குன்ஹா - குமாரசாமி தீர்ப்புகள்:உச்ச நீதிமன்றம் அலசல்
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை விடுதலை செய்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தர வில் இருந்த குளறுபடிகளை, உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.
அதன் விபரம்:
* ஆந்திர மாநிலம், ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் இருந்து, விவசாயம் மூலம், 52.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாக, ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், 5.78 லட்சம் ரூபாயாக குறிப்பிடப்பட்ட வருமானத்தை பரிசீலித்த சிறப்பு நீதிமன்றம், விவசாய வருமானத்தை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியது.
ஆனால், ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை அப்படியே ஏற்று, விவசாய வருமானத்தை, 52.50 லட்சம் ரூபாய் என, கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது
* சாட்சியங்களை முழுமையாக புறக்கணித்த தோடு மட்டுமல்லாமல், வருமான வரி கணக்கு மற்றும் உத்தரவு, குற்றவியல் நீதிமன்றத்தை தானாக கட்டுப்படுத்தாது என்றாலும், அதை யும், உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது; அது சரியல்ல
* வங்கி கடன்கள் உள்ளிட்ட கடன் தொகையை, வருமானமாக உயர் நீதிமன்றம் எடுத்துள்ளது. வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப் பட்ட கடன்களை, தவறுதலாக கூட்டி, 24.17 கோடி ரூபாயாக, உயர் நீதிமன்றம் உயர்த்தி காட்டியுள்ளது. ஆனால், சரியான கணக்குப்படி பார்த்தால், 10.67 கோடி ரூபாய் தான் இருக்க வேண்டும்
* அரசு தரப்பு கூறியுள்ள, 5.99 கோடி ரூபாயை கழித்த பின், 18.17 கோடி ரூபாய் வருமானமாக, உயர் நீதிமன்றம் காட்டியுள்ளது. இதன்மூலம், கடன் தொகை முழுவதையும் வருமானமாக, உயர் நீதிமன்றம் உயர்த்தி காட்டி தவறு செய்துள்ளது; இதை ஏற்க முடியாது
* ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள், சட்டப்படியான வருமானம் இல்லை என்பதால், அதை வருவாய் ஆதாரமாக, லஞ்ச ஒழிப்புத் துறை காட்டவில்லை. நகைககள், ரொக்கம், 'டிமாண்ட் டிராப்ட்' மற்றும்வெள்ளி பொருட்கள், பட்டு சேலைகள் என பரிசுப் பொருட் கள் வந்ததாக கூறப்பட்டுள்ளது
* மொத்தம், 1.26 கோடி அளவுக்கு பரிசுப் பொருட்கள் வந்ததாக, கூறப்பட்டுள்ளது. ஆனால், 1.5 கோடி ரூபாய் அளவுக்கு, பரிசுப் பொருட்கள் பெற்றதாக, ஜெயலலிதாவுக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்தாலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. இந்தப் பரிசுப் பொருட்களை, ஜெயலலிதாவின் வருமானமாக கருதி, அதற்கு வரி விதிக்கப்பட்டு, வரியும் ஜெயலலிதாவால் செலுத்தப்பட்டுள்ளது. இதை, சிறப்பு நீதிமன்றம் கவனித்துள்ளது.
கட்சி தொண்டர்கள் அளித்த சாட்சியங்களை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது; பரிசு பொருட்கள் மூலம் வருமானம் வந்ததாக, ஜெயலலிதா கூறியதையும், சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது
* சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, எந்த வழியிலும் நிராகரிக்க முடியாது. ஆனால், அதற்கு மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றம், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வந்ததையும், ஜெயலலிதா தரப்பில்முன்வைக்கப்பட்ட வாதத் தையும் ஏற்றுக் கொண்டுள்ளது
* சிறப்பு நீதிமன்றத்தின் முடிவை நிராகரிக்கும் வகையில், ஏற்றுக் கொள்ளும் வகையிலான காரணத்தை, உயர் நீதிமன்றம் கூறவில்லை. இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலிக்க, உயர் நீதிமன்றமும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை
* 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர்.,' நிறுவனங்களுக்கான வருவாயாக, கூடுதல், நான்கு கோடி ரூபாயை உயர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டதற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சந்தாதாரர்களிடம் இருந்து, டிபாசிட் திட்டமாக, 14.10 கோடி ரூபாய் சந்தா தொகையாக வந்ததாக, ஜெயலலிதா தரப்பில் கூறியதை, சிறப்பு நீதிமன்றம் நம்பவில்லை. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்ட பின் தான், இந்த டிபாசிட் திட்டம் என்கிற கதை வந்ததாக, சிறப்பு நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த விஷயங்களுக்குள் எல்லாம், சிறிதளவே உயர் நீதிமன்றம் சென்றாலும், ஜெயா பப்ளி கேஷன்ஸ் நிறுவனத்தின் வருமானமாக, கூடுதல், நான்கு கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.
எங்களைப் பொறுத்தவரை, போதிய ஆதாரங் களை சிறப்பு நீதிமன்றம் பரிசீலித்து, முடிவுக்கு வந்துள்ளது. எனவே, ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு, கூடுதலாக, நான்கு கோடி ரூபாயை வருமானமாக எடுத்து கொள்ள, உயர் நீதிமன்றம் அனுமதித்ததில் நியாயமில்லை
* சூப்பர் டூப்பர், 'டிவி' நிறுவனத்துக்கு, ஒரு கோடி ரூபாய் வருமானம் வந்ததாக கூறியதை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது; ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளது.
இதற்காக, உயர் நீதிமன்றம் பரிசீலித்த ஆதா ரத்தை, எங்களால் ஏற்க முடியவில்லை. எனவே, ஒரு கோடி ரூபாய் வருமானத்தை, ஏற்க முடியாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் –
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.02.2017