disalbe Right click

Thursday, March 9, 2017

பிரசவ கால விடுப்பு இனி 26 வாரம்


பிரசவ கால விடுப்பு இனி 26 வாரம்

 மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

புதுடில்லி: பெண்களின் பிரசவ கால விடுப்பை 26 வாரமாக உயர்த்தும் சட்ட மசோதா பார்லி., லோக் சபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அரசு, தனியார் மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்கள் முதல் இரு குழந்தைகளுக்கான பிரசவ காலத்திற்காக 12 வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.

 இந்த பிரசவ கால விடுப்பை அதிகரிக்க செய்ய எழுந்த கோரிக்கையை அடுத்து 12 வாரமாக இருந்த விடுமுறை 26 வாரமாக மாற்றியமைக்கப்பட்டது.

லோக்சபாவில் நிறைவேற்றம்

இந்த சட்ட திருத்தம் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பார்லி., கூட்ட தொடரின் போது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த லோக்சபாவில் இந்த தீர்மானத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டா தத்தாத்ரேயா கொண்டு வந்தார். மன்ற உறுப்பினர்களின் விவாத்திற்கு பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த சட்டம் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டுள்ள நிறுவனத்திற்கு பொருந்தும், இதனால் நாட்டில் உள் ள 18 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

நன்றி : தினமலர் நாளிதழ் -10.03.2017

குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் அபராதம்:

Image may contain: text

குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் அபராதம்: 


வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் அபராதம்: சட்டப்படி சரியா ?

வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்த பட்ச இருப்புத் தொகையானது 100 ரூபாயிலிருந்து இப்பொழுது பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்பொழுது, குறைந்தபட்ச இருப்பு தொகையாக  ரூ.5 ஆயிரம் வைத்திருக்க வேண்டும். இதை பராமரிக்கத் தவறினால்  ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும்’ என்று ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வெளியிட்ட  அறிவிப்பு பின்வருமாறு:

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை (Minimum Balance) வைக்காத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராதம்  விதிக்கப்படும். 

பெருநகரங்களில் இருப்பவர்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000, நகரங்களில் இருப்பவர்கள் ரூ.3000,  புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000, கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 என குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டும்.

இந்த தொகை குறைந்தால்  அபராதம் விதிக்கும் நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குறைந்தபட்ச இருப்பு தொகையை விட கணக்கில் எவ்வளவு குறைந்துள்ளதோ அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.

 75  சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.75 அபராதத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.

 50 சதவீதத்திற்கும் குறைவாக  இருந்தால் ரூ.50 மற்றும் சேவை வரி அபராதமாக விதிக்கப்படும். 

சொந்த ஏடிஎம்களில் 10 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கலாம்  என்ற நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது பற்றி ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

சுற்றறிக்கை எண்.
DBOD.Dir.BC.53/13.10.00/2002-03 நாள் 26.12.2002 தெரிவிப்பதாவது:

வங்கியில் கணக்கு தொடங்கும் முன் வங்கிகள் வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரிடம்  குறைந்தபட்ச இருப்புத் தொகை பற்றி பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. அதேபோல் கட்டணங்கள் வசூலிப்பது பற்றியும் தெரிவிப்பதில்லை.

ஆகவே, வங்கிக் கணக்கைத் துவங்குவதற்கு முன் நுகர்வோரிடம், குறைந்த படச இருப்புத் தொகை பற்றி விளக்கிட வேண்டுமென குறிப்பிடுகிறது. இதில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது.

சுற்றறிக்கை எண். 
RBI/2014-15/308/DBR.Dir.BC.No.47/13.03.00/2014-1 நாள் 20.11.2014 இல் 
நிதிக் கொள்கை விளக்கம் 2014-15 இல் 
நுகர்வோர்களுக்கான ஒழுங்கு மற்றும் வளர்ச்சி கொள்கைகளை பற்றி விளக்குகிறது. 

மேலும் நுகர்வோர்களின் கவனக் குறைவை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. 

மேலும் குறைந்தபட்ச இருப்பை ஒரு வாடிக்கையாளர் பராமரிக்காத பொழுது, அவர்கள் மீது அபராதம் விதிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு அளிக்கப்படும் சேவைகளை நிறுத்திவிடலாம். 

அதன்பின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க ஆரம்பித்தவுடன் மீண்டும் நிறுத்தப்பட்ட சேவைகளை தரலாம் என் அறிவுறுத்துகிறது.

மேலும், தாமோதரன் கமிட்டியின் பரிந்துரைப்படி ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்

1. ஒரு வங்கியானது, நுகர்வோரின் குறைந்தபட்ச இருப்புத் தொகையானது குறையும் பொழுது, அபராத தொகை பற்றிய விவரங்களை குறுஞ்செய்தியாகவோ அல்லது மின்னஞ்சலாகவோ நுகர்வோருக்கு உடனே தெரிவிக்க வேண்டும்

1. குறைந்தபடச் இருப்புத் தொகை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் போடவில்லையென்றால், அபராதத் தொகையினை முதலில் வாடிக்கையாளருக்கு தெரிவித்த பின்னர் வசூலிக்க வேண்டும்.

1. அபராத தொகை பற்றிய கொள்கை, வங்கியின் உயர்மட்டக் குழுவின் ஒப்புதலுக்கு பின்னரே முடிவு செய்ய வேண்டும்.

1. அபராத தொகையானது, குறைந்தபட்ச தொகையின் அளவைப் பொறுதே இருக்க வேண்டும். இதற்கு ஒரு வசூல் முறையை உருவாக்க வேண்டும்.

1. அபராதத் தொகையானது ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருக்க வேண்டும், அபரீதமாக இருக்கக் கூடாது.

1. அதே போல், இருப்புக் கணக்கு நெகடிவாக மாறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்,1986 பிரிவு.2(o) இன் படி வங்கிச் சேவையும் அடங்கும். ஆகவே இச்சட்டப்படி, நுகர்வோரிடம் அபராதம் வசூலிக்க வங்கிக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

நன்றி : திரு C.P.சரவணன், வழக்கறிஞர், 9840052475

 09.03.2017 - தினம்ணி நாளிதழில் இருந்து

Wednesday, March 8, 2017

உயர்நீதிமன்ற வழக்கு தாக்கல் கட்டணம் உயர்வு


உயர்நீதிமன்ற வழக்கு தாக்கல் கட்டணம் உயர்வு

மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும்போது, அதற்குரிய கட்டணத்தை நீதிமன்ற வில்லைகளாக (ஸ்டாம்ப்) மனுதாரர் தரப்பில் மனுவுடன் ஒட்ட வேண்டும்.

நீதிப்பேராணை (ரிட்) மனுவிற்கு 200 ரூபாய், 

ரிட் பல்வகை மனுவுக்கு 10, 

கிரிமினல் மேல்முறையீடு, 
கிரிமினல் சீராய்வு, 
கிரிமினல் அசல் மனு, 
ஆட்கொணர்வு மனுக்கு 10, 

அனைத்து பல்வகை வழக்குகளுக்கு 10, 

வக்காலத்துக்கு 10, 

அனைத்து சிவில் பல்வகை மேல்முறையீட்டு மனுக்களுக்கு 50, 

சிவில் சீராய்வு மனுக்களுக்கு 50 முதல் 200 ரூபாய் 

மதிப்புள்ள நீதிமன்ற வில்லைகளை மனுவுடன் ஒட்ட வேண்டும். 

தமிழ்நாடு நீதிமன்ற கட்டணச் சட்டப்படி, தற்போது 

ரிட் மனுவிற்கு 1000 ரூபாய், 

ரிட் பல்வகை மனு 20, 

மறு ஆய்வு மனு 500, 

கிரிமினல் மேல்முறையீடு, 
கிரிமினல் சீராய்வு, 
கிரிமினல் அசல் மனு, 
ஆட்கொணர்வு மனுக்களுக்கு 20, 

அனைத்து பல்வகை மனுக்களுக்கு 20, 

அனைத்து சிவில் பல்வகை மேல்முறையீட்டு மனுக்களுக்கு 2000, 

சிவில் சீராய்வு மனுக்களுக்கு 200 மற்றும் 500 

என உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் -08.03.2017

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டணம் உயர்வு!


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டணம் உயர்வு!

அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டம் பெற்றவராக இருந்தால், மூன்று முறை, கட்டணமின்றி, இலவசமாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது. 

இனி, பட்டம் பெற்றவர்கள் மட்டுமின்றி, கல்வித் தகுதி எதுவாக இருந்தாலும், மூன்று முறை, இலவசமாகத் தேர்வு எழுத அனுமதிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டணம், மார்ச் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய கட்டண விபரம்:

• எழுத்து, நேர்முகத் தேர்வு, மாநில அரசுப்பணி தேர்வுக்கான கட்டணம், 125 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாகஉயர்ந்துள்ளது.

• தமிழ்நாடு சார்பு பணிக்கான தேர்வுக் கட்டணம், 100 ரூபாயிருந்து, 150 ரூபாயாகியுள்ளது.

• நீதித்துறை, தலைமைச் செயலகம், அமைச்சுப் பணிக்கான எழுத்து தேர்வுக் கட்டணம், 75 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

• முதல் நிலை தேர்வுக் கட்டணம், 75 ரூபாயில் இருந்து, 100 ரூபாய்; ஐந்து ஆண்டுகள் ஆன் - லைன் பதிவுக்கான கட்டணம், 30 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாக கூடியுள்ளது.

நன்றி : தினமலர் (கல்விமலர்) – 08.03.2017

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி - பேட்டி

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி - பேட்டி

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தைச் சீரமைப்பது, மருத்துவக் கல்வி நிர்வாகத்தில் குளறுபடிகளைச் சீர்படுத்துவது, நீதித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் உள்ள உறவை எப்படிக் கையாள்வது என்று பல முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்திவருகிறார் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியான ராஜேந்திர மல் லோதா. 

‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசினார்.

தேசிய நீதித் துறை நியமன ஆணையம் (என்ஜேஏசி) அமைவதையும், உயர் நீதிமன்றம் - உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளை நியமிப்பதில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரவர்க்கத்தினருக்கும் பொறுப்பு தரப்படுவதையும் நீங்கள் ஏற்கவில்லை; நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு வேண்டும் என்றே கால தாமதத்தை ஏற்படுத்தியதாகச் சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் குற்றஞ்சாட்டினார். இப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு என்ஜேஏசி செல்லாது என்று 2015 அக்டோபரில் தீர்ப்பளித்தது. நீங்கள் அனைவருமே இந்த விவகாரத்தில் நிர்வாகத் துறையுடன் மோதல் போக்கிலேயே இருக்கிறீர்களே ஏன்?

மோதல் போக்கு என்ற வார்த்தை பொருத்தமானதல்ல; நீதித் துறையின் சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் என் கருத்து. நாட்டின் தலைமை நீதிபதியாக நான் பதவியேற்றபோது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு பதவியில் இருந்தது. பிறகு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவிக்கு வந்தது. அரசு மாறியதால் நீதித் துறையின் சுதந்திரத் தன்மைக்கு ஆபத்து வந்துவிடாமல் காக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் பரிந்துரைத்தவர்களில் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டது தொடர்பாகச் சர்ச்சை ஏற்பட்டது. சட்டமியற்றும் நாடாளுமன்றம், நீதி வழங்கும் நீதித் துறை, நிர்வாகத்தை நடத்த வேண்டிய அதிகாரவர்க்கம் ஆகிய மூன்றும் அதனதற்கு உரிய வரம்புக்குள் செயல்பட வேண்டும். நிர்வாகத் துறையின் தலையீடுகள் இல்லாமல் நீதித் துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் டி.எஸ்.தாக்கூர், கேஹர் சிங் ஆகியோரின் கவலையும். எனவே, நாங்கள் ஒரு நிறுவனமாகத்தான் இதில் செயல்பட்டிருக்கிறோமே தவிர, தனி நபர்களாக அல்ல.

நீதித் துறையின் சுதந்திரத்தைக் காக்க வேண்டும் என்றால் என்ன பொருள்? என்ஜேஏசி மூலம் நீதித் துறையை அதிகாரவர்க்கம் தன்னுடைய பிடிக்குள் கொண்டுவரப் பார்க்கிறது என்கிறீர்களா?

உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங் களுக்கும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் நிர்வாகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இடையில் எப்போதும் மோதல் இருந்துவந்திருக்கிறது. நீதிபதிகள் நியமனம் தொடர்பான முதல் வழக்கு காலத்திலிருந்து தொடர்ந்து 35 ஆண்டுகளாக ‘கொலீஜியம்’ என்ற மூத்த நீதிபதிகள் குழுதான் நியமனங்களை மேற்கொண்டுவருகிறது. நிர்வாகத் துறைக்கு இதில் பங்கு உண்டு. ஆனால், அது வரம்புக்கு உட்பட்டது. 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த நியமன முறைகளை மாற்ற வேண்டும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். அதனால், என்ஜேஏசியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த நடைமுறை, அரசியல் சட்டம் நிர்ணயித்துள்ள வரைமுறைகளின்படி இல்லை. எனவே, இது சரியா என்று ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், இது செல்லாது என்று தீர்ப்பளித்தது. ஆனால், இதில் ஒரு நல்லது நடந்தது. அரசு இதை ஏற்றுக்கொண்டதால், கொலீஜிய முறையே தொடர்கிறது.

உச்ச நீதிமன்றம் வரம்பு மீறுகிறதா? திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம், அதற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்கிறது; இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகத்தை மாற்றி அமைக்கிறது; இந்திய மருத்துவ ஆணையத்தில் தலையிடுகிறது?

தேசிய கீத விவகாரத்தை எடுத்துக்கொண்டால், இதைத் தவிர்த்திருக்கலாம்; உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டிய விவகாரம் அல்ல இது. அதுவும் இது இடைக்கால உத்தரவுதான், உரிய நேரம் வரும்போது நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும். முக்கியமான அரசியல் சட்டப் பிரச்சினை இல்லாவிட்டால், இம்மாதிரியான விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என்பது என்னுடைய கருத்து. அரசியல் சட்டப் பின்னணியில் ஆராயப்பட வேண்டிய விஷயம் என்றால் தீர ஆராய்ந்து, அரசியல் சட்டத்துக்கும் அதன் உணர்வுகளுக்கும் ஏற்ற தீர்ப்பை வழங்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் வழிதவறிச் சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளைத் தண்டிக்கவும் கிரிக்கெட் நிர்வாகத்தில் அமைப்புரீதியிலான சீர்திருத்தங்களை செய்யவும் என்னுடைய தலைமையிலான குழு பணிக்கப்பட்டது. நல்ல தீர்வு கிட்ட வேண்டும் என்றால் நீதிபதிகள் நிறைய நேரம் எடுத்துக்கொண்டு, தங்களுடைய திறமைகளையெல்லாம் பயன்படுத்தி, அனைவருக் கும் பலன் அளிக்கும்படியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காகத்தான் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. கிரிக்கெட்தான் இந்தியாவில் மிகவும் நேசிக்கப்படும் - விவாதிக்கப்படும் விளையாட்டு என்பதால், அதன் நிர்வாக அமைப்பைச் சீர்படுத்துவது முக்கியமாகக் கருதப்பட்டது.

நீதித் துறையின் நடவடிக்கைகள் ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள்; இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்டிஐ) வரம்புக்குள் கொண்டுவரப்படுவது விரும்பத்தக்கது என்றும் பேசியிருக்கிறீர்கள். உச்ச நீதிமன்றத்தையும் அதேபோல தகவல் அறியும் சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கான காலம் கனிந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?

ஒளிவுமறைவின்றிச் செயல்படுவதுதான் இனி எதிர்கால வழிமுறையாக இருக்க முடியும். தேசிய நீதித் துறை நியமன ஆணைய (என்ஜேஏசி) வழக்கை விசாரித்த அரசியல் சட்ட அமர்வும்கூட, நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் நடைமுறையை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் திருத்தி அமைக்குமாறு உத்தரவிட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை - அதிலும் நீதிபதிகளின் நியமனங்களில் - அவசியம். அந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியபடி, வெளிப்படைத்தன்மையுள்ள வழிமுறைகளை கொலீஜியம் ஏற்படுத்த வேண்டும். அதன்படிதான் இனி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிப்படைத் தன்மையைப் பல வழிகளில் கடைப்பிடிக்கலாம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட பரிசீலிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். அவர்களுடைய பெயரை ஏற்கவோ, மறுக்கவோ எது காரணமாக இருந்தது என்பதைப் பதிவுசெய்வது வெளிப்படைத்தன்மையில் அடுத்த கட்டமாக இருக்கும். இப்படிப் பல வழிகளில் கொலீஜியம் வெளிப்படையாகச் செயல்பட முடியும். இதில் முக்கியம் எதுவென்றால், இனி வெளிப்படைத் தன்மை நிலவும் என்பதை உறுதிப்படுத்துவதுதான். இதனால், நீதித் துறையில் இருப்பவர்களுக்கும் நீதித் துறைக்கு வெளியில் இருப்பவர்களுக்கும் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். நீதிபதிகளாக நியமிக்கப்படக் கூடிய தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், எதனால் அப்படித் தேர்ந்தெடுக்கப்படாமல் விடப்பட்டோம் என்று புரியாமல் குழம்புகின்றனர்.

உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமான எண்ணிக்கையில் இல்லையே? பெண்கள் அப்பதவிக்கு வர முடியாமல் ஆண்களால் தடுக்கப்படுகின்றனரா?

உயர், உச்ச நீதிமன்றங்களில் பாலின பன்முகத் தன்மை நிலவ வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். உச்ச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வுசெய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பின்போது ஆர்.பானுமதியைத் தேர்வுசெய்தேன். பிரச்சினை என்னவென்றால், போதிய எண்ணிக்கையில் தகுதி யுள்ள பெண்கள் இல்லை என்பதுதான். வேறு பல நாடுகளிலும் இதுதான் பிரச்சினை. இங்கிலாந்தின் தலைமை நீதிபதி நியூபெர்ஜர் பிரபுவைச் சந்தித்த போது, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்த தாங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் குறைந்தபட்சம் 30% பெண் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று முயற்சிகளைத் தொடங்கினாலும் அப்படி நியமித்து முடிக்கப் பல ஆண்டுகள் பிடிக்கும். கீழமை நீதிமன்ற சேவையில் அதிக எண்ணிக்கையில் இப்போது பெண்கள் சேர்ந்துவருவதால் இன்னும் 15 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் பெண் நீதிபதிகள் உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவியில் இருப்பார்கள் என்று சொல்ல முடியும். பல மாநிலங்களில் நீதித் துறைச் சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோரில் 40% பெண்களாக இருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்கூட இது 30% ஆக இருக்கிறது. உச்ச, உயர் நீதிமன்றங்களில் 30% பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட நாம் இன்னும் பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஆண்டின் 365 நாட்களிலும் நீங்கள் பணியாற்றுவதைப் போலத் தெரிகிறது. உச்ச நீதிமன்றமும் ஆண்டு முழுக்கச் செயல்பட வேண்டும் என்பது உங்களுடைய முக்கியமான ஆசை. இருப்பினும், உங்களுடைய பரிந்துரைக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லையே ஏன்?

உச்ச நீதிமன்றம் ஒரு நாள்கூட விடுமுறை இல்லாமல் ஆண்டின் எல்லா நாட்களிலும் பணிபுரிய வேண்டும் என்று விரும்பினேன். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வழக்குகள் புதிதாகச் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. விசாரித்து முடிக்க வேண்டிய வழக்குகள் எண்ணிக்கையோ லட்சக்கணக்கில் இருக்கின்றன. குடிநீர், மருத்துவமனை, மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் ஒரு நாளின் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் அனைவருக்கும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. நீதித் துறையிலும் இது சாத்தியம்தான். நீதிமன்றம் ஆண்டு முழுக்கச் செயல்படும்போது, மூத்த வழக்கறிஞர்கள் விடுப்பில் ஓய்வெடுத்தாலும் இளைய வழக்கறிஞர்களுக்கு வாதாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். கோடை காலத்தில் நீதிமன்றங்களுக்கு ஆறு வாரங்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையில் ஹோலிப் பண்டிகை விடுமுறை வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் கோடை விடுமுறை விடப்படுகிறது. பிறகு, கிறிஸ்துமஸ் விடுமுறை வந்துவிடுகிறது. இதுபோக வாரந்தோறும் சனி, ஞாயிறுகள் விடுமுறையாகிவிடுகிறது. ஆண்டு முழுக்க நீதிமன்றங்களைச் செயல்பட வைப்பதற்கான வசதிகள் இப்போது வந்துவிட்டன. நான் எவ்வளவோ முயன்றும் வழக்கறிஞர் சங்கம் இந்த யோசனையை நிராகரித்துவிட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இதர மூத்த நீதிபதிகளும் இந்த யோசனையை நன்கு ஆராய்ந்து, ஆண்டு முழுவதும் நீதிமன்றங்கள் செயல்பட வழிகாண வேண்டும் என்றே விரும்புகிறேன்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பணிகளைச் செய்ய 4 உறுப்பினர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. கிரிக்கெட் வாரியத்தை எப்படிப் பொது அமைப்பாகக் கருத முடியும்?

சங்கங்கள் பதிவுச் சட்டப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பதிவுசெய்யப்பட்டி ருந்தாலும், பொது அமைப்பு என்ற வகையில்தான் அது தனது பணிகளைச் செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அது இந்தியா சார்பில் விளையாடுவதற்கான தேசிய அணியைத் தேர்வுசெய்கிறது. கிரிக்கெட் தொடர்பான எல்லாவற்றையும் அதுதான் நிர்வகிக்கிறது. பொது அமைப்பைப் போல அது செயல்படும்போது, நீதித் துறையின் கண்காணிப்புக்கு உட்பட்டதுதான். நீதிமன்றம் அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில்தான் உரிய ஆணையைப் பிறப்பித்திருக்கிறது.

கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசு தலையிடுவதற்கு வாய்ப்பாக, அதை பலவீனப்படுத்திவிட்டீர்களா.. ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்று?

கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் தங்களுடைய ஆதிக்கத்தை இழந்த ஒரு சிலருடைய தவறான பிரச்சாரம்தான் இந்தக் குற்றச்சாட்டு. இந்தியா பரந்து விரிந்த பெரிய நாடு. இந்நாட்டு மக்களை இணைக்கும் பல அம்சங்களில் கிரிக்கெட்டுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. தேசிய அணியைத் தேர்வுசெய்யும் வாரியத்தில் பல மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லாமல் இருப்பது சரியல்ல. அதனால்தான் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என்று நிர்ணயித்தோம். ஒரே ஆள் பல பதவிகளை வகிப்பதும் சரியல்ல என்பதால், ஒருவருக்கு ஒரு சமயத்தில் ஒரு பதவி மட்டுமே என்று வகுத்தோம். இது ஒரு சிலரின் ஏகபோகத்தைத் தடுப்பதற்காகவும், அனைவரையும் நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்க வைக்கவும் செய்யப்பட்டது. நாட்டில் இப்போது 29 மாநிலங்கள் இருக்கின்றன. கிரிக்கெட் வாரியத்தில் 10 மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவமே கிடையாது. மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவமே இல்லாமல் இருப்பது சரியா? மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்குத் தலா மூன்று வாக்குகள் இருந்தன. அதற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கிளப் என்றொரு அமைப்பு, அப்புறம் படைப் பிரிவுகளுக்குப் பிரதிநிதித்துவம். இதில் பத்து பேர்தான் வாரியத்தின் எல்லா குழுக்களிலும் முக்கிய இடங்களைக் கைப்பற்றி வைத்துள்ளனர்.

இந்த அமைப்புகள் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டின் புரவலர்கள் அல்லவா?

உண்மைதான், நாங்கள் அவை வெளியேற வேண்டும் என்று கூறவில்லையே? முழு நேர உறுப்பினர்கள் என்ற நிலையிலிருந்து அவர்களை இணை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொண்டி ருக்கிறோம். அவர்கள் விவாதத்தில் பங்கெடுக்கலாம். ஆனால், வாக்குரிமை கிடையாது. கிரிக்கெட் போர்டின் எல்லா விவகாரங்களிலும் எல்லா மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவாதித்து வாக்களிக்க வேண்டும் என்று வகுத்திருக்கிறோம்.

அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான கூட்டை முறிக்க முயற்சி மேற்கொண்டீர்கள். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் உங்களால் ஒதுக்க முடிந்தது. ஆனால், அரசியல்வாதிகள் இன்னமும் உள்ளே இருக்கின்றனரே? இதற்கு என்ன விளக்கம் சொல்வீர்கள்?

அரசியல்வாதிகள் என்பதாலேயே கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து விலக்கிவிட முடியாது. அரசு நிர்வாகத்தில் பதவியில் இருந்தால்தான் விலக்க முடியும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. அரசில் நீங்கள் அதிகாரியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் அந்தப் பணிக்கு உங்களுடைய முழு நேரக் கவனிப்பு அவசியம். கிரிக்கெட் வாரியப் பணிக்கும் நிறைய நேரம் தேவைப்படும். எங்களுக்குத் தரப்பட்ட தரவு ஒன்றில் படித்தோம். கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த என்.கே.பி.சால்வே, பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். கிரிக்கெட் வாரியத் தலைவராக இருப்பதால், சால்வேயால் அமைச்சகப் பணிக்கு முழு நேரத்தையும் ஒதுக்க முடிவதில்லை என்று பிரதமரிடமே கூறப்பட்டது. அவர் சால்வேயை அழைத்து, உண்மையா என்று கேட்டார். கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் பங்கேற்பதில் தனக்கு விருப்பம் அதிகம்தான் என்று சால்வே ஒப்புக்கொண்டார். அமைச்சர்களும் அதிகாரிகளும் தாங்கள் வகிக்கும் பதவிக்குரிய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அவர்கள் மூக்கை நுழைக்கக் கூடாது. அரசியல்வாதி யார் என்று தெரியாமல் போய்விடாது. கிரிக்கெட் சங்கத்தில் பதவியில் இருந்தவர்களே தொடர்ந்து நீடித்தால் ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்பதால்தான் பதவி வகிப்பதற்கு மூன்று ஆண்டு கால இடைவெளி அவசியம் என்ற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

நீதிபதிகளுக்கு கிரிக்கெட்டைப் பற்றியும் அதன் நிர்வாகத்தைப் பற்றியும் என்ன தெரியும் என்ற விமர்சனங்களுக்கு என்ன பதில்?

கிரிக்கெட் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். பல மேட்சுகளை நேரில் பார்த்திருக்கிறேன். நான் மாணவனாக இருந்தபோது, என்னுடைய உறவினர் கொல்கத்தாவில் வசித்தார். 1972-73-ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது ரசிகர்கள் பலத்த குரலெழுப்பி கேட்டால், சலீம் துரானி உடனே ஒரு சிக்சர் அடிப்பார். கிரிக்கெட் நிர்வாகத்தைச் சீரமைத்ததற்காக ஆண்டின் சிறந்த மனிதராக ‘விஸ்டன்-2017’ என்னைத் தேர்வுசெய்திருக்கிறது. கிரிக்கெட் வாரியத்தைச் சீரமைக்க எங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறோம். இந்தப் பணி எப்படிப்பட்டது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கிரிக்கெட் நிர்வாகத்துக்காக நாங்கள் உருவாக்கியுள்ள மாதிரி நிர்வாக முறை, பிற விளையாட்டுகளுக்கும்கூட முன் மாதிரியாகத் திகழ முடியும். எங்களுடைய பரிந்துரைகள் நல்ல நிர்வாகத் துக்கான, அனைவருக்கும் தெரிந்த நடைமுறை கள்தாம். வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்புத் தன்மை, வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டாத நடுநிலைத் தன்மை, ஆதிக்கமற்ற போக்கு ஆகியவை சங்க நிர்வாகத்தில் அவசியம் என்று கூறியிருக்கிறோம்.

நீதித் துறை, மற்றவர்களுக்கு எதைப் பரிந்துரைக்கிறதோ அதைத் தன்னளவில் கடைப்பிடிக்காமல் விலக்கி வைக்கிறது என்ற விமர்சனத்துக்கு உங்களுடைய பதில் என்ன?

இந்தக் குறைகள் நீதித் துறையில் இல்லவே இல்லை என்று கூற மாட்டேன்; நீதித் துறையில் ஊழலே இல்லை என்று யாராவது கூறினால், அவர் நேர்மையான பதிலைச் சொல்லவில்லை என்பேன். நீதித் துறையில், வேண்டியவர்களுக்கு அறவே சலுகை காட்டப்படுவதில்லை என்று யாராவது கூறினால், அவர் நேர்மையற்றவர் என்றே கூறுவேன். ஆனால், பிற அமைப்புகளில் உள்ளதைவிட நீதித் துறையில் இவையெல்லாம் குறைவு என்று கூறுவேன்.

அனுராதா ராமன்

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 08.03.2017

Tuesday, March 7, 2017

கச்சத்தீவு... நாம் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விஷயங்கள்...


கச்சத்தீவு... நாம் தெரிந்துகொள்ளவேண்டிய பத்து விஷயங்கள்...

அது 2009-ம் ஆண்டு. காங்கிரஸ் அரசுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு கடற்கரை மேலாண்மைத் திட்டம் அறிவிக்கையை வெளியிட்டு இருந்தது. “இந்த அறிவிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் எங்களுக்கு எதிரானவை. இது மீனவனைக் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தும் ஒரு நெடுந்திட்டத்தின் பகுதி” என்று மீனவ மக்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் வேதாரண்யம் பகுதியில் நாம் சந்தித்த மீனவர் இப்படியாகச் சொன்னார்.

“தமிழ் மன்னர்கள் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்தார்கள் என்கிறோம்... பல நாடுகளை வெற்றிபெற்றார்கள் என்கிறோம்... இதுவெல்லாம் எப்படி சாத்தியமானது? பரதவனின் துணையோடுதானே...? வரலாற்றில் எங்கள் பங்களிப்பு திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. இலைகள் எப்போதும் தன் மரத்தின் தொன்மையை அறிந்திருக்கும்.

பாவம், மனிதனுக்குத்தான் தொன்மமும் தெரியவில்லை, தங்கள் தொன்மம் குறித்த பெருமிதமும் இல்லை. அதனால்தான் எவன் எவனோ எங்களை அடிக்கிறான். துணை நிற்கவேண்டிய நாடு, கண்ணீர் சிந்தக்கூட மறுக்கிறது...!” என்றார்.

அந்தக் கோபத்தின் குரல் நியாயமானது. ஆம், வரலாற்றை மறந்துவிட்டோம்... நம் கடல்பரப்பின் கதைகளை நம் பிள்ளைகளுக்குக் கடத்த மறந்துவிட்டோம். அதனால்தான் மீனவன் செத்தால் சமூகத்தின் மனம் பதைபதைக்க மறுக்கிறது; நெகிழ மறுக்கிறது.

மீனவச் சமூகத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு முன், குறைந்தபட்சம் நாம் இழந்த கச்சத்தீவு குறித்தாவது தெரிந்துகொள்வோம்.

2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி, கச்சத்தீவு குறித்த வழக்கில், இந்திய அரசு நீதிமன்றத்தில், “இந்தியாவுக்குச் சொந்தமான எந்த ஆட்சிப் பரப்பும் இலங்கைக்குப் பிரித்து அளிக்கப்படவில்லை” என்றது. இது உண்மையா...?

இல்லை, என்கிறது வரலாறு. “வரலாற்றுக் காலம் தொட்டு, கச்சத்தீவும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறுசிறு தீவுகளும், தமிழ் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமானதாகத்தான் இருந்திருக்கிறது” என்று பத்து வரலாற்றுத் தகவல்களைப் பட்டியலிடுகிறார் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்.

“கச்சத்தீவு பத்து”

1605 முதல் கச்சத்தீவு, குத்துக்கால் தீவு, ராமசாமித் தீவு, மண்ணாளித் தீவு, குருசடித் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேது அரசர்க்கு உரியதாக இருந்தன.

கூத்தன் சேதுபதி (1622 - 1635) காலத்துச் செப்பேடு தலைமன்னார்வரை சேதுபதி அதிகாரத்துக்கு உட்பட்டது எனக் கூறுகிறது.

சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரிமுறை செயலுக்கு வந்த ஆண்டு 1803. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவோடு 1803 முதல் 1812 வரை சேதுபதி ஜமீனாகப் பொறுப்பேற்றார். அவருக்கு வழங்கப்பட்ட ஜமீன் உரிமைப் பட்டயத்தில் கச்சத்தீவு ஆட்சிப்பரப்பும் குறிக்கப்பட்டிருந்தது.

1822-ம் ஆண்டு, கிழக்கிந்திய கம்பெனி கச்சத்தீவைக் குத்தகைக்கு எடுத்தது. அதற்கான பத்திர ஆவணங்கள் ஜமீன் வாரிசுகளிடம் இன்றும் இருக்கின்றன.

1858-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் அரசு நேரடியாக இந்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இதுகுறித்து விக்டோரியா பேரரசு வெளியிட்ட அறிக்கையில் கச்சத்தீவு சேதுபதி மன்னர்களுக்கு உரிய பகுதிகளாகவே குறிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் பிரிட்டிஷ் அரசு பொறுப்பைக் கவனித்துவந்த பி.பி.பியரிஸும் இதை உறுதி செய்திருக்கிறார்.

1913 ஜூலை மாதம், கச்சத்தீவு உள்ளிட்ட சில பகுதிகளைச் சென்னை மாகாண அரசு குத்தகைக்குப் பெற்றது. குத்தகை விபரங்கள் ராமநாதபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டது.

1947-ல் பதிவான இன்னொரு குத்தகைப் பத்திரத்திலும், 'கச்சத்தீவு ராமநாதபுரம் ஜில்லா ராமேஸ்வரம் பகுதிக்குப் பாத்தியமானது கச்சத்தீவு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1957-ல் வெளியான ராமநாதபுரம் மாவட்டம் குறித்த ஆவணக்குறிப்பில், தனுஷ்கோடி கிராம நிர்வாகத்துக்கு உட்பட்டது கச்சத்தீவு' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1972-ம் ஆண்டு வெளியான ஆவணக்குறிப்பில், “கச்சத்தீவு ராமேஸ்வரத்துக்கு வட கிழக்கில் 10 மைல் தொலைவில் இருக்கும் அம்மாவட்டப் பகுதி என்றும் அதன் சர்வே எண் 1250 என்றும் அந்தத் தீவின் பரப்பளவு 285.2 ஏக்கர் என்றும் அங்குள்ள கத்தோலிக்க ஆலயத்தில் தங்கச்சிமடம் பங்குத் தந்தை வழிபாடு நடத்திக் கொடுப்பார் என்றும் குறிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, ராமேஸ்வரம் கர்ணம் (அன்றைய கிராம நிர்வாக அலுவலர்) நிர்வாகத்தில் கச்சத்தீவு இருக்கிறது'' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணக் குறிப்பு வெளியான இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமில்லை என்று அப்பட்டமான பொய் சொல்லி அந்தத் தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தது இந்திய அரசு.
சரி... ஏன் இந்தப் பத்து விஷயங்களை நம் பிள்ளைகளுக்குச் சொல்லவேண்டும்?

“ஊழியில் துடுப்பு தொடுத்தவர்கள்”

ஏறத்தாழ ஆயிரத்து நூறு கிலோமீட்டருக்கு நீண்டுள்ள கடலோரப் பரப்பில் பல லட்சம் மீனவர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் மீனவர்கள் மட்டுமல்ல... வரலாற்றுக் காலம் முதல் வெளிப் படையெடுப்பை முறியடிக்கும் அரண்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்று தமிழரென்று ஓர் இனம் இருப்பது நிச்சயம் மீனவனாலும் மீகாமனாலும்தான்.

மிகையாகவெல்லாம் சொல்லவில்லை...

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டத்தை ஊழி தாக்கிய போது... இவர்களின் நாவாயில் தப்பிவந்தவர்கள் நம் மூதாதையர்கள். நாம் நம் பிள்ளைகளுக்கு அந்த மீனவனின், மீகாமனின் வரலாற்றைச் சொல்ல மறந்துவிட்டோம். அவனுடைய நிலப்பரப்பைக் குறித்தும் சொல்ல மறந்துவிட்டோம். நம் உணவுத்தட்டுக்கும் அவன் உழைப்புக்கும் உள்ள தொடர்பையும் மறந்துவிட்டோம்.... அதனால்தான், அந்த வேதை மீனவர் தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டதுபோல, வந்தவன் போனவன் எல்லாம் தமிழ்ச் சமூகத்தின் அரண்களை அடிக்கிறான்; அவன் நாவாயைப் பிடிங்கி வைத்துக்கொள் என்று யோசனை தருகிறான். இன்னொரு ஊழிவந்து நாம் தப்பிக்க வேண்டுமானால்கூட, அந்த மீனவனின் உதவி தேவை. குறைந்தபட்சம் அந்தச் சுயநலத்துக்காவது... கச்சத்தீவின், நம் மீனவர்களின் கதைகளைச் சொல்வோம்!
- மு. நியாஸ் அகமது

நன்றி : விகடன் செய்திகள் - 08.03.2017

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!


வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!

தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். 
இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது  நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது.  இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.

பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.

திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்

என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம்.

வில்வத்தின் விஞ்ஞான குணம்:
ஆங்கிலத்தில் வில்வத்துக்கு ஆங்கில பெயர் Aegle marmelos. ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம். வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான்,  தீட்சண்யமான அதிர்வலைகளை வெளியிட வல்லவை. வில்வ இலைகளை,  குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைப் பருகுவதால் உடலின் ஒவ்வோர் அணுவும் புத்துயிரூட்டப்படுகிறது.

வில்வ இலை நீருக்குள் செலுத்திய மின்காந்த அலைகள், நம் உடலுக்குள் புகுந்து செயல்படுவதே இதற்குக் காரணம். செப்புக்குவளையில் வைத்த நீரில் வில்வ இலையை ஊறப் போடும்போது, அதிர்வலைகளின் செயல்வேகம் மேலும் அதிகரிக்கிறது.

நிலத்தில் ஆழமாக வேரோடும் வில்வமரத்தின் வேர்கள், மண்ணைக் கவ்விப் பற்றி நிலச்சரிவு ஏற்படாமல் காக்கின்றன. காலம்காலமாக மண்ணின் இறுக்கத்துக்குப் பெரிதும் உதவி உள்ளன வில்வ வனங்கள்.

மருத்துவ குணம்:

வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில் குளித்து, சோப்பு போடாமல் பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் கொண்டால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. 
வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கின்போது  அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால்..வில்வ இலையை அரைத்து சிறிதளவு உண்ணக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். 

வில்வ வேரை இடித்து ஒரு குவளை நீரில் கொதிக்க வைத்து, அதை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தினமும் உண்ணும் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

 நன்றி : விகடன் செய்திகள் -19/04/2016

Monday, March 6, 2017

விதவிதமான மருந்தாகும் விளக்கெண்ணெய்!


விதவிதமான மருந்தாகும் விளக்கெண்ணெய்!

ஆமணக்கு… வறண்ட நிலத்திலும் கூட நன்கு வளரும் தாவரம். பெரும்பாலும் விதைகளுக்காகத்தான் இது பயிரிடப்படுகிறது. 
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவ அகராதி தந்த மாமேதை த.வி.சாம்பசிவம் பிள்ளை, 16 ஆமணக்கு வகைகளைக் குறிப்பிட்டிருந்தாலும் சிற்றாமணக்கு, பேராமணக்கு, வ்வாமணக்கு,காட்டாமணக்கு ஆகிய நான்கு ஆமணக்கு வகைகள்தான் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. 
இவைதான், மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் உள்ளன. இவற்றில் ஆமணக்கு, சிற்றாமணக்கு, செவ்வாமணக்கு ஆகிய மூன்றும் ஒரே வகைத் தாவரங்கள். காட்டாமணக்கு, வேறு வகை. சிற்றாமணக்கின் விதைகள் சிறியதாக இருக்கும். அவற்றைவிட சற்றுப் பெரிதாக இருக்கும், ஆமணக்கின் விதைகள். சிவப்பு நிறத் தண்டுகளைக் கொண்டது, செவ்வாமணக்கு. மற்றவகையில் இது ஆமணக்கை ஒத்தே இருக்கும். உள் மருந்துகளுக்குச் சிற்றாமணக்கு எண்ணெய், வெளிப்பூச்சு மருந்துகளுக்கு ஆமணக்கு எண்ணெய் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நல்லெண்ணெயும் (எள் எண்ணெய்), ஆமணக்கு எண்ணெயும் (விளக்கெண்ணெய்) மட்டும்தான் பெருவாரியான மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. மேல்தட்டு மக்கள் மட்டுமே, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்துள்ளனர். உடலுழைப்பாளிகள் பயன்படுத்தி வந்தது, ஆமணக்கு எண்ணெய் மட்டுமே. வயல்வெளி, ஆறு, வாய்க்கால் மற்றும் ஏரிக்கரைகளிலும் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்த சிற்றாமணக்குச் செடிகளிலிருந்து விதைகளை மக்களே சேகரித்து, அவர்களின் வீட்டு அடுப்பங்கரையிலேயே எண்ணெய் தயாரித்து அதையே சமையலுக்கும், வலிகள் தீர்க்கும் தைலமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். 
தவிர வயிறு, குடல், கர்ப்பப்பை முதலான அனைத்து நோய்களுக்கும் ஆரம்பக்கட்ட மருந்தாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த எண்ணெய் புகையின்றி எரியக்கூடியது. 
அதனால், இரவு நேரங்களில் விளக்கெரிக்க இந்த எண்ணெயைத்தான் பயன் படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான், ஆமணக்கெண்ணெய், ‘விளக்கெண்ணெய்’ என ஆனது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள், இன்றும் இதை ‘கொட்டைமுத்து எண்ணெய்’ என்றே சொல்கிறார்கள்.

சிற்றாமணக்கு விதைகளே சிறந்த மருத்துவக் குணம் கொண்டுள்ளன. ஆமணக்கிலிருந்து இரண்டு முறைகளில் எண்ணெய் எடுக்கலாம். ஆமணக்கு விதைகளை இயந்திர செக்குகளில் இட்டு, ஆட்டி எண்ணெய் பிழிவது ஒரு வகை. ஆமணக்கு விதைகளை இடித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் பெறுவது இன்னொரு முறை. இந்த இரண்டாவது முறை, ‘ஊற்றின எண்ணெய்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில்தான் நம் மூதாதையர்கள், எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர். 
பருப்பு வேகவைக்கும்போது அதில், இரண்டு துளிகள் ஊற்றின எண்ணெயை விட்டால், பருப்பில் உள்ள வாயு நீங்கிவிடும். பிறந்த குழந்தை முதல் கர்ப்பிணி மற்றும் முதியோர் வரை அனைவருக்குமான சிறந்த குளியல் எண்ணெய் இது. அனைத்து தரப்பினருக்குமான மலச்சிக்கலை நீக்குவதற்கு பாதுகாப்பான மருந்து இது. ஊற்றின எண்ணெயில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வர, மலச்சிக்கல் நீங்கும். சிறு குழந்தைகளுக்கு 2 துளிகள் போதுமானது. இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கி. ஊற்றின எண்ணெயுடன் கால் பங்கு  எடையில் கடுக்காய்பிஞ்சுப் பொடியைச் சேர்த்து நன்கு அரைத்து வாய்வு, மூலக்கடுப்பு, ரத்தமூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கப்போகும் முன் 5 மில்லி வரை குடித்து வர, அனைத்து மூலப்பிரச்சினைகளும் தீரும். இதற்கு ‘மூலகுடோரி தைலம்’ என்று பெயர். இது எல்லாச் சித்த மருத்துவக் கடைகளிலும் கிடைக்கும். 
‘தேரையர் தைல வருக்கச் சுருக்கம்’ எனும் அரிய நூல், சுகப்பிரசவம் ஏற்படுவதற்குக் கூறும் ‘பாவனப் பஞ்சாங்குலத் தைலம்’ எனும் அற்புதத் தைலம், சிற்றாமணக்கு விதைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.


சுகப்பிரசவம், அரிய நிகழ்வாகிவிட்ட இக்காலங்களில், கர்ப்பிணிகளின் கருவுக்குப் பாதுகாப்பாகவும், சுகப்பிரசவத்தையும் ஏற்படுத்தும் அற்புத மருந்துதான் இந்தப் பாவன பஞ்சாங்குலத் தைலம். கர்ப்ப காலத்தின் முதல் மாதம் தொடங்கி 10 மாதங்களும் தொடர்ந்து இத்தைலத்தைத் தினமும் சூரிய உதயத்துக்கு முன்னும், இரவு உணவுக்குப் பிறகும், 5 முதல் 10 துளிகளைக் காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடித்து வர கர்ப்பக் காலத்தில் இடைஞ்சல் செய்யும் தொந்தரவுகள் எதுவும் வராது. கர்ப்பக் காலத்தின் கடைசி மாதத்தில் இத்தைலத்தை இரவு மட்டும் 5 மில்லி அளவு உண்டு வர மிகுந்த நன்மையைத் தரும். கடைசி மூன்று நாட்களில் 10 மில்லி வரை இரவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு உண்டு வருவதால் பிரசவ வலியின் தாக்கமும் பிரசவ காலமும் குறைந்து நிச்சயமாக சுகப் பிரசவம் ஏற்படும்.
2015-ம் ஆண்டு முதல், தமிழக அரசு அறிமுகப்படுத்தி வழங்கி வரும், கர்ப்பிணிக்களுக்கான இலவச மருத்துவப் பெட்டகத்தில், பாவன பஞ்சாங்குலத் தைலமும் இடம்பெற்றுள்ளது.  வாந்தி, பேதி மற்றும் வியர்வை உண்டாக்கும் மருந்துகளை வழங்கி, உடலை இயக்கும் உயிர்ச் சக்தியான நாடியில் உணரப்படும் குற்றங்களை நீக்கி, நமது பாரம்பர்ய சித்த மருத்துவம் முற்றிலுமாக குணமாக்கி விடுகிறது. எளிதான முறையில் செய்யப்படும் வாந்தி, பேதி மருந்துகள் சித்த மருத்துவத்தில் நிறைய உள்ளன. அவற்றில் முதன்மையானது ‘சித்தாதி எண்ணெய்’. இது ஊற்றின எண்ணெய்  கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. குணமாகாது என்று கைவிடப்பட்ட பல நோய்களில் இம்மருந்தைத் தொடர்ந்து வழங்கி வர நல்ல முன்னேற்றங்களைக் காணலாம். மற்ற தைலங்களுக்கெல்லாம் காய்ச்சும்போது, அடியில் படியும் வண்டல், மெழுகு பதமாக இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால், சித்தாதி தைலத்துக்குச் சூடான எண்ணெயில் கைவிட்டால் கை கொப்பளிக்காத அளவுக்குத்தான் சூடு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


கொடிய வாத நோயான ‘ரொமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்’ என்று சொல்லப்படும் கை, கால், மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் பலர் உண்டு. சித்த மருத்துவத்தில் ‘உதிரவாத சுரோணிதம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வாத வலிகளுக்கு, ஆமணக்கு விதை கொண்டு ஒற்றடம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கிறது. 
ஆமணக்கு விதைகளைத் தட்டி, ஓடு நீக்கி உள்ளிருக்கும் வெண்மை நிற பருப்புகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றை மண் அகலில் வறுத்து சூடாக்கி பருத்தித் துணியில் முடிந்து ஒற்றடமிட வேண்டும். வாத வலி, வீக்கமுள்ள இடங்களில் ஆமணக்கெண்ணெய் அல்லது பிற தைலங்களைத் தடவி 30 நிமிடங்கள் கழித்து, ஒற்றடம் கொடுக்கும்போது நல்ல பலன் கிடைக்கும். 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை இப்படி ஒற்றடம் கொடுக்கலாம். 
ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படி ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கு இலைகளில் பசு நெய் தடவி, அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வந்தால் இளம் தாய்மார்்களுக்குப் பால் சுரப்பு அதிகரிக்கும். ஆமணக்கு இலையை இடித்துச் சாறு பிழிந்து, தினமும் 15 மில்லி அளவு குடித்து வந்தாலும் பால் சுரப்பு அதிகரிக்கும்.


மார்பகக் காம்புகளில் ஏற்படும் புண்கள் மற்றும் வெடிப்புகளில் ஆமணக்கு எண்ணெய் பூசி வந்தால், விரைவில் குணமாகும். இதைப் பசுமாடுகளுக்கும் பயன்படுத்தலாம். ஆசன வாயில் ஏற்படும் கடுப்பு, புண், புழுக்கடி போன்றவற்றையும் ஆமணக்கு எண்ணெய் பூசி குணப்படுத்தலாம். கண்வலி மற்றும் கண்ணில் தூசி, மண் போன்றவற்றால் ஏற்படும் கண் சிவப்புக்கு கண்ணில் ஒரு துளி ஆமணக்கெண்ணெய் விட்டால், சரியாகிவிடும்.  மஞ்சள் காமாலை நோயையும் ஆமணக்கு இலை குணப்படுத்தும். ஒரு கைப்பிடி ஆமணக்கு கொழுந்து இலை, அரைத் தேக்கரண்டி சீரகம், 2 கிராம் பச்சைகற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காயளவு எடுத்து காலை ஓர் உருண்டை, மாலை ஓர் உருண்டை எனத் தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

இந்நோய் கண்ட சமயத்தில் உப்பு, புளிப்பு, கொழுப்பு நீங்கிய உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும். ஆமணக்கு இலைகளை, ஆமணக்கெண்ணெயில் வதக்கி பொறுக்கக்கூடிய சூட்டில் அடிவயிற்றில் வைத்து, ஒரு பட்டைத்துணியால் தளர்வாகக் கட்டி வைத்தால், கடுமையான சூதக வலியும் (மாதவிடாயினால் வரும் வயிற்றுவலி) 15 நிமிடங்களில் குறைந்துவிடும். 
சூட்டினால், உடம்பில் எந்தப் பகுதியில் கட்டிகள் ஏற்பட்டாலும் இதேபோல ஆமணக்கு இலைகளை, ஆமணக்கெண்ணெயில் வதக்கிக் கட்டி வந்தால், கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். கட்டி உடைந்தவுடன் சீழை வெளியேற்றிவிட்டு அப்பகுதியில் தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் பொடி கலந்து பூசி வந்தால், புண்கள் விரைவில் ஆறும். ஆமணக்கு வேர்களைச் சேகரித்துச் சிறிய துண்டுகளாக வெட்டி, நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு துணியில் 10 கிராம் பொடியை இட்டு முடிந்து கட்டி, புழுங்கல் அரிசியுடன் சேர்த்து வேகவைத்து நொய்கஞ்சியாகச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும். 

இவ்வளவு மருத்துவத்தன்மை வாய்ந்த ஆமணக்கெண்ணெயை நாம் விளக்கெரிக்க மட்டுமே பயன்படுத்துவது, காலத்தின் கோலம். இதை தலையிலோ, உடம்பிலோ பூசுவதற்குத் தயங்குகிறோம். இன்னும் மோசமாக மடமையின் குறியீடாக ஆகிவிட்டது, விளக்கெண்ணெய். வெளிநாட்டு நிறுவனங்கள், இதே எண்ணெயை வேறு பெயரில் சந்தைப்படுத்தி, நம் முன்னோர் பயன்படுத்தியது என்று சொன்னால், அப்படியே நம்பி வாங்கிப் பயன்படுத்துவோம். இதுதான் இன்றைய நிலைமை.

By vayal on 


பரோட்டா பிரியர்களே… சிறுநீரகம், கல்லீரல் கவனம்!

பரோட்டா பிரியர்களே… சிறுநீரகம், கல்லீரல் கவனம்!

கொத்து, வீச்சு, சில்லி… பரோட்டா பிரியர்களே… 
சிறுநீரகம், கல்லீரல் கவனம்!

பரோட்டா’, `புரோட்டா’, வட இந்தியாவில் `பராத்தா’, மொரீஷியஸில் `ஃபராட்டா’, மியான்மரில் `பலாட்டா’… எப்படி அழைக்கப்பட்டாலும், இது இந்தியர்களை வசீகரிக்கும் ஓர் உணவு. முக்கியமாக தெற்காசியா முழுக்கப் பிரபலமான ஒன்று. இதன் அலாதியான சுவை காரணமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்களாதேஷ்… எனப் பல நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிக எளிமையாகத் தயாரிக்கப்படுகிற, அதே நேரத்தில் பிரபலமான உணவு. பரோட்டா குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், ஆறிப்போவதும் இங்கே வழக்கம். 
பரோட்டா அப்படி என்னதான் நம் உடலுக்குத் தீங்கு விளைத்துவிடும்…

தெரிந்துகொள்வோமா?

`இலங்கையில் இருந்து வந்தது’ என்று சிலர் அடித்துச் சொன்னாலுமேகூட, பரோட்டா பிறந்த வீடு இந்தியா என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. `பராத்தா’ என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. வேத காலத்தில், `புரோதாஷா’ என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் ஸ்டஃப் செய்திருப்பார்களாம். அந்த `பு-ரோ-தா-ஷம்’தான் `பராத்தா’ ஆனது என்கிறார்கள். ஆரம்பத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
வட இந்திய பராத்தா முதன்முதலில் பாகிஸ்தானின் பெஷாவரில்தான் உருவானது என்கிறார்கள். அங்கிருந்து மெள்ள மெள்ள வட இந்தியா முழுமைக்கும் பரவியதாம். ஆரம்பத்தில் குட்டி டிபனாக காலை உணவுக்கு மட்டும் இதைச் சாப்பிட்டிருக்கிறார்கள் பஞ்சாபிகள்.

தென் தமிழகத்தில் பரோட்டாவுக்கு புகழ்பெற்ற சைடுடிஷ் சால்னாவும் குருமாவும். கூடவே, சிக்கன் குருமா, மட்டன் குருமா என்று இருந்தால் கேட்கவே வேண்டாம். இவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு நடிகர் சூரி மாதிரி, `நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்… நீ போர்டை அழி’ என்று சவால்விடச் செய்யும் சக்தி பரோட்டாவுக்கு உண்டு. 

வட இந்தியாவில் உருளைக்கிழங்கையும் மசாலாவையும் உள்ளே வைத்து பராத்தாவாகச் செய்கிறார்கள். ஆலு பராத்தா, சென்னா பராத்தா… என விதவிதமான வகைகள் உள்ளன. இன்னும் பனீர், காய்கறிகள், காலிஃப்ளவர், முள்ளங்கி இவற்றால் ஆன பரோட்டாக்களும் உண்டு. தொட்டுக்கொள்ள ரெய்த்தா, தால் என அமர்க்களப்படுகிறது. சில வட இந்தியர்களுக்கு பராத்தாவுக்கு வெறும் ஊறுகாயும் யோகர்ட்டுமே போதுமானது.

வீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா… எனப் பல வகைகளில் பட்டையைக் கிளப்பும் இதன் சுவைக்கு ஈடில்லை. அதனால்தான் பரோட்டா ரசிகர்கள் உலகமெங்கும் வியாபித்திருக்கிறார்கள். இன்றைக்கு, பெரும்பாலான தமிழர்களின் இரவு உணவாகிவிட்டது பரோட்டா. 

ஆரம்பத்தில் இது கோதுமையில் தயாரிக்கப்பட்ட வரை நம் ஆரோக்கியத்துக்குப் பிரச்னை எதுவும் இல்லை. மைதாவுக்கு மாறிய பிறகுதான் சிக்கல். இது குறித்து விரிவாகப் பேசுகிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்…

“இன்றைக்கு பரோட்டாக்கள் தயாரிக்கப்படுவது பெரும்பாலும் மைதாவில்தான். கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருட்கள். தெற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் உற்பத்தி செய்கிறார்கள். 

மைதா வந்த புதிதில் பசை காய்ச்சுவதற்குத்தான் பயன்பட்டது. அமெரிக்காவில் இதற்குப் பெயரே `பேஸ்ட்ரி பவுடர்’ (Pastry Powder) என்பதுதான். 

இரண்டாம் உலகப் போர்… அதன் விளைவாக எழுந்த பஞ்சம் காரணமாக மைதாவை சமையலுக்குள் கொண்டு வந்தார்கள். சமையலுக்குப் பயன்படும் விதத்தில் மைதாவை அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும்.

கோதுமைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவின் நிறம் மஞ்சளாகத்தான் இருக்கும். ஆனால், பல ரசாயனக் கலவைகளால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு வெள்ளை வெளேர் நிறத்துக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பயன்படுவது பிளீச்சிங் கெமிக்கல். 

தெளிவாக, புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், பினாயிலைப் பயன்படுத்தித்தான் மைதாவை அந்த வெள்ளை நிறத்துக்குக்கொண்டு வருகிறார்கள். அதாவது, பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம்தான் பயன்படுகிறது. 

இந்த ரசாயனத்தால் சுத்திகரிக்கப்படும் மைதாவை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மைதாவையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் நாண், ஃபுல்கா போன்றவற்றையும் பலரும் விரும்புவதற்குக் காரணம், அதன் மென்மைத்தன்மை. கோதுமை மாவு கொஞ்சம் கடினத்தன்மையோடு இருக்கும். கோதுமைக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது?

 இதற்கும் காரணம் ரசாயனம்தான். அதன் பெயர் `அல்லோக்ஸான்’ (Alloxan). இதுதான் மைதாவின் மென்மைத் தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. 

இது ஒரு நச்சுப்பொருள். நம் கல்லீரலையும், சிறுநீரகங்களையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது. அல்லோக்ஸான் ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் பரிசோதனைக் கூடங்கள். 

ஒரு நோய்க்கு பொருத்தமான மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை நடக்கும் அல்லவா… அந்த இடம். சர்க்கரைநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, முதலில் எலிகளுக்கு சர்க்கரைநோயை வரவழைப்பார்கள். அதற்கு அல்லோக்ஸான் ரசாயனம் கலந்த கலவையை அதன் உடலில் செலுத்துவார்கள். பிறகு, எலிகளுக்கு இன்சுலின் சுரப்பு நின்றுவிடும்.

ஆக, அல்லோக்ஸான், சர்க்கரைநோயை வரவழைக்கும் ரசாயனம். மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உயர்ந்துகொண்டே போகும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு துணையாக நின்றதில் மைதாவுக்கும் பெரும் பங்கு உண்டு; பரோட்டாவுக்கும்!” என்கிறார் உமர் பாரூக்.

ஏற்கெனவே ரசாயனம் தெளிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தோடு உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள்தான் நம் அன்றாட உணவுக்கானவை என்கிற சூழல். இதில், மைதாவிலும் உடலுக்கு ஒவ்வாத ஏதோ ஓர் எண்ணெயிலும் தயாரிக்கப்பட்ட பரோட்டா நமக்குத் தேவைதானா என யோசிக்கவேண்டிய தருணம் இது.

பரோட்டா பிரியர்கள் ஒன்று செய்யலாம்… வீட்டிலேயே கோதுமையில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை சாப்பிடலாம். அது ஆரோக்கியத்துக்கும் நம் எதிர்காலத்துக்கும் நல்லது.

- பாலு சத்யா

நன்றி : விகடன் செய்திகள் -02.03.2017

2g...3g...4g...5g மற்றும் அதன் வித்தியாசங்கள்


2g...3g...4g...5g  மற்றும்  அதன் வித்தியாசங்கள் 

உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! 

இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவை முதன் முதலில் வெளிவந்த போது இருந்த பரபரப்பை விட, ரிலையன்ஸ் தனது ஜியோ சிம்களின் மூலம் இலவச 4G சேவையை அறிமுகப்படுத்திய போது ஏற்பட்ட பரபரப்பு தான் அதிகம்.

 இந்தியா முழுவதும் தற்போது பத்து கோடி மக்களுக்கு மேல் ஜியோ சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். 

4G என்பது மிக விரைவான நெட்வொர்க் சேவை என்பது அனைவரும் அறிந்ததே. 

ஆனால் இதற்கு முந்தைய 3G அல்லது அதற்கும் முன்னால் பயன்படுத்தப்பட்ட 2G நெட்வொர்க்குகளுக்கும், 4G நெட்வொர்க்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?

 G என்பது GENERATION என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! 

முதன்முதலாக அறிமுகமான 0G தொலை தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலை தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன.  

அதனைப் பற்றிய அலசலே இந்த தொகுப்பு.

1G சேவை :

G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. 

முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவை தான் 1G சேவை. 

1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. 

அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது.  

அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.

2G சேவை :

பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இது தான். 

இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம். 2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின. 

இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2G தான். இதில் தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன. 

இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை.

3G சேவை :

2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது. 

3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. 

நம் இந்திய நாட்டிற்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது. 

வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகு தான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாக தான்.

4G சேவை :

3G சேவையை விட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது. 

அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலை தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை. 

ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.

5G சேவை :

4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வரவிருக்கிறது 5G சேவை. 

இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம். 

மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். 

மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். 

சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. 

இதன் மூலம் தகவல் தொலை தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

- ம. சக்கர ராஜன்
நன்றி : விகடன் செய்திகள் - 06.03.2017

Sunday, March 5, 2017

பி.எப்., பணம் எடுக்க எளிய விண்ணப்ப முறை


பி.எப்., பணம் எடுக்க எளிய விண்ணப்ப முறை

பி.எப்., கணக்கில் இருந்து பணம் எடுக்கும் முறை எளிமையாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த ஒரு பக்க விண்ணப்ப வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பகுதி அளவு தொகையை எடுத்துக் கொள்வதற்கான வழிமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது. 
தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., ஓய்வு காலத்திற்கான சேமிப்பாக அமைகி¬றது. எனினும், பி.எப்., கணக்கு வைத்திருக்கும் ஒருவர், வேலையில் இருந்து விலகிய பிறகு, குறைந்த பட்சம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால், தன் கணக்கில் உள்ள தொகையை விலக்கி கொள்ளலாம்.

அதே போல திருமணம், மருத்துவ அவசரத்தேவை, வீடு கட்டுவது போன்றவற்றுக்காக பகுதி அளவு தொகையை ஐந்தாண்டுகளுக்கு பின் விலக்கி கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒரு பக்க விண்ணப்பம் 
இதற்கு முன், பி.எப்., தொகையை விலக்கி கொள்ள படிவம், 19 அல்லது பென்ஷன் நிதி திட்ட சான்றிதழ் பெற படிவம், 10சி அல்லது பகுதி அளவு தொகையை எடுக்க படிவம், 31 ஆகிய வற்றை சமர்பிக்க வேண்டும். 

இப்போது இவை அனைத்தும் ஒரே படிவமாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு பக்க படிவத்தை இனி பயன்படுத்தலாம்.

 http://bit.ly/2ly17Ju 

இரண்டு வகையில் இந்த படிவம் அறிமுகம் ஆகியுள்ளது. முதல் படிவம் ஆதார் அடிப்படையிலானது. தங்கள், பி.எப்., கணக்கிற்கான யூ.ஏ.என்., பெற்று அதை ஆதார் எண்ணுடனும், வங்கி கணக்குடனும் இணைத்துள்ளவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.

இப்படி கணக்கை இணைக்காதவர்கள் ஆதார் அல்லாத படிவத்தை பயன்படுத்தலாம். ஆதார் அடிப்படையிலான படிவத்தில், பெயர், முகவரி, மொபைல்போன் எண், ஆதார் எண், யூ.ஏ.என்., நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த மற்றும் விலகிய தேதி ஆகியவற்றை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. 

பணியில் இருந்து விலகிய காரணத்தையும் குறிப்பிட வேண்டும். பகுதி அளவு விலக்கலுக்கு, பணம் தேவைப்படும் காரணத்தை குறிப்பிட்டு தொகையை தெரிவித்தால் போதுமானது. பணிபுரியும் நிறுவனத்தின் அத்தாட்சி தேவையில்லை.

ஆதார் அல்லாத படிவத்தில் பிறந்த தேதி, தந்தை பெயர், வங்கி கணக்கு எண் போன்ற கூடுதல் விபரங்களை தெரிவிக்க வேண்டும். 

யு.ஏ.என்., பெறாதவர்கள் பி.எப்., கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும். 

ஆவணங்கள் வேண்டாம்
பழைய முறையில், திருமணம் போன்ற தேவைக்காக பகுதி அளவு பணம் எடுக்கும் போது, திருமண பத்திரிகை போன்றவற்றை இணைக்க வேண்டும். 
ஆனால், இப்போது இவை அவசியம் இல்லை. உறுப்பினர் மட்டும் கையெழுத்திட்டு தெரிவித்தால் போதுமானது. எனினும், மருத்துவ தேவை எனில் அதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும். 

பணம் எடுப்பது எளிதாகி இருந்தாலும், பி.எப்., சேமிப்பு, ஓய்வு காலத்திற்கானது என்பதையும், தவிர்க்க இயலாத சூழல் தவிர இடையே பணத்தை விலக்கி கொள்ளாமல் இருப்பதே உகந்தது என்றும் நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி : தினமலர் (வர்த்தகமலர்) - 06.03.2017