனைகளை எவ்வாறு வரையறை செய்வது என்பது குறித்து பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் இருவார கால அவகாசம் கேட்கப் பட்டதால், இந்த வழக்கு விசாரணை வருகிற   30–ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை அங்கீகாரம் இல்லாத வீடு, அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.

வரும் முறையாவது தமிழக அரசின் சார்பில் சரியான திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே லட்சக்கணக்கான வர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் எவ்வளவு?

11.00% – தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளாக மாறியுள்ள விளைநிலங்கள்.

25 லட்சம் ஏக்கர் – லே அவுட்களுக்காக தமிழகம் முழுக்க அழிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள்.

13.28 லட்சம் – தமிழ்நாட்டில் உள்ள அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளின் எண்ணிக்கை.

நன்றி : நாணயம் விகடன் - 22.01.2017

வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால்


வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால் 

பழைய 500, 1,000 ரூபாய் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பலரும் அதிகத் தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய 60 லட்சம் பேர் சுமார்  7 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என வருமான வரித் துறை சந்தேகிக்கிறது.

இந்த நிலையில், நடப்புக்கணக்கில் ரூ.12.5 லட்சம், சேமிப்புக் கணக்கில் ரூ.2.5 லட்சம் தொகைக்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், அந்த விவரங்களை வங்கிகள், வருமான வரித் துறைக்கு அனுப்பி வருகின்றன. இதுபோன்றவர்களுக்கு வருமான வரித் துறையிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும், எப்போதெல்லாம் நோட்டீஸ் வரும் என்பதை சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கி சொன்னார்.

‘‘கிடைத்த வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பது, வருமானத்தைத் தவறாக கணக்குக் காட்டி இருப்பது, செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் இருப்பது, குறிப்பிட்டத் தொகைக்கு மேல் வருமானம் வந்தும் வருமான வரித் துறையிடம் வருமான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பது, தவறாக வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்வது போன்ற காரணங்களுக்காக வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரும். 

இப்படி நோட்டீஸ் வந்தவுடன் பதறவோ, பரபரப்படையவோ வேண்டாம். வருமான வரித் துறையிடமிருந்து தேவை இல்லாமல் யாருக்கும் நோட்டீஸ் வராது. உங்கள் வரவு செலவுக் கணக்கில் வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒரு விஷயம் நடந்திருந்து, அதற்கான விளக்கத்தைப் பெற வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்புகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.

ஒருவருக்கு நோட்டீஸ் வந்தவுடன், என்ன காரணத்துக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்குப் புரியவில்லை எனில், ஒரு ஆடிட்டரிடம் சென்று, இந்த நோட்டீஸ் ஏன் வந்திருக்கிறது என்று கேட்டு, விளக்கம் பெறலாம். வருமான வரித் துறை கேட்கும் கேள்விகளுக்கு என்னென்ன ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது என்பதை எடுத்துச் சொல்லலாம். 

வரவு செலவுக் கணக்கைப் பொறுத்தவரை, ஆடிட்டரிடமோ அல்லது வருமான வரித் துறையினரிடமோ மறைக்க முயற்சிப்பது குற்றமாகும். எனவே, வரிச் சட்டத்துக்குட்பட்டு, ஆடிட்டர் தரும் யோசனைகளின்படி தகுந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு வருமான வரித் துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளிப்பதன் மூலம் வருமான வரித் துறையினர் அனுப்பும் நோட்டீஸை எந்தப் பதற்றமும் இல்லாமல் எதிர்கொள்ளலாம்.

வருமான வரி வரம்பைவிட சிறிதளவு தொகை மட்டுமே வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை நீங்களே தந்துவிட முடியும் என்று நம்பினால், நேரடியாக வருமான வரித் துறை அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் தரலாம்.

ஆனாலும், வருமான வரி தொடர்பாக சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், அந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.

  வியாபாரிகளுக்கு!

பொதுவாக, 1 கோடி ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் இருந்தால், கட்டாயமாக ஒரு ஆடிட்டரிடம் கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். மொத்த கணக்குவழக்குகளை ஆடிட்டர் சரிபார்த்து கையொப்பம் இட்டிருக்க வேண்டும். இதுவே 1 கோடி ரூபாய்க்குக் கீழ் என்றால், வியாபாரிகள் தங்களுடைய வரவு செலவுப் புத்தகங்களைச் சரியாக வைத்திருந்தால் போதும்.

ஓர் உதாரணம் மூலம் இதைப் புரிந்துகொள்ள முற்படுவோம். 

ஒருவரின் நிறுவனம் அல்லது கடையில் மாத டேர்ன் ஓவர் சராசரியாக ரூ.5 லட்சமாக இருந்து வருவதாக வைத்துக் கொள்வோம். திடீரென்று ரூ.5 லட்சத்துக்கு மேல் வியாபாரக் கணக்குகளின் மூலம் கிடைத்ததாக டெபாசிட் செய்தால், வரித் துறையினர் நிச்சயம் கேள்விக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அப்படிக் கேட்கும்போது வியாபாரிகள் அவர்களின் பிரச்னைகளை விளக்கமாக எடுத்துச் சொல்லலாம். பிசினஸில் ரொக்கத்தின் தேவை எவ்வளவுக்கு இருந்தது என்பதை எல்லாம் வியாபாரிகள்தான் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.

  கடன்கள்! 

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ நீங்கள் கடன் தந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தந்த பணத்தை கடன் வாங்கியவர் உங்களுக்குத் திரும்பத் தருகிறார். அவர் தந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மொத்தமாக வங்கியில் டெபாசிட் செய்தால், வருமான வரித் துறையினர் கேள்வி எழுப்புவார்கள்.

பொதுவாக, வருமான வரி சட்டப்படி, ரூ.20,000-க்கு மேல் மனைவி, குழந்தை என்று எந்த ரத்தபந்தமாக இருந்தாலும், வங்கி வரையோலை மற்றும் காசோலை அல்லது நெட்பேங்கிங் மூலமாகத்தான் கடன்  கொடுக்க வேண்டும்.  அப்போது தான் கடன் கொடுக்கப்பட்டதாக வருமான வரித் துறையினர் கணக்கில் எடுத்துக் கொண்டு, திரும்பப் பெறும் கடன் தொகையை வருமானமாகக் கருதமாட்டார்கள். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் கடன் கொடுத்து, திரும்பப் பெற்ற தொகையை வருமானமாகக் கருதி, வரி விதிக்கவே செய்வார்கள்.   

அதுமட்டுமின்றி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ரொக்கமாகக் கடன் வழங்கி இருப்பது வரித் துறையினருக்குத் தெரியவந்தால், கொடுக்கப்பட்ட கடன் தொகைக்குச் சமமான தொகை அபராதமாக விதிக்கப்படும்.

எனவே, உறவினர்களுக்கு ரொக்கமாக கடன் கொடுத்திருக்கும்பட்சத்தில், வருமான வரித் துறையினருடன் வாக்குவாதம் செய்யாமல், திரும்ப வந்த தொகையை வருமானமாகக் காட்டி, அதற்கான வரியைக் கணக்கிட்டு செலுத்திவிடுவது உத்தமம். இது தனி நபர்கள் மற்றும் வியாபாரிகள் இருவருக்கும் பொருந்தும்.

 சொத்துகள்!

நடுத்தர வருமானப் பிரிவினர் செய்யும் தவறுகளில் மிக முக்கியமானது, வீடு மற்றும் மனை வாங்கும்போது ரொக்கமாகப் பணம் தருவதுதான். தங்கம் தொடங்கி வீடுகள், ரியல் எஸ்டேட் சொத்துகள் வரை எல்லாவற்றையும் ரொக்கமாக வாங்குவதையே நம்மில் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

வருமான வரிச் சட்டப்படி ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாகத் தந்து பொருட்களை வாங்கும்போது காசோலை அல்லது வரையோலையாகத்தான் செலுத்த வேண்டும். அதேபோல்,  ரூ.20,000 ரூபாய்க்கு மேல் சொத்துகளை விற்கும்போதும் நாம் பணமாக வாங்காமல், காசோலை அல்லது வங்கி வரையோலையாகத்தான் பெற வேண்டும்.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 95 சதவிகித மக்களுக்கு இப்படியொரு சட்டம் இருப்பதே தெரியவில்லை. காரணம், இந்திய மொத்த மக்கள் தொகையில் வெறும் 5.17 கோடி பேர்தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்கிறார்கள்.

 தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்!

தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்று, கையில் ரொக்கமாகப் பணத்தை வைத்திருந்தால், அவை இதர வருமானம் என்று கருதி, 30% வரி விதிக்கப்படும். அதோடு, எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும், கட்டவேண்டிய வரிக்கு வருமான வரி சட்டப் பிரிவு 234A, 234B, 234C-ன்படி 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

சொத்துகளை (தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்) காசோலை அல்லது டிடி-யாகப் பெற்றிருந்தால், அதற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 20% செலுத்தும்படி வரித் துறையினர் ஏற்கெனவே அறிவுறுத்தி இருப்பார்கள்.

ஒருவேளை, இப்படி நீங்கள் செய்யாமல் விட்டிருந்தால், இப்போது அந்தப் பணத்துக்கு 20% நீண்ட கால மூலதன ஆதாய வரி மற்றும் எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும் 1% வட்டி செலுத்த வேண்டியிருக்கும். 

விவசாயிகளுக்கு!

இதுவே விவசாய நிலமாக இருந்து, அவர்கள் கிராமத்தில் எந்த ஒரு வங்கியும் இல்லாத நிலையில், நிலத்தை விற்றிருந்தால், கிடைத்த தொகையை ரொக்கமாகப் பெற்றிருக்கலாம். ஆனால், விவசாய நிலத்துக்கு இருக்கும் பட்டா மற்றும் சிட்டா போன்றவற்றில் ‘விவசாய நிலம்’ என்று குறிப்பிடப்பட்டு, பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது இந்தப் பணத்தை பக்கத்து ஊரில் இருக்கும் வங்கிகளில் சென்று செலுத்தலாம்.

இதுகுறித்து வரித் துறையினர் கேள்வி எழுப்பினால், வங்கி இல்லாத காரணத்தைக் குறிப்பிட்டு, முறையான வருமான வரித் தாக்கல் செய்யவேண்டி இருக்கும். விவசாய நிலங்களுக்கு மூலதன ஆதாய வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

 விளக்கம் போதவில்லை எனில்…?

நோட்டீஸ் வரப் பெற்றவர் கொடுக்கும் விளக்கம், வருமான வரித் துறை அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனில், அதிகாரிகள் விதிக்கும் அபராதத்தையும், வட்டியையும் செலுத்த வேண்டும். அதோடு, தாமதமாக வரி செலுத்தியதற்கு, செலுத்த வேண்டிய வரித் தொகையில் 1%  வட்டியாக கட்ட வேண்டியிருக்கும்.

எனவே, நோட்டீஸ் வரப் பெற்றவர் அளிக்கும் விளக்கங்கள் வரித் துறை அதிகாரிகளுக்கு திருப்தி அளிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரித் துறை அதிகாரிகள், அபராதம் விதிக்காமல் வட்டியை மட்டும் கட்ட அனுமதிப்பார்கள். 

  மேல் முறையீடு!

வருமான வரித் துறை அதிகாரி, வட்டியைக் கட்டச் சொல்லி அறிவுறுத்தியபின், மேலதிகாரிகளிடம் முறையீடு செய்ய முடியாது. எனவே, வரித்  துறை அதிகாரிகளை அணுகும் முன் வரி மற்றும் வட்டியை மட்டும் கட்டிவிட்டு வரும் வகையில் நேர்மையாகப் பதில்களை தயார் செய்துகொண்டு, தகுந்த ஆதாரங்களோடு செல்ல வேண்டும். தவறான பதில்களால் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று முடித்தார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

சம்பளக்காரர்களாக இருந்தாலும் சரி, தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, வரவு செலவுக் கணக்கை முறையாக மேற்கொள்ளும் பட்சத்தில், எந்தச் சிக்கலிலும் சிக்க வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம்!

வரியும் வட்டியும்!

வங்கியில் வரவு வைக்கப்பட்ட மொத்தப் பணத்துக்கு இணையாக, வரும் வரிக் கணக்கீட்டு ஆண்டில் வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட்டால், வருமான வரித் துறையினர் வரியை மட்டுமே கணக்கிடுவர். அபராதம் விதிக்க மாட்டார்கள். ஆனால், தாமதமாக வரி செலுத்துவதால் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். முன்கூட்டியே அதாவது, இந்த நிதி ஆண்டிலேயே வரி செலுத்தியிருந்தால், வட்டி  செலுத்தத் தேவை இருக்காது.

நன்றி : நாணயம் விகடன் - 22.01.2017

Wednesday, January 18, 2017

விசா பெற என்ன செய்ய வேண்டும்?

விசா பெற என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் வெளி்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தால்விசாபெற வேண்டும். இதற்கென்று வழிகாட்ட இணையதளங்கள் உள்ளது. அதற்குள் சென்றால் நீங்கள் மிக இலகுவாக விசா பற்றிய விபரங்கள் அனைத்தும் அறியலாம்.
விசா விரிவாக்கம் :
விசா என்பதன் விரிவாக்கம் VISA - Visa International Service Association என்பதாகும். விசா என்பது லத்தீன் மொழியிலுள்ள ஒரு வார்த்தை ஆகும்.
எந்த நாட்டுக்கு சென்றாலும் விசா எடுக்க வேண்டுமா?
அனைத்து நாடுகளுக்கும் விசா கண்டிப்பாக எடுக்க தேவையில்லை. சில நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமலேயே சென்று வரலாம். அங்கு சென்றவுடன் விசா பெற வேண்டும். ஆனால் பாஸ்போர்ட் அவசியம். பெரும்பாலான நாடுகளுக்கு நீங்கள் முன்கூட்டியே விசா பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் இதற்கென்று சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது.
விபரங்கள் தருகின்ற இணையதளங்கள்
எந்த நாட்டுக்கு விசா தேவையில்லை, எந்த நாட்டுக்கு விசா எடுக்க வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களுக்கு நீங்கள் http://www.visamapper.com என்ற இணையதளத்திற்குள் சென்றால் போதும்.
முகப்பிலேயே உலக வரைபடம் ஒன்றை உருவாக்கி அதில் நாடுகளை குறித்து. ஒவ்வொரு நாட்டுக்கும் விசா பெறுவதற்கான நடைமுறைகளுக்கு தகுந்தவாறு வண்ணங்கள் கொடுக்கப்பட்டு எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் அந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளார்கள்
வண்ணங்களின் அர்த்தம்
இந்த தளத்தில் முகப்பில் காணப்படுகின்ற உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வண்ணங்களை வைத்து குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை நாம் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் கலர் என்றால் நாம் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை நிறம் என்றால் விசாவே தேவையில்லை. மஞ்சள் கலர் என்றால் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். சிவப்பு நிறம் என்றால் விசாவே கிடையாது.
விசாவை பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் கண்டிப்பாக உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் இது ஒரு வழிகாட்டித் தளம் மட்டுமே. இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமானவை என்று கொள்ளக்கூடாது.
மேற்கண்ட இணையதளத்தை போலவே http://www.visamap.net என்ற இணையதளமும் விசா தொடர்பான தகவல்கள் அனைத்தையும் வரைபடம் மூலம் தருகிறது.
விசா பற்றிய தகவல்கள் மற்றும் அந்நாட்டு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளது? ஆகிய தகவல்களை இது நமக்கு அளிக்கிறது.
***************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Tuesday, January 17, 2017

தொலைந்துபோன நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்!


தொலைந்துபோன நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்! 
நலம் நல்லது-51

இன்றைய தொழில்நுட்பங்கள் நம் பண்டைய மரபின் நீட்சியை ஓரங்கட்டி, நமக்கு நல்வாழ்வு தரும் சில நல்ல விஷயங்களை மறக்கடிக்கச் செய்துவிட்டன. அவற்றில் ஒன்று, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நம்மிடையே இருந்த சில தடுப்பு முறைகள்! 
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூசல் ஃபாஸ்டர் சமீபத்தில் தன் ஆய்வு முடிவை இப்படி ஒற்றைவரியில் கூறியிருக்கிறார்... ‘நான்கு மில்லியன் வருட மரபை மதிக்காத திமிர் உள்ள ஒரே உயிரினம், மனித இனம்தான்.’ கூடவே, தன் ஆய்வில், இரவில் சரியாகத் தூங்காமல் இருப்பவருக்கும், வேலை நிமித்தமாக இரவில் பணிபுரியும் ஊழியருக்கும் சாதாரண வயிற்று உபாதை முதல் மார்பகப் புற்றுநோய் வரை உருவாகும் ஆபத்துக்களையும் விவரித்திருக்கிறார். 

அதோடு, `குறைந்த ஆற்றலை எடுத்துக்கொண்டு ஒளியை உமிழும் எல்.இ.டி விளக்கு உள்ள ஸ்மார்ட்போன், டேப்லெட் வகையறாக்கள், தன் ஒளிக்கற்றையில் அதிகபட்ச நீல ஒளியைத் தந்து, இரவில் நெடுநேரம் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ஸ்மார்ட்போனில் நடுநிசியையும் தாண்டி சாட் செய்தால், காதல் வருமா..? தெரியாது. ஆனால், கேன்சர் வரக்கூடும். இது போன்ற எத்தனையோ பிரச்னைகள் பிற்காலத்தில் வராமல் இருக்க, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது. 

கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது. 

மதுரை மாவட்டப் பகுதிகளில், பிறந்த குழந்தைக்கு, தாய்மாமன் `சேனை வைத்தல்’ என ஒரு சடங்கு இன்றளவும் நடைபெறுகிறது. அதில் சிலர், `சர்க்கரைக் (சீனி) கரைசலை’ இப்போது கொடுக்கிறார்கள். `சேனை வைத்தல்’ என்பது குழந்தைக்கு வெறுமனே இனிப்பு ருசியைப் பழக்கும் வெறும் சர்க்கரை மருந்து கொடுக்கும் மரபு அல்ல; `சேய் நெய்’ கொடுத்தல் என்பதே காலப்போக்கில், `சேனை கொடுப்பது’ என்றாகி, அதுவும் பின்னாளில் மேலும் மருவி, `சீனி கொடுப்பது’ எனச் சிதைந்துவிட்டது. `சேய் நெய்’ என்பது, குழந்தைகளுக்காக வீட்டிலேயே செய்யப்படும் மிகச் சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து. 

குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகள் இரு வகைப்படும். ஒன்று... சளி, இருமலைத் தருவது.

 இன்னொன்று... வயிற்றுப்போக்கைத் தருவது. இந்த இரு வகைகளுக்கும் காரணமான நுண்ணுயிரிகளைச் செயல் இழக்கச் செய்யும் பல மூலிகைகளைக்கொண்டே இந்தச் `சேய் நெய்’ தயாரிக்கப்பட்டது. ஆடுதொடா, தூதுவளை, இண்டு, வேப்பங்கொழுந்து, கண்டங்கத்திரி... முதலான 57 வகை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் மருந்து அது. 

`57 வகை மூலிகைகளைத் தேடி காடு, மலையெல்லாம் அலைய வேண்டுமா?’... வேண்டியதில்லை. இன்னும் சில கிராம மக்களிடையே `உரை மருந்து’ எனும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழக்கத்தில் இருக்கிறது. இதை, சுக்கு, திப்பிலி, மாசிக்காய், அக்கரகாரம், அதிமதுரம், பூண்டு, கடுக்காய், நெல்லிக்காய், வசம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளைக்கொண்டு எளிதாகத் தயாரிக்கலாம். 

உரை மருந்து எப்படிச் செய்வது? 

சுக்கின் மேல் தோலைச் சீவியும், கடுக்காய், நெல்லிக்காயை அவற்றின் விதைகளை நீக்கியும் வைத்துக்கொள்ள வேண்டும். வசம்பை அதன் மேல் தோல் கருகும் வரை சுட்டு எடுக்க வேண்டும். பிறகு, அனைத்தையும் சேர்த்து வறுத்து, பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை, அதிமதுரக் கஷாயத்துடன் சேர்த்து அரைத்து சிறுசிறு குச்சிகளாகச் செய்து காயவைத்துக்கொண்டால், உரை மருந்து தயார். 

இதைத் தாய்ப்பாலில் இழைத்து, குழந்தை பிறந்த மூன்றாம் நாளில் இருந்து கொடுக்கலாம். முதலில் ஓர் இழைப்பு, பிறகு இரண்டு இழைப்பு எனத் தொடங்கி, குழந்தை வளர வளர இழைப்பை அதிகமாக்கிக்கொள்ள வேண்டும். ஜீரண சக்தியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் இந்த உரை மருந்து, அரசு சித்த மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கும். 

வசம்பில் உள்ள நறுமண எண்ணெயில், `பீட்டா ஆசரோன்’ (Beta Asarone) எனும் நச்சுப்பொருள் இருப்பதாகச் சிலர் வாதிடுகிறார்கள். அது தவறு. எப்படியெனில், முதலில், வசம்பின் நறுமண எண்ணெயை நாம் பிரித்து உபயோகிப்பது இல்லை. அதோடு, வசம்பில் இருக்கும் அந்த எண்ணெயின் அளவும் மிகக் குறைவானது. அப்படிப் பிரித்த எண்ணெயிலும் மிக நுண்ணிய அளவே பீட்டா ஆசரோன் உள்ளது. அந்த ஆசரோனும், நாம் வசம்பைச் சுடுவதில் உண்டாக்கும் வெப்பத்தில் 100 சதவிகிதம் ஓடியே போய்விடும். 

குடல் பூச்சியில் இருந்து குடல் புற்றுநோய் வரை நோய் எதிர்ப்பாற்றல் கிடைப்பதற்கு நம் பாரம்பர்யம் சுட்டிக்காட்டுவது வேப்பங்கொழுந்தைத்தான். நல வாழ்வு குறித்த புரிதலும், அக்கறையும், அதற்கான மெனக்கெடலும் நம் சமூகத்துக்கு மிக அதிகம். அதைத் தொலைத்துவிடாமல் பாதுகாக்கவேண்டியது நம் அவசரத் தேவை! 

நன்றி : விகடன் செய்திகள் – 17.01.2017

ஜோக்' கோர்ட் அல்ல சுப்ரீம் கோர்ட் கண்டனம்


ஜோக்' கோர்ட் அல்ல சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி,":'சுப்ரீம் கோர்ட் என்பது வேடிக்கையான, 'ஜோக்' கோர்ட் அல்ல; எங்கள் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், பள்ளிகளில் சுகாதாரமற்ற முறையில், மதிய உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று, பொதுநல வழக்கு தொடர்ந்தது.

வேடிக்கையாக நினைக்கின்றன

இதை, விசாரித்த சுப்ரீம் கோர்ட், பதில் மனு தாக்கல் செய்யும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், பல மாதங்கள் ஆன பிறகும், தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்கள், பதில் மனு தாக்கல் செய்ய வில்லை.இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர்தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது; அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மாநில அரசுகள், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை வேடிக்கையாக நினைக்கின்றன; இது, வேடிக்கையான, 'ஜோக்' கோர்ட் அல்ல. எங்கள் உத்தரவை, உரிய முறையில் பின்பற்ற வேண்டியது, மாநில அரசுகளின் கடமை.நாங்கள் கோரியபடி, இந்த வழக்கில், உடனடியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்; தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 17.01.2017


சுனில் பார்தி மிட்டல் - ஏர்டெல் அதிபர்

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!

கையில் ஒன்றுமே இல்லாமல் தந்தையிடம் இருந்து வாங்கிய 15,000 ரூபாய்  பணத்துடன் தொழில் தொடங்கலாம் என்று பஞ்சாப் லூதியானாவிலிருந்து கிளம்பிய இளைஞர் இவர். இன்று பில்லியன் டாலர் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். பார்தி குழுமம் என்ற ஆலமரத்தின் ஆணிவேர், அந்த நிறுவனத்தைத் தொடங்கிய சுனில் பார்தி மிட்டல்.

   சைக்கிள் பாகங்கள் விற்றவர்!

1976-ல் 18 வயது நிரம்பிய இளைஞர் கல்லூரியின் கடைசி நாளை முடித்துவிட்டு வெளியே வந்தார். அவருடைய கையில் எதுவுமே இல்லை. ஆனால், கண்கள் நிறைய கனவு இருந்தது. அவரது குடும்பத்தில் அவர்தான் முதன்முறையாக பிசினஸ் செய்யலாம் என்று புறப்பட்ட முதல் தொழில் முனைவர். 

தந்தையிடம் இருந்து வாங்கிய 15,000 ரூபாய் பணத்தை வைத்து சைக்கிளின் ஒரு பாகமான க்ராங்க் ஷாஃப்ட்டை உற்பத்தி செய்து விற்கத் தொடங்கினார். ஒரு லாரியில்  பொருட்களை எடுத்துக்கொண்டு போய் நேரடியாக அவரே விற்பார். இரண்டு வருடத்தில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், நூல் உற்பத்தி போன்ற பிசினஸில் இறங்கினார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த தொழிலில் அவருக்கு திருப்தியே ஏற்படவில்லை.

வளர்ச்சிக்கு மிக முக்கியமான அளவுகோல்,  விற்பனைதான். சைக்கிள் தொழில் அவருக்குக் கைகொடுப்பது போல் இல்லை. அதை விட்டுவிட்டு, வாய்ப்புகளைத் தேடி 1980-ல் மும்பைக்கு ரயில் ஏறினார். சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட முனைந்தபோதுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

   கற்றுக்கொடுத்த சர்வதேச வர்த்தகம்!

ஜப்பானின் சுஸூகி மோட்டார்ஸுடன் சேர்ந்து ஜெனரேட்டர்களை இறக்குமதி செய்து விற்கும் பிசினஸைத் தொடங்கினார். சர்வதேச வர்த்தகமானது அவருக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி, பிராண்டிங் செய்வது எப்படி என்பது போன்ற பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. சர்வதேச சந்தையில் தொழில் செய்தபோதுதான் வாய்ப்புகள் எங்கே எல்லாம் இருக்கிறது, அவற்றை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுஅவருக்குத் தெரிந்தது.

மேலும், முதன்முறை தொழில் செய்யவரும் பலருக்கும் இருக்கும் பிரச்னை அவருக்கும் இருந்தது. ஒன்று, வாய்ப்பை சுவீகரித்துக் கொள்வதற்குத் தேவையான முதலீடு அவரிடம் இல்லை; இரண்டு, பிசினஸை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான, திறமையான நபர்களைக் கொண்ட குழு.
இந்த இரண்டு  பிரச்னையையும் தாண்டி வர அவர் ஒரு வழி கண்டுபிடித்தார். பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து தொழில் செய்வதுதான் அது.

ஆனால், அவர் தொழில் செய்ய வந்த போது, பல தொழில்கள் அரசு கட்டுப் பாட்டிலும், சில தொழில் அதிபர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. அவ்வளவு எளிதில் யாரும் தொழில் துறை சார்ந்த தொழில்களைப் பெரிய அளவில் தொடங்கிவிட முடியாது. என்ன உற்பத்தி செய்ய வேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்தன. அப்படி இருந்த பல தடைகளை எல்லாம் மீறித்தான் தொழில் செய்வதற்கான அனுமதியை வாங்கினார் சுனில். 

   டெலிகாம் துறையின் முதல் முயற்சி!

1991 – 92 இடைப்பட்ட காலம்தான் சுனில் மிட்டலின் வாழ்க்கையில் மறக்கமுடியாத பொற்காலம். அப்போதுதான் மொபைல் நெட்வொர்க்குகளுக்கான டென்டரை அரசு அறிவித்தது. அப்போது பெரிய நிறுவனங்கள் எல்லாம் பின்வாங்கியது. சுனில் மிட்டல் துணிந்து இறங்கினார். இரண்டு, மூன்று வருடங்களில் டென்டர் எடுத்த பிற நிறுவனங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. ஆனால், பார்தி நிறுவனம் டெலிகாம் துறையில் பல கஷ்டங்களுக்கு இடையே தொடர்ந்து செயல்பட்டு வந்தது.  

1983-ல் முதல் புஷ் பட்டன் டெலிபோனையும், கார்ட்லஸ் போன் மற்றும் ஃபேக்ஸ் மெஷின் போன்றவற்றையும் அவர்தான் இந்தியாவுக்குக்  கொண்டு வந்தார். 2003-ல் இருந்துதான் பார்தி ஏர்டெல் என்ற பிராண்டின் கீழ் சேவையைத் தரத் தொடங்கியது. இன்று இந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர் உருவாக்கிய ஏர்டெல் சாம்ராஜ்யத்தின் சேவையைவிட அதிக சேவை தர வேறு எந்த டெலிகாம் நிறுவனமும் இல்லை.

அசாத்திய திறமை!

2000 – 2005 இடைப்பட்ட காலத்தில் பார்தி செல்லுலார் அடைந்த வளர்ச்சி எவராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருந்தது. 2005-ல் இந்தியாவில் அசைக்க முடியாத ஆலமரமாக பார்தி ஏர்டெல் நின்றது. அவர் டெலிகாம் துறையில் நுழைந்த அதே சமயம், வேறு சில நிறுவனங்களும் டெலிகாம் துறையில் இருந்தன. ஆனால், அந்த நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு தரமான சேவையை எல்லாத் தரப்பினருக்கும் அளித்ததுதான் சுனில் மிட்டலின் வெற்றிக்கு முக்கிய காரணம்!  

   நோ சொல்லவும் தெரியும்!

ஒரு நல்ல பிசினஸ்மேனுக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அது சுனிலுக்கு கைவந்த கலையாக இருந்தது. தன் வளர்ச்சிக்காக சரியான நிறுவனங் களுடன் கூட்டு வைத்துக்கொண்ட சுனில், அதேநேரத்தில் உள்நோக்கத்தோடு அணுகும் பிசினஸ் டீலிங்ஸைத் தவிர்க்கவும் தெரிந்து வைத்திருந்தார்.

இந்தியாவில் 2ஜி அலைக்கற்றை மட்டுமே இருந்த சமயம், 3ஜி அலைக்கற்றைக்கு மாற வேண்டிய கட்டாயம் வந்தது. வேறு யாரேனும் அந்த இடத்தைப் பிடிப்பதற்குள் ஏர்டெல் அதைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார் சுனில். அப்போது ரத்தன் டாடா தானாகவே முன்வந்து ரூ.1,500 கோடி தருவதாக அறிவித்தார். அதற்கு சுனில் சொன்ன பதில் அனைவரையும் திடுக்கிட வைத்தது.

“பிரதமரின் நிவாரண நிதித் திட்டம் இருக்கிறது. நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் அதற்குக் கொடுக்கலாம்” என்றார். பின்னர் ரத்தன் டாடா தருவதாகச் சொன்ன தொகையைவிட 80%  கூடுதலாகவே சுனில் மிட்டல் முதலீடு செய்தார். அதன் மதிப்பு 2012-ல் ரூ.14,000 கோடியாக உயர்ந்தது.

   நெருக்கடிகளுக்கு ஆளான ஏர்டெல்!

2008-க்குப் பிறகு டெலிகாம் துறையில் பெரிய அளவில் போட்டி ஆரம்பித்தது. ஏர்டெல்லுக்கு நெருக்கடி கொடுக்க இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வரிசை கட்டின. அவை பெரும் பணத்தை முதலீடு செய்து ஆஃபர்களை அள்ளித் தந்தன. மக்களும் ஆஃபர்களைப் பார்த்து, அந்த நிறுவனங்களின்  நெட்வொர்க்குகளுக்குத் தாவினர். மெள்ள அவற்றின் சந்தை மதிப்பு உயர ஆரம்பித்தது. ஏர்டெல் சந்தை மதிப்பு குறைய ஆரம்பித்தது.

ஆனால், அந்த நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளிவிட்டனவே தவிர, சேவையில் தரம் இல்லாததால் தடுமாற ஆரம்பித்தன. ஆஃபர்களைக் கொடுத்து வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் அவர்களின் திட்டம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தரத்திலும், சேவையிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாமல் மேலும் மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியதால், சுனில் தனது நிறுவனத்தை மக்கள் மனதில் இடம்பெறச் செய்தார். 

   நிறுவன அரசியலுக்குள் சிக்கிய தருணம்!

பார்தி குழுமம் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், அதன் நிறுவனத்துக்குள்ளேயே அரசியல் நடக்க ஆரம்பித்தது. உயர் அதிகாரிகளிடையே முரண்பாடுகளும், பிரச்னைகளும் அதிகமாகின. திறமையானவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். இதனால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்க சுனிலுக்கு இரண்டு வருடங்கள் ஆனது.

 உயர் அதிகாரிகள் உள்பட நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்களை எல்லாம் பாரபட்சமின்றி வெளியேற்றினார். 

திறமையானவர்களை உள்ளே கொண்டு வந்தார். தொழிலில் பொறுப்புகளைச் சரியான நபரிடமே கொடுத்திருந்தாலும் அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார். 

நேரத்தை விற்றுப் பணக்காரர் ஆனவர்!

பிசினஸ் நடத்துவது எப்படி என்பதை  சுனிலிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று 40 வருட அனுபவம் கொண்ட டுவா கன்சல்டிங் தாளாளர் பி.கே. சிங்கால் கூறுகிறார். காரணம், சுனிலின் பிசினஸ் டீலிங் பேசும் அணுகுமுறைதான்.

அவர் தனது பார்ட்னர்களுடன் பிசினஸ் டீலிங் பேசும்போது, “நான் நிமிடங்களை உற்பத்தி செய்து விற்கிறேன். அதை உற்பத்தி செய்வதற்கான மெஷின்களை நீங்கள் எனக்கு சப்ளை செய்யுங்கள். ஆனால், விற்பனை ஆகும் நிமிடங்களுக்கு மட்டுமே நான் பணம் தருவேன்” என்பாராம். அவருடைய இந்த ‘மினிட்ஸ் ஃபேக்டரி’ பிசினஸ் மாடல்தான் சர்வதேச டெலிகாம் துறைக்கே முன்மாதிரியாக மாறியது.

   உலகின் நான்காவது பெரிய நிறுவனம்!

இன்று 35 கோடி வாடிக்கையாளர்களுடன் உலகின் மூன்றாவது பெரிய டெலிகாம் கம்பெனியாக இருக்கிறது ஏர்டெல்.  அவருடைய சொத்து மதிப்பு சுமார் 39,000 கோடி ரூபாய்க்கு மேல். பார்தி நிறுவனத்தின் நிகர வருமானம் சுமார் 91,000 கோடி ரூபாய்க்கு மேல். 
சுனில் மிட்டல் டெலிகாம் துறைக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். 

பிசினஸில் வெற்றி பெற முதலீடு முக்கியமில்லை, வித்தியாசமான அணுகுமுறைதான் அவசியம் என்கிற பாடத்தை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

**************************************************ஜெ.சரவணன்
 நன்றி : நாணயம் விகடன் - 15.01.2017

காலையில் சாப்பிடாவிட்டால் என்னாகும்?


காலையில்  சாப்பிடாவிட்டால் என்னாகும்?

காலையில் சாப்பிடாவிட்டால்...

மனித இனத்தை வாழ வைப்பது உணவு. மனித இனம் உணவுக்காகவே, அடிப்படையில் உழைக்கிறது. ஆனால் தற்போதைய அவசர உலகில், நம்மில் பலருக்கு உணவு உண்பதுகூட அவசரமாகிவிட்டது அல்லது காலம் தவறிச் சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பாலோர் வழக்கமாகவே வைத்திருக்கிறோம். ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதற்குப் பலரும் கூறும் காரணம், உடல் எடை குறைப்பு.

ஆனால், அப்படிச் செய்வதால் எந்த நோக்கத்துக்காக உணவை ஒதுக்குகிறோமோ, அதுவே எடையை அதிகரித்துவிடும் ஆபத்து இருக்கிறது.

எப்படியென்றால் ஒரு பொழுது உணவை ஒதுக்கி வைத்துவிட்டு, மறுபொழுது சாப்பிடும்போது அதிகப் பசி வேட்கையால் நம்மை அறியாமலேயே சற்று அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.

அதேபோல், ஒரு வேளை உணவை ஒதுக்கும் பழக்கத்தை நீண்டகாலம் கடைப்பிடித்துவந்தால், வயிற்றுப்புண் வரும் சாத்தியம் அதிகம். சத்துக் குறைபாடு உண்டாகும் சாத்தியமும் உள்ளது.

பிரச்சினை என்ன?

உடலில் உணவு செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியக்கூடிய ‘மெட்டபாலிஸம்' எனப்படும் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். காலை உணவை நாட்படத் தவிர்க்கும்போது, உணவிலிருந்து உடலுக்குத் தேவையான குளுக்கோஸை கிரகிக்க உதவும், கணையத்திலிருந்து சுரக்கக்கூடிய இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும்.

அறியாமையால் இதைச் சில காலம் தொடர்ந்து செய்தோமானால், நம்முடைய சர்க்கரையைப் பயன்படுத்தக்கூடிய திறன் இன்சுலினுக்கு இல்லாமல் போகும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20 சதவீதம் அதிகச் சாத்தியம் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன
.
தற்போதைய ஆராய்ச்சிகள் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. பெரும்பாலும் இரவு உணவை உண்ட பிறகு உறங்கி விடுகிறோம். காலை எழுந்து வேலைக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலோர் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையே உள்ள இடைவெளிதான், ஒரு நாளில் உடலில் உணவு உண்ணாமலிருப்பதில் மிக அதிகம். அதன் காரணமாகவே ஆங்கிலத்தில் காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்' என்கிறார்கள். அதாவது ‘பிரேக் தி ஃபாஸ்ட்டிங்' என்பதே இதன் அர்த்தம். விரதத்தை முறிப்பது. எனவே, இந்த நிலையில் உணவைக் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.

உணவுத் திணிப்பு

இன்னும் சிலரோ காலை உணவைக் கட்டாயமாகச் சாப்பிட வேண்டுமே என்கிற கடமைக்காக அவசர அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு, விழுங்க முடியாத குறைக்குத் தண்ணீரையும் சேர்த்துக் குடித்துச் செல்கின்றனர். இப்படிச் செய்வதும் தவறே… நன்றாக மென்று சாப்பிடும்போதுதான், நம் வாயிலிருந்து சுரக்கும் உமிழ்நீரிலிருந்தே செரிமானம் ஆரம்பிக்கத் தொடங்கும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் அடைந்து உடலில் சேரும்.

நன்கு மென்று, மெதுவாகச் சாப்பிடும்போது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் நம் மூளைக்கு ‘போதும்' என்னும் கட்டளையைப் பிறப்பிப்பதாகவும், இதனால் அதிகம் சாப்பிடாமல் இருக்க முடியும் எனவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது? (Journal of Clinical Endocrinology & Metabolism, July 2, 2013). உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.

மேலும் தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள் சரியான நேரத்துக்கு, சரியான உணவை - முக்கியமாகக் காலை உணவைத் தவிர்க்காமல் குறிப்பிட்ட அளவில் மட்டும் சாப்பிட்டுவந்தால் தொப்பை மேலும் அதிகரிக்காது, குறையவும் வாய்ப்பு உண்டு.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

ஆங்கிலத்தில் உணவு உண்பது பற்றி பிரபலப் பழமொழி ஒன்று உண்டு:

“அரசனைப் போலக் காலை உணவை உண்ணுங்கள்,

இளவரசனைப் போல மதிய உணவை உண்ணுங்கள்,

இரவு பரம ஏழையைப்போல உண்ணுங்கள்”

என்பதே அது.

அதாவது, காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும். மதிய உணவைக் காலை உணவின் அளவைவிடவும் குறைவாக உண்டால் ‘உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு' என்னும் பழமொழியில் சிக்காமல், வேலைகளில் கவனம் செலுத்தலாம்.

இரவு மிதமாக உணவு உட்கொண்ட பின் உறங்கச் செல்லும்போது, எந்தவித செரிமானத் தொந்தரவும் இல்லாமல் நல்ல உறக்கம் வரும்.

ஆனால், இந்தப் பழமொழியை அப்படியே தலைகீழாக நாம் கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலோர் இரவுதான் அதிக அளவு சாப்பிடுகிறார்கள். இது ‘நைட் ஈட்டிங் சிண்ட்ரோம்' எனப்படுகிறது. விழித்திருப்பதைவிட உறக்கத்தில் உடல் அசைவுகள் குறைவாக இருப்பதால், இரவு அதிகம் உண்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். ஆழ்ந்த தூக்கமும் வராது. இதைத் தவிர்க்க உண்ட உடனேயே தூங்கச் செல்லாமல், சிறு நடை போட்ட பிறகு உறங்கலாம்.

சாப்பிடும் முறை: 

சித்த மருத்துவம் காட்டும் வழி

சித்த மருத்துவத்தில் காலை, மதியம், இரவு எந்த வகையான உணவுப் பண்டங்களைச் சாப்பிட வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

காலை:

 பயறு வகைகள், கடலை, உளுந்து, எள்ளு, மொச்சை உணவு வகைகளை, கடுகு, மிளகு, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றுடன் இணைத்து உட்கொள்ளலாம். மேற்கூறியவை செரிப்பதற்குச் சற்றுக் கடினமாக உள்ள உணவுகள். சுக்கு, மிளகு போன்றவை இந்த உணவுகளில் உள்ள கடினத் தன்மையைக் குறைக்கத் தேவையான செரிமானச் சுரப்புகளைத் தூண்டும் பண்பு கொண்டவை. காலையில் இவற்றைச் சாப்பிட்டுவிட்டு உழைத்தால் உடலில் சத்தும் நிறைந்து தங்கும். உணவு செரிமானம் அடைவதும் எளிதாக இருக்கும்.

மதியம்: 

கிழங்கு வகைகள், பழ வகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை உட்கொள்ளலாம். இந்த உணவு வகைகள் அனைத்தும் மந்தப் பதார்த்தங்கள். இவற்றிலும் பெருங்காயம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்துச் சமைக்கும்போது, மந்தத் தன்மை மட்டுப்படும். மேலும் சூரிய வெப்பத்தாலும், உடல் உழைப்பாலும் செரிமானம் எளிதில் நடைபெறும்.

இரவு: 

அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வேகவைத்த உணவு வகைகள் போன்ற எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ண வேண்டும்.

தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என வகுத்துள்ளதை நவீன அறிவியல் ஆராய்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் சிறப்பாகப் பொருந்தும். நம் நாட்டு உணவை நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுவோம், நோய்களில் இருந்து விலகி நிற்போம்.

கட்டுரையாளர், 
டாக்டர் திருவருட்செல்வா சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 14.01.20147