disalbe Right click

Sunday, February 5, 2017

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு - டிப்ஸ்

Image may contain: 1 person

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு - டிப்ஸ்

1. JEE நுழைவுத் தேர்வு:

இது மெயின் பேப்பர்-I, மெயின் பேப்பர்-II என இரு பிரிவுகளாக நடத்தப்படும். பேப்பர்-I தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் 60%க்கும், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் 40%க்கும் வெயிட்டேஜ் பார்க்கப்பட்டு, தரவரிசையின் அடிப்படையில் நாட்டில் உள்ள 30 NIT கல்லூரிகள், 18 IIT கல்லூரிகள், 18 GFTI கல்லூரிகளிலும் இடம் கிடைக்கப்பெறுவார்கள். தவிர, மத்திய அரசின் கீழ் இயங்கும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் B.E., B.Tech பிரிவுகளில் சேரும் வாய்ப்பும் கிட்டும்.

2. JEE அட்வான்ஸ்:

டாப் ரேங்க் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அட்வான்ஸ் எனப்படும் இரண்டாம் கட்டத் தேர்வு எழுதலாம். மெயின் பேப்பர்-I எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் மத்திய அரசால் வகுக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தர வரிசையில் முதல் ஒன்றரை லட்சம் இடங்களுக்குள் வரும் மாணவர்கள் மட்டுமே அட்வான்ஸ் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்தத் தேர்வு முடிவின் தரவரிசைப் பட்டியலில் வரும் பதினெட்டாயிரம் மாணவர்களில், முதல் பத்தாயிரம் பேர் IIT, ISM Dhanbad கல்வி நிறுவனங்களிலும், அடுத்து வரும் எட்டாயிரம் மாணவர்கள் IIST, RGIPT, IISTC, ஆறு IISER கல்வி நிறுவனங்களிலும், சேர்க்கை பெற முடியும்.

3. JEE மெயின் பேப்பர்-II:

இதில் தேர்ச்சிபெறும் மாணவர்கள் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர், NIT-ல் உள்ள ஆர்க்கிடெக்சர் பிரிவு மற்றும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் B.Arch, B.Planning பிரிவுகளில் சேர்க்கை பெற முடியும்.

4. கொஸ்டின் பேப்பர்:

மெயின் பேப்பர் I, அட்வான்ஸ் பேப்பர்-I, அட்வான்ஸ் பேப்பர்-II இந்தத்தேர்வுகளுக்கெல்லாம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பின் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களே சிலபஸ். மெயின் பேப்பர்-II எழுதுபவர்களுக்கு கணிதம், ஆர்க்கிடெக்சர், ஆப்டிட்யூட், படம் வரைதல் தொடர்பான மூன்று மணி நேரத் தேர்வு நடைபெறும்.
எல்லாப் பிரிவு தேர்வுகளுக்கும் தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

5. விண்ணப்பம்:

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, அந்தக் கல்வியாண்டின் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதத்துக்குள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைச் செலுத்தி இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

6. இணைக்க வேண்டியவை:

விண்ணப்பத்துடன் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து இணைக்க வேண்டியவை...

* மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட சாதிச்சான்று

* 10-ம் வகுப்புத் தேர்ச்சி மதிப்பெண் பட்டியல்

* வெள்ளை நிறப் பின்னணி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

* கறுப்பு நிற மையில் மாணவரின் கையொப்பம்

* மாணவரின் கைரேகை

* மாற்றுத்திறனாளிகள், சிறப்புப் பிரிவினருக்குரிய சான்று.

7. தேர்வு முறை:

மெயின் பேப்பர்-I தேர்வு, ஆன்லைனிலேயே எழுதலாம். ஏப்ரல்/மே மாதங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் ஏதேனும் மூன்று தேதிகளில் தேர்வு நடைபெறும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மெயின்-II மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள், தேர்வு மையத்தில்தான் எழுத வேண்டும்.

8. போனஸ் வாய்ப்புகள்:

JEE தேர்வு எழுத, மாணவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு முடித்தவுடன் ஒரு வாய்ப்பும், 12-ம் வகுப்பு முடித்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், அட்வான்ஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு 12-ம் வகுப்பு முடித்த வருடம், அதற்கு அடுத்த வருடம் மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.

9. தமிழ்வழிக் கல்வி மாணவர்கள் கவனத்துக்கு:

வினாக்கள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு மெயின் பேப்பர் I-ஐ விட, பேப்பர்-II எளிமையாக இருக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை மனதில் வைக்கவும்.

10. எப்போதில் இருந்து படிக்க வேண்டும்:

சிலர் 6-ம் வகுப்பில் இருந்தே தயாராக வேண்டும் என்பார்கள். உண்மையில் தேர்வு முறை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறையானது ஒவ்வோர் ஆண்டும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், அது பயனற்றது. 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புப் பாடங்களைப் புரிந்து படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம்.

11. கவனிக்க:

மாணவர்கள் எந்த மாநிலத்தில் மேல்நிலைக் கல்வி கற்கிறார்களோ, அந்த மாநிலத்தில் மட்டுமே JEE தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

12. மேலும் விவரங்களுக்கு...

www.jeemain.nic.in
,
www.indiacollegefinder.org
,
www.jeeadv.iitk.ac.in
என்ற இணையதள முகவரிகளைப் பார்வையிடலாம்.

சு.சூர்யா கோமதி

நன்றி : அவள்விகடன் - 17.11.2015

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

No automatic alt text available.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

இந்திய வரலாற்றின் ஒப்பற்ற நாயகன். வரலாற்றை அலைக்கழிக்கும் ஓர் அழியா சரித்திரம் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் இன்று. ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய தலைவலியாய் விளங்கிய, இந்திய இளைஞர்களின் கனவாய் வாழ்ந்த இந்த சிங்கம் வங்கத்தில் உதித்த தினம் ஜனவரி 23, 1897.

இவரது மரணம் வேண்டுமானால் சர்ச்சைக்குள்ளானதாக இருக்கலாம், ஆனால் இந்திய சுதந்திரத்திற்கான இவரது முழக்கங்களும் போராட்டங்களும் அழியாப்புகழ் பெற்றவை. நேதாஜி என்ற ஒற்றைச் சொல்லை சொன்னால் ஒவ்வொருவரின் ரத்த நானங்களும் துடிப்பது எதனால், ஆங்கிலேயர்கள் இந்த ஒற்றை மனிதனைப் பார்த்து அரண்டது எதனால்? ஏன் இவருக்கு மட்டும் அப்படியொரு தனித்துவம்?இதோ…

ஐ.சி.எஸ் பதவியை உதறினார்:

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தார் சுபாஷ். மிகப்பெரிய பதவி.. சர்க்கார் உத்தியோகம்… ஆனால் அவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்தார் சுபாஷ். மதிப்புமிக்க பதவியை உதரித்தள்ளிய அவரைப் பார்த்து, “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று அவர் கேட்டதற்கு, “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதை விடப் பெரியது” என்று சொல்லி அவருக்கே அதிர்ச்சயளித்தார்.

சிறையிலிருந்தே சீறினார்:

1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்த மோசமான சிறையிலேயே அவரை முடக்க நிணைத்தது ஆங்கில அரசு. ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே வெற்றி வாகை சூடினார் போஸ். அதுதான் வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை. இந்த வெற்றி தான் ஆங்கில அரசின் கூரிய பார்வையை போஸின் பக்கம் திருப்பியது. தங்களது தடங்கல்கள் அத்தனையையும் மீறி ஒருவரால் சிறையிலிருந்து வெல்ல முடிகிறது என்றால், இவர் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பிரிட்டிஷ் அரசை உணர வைத்தது அந்த வெற்றி.

விடுதலையை நிராகரித்தார்:

மாண்டலே சிறையில்,போஸ் அவர்கள் காச நோயால் அவதிப்பட, அனைவரும் அவரை விடுவிக்கச் சொல்லி போராட்டம் செய்தனர். அவரது உயிர் ஆபத்தான நிலையை எட்டியதால் இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய நினைத்தது பிரிட்டிஷ் அரசு. ஒன்று, சுபாஷ் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 3 ஆண்டுகள் இந்தியாவில் நுழையாது இருத்தல் வேண்டும் என்பது. சுபாஷின் தாய், சகோதரர் உட்பட அனைவரும், அவர் விடுதலை ஆனால் போதும் என்று நினைத்திருக்க, “நான் ஒன்றும் கோழையல்ல மன்னிப்புக் கேட்க. என்னை என் நாட்டுக்கள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? இந்த நிபந்தனைகளை என்னால் ஏற்க முடியாது” என்று சொல்லி விடுதலையாக மறுத்துவிட்டார் சுபாஷ். மரணத்தின் பிடியிலும் மங்காமல் ஒலித்த அந்த சிங்கத்தின் கர்ஜனைக்கு அரசாங்கம் அரண்டுதான் போனது.

தி கிரேட் எஸ்கேப்:

இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இவரது பெயர் ஒலிக்கக் ஒரு நிகழ்வு தான் காரனம். வீட்டுச் சிறையில் பயங்கர கண்கானிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயனம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே அல்லோலப்பட, ஜெர்மனியிலிருந்து சுபாஷ் அவர்கள் முழங்க, மொத்த உலகமும் இந்தப் போராளியைப் பார்த்து வியந்தது. தன் நாட்டின் சுதந்திரத்திற்காக, தனி ஒரு மனிதனால் இவ்வளவு தூரம் செல்ல முடியுமா என்று ஜப்பான்,இத்தாலி போன்ற நாடுகளே இவரை வியந்து போற்றின. உலகின் தலைசிறந்த எஸ்கேப்களில் சுபாஷின் பெயருக்கு ஸ்பெஷல் இடம் உண்டு.

ஹிட்லரிடம் முறைப்பு:

ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார். “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்று மொழிப்பெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் திராணியை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.

தீர்க்கதரிசி:

1938 குஜராத் காகிரஸ் மாநாட்டில், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தனது முதல் உரையை வாசித்தார் சுபாஷ். “ஆங்கிலேய அரசு பிரித்தாலும் சூட்சியை இங்கு அமுல்படுத்தும். நம் தேசத்தை சுக்குநூறாக உடைக்கும். நாம் ஒற்றுமையோடு அதை எதிர்த்து வெல்ல வேண்டும்” என்று கூறினார். எது நடக்கக்கூடாது என்று அவர் நினைத்தாரோ, அதுவே ரத்தமும் சதையும் சிதற இந்நாட்டில் அரங்கேறியது. ஆங்கில அரசின் ஒவ்வொரு அசைவும் எப்படி இருக்கும் என்று நன்கு அறிந்தவர் போஸ் அவர்கள்.

ஜெய் ஹிந்த்:

இன்று பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும் ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதல் முதல் பயன்படுத்தியவர் நேதாஜி தான். இந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் நமக்குள் எழும் அந்த தேசப்பற்று தான் அம்மாபெரும் மனிதனுக்கு நம் காணிக்கை.

ரத்தம் தா..சுதந்திரம் தருகிறேன்..

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் சுபாஷ் சந்திர போஸ். ஒவ்வொரு இளைஞனையும் தனது சீறிய பேச்சால் சுதந்திரப் போரில் பங்குபெறச் செய்தார். “ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் தருகிறேன்” என்ற சுபாஷின் பேச்சு ஒவ்வொரு இளைஞனையும் தட்டி எழுப்பியது. இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷின் ரத்தம் பாய்ச்சப்பட, அது ஆங்கிலேயரின் இந்தியப் படையிலும் பாய்ந்தது. இனி இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால் தான், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடலுக்கு அடியிலும் சீற்றம்:

சுபாஷின் சீற்றம் தரையில் மட்டும் வெளிப்படவில்லை. அது கடல்,கரை,காற்று,மலை அனைத்தையும் கடந்து நின்றது. ஜப்பான் சென்று இந்திய சுதந்திரப் போருக்கு ஆயத்தமாக விரும்பிய சுபாஷ், ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மூன்று மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார். எங்கும் விமானங்கள் குண்டுகள் வீசி வந்த இரண்டாம் உலகப் போர் சமயம் இப்படி மூன்று மாத காலம், உயிரைத் துட்சமாய் மதித்து அவர் செய்த இப்பயணம் உலக வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றது.

தமிழகத்துடனான தொடர்பு:

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில், லட்சுமி அம்மையார் படைத்தளபதியாக இருந்தது நாம் அறிந்ததே. அதுமட்டுமல்லாது, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவிடமும் நல்ல உறவைக் கொண்டிருந்தார் நேதாஜி. 1949ல் கமுக்கத்தில் நடந்த ஒரு மாநாட்டில், “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சரியான தருனத்தில் வருவார். என்னோடு நேரடியான தொடர்பில் இருக்கிறார்” என்று கூறீயிருந்தார் பசும்பொன் ஐயா. இவரே பார்வேர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேண்டாம் பாரத ரத்னா:

1992ம் ஆண்டு இறந்தவர்களுக்குத் தரப்படும் ‘போஸ்துமஸ்’ முறையில் நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. “எங்கள் தலைவர் எப்போது இறந்தார்?அவர் மரணம் உண்மையில்லை” என்று கூறி பலரும் அவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போஸின் குடும்பமும் அவ்விருதை ஏற்க மறுத்தது. தங்கள் தலைவனின் மரணத்தை பல ஆண்டுகள் ஆனபின்னும் கூட சிலர் ஏற்க மறுத்தனர். இதுதான் சுபாஷுக்கான மரியாதையை.

வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தையே நினைத்துக்கொண்டிருந்த ஒரு மாமனிதனை நாம் ஒரு நொடியும் மறக்கக் கூடாது. அதுவே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை. அதற்கு முன்னாம் இந்த பாரத ரத்னாவெல்லாம் தூசிற்குச் சமம். அவரது சாம்பல் தைவானின் வானத்திலோ, ஜப்பானின் கோவிலிலோ இல்லை இமையமலையின் பனிகளிடையோ…எங்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவர் பேசிச் சென்ற சொல் ஒவ்வொன்றும் சுவாசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் நாசியிலும் கலந்திருக்கிறது. அதை நாம் பரசாற்ற உரக்கச் சொல்வோம் ‘ஜெய் ஹிந்த்!’

மு.பிரதீப் கிருஷ்ணா

விக்டன் செய்திகள் - 23.01.2016
Image may contain: 1 person

மார்பக புற்று நோய் - சிகிச்சை முறைகள்

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!
‘‘மார்பகப் புற்றுநோயை எதிர்க்க, அறுவை சிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார் மோன் தெரபி மற்றும் டார்கெட்டட் (targetted) தெரபி என பல மருத்துவசிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும். சிலருக்கு அறுவை சிகிச்சையே முதல்கட்ட சிகிச்சையாக மேற்கொள்ளப்படும். அந்த சிகிச்சையின் பலன்களைப் பார்த்த பிறகே, பிற சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

கீமோ தெரபி:
செல்லின் மாறுபாட்டினை கேன்சர் என்கிறோம். அந்த மாறுபட்ட ஆகாத செல்லினை அழிக்க ட்ரிப்ஸ் வழியாக மருந்து செலுத்தப்படும். அப்படி செலுத்தப்படும்போது மற்ற நல்ல செல்களும் பாதிக்கப்படக்கூடும். அதனால் முடி உதிர்வு, வாந்தி, பேதி, சோர்வு, எதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற வெளிப்பாடுகள் தென்படும். ஆனாலும், அவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இந்த சிகிச்சையானது 21 நாளுக்கு ஒருமுறை என… 4, 6, 8 முறை என வியாதியைப் பொறுத்து வழங்கப்படும்.

ரேடியோ தெரபி:
கதிர்வீச்சு வழியாக காமா, போட்டான் (மார்பகப் புற்றுநோயில் அதிகம் இதைத்தான் பயன்படுத்துவார்கள்) மற்றும் எலெக்ட்ரான் போன்ற கதிர்களை (தேவைக்கு ஏற்ப) செலுத்தி அதன் மூலமாக புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முறையே ரேடியோ தெரபி சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையானது 5 வாரங்களுக்கு 25 முறை செய்யப்படும்.

ஹார்மோன் தெரபி:
மாத்திரை மூலமாக ஹார்மோன் தூண்டுதலால் ஏற்படக்கூடிய புற்று செல்களைத் திரும்ப வராமல் தடுக்கும் முறையே ஹார்மோன் சிகிச்சை முறையாகும். 5 வருடங்களுக்கு தினமும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்றவற்றை ஒப்பிடும்போது இதனால் வரக்கூடிய பக்கவிளைவுகள் மிக மிகக் குறைவே.

டார்கெட்டட் தெரபி:
ஊசி மூலமாக (சில நேரங்களில் மாத்திரை மூலமாக) குறிப்பிட்ட பாதிப்பு விளைவிக் கக்கூடிய செல்களை மட்டும் டார்கெட் வைத்து அழிக்கும் முறை டார்கெட்டட் சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் ஒரு வருட காலத்துக்கு… 21 நாட்களுக்கு ஒருமுறை என 9 முதல் 17 ஊசிகள் வரை போடப்படும்.

மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சை… சாத்தியமா?
மார்பகப்புற்றால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணுக்கு, அதை அகற்றாமல் சிகிச்சை செய்வது சாத்தியமா? சாத்தியம்தான். ஒரு பெண்ணின் மார்பக அளவின் விகிதத்தைவிட கட்டி பெரியதாக இருந்தால், அங்கு விட்டுவைக்க மார்பகப் பகுதி எதுவும் மிஞ்சி இருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில், நோயாளியின் மார்பகத்தை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று விருப்பப்பட்டால் சில வழிமுறைகள் உள்ளன.

கீமோதெரபி கொடுத்து கட்டியின் அளவைக் குறைத்து பின்னர் அறுவை சிகிச்சை செய்யலாம். சில சமயம் கட்டியின் அளவைக் குறைப்பதற்குக் கொடுக்கும் வைத்தியத்தால் கட்டி கரைந்தேபோகக்கூடும். அந்தச் சமயத்தில் கட்டிதான் கரைந்துவிட்டதே என்று விட்டுவிடக்கூடாது. அது போன வேகத்தில் மீண்டும் வந்துவிடக்கூடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவது அவசியம். இதைத் தாண்டி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட இன்னும் பல சிகிச்சை முறைகள் உள்ளன.

மார்பக மறு உருவாக்கம்!
இழந்த மார்பகத்தை மீண்டும் உருவாக்குதலில், அந்தப் பெண்ணின் உடலின் பிற பகுதிகளிலிருந்து தசையை எடுத்து, அல்லது செயற்கை சிலிக்கான் மார்பகத்தைப் பொருத்தி சிகிச்சை செய்ய முடியும். இப்படிப் புதிதாக உருவாக்கப்படும் மார்பகம், மற்றொரு மார்பகத்தைவிட வித்தியாசமாக இருக்கலாம். அதோடு புதிதாக உருவாக்கப்பட்ட மார்பகத்தில் எந்தவித தொடு உணர்ச்சியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நம் உடம்பின் வேறு பகுதியில் இருந்து தசைகள் எடுத்துச் செய்தாலும் உணர்ச்சி இருக்காது. சிலருக்கு மார்பக அறுவை சிகிச்சை செய்யும் அதே நேரத்திலேயே இந்த மறு உருவாக்க அறுவை சிகிச்சையையும் செய்யமுடியும். ஒரு சிலருக்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த மறு உருவாக்கத்தைச் செய்ய வேண்டிவரும். இதில் அந்தப் பெண்ணின் உடல்நிலை, வயது, என்ன வகையான மார்பகப் புற்றுநோய், இதுவரை என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, இனி என்ன விதமான சிகிச்சை தேவைப்படும் என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் எப்போது, என்னவிதமான மறு உருவாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.

இந்த சிகிச்சையின் விளைவுகள் பின்வருமாறு…

அறுவை சிகிச்சைத் தழும்புகள் இயல்பு நிலைக்குத் திரும்ப, கூடுதலாக சில நாட்கள் ஆகலாம்.

புதிதாக உருவாக்கிய மார்பகத்துக்கு ரத்த ஓட்டம் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அதில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமாகவோ இழக்க நேரிடலாம்.

கிருமித் தொற்று ஏற்படக்கூடும்.

புண் ஆறுவதற்கு சற்று அதிக காலம் ஆனால், அடுத்தகட்ட சிகிச்சையைத் தொடர்வதும் தாமதப்படும்.

மார்பக மறு உருவாக்கலில் இந்தியாவின் நிலை!

இந்தியாவில் மார்பக மறு உருவாக்க சிகிச்சை கோரும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

காரணங்கள்…

நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் மார்பக மறு உருவாக்கத்தைச் செய்ய முடியாது.

இந்த அறுவை சிகிச்சைக்கு செலவு மிக அதிகம்.

நம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் பலர் பலவிதமான யோசனைகளைச் சொல்வார்கள். அவர்களுடைய புரிதல் எல்லாம் முழுமையானதாக இருக்காது. ஆனால், அவை நோயாளியின் முடிவை வலுவாகப் பாதிக்கக்கூடியதாக இருக்கும்.

சிலிக்கான் செயற்கை மார்பகம் எளிதில் கிடைப்பதில்லை. நிறைய செலவும் ஆகும். அதோடு மார்பகத்தின் வடிவம் நன்றாக அமைய மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கின்றன. இதற்கு ஆகும் செலவும் மிக மிக அதிகம்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் மார்பக மறு உருவாக்கத்தை ஆர்வத்துடன் பரிந்துரைப்பதில்லை.


உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறையும்!
எந்தவொரு நோயாக இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம். அதுபோலத்தான் மார்பகப் புற்றுநோய்க்கும் அது அவசியமானது. குறிப்பாக, கீமோ தெரபி சிகிச்சையின்போது நோயாளி தன் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

சமச்சீரான உணவே மிகச்சிறந்த மருந்து. அதை உண்டால்தான் நோய் சீக்கிரம் குணமாகும். அதோடு உடம்பும் சிகிச்சையை சந்திக்கும் அளவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். பிடித்த உணவை எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்.

உணவில் தினமும் ஐந்து வகைப் பழங்களும், காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் நார்ச்சத்து உட்பட அனைத்துவிதமான சத்துக்களும் கிடைத்துவிடும்.

சரியான உணவுப் பழக்கமும், முறையான உடற்பயிற்சியும் மார்பகப் புற்றுநோயாளிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சி, கலிஃபோர்னியா மாகாணத்தில் லா ஜோலாவில் உள்ள `UCSD’ புற்றுநோய் மையத்தில் இயங்கும் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது. 1,490 பெண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் 30 பெண்கள் மட்டுமே ஐந்து விதமான காய்கறிகள் மற்றும் பழங்களுடன் உணவு உண்பதாகவும், வாரத்தில் ஆறு நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். நோய் பாதிப்பில் இந்தப் பெண்களுக்கு, மற்ற பெண்களைவிடக் குறைவான அபாயமே உண்டு என்று, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

புற்றுநோயாளிகள் பால் பொருட்கள் சாப்பிடக்கூடாது என்று ஜோன் பிளான் என்ற விஞ்ஞானி சொல்லியிருக்கிறார். ஆனால், அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. கோதுமைப் புல் சாறு அல்லது பவுடர், காளான் போன்றவற்றைச் சாப்பிடலாம். ஆனால், கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்படும்போது மட்டும் இவற்றைச் சாப்பிடக்கூடாது.

அதிகப் புரதச்சத்து கொண்ட உணவான சோயாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் வாய்ப்பு குறையும் என்று சொல்லப்பட்டாலும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

மீன், கோழி போன்றவற்றை எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்த சமையலாகச் சாப்பிடலாம். மாட்டுக் கறி வேண்டாம்.

துணை சிகிச்சைகள்!
மார்பகப் புற்றுநோயாளிகள் பலருக்கு வலியைக் குறைக்கவும், பக்கவிளைவுகளைக் குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் துணை சிகிச்சைகள் ஏராளமாக உள்ளன. அந்தப் பட்டியல் இங்கே. இது முழுமையான பட்டியல் கிடையாது. மேலும், இதைச் செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டியது மிக மிக அவசியம்.

தியானம்

பிரானிக் ஹீலிங்

ரெய்கி

யோகா

யோகா நித்ரா

சுவாசப் பயிற்சி

பிரணாயாமம்

மந்திரம் ஜெபித்தல்

ரெஃப்ளெக்ஸாலஜி

அரோமா தெரபி

ஆயுர்வேத மசாஜ்

அக்குபஞ்சர்

இசை சிகிச்சை

கலை சிகிச்சை

ஜர்னலிங்

உணர்ச்சிபூர்வ சிகிச்சை

சிகிச்சையும் தாம்பத்ய உறவும்!
மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்ததில் இருந்து சிகிச்சை முடியும்வரை பெண்கள் பல வகைகளில் பாதிக்கப்படுவார்கள். அதில் தாம்பத்ய உறவும் அடங்கும். இது பற்றி மருத்துவர்கள்கூட வெளிப்படையாக எதுவும் பேசுவதில்லை. இதைக் காரணம் காட்டி சில திருமண உறவுகள் முறிவதைக்கூட நாம் பார்த்திருக்கலாம்.

அதற்கான காரணங்களாக… உடல் அழகு போய்விடுவதால் ஏற்படும் பதற்றம், மார்பகம் மற்றும் பிறப்புறுப்பில் வரக்கூடிய வலி, சிகிச்சை காலகட்டத்தில் வரக்கூடிய மன அழுத்தம்… இன்னும் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் இவையெல்லாம் கடந்த ஒரு புரிதல் இருந்தால் அது கொடுக்கும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டுவர மிகப்பெரிய மருந்தாக விளங்கும்!

நன்றி : அவள்விகடன் - 09.02.2016