disalbe Right click

Thursday, February 2, 2017

நைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு!


நைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு!

நைட் ஷிஃப்ட் என்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது. பணிமனை தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள், இரவு நேரக் காவலர்கள், ஐ.டி நிறுவனப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள்… என நாள்தோறும் பல தரப்பட்ட பிரிவினரும் இரவு நேரப் பணிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகிவிட்டது. இப்படி இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு சில உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக, இரவு நேரப் பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை நீண்டகால பாதிப்புகள், குறுகியகால பாதிப்புகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இரவுப் பணியில் இருப்பதால் உடனடியாக ஏற்படும் பிரச்னைகளை, `குறுகியகால பாதிப்புகள்’ எனலாம். உதாரணம், மலச்சிக்கல், தூக்கமுறை மாற்றத்தால் ஏற்படும் தூக்கமின்மை, வயிற்றுக்கோளாறு ஆகியவை. தொடர்ந்து பல வருடங்களாக இரவுநேரப் பணியில் இருப்பவர்களுக்கு வேறு சில பிரச்னைகள் உருவாகின்றன. இதை, `நீண்டகால பாதிப்பு’ எனலாம். சர்க்கரை நோய், இதயம் தொடர்பான பிரச்னைகள், உடல்பருமன், மனஅழுத்தம், குழந்தைப்பேறு இன்மை போன்றவை உதாரணங்கள்.     
           
பாதிப்புகள் ஏன்?

நமது உடல் ஆதிகாலம் தொட்டே பகலில் விழித்திருப்பதற்கும் இரவில் உறங்குவதற்கும் ஏற்ப தகவமைக்கப்பட்டிருக்கிறது. இதை நாம், `உடல் கடிகாரம்’ என்கிறோம். இரவில் தூங்கும்போது, நம்  உள்ளுறுப்புகள்  தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் பணியில் தீவிரமாக இருக்கின்றன. பழைய செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் முதல் மூளையில் உள்ள தேவையற்ற பதிவுகளை நீக்கும் செயல்பாடுகள் வரை அனைத்தும் இரவில்தான் நடக்கின்றன. இரவில் நாம் விழித்திருக்கும்போது ஏற்படும் ரசாயன மாற்றங்கள், நமது உடல் கடிகாரத்தைப் பாதிக்கின்றன. இதனால் உடல் நலம் கெடுகிறது.

தீர்வு என்ன?

வாழ்க்கைமுறை மாறும்போது அதற்கு ஏற்ப, நாம் உணவுமுறை, உடற்பயிற்சி, ஓய்வு ஆகியவற்றைத் திட்டமிட்டுக்கொண்டால் குறுகியகால, நீண்டகால பாதிப்புகள் இரண்டை யுமே பெரும்பாலும் தடுத்துவிட இயலும்.

* பணிக்குச் செல்வதற்கு முன்னர் இரவு உணவைப் போதுமான அளவுக்குச் சாப்பிட வேண்டும். பொதுவாக, இரவு நேரத்தில் மிகக் குறைவாகவே சாப்பிட வேண்டும். ஆனால், இரவு முழுதும் விழிக்கவேண்டி இருப்பதால், உடலுக்கு ஆற்றல் தேவை. எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி, கோதுமை உணவுகளான இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி இவற்றோடு வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுஉப்புக்கள் நிறைந்த காய்கறிகளால் ஆன சாம்பார் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பணிக்கு இடையே பசிக்கும் என்பதால், இரவு உணவு உண்ட 2-3 மணி நேரத்தில் (காலை 11 மணிக்கு ஸ்நாக்ஸ் எடுப்பது போல) சுண்டல், வேர்க்கடலை, பச்சைப்பயறு போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும்.

* டீ, காபி தூக்கத்தைத் தவிர்க்கும் என்பதால், ஏதேனும் ஒன்றை மட்டும் ஒரே ஒருமுறை அருந்தலாம். கிரீன் டீ அருந்துவது இன்னும் சிறந்தது. பால் குடிப்பதைத் தவிர்க்கலாம்.

* இரவு நேரத்தில் சாட் உணவுகள், ஜங்க் ஃபுட், கார்பனேட்டட் பானங்களை எடுக்கக் கூடாது. இவை செரிமானத்தைப் பாதித்து, உடலைக் கெடுக்கும்.

* காலை பணி முடிந்து வீட்டுக்குச் சென்றதும் குளித்துவிட்டு இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். காலை உணவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தவிர்க்கக் கூடாது.

* பணி முடிந்த பிறகு வீட்டுக்கு சென்றதும், டீ, காபி பருக வேண்டாம். அவை தூக்கத்தைப் பாதிக்கும்.

* நன்றாக ஓய்வு எடுங்கள். சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம். இடையில் பசியால் விழிப்பு ஏற்பட்டால், சிறிது சாப்பிடலாம். 

* தூங்கி எழுந்ததும் மாலையில் 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்ய வேண்டும். மேலும் ஸ்ட்ரெச்சிங், உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற பயிற்சிகளையும் செய்துவிட்டு, இரவு உணவுக்குப் பின்னர் பணிக்குச் செல்லலாம்.

* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தலாம்.

* செரிமானத்துக்குக் கடினமான உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

* தினமும் 2 – 2 1/2 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். கீரைகள், கிழங்கு வகைகள், பயறு வகைகள், நார்ச்சத்துள்ள பழங்கள் ஆகியவற்றை உண்டால், நைட் ஷிஃப்ட் வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

நன்றி : டாக்டர் விகடன் செய்திகள் - 16.01.2017

வங்கிகள் மக்களிடம் மறைக்கும் 10 விஷயங்கள்..!

வங்கிகள் மக்களிடம் மறைக்கும் 10 விஷயங்கள்..! 

சென்னை: சேமிப்பு, செலவு, கடன், வீடு கட்ட மற்றும் நகைகளை பாதுகாக்க என பல்வேறு சேவைகளை நமக்கு வங்கிகள் அளித்து வருவதால், அவை நமக்கு உதவுவது அவற்றின் கடமை என்றே நீங்கள் எண்ணியிருப்பீர்கள். ஆனால் வங்கிகள் தங்களுக்கு எப்படி உதவி செய்து கொள்கின்றன என்று தெரியுமா?

இவ்வாறு உதவி செய்யும் போது, உங்களுடைய எண்ணத்திற்கு மாறாக, தன்னுடைய விருப்பத்திற்கு வங்கிகள் முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகின்றன. இவ்வாறு முரண்பாடுகள் ஏற்படும் 10 விதமான விஷயங்களைப் பற்றி இங்கே தெளிவு படுத்துகிறோம். இந்த விஷயங்களைப் பற்றி வங்கிகளைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் விளக்கியிருக்க மாட்டார்கள். இதை நாம் வங்கியாளர்களிடம் கேட்டு அறிந்துகொள்வது நம்முடைய கடமை.

1) காசோலை 

நீங்கள் காசோலையை உங்களுடைய கணக்கில் வரவு வைத்தவுடனேயே அந்த பணம் கணக்கில் வந்து விடாது.
காசோலை

அதற்கு சிறிதளவு காலம் தேவைப்படும். அது வெளியூர் காசோலையாக இருந்தால் இந்த கால அளவு சற்றே அதிகமாக இருக்கும். 2012ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, மின்மயமாக்கி காசோலைகளை விரைவில் பணமாக்க உத்தரவிட்டது. அது வரையிலும் வெளியூர் காசோலைகளை பணமாக்க குறைந்தபட்சம் 15 நாட்களில் இருந்து 3 வாரங்கள் வரை காலம் இருந்து.

ஆனால், எவ்வளவு அதிக நாட்கள் கால தாமதமாக உங்களுடைய பணம் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறோ, அந்த அளவிற்கு வங்கிக்கு இலாபம் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். இந்த பணத்தை எல்லாம் வங்கிகள் தடையற்ற நிதி ஆதாரங்களாக கொண்டிருக்கின்றன.

2011ஆம் ஆண்டில் மட்டும், இவ்வகையில் கணக்குகளில் செலுத்தப்பட்ட காசோலைகளை இ-கிரெடிட் முறையில் செய்வதை தாமாதமாக்கி சுமார் 620 கோடிகள் வரை வங்கிகள் சம்பாதித்துள்ளன.

2) டெபிட் கார்டு!! 

டெபிட் கார்டு திருடப்படுதல் அல்லது தொலைத்து விடுதல் பற்றி நாம் பேசும் போது டெபிட் கார்டுகளை விட கிரெடிட் கார்டுகள் பாதுகாப்பானவையாக உள்ளன. இதனை உங்களுடைய வங்கிகள் உங்களிடம் சொல்வதில்லை. எனவே, உங்களுடைய வங்கியினரிடம் பேசி, இவ்வாறு தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிந்து கொண்டு, தவறுகள் நடக்காதவாறு உங்களுடைய கணக்கை பாதூகத்துக் கொள்ளுங்கள். இவ்வகையிலான எதிர்பார்க்காத சூழல்களை சமாளிப்பதற்காகவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பண அட்டை பாதுகாப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இது போன்ற சூழல்களுக்கு உங்கள் வங்கி தருவது என்ன என்பதை கண்டறியுங்கள்.

3) நடப்பு கணக்கில் உள்ள பணம் 

காசோலை பவுன்ஸ் ஆவது போன்ற மோசமான சூழல்களை மக்கள் எதிர்கொள்ள விரும்புவதில்லை. எவ்வளவு செலவு செய்தாவது, இது போன்ற சூழல்களை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்வார்கள். இவ்வாறு செக் பவுன்ஸ் ஆவதை தவிர்க்கும் நோக்கில் மிகப்பெரிய தொகைகளை தங்களுடைய நடப்பு கணக்கில் அவர்கள், வங்கிகளுக்கு மிகவும் வசதியாக விட்டு வைப்பார்கள். இதன் மூலம், நீங்கள் வங்கிகளின் சேமிப்பு கணக்கில் பணத்தை வைக்கும் போது உங்களுக்கு தர வேண்டிய வட்டியை வங்கிகள் தர வேண்டியிருப்பதில்லை.

4) பின் தேதியிட்ட காசோலை 

பின் தேதியிட்ட காசோலைகள், காசோலைகள் பவுன்ஸ் ஆவதை தவிர்க்க உதவுமா? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. உங்களுடைய கணக்கில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவு பணம் வரும் என்று எண்ணி, பின் தேதியிட்ட காசோலையை தயார் செய்வீர்கள். ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள நாளுக்கு முன்னதாகவே அந்த காசோலையை வங்கிகளில் செலுத்தி பணமாக்கலாம். இவ்வாறு செய்யும் போது செக் பவுன்ஸ் ஆகும். நிறைய பிரச்னைகள் வரும். எனவே, இந்த வழிமுறையை கூடிய வரையிலும் தவிர்க்கவும்.

5) நேரடியாக வங்கியை அணுகுதல் 

உங்களுடைய கணக்கு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது பரிமாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு பல்வேறு வழிமுறைகளை வங்கிகள் அளிக்கின்றன.

அதாவது, இணையவழியில் படிவங்களை நிரப்பி கேட்டுக் கொள்ளுதல், வாடிக்கையாளர் சேவையில் கேட்டல் அல்லது வங்கிக்கு நேரடியாக சென்று வருதல் போன்றவை. ஆனால், இவை எல்லாவற்றிலும் சிறந்த மற்றும் பலன் தரக் கூடிய வழிமுறை நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று வருவது தான் என்பதை வங்கி சொல்வதில்லை.

6) வாடிக்கையாளர் சலுகைகள் 

பிற நிறுவனங்களைப் போலவே, நெடுநாட்கள் தங்களிடம் கணக்கு வைத்துள்ள, உண்மையான வாடிக்கையாளருக்கென சில சலுகைகளை வங்கிகளும் வைத்துள்ளன.
வாடிக்கையாளர் சலுகைகள்

ஆனால், பெரும்பாலான நேரங்களில் வங்கிகள் இந்த விஷயத்தை விளம்பரப் படுத்துவதில்லை. நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும். சற்றே அழுத்தம் கொடுத்தல், நெடுநாள் வாடிக்கையாளர்களுக்கு கட்டண விலக்குகளையும் கூட வங்கிகள் தருகின்றன.

7) பரிமாற்ற ரசீதுகள்

பல்வேறு வங்கி நிறுவனங்களாலும் இந்த குறிப்பு தரப்பட்டு வருகிறது. காரணம் என்ன தெரியுமா? இந்த பதிவுகளை வைத்திருப்பது ஒரு தானியங்கி செயல்பாடாகும். இந்த செயல்பாட்டை வழங்கும் மென்பொருள் சில பிழைகளை உருவாக்கலாம். இந்த பிழையால் ஒரே செயல்பாடு பலமுறை செய்யப்பட்டதாக 'டூப்ளிகேஷன்' ஆகலாம். எனவே, அனைத்து இரசீதுகளையும், ஒவ்வொரு முறையும் பத்திரப்படுத்தி வைத்தல் சிறந்தது.

8) அதிக வட்டியுடைய கணக்குகள் 

வங்கிகளில் பல்வேறு விதமான வட்டி விகிதங்களுடன் கணக்குகள் உள்ளன. நீங்கள் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் கணக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய விருப்பமாக இருக்கும்.

எனவே, அவர்கள் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் கணக்குகள் பற்றி விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை. எனவே, அதிக வட்டி விகிதங்கள் உள்ள கணக்குகள் பற்றி அறிய வேண்டியது, உங்களுடைய ஆர்வத்தைப் பொறுத்த விஷயமாக இருக்கும்.

9) வங்கி படிவங்கள்

நீங்கள் ஒரு படிவத்தில் கையெழுத்திடும் முன்னர், அதனை முழுமையாக, நன்றாக படித்துப் பார்க்கவும். வங்கி துறையினரால் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் சிலவற்றை அப்போது நீங்கள் படிக்க நேரிடும். யாருடைய உதவியையாவது கேட்டு, அந்த வார்த்தைகளுக்கான விளக்கங்களை கேட்டு, புரிந்து கொண்டு பின்னர் கையெழுத்திடவும்.

இது வங்கி அலுவலரின் நேரத்தை சற்றே எடுத்துக் கொண்டாலும், பின் வரும் நாட்களில் உங்களுக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும்.

10) சிறு தொழில் கடன்கள் 

நீங்கள் சிறு தொழில் செய்வதற்காக வங்கிகளிடம் கடன் பெற நினைத்தால், உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சிறு தொழில் கடன்கள் வழங்குவதில் பல்வேறு வங்கிகளும் பாரபட்சமாக நடந்து கொள்ளவே நினைக்கின்றன.
சிறு தொழில் கடன்கள்
அவர்கள் கடனை திரும்ப பெறுவது குறித்து அச்சப்படுகின்றனர். எனவே, இவ்வகையிலான விண்ணப்பங்களை எந்த விலை கொடுத்தாவது நிராகரிக்க முயலுவார்கள்.

நன்றி : தமிழ் குட்ரிட்டன்ஸ் - 12.11.2016

இரைப் பை வாதம் என்றால் என்ன ?

Image may contain: text

இரைப் பை வாதம் என்றால் என்ன ?

டயாபடிக் கேஸ்ட்ரோபெரிசிஸ் என்றால் என்ன?

இரைப்பையில், எவ்வளவு நேரம் உணவு இருக்கலாம். எப்போது சிறுகுடலுக்கு அனுப்ப வேண்டும் என்பதை தீர்மானிப்பது வேகஸ் நரம்புகள் தான். இந்த நரம்புகள் பாதிக்கப்பட்டால் கேஸ்ட்ரோபெரிசிஸ் எனும் இரைப்பை வாதம் வரும்.

இப்பாதிப்பு ஏற்பட காரணம்?

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்காத போது, டயாபடிக் கேஸ்ட்ரோபெரிசிஸ் ஏற்படுகிறது.

டயாபடிக் நியூரோபதியின் வகை என்கிறார்களே?

உண்மை தான், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது அது ரத்தக்குழாயைப் பாதித்து, நரம்புகளுக்குத் தேவையான உணவு மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதைத் தடை செய்கிறது.

இப்பாதிப்புக்கு யாரெல்லாம் ஆளாகின்றனர்?

பெரும்பாலும், டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவில் இப்பிரச்னை ஏற்படுகிறது. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்?

இப்பாதிப்பு ஏற்பட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி, அசவுகரியத்தை அளிக்கும். இந்த அறிகுறிகள், மனிதருக்கு மனிதர் தீவிரமாகவோ அல்லது சாதாரணமாகவோ ஏற்படலாம்.

இதன் பாதிப்பு?

உணவு இரைப்பைக்கு வந்து நீண்ட நேரம் கழித்து சிறுகுடலுக்குள் நுழையும். அங்கே ஊட்டச்சத்து கிரகிக்கப்பட்டு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். நீண்ட நேரம், இரைப்பைக்குள்ளேயே உணவு இருக்கும் போது பாக்டீரியா கிருமிகளின் வளர்ச்சி அதிகரிக்கலாம். உணவு மேலும் கடினமாகி, வாந்தியை ஏற்படுத்தலாம் அல்லது குடலில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

பரிசோதனைகள் என்னென்ன?

பேரியம் எக்ஸ்ரே, ரேடியோஐசொடோப் கேஸ்டிரிக் எம்டியிங் ஸ்கேன், ஒயர்லெஸ் மொட்டிலிட்டி கேப்ஸ்யூல், மேல் வயிறு எண்டோஸ்கோப்பி, அல்ட்ராசவுண்ட் என, பல பரிசோதனைகள் உள்ளன.

இப்பாதிப்பு வராமல் தடுக்க என்ன செய்வது?

உணவு உண்ணுவதை மாற்றியமைப்பதன் மூலம் இரைப்பை வாதத்தை தவிர்க்க முடியும். மூன்று வேளைக்கு பதிலாக ஆறு வேளையாக சாப்பிடுவது நல்லது. உணவை உண்ணும் போது மெதுவாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இந்த பாதிப்புள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா?

உணவு உண்டதற்கு பிறகு அரை மணிநேரம் கழித்து சிறிய நடைபயிற்சி செய்யலாம். நடைபயிற்சியே போதுமானது. பொதுவாக காலையில், 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நல்லது.

சிகிச்சைகள் என்ன?

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்காக இன்சுலின், வாய்வழி மருந்துகள், உணவுப் பழக்கத்தில் மாறுதல்கள் போன்றவையே பரிந்துரைக்கப்படும். நோயாளியின் உடல்நிலையை பொறுத்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.

ரா.நாராயணமூர்த்தி
நீரிழிவு நிபுணர்

நன்றி : தினமலர் நாளிதழ் - 01.02.2017

மத்திய பட்ஜெட் 2017


மத்திய பட்ஜெட் 2017 

தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை: 

ரூ.5 லட்சம் வரை 5 சதவீதமாக வரி குறைப்புரூ.10 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு | ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை | அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறை | குறு, சிறு நிறுவனங்களுக்கு 5% வரி குறைப்பு | ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் | ஆன்லைன் ரயில் டிக்கெட் சேவை வரி ரத்து

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் 2017-18-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முதல்முறை யாக ரயில்வே பட்ஜெட் இணைக் கப்பட்டுள்ளது.

 பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளி யிட்டு நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

விவசாய கடனுக்கு இலக்கு

ரூ.10 லட்சம் கோடிக்கு விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசன திட்டங்களுக்காக நபார்டு உதவியுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க 250 டிஜிட்டல் தேசிய வேளாண் சந்தைகள் செயல்படு கின்றன. இவற்றின் எண்ணிக்கை 585 ஆக அதிகரிக்கப்படும். பால் வளத்தைப் பெருக்க நபார்டு உதவியுடன் ரூ.8,000 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்படும். வறட்சியை சமாளிக்க 10 லட்சம் குளங்கள் வெட்டப்படும்.

ஒரு கோடி குடும்பங்கள் மீட்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் 2019-ல் கொண் டாடப்பட உள்ளது. அதற்குள் அந்தி யோதயா திட்டத்தில் ஒரு கோடி ஏழை குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 2019-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாத ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். 2018, மே மாதத்துக்குள் 100 சதவீத கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கு சலுகை

ஆண்டுக்கு ரூ.50 கோடி வருவாய் ஈட்டும் குறு, சிறு நிறுவனங்களுக்கு தற்போது 30 சதவீத வரி விதிக்கப் படுகிறது. இது 5 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப் புக்காக ரூ.1 லட்சம் கோடியில் தேசிய ரயில் பாதுகாப்பு நிதியம் ஏற்படுத்தப்படும். 

2020-க்குள் அகல ரயில் பாதைகளில் ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றப்படும். 3500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படும். புதிதாக 25 ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும். 500 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக மின்தூக்கி, மின் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்தப் படும். வரும் 2019-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்களிலும் பயோ கழிப்பறைகள் அமைக்கப் படும். ஆன்லைன் ரயில் டிக்கெட்டு களுக்கான சேவை வரி ரத்து செய்யப்படும். புதிய மெட்ரோ ரயில் சட்டம் வரையறுக்கப்படும்.

வரி தள்ளுபடி

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத் துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

 வருமான வரிச் சட்டம் அத்தி யாயம் 8, பிரிவு 87ஏ-ன் கீழ் ரூ.3.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.3 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் பல்வேறு வரிச்சலுகைகளின்படி தனிநபர்கள் ரூ.4.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு பெற முடியும்.

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரிவிதிப்பும் தொடரும்.

ஏராளமானோர் வரிஏய்ப்பு

கடந்த 2015-16-ம் ஆண்டில் 3.7 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 99 லட்சம் பேர் தங்களது வருவாய் ரூ.2.5 லட்சத்துக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

1.95 கோடி பேர் தங்களின் வருவாய் ரூ.5 லட்சத்துக்குள்ளும் 52 லட்சம் பேர் ரூ.10 லட்சத்துக்குள்ளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 25 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 லட்சத்துக்கு மேலான வருவாய்க்கு வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் மாத சம்பள தாரர்கள் ஆவர். அந்த வகையில் 56 லட்சம் மாத சம்பளதாரர்கள் முறையாக வரி செலுத்துகின் றனர்.

நாடு முழுவதும் 13.94 லட்சம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. 

இதில் 2.76 லட்சம் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கடந்த ஆண்டு கணக்கு தாக்கல் செய்துள்ளன. 2.85 கோடி நிறுவனங்கள் ஒரு கோடிக்கு குறைவாகவும், 28,557 நிறுவனங்கள் 10 கோடிக்கு குறை வாகவும் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளன. 7,781 நிறு வனங்கள் மட்டுமே ரூ.10 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டுவதாக கணக்கு சமர்ப்பித்துள்ளன.

நாட்டில் விற்பனையாகும் கார்கள், வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக் கையை ஒப்பிடும்போது ஏராள மானோர் வரிஏய்ப்பில் ஈடுபடுவது தெளிவாகிறது.

கறுப்புப் பணத்தைக் கட்டுப் படுத்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும். மேலும் ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 02.02.2017

கோர்ட் உத்தரவை மதிக்காத கலெக்டருக்கு சிறை

Image may contain: text

மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாருக்கு 6 வாரம் சிறை: மேலூர் கோர்ட் உத்தரவு

மேலூர்: கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்க மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது(சப் டிவிசன்) தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளனர். ஆனால், அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலத்தை அளந்து பிரிக்க உத்தரவிட்டது. இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐகோர்ட் கிளை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

உத்தரவு:

இதனையடுத்து அவர்கள் மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த கோர்ட் மதுரை கலெக்டர், மேலூர் தாசில்தாரை 6 வாரம் உரிமையியல் சிறையில் வைக்கவும், அவர்களது வாகனத்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.02.2017

நன்கொடை பெற கட்சிகளுக்கு கட்டுப்பாடு

No automatic alt text available.

நன்கொடை பெற கட்சிகளுக்கு கட்டுப்பாடு

நன்கொடைகளுக்கு கட்டுப்பாட்டால் அரசியல் கட்சிகள்...
கறுப்புப் பணத்தை ஒழிக்க பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
புதுடில்லி: அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய்க்கு மேல், ரொக்கமாக நன்கொடை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வழங்கப்படும் தொகை அனைத்தும், காசோலை அல்லது டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், அரசியல் கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியல் கட்சிகள், முறைகேடான வகையில் நன்கொடை பெறுவதை தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின் படி, சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 

வரிச்சலுகை

அதன்படி, அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய் வரை மட்டுமே, ரொக்கமாக நன்கொடை பெற முடியும். அதற்கு மேலான தொகையை, காசோலை அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமே பெற முடியும். 

அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடையை பத்திரங்களாக வழங்க, வங்கிகளில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும். அதாவது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க விரும்பும் நபர், வங்கிகளில், அதற்கான தொகையை செலுத்தி, அந்த தொகைக்குநிகரான பத்திரங்களை பெறலாம். 

பத்திரங்களைப் பெற, காசோலை அல்லது டிஜிட்டல் முறையில் மட்டுமே, வங்கிகளில் பணம் செலுத்த வேண்டும். அந்த பத்திரங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின், வங்கிகள் மூலம், அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிக் கொள்ளலாம். 

கறுப்பு பணப் பதுக்கல்ஒழிக்கப்படும்

நன்கொடை வழங்குபவர் மற்றும் நன்கொடை பெறும் அரசியல் கட்சி ஆகிய இரு தரப்பினரும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால், இரு தரப்பினருக்கும் வரிச்சலுகை வழங்கப்படும். பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கப்படுவதால், அரசியல் கட்சிகள், முறைகேடான வகையில் நன்கொடை பெறுவது முடிவுக்கு கொண்டு வரப்படும். முறைப்படுத்தப்பட்ட கணக்கு தாக்கல் செய்யப்படுவதால், கறுப்பு பணப் பதுக்கல் ஒழிக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளுக்கு கிடைக்கும் பெரும்பாலான நன்கொடை, முகம் தெரியாத நபர்களிடம் இருந்து பெறப்படுவதால், அவற்றுக்கு கணக்கு பராமரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், நன்கொடை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து, பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால், அரசியல் கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

நன்கொடையில் கலக்கும் காங்கிரஸ்

கடந்த, 2004- - 05 நிதி ஆண்டு முதல், 2014 - 15ம் நிதி ஆண்டு வரை, தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்த அறிக்கையை, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டது

. இதில் நன்கொடை, சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளில் கிடைத்த தொகையும் அடங்கும்.

இதன்படி, 10 ஆண்டுகளில், தேசிய, மாநில அரசியல் கட்சி களின் மொத்த வருவாய், 11 ஆயிரத்து 367 கோடி ரூபாய்.

 இதில், 3 ஆயிரத்து 982 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, காங்., கட்சி முதலிடம் பிடித்தது. 

2வது இடம், பா.ஜ.,க்கு கிடைத்தது. அதன் வருவாய் 3 ஆயிரத்து 272 கோடி ரூபாய். 

2வது இடத்தில் தி.மு.க.: 

மாநில கட்சிகளில், சமாஜ்வாதி, தி.மு.க., முறையே முதல் இரு இடங்களை பிடித்தன. 

அவற்றின் வருமானங்கள் முறையே, 819 கோடி மற்றும் 203 கோடி ரூபாய். அ.தி.மு.க., 165 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, 3வது இடம் பிடித்துள்ளது.

அறியாத நபர்கள்:

கட்சிகளின், 69 சதவீத வருவாய், அறியாத நபர்களிடமிருந்து பெற்ற நன்கொடை மூலம் கிடைத்து உள்ளது. 

அதாவது, 20 ஆயிரத்திற்கும் அதிகமான நன்கொடை வழங்கினால் மட்டுமே விபரங்களை அளிக்க வேண்டும். 

20 ஆயிரத்துக்கு கீழ் நன்கொடை அளித்தவர்களிடமிருந்து, கட்சிகள், 7 ஆயிரத்து 833 கோடி ரூபாய் பெற்றுள்ளன. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 01.02.2017

Monday, January 30, 2017

மற்றவர் கணக்கில் பணம் பாய்ந்தது பினாமி சட்டம்

மற்றவர் கணக்கில் பணம் பாய்ந்தது பினாமி சட்டம்

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, மற்றவர் வங்கிக் கணக்கில், பணத்தை செலுத்தியவர்கள் மீது, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், மற்றவர்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி, அதற்கு சிறு தொகையை கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பலர் மாற்றினர்.
வருமான வரித்துறைக்கு அதிகாரம்                     

'
இவ்வாறு மற்றவர் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினால், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என,வருமான வரித்துறை எச்சரித்திருந்தது.

கடந்த ஆண்டு, நவ., 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள பினாமி சட்டத்தின் கீழ், கடும் அபராதம் மற்றும் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

மேலும், சொத்தை பறிமுதல் செய்யவும், வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

87 பேருக்கு நோட்டீஸ்

இதற்கிடையில், செல்லாத ரூபாய்நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு, 2016, டிச., 30 உடன் முடிந்தது. அந்த காலத்தில், வங்கி கணக்குகளில் செய்யப்பட்ட, 'டிபாசிட்'கள் குறித்து வருமான வரித் துறை ஆய்வு செய்து வருகிறது.
Advertisement
அந்த ஆய்வுகளின் அடிப்படையில், பினாமி பெயரில், கறுப்புப் பணத்தை செலுத்தி ஏமாற்றியதாக, 87 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

'
மேலும், 42 வழக்குகளில், கோடிக்கணக்கான ரூபாய் உள்ளிட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என, வருமான வரித்துறை நேற்று தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் – 30.01.2017 

பிளாஸ்டிக் ஆதார் கார்டு

Image may contain: text

ஆதார் கார்டை பிளாஸ்டிக்கில் மாற்றி தருவது சட்டவிரோதம்

புதுடில்லி:பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கு வதாக, 200 ரூபாய் வரை வசூலிப்போருக்கு எதிராக, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், தனித்துவ அடையாள அட்டை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு, நாடு முழுவதும், ஆதார் அடையாள அட்டைகளை இலவசமாக வினியோகித்து வருகிறது. இந்த அட்டைகளை, பிளாஸ்டிக் அட்டையாகவோ அல்லது ஸ்மார்ட் அட்டையாகவோ மாற்றித் தருவதாக, சிலர், 50 முதல் 200 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, யு.ஐ.டி.ஏ.ஐ., தலைவர் அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நேற்று கூறியதாவது:

காகிதத்தில் வழங்கப்படும், ஆதார் அடையாள அட்டைகள், முற்றிலும் செல்லத்தக்கவை. அதற்கு மாற்றாக, பிளாஸ்டிக், ஸ்மார்ட் கார்டு வடிவில் ஆதார் அட்டைகளை பெற வேண்டிய அவசியம் இல்லை. அவற்றுக்காக, 50 - 200 ரூபாய் வசூல் செய்வோர் குறித்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆதார் கடிதம், ஆதார் காகித அட்டை, இணைய தளம் மூலம் காகிதத்தில், 'டவுன்லோடு' செய்யப் படும் ஆதார் பதிவு, ஆகியவற்றை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட் ஆதார் அட்டை என்ற ஒன்றுஇல்லவே இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இதற்காக, யாரும் பணம் செலவு செய்ய வேண்டாம்.

ஆதார் பற்றிய விபரங்களை, வேறு நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை, மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கார்டுகளாக மாற்றித் தருவதாக கூறி, ஆதார் கார்டுகளை பெறுவது சட்டவிரோதம்.இவ்வாறு அவர் கூறினா

நன்றி : தினமலர் நாளிதழ் - 30.01.2017

மீசல்ஸ் மற்றும் ருபெல்லா ஊசி பற்றிய விளக்கங்கள்

No automatic alt text available.


மீசல்ஸ் மற்றும் ருபெல்லா ஊசி பற்றிய விளக்கங்கள்

மீசல்ஸ் மற்றும் ருபெல்லா ஊசி குறித்து வெளியான புரளிகள் காரணமாக பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகம் நிச்சயம் தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.
இதுவரை தனியார் மருத்துவர்களிடம் சில நூறுகளைக் கொடுத்து போட்டுக் கொண்ட அதே ருபெல்லா மருந்தை, தமிழக அரசு இலவசமாகப் போடுகிறது என்றதும், எத்தனை இட்டுக் கதைகள், புரளிகள்.
அவற்றை, அறியாத பொது மக்களும் ஏதோ தங்களுக்குத் தெரிந்தவர்களையும் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு தவறான பார்வர்டுகளை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எந்த ஒரு மருத்துவம் தொடர்பான தகவல்களையும், உண்மை அறியாமல் தயவு செய்து பகிர வேண்டாம் என்பதுதான், ருபெல்லா தடுப்பூசி இலவசமாக குழந்தைகளுக்குக் கிடைக்க இதுவரை கடும் பிரயத்னம் மேற்கொண்டவர்களின் அன்பான வேண்டுகோளாக உள்ளது.
சரி விஷயத்துக்கு வருவோம். ஈரோட்டில் குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் அருண் குமார் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதை உங்களுக்கு நேரடியாக வழங்குகிறோம்.
இனி அவரே தொடர்கிறார்.
வணக்கம்,
டாக்டர் அருண்குமார், குழந்தை நல மருத்துவர், ஈரோடு.
நமது அரசு வரும் பிப்ரவரி மாதத்தில் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை MR எனப்படும் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசியை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போடவுள்ளது.
இதை வழக்கம்போல், வெளிநாட்டு கம்பெனிகளின் பரிசோதனை, காலாவதியான மருந்து என்றும், இதை போட்டுக்கொள்ளும் குழந்தைகளுக்கு வீரியம் குறைவு, உடல் சோர்வு மற்றும் ஆட்டிசம் ஏற்படும் என்றெல்லாம் வாட்ஸாப்பில் கண்ட கண்ட பார்வார்டுகள் வந்த வண்ணம் உள்ளன. திடீர் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தினம் தினம் முளைத்த வண்ணம் உள்ளனர்.
இதை பற்றிய அறிவியல் ரீதியான விளக்கத்தை தெரிவிக்கும் முன்னர்,இது போன்ற அறிவிலிகள் அனுப்பும் ஆதாரமற்ற முட்டாள்தனமான பார்வார்டுகளை யாரும் இன்னொருவருக்கு அனுப்பி சிலபல குழந்தைகளை முடமாக்கிய பாவத்தை சேர்த்துக்கொள்ளாதீர்கள் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற மெசேஜ் அனுப்புபவர்கள், தீவிரவாதிகளை விடவும் மிக பயங்கரமானவர்கள். பொடா, தடா என்று ஏதாவது சட்டத்தில் கைது செய்து இவர்களை உள்ளே தள்ள வேண்டும்.
தட்டம்மை(measles) என்பது என்ன?
குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் உடலில் தடுப்புடன் வரும் அம்மை வகைகளில் ஒன்று. இது அம்மை தானே. நாங்கள் வேப்பிலை அடித்துக்கொள்கிறோம்.
இதற்கு எதுக்கு தடுப்பூசி?
மற்ற அம்மைகள் போலில்லாமல், நிமோனியா எனப்படும் தீவிர நெஞ்சு சளி, ஜுரம், தீவிர வயிற்றுப்போக்கு, கடும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, போன்ற கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த தட்டம்மை.
1990 இல், ஒரு வருடத்திற்கு ஆறு இலட்சம் குழந்தைகள் தட்டம்மை நோயால் இறந்து போனதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
2015 இல், உலகில் ஒரு வருடத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் குழந்தைகள் தட்டம்மை நோய்க்கு பலியாகின.
மற்ற நாடுகளின் நிலைமை என்ன?
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தட்டம்மை 1990களில் வருடத்திற்கு 30000 பாதிப்புகளாக இருந்தது, இப்போது வருடத்திற்கு 150 முதல் 200 பாதிப்புகள் என்ற நிலையில் மட்டுமே உள்ளது. இந்த 200 புது நோயாளிகளுக்கும் காரணம் இது போன்ற தடுப்பூசி பற்றிய தவறான புரிதல்களும் பெற்றோர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதும் தான்.
இந்தியாவில் இதன் நிலைமை என்ன?
உலகில் 2015இல் தட்டம்மையினால் ஏற்பட்ட குழந்தைகள் இறப்புகளில், இந்தியாவில் மட்டும் எழுபதாயிரம் குழந்தைகள் தட்டம்மை நோய்க்கு பலியாகின. அதாவது உலக இறப்புகளில் 50 சதவீதம்.
இந்தியாவில் ஒரு வருடத்தில் எய்ட்ஸ் நோயால் இறக்கும் குழந்தைகளை விட தட்டம்மை நோயால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்.
தடுப்பூசியால் தடுக்கக்கூடிய இறப்புகளில் தட்டம்மை முதல் இடத்தில் உள்ளது.
எப்போது இருந்து இந்த measles தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வருகிறது?
1985 ஆம் ஆண்டு முதல் இந்த measles(தட்டம்மை) தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக இதுவரை எந்த பிரச்னையும் இதனால் வந்ததில்லை.
இப்போது என்ன மாற்றம்? MR தடுப்பூசி என்றால் என்ன?
MR தடுப்பூசி என்பது, measles(தட்டம்மை) மற்றும் rubella(ருபெல்லா) ஆகிய 2 நோய்களுக்கு பாதுகாப்பு தருகிறது.
இவ்வளவு நாட்களாக MMR (measles, mumps, rubella) எனும் தடுப்பூசி தனியார் மருத்துவர்களிடம் மட்டுமே போடப்பட்டு வந்தது. 1990களில் இருந்து இந்த தடுப்பூசி இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இப்போது அரசே இலவசமாக measles, rubella நோய்களுக்கு பாதுகாப்பு தரும் இந்த MR தடுப்பூசியை போடவுள்ளது.
ரூபெல்லா(rubella) என்றால் என்ன?
ருபெல்லா நோயும் அம்மை நோய்களில் ஒருவகை தான். காய்ச்சல், நெறிக்கட்டி, தடுப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.
இதென்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கர் நோயா?
ருபெல்லா குழந்தைகளுக்கு வருவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்நோய் தொற்று ஏற்படும் போது, கருவிற்கு நோய்க்கிருமிகள் சென்று கருவை தாக்குகின்றன. இதனால் congenital rubella syndrome எனப்படும் பிறவி குறைபாடு பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும்.
இந்த congenital rubella syndrome நோய் கிட்டத்தட்ட வருடத்திற்கு ஒரு இலட்சம் குழந்தைகளை பாதிக்கிறது.
இதனால், காது கேளாமை, பிறவி கண் புரை(congenital cataract), இருதயத்தில் ஓட்டை(congenital heart defects), மூளை வளர்ச்சி குறைபாடு, கல்லீரல் மற்றும் இரத்தம் சார்ந்த கோளாறுகள் என்று பலப்பல பிரச்சனைகள் பிறக்கும் முதலே இந்த குழந்தைகளுக்கு இருக்கும்.
இந்த நோயுடன் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், இவற்றை சரி செய்ய எந்தவொரு மருந்தோ சிகிச்சையோ கிடையாது.
கர்ப்பிணிகளுக்கு மட்டும் போட வேண்டியது தானே?
இந்த தடுப்பூசியை கர்ப்பிணிகளுக்கு போட இயலாது. குழந்தைகளுக்கு போட்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தினால் தான் வருங்காலத்தில் வராமல் தடுக்க இயலும்.
இந்நோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.
ஏற்கனவே அமெரிக்க கண்டத்தில் முற்றிலும் இந்நோய் பிறக்கும் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் வருடத்திற்கு, கிட்டத்தட்ட 15000 முதல் 20000 குழந்தைகளுக்கு இந்நோய் வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
ஏன் திடீரென்று இந்த தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது?
போலியோ சொட்டு மருந்து 40 வருடங்களாக இந்தியாவில் கொடுக்கப்பட்டு வந்தாலும், pulse polio program எனப்படும் கட்டாய போலியோ சொட்டு மருந்து தின திட்டம் 1995 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தான், கொடிய போலியோ நோயின் தாக்கம் குறைந்து 2012 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் போலியோ நோயே இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல், தட்டம்மை தடுப்பூசி 1985 முதல் போடப்பட்டு வந்தாலும், இன்னும் தட்டம்மை இந்தியாவில் ஒழிந்தபாடில்லை. 
இப்போது தட்டமையுடன் ருபெல்லா நோயையும் ஒழிக்க வேண்டி இந்திய அரசு பல்ஸ் போலியோ திட்டம் போல கட்டாய MR(தட்டம்மை ருபெல்லா) தடுப்பூசி திட்டத்தை முதல் கட்டமாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது மாபெரும் முன்னேற்றமாகும்.
உலகத்தில் ஏற்கனவே 123 நாடுகள் இந்த தடுப்பூசியை கட்டாயமாக்கி உள்ளன. இந்தியா 124 வது நாடு. அவ்வளவே. இந்த தடுப்பூசியால் என்னென்னமோ பக்க விளைவுகள் எல்லாம் வரும் என்று கூறுகிறார்களே, உண்மையா? ஆட்டிசம் நோயை இந்த தடுப்பூசி ஏற்படுத்துமா? 
இவையெல்லாம் வெறும் புரளிகளே. MMR தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கடந்த 20 வருடங்களாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான ஊசிகள் இதுவரை போடப்பட்டு உள்ளன.
இந்த முட்டாள்கள் கூறுவது போல் இந்த ஊசியினால் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்து போயிருந்தால் இந்நேரம் நாட்டில் உள்ள பாதி குழந்தைகள் மருத்துவமனையில் தான் அட்மிட் ஆகியிருக்கும். கோடி குழந்தைகள் ஆடிசம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்.
ஆட்டிசம் நோய்க்கும் MMR ஊசிக்கும் தொடர்பு என்று 1998 இல் வெளிவந்த ஒரு பொய்யான ஆராய்ச்சி கட்டுரை தெரிவித்ததினால் வந்த குழப்பங்களே இவை.
1998 இல், ஆண்ட்ரூ வேக்பீல்ட் எனும் ஆராய்ச்சியாளர், ஆட்டிசம் நோய் குறைபாடு வந்த 12 குழந்தைகளை மட்டும் வைத்துகொண்டு MMR ஊசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் தொடர்பு உண்டு என்று ஒரு பொய்யான ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு பிறகு Centers for Disease Control and Prevention, the American Academy of Pediatrics, the Institute of Medicine of the US National Academy of Sciences, the UK National Health Service, and the Cochrane Library ஆகிய பல பெரிய ஆராய்ச்சி மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்கள் இது உண்மையா என்று ஆராய்ந்து இது முற்றிலும் தவறு என்று 20க்கும் மேற்பட்ட பெரிய பெரிய ஆராய்ச்சிகளில் நிரூபனப்படுத்தி உள்ளன.
பிரைன் டீர் எனும் பத்திரிக்கையாளரும் வேக்பீல்ட் செய்த தில்லுமுல்லுகளை கடும் முயற்சிக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு உலகிற்கு தெரிவித்தார்.
ஆட்டிசம் எனப்படுவது பிறப்பிலேயே இருக்கும் ஒரு மூளை செயல்திறன் குறைபாடு நோய். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 1 வயதிற்கு முன்னரே (அதாவது இந்த MMR தடுப்பூசி போடப்படும் முன்னரே) இந்த நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன. அதாவது, குழந்தை எல்லாரையும் பார்த்து சிரிக்காமல் இருப்பது, மழலை மொழி பேசாமல் இருப்பது, டாடா காண்பிக்காமல் இருப்பது, பெயர் சொன்னால் திரும்பாமல் இருப்பது, போன்ற அறிகுறிகள் ஒரு வயதிற்கு முன்னரே ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பதை காட்டி கொடுத்து விடும்.
தடுப்பூசி போடப்படும் முன்னரே நோயின் அறிகுறிகள் குழந்தைக்கு இருப்பது உண்மை என்றால், அந்த நோய்க்கு எப்படி தடுப்பூசி காரணமாகும்? 
கொஞ்சம் யோசிங்க பாஸ்.
தடுப்பூசி எதிர்ப்பினால் ஏற்பட்ட இழப்புகள் என்னென்ன?
ஆண்ட்ரூ வேக்பீல்ட் செய்த குழப்பத்தால், anti vaccine movement எனும் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கங்கள் உலகம் முழுதும் உருவாகி, ஏற்கனவே கட்டுபடுத்தப்பட்ட தட்டம்மை, கக்குவான் இருமல், டிப்தீரியா, டெடனஸ் போன்ற நோய்கள் இப்போது திரும்பவும் தோன்றி பல உயிர்களை காவு வாங்கி வருகின்றன.
இந்த ஒரு ஆசாமி செய்த குழப்பத்தினால் இதுவரை தடுப்பூசி போடாமல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 15 இலட்சத்துக்கும் மேல்.
இந்தியாவில் கூட சமீபத்தில் கேரளா மலப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே நன்று கட்டுபடுத்தப்பட்ட டிப்தீரியா நோய்க்கு தடுப்பூசி போடாமல் விட்டதினால், டிப்தீரியா நோய் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை தாக்கி பல குழந்தைகள் இறந்தும் போன கொடுமை நிகழ்ந்தது.
எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1. பிப்ரவரி மாதத்தில் 6ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை MR எனப்படும் தட்டம்மை ருபெல்லா தடுப்பூசியை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவரும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்
.2. இது போன்ற அறிவிலிகள் அனுப்பும் முட்டாள்தனமான மெசேஜ்களை பார்வார்டு செய்வதை விட்டுவிட்டு, வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் போய் பார்க்க வேண்டும் என்று தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதோ அவரது பேஸ்புக் பதிவு உங்களுக்காக...
நன்றி   - அருண்குமார்
நன்றி : தினமணி நாளிதழ் – 28.01.2017

Saturday, January 28, 2017

இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்

Image may contain: text

இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள் 

5 கல்லூரிகள் திட்டவட்ட அறிவிப்பு

ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காரணத்தால் வருகிற 2017-18 கல்வியாண்டில் கல்லூரியை முழுவதுமாக இழுத்து மூடும் முடிவில் 10 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

 இவற்றில் 5 கல்லூரிகள், தங்களது இந்த முடிவு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.

 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இ.சி.இ.) போன்ற பிரிவுகளின் மீது மாணவர்களின் ஆர்வம் படிப்படியாகக் குறைய தொடங்கியது.

 இதன் காரணமாக, பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

 குறைந்த பி.இ. மாணவர் சேர்க்கை: கடந்த 2015 -ஆம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,02,422 -ஆக இருந்தன. இதில் 1,07,969 இடங்கள் மட்டுமே நிரம்பின. 94,453 இடங்கள் காலியாக இருந்தன.

 இந்த ஆண்டும் மொத்தமிருந்த 531 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,85,670 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 84,352 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,01,318 இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன.

 இதன் எதிரொலியாக, 2016 -ஆம் ஆண்டில் 70 துறைகளை (படிப்புகள்) 30 கல்லூரிகளும், மாணவர் சேர்க்கையை பாதியாகக் குறைக்க 20 கல்லூரிகளும் அண்ணா பல்கலைகழகத்திடம் விண்ணப்பித்தன.

ஏஐசிடிஇ புள்ளி விவரம்:

மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் முற்றிலும் மூடுவதற்கான விண்ணப்பத்தை பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஏஐசிடிஇ-க்கு (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில்) விண்ணப்பித்து வந்தன.

 இதை ஏற்ற ஏஐசிடிஇ 2013 -14 கல்வியாண்டில் 3 பொறியியல் கல்லூரிகளுக்கும், 2014-15 கல்வியாண்டில் 12 பொறியியல் கல்லூரிகளுக்கும், 2015-16 கல்வியாண்டில் 12 பொறியியல் கல்லூரிகளுக்கும் முழுவதும் இழுத்து மூட அனுமதி அளித்தது.

10 கல்லூரிகள்: 

இந்த நிலையில், 2017-18 கல்வியாண்டுக்கான அனுமதி நீட்டிப்பு நடைமுறைகளை ஏஐசிடிஇ தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளிடமிருந்து கடந்த 20 -ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது. இதற்கு விண்ணப்பிக்கும் கல்லூரிகள் மட்டுமே 2017-18 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

 இந்த நிலையில், கடந்த 20 -ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், 12 கல்லூரிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

 இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

 விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத 12 கல்லூரிகளில், 5 கல்லூரிகளின் நிர்வாகிகள் தங்களது கல்லூரிகளை முழுவதும் இழுத்து மூடும் முடிவில் இருப்பதாகத் திட்டவட்டமாக தெரிவிóத்துவிட்டனர். 

இவற்றில் 4 பொறியியல் கல்லூரிகள், ஒரு எம்பிஏ கல்லூரி ஆகும்.

 மேலும் 2 கல்லூரிகளின் நிர்வாகிகள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 5 கல்லூரிகள் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே, அவையும் வரும் கல்வியாண்டில் மூடப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.

நன்றி : தினமணி நாளிதழ் – 29.01.2017

அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியமா?


அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு அவசியமா?

சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் ஒரு வீடு வாங்க முடிவுசெய்தார் ஒரு நண்பர். வங்கியில் வீட்டுக் கடன் பெற்று அதை வாங்கத் தீர்மானித்தார். ஒவ்வொரு வங்கியிலும் தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் குழு ஒன்று உண்டு. 

வங்கிக் கடன் பெற வேண்டுமென்றால் அவர்களில் ஒருவரிடம் அந்தச் சொத்து தொடர்பான ஆவணங்களைப் பரிசீலனைக்கு அளிக்க வேண்டும். சொத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்று அவர்கள் சான்றிதழ் அளித்த பிறகுதான் வீட்டுக் கடன் அளிப்பது தொடர்பாக வங்கி முடிவெடுக்கும்.

வழக்கறிஞர் வீட்டுக்குச் செல்வதற்குமுன் தற்செயலாக என் வீட்டுக்கு அந்த ஆவணங்களுடன் வந்திருந்தார் அந்த நண்பர். அவற்றை வாங்கிப் பார்த்த நான், “இவை நகல்கள்தானே. அசல் இல்லையே!’’ என்றேன்.

 “நானும் கட்டுநரிடம் கேட்டேன். ‘ஒரிஜினல் ஆவணங்களைத் தருவது எங்களுக்குப் பாதுகாப்பானது இல்லை. தவிர இந்த நிலத்தில் 32 வீடுகளைக் கட்டப் போகிறோம். அவ்வளவு பேருக்கும் நாங்கள் அசல் ஆவணங்களைத் தர முடியாது’ என்று சொல்லி விட்டார்” என்றார் நண்பர்.

அசல் ஆவணங்கள் இல்லையென்றால் வழக்கறிஞர் சான்றிதழ் கொடுக்க மாட்டார் என்று கூறினேன். ஆனால், இரண்டே நாட்களில் நண்பரிடமிருந்து தொலைபேசித் தகவல். வழக்கறிஞர் ‘க்ளியர்’ செய்துவிட்டாராம். அதாவது நகல் ஆவணங்களைப் பார்த்தே தன் பரிந்துரையை அவர் அளித்திருக்கிறார்.

நகல் அசலாகுமா?

இந்தப் போக்கு அதிகமாகிவருகிறது என்பதைக் காண முடிகிறது. வங்கி எதற்காக இந்த நடைமுறையைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை யோசியுங்கள். 

‘சொத்துரிமையில் ஏதோ பிரச்சினை இருந்தால் அது கடன் அளித்தவரின் உரிமையைப் பாதிக்கும். சொத்து வாடிக்கையாளரின் கையைவிட்டுப் போனால் அவரால் வங்கிக் கடனைச் சரியாகச் செலுத்த முடியாமல் போகும். இதனால் வங்கிக்கும் நஷ்டம். 

இதற்காகத்தான் வங்கிகள் ‘வழக்கறிஞர் கருத்து’ (Lawyer’s opinion) என்பதைப் பெறுகிறது. அதுவும் திறமையான அனுபவமுள்ள வழக்கறிஞர்களைத்தான் இந்தக் குழுவில் வங்கி சேர்த்துக் கொள்ளும்.

வழக்கறிஞருக்கு சில ஆயிரங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாலும் இது ஒரு பாதுகாப்பான முறை. சொல்லப்போனால் வங்கி மூலமாகக் கடன் பெறவில்லை என்றால்கூட நீங்களாகவே கூட ஒரு சொத்தை வாங்குவதற்குமுன் இப்படி ஒரு வழக்கறிஞரின் மூலம் அந்த ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது.

ஆனால் இப்போதெல்லாம் ஆவண நகல்களை மட்டும் சரிபார்ப்பது என்பது வழக்கமாகி வருகிறது. இது ஆபத்தான ஒரு பழக்கம். கட்டுநருக்கு அவர் தரப்பில் சில தயக்கங்கள் இருப்பதும் இயல்புதான். 

எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் உங்களை நம்பி அவர் எப்படி அசல் ஆவணங்களைக் கொடுப்பார்? அதே சமயம் உங்களைப் பொறுத்தவரை ஒப்பந்தம் போட வேண்டுமென்றால் அதற்கு முன்பாக அந்த ஆவணங்களின் நம்பகத் தன்மையை வழக்கறிஞர் மூலம் சரிபார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே!

இந்த இரண்டு எதிர்கோணங்களையும் சந்திக்க வைக்கும் புள்ளி ஒன்று உண்டு. என் நண்பருக்கு நான் கூறிய ஆலோசனை இது. (இந்த வழிமுறையை நானும் முன்பு பின்பற்றி இருக்கிறேன்).

ஒரு மாற்று யோசனை

வழக்கறிஞரே நேரடியாகக் கட்டுநரின் அலுவலகத்துக்கு வந்து அசல் ஆவணங்களைச் சரிபார்க்கலாம். இதற்கு கட்டுநர் மறுப்பு சொல்ல மாட்டார். (கூடவே அவரும் உட்கார்ந்து கொண்டிருப்பார், அவ்வளவுதான்).

ஆனால் இதில் ஒரு சங்கடம் உண்டு. அதிகமாக அலுவல்கள் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் இதற்கு உடன்பட மறுக்கலாம். அல்லது இதற்கான நாளை தள்ளிப்போட்டுக் கொண்டடே செல்லலாம். அதற்கான தீர்வு இது. நீங்கள் அளிக்கும் நகல் ஆவணங்களை அந்த சீனியர் வழக்கறிஞர் தனது இருப்பிடத்திலேயே சரிபார்க்கட்டும். பில்டரின் அலுவலகத்துக்கு அவர் தன் ஜூனியர் ஒருவரை அனுப்பி வைக்கலாம்.

 அந்த ஜூனியரின் முக்கிய வேலை அந்த நகல் உண்மையான நகல்தானா என்பதை அசலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.

பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறைக்கும் வழக்கறிஞர் ஒத்துவரவில்லை என்றால் நீங்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதுதான் நல்லது. அல்லது குறைந்தபட்சமாக அந்த ஜூனியர் வழக்கறிஞருக்குப் பதிலாக நீங்களே கட்டுநரின் அலுவலகத்துக்குச் சென்று அசலையும், நகலையும் கொஞ்சம் விவரமாக, நிதானமாக ஒப்பிட்டுப் பார்த்து விடுங்கள்.

நகல்களில் எந்தவித ஏமாற்று வேலைகள் பொதுவாக நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கலாம். கையெழுத்தில் இது நடைபெற வாய்ப்பு உண்டு.

பிரச்சினைகள் என்னென்ன?

இதோ ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வீட்டின் உரிமையாளர் யாருக்குமே ‘பவர் ஆஃப் அட்டர்னி’ கொடுக்காத போதும் மோசடிக்காரர் ஒரு ‘பவர் ஆஃப் அட்டர்னி’ ஆவணத்தை முத்திரைத் தாளில் தட்டச்சு செய்து அதற்குக் கீழே வேறொரு இடத்திலிருந்து உரிமையாளரின் கையெழுத்தை அந்த ஆவணத்தில் நகல் செய்யலாம்.

அசல் ஆவணத்தைப் பார்த்தாலே இந்த வித்தியாசம் புரிந்துவிடும். ஆனால் அதன் நகலைப் பார்க்கும்போது வித்தியாசம் தெரியாமல் போகலாம். (ஒரு சின்ன குறிப்பு: இதுபோன்ற நகல்களில் மோசடியாகச் சேர்க்கப்பட்ட கையெழுத்து கொஞ்சம் மங்கலாகத் தெரியும். 

அதைக் கொண்டு ஓரளவு அது மோசடி ஆவணம் என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் பிரிண்டர் செட்டிங்கை மாறுதல் செய்து இப்படி ஒட்டப்பட்ட கையெழுத்தும் தெளிவாகவே இருக்கும்படி மோசடி மன்னர்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர்).
எனவே மீண்டும் நாம் கூறுவது இதைத்தான். 

அசல் ஆவணங்களைச் சரிபார்க்காமல் ஒருபோதும் எந்தச் சொத்தையும் வாங்காதீர்கள்.

ஜி.எஸ்.எஸ்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 28.01.2017

Friday, January 27, 2017

வழங்கும் தகவல்களில் என்னென்ன இருக்க வேண்டும்?


வழங்கும் தகவல்களில் என்னென்ன இருக்க வேண்டும்?

பொது தகவல் அலுவலர் அவர்கள் வழங்கும் தகவல்களில், தகவல் வழங்கும் அவரது பெயர் , பதவி, நாள், கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை இருக்கவேண்டும் என்பதைக் கூறும் தமிழ்நாடு தகவல் ஆணையர் அவர்களின் 25.03.2015 தீர்ப்பு நகல்.
No automatic alt text available.






தகவல் உதவி: திரு A Govindaraj Tirupurஅவர்கள்.

RTI - பதில் எவ்வாறு இருக்கவேண்டும்?

Image may contain: text

RTI - பதில் எவ்வாறு இருக்கவேண்டும்?

சென்னை: தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வோருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இதுவரை இந்தச்சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெறுவோருக்கு என்ன வழிமுறைகளில் பதிலளிக்க வேண்டும் என்று வரையறை செய்யப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் மத்திய அரசு இந்த வழிமுறைகளை வெளியிட்டது. தமிழக அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை இவற்றை விளக்கி அரசின் அனைத்துத்துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Image may contain: text

அதில், விண்ணப்பித்தவர்களுக்கு அளிக்கப்படும் பதிலில், தகவல் பெறும் விண்ணப்பத்தின் எண், பெறப்பட்ட தேதி, தகவல் தரும் அதிகாரியின் பெயர், பதவி, அலுவலக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். 

ஒருவேளை விண்ணப்பதாரர் கோரிய தகவல்களை தெரிவிக்க இயலாது என்றால் அதற்குரிய காரணங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 

No automatic alt text available.

வேறொரு தகவல் அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தால் அதுகுறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். 

இறுதியாக தகவல் கோரி முதல்முறையாக விண்ணப்பித்துள்ளாரா அல்லது மேல் முறையீடா என்பதைத் தெரிவிக்க வேண்டும். 

ஏதேனும் ஆவணங்களை அளித்தால், இது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு, தேதி, அதனை அளிக்கும் அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு அலுவலக முத்திரையுடன் சான்றொப்பம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No automatic alt text available.

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம்-22.12.2015

குற்றவியல் வழக்குகளில் அதிகபட்ச தண்டணை

குற்றவியல் வழக்குகளில் அதிகபட்ச தண்டணை

J.M COURT (இரண்டாம் நிலை) : ஒரு வருட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
➤ J.M COURT (முதல் நிலை) : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
➤  SUB DIVISIONAL JUDICIAL MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 SPECIAL METROPOLITAN MAGISTRATE COURT : 3 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
 CHIEF JUDICIAL MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 CHIEF METROPOLITAN MAGISTRATE COURT : 7 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 ADDITIONAL SESSIONS COURT : 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SESSIONS COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 MAHILA COURT : ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது 10 வருடம் வரை ஒரு கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SPECIAL COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 HIGH COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 SUPREME COURT : மரண தண்டனை அல்லது ஆயுள் கால சிறைத் தண்டனை அல்லது ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
 district &sessions court can impose DEATH SENTENCE WITH THE CONFORMATION OF TWO HIGH COURT JUDGES