மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நடைமுறை
ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது இரண்டு/மூன்று மாவட்டங்களுக்கு ஒரு நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தினை நமது மாநில அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியின் தகுதி உள்ள ஒருவர் தலைவராக இருப்பார். இந்தப் பதவிக்கு மாவட்ட நீதிமன்ற, நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரையே, மாநில அரசாங்கம் தலைவராக நியமிக்கிறது. மேலும் இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவபர்கள் கல்வி, கேள்விகளில் தலைசிறந்தவர்களாக இருக்கவேண்டும்! என்று நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிபந்தனை விதித்திருக்கிறது. ஆனால், ஓரளவு படித்த ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் நீதிமன்றம் நடைபெறும். தலைவரும் ஒரு உறுப்பினரும் இருந்தால்கூட நுகர்வோர் நீதிமன்றம் நடைபெறும். தலைவர் வரவில்லை என்றால், இந்த நீதிமன்றம் நடைபெறாது.
மற்ற நீதிமன்றங்களைப் போல சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பவும், சாட்சிகளை விசாரிக்கவும் நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.
வழக்கறிஞர்களோ, மனுதாரர்களோ தங்களது வாதுரைகளை (Arguments) வாய்மொழியாகவும், எழுத்துமூலமாகவும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
மனுவினை தமிழிலோ, ஆங்கிலத்திலோ தாக்கல் செய்யலாம். மனுவினை மனுதாரரோ, வழக்கறிஞரோ அல்லது நுகர்வோர் பாதுகாப்பு குழுமத்தைச் சேர்ந்தவரோ தாக்கல் செய்யலாம்.
மனுதாரர், எதிர்மனுதாரர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் முகவர்கள் ஒவ்வொரு கேட்புநாளின்போதும் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மனுதாரர்,எதிர்மனுதாரர் நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கலாம். அவர்களுக்குப் பதிலாக, அவர்களது வழக்கறிஞர்கள் அல்லது முகவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்க வேண்டும்.
மனுதாரர் அல்லது மனுதாரரின் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனு அற்றும் ஆவணங்கள் குறிப்புரைகள் (Memos) ஆகிய எதற்கும் நீதிமன்ற முத்திரை வில்லைகள் (Court fee stamls) ஒட்ட வேண்டிய அவசியமில்லை. வழக்குரைக்கும் அதிகார ஆவணமான (Vakalat) வக்காலத்தில் மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரை வில்லையும், வழக்கறிஞர் நலநிதி முத்திரை வில்லையும் ஒட்டப்படுதல் வேண்டும்.
எதிர்மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குரைக்கும் அதிகார ஆவணத்தில் (Vakalat) மட்டும் நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை மற்றும் வழக்கறிஞர் நலநிதி முத்திரைவில்லை ஒட்டினால் போதுமானதாகும். மற்றபடி எதிர்மனுதாரரால் தாக்கல் செய்யப்படும் எதிர்விரை, மெய்ப்பு உண்மை உறுதிமொழி (Proof Affidavit) ஆவணம், ஆவணங்கள் (Documents), வரைமொழி வாதுரை (Written Argument), குறிப்புரை (Memos) ஆகிய எவற்றிற்கும் நீதிமன்றக் கட்டண முத்திரைவில்லை ஒட்டவேண்டிய அவசியமில்லை.
மனுதாரர் தரப்பு ஆவணங்கள் A வரிசையிலும் , எதிர்மனுதாரர் தரப்பு ஆவணங்கள் B வரிசையிலும் குறியீடு செய்யப்படும். ஆவணங்கள் (Original documents) அசல் ஆவணங்களாகவோ, ஜெராக்ஸ் நகல்களாகவோ இருக்கலாம். ஆனால், நீதிமன்றம் அசல் ஆவணங்களைக் கோரினால், அவற்றையே மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆவணம் ஒவ்வொன்றையும் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் மேலுரையுடன் (with Docket) தாக்கல் செய்ய வேண்டும்.
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை முதலில் நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனுவுடன் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வக்காலத், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் முகவரியிட்ட இரண்டு பதிவு அஞ்சல் உறைகள் ஆகியவற்றை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். மனு சரியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால் எதிர்ம்னுதாரருக்கு வழக்குப் பற்றிய அறிவிப்பும், மனுவின் நகலும் அனுப்பி வைக்கப்படும். மனுதாரருக்கு கேட்பு நாள் (Hearing Date) தெரிவிக்கப்படும்.
மனுவை கோப்பில் எடுப்பதற்கு முன்னர், சில விளக்கங்கள் தேவைப்பட்டால், அந்த விளக்கத்தை வழக்கறிஞரிடம் கேட்டு, நீதிபதி திருப்தி அடைந்த பிறகு, அந்த மனுவை கோப்பில் எடுப்பார். வழக்கறிஞரின் விளக்கத்தில் திருப்தி ஏற்படாவிட்டால், அந்த மனுவை கோப்பில் எடுக்கமாட்டார்.
மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகிய இருவரும் அவரவர் தரப்பு சாட்சிகளை அவரவர்களே முன்னிலைப்படுத்த வேண்டும்.
சாட்சிகள் நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தால்தான் வருவேன் என்று கூறினால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தாமே பெற்று, அந்த சாட்சிக்கு அழைப்பாணையை சார்வு செய்யலாம்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சாட்சிகளை விரிவான நிலையில் விசாரிக்க, மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தின் காலம் இடந்தரவில்லை என்றுரைத்து தனை விரிவான நிலையில் விசாரிப்பதற்குரிய நீதிமன்றம், உரிமையியல் (Civil Court) நீதிமன்றம்தான். அதனால். இந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறேன் என்று, நுகர்வோர் சட்டத்தின் கீழான வழக்கொன்றை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்ற நீதிபதி அனுப்பி வைக்க முடியாது.
மனுதாரர் தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்பினால்,குறிப்புரை ஒன்று தாக்கல் செய்து, திரும்ப பெற்றுக் கொள்ளலாம். தமது மனுவை திரும்ப பெற்றுக் கொள்வது சம்பந்தமாக, தமது மனுவிலும் எழுதி தமது கையொப்பத்தை இடுதல் வேண்டும்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் சமரசம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக இருவரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் குறிப்புரை எழுதிக் கொடுத்தல் வேண்டும்.
மனுவில் இரு தரப்பு வாதமும் கேட்கப்பட்டு தீர்ப்புரை வழங்கப்படும்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் எதிர்வுரை (Counter) 45நாட்களில் தாக்கல் செய்யப்படுதல் வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரர் முன்னிலையாகாததால், ஒருதலைபட்சத் (Exparte) தீர்ப்பானால், அதனை நீக்கறவு (Setaside) செய்ய முடியாது.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள், மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதே நேரத்தில், மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்பவர்கள், மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை செயற்படுத்தாமலிருக்க தடையாணை (Stay order) பெற்றிருக்க வேண்டும். தடையாணை பெறப்படவில்லை எனில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும்.
எந்தெந்த சூழ்நிலைகளில் நுகர்வோர் வழக்கிடலாம்?
பொருள்கள் எதனையும் விலை கொடுத்து வாங்கியிருக்கும் போது அவைகள் பழுதுடையவைகளாகவோ, குறைபாடு உடையவையாகவோ இருக்கும்போது அந்தப் பொருள்கள் எவரிடம் வாங்கப்பட்டதோ அவரிடமே அதனை ஒப்படைத்து, வேறு நல்ல பொருள்களை தரும்படி கோர வேண்டும். அவர் அவ்வாறு குறைபாடுடைய பொருள்களுக்குப் பதிலாக வேறு நல்ல பொருளை மாற்றித் தராதபோது, விற்பனை செய்த பொருள்களை திரும்ப பெற்றுக்கொண்டு அதற்குண்டான தொகையை திருப்பி அளிக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்ய மறுப்பாராயின் அவர்மீது இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம்.
நபர் ஒருவருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கிடுமுன், அதனை எதிர்தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், முன்னதாக அறிவிப்புக் கொடுப்பது நல்லதாகும்.
சேவைக்குறைபாடு தொடர்பாக வழக்கிடுதல்
வழக்கறிஞர் ஒருவர் தமது கட்சிக்காரரிடம் வழக்குகளை நடத்த பணத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும்போது, அவர் நீதிமன்றத்தில் தவறாது ஆஜராகி வழக்குகளை நடத்துதல் வேண்டும். வழக்கறின்கரின் வருகையின்மையால், வழக்கு அவரது கட்சிக்காரருக்கு பாதகமானால், அதனால் ஏற்படும் இழப்புக்கு வழக்கறிஞர் பொறுப்பாவார். அதன் பொருட்டு வழக்கறிஞரிடம் இருந்து இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
மருத்துவர் ஒருவர் நோயாளியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருத்துவம் மேற்கொண்டபோது அவரது தவறான சிகிச்சையால் நோய் குணமடையாதிருந்தாலோ, தவறான அறுவை சிகிச்சையால் நோயாளி பாதிக்கப்பட்டு இருந்தாலோ நோயாளி மருத்துவரிடம் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
பொறியாளர் ஒருவர், வீடு கட்டித் தருவதாக ஒருவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான முறையில் வீட்டைக் கட்டித்தராமல் இருந்தாலோ, புதிய வீடு கட்ட அடமானத்தின் மூலம் கடன் தொகையை வழங்க முன்வந்திருக்கும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம்,உடனுக்குடன் கடன் வழங்காமல் இருந்தாலோ, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வானொலிப் பெட்டி போன்றவற்றை பழுதுபார்த்தவர், அவைகளை சரியாக பழுது பார்க்காமல் இருந்தாலோ,கூரியர், அஞ்சல், மணியார்டர் போன்றவை காலதாமதமாக பட்டுவாடா செய்யப்பட்டாலோ, தொலைபேசித்துறை சரியான சேவை செய்யாமல் கட்டணம் பெற்றாலோ, கட்டணத்தை கூடுதலாக பெற்றாலோ,கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைபேசி இனைப்புக் கொடுக்காமல் இருந்தாலோ, மருத்துவர் ஒருவர் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையை சரியான முறையில் மேற்கொள்ளாததால் பெண்மணி ஒருவர் கருவுற்றாலோ சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார்தாரர் இழப்பீடு கோரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்.
எந்தெந்த வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது
மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு,கொலை முயற்சி வழக்கு, இந்திய தண்டணைச் சட்டம் மற்றும் பிற குற்றவியல் சட்டங்கள் தொடர்பான வழக்குகள், கடனுறுதிச் சீட்டு,விவாக ரத்து, குழந்தைகள் மீட்பு, ஜீவனாம்சம், அடமான மீட்பு,வாடகைப் பிரச்சனை, நிலப்பிரச்சனையில் தடையாணை பெறுதல் சம்பந்தமான வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது.
நன்றி : சட்டத்தமிழ் அறிஞர் புலமை வேங்கடாசலம், M.A, B.L.,