disalbe Right click

Tuesday, February 28, 2017

ஒரே சமயத்தில் 100 மெயில்கள் ஃபார்வர்டு செய்ய


ஒரே சமயத்தில் 100 மெயில்கள் ஃபார்வர்டு செய்ய

ஒருநாளைக்கு நிறைய மெயில் வரும். எல்லாத்தையும் படிக்கக்கூட நேரமில்லாம இருப்போம். சில சமயங்கள்ல முக்கியமான மெயில் எல்லாம் லேபிள் பண்ணிகூட வைப்போம். ஆனா திடீர்னு ஒருநாள் வேற ஆபீஸ் மாறும் சூழல் வருது அல்லது புதுசா சேர்ந்திருக்குற சக ஊழியருக்கு படிக்க கொடுக்க வேண்டிய நோட்ஸ் 50 மெயில ஒண்ணு ஒண்ணா ஃபார்வர்டு பண்ணுறது கஷ்டம். இந்தப் பிரச்னைக்கு ஜி-மெயில்ல ஒரு ஆப்ஷன் இருக்கு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆமாம் பாஸ். ஜி-மெயில்ல நாலஞ்சு மெயில செலக்ட் பண்ணிட்டு ஃபார்வர்டு ஆப்ஷன் எங்கனு தேடிட்டு இருக்கீங்களா? அதுக்கு தீர்வு இருக்கு. அதுக்கு நீங்க செய்ய வேண்டியுதெல்லாம் சிம்பிளான விஷயம் தான். உங்களோட க்ரோம் ப்ரெளசர்ல செட்டிங்ஸ் போங்க. அதுல இருக்குற எக்ஸ்டென்ஷன்ல ''மல்டி ஃபார்வர்டு ஃபார் ஜிமெயில்னு'' டைப் பண்ணுங்க. 
கீழ இருக்கிற ஸ்க்ரீன் ஷாட்ல இருக்குற ''மல்டி ஃபார்வர்டு ஃபார் ஜி-மெயில்'' எக்ஸ்டென்ஷன இன்ஸ்டால் பண்ணுங்க.  அதனை ரன் பண்ணா நம்மோளோட ஜிமெயில் யூஸ் பண்ண ஆக்ஸஸ் கேட்கும். அதை அனுமதித்தால் போதும். 
பிறகு உங்கள் கணக்கிலிருந்து நிறைய மெயிலை செலக்ட் செய்யுங்கள். இப்போது ஒரு ஃபார்வர்டு ஐகான் உங்களது டேப்பில் தோன்றியிருக்கும். அதனை க்ளிக் செய்தால் இத்தனை மெயில்களையும் யாருக்கு அனுப்ப வேண்டும் என கேட்கும். அதில் நீங்கள் அனுப்ப விரும்பும் மெயில் ஐடியை கொடுத்தால் அத்தனை செய்திகளும் அந்த ஐடிக்கு ஒரே க்ளிக்கில் சென்றுவிடும்.
இதில் 100 மின்னஞ்சல்களை தான் ஒரே சமயத்தில் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. ஒன்று ஒன்றாக அனுப்புவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்கின்றனர் இந்த எக்ஸ்டென்ஷனை பயன்படுத்துபவர்கள். இந்த வசதி கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நேரத்தை மிச்சப்படுத்தும் 
ஸ்டெப் 1:
மெயில்

ஸ்டெப் 2:
மல்டி ஃபார்வர்டு

ஸ்டெப் 3:

மல்டி ஃபார்வர்டு

ஸ்டெப் 4:

மல்டி ஃபார்வர்டு

ஜி-மெயிலில் இருக்கும் இந்த வசதி, உங்கள் அலுவலக மெயிலுக்கு பொருந்துமா ?
உங்கள் அலுவலக டொமைனில் உள்ள ஐடி ஜி-மெயிலாக இருந்தால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த விஷயத்தில் கவனிக்க வேண்டியது தவறான எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்து உங்கள் தகவல்களை இழக்காமல் இருப்பது தான். எக்ஸ்டென்ஷன்கள் எல்லாமே மூன்றாம் நபர் அப்ளிகேஷன்கள் தான் என்றாலும் அதில் நல்ல ரிவியூ, ரேட்டிங் உள்ள எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்துங்கள்.
ஜி-மெயிலின் இன்னோரு போனஸ் ட்ரிக்:
சில பேரோட ஜி மெயில் ஐடில டாட் இருக்கும். உதாரணமா yourname.lastname@gmail.com இப்படினு ஒரு மெயில் ஐடி வைச்சிருக்கலாம். இனிமே நீங்க யார்கிட்டயும் இந்த டாட் அழுத்தி சொல்லணும்குற அவசியம் இருக்காது. இ-மெயில் ஐடிகளில் டாட் இருப்பது காலம் காலமாக இருக்கும் விஷயம் தான். இதில் என்ன புதியது என்றால் உங்கள் மெயில் ஐடிக்கு யார் வேண்டுமானாலும் டாட் வைத்தோ அல்லது வைக்காமலோ அல்லது வேறு ஒரு இடத்தில் டாட் வைத்தோ அனுப்ப முடியும். இதில் எப்படி அனுப்பினாலும் உங்கள் மெயிலுக்கு  தான் வரும்.

நன்றி : விகடன் செய்திகள் - 28.02.2017

கைதியை பிரச்சாரம் செய்வத்ற்காக விடுவிக்க முடியாது!

Image may contain: text

கைதியை பிரச்சாரம் செய்வத்ற்காக விடுவிக்க முடியாது!

தேர்தலில் போட்டியிடும் கைதியை பிரசாரத்துக்காக விடுவிக்க முடியாது!

புதுடில்லி: 'சிறையில் இருப்பவர், தேர்தலில் போட்டியிட உள்ள உரிமையை காரணம் காட்டி, பிரசாரம் செய்வதற்காக அவரை சிறையில் இருந்து விடுவிக்க உரிமை கோர முடியாது' என, டில்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 'குவாமி ஏக்தா தள்' அமைப்பின் தலைவரும், முன்னாள் கொள்ளைக்காரருமான, முக்தார் அன்சாரி, சமீபத்தில், பகுஜன் சமாஜ் கட்சியுடன், தன் கட்சியை இணைந்து கொண்டார்.

உ.பி.,யின் மாவ் சதார் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக உள்ள முக்தார் அன்சாரி, பா.ஜ., - எம்.எல்.ஏ., கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் தற்போது நடந்து வரும் சட்டசபை தேர்தலில், மாவ் சதார் தொகுதியில் இருந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக, அவர் போட்டியிடுகிறார்.

சிறையில் இருந்தபடியே, வேட்பு மனு தாக்கல் செய்த அவர், பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, 'பரோல்' கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இதை விசாரித்த கீழ் கோர்ட், அவருக்கு பரோல் அளித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, தேர்தல் கமிஷன், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த, டில்லி ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

சிறையில் இருப்பவர், தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது; ஆனால் அந்த உரிமையை காரணம் காட்டி, பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, சிறையில் இருந்து விடுவிக்கும் உரிமையை கோர முடியாது.

வழக்கின் தன்மைக்கு ஏற்பவே, பரோல் வழங்குவது குறித்து கோர்ட் முடிவு செய்யும். அதனால், அன்சாரிக்கு கீழ் கோர்ட் அளித்துள்ள பரோல் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 27.02.2017

மறுக்கப்படாத சங்கதிகள் ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகளாக கருதப்படும்


மறுக்கப்படாத சங்கதிகள் 
ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகளாக கருதப்படும்

5643 - மறுக்கப்படாத சங்கதிகள், ஒப்புக் கொள்ளப்பட்ட சங்கதிகளாக கருதப்படும், அ. வ. எண். 313 / 2011, 06.01.2017, நன்றி மாண்பமை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜெயங்கொண்டம்
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wd2V2RWRHVVNKUlk/view?usp=sharing

நன்றி : Mr. A Govindaraj Tirupur

ஏலத்தில் சொத்து வாங்குவது சரியா?


ஏலத்தில் சொத்து வாங்குவது சரியா?
வங்கிகளின் முக்கியமான நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்குக் கடன் தருவதாகும். பல வகைகளில் வங்கிகள் கடன்கள் வழங்குகின்றன. விவசாயக் கடன், கல்விக் கடன், தொழில்முனைவோர் கடன், வீடு கட்டக் கடன் என மக்களின் பல தேவைகளை முன்னிட்டுக் கடன் தருகின்றன. அந்த வகையில் ஒன்று சொத்துக்கு இணையான அடமானக் கடன்.
பெரும்பாலும் பல்வேறு தேவைகளை முன்னிட்டு இந்தக் கடன்களை வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். நிலத்தின் பெயரிலோ நிறுவனம் அல்லது வீட்டின் பெயரிலோ இந்தக் கடன்கள் வாங்கப்படும். இம்மாதிரியான கடன்களுக்கு ஒழுங்காகத் தவணைத் தொகை கட்ட முடியாது போனால் உரிய காலக் கெடுக்குப் பிறகு வங்கிகள் அந்தச் சொத்தைக் கையகப்படுத்தும்.
இந்த மாதிரி கையகப்படுத்தப்படும் சொத்துகள் முறையான சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு ஏலத்துக்கு விடப்படும். ஏலத்துக்கு வரும் வீடுகள், நிலம், நிறுவனங்களை ஏல முறையில் வங்கிகள் விற்பனை செய்து தங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை எடுத்துக்கொள்ளும். இது மட்டுமல்லாது வீடு கட்டக் கடன் வாங்குபவர்களும் மாதத் தவணைகள் கட்டத் தவறும்போது உரிய காலக் கெடுவுக்குப் பிறகு வீடுகளை வங்கிகள் கையகப்படுத்தும். இது பொதுவான நடைமுறை.
ஜப்தி நடைமுறை
பொதுவாக ஒரு சொத்தின் பேரில் கடன் வாங்கிவிட்டு கடன் தவணை கட்டத் தவறினால் உடனடியாக வங்கிகள் அந்தச் சொத்தைக் கையகப்படுத்தாது. கடன்தாரர் கடனைத் திருப்பிச் செலுத்த உரிய அவகாசம் அளிக்கும். அதன் பிறகும் அவர் கட்டத் தவறும்பட்சத்தில்தான் கடனில் இருக்கும் அந்தச் சொத்தைக் கையகப்படுத்தும்.
அதற்கான நடைமுறை என்னவென்றால் முதலில் சட்டரீதியான அறிவுறுத்தலைக் கொடுப்பார்கள். அதன் பிறகும் தோராயமாக 60 நாட்கள் கடன்தாரர் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் கொடுக்கப்படும். பிறகு குறிப்பிட்ட அந்தச் சொத்தை அடையாள ஜப்தி (symbolic possession) எடுப்பார்கள். இதன் பிறகு ஒரு மாத கால அவகாசத்தில் வீட்டை வங்கிகளால் ஏலத்துக்குக் கொண்டு வர முடியும்.
இதில் இரு முறைகள் இருக்கின்றன. சில வங்கிகள் அடையாள ஜப்தி எடுத்து முடித்ததும், ஏலத்தில் சொத்தை விற்றுவிடுகின்றன. அதாவது அதன் பிறகு சட்டரீதியில் முழுமையாக அந்த வீட்டை ஜப்தி செய்வதில்லை.
உதாரணமாகக் குறிப்பிட்ட அந்தச் சொத்து, குத்தகையில் இருக்கின்றதென்றால், குத்தகைதாரரை வெளியேற்றி, சொத்தை ஏலத்தில் எடுத்தவரிடம் வங்கிகள் ஒப்படைக்க வேண்டும்.
இதைச் சில வங்கிகள் செய்வதில்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வங்கிகள் ஜப்தி நடவடிக்கையைச் செய்து தருகின்றன.
ஏல நடைமுறை

சொத்தை ஜப்தி செய்த பிறகு பத்திரிகை விளம்பரங்களின் வழியாக ஏலத்துக்கு வங்கிகள் அழைப்பு விடுக்கும். ஏலத்தில் பங்குகொள்ள முன் தொகை கட்ட வேண்டும். ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியும். முன்பு நேரடியான ஏல முறை இருந்துள்ளது. இதில் ஏலதாரர்கள் ஏலத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் சூழல் இருந்தது.
அதாவது ஒரு ஏலதாரர் அந்தச் சொத்தை வாங்க விரும்பும்போது மற்ற ஏலதாரர்களை அவர் விலகிக்கொள்ளச் சொல்ல வாய்ப்புள்ளது. இது வங்கிகளுக்குப் பாதகம். 
அதனால் இ-ஏல முறை  (e-Auction) இப்போது நடைமுறை உள்ளது.
இ-ஏல முறைக்காக வங்கிகள் தனியான இணைய நுழைவு முகவரிகளை உருவாக்கியுள்ளன. அதன் வழியாக ஏலதாரர்கள் ஏலத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஏலதாரர்கள் வங்கிகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் தங்கள் இடத்தில் இருந்தபடியே ஏலத்தில் கலந்துகொள்ளலாம். இந்த முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.
ஏலத்தில் சொத்தை வாங்கியவர்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தொகையைச் செலுத்த வேண்டும். அதைக் கட்டத் தவறினால் அந்த ஏலம் ரத்துசெய்யப்பட்டு மீண்டும் அந்தச் சொத்து ஏலத்துக்கு விடப்படும்.
ஏலத்தில் வரும் சொத்தை வாங்கலாமா?
ஏலத்துக்கு வரும் சொத்துக்கு எதிராகத்தான் வங்கிகள் கடன் அளித்திருக்கும். அதனால் அந்தச் சொத்துக்குக் கடன் அளிக்கும்போதே வங்கிகள் அந்தச் சொத்து குறித்துத் தீர விசாரித்து சட்ட ஆலோசனையும் வாங்கியிருக்கும். அந்தச் சொத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் கடனே வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
வில்லங்கச் சான்றிதழ் எல்லாம் வாங்கப்பட்டிருக்கும். புதிததாக ஒரு சொத்தை வாங்கும்போது இதையெல்லாம் நாம்தான் தேடிச் சேகரிக்க வேண்டும். ஏலத்துக்கு வரும் சொத்தில் இதையெல்லாம் வங்கிகள் ஒழுங்காகச் செய்திருக்கும். அதனால் நமக்கு அலைச்சலும் பணமும் மிச்சம்.
இரண்டாவது வங்கிகள் அதிக லாபத்துக்குச் சொத்தை விற்க நினைக்காது. சொத்துக்கான விலை நியாயமானதாகத்தான் இருக்கும். சந்தையில் இருக்கும் நில மதிப்பைக் காட்டிலும் ஏலத்துக்கு வரும் சொத்தின் மதிப்பு சற்றுக் குறைவானதாகவே இருக்கும் எனச் சொல்லலாம்.
ஏலத்தில் ஒரு சொத்தை வாங்கும்போது அது வெளிப்படையான பரிவர்த்தணையாக இருக்கும். இதில் கள்ளப் பணம் புழங்க வாய்ப்பில்லை. அதனால் நாட்டின் வருவாய்க்கு நன்மை பயக்கும்.
தி தமிழ் இந்து நாளிதழ் - 27.02.2016

Sunday, February 26, 2017

மூல நோய்க்கு முடிவு கட்டுவோம்!


மூல நோய்க்கு முடிவு கட்டுவோம்!

தமிழகத்தில், நகரங்களில் மட்டுமல்லாமல், பட்டி தொட்டியெங்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஒரு நோய் விளம்பரம் செய்யப்படுகிறது என்றால், அது ‘மூல’நோய்தான். ஆனாலும் இந்த நோய் வந்தவர்களில் அநேகம் பேர் வெளியில் சொல்ல கூச்சப்பட்டு, ஆரம்பக் கட்டத்தில் சிகிச்சை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் ஆசனவாயில் வலி, வீக்கம், ரத்தப்போக்கு ஏற்பட்டு, சர்ஜரி செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். 

40 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஆசனவாயில் மூன்று பிரச்னைகள் புறப்படுகின்றன. ஒன்று, மூலம் (Piles). அடுத்தது, ஆசனவாய் வெடிப்பு(Fissure). மூன்றாவது, பௌத்திரம் (Fistula). மூன்றில் முக்கியமானது மூலநோய். சாதாரணமாக, உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. இவை சிரைக் குழாய்களில் ரத்தம் தேவையில்லாமல் தேங்கி நிற்பதைத் தடுக்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே அமையப்பெறவில்லை. 

இதனால் அவற்றில் சாதாரணமாகவே புவி ஈர்ப்பு விசை காரணமாக அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த அழுத்தம் கொஞ்சமே அதிகமானால்கூட அவற்றில் ரத்தம் தேங்கி, சிறிய பலூன் மாதிரி வீங்கிவிடும். இப்படியான ரத்தக் குழாய் வீக்கத்தைத்தான் ‘மூலநோய்’ என்கிறோம். இந்த வீக்கம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல்தான் முக்கியமான காரணம். 

மலச்சிக்கலின்போது கழிவை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும். ஆண்களிடம் காணப் படும் சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூலநோய் உண்டாகிறது. வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடல் புற்றுநோய் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும். 

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் பரம்பரை காரணமாக  இந்த ரத்தக் குழாய்கள் துணி தைக்கும் பருத்தி நூல்போல மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். 

உடல் பருமனாக இருப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காலில் சிரை வீக்கம் (Varicose veins) உள்ளவர்கள், டிரைவர் போன்று உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், கண்டக்டர் போன்று அதிக நேரம் நின்றுகொண்டே இருப்பவர்கள்... மூலத்தை எதிர்கொள்வோர் பட்டியலில்  முன்னணியில் இருக்கிறார்கள். மூலநோயில் வெளி மூலம், உள் மூலம் என இரண்டு வகை உண்டு. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்திருப்பது ‘உள் மூலம்’; வெளிப்புறத்தில் தோன்றுவது ‘வெளி மூலம்’. இரண்டாவதாகச் சொன்னதைக் கையால் தொட்டுப் பார்த்தே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் உள் மூலம் அப்படியில்லை. 

இது ஏற்பட்டால் என்ன நடக்கும்? 

மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் சொட்டுவது அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படுவது இதன் ஆரம்ப அறிகுறி.  சில வாரங்களில் அல்லது மாதங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பிறகு, ஆசன வாயில் லேசான வீக்கம் தெரியும். ஆசனவாயில் வீக்கமுற்ற ரத்தக் குழாய்கள் அங்குள்ள சதையோடு வெளியே தள்ளப்படுவதால் இந்த வீக்கம் தோன்றுகிறது. மலம் கழித்த பிறகு, இதை உள்ளே தள்ளிவிட்டால், மறைந்துவிடும். 

சிலருக்கு இந்த வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பும், வலியும் தினமும் தொல்லை தரும். இதனால் மலம் கழிக்க ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி என்று சொல்வது இதற்கு ஏகப்பொருத்தம். 

சிலருக்கு ஆசனவாயில் கண்ணாடியை வைத்துக் கீறியது போல் வெடிப்புகள் (Anal fissure) இருக்கும். அல்லது அந்த இடம் சுண்டுவிரல்கூட நுழைய முடியாதபடி சுருங்கி இருக்கும். அப்போதும் இந்த மாதிரி ஒரு கொடுமையான வலி மணிக்கணக்கில் படுத்தி எடுக்கும். இவர்கள் நம்பர் டூ போவதற்கே பயப்படுவார்கள். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

சாதாரணமாக, 40 வயதைக் கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அந்த வயதுக்காரர்கள் ஆண்டுக்கு ஒருமுறை குடும்ப டாக்டரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் பலரும் இதை அலட்சியப்படுத்திவிடுகின்றனர். எந்த ஒரு நோய்க்கும்  பல டெஸ்ட்டுகள் எடுக்கவேண்டும் என்று சொல்லப்படும் இந்தக் காலத்திலும், மூலத்துக்கு மட்டும் எந்த டெஸ்ட்டும் தேவையில்லை! நோயாளியின் ஆசனவாயில் டாக்டர் விரலால் பரிசோதித்துப் பார்த்துத்தான் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியும். 

மூலம் இருக்கும் இடம், அளவு, நிலைமை இந்த மூன்றும் துல்லியமாகத் தெரிந்தால்தான் இதற்கு சரியான சிகிச்சையைக் கொடுக்க முடியும். அதற்கு ‘பிராக்டாஸ்கோப்’ என்ற கருவியை ஆசனவாய்க்குள் நுழைத்து மூலத்தை டாக்டர் நேரில் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகுதான் சிகிச்சை!

உள் மூலத்தை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளது மருத்துவம். மலம் கழிக்கும்போது ரத்தம் வருவது முதல் நிலை. ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றுவதும் உள்ளே மறைந்துகொள்வதும் இரண்டாம் நிலை. வீக்கம் நிரந்தரமாகிவிடுவது மூன்றாம் நிலை. வீக்கத்தில் புண், சீழ் ஏற்படுவது நான்காம் நிலை.

மூலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் மருந்து, மாத்திரை, களிம்பு மூலமே சரி செய்துவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொண்டால், மூலநோயும் டாட்டா சொல்லிவிடும். அடுத்தகட்ட பாதிப்பு இருந்தால் மட்டுமே பாண்டிங் (Banding), ஸ்டேப்ளர், சர்ஜரி என மற்ற சிகிச்சைகளை யோசிக்க வேண்டும்.

இந்த இடத்தில் நோயாளிகள் பலரும் செய்யும் தவறு ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். மலத்தில் ரத்தம் வந்தால், உடனே ‘மூலம்’ என்று சுயமாக முடிவு கட்டாதீர்கள். இதற்குப் பெருங்குடலில் ஏற்படும் புண், கேன்சர் என ஆபத்தான காரணங்களும் இருக்கலாம். சமீபத்தில் என்னிடம் ஒரு நோயாளி வந்திருந்தார். 

“எனக்கு மூலம் முத்திப்போச்சி, டாக்டர்! உள்ளூர் வைத்தியரிடம் மூணு மாசமா மருந்து சாப்பிட்டும் ரத்தம் நிக்கலே!” என்றார். அந்த ‘டாக்டர்’ அவரைப் பரிசோதிக்காமல், மலத்தில் ரத்தம் போகும் அறிகுறியை மட்டும் வைத்துக் கொண்டு ‘மூலம்’ என்று முடிவு செய்து மருந்து கொடுத்திருக்கிறார். நான் பரிசோதித்தபோது, அவருக்கு மலக்குடலில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும்தான் பார்க்கக் கூடாது. ஆசனவாய் மூலத்தை நேரில் பார்த்துதான் சிகிச்சை கொடுக்க வேண்டும்!

ரௌத்திரம்

ஆசனவாயின் வெளிப்புறத்துக்கும் மலக்குடலுக்கும் இடையில் ஏற்படும் குகைப் பாதைக்கு பௌத்திரம் (Fistula) என்று பெயர். ஆசனவாய்க்கு அருகில் சிறிய வீக்கம் தோன்றி, அதிலிருந்து சளி போன்ற திரவம் வருடக்கணக்கில் வடிவது இதன் முக்கிய அறிகுறி. மலக்குடலுக்கும் ஆசனவாய்த் தோலுக்கும் இடையில் வெளிப்பக்கமாகச் சீழ்க்கட்டி ஏற்பட்டு, உடைவதால் இந்தப் பிரச்னை உண்டாகிறது. திரவம்/சீழ் வடியும் வரை வலி இருக்காது. 

இதன் வாய்ப்பகுதி தானாகவே மூடிக் கொள்ளும்போது, சீழ் வடிய வழியில்லாமல் வலிக்கத் தொடங்கும். பின்னொரு நாளில் மறுபடியும் சீழ் வடியும். இதில் பலரும் செய்கிற தவறு, சீழ் ஏற்படும்போது மட்டும் அதைக் கீறி எடுத்துவிட்டு, குகையைக் கவனிக்காமல் விட்டுவிடுவதுதான். ஓபன் சர்ஜரி மூலம் இந்தக் குகையை உள்ளிருந்து மூடும்படி செய்தால்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

சிகிச்சை முறைகள்

1. சுருங்க வைத்தல்: 

ரத்தம் உறைய வைக்கும் மருந்தை மூலநோய் உள்ள இடத்தில் செலுத்தி, வீங்கியுள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இதன் செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவுகிறது.

2. வளையம் இடுதல்: 

இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக் குழாய்க்கு ரத்தம் வருவது தடைபட்டு, வீக்கம் சுருங்கி விடுகிறது. இரண்டாம்நிலை மூலநோய்க்கான சிகிச்சை இது.

3. உறைய வைத்தல்: 

திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால் அதில் உள்ள ரத்தக் குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இதுவும்  இரண்டாம் நிலை மூலத்துக்கு உதவுகிறது.

4. அறுவை சிகிச்சை: 

நாட்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் மற்றும் 3,4ம் நிலை உள் மூலத்துக்கு இது நல்ல பலன் தருகிறது.

5. கதிர்வீச்சு சிகிச்சை:  

ஐ.ஆர்.சி. (IRC Infra Red Coagulation) என்ற கருவி மூலம் இது செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிர்களை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்திவிடுவதால் வீக்கம் சுருங்கிவிடும். முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க முடியாதநிலையில் உள்ளவர்களுக்கு இது உதவுகிறது.

6. லேசர் சிகிச்சை: 

லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது இந்த சிகிச்சையின் செயல்முறை. ஆனால் இதற்கு ஆகும் பணச்செலவு அதிகம்.

7. ஸ்டேப்ளர் சிகிச்சை: 

ஸ்டேப்ளர் கருவி கொண்டு மூலநோயின் மேல்பகுதியை இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப் பகுதியையும் வெட்டி எடுத்து தையல் போட்டுவிடுகிறார்கள். மூலநோய் முற்றியநிலையில் உள்ளவர்களுக்கும், முதியோருக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. இதற்கான செலவும் அதிகம்தான்

8. ஆசனவாய் வெடிப்புக்குச் சிகிச்சை: 

நோய் ஆரம்பக் கட்டத்தில் இருந்தால், ஆசனவாயை விரித்து விட்டாலே போதும். பாதிப்பு அதிகம் என்றால், சர்ஜரிதான் தீர்வு.

-டாக்டர்  கு.கணேசன்

நன்றி : குங்குமம் 25.11.2016 இதழ்

வீடு கட்ட கடன் - வங்கிகள் வசூலிக்கும் கட்டணங்கள்


வீடு கட்ட கடன் - வங்கிகள் வசூலிக்கும் கட்டணங்கள்

வீட்டுக் கடன் வாங்கும்போது சில விஷயங்களைப் பல வங்கிகளும் பகிர்ந்து கொள்வதில்லை. நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டியை மட்டுமே வங்கிக்குச் செலுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். 

ஆனால் வங்கிகள் தொடக்கத்தில் வெளிப்படுத்தாத சிலவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லது வங்கிகள் இவற்றை மேம்போக்காகத் தெரிவிக்கும்போது நீங்கள் வீட்டுக் கடன் பெறும் பரவசத்திலோ, மன அழுத்தத்திலோ அவை குறித்து மனதில் வாங்கிக் கொள்ளாமல் போகலாம். 

அவற்றையும் நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டால்தான் வீடு வாங்குவதற்கான நிதியைச் சரிவரத் திட்டமிட முடியும்.

வங்கிக் கடனை மட்டுமே முழுவதுமாக நம்பி நீங்கள் வீடோ ஃப்ளாட்டோ வாங்கிவிட முடியாது. 10லிருந்து 20சதவிகிதம் தொகையை நீங்கள் கட்டியாக வேண்டும். 

சில வங்கிகளில் உங்கள் பங்கை (இதை ‘மார்ஜின் மணி' என்கின்றனர்) முதலில் கட்டிய பிறகுதான் கடனை விநியோகிப்போம் என்பார்கள். பல வங்கிகளில், விற்பவருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு தவணையிலும் 10லிருந்து 20 சதவிகிதம் தொகையை நீங்கள் கொடுக்க, பாக்கியை வங்கி அளிக்கும்.

இப்போது வங்கி வசூலிக்கக்கூடிய கட்டணங்களைப் பார்ப்போம்.

1. மதிப்பீட்டுக் கட்டணம்

வீட்டுக் கடன் வழங்குவதற்கு முன்னால் வங்கியின் அதிகாரி ஒருவர் நேரடியாக வந்து நீங்கள் வாங்க இருக்கும் வீட்டைப் பார்ப்பார். பல வங்கிகள் ஒரு கோடிக்கும் அதிகமான வீட்டுக் கடன் வழங்குவதாக இருந்தால் இதைச் செய்கிறது. இதற்காக ஒரு கட்டணம் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும். கட்டுமான நிபுணர் (Architect) ஒருவரின் மதிப்பீடும் பெறப்படும். இதற்கான கட்டணத்தையும் நீங்கள் அளிக்க வேண்டும்.

2. செயலாக்கக் கட்டணம் (Processing fee)

உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பம் மற்றும் இது தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க ‘Processing கட்டணம்’ என்பதையும் வங்கிகள் வசூலிக்கும். இது உங்களுக்குக் கொடுக்கும் கடன் தொகையில் 0.25 சதவிகிதத்திலிருந்து 1 சதவிகிதம்வரை இருக்கும்.

உங்கள் வங்கியின் தலைமையகம் வேறெங்கோ (டெல்லி, மும்பை, அலகாபாத் என்பதுபோல்) இருக்கலாம். அங்கு அனுப்பியும் உங்கள் வீட்டுக் கடனுக்கான விண்ணப்பத்தை வங்கி பெற நேரலாம். இதைக் காரணம் காட்டியும் இந்தக் கட்டணம் பெறப்படுகிறது.

3. வழக்கறிஞருக்கான கட்டணம்

வீட்டின் ஆவணங்களை வங்கியின் அங்கீகாரம் பெற்ற ஒரு வழக்கறிஞர் பரிசீலிப்பார். ‘ஆவணங்கள் சரியானவை. கடன் வழங்கலாம்’ என்று வங்கிக்கு எழுத்து மூலமாகக் கருத்துப் பதிவு செய்வார். இந்த வழக்கறிஞருக்கான தொகையை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.

இவை தவிர வேறு சில கட்டணங்களையும் வங்கிகள் வசூலிக்கக்கூடும். அவற்றைப் பார்ப்போம்.

சில வங்கிகள் Documentation charges என்று வசூலிக்கும். அதாவது பல படிவங்களை நிரப்பி உங்கள் கையெழுத்தைப் பெறுவதற்கான கட்டணம் இது.

வீடு உங்களுடையதுதான் என்றாலும் வீட்டுக் கடன் வழங்கிய வங்கி அதை இன்ஷ்யூர் செய்து அதற்கான ப்ரிமீயத்தை மறக்காமல் உங்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளும்.

சில வங்கிகளில் மட்டும் நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியும். அதாவது குறிப்பிட்ட வட்டியையே உங்களிடம் வசூலிக்கும் Fixed rate interest, சந்தையின் மாறுபடும் வட்டிக்கேற்ப, வீட்டுக்கான வட்டி விகிதமும் மாறுபடும் (Floating rate interest) ஆகிய இரண்டு வகைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். (ஆனால் பல வங்கிகள் இப்போது இரண்டாவது சாய்ஸைத்தான் அளிக்கிறார்கள்). ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நடுவே மாற்றிக்கொள்ளலாம். இதற்காக ஒரு கட்டணம் வசூலிக்கப்படும். இது மீதமுள்ள கடன் தொகையில் ஒரு சதவிகிதம் அளவுக்கு இருக்கலாம்.

உங்கள் மாதத் தவணையைக் காலப்போக்கில் கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள். வருமானம் அதிகமாகும்போது எதற்காக அதிக வட்டியை வங்கிக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்து நீங்கள் இப்படி முடிவெடுக்கலாம். ‘‘சீக்கிரம் கடனை அடைத்தால் வங்கிக்கு நல்லதுதானே’ என நீங்கள் நினைத்தாலும் சில வங்கிகள் இந்த மாறுதலுக்கும் ஒரு கட்டணம் வசூலிக்கும் 

(நீங்கள் புத்திசாலித்தனமாக, இப்படி மாற்றம் வேண்டும் என்றெல்லாம் வங்கிக்கு எழுதிக் கொடுக்காமல் அதிகத் தொகையைக் கட்டிவரலாம். இதற்கான ஆட்சேபணையைப் பெரும்பாலும் வங்கிகள் எழுப்பாது).

சில சமயம் மொத்தமாக ஏதோ ஒரு தொகை கைக்குக் கிடைத்தால் வீட்டுக் கடனையே அடைத்துவிடலாம் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். சில வங்கிகள் இதற்கும் கொஞ்சம் கட்டணம் வசூலிக்கும் (Pre-closure charges). ஆனால் இப்படி வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

உங்கள் வீட்டு ஆவணங்களை இரண்டு புகைப்படப் பிரதிகள் எடுத்துக் கொள்ளுங்கள். மூலப்பத்திரங்கள் அனைத்தையும் வங்கியிடம் ஒப்படைத்துவிட்டு நடுவே பிரதி எடுக்க அவற்றை அணுகினால் தாமதம் ஏற்படலாம். இதற்காக கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்பு உண்டு. 

மாதத் தவணையைத் தாமதமாகச் செலுத்தினால் இதற்காகவும் பல வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன (Late payment charges).

இதையெல்லாம் மனதில் கொண்டுதான் நீங்கள் வங்கிக் கடனைத் திட்டமிட வேண்டும்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 25.02.2017

உயில் எழுதுவது மிகவும் அவசியம்!

உயில் எழுதுவது மிகவும் அவசியம்!
இன்றே உங்கள் குடும்ப நலனிற்காக உயில் எழுதுங்கள்.
பொதுவாக உயில் எழுத எல்லோருக்கும் விருப்பம்தான்.. ஆனால் ஷெட்யுலில் குறிப்பிடப்படவேண்டிய தகவல்களை தேடி எடுத்து வைத்து கொண்டு எழுதவதில்தான் சிறிது சோம்பேறித்தனம் அனைவரிடமும் சற்று தலை துாக்கும். ஒரு ஞாயிற்று கிழமையை இதற்காக ஒதுக்கி வைத்து ஒரு முறை எழுதுங்கள் அதன் பிறகு, பிந்தைய நாட்களில் மாற்றம் செய்வது எளிதான வேலையாகத்தான் இருக்கும்
அடுத்த ஞாயிற்றுக் கிழமையை உங்கள் குடும்பநலன் கருதி உயில் எழுவதற்காக ஒதுக்கி வையுங்கள்.
(உயில் எழுதும்போது சொத்து விபரம் ஏதாகிலும் தப்பாகிவிடுமோ என்ற பயம் தேவையில்லை. உதாரணமாக மதுரை கே.கே.நகரில் எனது பெயரில் உள்ள வீடு என்பதே சொத்து விபரத்திற்கு போதுமானது. அதைத்தாண்டி அந்த சொத்து விபரத்தைப் பற்றி முழு விளக்கமும் அளிக்கலாம் அதாவது சர்வே எண். வீட்டு எண் மற்றும் வீட்டிற்கான வரி எண் ஆகியவை)
உயில் மாதிரி படிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. 

உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள். இன்றே உங்கள் குடும்ப நலனிற்காக உயில் எழுதுங்கள். 
நன்றி : நண்பர் திரு Leenus Leo Edwards அவர்கள் (வழக்கறிஞர்)

Saturday, February 25, 2017

சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா


சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா

சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா!
 
வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது.

‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள்.

‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற்களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

அதன் பிறகு, நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் (2001, 2011, 2016) மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார் ஜெயலலிதா.

இன்னோர் இரண்டு வாரங்கள் ஆகியிருந்தால் சசிகலா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியிருக்கக்கூடும்.

எட்டரைக் கோடித் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு பேருமே, பக்கா ஊழல் பேர்வழிகள் என்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் உறுதிப்படுத்தியிருக்கிறது.

`எந்தவிதமான குற்றஉணர்ச்சியும் இல்லாமல், மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துகளை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் அடுத்தடுத்து நடந்த விசாரணையில் மறைக்க முயற்சித்துள்ளார்கள். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இப்படிச் செயல்பட்டுள்ளார்கள்.

எவ்வளவு பெரிய தந்திரத்துடன் இவற்றையெல்லாம் மூடி மறைத்துள்ளார்கள் என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு மேல் எங்களால் எந்த வார்த்தையையும் பயன்படுத்தத் தெரியவில்லை.

பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன், அச்சம் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்துள்ளார்கள். பேராசை மட்டுமே இவர்களிடம் இருந்துள்ளது. ஆக்டோபஸ் மாதிரி அனைத்து மட்டங்களிலும் இவர்களது ஊழல் கரம் பரவியிருக்கிறது’ என்பது தீர்ப்பில் உள்ள வரிகள்.

இரண்டு கோடி ரூபாயாக இருந்த சொத்து ஐந்தே ஆண்டுகளில் (1991-96) 66 கோடி ரூபாயாக எப்படி மாறியது என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதியதை, வரிக்கு வரி உச்ச நீதிமன்றம் வழிமொழிந்துள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிறார். முதலமைச்சரின் அதிகாரபூர்வ வீட்டிலேயே சசிகலா இருக்கிறார்; இளவரசி இருக்கிறார்; சுதாகரன் இருக்கிறார்; பட்டவர்த்தனமாகப் பணம் வாங்குகிறார்கள்.

சென்னையில் சாந்தோம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அண்ணாசாலை, கிண்டி, கிழக்குக் கடற்கரை சாலை, நீலாங்கரை, முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, அபிராமபுரம் என எல்லா பகுதிகளிலும் வீடுகள், மனைகள் வாங்குகிறார்கள்.

சென்னைக்கு வெளியே பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர், செய்யூர் என வளைக்கிறார்கள். தலைநகர் தாண்டி தஞ்சாவூர், திருச்சி, ஊட்டி, திருநெல்வேலி, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் ஏக்கர் ஏக்கராக வாங்கிப் போடுகிறார்கள்.

30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். இவை அனைத்துமே போயஸ் கார்டன் வீட்டு முகவரியில். இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் தினம் தினம் லட்சம் லட்சமாகப் பணம் போடப்படுகிறது. இந்த நிறுவனத்தில் வெளியாட்கள் எவருமே முதலீடு செய்யவில்லை.

இந்த நிறுவனங்கள் எந்தப் பொருளையும் உற்பத்திசெய்யவில்லை. எந்தப் பொருளையும் வாங்கவும் இல்லை... விற்கவும் இல்லை.

பணம் மட்டும் போடப்படும்... எடுக்கப்படும். இந்த நிறுவனத்தின் பேரில் கடன் வாங்கப்படும்...
வாங்கிய கடன் சில மாதங்களில் அடைக்கப்படும்.

இதன் உச்சம், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனின் திருமணம். எடுக்கப்பட்ட ரசீதுகளின் அடிப்படையில் சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் (22 ஆண்டுகளுக்கு முன்னர்) நடத்தப்பட்ட திருமணம் அது.

ஆண்டு வருமானம் 44,000 ரூபாய் என்று சொல்லி வீட்டுக்கடன் வாங்கிய சுதாகரன், பல கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்தார்.

‘என் திருமணத்துக்கு யார் செலவு செய்தார்கள் என்று எனக்கே தெரியாது’ என்றார்.

மயிலாப்பூர் கனரா வங்கியில் 105 ரூபாய் கொடுத்து கணக்கு தொடங்கியவரிடம் அடுத்தடுத்து ‘யார் யாரோ’ லட்சக்கணக்கில் பணம் போட்டார்கள்.

இளவரசியும் தனது ஆண்டு வருமானம் 40,000 ரூபாய் என்றார். அவர் வங்கிக் கணக்கிலும் ‘யார் யாரோ’ பணம் போட்டார்கள்.

1991-ம் ஆண்டுக்கு முன்னர் ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் 12 வங்கிக் கணக்குகள் இருந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவை 52 வங்கிக் கணக்குகளாக விஸ்வரூபம் எடுத்தன.

சசிகலாவுக்கு இருந்த வருமானம், கணவர் நடராசனின் ஊதியம். ஸ்கூட்டர் வாங்க 3,000 ரூபாய் கடன் வாங்கும் நிலைமை. அரசுக் கடன் மூலமாக வீடு வாங்கும் நிலைமை. அவர்தான் `திருத்துறைப்பூண்டியில் 250 ஏக்கர் இருந்தது’ என்று நீதிமன்றத்தில் சொன்னார்.

ஜெயலலிதா சொன்ன பொய்கள் பலவிதம்.

டான்சி நிலத்துக்குக் கையெழுத்து போட்டுவிட்டு எனது கையெழுத்தே இல்லை என்றவர் அவர். ‘மைசூர் மகாராஜா குடும்பம்' என்று சொல்லிக்கொண்ட இவர், ‘நான் அரசியலுக்கு வந்து புதிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை. சுதாகரன் திருமணத்துக்கு நான் எதுவுமே செலவு செய்யவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீஸ் அதிகாரி நல்லம நாயுடு எங்கேயோ இருந்து கொண்டுவந்த நகைகளை, போயஸ் கார்டனில் வைத்து படம் பிடித்துக்கொண்டார்’ என்று நீதிமன்றத்தில் நீட்டி முழக்கினார்.

23 கிலோ தங்கம், 125 கிராம் வைரம், 1,116 கிலோ வெள்ளி வாங்கும் அளவுக்கு நல்லம நாயுடு என்ன விஜய் மல்லையாவா?

2,000 ஏக்கர் நிலம், 30 பங்களாக்கள், 33 நிறுவனங்கள், தங்கம் - வைரம் எனக் கூட்டிக் கழித்து 66 கோடி ரூபாய்க்குக் கணக்கு கேட்டபோது இவர்கள் நான்கு பேருமே சொன்ன பதில், ‘கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கை இது’ என்றது மட்டும்தான்.

‘தங்கள் மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளனவோ, அதன் அடிப்படையைத் தகர்க்கும் ஒரே ஓர் ஆதாரத்தைக்கூட ஜெயலலிதா தரப்பு சொல்லாமல், மேம்போக்கான அரசியல் விளக்கங்களையே நீதிமன்றத்தில் சொன்னது’ என்றார்கள் நீதிபதிகள்.

`தாங்கள் வைத்திருந்த பணத்துக்கு, சொத்துக்கு நியாயமான கணக்கைக் கடைசி வரை இவர்களால் காட்ட முடியவில்லை, ஓர் ஆதாரத்தைக்கூட தரவில்லை' என்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.

1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றி என்பது, தமிழக வரலாற்றில் முக்கியமானது. எதிர்க்கட்சியான தி.மு.க இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வென்ற தேர்தல் அது.

ஜெயலலிதாவுக்கு முதல் அரசியல் வெற்றியைக் கொடுத்த தேர்தல். சசிகலா குடும்பத்தின் முதல் அறுவடைக் காலமும் அதுதான். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரசாங்க கஜானாவே போயஸ் கார்டனுக்குப் பாத்தியதைப்பட்டது என்று நினைத்தார்.

முந்தைய 15 ஆண்டுகள் நிரந்தர வருமானம் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கும், ராமச்சந்திர உடையாருக்கும், இன்னும் சிலருக்கும் கடிதம் எழுதி பணம் கேட்கும் நிலைமையிலிருந்த ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் பதவி, பணப் பாதையாகத் தெரிந்தது.

சசிகலா குடும்பம் வறண்ட நிலம். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் இழுத்துக்கொள்ளும். அதனால்தான் ஊழலையும் முறைகேட்டையும் துணிச்சலாக, பட்டவர்த்தனமாக, கூச்சமே இல்லாமல் இன்னும் சொன்னால் பெருமையாகவே செய்தார்கள்.

வளர்ப்பு மகன் திருமணம் என்பது, திருட்டை, திருவிழா ஆக்கிய நிகழ்வு. உலக வழக்குகளை எல்லாம் கரைத்துக்குடித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷும் அமிதவ ராயும், ‘எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு இது பேரழிவு. நான்கு பேர் சேர்ந்து நாட்டை நாசமாக்கிச் சூறையாடியிருக்கிறார்கள்.

இந்தத் தீர்ப்பில் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடையவேண்டிய ஒரு தகவல் இருக்கிறது. ‘போயஸ் கார்டன் வீட்டில் வாழ்வதற்காக இவர்கள் ஒன்று சேரவில்லை.

பணம் சம்பாதிக்கவே ஒரே வீட்டில் கூடினார்கள்’ என்பதுதான் அது.

`சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேரும் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது' என்றோ, `அவர்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்றோ, ஜெயலலிதா சொன்னதை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

‘இவர்கள் கிரிமினல் சதிசெய்து சம்பாதிக்கவே கூடினார்கள்; நிறுவனங்கள் தொடங்கினார்கள். எனவே, குற்றச் சதியில் நான்கு பேருக்கும் சம பங்கு உண்டு’ என்றது நீதிமன்றம்.

‘மனிதர்களை நேசிக்கும் கொடைப் பண்பு காரணமாக சசிகலாவுக்கு போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை.

குற்ற நடவடிக்கையில் இருந்து, தான் தப்பித்துக்கொள்ளவே சசிகலாவைத் தனது வீட்டில் ஜெயலலிதா வைத்துக்கொண்டார்.

இவர்கள் கூட்டுச் சதியால்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. இவர்கள் செய்த ஒரே ஒரு வேலை, சொத்துகளை வாங்கிக் குவிப்பதே’ என்றும் நீதிபதிகள் தெளிவு படுத்தினார்கள்.

அதாவது, ஜெயலலிதாவை வைத்துச் சம்பாதிக்க சசிகலா அவரோடு சேர்ந்தார், தான் சம்பாதிப்பதற்கு பினாமியாக சசிகலாவை ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார் - இதுதான் நீதிபதிகள் சொல்லவருவது. சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா; ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா. ஒருவர் கல்லறைக்குள் போய்விட்டார். இன்னொருவர் சிறையறைக்குள் போய்விட்டார்.

சசிகலா குடும்பம் அடுத்த பாதாள அறையை உருவாக்கிவிட்டது. எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டு, இரட்டை இலையைப் பச்சைக்குத்தி வாழும் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் தனியறையில் ரகசியமாக அழுகிறார்கள். இந்தப் புதைகுழியில் இருந்து அ.தி.மு.க யானையை மீட்டெடுப்பது சிரமம். அதுவும் எடப்பாடி போன்றவர்களால் சாத்தியமில்லை. அவ்வளவு கனமானது இந்தத் தீர்ப்பு.

டெல்லி உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது அறை எண்ணில் உட்கார்ந்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் இருவரும் எட்டே நிமிடத்தில் இறுதித் தீர்ப்பை வாசித்து முடித்தார்கள்.

27 ஆண்டுகால அநியாயத்தைச் சொல்ல 27 நிமிடங்கள்கூட தேவைப்படவில்லை. ‘இதுபோன்ற சதிகாரர்களைத் தண்டிக்காவிட்டால் நீதி, நேர்மைக்கு அஞ்சி வாழ்பவர்கள் இந்தியாவில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்’ என்ற ஒற்றை வரியிலேயே அவர்களது தீர்ப்பின் 570 பக்கங்களும் அடங்கியிருக்கின்றன.

‘இந்தத் தீர்ப்பின் ஆவணங்கள் பருமனாக உள்ளன. இந்தப் பாரத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம்’ என்று நீதிபதிகள் சொன்னார்கள். அரசியலைத் தூய்மைப்படுத்தும் பாரம், அந்த நீதிபதிகள் கரங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதை அவர்கள் கம்பீரமாகச் செய்தார்கள்.

‘திரையரங்கில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தவர் அமிதவ ராய். நீதியரசர்களே... உங்களது தீர்ப்புக்காக தேசம் எப்போதும் எழுந்து நிற்கும்!

நன்றி : ஆனந்தவிகடன் – 23.02.2017