disalbe Right click

Friday, February 10, 2017

சர்க்கரை நோயை வெல்லலாம்

சர்க்கரை நோயை வெல்லலாம்
இதயம், கல்லீரல், மூளையின் முக்கியத் துவம், செயல்பாடு பற்றி தெரிந்துவைத்துள்ள நமக்கு, கணையம் பற்றி அந்த அளவுக்குத் தெரியாது.
கணையத்தில் என்ன நடக்கிறது?
எப்படி இன்சுலின் செயல்திறன் பாதிப்பு ஏற்படுகிறது ?
செரிமான மண்டலத்தில், வயிற்றின் மையப் பகுதியில், இலைபோன்ற தோற்றத்தில் கணையம் அமைந்திருக்கிறது. கணையத்துக்கு இரண்டு முக்கியப் பணிகள் உள்ளன.
முதலாவது, ஹார்மோன்களைச் சுரந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்கிறது.
இரண்டாவது, உணவு செரிமானம் ஆக சரியான நேரத்தில், என்சைம்களைச் சுரக்கிறது.
கணையத்தின் 95 சதவிகித திசுக்கள், உணவு செரிமானத்துக்கான நொதிகளைச் சுரக்கும் நாளமுள்ள சுரப்பியின் வேலையைச் செய்கின்றன. மீதம் உள்ள செல்கள் நாளமில்லா சுரப்பியின் பணியைச் செய்கின்றன. இந்த செல்களை `லாங்கர்ஹான்ஸ் திட்டுக்கள்என்போம்.
இங்கிருந்துதான், இன்சுலின் மற்றும் குளுக்ககான் எனும் இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இன்சுலின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பணியையும், குளுக்ககான் சர்க்கரை அளவை அதிகரிக்கும் பணியையும் செய்கின்றன. ரத்தத்தில் சரியான அளவு சர்க்கரை இருக்க, இந்த இரண்டு ஹார்மோன்களும் முக்கியம்.
சாப்பிட்டதும் என்ன நடக்கிறது?
பைக், கார் என எந்த ஒரு வண்டியும் ஓட எரிபொருள் தேவை. அது பெட்ரோலாக இருக்கலாம், டீசலாக இருக்கலாம். அதுபோல, நம் உடல் என்ற வண்டி ஓட எனர்ஜி தேவை. இது, நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவு கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு என மூன்று வகையான பொருட்களால் ஆனது.
கார்போஹைட்ரேட் என்பது குளுக்கோஸ். இது உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
புரதச்சத்து மினோஅமிலத்தால் ஆனது. இது உடல் கட்டமைக்கப்பட அவசியம்.
கொழுப்பு அமிலங்களால் ஆனது. இவை செல்களின் உருவாக்கத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் மிகவும் அவசியம்.
கொழுப்பு எதிர்கால ஆற்றல் தேவைக்காக சேகரித்து வைக்கப்படுகிறது. நாம் சாப்பிடாமல் விரதம் இருந்தோம் என்றால், அந்த நேரத்தில் இந்தக் கொழுப்பு பயன்படுத்தப்படும்.
நாம் உணவு உட்கொண்டதுமே கணையம் தன்னுடைய வேலையைத் தொடங்கிவிடும். சாப்பிட்ட உணவு செரிமானம் செய்யப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு, ரத்தத்தில் கலந்ததுமே, கணையத்தில் இருந்து இன்சுலின் சுரந்து, ரத்தத்தில் கலக்கிறது.
இன்சுலினை சுமைதாங்கி என்று சொல்லலாம். இது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸைசெல்களுக்குள் கொண்டுபோய் சேர்க்கும் வேலையைச் செய்கிறது.
இப்படிச் சரியாகச் செயல்பட்டால் மட்டுமே, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இன்சுலின் செல்களை அடைந்ததும், பூட்டு-சாவி போன்ற நுட்பத்தில் செல்கள் திறந்து, குளுக்கோஸை உள்ளே அனுமதிக்கின்றன. இந்த குளுக்கோஸ்தான் செல்களுக்கான உணவு.
இந்த பூட்டு-சாவி நுட்பம் வேலை செய்யாதபோதுதான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்குக் காரணமான இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனப்படும் இன்சுலின் செயல்திறன் குறைவு நிலை உருவாகிறது. இதற்கு, மிக முக்கியக் காரணமாக இருப்பது, நம்முடைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை.
அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம், பசி, உடல் எடை குறைதல் போன்றவற்றைச் சர்க்கரை நோயின் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் எப்படித் தோன்றுகின்றன?
ரத்தத்தில் சர்க்கரை இயல்பு நிலை என்பது 80 முதல் 140 மி.கி/டெசி லிட்டர். சர்க்கரை நோய் ஏற்பட இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் முக்கியக் காரணம். இதற்கு, உடல்பருமன், மனஅழுத்தம், புகைப்பழக்கம், உடல் உழைப்பு குறைவு போன்றவை காரணங்கள். இவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கக் காரணமாகின்றன.
சிறுநீரகம் 180 மி.கி/டெசி லிட்டர் வரையில் சர்க்கரையை ரத்தத்தில் இருக்க அனுமதிக்கும். 180-க்கும் மேல் செல்லும்போது, அதைச் சிறுநீர் வழியாக வெளியேற்றும். இதனால், சர்க்கரை நோய் வந்தால் முதலில் அதிகமாகச் சிறுநீர் கழிக்கத் தூண்டும். அதிகப்படியான சிறுநீர் வெளியேறுவதால், உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. இதை ஈடுகட்ட தாகம் எடுக்கிறது.
இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் காரணமாக குளுக்கோஸ் செல்களுக்குள் சென்று சேராமல் சிறுநீரகம் வழியாக வெளியேறிவிடுவதால், உடல் இயங்க ஆற்றல் போதாமல் அடிக்கடி பசி எடுக்கிறது. என்னதான் சாப்பிட்டாலும், குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்தாலும் செல்களுக்கு ஆற்றல் கிடைக்கவில்லை என்பதால், உடல் எடை குறைகிறது.
ஸ்வீட்டர்:
காலையில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோயைத் தவிர்க்கலாம்.
டயாபடீஸ் டவுட்
சர்க்கரை நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?
இல்லை. சர்க்கரை நோய்க்கான மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. நீண்ட காலம் எடுத்தாலும் பிரச்னை ஏற்படுத்தாதது. பொதுவாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் போனால், சிறுநீரகப் பிரச்னை வரும். இந்தச் சூழ்நிலையில் உள்ளவருக்கு சர்க்கரை நோய்க்கான மருந்துகளைக் கொடுப்பதில் கவனம் தேவை. இவர்களுக்குத் தரப்படும் சர்க்கரை நோய்க்கான மருந்து, நிலைமையை இன்னும் மோசமாக்கலாம். எனவே, சர்க்கரை நோய் நிபுணரை அணுகி,ஆலோசனை பெற்றுவந்தால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்.
நன்றி : டாக்டர் விகடன் - (01/02/2016

சாட்சி இல்லையென்றால் என்ன? முகாந்திரம் போதுமானது!


சாட்சி இல்லையென்றால் என்ன? முகாந்திரம் போதுமானது!

பழைய வழக்கு தான்...தெரிஞ்சு வச்சிக்குங்க..

ஒருவர் கொலை செய்தார் என்பதை நிரூபிக்க நேரடியாக பார்த்த சாட்சியோ வலுவான ஆதாரங்களோ அவசியம் கிடையாது. கொலையால் யாருக்கு லாபம், அந்த நபர் கொலை செய்வார் என்பதற்கான முகாந்திரம் இருக்கிறதா என தெரிந்து கொண்டாலே போதுமானது. அவ்வாறு இருந்தால், சூழ்நிலை ஆதாரங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அவருக்கு தண்டனை வழங்கலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் இதுதான் திரு பி.எச்.பாண்டியன் அவர்களின் வாதம். 

இதற்கு ஆதாரமாக அவர் சுட்டிக் காட்டியது சுப்ரீம் கோர்ட் 1959 டிசம்பர் 14 அன்று வழங்கிய ஒரு தீர்ப்பு. தீர்ப்பை எழுதியவர் நீதிபதி இதயதுல்லா. பின்னாளில் துணை ஜனாதிபதி ஆனவர். பெஞ்சின் ஏனைய நீதிபதிகள் எம்.தாஸ், எஸ்.கே.சர்க்கார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வழக்கின் சாராம்சம் இங்கே:

மகாராஷ்ட்ர மாநிலத்தின் பூனா நகரில் (இன்று புனே) வசித்தவர் லட்சுமி பாய். பெரும் செல்வந்தர். உறவினர்கள் இல்லை. ஏராளமான சொத்து இருந்தது. பணக்காரர்களுக்கே உரிய உடல் பாதிப்புகள் லட்சுமி பாய்க்கும் இருந்தன. அதனால் அவதிப்பட்டார். சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.

அப்போது ஆனந்த் லாகு என்பவர் லட்சுமி பாய்க்கு அறிமுகம் ஆனார். மருத்துவம் படித்திருப்பதாகவும், உடல் ஆரோக்கியம் குறித்து நிறைய தெரியும் என்றும் லட்சுமி பாயிடம் சொன்னார். சில மருத்துவ யோசனைகளையும் சொன்னார்.

அதன்படி செய்து பார்த்தார் லட்சுமி பாய். ஆனந்த் சொன்னபடியே அவை நன்கு வேலை செய்தன. லட்சுமி பாய் மகிழ்ச்சி அடைந்தார். ஆனந்தை தன்னுடனே இருக்குமாறு கேட்டுக் கொண்டார். பூனாவில் ஆனந்துக்கு தனி வசிப்பிடம் இருந்தாலும், பெரும்பாலான நேரத்தை லட்சுமி பாயுடன் செலவிட்டார்.

தனது உடல் நலத்தில் ஆனந்த் காட்டிய அக்கறை லட்சுமி பாயை கவர்ந்தது. வீடு, தோட்ட நிர்வாகம், கணக்கு வழக்கு போன்ற மற்ற விஷயங்களிலும் வலிய சென்று உதவினார் ஆனந்த். லட்சுமி பாய் நெகிழ்ந்து போனார். வீட்டு நிர்வாகம் மட்டுமின்றி சொத்து விவகாரங்களையும் ஆனந்தை நம்பி ஒப்படைத்தார்.

நீரிழிவு நோயால் அவதிப்பட்ட லட்சுமி பாய்க்கு வேளை தவறாமல் மருந்து மாத்திரைகள் கொடுப்பதுடன் மற்ற வேலைகளையும் கவனித்துக் கொண்டார் ஆனந்த் லாகு. நீரழிவு நோயாளிகளுக்கு போடப்படும் இன்சுலின் ஊசியை லட்சுமி பாய்க்கு நேரம் தப்பாமல் போடவும் தனக்கு தெரிந்த ஒருவரை அமர்த்திக் கொண்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருநாள் லட்சுமி பாயிடம் மெல்ல பேச்சு கொடுத்த ஆனந்த், பம்பாய் நகரில் தனக்கு தெரிந்த ஒரு பெரிய டாக்டர் இருப்பதாகவும், அவரிடம் சிகிச்சை பெற்றால் சீக்கிரம் நீரழிவு நோயில் இருந்து விடுதலை பெறலாம் என யோசனை தெரிவித்தார். லட்சுமி பாய்க்கு அது நல்ல யோசனையாக பட்டது. சம்மதித்தார்.

உடனே ஏற்பாடுகளில் இறங்கினார் ஆனந்த். ”நீங்கள் பம்பாயில் இருக்கும் நாட்களில் இங்கே கவனிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கின்றன. வரி செலுத்துவது போன்ற விஷயங்களை தள்ளிப்போட முடியாது” என்று சொல்லி, சில பேப்பர்களிலும் செக் புத்தகத்திலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

‘நமது நலத்தில்தான் இந்த ஆனந்துக்கு எவ்வளவு அக்கறை’ என்ற பெருமையுடன் லட்சுமி பாய் எல்லா பேப்பர்களிலும் கையெழுத்து போட்டு கொடுத்தார். அந்த பேப்பர்களில் சில லட்சுமி பாய் பங்குகள் வாங்கி வைத்திருக்கும் கம்பெனிகளிடம் டிவிடெண்ட் பெற்றுக் கொள்வதற்கான வாரன்ட் பத்திரங்கள். சில தேதி எழுதப்படாத மொட்டை செக் தாள்கள்.

ஏற்பாடுகள் முடிந்து லட்சுமி பாயுடன் பம்பாய்க்கு ரயில் ஏறினார் ஆனந்த். அப்போதெல்லாம் ரயில்கள் வேகம் கிடையாது. பயண நேரம் அதிகம். பயணத்தின் நடுவிலும் லட்சுமி பாய்க்கு வேண்டிய உணவு கொடுக்க, மருந்து தர, ஊசி போட ஆனந்த் தவறவில்லை.

ஆனால் ரயில் பம்பாய் நகரை அடைந்தபோது லட்சுமி பாய்க்கு சுய நினைவு இல்லை. மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற ஆனந்த், வேறு ஒரு பெயரில் லட்சுமி பாயை அங்கு சேர்த்தார். தொடர்பு முகவரியாக பூனாவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கொடுத்தார். அவர் சொன்னபடி கேட்டது ஆஸ்பத்திரி நிர்வாகம். ஏனென்றால், அந்த ஆஸ்பத்திரியின் நிர்வாகி ஆனந்துடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்.

ரயிலில் வரும்போதே லட்சுமி பாய் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி எடுத்துக் கொண்டார் ஆனந்த். எனவே அவர் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்மணி என ஆனந்த் சொன்னதை ஆஸ்பத்திரி அலுவலர்கள் சந்தேகிக்கவில்லை.

லட்சுமி பாய்க்கு என்ன பிரச்னை, எப்படி நோய் வந்தது, ஏன் மயக்கம் அடைந்தார் என்ற கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்களை சொல்லி குழப்பினார் ஆனந்த்.

இதனால் நோயாளியின் பின்னணி தெரியாமல், அப்போதைக்கு செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.

இன்சுலின் மருந்தும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இன்ட்ரா கேஸ்ட்ரிக் க்ளுகோஸ் ட்ரிப்பும் போடப்பட்டது. 

என்ன செய்தும் நோயாளி மயக்கம் தெளியவில்லை.

எனவே அவர் டயபெடிக் கோமாவில் விழுந்து விட்டதாக டியூட்டி டாக்டர் குறிப்பு எழுதினார். 

ரவுண்ட்ஸ் வந்த பெரிய டாக்டர், குறிப்பை பார்த்ததும் மேற்படி லேடி டாக்டரை அழைத்து, சிறுநீர் பரிசோதனை செய்யாமல் எப்படி டயபெடிக் கோமா என எழுதலாம் என கடிந்தார்.

உடனே யூரின் டெஸ்ட் செய்த லேடி டாக்டர், அதன் ரிசல்ட்டை பெரிய டாக்டரிடம் காட்டினார். அவர் அதை பார்த்து, சிறுநீரில் கொஞ்சம் அசெட்டின் படிந்துள்ளது என்று சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் லட்சுமி பாய் உயிர் பிரிந்தது.

மரணத்துக்கான காரணம் தெரியாததால் ’போஸ்ட் மார்ட்டம் செய்யுங்கள்’ என்று விசிட்டிங் டாக்டர் யோசனை சொன்னார். குறிப்பேட்டில் ‘போஸ்ட்மார்ட்டம் கேட்கப்பட்டது’ என்று மட்டும் பதிவு செய்த லேடி டாக்டர், இறுதி பரிசோதனை முடிவுகளை எழுதாமலே சற்று இடம் விட்டு கையெழுத்து போட்டார். விசிட்டிங் டாக்டரும் அதை வாங்கிப் பார்க்காமல் கிளம்பிவிட்டார்.

இதற்கிடையில் அங்கு வந்த ஆனந்த், தனது எஜமானி மரணம் அடைந்து விட்டதை அறிந்து உடனே கிளம்பினார். டியூட்டி டாக்டர் தடுத்து கேட்டபோது, “அது யாரென்றே எனக்கு தெரியாது. அனாதை பிணத்துக்கு போஸ்ட் மார்ட்டமெல்லாம் எதற்கு? பேசாமல் மார்ச்சுவரிக்கு தள்ளிவிடுங்கள்” என கூறிவிட்டு அவசரமாக அகன்றார். 

நிர்வாகிக்கு தெரிந்தவர் என்பதால் ஆனந்த் சொன்னபடி சடலம் மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டது.

பூனா திரும்பினார் ஆனந்த். பம்பாயில் லட்சுமி பாய் சிகிச்சை பெற்று வருகிறார், சீக்கிரம் பூரண நலம் பெற்று பூனா திரும்புவார் என்று கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் கதை அளந்தார். அவர்களும் நம்பினார்கள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லட்சுமி பாயின் சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று பணமாக்கினார் ஆனந்த். வெள்ளை பேப்பர்களில் கையெழுத்து வாங்கி வைத்திருந்ததால் இது சுலபமாக முடிந்தது.

பல நாட்களாகியும் லட்சுமி பாய் திரும்பவில்லை, ஆனந்தும் பம்பாய்க்கு செல்லவில்லை என்பதை உள்ளூர்வாசிகள் கவைத்தனர். கிசுகிசுக்க தொடங்கினர்.

அதே நேரம் பம்பாய் ஆஸ்பத்திரியில் ஒரு சடலம் நீண்ட நாட்களாக மார்ச்சுவறையில் கேட்பாரற்று கிடந்தது பலரது கவனத்துக்கு வந்தது. 

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எங்கே என விசிட்டிங் டாக்டர் கேட்க, லேடி டாக்டரும் ஆஸ்பத்திரி நிர்வாகியும் முழிக்க, பிரச்னை வெடித்தது. தங்கள் தப்பை மறைக்க இருவரும் அவசரமாக மெடிக்கல் ரிப்போர்ட்டில் திருத்தம் செய்தனர்.

அதற்குள் போலீஸ் மோப்பம் பிடித்து விஷயம் வழக்காக உருவெடுத்தது.

“ஆனந்த் ஆரம்பத்தில் இருந்தே லட்சுமி பாயின் சொத்துக்கள் மீது கண் வைத்திருந்தார். எனவேதான் தன்னை மருத்துவ ஆலோசகராக அறிமுகம் செய்து கொண்டு லட்சுமி பாயின் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டு எஜமானியின் தேவைகளை பூர்த்தி செய்து படிப்படியாக நம்பிக்கையை சம்பாதித்துக் கொண்டபின், அவரே வீட்டு நிர்வாகத்தையும் கையில் எடுத்தார். அதன் பின் அவரே சிறுகச் சிறுக லட்சுமி பாய்க்கு தேவைக்கு மேல் இன்சுலின் மருந்தை ஊசியாக செலுத்தி நோயை உருவாக்கினார்” என்று ஆனந்த் மீது குற்றம் சுமத்தியது போலீஸ்.

அது மட்டுமல்ல. ”வீட்டில் இருக்கும்போதோ அல்லது ரயிலில் பயணம் செய்யும்போதோ அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷ மருந்தை லட்சுமி பாய் உடலுக்குள் ஆனந்த் செலுத்தி இருக்கிறார். அது குறிப்பிட்ட நேரம் கடந்தபின் எந்த டாக்டராலும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ரத்த ஓட்டத்தில் கரைந்துவிடக் கூடிய தன்மை கொண்டது. விஷமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அளவு சற்று அதிகமானாலும் விஷம் அளவுக்கு விளைவை ஏற்படுத்தும் வீரியம் கொண்ட மருந்தாகவும் இருக்கலாம்.

“வீட்டை விட்டு ரயில் நிலையத்துக்கு கிளம்பும்போது லட்சுமி பாய்க்கு ஆனந்த் 2 ஊசிகள் போட்டதாக அவரது வீட்டு வேலைக்கார பெண்மணி சாட்சியம் அளித்திருப்பது இதை ஊர்ஜிதம் செய்கிறது.

”நீரழிவுக்கு தரப்படும் இன்சுலினை அளவுக்கு மீறி லட்சுமி பாயின் உடலில் செலுத்தியதால்தான் அவருக்கு ஹைப்போக்ளைசீமியா என்ற நோய் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக முதலில் டயபெடிக் கோமாவும், பின்னர் திடீர் மரணமும் நிகழ்ந்தது” என போலீஸ் அதிரடியாக குற்றச்சாட்டு வாசித்தது.

ஆனந்த் அலட்டிக் கொள்ளவே இல்லை. ”லட்சுமி பாயின் வீட்டில் வேலை செய்யும் ஆயாவுக்கு காது கேட்காது, அவரால் பேசவும் முடியாது. எனவே அவரது சாட்சியத்தை ஏற்க முடியாது” என்றார். அந்த பெண்மணியை வேலைக்கு சேர்த்தவர் யார் என்பதை சொல்லத் தேவையில்லை.

அடுத்து, “ரயிலில் நான் லட்சுமி பாய்க்கு இன்சுலின் ஊசி போட்டேன் என்பதற்கு எந்த சாட்சியும் கிடையாது. சொல்லப் போனால், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் செலுத்திய 40 யூனிட் இன்சுலினால்கூட லட்சுமி பாய்க்கு மரணம் சம்பவித்து இருக்கலாம்” என்று தனக்கு உதவியாக இருந்த டாக்டர்களையும் மாட்டி விட்டார்.

இப்படியாக போன வழக்கு விசாரணையில் நேரடி சாட்சிகளோ வலிமையான தடயங்களோ இல்லாமல் போலீஸ் தடுமாறியது.

அப்போதுதான் லட்சுமி பாய் மரணத்துக்கு முன்னால் ஆனந்தின் பொருளாதார நிலைமை எப்படி இருந்தது, லட்சுமி பாயின் மரணத்துக்கு பிறகு அது எப்படி மாறியது என்பதை ஒவ்வொரு பாயின்டாக போலீஸ் சேகரித்து கோர்ட்டில் சமர்ப்பித்தது.

சாதாரண மருத்துவ ஆலோசகராக இருந்த ஆனந்த் லாகு அவரது எஜமானியுடன் நெருக்கமான பின் என்னென்ன மாற்றங்களுக்கு ஆளானார், எஜமானியின் மரணத்துக்குப் பின்னர் எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்ற விவரங்களை புலனாய்வு மூலம் சேகரித்து புட்டுப்புட்டு வைத்தது போலீஸ். நோக்கம் இப்படி தெளிவானதும் பல கேள்விகளுக்கு சடசடவென பதில்கள் வந்து விழுந்தன.

இவ்வளவுக்கு பிறகுதான் இந்திய சட்ட வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது.

சாட்சியும் ஆதாரமும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பலாம் என கெட்டவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்த்த தீர்ப்பு அது.

(பதிவு செய்தவர் - ஜெயந்தி சுந்தரமூர்த்தி, அட்வகேட்)

Thanks to : Adv. Dhanesh Balamurugan​

சசிகலா உத்தரவுகள் சட்டப்படி செல்லாது!


சசிகலா உத்தரவுகள் சட்டப்படி செல்லாது!

சென்னை: அ.தி.மு.க.,வில் சசிகலா முறைப்படி கட்சி உறுப்பினர்களின் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தேடுக்கப்படாததால் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலாவின் உத்தரவுகள் சட்டப்படி செல்லாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க., கட்சி விதிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் கூறியதாவது:

அ.தி.மு.க.,வின் கொள்கை மற்றும் சட்ட விதி, 20ன் கீழ், அ.தி.மு.க., பொதுச்செயலரை, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அந்தமான் தீவுகளில் செயல்படும், அ.தி.மு.க.,வின் அனைத்து பிரிவு உறுப்பினர்களின் ஓட்டுகள் மூலம் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

முடிவு எடுக்க முடியாது:

அந்த விதிகளில், பொதுச்செயலரை தேர்தல் இன்றி தற்காலிகமாக நியமிக்கும் அம்சம் இல்லை. எனவே, தற்போது பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா பிறப்பிக்கும் உத்தரவுகள், சட்டப்படி செல்லாது. அவர் கட்சியின் உறுப்பினராக இருந்தால், அது மட்டுமே செல்லும். மாறாக, பொதுச்செயலர் அந்தஸ்தில், எந்த முடிவையும் எடுக்க முடியாது. யாரையும் நீக்கவோ, சேர்க்கவோ முடியாது.

அதேபோல், அவரது அதிகாரப்பூர்வ உத்தரவுகள் எதுவும், கட்சியினரை, கட்சி நிர்வாகத்தை கட்டுப்படுத்தாது. இதுகுறித்து, சட்டரீதியாக அணுகினால், நியமன பொதுச்செயலரின் உத்தரவுகள் செல்லாது என, தீர்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 10.02.2017

ராஜினாமாவை திரும்பப் பெற முடியுமா?


ராஜினாமாவை திரும்பப் பெற முடியுமா?

சட்டம் என்ன சொல்கிறது?

தமிழகத்தின் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், சில நாள்களுக்கு முன் திடீரென்று தனது முதல்வர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

அதுதொடர்பான தனது ராஜிநாமா கடிதத்தையும் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுக்க, அதை அவர் ஏற்றுக்கொண்டும்விட்டார். ஆனால், அடுத்த ஏற்பாடு செய்யப்படும் வரை முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்கும்படி பன்னீர்செல்வத்தை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி, நிர்ப்பந்தப்படுத்தி தன்னிடம் இருந்து ராஜிநாமா கடிதம் பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டைச் சுமத்தினார். இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு கூடியது. அன்று முதல் இன்றுவரை ஒரே பரபரப்புதான்.

இதற்கிடையே, முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த பன்னீர்செல்வம், அந்த ராஜிநாமாவை வாபஸ் பெற முடியுமா என்ற கேள்வி பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இதோ சட்டத்தில் இருக்கும் அதற்கான பதில்…

பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை வாபஸ் பெற முடியாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வர் என்பவர் ஒரு அரசு ஊழியர்தானே. அப்படியென்றால், கீழ்க்கண்ட வழக்கின் தீர்ப்பு பன்னீர்செல்வத்துக்குப் பொருந்தும்தானே?

தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) – ஒரு அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்தக் கடிதத்தை திரும்பப் பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்.

தமிழ்நாடு சார்நிலைப் பணியாளர்கள் விதிகள் விதி 41A-ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்புக் காலம் உள்ள நிலையில், ஒரு அரசுப் பணியாளர் கொடுக்கும் விலகல் கடிதத்தை உடனே உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள கூடாது. 

ஆனால், உயர் அதிகாரிகள் விதி 41(b)-ன்படி, ஒரு அரசு ஊழியர் விலகல் கடிதத்தை கொடுத்து அது ஏற்றுக்கொண்ட பிறகு அந்த கடிதத்தை அரசு ஊழியர் திரும்ப பெறவே முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விதி 41A மூன்று காரணிகளை உள்ளடக்கியது.

(1) மூன்று மாதங்களுக்குக் குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை கொடுக்க வேண்டும். 

(2) அதனை வேலை அளித்த அதிகாரம் உடைய நபர் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

(3) அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்பப் பெறுதல் அறிவிப்பு குறித்து விதி 41A(a)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வது குறித்து தகுதிபெற்ற அதிகாரி குறிப்பிட்ட காலஅவகாசம் அளித்து, அந்தப் பணி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டது குறித்து அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களைக் குறிப்பிட்டு ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 

அதிகாரம் பெற்ற நபர், பணி விலகல் குறித்து எந்தவொரு உத்தரவையும் அறிவிப்புக் காலத்துக்குள் பிறப்பிக்கவில்லை என்றால், விதி 41A(c)-ன்படி அந்தப் பணி விலகல் கடிதம் ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும்.

பணி விலகல் குறித்து அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்குப் பின்னர், அந்தப் பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவைப் பிறப்பிப்பதற்குக் காலதாமதம் ஏற்பட்டாலும், அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது. 

எனவே, ஒரு அரசு ஊழியர் பணியை விட்டு விலகுவதாக ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர், 90 நாட்களுக்குள் அந்தக் கடிதத்தை திரும்பப் பெற மனு கொடுத்தால், அந்த அரசு ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. (W.P. NO - 19361/2014 DT - 16.06.2016, G. Parameshwari Vs Register, Chennai high Court and Others (2016-5-CTC-161).

ஆக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஏற்பாடு செய்யலாம்.

-    வழக்கறிஞர் சி.பி. சரவணன் - 9840052475

நன்றி : தினமணி நாளிதழ் - 10.02.2017

Thursday, February 9, 2017

அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை ‘எச்சரிக்கை மணி’ அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள ‘மாஸ்ட் செல்கள்’.

எதிர்ப்புப் புரதம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? ‘லேன்ட்-லைன்’ போன் வேலை செய்யும் மெக்கானிஸம் போன்றது இது. லேன்ட் லைன் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே ‘நரம்பு கேபிள்’தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறியும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழு வதும் அரிப்பை ஏற்படுத்தும்.

குளிரும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி… இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

வயதானால் வரும் அரிப்பு

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக்கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

மனப் பிரச்சினைகள்

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ‘ஹிஸ்டீரியா’ என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

‘உடம்பு அரித்தால் ஒரு ‘அவில்’ போட்டுக்கோ’ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.

-கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் -  04.10.2014

Wednesday, February 8, 2017

பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத சில உண்மைகள்!

No automatic alt text available.

பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கு தெரியாத சில உண்மைகள்!


குழந்தைகளை யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் புதிதாக பிறந்த குழந்தைகளைப் பார்த்தாலே பலருக்கும் அக்குழந்தையைத் தூக்கி கொஞ்ச வேண்டுமென்று தோன்றும். ஆனால் பிறந்த குழந்தையைக் குறித்து பலருக்கும் ஒருசில விஷயங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் தெரியாது.
ஆம், என்ன தான் பல கஷ்டங்களைத் தாங்கி பத்து மாதம் குழந்தையை சுமந்து பெற்றாலும், அத்தாய்க்கும் பிறந்த குழந்தையைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்காது. அதிலும் முதல் குழந்தை என்றால் சிறுதுளி கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு பிறந்த குழந்தையைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகளே இருக்காது. மேலும் இவர்களுக்கு பிறந்து 3 மாதங்களில் தான் கண்ணீர் சுரப்பிகள் வளரவே ஆரம்பிக்கும். வேண்டுமானால் பிறந்த குழந்தையின் அழுகையைக் கவனியுங்கள். அவர்களுக்கு கண்ணீரே வராது!
பிறந்த குழந்தை தாயிடம் வந்ததும் தன் அழுகையை நிறுத்திவிடும். எப்படியெனில் கருவில் இருக்கும் போதே, தன் தாயின் குரல் மற்றும் ஸ்பரிசம் நன்கு தெரியும்.
பிறந்த குழந்தையால் 20 அடி தூரத்தில் இருப்பதை மட்டுமே காண முடியும். சராசரி மனிதனால் 600 அடி வரையுள்ள அனைத்தையும் காண முடியும்.
ஆய்வுகளில் பிறந்த குழந்தையால் மனித முகத்தை நன்கு அடையாளம் காண முடியும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பிறந்த குழந்தைகளுக்கு பொம்மைகளை விட, ஒருவரின் முகத்தைக் காண பிடிக்கும். அதனால் தான் பிறந்த குழந்தைகள் ஒருவரைக் காணும் போது புன்னகைக்கின்றன.
மற்றொரு முக்கியமான விஷயம் பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும். அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் அவர்கள் கவரப்படுகின்றனர்.
சராசரி மனிதனின் உடலில் 206 எலும்புகள் இருக்கும். ஆனால் பிறந்த குழந்தைக்கோ ஆரம்பத்தில் 270 எலும்புகள் இருக்கும். அவர்கள் வளர வளர மண்டை ஓடு மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் உள்ள எலும்புகள் இணைந்து 206 எலும்புகளாகின்றன.
குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் தலை மற்றும் சருமத்தில் மென்மையான முடிகள் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு சில வாரங்களில் அந்த முடி தானாக உதிர்த்துவிடும். இருப்பினும் தலையில் உதிர்ந்த முடிகள் அடுத்த சில வாரங்களில் நன்கு வளர ஆரம்பிக்கும்.
போல்ட் ஸ்கை » தமிழ் » மகப்பேறு » Baby - 08.02.2016

குடும்பத்தில் ஒருவருக்கே அரசு வேலை

Image may contain: text

குடும்பத்தில் ஒருவருக்கே அரசு வேலை
நமது நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அரசு வேலையில் இருப்பவர்கள் இன்னொரு அரசு ஊழியரையே திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால், அந்தக் குடும்பம் வசதியாக இருக்கிறது. மேடு மேலும் மேடாகிறது. பள்ளம் பள்ளமாகவே இருக்கிறது.
இந்த சூழ்நிலை மாற வேண்டுமென்றால், ஒரு அரசு ஊழியர், இன்னொரு அரசு ஊழியரை மணக்கக் கூடாது. 
மணந்தே ஆக வேண்டும் என்று விரும்பினால், அவர்களில் யாராவது ஒருவர் தனது அரசு உத்தியோகத்தை ராஜினாமா செய்துவிட வேண்டும்.
இதனால், பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பணம் ஒரே இடத்தில் சேராது. இது எனது தனிப்பட்ட கருத்து.
இதனை அரசாங்கம் பரிசீலனை செய்யவேண்டும்.
செல்வம் பழனிச்சாமி -09.08.2015

அரசுக்கு மனு அனுப்பி விட்டு மறுநாளே வழக்கு தொடுப்பதா?


அரசுக்கு மனு அனுப்பி விட்டு மறுநாளே வழக்கு தொடுப்பதா?

சென்னை: பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்கவும், கல்வி நிலையங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளை மூடவும் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனுவில், 'பொது இடங்களில் புகை பிடிக்கவும், கல்வி நிலையங்கள் அருகே சிகரெட் விற்கவும் விதிக்கப்பட்ட தடையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்; புகை பிடிப்பவர்களுக்கு என, தனியாக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும். விதிமுறை, சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜரானார். 

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சட்ட விதிகள் மீறப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும், தாக்கல் செய்யப்படவில்லை. சட்டம் அமலில் இருப்பதாகவும், மீறல் நடப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். 

ஜன., 30ல், 'இ - மெயில்' மூலம் அரசுக்கு மனு அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார். மறுநாளே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அதற்கு முன், அரசுக்கு எந்த மனுவும் அனுப்பவில்லை. இத்தகைய வழக்குகளில் வேறு என்ன கூற முடியும்; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.02.2017

விதிமீறல் கட்டடங்களை உள்ளாட்சிகளே இடிக்கலாம்


விதிமீறல் கட்டடங்களை உள்ளாட்சிகளே இடிக்கலாம் 

 டி.டி.சி.பி. (Directorate of Town & Country Planning) அதிரடி உத்தரவு
விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை, உள்ளாட்சி அமைப்புகளே இடிக்கலாம்' என நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., உத்தரவிட்டு உள்ளது. 

தமிழகத்தில், சென்னையில் மட்டுமின்றி, பிறநகரங்களிலும், விதிமீறல் கட்டடங்கள் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றன. நகரமைப்பு துறையின் நிர்வாக குளறுபடியால், இந்த கட்டடங்கள் மீது, முறையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளன.

நடவடிக்கை : 
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில் உள்ளது போல, நகரமைப்பு துறையிலும் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது. 

அந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில், நகர், ஊரமைப்புத் துறை ஆணையராக பொறுப்பு வகிக்கும், சம்பு கல்லோலிகர் பிறப்பித்துள்ள உத்தரவு: 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட திட்ட குழுமம் அல்லது நகர், ஊரமைப்பு மண்டல அலுவலக அதிகாரிகள், சென்னை மாநகராட்சி சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்ட விதிகள் மற்றும் நகரமைப்பு சட்ட பிரிவு, 56, 57ன்படி, 'சீல்' வைத்தல், இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். 

சுற்றறிக்கை : 

அதேபோல, ஊராட்சி பகுதிகளில் கட்டப்படும், விதிமீறல் கட்டடங்கள் மீது, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், தமிழ்நாடு ஊராட்சி கட்டடங்கள் சட்டத்தின் படி, அந்தந்த ஊராட்சிகளே நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. 

இந்த உத்தரவானது சுற்றறிக்கையாக, நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர், பேரூராட்சிகள் இயக்குனர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவாக விதிமீறல் கட்டடங்கள் குறித்து புகார்கள் வந்தால், நகரமைப்பு துறையின் பொறுப்பு என, உள்ளாட்சி அமைப்புகள் ஒதுங்கி வந்தன. தற்போதைய புதிய உத்தரவால், இனி, உள்ளாட்சி அமைப்புகள் ஒதுங்க முடியாது; நேரடியாக நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 07.02.2017