டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தயாராவது எப்படி?
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் மாநில அரசு தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஒரு தேர்ந்த திட்டமிடல் அவசியம்! அத்தகைய திட்டமிடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சில முக்கிய ஆலோசனைகள் உங்களுக்காக:
* தேர்வுக்கான அறிவிப்பு வந்த காலம் முதல் பாடத்திட்டத்திற்கேற்ப நமது நேரத்தைப் பகுத்து, படிக்க வேண்டும்.
* தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தான் முதல் அடித்தளம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் பொதுவாக மாநில அரசு தேர்வுகளுக்கான அடிப்படை புரிதலை வழங்குகின்றன.
* ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுவது அறிவுறுத்தத் தகுந்தது.
* நாம் எவ்வாறு தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிந்து வைத்திருக்கிறோம் என்பதே தேர்வுக்கான வழிகாட்டியாகும். முந்தைய ஆண்டுகளுக்கான தேர்வுக் கேள்விகளை எவ்வாறு ஆய்ந்தறிந்துள்ளோம் என்பதும், அதற்கடுத்தாற்போல் எவ்வளவு சுய பயிற்சிகளை தேர்வுக்கு முன் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
* தேர்வுக்கான ஊக்குவிப்புகளை புத்தகங்களில் தேடுவதை விட, எந்தப் பதவிக்கு தேர்வு எழுதுகிறோமோ அது பற்றிய விவரங்களையும், அதற்கான உங்களின் பாடங்களையும் தினசரி நினைவில் நிறுத்திக்கொள்வது சிறந்தது.
பாடத்திட்ட அடிப்படையிலான தயாரிப்பானது, பின்வரும் முறையில் மேற்கொள்ளப்படலாம்.
அறிவியல்:
* தமிழக அரசு தேர்வுகளுக்கு அறிவியல் பாடமானது முக்கிய பாடமாக கருதப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது.
* அறிவியல் பாடம், தேர்வுக்கான மதிப்பெண்களில் முக்கிய இடம் வகிப்பதால், அதில் சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம்.
* வைட்டமின்கள், நோய்களும் காரணிகளும், நோய்த்தடைகாப்பு மண்டலம் - இரத்தம், நரம்பு மண்டலம், இயற்கை வளங்கள் (மரபு சார்ந்த மற்றும் மரபுசாரா வளங்கள்), கனிம வளம் மிகுந்த பகுதிகள் ஆகியவை சிறப்பு கவனம் பெறும்.
* ஒளிச்சேர்க்கை - செல் - செல்லின் அமைப்பு - செல்லின் பாகங்கள் - கணிகள் - விதைகள் - மகரந்த சேர்க்கை - இனப்பெருக்கம் - தாவர நோய்கள் - சுவாசித்தல் ஆகியவையும் இடம் பெறலாம்.
* சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள், பொதுத் தாள் புத்தகங்கள் அறிவியல் பாடத் தயாரிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு:
* போட்டித் தேர்வுகளில் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதியாக இது கருதப்படுகிறது.
* பொதுவாகவே இவற்றிலுள்ள பெரும்பாலான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக அடிப்படை உரிமைகள், அரசு நெறிப்படுத்தும் கொள்கைகள், பாராளுமன்றம், மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்து தொடர்பான தலைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வரலாறு:
* வரலாறு பாடத்திற்கு 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான சமச்சீர் புத்தகங்கள் ஆரம்பக் கட்ட புரிதலுக்கு உதவிகரமாக இருக்கும்.
* இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு (1857-1947), கவர்னர்கள் (1757-1947), புத்த சமயம், சமணசமயம், சமூக சீர்திருத்த இயக்கம், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நாகரீகம், குப்தர்கள், மௌரியர்கள், சேர, சோழர், பாண்டியர் காலம், சுல்தான்கள் மராத்தியர்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வது நல்லது.
பொருளாதாரம்:
* குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தே பொருளாதாரத்தில் வினாக்கள் கேட்கப்படுகிறது. ஆனாலும் அவற்றை அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்த வேண்டும்.
* மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையேயான பொருளாதார உறவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்தலாம்.
பொதுஅறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள்:
* போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற முக்கியமான பகுதிகளாக பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் கருதப்படுகின்றன. நாள்தோறும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
* பிரபல நபர்கள், அரசாங்க திட்டங்கள், தமிழக நடப்பு நிகழ்வுகள் மற்றும் தேசிய நிகழ்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.
புவியியல்:
இந்திய, தமிழக வரைபடங்கள், உயர்ந்த சிகரங்கள், மலைத்தொடர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மனத்திறன் பயிற்சி மற்றும் அறிவுக்கூர்மை திறன்: வினாத்தாளில் நான்கில் ஒரு பகுதிக் கேள்விகள் இப்பகுதியில் இருந்து கேட்கப்படுகின்றன.
சில குறிப்புகள்:
* முக்கிய ஆண்டுகளை நினைவில் வைத்திருத்தல் அவசியம். இதில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லாத காரணத்தால் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது.
* குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 200 கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு பயிற்சி மிக அவசியம். ஆகவே தினமும் இரண்டு முந்தைய வருட வினாத்தாள்களை கொண்டு பயிற்சி பெறுதல் சிறந்தது.
* குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 8 ஆகிய தேர்வுகளுக்கு நடப்பு அரசியல் பொருளதாரம் மற்றும் சமூக நிகழ்வுகளை அறிந்து வைத்திருத்தல் கூடுதல் பயனளிக்கும்.
முறையான மற்றும் தேவையான கையேடுகளை மட்டும் படித்தாலே இத்தேர்வுகளில் வெற்றி பெறலாம். அனைத்து பாடபுத்தகங்களையும் கைப்பேசி அல்லது கணினி உதவியோடு இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அரசு வேலைவாய்ப்பு என்பது எப்போதும் நிரந்தரமானது. அதற்கான முயற்சியில் தற்காலிகமாக நாம் சிரமப்படுவது ஒன்றும் கடினம் அல்ல. வாழ்த்துக்கள்!
-எம்.கார்த்திகேயன், கல்வியாளர்.
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 30.09.2016