disalbe Right click

Tuesday, February 7, 2017

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?


டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு தேர்ந்த திட்டமிடல் அவசியம்! அத்தகைய திட்டமிடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சில முக்கிய ஆலோசனைகள் உங்களுக்காக: 

* தேர்வுக்கான அறிவிப்பு வந்த காலம் முதல் பாடத்திட்டத்திற்கேற்ப நமது நேரத்தைப் பகுத்து, படிக்க வேண்டும்.

* தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தான் முதல் அடித்தளம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் பொதுவாக மாநில அரசு தேர்வுகளுக்கான அடிப்படை புரிதலை வழங்குகின்றன.

* ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவது அறிவுறுத்தத் தகுந்தது.

* நாம் எவ்வாறு தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து வைத்திருக்கிறோம் என்பதே தேர்வுக்கான வழிகாட்டியாகும். முந்தைய ஆண்டுகளுக்கான தேர்வுக் கேள்விகளை எவ்வாறு ஆய்ந்தறிந்துள்ளோம் என்பதும், அதற்கடுத்தாற்போல் எவ்வளவு சுய பயிற்சிகளை தேர்வுக்கு முன் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

* தேர்வுக்கான ஊக்குவிப்புகளை புத்தகங்களில் தேடுவதை விட, எந்தப் பதவிக்கு தேர்வு எழுதுகிறோமோ அது பற்றிய விவரங்களையும், அதற்கான உங்களின் பாடங்களையும் தினசரி நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்தது.
பாடத்திட்ட அடிப்படையிலான தயாரிப்பானது, பின்வரும் முறையில் மேற்கொள்ளப்படலாம்.

அறிவியல்:

* தமிழக அரசு தேர்வுகளுக்கு அறிவியல் பாடமானது முக்கிய பாடமாக கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது.

* அறிவியல் பாடம், தேர்வுக்கான மதிப்பெண்களில் முக்கிய இடம் வகிப்பதால், அதில் சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம்.

* வைட்டமின்கள், நோய்களும் காரணிகளும், நோய்த்தடைகாப்பு மண்டலம் - இரத்தம், நரம்பு மண்டலம், இயற்கை வளங்கள் (மரபு சார்ந்த மற்றும் மரபுசாரா வளங்கள்), கனிம வளம் மிகுந்த பகுதிகள் ஆகியவை சிறப்பு கவனம் பெறும்.

* ஒளிச்சேர்க்கை - செல் - செல்லின் அமைப்பு - செல்லின் பாகங்கள் - கணிகள் - விதைகள் - மகரந்த சேர்க்கை - இனப்பெருக்கம் - தாவர நோய்கள் - சுவாசித்தல் ஆகியவையும் இடம் பெறலாம்.

* சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள், பொதுத் தாள் புத்தகங்கள் அறிவியல் பாடத் தயாரிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு:

* போட்டித் தேர்வுகளில் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதியாக இது கருதப்படுகிறது. 

* பொதுவாகவே இவற்றிலுள்ள பெரும்பாலான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அடிப்படை உரிமைகள், அரசு நெறிப்படுத்தும் கொள்கைகள், பாராளுமன்றம், மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வரலாறு:

* வரலாறு பாடத்திற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான சமச்சீர் புத்தகங்கள் ஆரம்பக் கட்ட புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும்.

* இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1857-1947), கவர்னர்கள் (1757-1947), புத்த சமயம், சமணசமயம், சமூக சீர்திருத்த இயக்கம், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரீகம், குப்தர்கள், மௌரியர்கள், சேர, சோழர், பாண்டியர் காலம், சுல்தான்கள் மராத்தியர்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வது நல்லது.

பொருளாதாரம்:

* குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தே பொருளாதாரத்தில் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஆனாலும் அவற்றை அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்த வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.

பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்:

* போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முக்கியமான பகுதிகளாக பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் கருதப்படுகின்றன. நாள்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

* பிரபல நபர்கள், அரசாங்க திட்டங்கள், தமிழக நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.

புவியியல்: 

இந்திய, தமிழக வரைபடங்கள், உயர்ந்த சிகரங்கள், மலைத்தொடர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மனத்திறன் பயிற்சி மற்றும் அறிவுக்கூர்மை திறன்: வினாத்தாளில் நான்கில் ஒரு பகுதிக் கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்கப்படுகின்றன.

சில குறிப்புகள்:

*  முக்கிய ஆண்டுகளை நினைவில் வைத்திருத்தல் அவசியம். இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.

* குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.

* குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 8 ஆகிய தேர்வுகளுக்கு நடப்பு அரசியல் பொருளதாரம் மற்றும் சமூக நிகழ்வுகளை அறிந்து வைத்திருத்தல் கூடுதல் பயனளிக்கும்.

முறையான மற்றும் தேவையான கையேடுகளை மட்டும் படித்தாலே இத்தேர்வுகளில் வெற்றி பெறலாம். அனைத்து பாடபுத்தகங்களையும் கைப்பேசி அல்லது கணினி உதவியோடு இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அரசு வேலைவாய்ப்பு என்பது எப்போதும் நிரந்தரமானது. அதற்கான முயற்சியில் தற்காலிகமாக நாம் சிரமப்படுவது ஒன்றும் கடினம் அல்ல. வாழ்த்துக்கள்!

-எம்.கார்த்திகேயன், கல்வியாளர்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) - 30.09.2016

மாணவர் விசா நடைமுறைகள்


மாணவர் விசா நடைமுறைகள்

தங்களின் உயர்கல்வியை வெளிநாட்டில் தொடர விரும்பும் பெரும்பாலான மாணவர்களின் பிரதான தேர்வு அமெரிக்கா!
சர்வதேச தர வரிசை பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஏராளமான சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், அமெரிக்காவில் செயல்பட்டு வருவதே இதற்கு காரணம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல், மாணவர் விசா பெறுவதற்கான செயல்முறைகளையும் அறிந்து கொள்வதும் அவசியம்.
விசா செயல்முறைக்கு அதிக நாட்கள் தேவைப்படுமா?
தூதரக மின்னணு விண்ணப்ப மைய இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின், அவர்களுக்கு இரண்டு அழைப்பு நேரங்கள் ஒதுக்கப்படும். முதல் அழைப்பில், விசா விண்ணப்ப மையத்தில் விண்ணப்பதாரர்கள் கைரேகை, புகைப்படம் போன்ற தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாம் அழைப்பில், அமெரிக்க துணைத் தூதரகத்தில் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்களின் நேர்காணல் முடிவடைந்து விசா ஒப்புதல் பெற்ற பின் ஒரு வாரத்திற்குள் அவர்கள் பாஸ்போர்ட்டை பெற்று கொள்ளலாம்.
நேர்காணலில் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும்?
ஒவ்வொரு மாணவர்களின் எண்ணங்கள் மாறுபடும் என்பதால் சாரியான பதில் இதுதான் என்று எதுவும் இல்லை. விசா அதிகாரிகளிடம் தேர்வு செய்திருக்கும் கல்லூரிகள் மற்றும் நிதி ஏற்பாடுகளை குறித்து நேர்மையாக அமெரிக்கா செல்வதற்கான உங்களது திட்டங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் சரி!
நேர்காணலின் போது என்ன கொண்டு செல்ல வேண்டும்?
மாணவர்கள் தேர்வு செய்த, பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் வழங்கிய ஏற்பு கடிதம், -20 படிவம், தகுதி தேர்வு மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களைக் கொண்டு செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
சென்னை, அமெரிக்க துணைத் தூதரகத்தில், நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 விசா நேர்காணல்கள் நடைபெறும். இதிலிருந்து, ஐந்து நிமிடங்களே நீடிக்கும் ஒரு விசா நேர்காணலில், விசா அதிகாரியின் கேள்விகளுக்கு மாணவர்கள் துல்லியமாகவும் மற்றும் முழுமையாகப் பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர முடியும்.
பயணத்தின் போது தேவைப்படும் ஆவணங்கள்?
விசா ஒப்புதல் பெற்ற பின் அமெரிக்கா செல்வதற்கு, உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
இமிகிரேஷன் அதிகாரிகள் கேட்கும் பட்சத்தில் - 20 படிவம், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டும். மேலும், மாணவர் மற்றும் பரிவர்த்தனை பார்வையாளர் தகவல் அமைப்பில் (ஸ்டூடன்ட் அண்ட் எக்ஸ்சேன்ஞ் விசிட்டர் இன்பர்மேஷன் சிஸ்டம்) செலுத்தியதற்கான கட்டண ரசீதை பாஸ்போர்ட்டுடன் வைத்திருக்க வேண்டும்.
வேறு என்ன தெரிய வேண்டும்?
அமெரிக்க கல்வி முறை மற்றும் கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம். மேலும், பயணத்திற்கு முன்பு எஜூகேஷன் யு.எஸ்.., நடத்தும் விளக்க உரையில் பங்குபெறுவது சிறந்தது. அந்தந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் சார்பில் நடைபெறும் முன்னாள் மாணவர் நிகழ்வுகள், தகவல் பரிவர்த்தனை போன்றவற்றை தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது!
மேலும் விவரங்களை பெற:
in.usembassy.gov/visas மற்றும் educationusa.state.gov
-அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 20.12.201

Monday, February 6, 2017

நகங்கள் காட்டும் நோய்குறிகள்

No automatic alt text available.

நகங்கள் காட்டும் நோய்குறிகள்
அகத்தின் அழகு நகத்தில் தெரியும்’ எனும் மருத்துவ மொழி அறிவீர்களா? ஆம், நகங்கள் நம் உள் உறுப்புகளின் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி.
விரல் நுனி வரை பரவி உள்ள நரம்பு மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும் இயற்கை அரண்தான் நகங்கள்.
நகத்தில் நான்கு முக்கியமான பாகங்கள் உள்ளன. வெளிப்புறம் தெரியக்கூடியது நெயில் பிளேட், அதற்கு அடியில் இருக்கும் சதை நெயில் பெட், விரலுக்கு உள்ளே இருப்பது நெயில் மேட்ரிக்ஸ், இதுவே நக செல்களை உருவாக்கி, நகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது. நம் தோலுக்கும் நகத்துக்கும் இடையே வெள்ளையாக, பிறை நிலா போன்று இருப்பது லூனுலா (Lunula). இவை ஒவ்வொன்றுமே நமக்கு வரக்கூடிய நோய்க்குறிகளைக் காட்டக்கூடியவை.
நகத்தில் படுக்கையான, அழுத்தினாலும் மறையாத வெள்ளைக்கோடுகள் இருந்தால், அது ஆர்சனிக் நச்சு உடலில் இருப்பதற்கான அறிகுறி.
புரதச்சத்து குறைபாட்டாலும் நகத்தில் வெள்ளைக் கோடுகள் உருவாகும். ஆனால், இது அழுத்தினால் மறைந்துவிடும்.
நகத்தில் சிவப்பு அல்லது கறுப்பு நிறத்தில் செங்குத்தான கோடுகள் இருந்தால், இதயத்தில் உள்ள தொற்றைக் குறிக்கும்.
தோலை ஒட்டி வேகத்தடை போன்ற அமைப்பு நகத்தில் ஏற்பட்டால், உடலில் ஏதோ ஓர் உறுப்பு பாதித்துள்ளது என அர்த்தம். அந்த நோய் சரியாகும்போது, அந்த வேகத்தடை போன்ற நக அமைப்பு, நுனிப்பகுதியை அடைந்து மறைந்துவிடும்.
தொடர்ச்சியாக மெனிக்யூர், பெடிக்யூர் செய்பவர்களுக்கும், தொடர்ந்து தண்ணீரில் வேலை பார்ப்பவர்களுக்கும் நகம் இரண்டு அடுக்காக இருக்கும்.
சொரியாசிஸ் இருப்பவர்களுக்கு நகமானது நகப்படுக்கையில் இருந்து விலகி இருக்கும்.
இரும்புச்சத்துக் குறைபாடு உடையவர்களுக்கு, நகமானது கரண்டி போன்ற அமைப்பிலும், சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பவர்களுக்கு நகம் ஆரம்பிக்கும் இடத்தில் ஆரோக்கியமாகவும், பாதிக்கு மேல் காவி நிறத்திலும் மாறி இருக்கும்.
நுரையீரலில் தொந்தரவு இருப்பவர்களுக்கும், அதிகம் புகைபிடிப்பவர்களுக்கும் நகம் வீங்கியும், புடைத்தும் காணப்படும். இவை, நுரையீரல் கெட்டுப்போய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அறிகுறி.
கல்லீரலில் குறைபாடு இருந்தால் நகம் ஆரம்பிக்கும் முதல் பாதி வெளுத்தும், மீதி வழக்கமான நிலையிலும், லூனுலா நீல நிறத்திலும் காணப்படும். இது கல்லீரலில் காப்பர் அதிகம் இருப்பதற்கான குறியீடு.
மேலும், சிலருக்கு மஞ்சள் நிற நகம் இருந்தால், அது பூஞ்சையினால் ஏற்படும் பாதிப்பு. ஆறு மாதங்கள் சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும். ஆனால், பிறவியிலிருந்தே இருந்தால்,அவர்களுக்கும் நுரையீரல் தொந்தரவு இருக்கும்.
எல்லோருக்கும் சகஜமாக வரக்கூடியது நகச்சுத்தி. இது கிருமியினால் ஏற்படும். உடனடியாக ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும். எலுமிச்சை வைப்பதெல்லாம் சரியான சிகிச்சை கிடையாது. இதனால், சிலருக்கு நகசுத்தி இருந்த இடத்தில் குழி ஏற்படும். ஆதலால், நகங்களை நன்கு பராமரிப்பது அவசியம். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நகங்களை வெட்டி, சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.
நகங்களை வெட்டும்போது, சதையோடு ஒட்டி இருக்கும் தோலுடன் சேர்த்து வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால், மீண்டும் நகம் வளரும்போது வலியை உண்டாக்கும்.
சாப்பிட்ட பின், விளையாடிய பின், வேதிப்பொருட்கள், ரசா யனம் போன்றவற்றோடு தொடர் புடைய வேலை செய்தபின், உடனடியாகக் கைகளை ஹேண்ட் வாஷ் போட்டுக் கழுவுவது சிறந்தது.
நகங்களின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளைச் சுத்தம்செய்ய வேண்டும். ஏனெனில், அங்கு நுண்ணுயிரிகள் இருக்கும். நகங்களுக்கு எண்ணெய் பூசியும் பராமரிக்கலாம்.
நகம் – மூட்டை பாதிக்கும் பெட்டல்லா சிண்ட்ரோம்லட்சத்தில் நான்கு பேருக்கு வரக்கூடிய ஒரு நோய், `நெயில் பெட்டல்லா சிண்ட்ரோம்’. நகம் மற்றும் எலும்புகளை மட்டுமே தாக்கக்கூடிய இது, ஒரு பரம்பரை நோய். குரோமோசோம் ஒன்பதில் வரக்கூடிய குறைபாட்டின் வெளிப்பாடு. குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால், அவருடைய இரண்டாவது, நான்காவது, எட்டாவது குழந்தைகளில் ஒருவருக்கு வரக்கூடும். பெரும்பாலும், இந்த நோய் உள்ளவர்களுக்கு நகம் இல்லாமல் இருக்கும் அல்லது சொத்தையாக இருக்கும். முக்கியமாக, கட்டைவிரல் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கும். மற்ற விரல்கள் 95 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருக்கும். கால் விரல்களிலும் இதுபோன்ற பாதிப்புக்கு வாய்ப்புகள் உள்ளன.
எலும்பைப் பொறுத்தவரை காலை மடக்கி உட்கார உதவும் எலும்பு சின்னதாக இருக்கும். 20 சதவிகிதம் பேருக்கு அந்த எலும்பே இருக்காது. கால் பகுதியில் மேல் எலும்புக்கும், கீழ் எலும்புக்கும் மூட்டு எலும்பே ஆதரவாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு, இடுப்புப் பகுதியின் பின்னால் இருக்கக்கூடிய எலும்பு கூர்மையாக இருக்கும். இந்த எலும்பு பாதித்தவர்கள் வேகமாக நடக்கவோ, உட்காரவோ முடியாமல் சிரமப்படுவர். நகம், எலும்பு பாதிப்புகளைத் தாண்டி, சிறுநீரகச் செயல் இழப்பு, தைராய்டு குறைபாடுகளும் வரலாம். நெயில் பெட்டல்லா சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நகத்துக்கும் தோலுக்கும் இடையில் இருக்கக்கூடிய பிறை நிலா போன்ற லூனுலாவானது முக்கோண வடிவத்தில் காணப்படும்.
இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை. எலும்புகளுக்கு மட்டும் அறுவைசிகிச்சை மற்றும் பிசியோதெரப்பி செய்வதன் மூலம் அவர்களின் இயல்பான வாழ்வைத் தொடரலாம். நகத்துக்கு சிகிச்சை இல்லை. செயற்கை நகம், நகப்பூச்சு போன்றவை உபயோகித்து மறைத்துக்கொள்ளலாமே தவிர, மருந்து, மாத்திரைகளால் பழைய நகத்தைப் பெற முடியாது.
நன்றி : டாக்டர் விகடன் - 01.02.2016

பக்கிங்ஹாம் கால்வாய்


பக்கிங்ஹாம் கால்வாய்


சென்னையின் நீர்வழித்தடங்கள் - 2 பஞ்சத்தை எதிர்கொண்ட பக்கிங்ஹாம் கால்வாய்!

அதிசயம்! ஆனால் உண்மை - ஆமாம்; சென்னையின் நீர்வழித்தடங்களைக் குறித்து நாம் ஆலோசிக்கிறோமோ இல்லையோ, பல ஆங்கிலேயர்கள் அந்நாட்களிலேயே நினைவு கூர்ந்துள்ளனர்.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற ஒரு பெண்மணியைப் பற்றி நம்மில் அறியாதவர்கள் இருக்க முடியாது. 'லேடி வித் அ லேம்ப்' என்றறியப்பட்ட அப்பெண்மணி, செவிலியர்களுக்கு முன்னோடி. ஆனால் அவர், சென்னையின் நீர்வழித்தடங்களைப் பற்றி, 16ம் நுாற்றாண்டிலேயே எழுதியுள்ளார் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
அவர் முக்கியமாக இவற்றைப் பற்றி நினைத்தற்குக் காரணம், சுகாதாரத்திற்கு இன்றியமையாதது, கழிவுநீர்க் கால்வாய்கள் என்ற கருத்தின் அடிப்படையில் தான். நோய்கள் வரக் காரணமே, கழிவுநீர் சரிவர அகற்றப்படாதது என்ற கருத்துடையவராக இருந்தார்.
அவர் இந்தியாவின் சுகாதாரத்தைப் பற்றி எழுதியவை, ஒரு நுாலாக வெளிவந்துள்ளன. அதில் அவர் அன்றைய மதராசைக் குறித்து எழுதியுள்ள கடிதங்களும் உள்ளன. அதில், அவர் சென்னையின் நீர்வழித்தடங்களைப் பற்றியும் விரிவாகவே எழுதியுள்ளார்.
அவரது கடிதம், சர் ஆர்தர் காட்டன் எழுதிய, 'தி மெட்ராஸ் பேமின் - வித் அபெண்டிக்ஸ் கன்டெய்னிங் ஏ லெட்டர் பிரம் மிஸ் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அண்டு அதர் பேப்பர்ஸ்' என்ற, 1877ம் ஆண்டில் பதிக்கப்பட்ட ஆங்கில நுாலில் காணக் கிடைக்கிறது. 

'இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்' என்ற பத்திரிகையில், பிளாரன்ஸ், இந்தி யாவைப் பற்றி பல கடிதங்கள் எழுதியுள்ளார். அந்த பத்திரிகை, இந்தியாவின் பஞ்சத்தைப் பற்றிய பல படங்களை அக்காலகட்டத்திலேயே வெளியிட்டுள்ளது.
சர் ஆர்தர் காட்டன், தென்னகத்தின் நீர்வழித்தடங்களை நன்கு ஆய்ந்தவர். கோதாவரி ஆற்றை அவர் அறிந்த அளவுக்கு இந்தியர்களே தெரிந்து கொள்ளவில்லை எனலாம். தஞ்சாவூர் பகுதியிலும் அவரது பணிகள் நன்கறியப்பட்டவை.
படகுகள் ஊர்வலம்
கடந்த, 1879, ஏப்ரல் 2௮ம் தேதி அன்று, 'தி இல்லஸ்ட்ரேட்நியூஸ்' ஆங்கிலப் பத்திரிகைக்கு, பிளாரன்ஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
(1)ஜூலை, 1877ல் நீங்கள் இருமுறை எனது கடிதங்களைப் பிரசுரித்துள்ளீர்கள். அதில் நான் சென்னை ராஜதானியின் பஞ்சங்களைக் குறித்து எழுதியிருந்தேன்.
பஞ்சத்தை எதிர்கொள்ள டியூக் ஆப் பர்மிங்ஹாம் செய்த ஒரு சிறப்பான காரியம் குறிப்பிடத் தக்கது. அவர் ஒரு கால்வாயை வெட்டி, அதன் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்ல ஒரு வழி வகுத்தார்.
மதராசுக்கு வடக்கில், காகிநாடாவில் இருந்து, தெற்கு வரை, 450 மைல்கள் ஒரு கால்வாய் மூலம், படகுகள் இப்போது செல்ல முடியும்.
(இந்த கடிதம், 137 ஆண்டு களுக்கு முந்தையது என்பதை வாசகர்கள் நினைவு கூர்ந்து கொள்ள வேண்டும்)
அன்று, ஊர்வலம் போல, 70லிருந்து 80 படகுகள் வரை இக்கால்வாயில் சென்றது, வெனிசில் படகுகள் (கொண்டோலாக்கள்) செல்வதை நினைவூட்டியிருக்கக்கூடும்.
இவ்வாறு, அவர் எழுதி இருந்தார்.
வேடிக்கை என்னவெனில், பிளாரன்ஸ், இந்தியா வந்திருக்கவில்லை
தொடர்ந்து அவர் கடிதத்திலிருந்து நமக்குத் தெரிவது, அவர் கருத்துப் படி, பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சங்களுக்குக் காரணம், உணவு பற்றாக்குறை மட்டுமல்ல. 

ஏனெனில் இந்தியாவின் பல இடங்களில் உணவு நல்ல அளவில் கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால் அப்படி இருந்தும் உணவுப் பொருளை, உணவு குறைந்த பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாததுதான் என்று கூறி, அவ்விஷயத்தில் பக்கிங்ஹாம் பிரபு உண்டாக்கிய பக்கிங்ஹாம் கால்வாய் சிறப்பாக அமைந்தது என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
இன்று கூட வல்லுனர்கள் கருத்துப்படி, இந்தியாவில் உணவுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் வினியோகிப்பதில் தான் குறையுள்ளது
என்றறிகிறோம்.
சென்னையையே பார்த்திராத அப்பெண்மணி, சென்னையின் நீர்வழித்தடங்களின், முக்கியமாகக் கழிவுநீர் பிரச்னைகளைப் பற்றி, பல ஆண்டுகளுக்கு முன்னரே நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார் என்பதும், அதைப் பற்றித் தமிழர்களாகிய நாம், இன்றும் சரியாக உணர்ந்து கொள்ளவேயில்லை எனபதும் இதிலிருந்து நிதர்சனமாகின்றது அல்லவா?
உண்மையில் அவரது நோக்கு ஆங்கிலேய ராணுவ சிப்பாய்களைப் பற்றித்தான் முதலில் துவங்கியது. பின்னர் மற்ற சிப்பாய்களைப் பற்றியதாகவும், இறுதியில் மொத்தமாக இந்தியாவின் சுகாதார முறைகளைப் பற்றியதாகவும் மாறியது.
வாழ்வு அல்லது சாவுகடந்த, 1864ம் ஆண்டில் அவர், 'இந்தியன் சானிடரி ரிப்போர்ட்' என்ற ஒரு ஆய்வறிக்கையையும் தயாரித்தார். அப்போது மதராஸ் சுகாதாரக் கமிஷனராக இருந்த, ராபர்ட் ஸ்டாண்டன் எல்லிஸ் என்பவருக்கு, இங்கிலாந்தில் நிலவும் சுகாதார முறைக்கும், இந்தியாவில் காணப்படும் சுகாதார முறைக்கும் உள்ள வேறுபாட்டைக் குறித்து, அவரது இங்கிலாந்து வருகையின் போது சுட்டிக் காட்டினார்.
அவரது பரிந்துரையின் பேரில், 1866ம் ஆண்டில், கேப்டன் டுல்லாக் என்பவர் அன்றைய மதராசின் கழிவுநீர்ப் பிரச்னை கள் குறித்து ஒரு அறிக்கை தயார் செய்ய இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்டார்.
அது மட்டுமல்ல. அவர் இந்தியாவில் சுகாதாரத்தைப் பற்றி ஆய்வு செய்ய, ராயல் கமிஷன் குழு அமைக்கப்பட்டபோது, அதில் பெரும் பங்கினை தானே ஏற்றுக் கொண்டார். 1874ம் ஆண்டில், ஒரு கையேடு தயாரித்தார்.
அதற்கு 'இந்தியாவில் வாழ்வு அல்லது சாவு' என்ற தலைப்பு கொடுத்தார். இது குறித்து, அவர் 1888, அக்டோபர் 10ம் தேதி எழுதிய கடிதத்தில் அன்றைய அரசைக் குறை கூறியுள்ளார். மொத்தத்தில் பக்கிங்ஹாம் கால்வாய், பஞ்சத்தை எதிர்க்க உறுதுணையாக இருந்திருக்கின்றது.
இதன் ஆரம்பம் அதாவது பிறப்பிடம் (ஆங்கிலத்தில் ஜீரோ பாயின்ட்), செயின்ட் மேரி பாலத்தினருகில் அமைக்கப்பட்டது. அதிலிருந்துதான் வடக்கேயும் தெற்கேயும் கால்வாய் அளவுகள் எடுக்கப்பட்டன.
முன்னரே கூறியபடி, முதலில், 178 சதுரமைல் பரப்பளவு கொண்ட பழவேற்காடு ஏரி, சென்னையின் கோட்டைப் பகுதியிலிருந்து கோக்ரேன் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டது.
அப்போதுதான் கூவம் ஆறு சங்கமம் ஆகுமிடத்தில், மணல் மேடு உண்டாவதும் அதனால் ஆற்றின் நீர் வேகம் தடுக்கப்படுவதும் பொறியாளர்களுக்குச் சரியாகப் புரிந்தது.
அதைத் தொடர்ந்துதான் லாக் கேட்டுகள், கால்வாயின் நீர் வடிந்திடாதிருக்க அமைக்கப்பட்டன. இக்கால்வாயின் முதல் காலம் 1857லிருந்து 1883ம் ஆண்டு வரை எனக் கணக்கெடுக்கப்
பட்டது. இரண்டாவது காலம் 1883 லிருந்து 1891 வரையிலானது. இந்த கால கட்டத்தில்தான் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று, கூவத்தைப் பற்றியதுமாகும்.
அதைப் பற்றிக் கூவம் ஆற்றைப் பற்றி வரும் பகுதியில் பின்னர் பார்க்கலாம்.
கடந்த, 1879ம் ஆண்டில் புயலால் இக்கால்வாய் பெரும் சேதம் அடைந்தது. பழுது பார்க்கையில் பல லாக் கேட்டுகள் கைவிடப்பட்டன. வடபகுதியில் அதாவது ஆந்திராவில் இக்கால்வாய் இன்னும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தெற்கிலோ மொத்தமாக பாழடைந்து விட்டது.
1. Florence Nightingale on Health in India: Collected Works of Florence Nightingale By Florence Nightingale, 
Lynn McDonald, Grard Vall e 

(கட்டுரையாளர் - எழுத்தாளர், ஆய்வாளர்)
தொடர்புக்கு: narasiah267@gmail.com
- நரசய்யா -

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.02.2016

உதவி பேராசிரியர் பணி; ’செட்’ தேர்வு அறிவிப்பு


உதவி பேராசிரியர் பணி; ’செட்’ தேர்வு அறிவிப்பு

’உதவிப் பேராசிரியர் பணிக்கான, ’செட்’ தகுதித் தேர்வு, ஏப்ரல் 23ல் நடக்கும்’ என, தெரசா பல்கலை அறிவித்து உள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவிப் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, ’நெட்’ மற்றும் மாநில அளவிலான, ’செட்’ தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். ’நெட்’ தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் எந்த பல்கலையிலும் பணியில் சேரலாம்.

’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால், எந்த மாநில, ’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றனரோ, அந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியில் சேர முடியும். ’நெட்’ தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம். தமிழக, ’செட்’ தேர்வில், ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்வு எழுதலாம்.

தமிழகத்தில், ’செட்’ தேர்வானது, கடந்த ஆண்டு முதல், கொடைக்கானல் தெரசா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, ஏப்., 23ல் நடக்கும் என, ’செட்’ தேர்வு கமிட்டிஅதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும், 16 பொறுப்பு மையங்கள் மூலம், 25 பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, பிப்., 12 முதல் மார்ச் 12 வரை, ஆன்லைனில், http://www.tnsetexam2017mtwu.ac.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

தாமத கட்டணத்துடன், மார்ச் 19 வரை விண்ணப்பிக்க முடியும். கூடுதல் விபரங்களை, ’செட்’ தேர்வு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

நன்றி : தினமலர் (கல்விமலர்) நாளிதழ் - 06.02.2017

Sunday, February 5, 2017

டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க... !!

 டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க... !!
மெயில் சாலையில் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்வதற்காக டிராஃபிக் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் சில வேளைகளில் பெரும் களேபரங்களை ஏற்படுத்துவதை தினசரி பார்க்க முடியும். சிலவேளைகளில் போலீசாருக்கு பயந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுவதும், தாறுமாறு வேகத்தில் செல்லும் நான்கு சக்கர வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. 
லஞ்சம், அலைகழிப்புக்கு பயந்துதான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால், இதுபோன்று டிராஃபிக் போலீசார் நிறுத்தும்பட்சத்தில், வாகன ஓட்டிகளுக்கான உரிமைகளை தெரிந்து வைத்துக் கொண்டால், ஓரளவு இந்த அச்சத்திலிருந்து விடுபட முடியும். இது நிச்சயம் உங்கள் அச்சத்தை போக்கி தேவையில்லாத பதற்றத்தை தணிக்கும் என நம்புகிறோம். 
வாகன தணிக்கை 
சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து துறை அதிகாரி எந்தவொரு வாகனத்தையும் ஆய்வு செய்ய உரிமை உண்டு. அவ்வாறு, உங்கள் வாகனத்தை ஆய்வுக்காக நிறுத்த சொல்லும்பட்சத்தில், வண்டியின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரமாக நிறுத்துங்கள். தப்பித்துச் செல்ல முயற்சிப்பது விபத்துக்களுக்கு வழிகோலும். 
காவலருக்கான அதிகாரம் 
சாதாரண போக்குவரத்து காவலர் உங்களது வாகனத்தின் ஆவணங்களை கேட்பதற்கோ, வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கோ அதிகாரம் இல்லை. ஏஎஸ்ஐ, எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மட்டுமே ஸ்பாட் ஃபைன் போட அதிகாரம் கொண்டவர்கள். ஏஎஸ்ஐ ரேங்கிற்கு கீழே உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்கள் செல்லான் போட முடியாது. அதேநேரத்தில், விதிமீறல்கள் மற்றும் அதன் தன்மை குறித்து குறிப்பெடுக்கவும், அதுகுறித்து காவல்துறை புகார் பதிவு மையத்திற்கு தகவல் அளிக்க முடியும். 
கைது அதிகாரம் 
சாதாரண போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டிகளை கைது செய்யவோ முடியாது. வாகன புகை பரிசோதனை சான்றையும் அவர்கள் கேட்க முடியாது. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க முடியும். மேலும், வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அதிகாரம் இல்லை.    
ஸ்பாட் ஃபைன் 
சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஸ்பாட் ஃபைன் போடப்பட்டால், அதனை உடனே கட்ட இயலாத சூழல் இருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றத்தில் அபாரதம் கட்டிய பிறகு திரும்ப பெற முடியும். அதேபோன்று, நிர்ணயித்ததைவிட அதிக அபராதம் விதித்தாலும், கோர்ட்டில் கட்டி விடுகிறேன் என்று கூறிவிட்டு செல்லானை பெற்றுக் கொண்டு வந்துவிடலாம்.    
டிரைவிங் லைசென்ஸ் 
சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய வழி உள்ளது. அதேநேரத்தில், அதற்குண்டான உரிய செல்லான் இல்லாமல் உங்களது டிரைவிங் லைசென்ஸை டிராஃபிக் போலீஸ் எடுத்து செல்ல இயலாது. எனவே, அதற்குண்டான உரிய ஆவணத்தை கேட்டு பெறுவது அவசியம். 
காரை எடுத்துச் சென்றால்... 
காரில் யாரேனும் அமர்ந்திருக்கும்போது, காரை போலீசார் வேறு வாகனம் டோ செய்து எடுத்துச் செல்ல முடியாது. அதேநேரத்தில், போலீசாரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டு காரை விட்டு இறங்கிவிடுவது அவசியம்.     
பெண்களுக்கு... 
மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவரை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய முடியும் . மேலும், பெண் காவலர் இல்லாதபட்சத்தில், அவரை வரவழைத்து ஆய்வு செய்ய சொல்லவும் பெண்களுக்கு உரிமை உண்டு. அபராதம் விதிக்கும் டிராஃபிக் போலீசாரிடம் அதற்குண்டான செல்லான் புத்தகம் அல்லது மின்னணு எந்திரம் கைவசம் இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர்கள் அபராதம் விதிக்க முடியாது. 
இதுதான் விதி... 
சாலை விதியை மீறிய நிலையில், உங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீசாரிடம் காட்டுவது அவசியம். மோட்டார் வாகனச் சட்டம் 130-ன் படி சீருடையுடன் பணியில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்களை காட்டுவது அவசியம், ஆனால், ஒப்படைக்கும் அவசியம் இல்லை. 
அப்படியா... 
பணியில் இருக்கும் போலீசாரின் சீருடையில், அவரது பெயர் மற்றும் அவரது பெல்ட் எண் ஆகியவை இருத்தல் அவசியம். அது இல்லாதபட்சத்தில், அவரிடம் அவரது பணி விபரங்களை கேட்டுக் கொண்டு ஆவணங்களை காட்டுவதுடன், அவரிடம் ஆவணங்களை ஒப்படைப்பதையும் தவிர்க்கவும். 
இதுவும் செய்ய முடியாது... 
இன்று பல போலீசார் வண்டியை நிறுத்தியவுடன் வாகனத்தில் உள்ள சாவியை முதலில் பிடுங்கிக் கொள்கின்றனர். இதுவும் தவறு. அதேபோன்று, காரின் கதவுகளை கட்டாயமாக திறந்து உங்களை வெளியேற்றுவதும் தவறு. 
கைது செய்தால்... 
விதி மீறலுக்காக கைது செய்யும்பட்சத்தில், நேராக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் உங்களை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். எனவே, விதிமுறைகளை மீறும்பட்சத்தில் இந்த விதிகளை மனதில் வைத்தால் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க முடியும். 
இதெல்லாம் விடுங்க... 
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பதுடன், போலீசாருக்கு பயந்து விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதேநேரத்தில், வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில்தான் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பதையும் மனதில் வைக்கவும்.
Written By: Saravana Rajan 
நன்றி : டிரைவ் ஸ்பார்க் – 12.08.2016

வங்கிக்கடன் - வங்கிக்கு முதலில் செலுத்த வேண்டிய கட்டணங்கள்

Image may contain: text

வங்கிக்கடன் - வங்கிக்கு முதலில் செலுத்த வேண்டிய கட்டணங்கள்

வீடு வாங்க வேண்டும் என்பது இன்றளவும் பலரின் கனவாகவே உள்ளது. குறைந்த வருமானத்தில் உள்ளவர்கள் முதல் அதிக வருமானத்தில் உள்ளவர் வரை அனைவருக்கும் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டு.
இதற்காக கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வாங்கியது எல்லாம் அந்தகாலம், இந்தகாலத்தில் சம்பாதிப்பது அன்றாட வாழ்க்கைக்கே செலவாகும் நிலையில் வீடு வாங்க அனைவருக்கும் உதவும் ஒரே விஷயம் லோன் அதவாது கடன்.
வீட்டு லோன் வாங்காமல் நாம் விரும்பிய வீட்டை யாராலும் வாங்க முடியாது என்ற நிலை தற்பொழுது எல்லோருடைய விட்டிலும் உள்ளது. கனவு இல்லத்தை நினைவில் கொண்டு வர பல வங்கிகள் உதவுகின்றன. இதற்கென வங்கிகள் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றது.
வங்கி கடன் பெருவதற்கு முன் அதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
வங்கி கடன் வீட்டுக் கடன் பற்றி எதையும் உணராமல் தெரிந்து கொள்ளாமல் அப்படியே வங்கிகளில் சென்று கடன் கேட்டால் நஷ்டம் உங்களுக்குதான். எதற்கு பணம் கட்ட வேண்டும், எதற்கு கட்ட வேண்டாம் என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதை பற்றி இங்கு காண்போம்.
லோன் கேட்டவுடன் வழங்கப்படுவதில்லை. அதிகாரிகள் நீங்கள் லோன் கோரும் சொத்தையும் கேட்ட தொகையையும் மதிப்பீடு செய்த பின்னரே வழங்குவர். இதற்கென உள்ள பொறியாளர்கள் சரி பார்த்து சொல்வதை கடமையாக கொண்டுள்ளனர். இதற்கான செலவை லோன் கேட்பரிடமிருந்து வசுலிக்கப்படும். இதவே மதீப்பீட்டு கட்டணம்.
லோன் கேட்கும் நேரத்தில் பல வித பத்திரங்களை சரிபார்க்க நேரிடும். இதற்கான பத்திரங்களை சரிபார்க்கவும் டாகுமெண்ட் செய்யவும் வங்கிகள் தனியாக கட்டணம் வசுலிக்கப்படும். ஆகையால் அலுவலகத்தில் பத்திரங்களை ஒப்படைக்கும் முன் பல மாதிரிகளை எடுத்து வைப்பது நல்லது.
சிலர் லோன் வாங்கிய வங்கியை விட மற்ற வங்கிகள் குறைந்த அளவில் வட்டி வாங்குவதை உணர்ந்து புதிய வங்கிக்கு லோனை மாற்ற ஏற்பாடு செய்யக்கூடும். இதனால் வங்கிக்கி சங்கடம் ஏற்படும். இதை தடுக்க அதிக கட்டணத்திலிருந்து குறைந்த கட்டணத்திற்கு வாடிக்கையாளார்கள் மாறுவதற்கு வங்கி வழி செய்கின்றது. இதற்கென முன்னரே கட்டணம் வசுலிக்கப்படும். Show
ஸ்டாம்ப் செலவுகள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இதை நிர்ணயம் செய்ய தனி கவனம் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. கட்டிதத்தின் தன்மையை பொருத்தே இதை நிர்ணயம் செய்கின்றனர்.
வீட்டு கடன் பலவித வேலைகளை உள்ளடக்கியது. அதாவது, கடனுக்கான காரணம் அல்லது செயலாக்க கட்டணம், நிர்வாக கட்டணங்கள், ஆவணங்கள், தாமதமாக பணம் செலுத்துவது, வட்டியில் மாற்றம், கடன் மறுசீரமைப்பு, வட்டி விகிதம், சட்ட கட்டணம், தொழில்நுட்ப ஆய்வு கட்டணம், வருடாந்திர சேவைக் கட்டணம் என்று நீண்டு கொண்டே போகும்.
எதுவாக இருந்தாலும் லோன் வாங்கும் முன் கவனமாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத கட்டணங்களாக ஸ்டாம்ப் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் பார்க்கப்படுகிறது. மேலும் அரசு துறை வங்கிகளில் கடன் பெறுவது மூலம் குறைவான வட்டியில் கடன் பெற வாய்ப்புண்டு.

ஆதார் அட்டை இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

No automatic alt text available.

ஆதார் அட்டை இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

சென்னை: பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை சமர்ப்பித்தால் 3 நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள முடியும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, காவல்துறை அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்குக் கட்டணம் 1,500 ரூபாய்தான். இந்த நடைமுறையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.

இனிமேல் சாதாரண முறையில் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது 'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், காவல்துறை அறிக்கை பெறாமலேயே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், காவல்துறை அறிக்கை பெறப்படும்.

தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் 'தக்கல்' முறையும் அமலில் உள்ளது. அதற்குக் கட்டணம் 3,500 ரூபாய் ஆகும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்' தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில், வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை மறுமுறை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

காவல்துறையின் அறிக்கை பெற விண்ணப்பதாரரின் விவரங்கள் மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 21 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும்.

பாஸ்போர்ட் உதவிமையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன.இதற்கு சேவை கட்டணம் 100 ரூபாய்.

மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள் வரும் 8 ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.

பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இரு நிலைகள் உள்ளன. அதாவது 1989 ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை. அவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழில் உள்ள பிறப்புத் தேதியை பிறப்புச் சான்றிதழாகப் பயன்படுத்தலாம்.

அத்தோடு வரையறுக்கப்பட்ட சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும். 1989- ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.அவர்கள் கணினியில் சென்னை மாநகராட்சியின் பிறப்பு சான்றிதழ் பிரிவுக்கு சென்று பிறந்த தேதியை பதிவிட்டு பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

அதில் பெற முடியாவிட்டால் தாங்கள் பிறந்த மருத்துவமனையை அணுகி பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். அதனுடன் தங்களின் எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் " என்று கூறினார்.

நன்றி :விகடன் செய்திகள் - 04.02.2016