disalbe Right click

Friday, April 7, 2017

ரயிலில் பைக்குகளை கொண்டு செல்ல


ரயிலில் பைக்குகளை கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்?

பணி மாறுதல் உள்ளிட்ட சூழல்களில் கையுடன் மோட்டார்சைக்கிள்களையும் எடுத்துச் செல்லும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. குறைந்த தூரம் என்றால் ஆம்னி பஸ்களில் அல்லது பார்சல் சர்வீஸ் மூலமாக எடுத்துச் செல்ல முடியும்.

 ஆனால், வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு ரயில்களே சிறந்த வழியாகவும், விரைவான வழியாகவும் இருக்கும். இந்தநிலையில், ரயில்களில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை எடுத்துச் செல்வதற்கான சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

இரண்டு வழிகள்

ரயில்களில் இருசக்கர வாகனங்களை எடுத்துச் செல்வதற்கு இரு வழிகள் உள்ளன. அதாவது, பயணியுடன் சேர்த்து எடுத்துச் செல்லும் விதத்திலும், தனி பார்சலாகவும் அனுப்ப முடியும். இதற்கிடையே, ரயில்வே பார்சல் அலுவலகத்திற்கு சென்று, கட்டணம், ஆவணங்கள், குறிப்பிட்ட இடத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு நாட்களாகவும் போன்ற தகவல்களை கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

பேக்கிங்

ரயில்வே சரக்குப் பிரிவிலும் பேக்கிங் செய்வார்கள். ஆனால், ரயில்வே பார்சல் அலுவலங்களுக்கு வெளியில் சில தனியார் அல்லது தனி நபர்கள் சிறந்த முறையில் பேக்கிங் செய்து கொடுக்கின்றனர். இதற்கு கட்டணம் சிறிது கூடுதலாகும் என்றாலும், பைக்கை ரயிலில் ஏற்றும்போது, இறக்கும்போது கீறல்கள் விழாமல் தவிர்க்கும்.


விண்ணப்பம் 

ரயில் சரக்குப் பிரிவில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில், பைக்கின் தற்போதைய விலை மதிப்பு, எஞ்சின் மற்றும் சேஸீ நம்பர்கள் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

கட்டணம் 

தூரத்திற்கும், பைக்கின் எடைக்கும் தக்கவாறு கட்டணம் நிர்ணயிக்கப்படும். மேலும், புறப்படும் நிலையத்திலும், சென்றடையும் நிலையத்திலும் பேக்கிங் மற்றும் கையாளுதல் பணிகளுக்காக ரூ.150 முதல் ரூ.200 வரை தனித்தனியாக வசூலிக்கப்படும். அத்துடன், நீங்கள் குறிப்பிடும் பைக்கின் மதிப்பில் ஒரு சதவீதம் காப்பீடுக்காக வசூலிக்கப்படும். ஆனால், ரூ.10,000 குறைவான மதிப்புடைய வாகனங்களுக்கு இந்த கட்டணம் இல்லை.

தனி பார்சலாக... 

தனி பார்சலாக அனுப்பும்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவல் நேரத்தில் சரக்கு கையாளும் பிரிவில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதேபோன்று, இதே வேலை நேரத்தில் மட்டுமே சென்றடையும் இடத்திலும் டெலிவிரியும் பெற முடியும்.


பயணியுடன் சேர்த்து...

பயணிக்கும்போதே, பைக்கையும் எடுத்துச் செல்லும் வசதியும் உள்ளது. அதாவது, கையுடன் எடுத்துச் சென்று டெலிவிரி பெறும் முறை இது.

முன்பதிவு நேரம்

பயணிக்கும் குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு முன் 2 மணிநேரத்திற்கு முன்பாக சரக்கு கையாளும் பிரிவை அணுக வேண்டும்.

உரிமையாளர் இல்லையெனில்... 

பைக்கின் உரிமையாளர் பயணிக்கவில்லை எனில் அவரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் அல்லது ஏஜென்ட் பைக்கின் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், நீங்கள் பயணிக்கும் ரயிலிலேயே, உங்களது இருசக்கர வாகனம் ஏற்றப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

டெலிவிரி 

பயணியுடன் சேர்த்து பைக்கை எடுத்துச் செல்லும்போது சென்றடையும் இடத்தில் 24 மணிநேரமும் டெலிவிரி பெற்றுக் கொள்ளலாம். சிறிய ரயில்நிலையங்களில், பைக்கை இறக்குவதற்கான வசதி இல்லையெனில், அருகிலுள்ள பெரிய ரயில் நிலையங்களுக்கு முன்பதிவு செய்து டெலிவிரி பெற முடியும்.


ஆவணங்கள் 

ரயிலில் அனுப்பும்போது, இருசக்கர வாகனத்தின் ஒரிஜினல் ஆர்சி புக் அல்லது வாகனத்தின் பதிவு ஸ்மார்ட் கார்டை முன்பதிவு அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும். அத்துடன் ஒரு நகரை அவர்களிடம் தர வேண்டும். அதேபோன்று, வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் பிரதியும் கொடுக்க வேண்டும்

பொது விதிமுறைகள் 

பெட்ரோல் டேங்க் முழுவதுமாக காலி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கவர் 

இருசக்கர வாகனத்தை ரயில்வே விதிகளின்படி பேக் செய்ய வேண்டும். பாலித்தீன் கவர் அல்லது சாக்குப் பைகளால் பேக் செய்யலாம்.

லேபிள் 

ரயிலில் ஏற்றுவதற்கு முன்னர் ரயில்வே துறை அதிகாரிகளால் அடையாள எண்கள் ஒட்டப்படும்.

ரசீதுகள் பத்திரம் 

முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்படும் கட்டண ரசீதின் நகலை, டெலிவிரி பெறும்போது கொடுக்க வேண்டும். அத்துடன், கையுடன் எடுத்துச் செல்லும்போது, பயணச் சீட்டையும், சரக்கு கட்டண சீட்டு என இரண்டையும் காண்பிக்க வேண்டும்.


முழுமையாக சேதமடைந்தால்... 

ஒருவேளை தீ விபத்து உள்ளிட்ட காரணங்களால் உங்கள் இருசக்கர வாகனம் முழுவதுமாக சேதமடைந்துவிட்டால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மதிப்பிற்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.


டிப்ஸ்

ரயிலில் எடுத்துச் செல்லும்போது பெட்ரோல் முழுவதுமாக காலி செய்யப்பட்டு விடும் என்பதால், டெலிவிரி பெற செல்லும்போது சிறிய கேனில் பெட்ரோலை வாங்கிச் செல்வது நலம். ரயில் நிலைய வளாகத்திற்குள் வண்டியை ஓட்ட முடியாது. வெளியில் வந்தவுடன் பெட்ரோலை ஊற்றி எடுத்துச் செல்ல முடியும். கையுடன் எடுத்துச் செல்பவர்கள் வாய்ப்பு இருந்தால் நண்பர்கள், உறவினர்களை பெட்ரோலை வாங்கி வரச்சொல்லலாம்.

நன்றி :  டிரைவ் ஸ்பார்க் - 07.03.2016

Thursday, April 6, 2017

கொடை வள்ளல் அழகப்பச் செட்டியார்

கொடை வள்ளல் அழகப்பச் செட்டியார்

அழகப்ப செட்டியார் 10தொழிலதிபர், கொடை வள்ளல்

வெற்றிகரமான தொழிலதிபரும், கல்வி வளர்ச்சிக்காக வாரி வழங்கிய வள்ளலுமான டாக்டர் அழகப்ப செட்டியார் (Alagappa Chettiar) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# சிவகங்கை மாவட்டம் கோட்டை யூரில் (1909) பிறந்தார். காரைக் குடி எஸ்எம்எஸ் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். சென்னை மாநிலக் கல்லுரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

# லண்டன் சார்ட்டட் வங்கியில் முதல் இந்தியப் பயிற்சியாளராக 21 வயதில் சேர்ந்தார். விமானம் ஓட்டப் பயிற்சி பெற்றார். வாழ்க்கையில் சாதனை படைக்கும் நோக்குடன் துணி வியாபாரத்தில் இறங்கினார். முதலில் கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என தொடங்கப்பட்ட கடை, கேரள மாநிலம் திருச்சூரில் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் ஆலையாக உருவெடுத்தது.

# மலேசியா, பர்மா, கேரளா, கல்கத்தா, பம்பாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், ஈயச் சுரங்கங்கள், துணி ஆலைகள், ஆயுள் காப்பீடு நிறுவனம், உணவு விடுதிகள், திரையரங்குகள் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.

# விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்கினார். 20 ஆண்டுகளில் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தார். திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான துறையை ஏற்படுத்த ரூ.1 லட்சம் வழங்கினார்.

# சென்னையில் 1947-ல் நடந்த ஒரு விழாவில், ‘அறியாமையில் இருந்து இந்தியா விடுதலை பெற, பின்தங்கிய பகுதிகளில் கல்லூரிகள் தொடங்க செல்வந்தர்கள் முன்வர வேண்டும்’ என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் லட்சுமணசாமி முதலியார் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற இவர், தன் சொந்த ஊரில் கல்லூரி தொடங்க ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அந்த விழாவிலேயே வழங்கி துணைவேந்தரிடம் அனுமதி பெற்றார்.

# மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை தொடங்கினார். காரைக்குடியில் 300 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி, தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட வழிவகுத்தார். இதனால் இவரை ‘சோஷலிச முதலாளி’ எனப் புகழ்ந்தார் நேரு.

# இவரது முனைப்புகளும் கல்விக்காக வாரி வழங்கிய தயாள குணமும் இன்று காரைக்குடியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அழகப்பா பல்கலைக்கழகமாக தழைத்தோங்கியுள்ளது. வனாந்திரமாக இருந்த காரைக்குடியை தொலைநோக்குப் பார்வையுடன் ‘கல்விக்குடியாக’ மாற்றியவர் எனப் போற்றப்பட்டார்.

# தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க சென்னை தி.நகரில் தொடங்கப்பட்ட தக்கர்பாபா வித்யாலயாவுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தில் பொறியியல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகத் தில் பொறியியல் கல்லூரி தொடங்க நன்கொடை வழங்கினார்.

# நாட்டு மருந்து ஆராய்ச்சித் துறையை எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியிலும், தமிழுக்காக ஓர் ஆராய்ச்சித் துறையை திருவனந்த புரம் பல்கலைக்கழகத்திலும் தோற்றுவித்தார். கொச்சியில் மகப்பேறு, குழந்தை வளர்ப்பு மையம் நிறுவ நன்கொடை வழங்கினார்.

# அண்ணாமலை, சென்னை பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. 1956-ல் பத்மபூஷண் விருது பெற்றார். தான் குடியிருந்த மாளிகையையும் கல்வி மேம்பாட்டுக்காக வழங்கி யவர். கல்விக் கொடை வள்ளல் என போற்றப்பட்ட அழகப்பச் செட்டியார் 1957 ஏப்ரல் 5-ம் தேதி 48-வது வயதில் மறைந்தார்.

ஆக்கம் : திருமதி ராஜலட்சுமி சிவலிங்கம்
தி இந்து நாளிதழ் - 06.05.2016

திருத்தப்பட வேண்டும் அந்த தீர்ப்பு!

திருத்தப்பட வேண்டும் அந்த தீர்ப்பு!

Tuesday, April 4, 2017

தமிழில் இமெயில் வசதி

Image may contain: 1 person, text

தமிழில் இமெயில் வசதி

தமிழில் 'இ - மெயில்' வசதி பி.எஸ்.என்.எல்., அசத்தல்
தமிழ் உட்பட, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' உருவாக்கும் செயலியை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தி உள்ளது.

மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்துக்கு வலு சேர்க்க, இணையதளம் மூலம் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், 'டேட்டா மெயில்' என்ற செயலியை, பி.எஸ்.என்.எல்., உருவாக்கி உள்ளது.

இதில், தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' முகவரியை உருவாக்கலாம்.

மொபைல் எண்ணை மட்டுமே உள்ளீடு செய்து, விரும்பிய மொழியில், விரும்பிய பெயருடன், இ - -மெயில் முகவரியை உருவாக்கலாம். கூடுதல் சிறப்பு அம்சமாக, ரேடியோ என்ற தனிப்பிரிவு உள்ளது. கணக்கு துவங்குவோர், இப்பிரிவுக்குள் சென்று, விருப்பமான பெயரில், 'ரேடியோ சேனல்' துவக்கலாம்.

இதன் மூலம், தங்களது குரலில், செய்தி உட்பட எத்தகைய கருத்துக்களையும் பேசி ஒலிபரப்பலாம். சமூக வலைதளங்களில், இந்த ரேடியோவை இணைத்து, ஒலி வடிவிலும் பகிரலாம்.

'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து, இதுவரை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இதை 
பதிவிறக்கம் செய்துள்ளனர்.

- நமது நிருபர் –

நன்றி : தினமலர் நாளிதழ் - 05.04.2017

திருமணம் ஆகி இருந்தாலும் கருணைப்பணி வழங்கணும்

Image may contain: 1 person, text
திருமணம் ஆகி இருந்தாலும் கருணைப்பணி வழங்கணும்

திருமணமான பெண்ணிற்கு கருணை பணி மறுப்பது சட்ட விரோதம் : 4 வாரங்களில் பணி வழங்க உத்தரவு

மதுரை: 'திருமணமான பெண் கருணைப் பணி கோர தகுதி இல்லை என மறுப்பது அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானது. பெண்ணிற்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் பணி வழங்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பிச்சை என்பவர் டிரைவராக பணிபுரிந்தார். அவர் 2008 மார்ச் 17 ல் இறந்தார். அவரது மகள் தேனி பி.சி.பட்டியைச் சேர்ந்த யசோதை கருணைப் பணி நியமனம் கோரி, வங்கி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். நடவடிக்கை இல்லை. 

உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலிக்க 2014 ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.வங்கி நிர்வாகம், 'தந்தை இறந்தபோது, மனுதாரருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆதலால், மனுதாரர் கருணைப் பணி நியமனம் கோர தகுதி இல்லை,' எனக்கூறி நிராகரித்தது. 

இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் யசோதை மனு தாக்கல் செய்தார். 

மனுதாரருக்கு பணி வழங்க 2015 ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், 'மனுதாரருக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் 30 வயதை கடந்துவிட்டார்,' எனக்கூறி நிராகரித்தார். 

அதை எதிர்த்து யசோதை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். பதிவாளரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றக் கிளை, யசோதைக்கு பணி வழங்க உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர், உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் ஆர். சுப்பையா, ஜெ. நிஷாபானு கொண்ட அமர்வு விசாரித்தது.வங்கி தரப்பில்,'வங்கியின் துணை விதிகளின்படி யசோதைக்கு கருணைப் பணி வழங்க வழிவகை இல்லை. பணிக்குரிய வயதை கடந்துவிட்டார். அவர் நிவாரணம் கோர முடியாது,' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் : 

திருமணமான பெண்கள் கருணைப் பணி கோர தகுதி இல்லை என்பதை ஏற்க முடியாது. திருமணத்தை காரணமாகக்கூறி, கருணைப் பணி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 

யசோதை 30 வயதை கடந்ததால், அவர் கருணைப் பணி கோர தகுதி இல்லை என்பதை ஏற்க முடியாது. தனி நீதிபதி விசாரிக்கும்போது, வயது பற்றி வங்கி தரப்பில் தெரிவிக்கவில்லை.கருணைப் பணிக்கு அதிகபட்ச வயது 40 என வங்கியின் துணை விதிகளில் உள்ளது. 

இதை யசோதை தாக்கல் செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.எந்த கோணத்தில் பார்த்தாலும், தனி நீதிபதியின் உத்தரவில் குறைபாடு காண முடியாது. வங்கியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். 

யசோதை நீண்ட நாட்களாக நியாயம் கோரி, இந்நீதிமன்றத்தின் கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்கு 4 வாரங்களில் பணி நியமனம் வழங்க வேண்டும், என்றனர்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 04.04.2017

Monday, April 3, 2017

நோயாளிகளின் உரிமைகள் என்ன?


நோயாளிகளின் உரிமைகள் என்ன?
சாதாரணக் காய்ச்சல் என்றால்கூட சிறப்பு மருத்துவர்களைத் தேடிப் போகிற காலம் இது. பல மருத்துவமனைகள், நோயாளிகளைப் பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கின்றன.
என்ன சிகிச்சை, எவ்வளவு செலவாகும், சிகிச்சை முறையின் சாதக,பாதகம் என்னென்ன என்பவற்றைப் பற்றி எல்லாம் விளக்குவது இல்லை.
ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்து, கையெழுத்துப் போட்டுக்கொடுக்கச் சொல்கின்றனர். கையெழுத்துப் போட்டால்தான் சிகிச்சை என்ற நிலையில், அதில் என்ன எழுதி இருக்கிறது என்றுகூடப் படித்துப்பார்க்காமல் கையெழுத்துப் போடும் நிலைதான், பெரும்பான்மையான மருத்துவமனைகளில் உள்ளது.
ஒரு மருத்துவமனைக்கு நோயாளியாகச் செல்லும்போது, நம் உரிமைகள் என்னென்ன எனத் தெரிந்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை.
`மனித உரிமைகளுக்கான பொதுப்பிரகடனம் – 1948’தான் நோயாளிகளின் உரிமைகளுக்கு அடிப்படை. அதற்குப் பிறகு உலக அளவில் பல நாடுகளில், நோயாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமைப்புகளையும் சட்டங்களையும் கொண்டுவந்தன.
இந்தியாவில், 1995-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், மருத்துவ சேவையை, நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்கொண்டுவந்து, ஆணையிட்டதுதான் இந்தியாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. `பாதிக்கப்பட்ட நோயாளிகள், இந்தச் சட்டத்தின் கீழ், சேவைக்குறைபாடு தொடர்பான வழக்குகளை, மருத்துவர் மீதும், மருத்துவமனைகள் மீதும் தொடுக்கலாம்’ என்கிறது உச்ச நீதிமன்றம்.
நோயாளியின் உரிமைகள்நோயாளிகள், தங்கள் நோய் பற்றியும், மருத்துவச் சோதனை முடிவுகள், மருந்து, மாத்திரைகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையானது கண்ணியமாகவும் கனிவாகவும் இருக்க வேண்டும்.
எந்த வகையான துஷ்பிரயோகம், துன்புறுத்தல், புறக்கணிப்பு, சுரண்டல் போன்றவை இருக்கக் கூடாது.
அவரைப் பற்றிய ரகசியம், தனித்தன்மை, அவரது நம்பிக்கைகள், சமூக, கலாசார, மதரீதியான நம்பிக்கைகள் காக்கப்பட வேண்டும்.
நோயாளிக்கு இன்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பற்றி அவருக்கு வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் சொல்ல வேண்டும்.
சிகிச்சை பற்றியும், அதில் உள்ள அபாயங்கள், பாதிப்புகள் பற்றியும் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவரை, மருத்துவமனையைக் கேள்விகேட்கவும், தகுந்த விளக்கங்கள் பெறவும் உரிமை உள்ளது.
சிகிச்சை தொடர்பாக இன்னொரு மருத்துவரிடம் இரண்டாவது கருத்துரை (ஒப்பீனியன்) பெறலாம்.
அறுவைசிகிச்சையின் பலன், பாதிப்புகள், செலவு உட்பட எல்லாவற்றையும் நோயாளியும், அவரது நெருங்கிய உறவினரும் முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
அலட்சிய சிகிச்சையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், சேவைக்குறைபாட்டுக்கும் இழப்பீடு பெற உரிமை உண்டு.
தரமற்ற மருந்து, தவறான மருத்துவ சிகிச்சை, போலி மருத்துவர்களிடம் இருந்து பாதுகாப்பு, இழப்பீடு ஆகியவற்றுக்கான உரிமை.
உடல்நிலையைப் பொறுத்து உள் நோயாளியாகவே, வெளி நோயாளியாகவோ சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் உரிமை.
ஒரு மருத்துவரின் சிகிச்சையை ஏற்றுக்கொள்ளவும் நிராகரிக்கவும் நோயாளிக்கு உரிமை உண்டு.
முறைகேடுகள் ஏதும் நடந்தால், நிர்வாகத்திடம் புகார் அளிக்கும் உரிமை.
தன்னுடைய பிரச்னைக்கு வேறு ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற விரும்பினால், தற்போது பெறும் சிகிச்சையை நிறுத்திக்கொள்ள முழு உரிமையும் உள்ளது.
யாரிடம் புகார் செய்வது?கிரிமினல் குற்றமாக இருந்தால், காவல் துறையை அணுகலாம்.
கவனக் குறைவு, சேவைக் குறைபாடு போன்ற குற்றங்களாக இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.
சட்டத்துக்குப் புறம்பாக, ஒழுங்குநெறி தவறிய குற்றமாக இருந்தால், காவல்துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை (Medical Council of India) அணுகலாம்.
கொடுக்கும் புகாரின் தன்மையைப் பொறுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நோயாளியின் கடமைகள்நோயாளிகளுக்கு எப்படி உரிமைகள் உள்ளதோ, அதேபோல சில கடமைகளும் உள்ளன. அதாவது, தன்னுடைய சிகிச்சை பற்றி தனக்குச் சொல்வார்கள் என்று காத்திருக்காமல், கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது அவரது கடமை.
டாக்டர் கேட்கும் கேள்விகளுக்கு முழுமையான, தனக்குத் தெரிந்த பதிலைச் சொல்ல வேண்டும்.
டாக்டர் பரிந்துரைத்தபடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 10 நாள் மாத்திரை எடுக்கச் சொன்னால், ஐந்தாவது நாளிலேயே நிறுத்திவிடுவது தவறு.
தன்னைப் பற்றியும், தன்னுடைய பழக்கவழக்கம் பற்றியும், மருந்து ஒவ்வாமை ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
டாக்டர் பரிந்துரைத்த மருந்துச் சீட்டு, பரிசோதனை முடிவுகள், பணம் கட்டிய ரசீது போன்றவற்றைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டால், அவை உதவியாக இருக்கும்.
சிகிச்சை அளிக்கும் மருத்துவர், மருத்துவப் பணியாளரை மரியாதையுடன் நடத்துவதும் நோயாளியின் கடமை.
பொதுவாக, நோயாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் குறித்து மருத்துவமனைகளே போதிய விழிப்புஉணர்வு இல்லாமல்தான் இருக்கின்றன,
இந்த நிலை மாற வேண்டும் என்பது அவசியம் மட்டும் அல்ல அவசரமும்கூட.
நன்றி :டாக்டர் விகடன் - 13.03.2016

Sunday, April 2, 2017

திருமலை-திருப்பதியில் கிடைக்கும் இலவசங்கள்

Image may contain: one or more people

திருமலை-திருப்பதியில் கிடைக்கும் இலவசங்கள் 

திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம்? தெரிந்து கொள்வோமா?!

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடத் தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளும், `எங்காவது டூர் கூட்டிக்கிட்டுப் போங்க’, `பிக்னிக் கூட்டிட்டுப் போங்க’ என்று பெற்றோர்களை அரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவரவர் அவரவர்களின் வசதிக்கு ஏற்ப, இப்போதே எங்கு செல்லலாம் என்று திட்டமிடத் தொடங்கிவிட்டார்கள்.

பிள்ளைகள் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். பெரியவர்கள் யாத்திரை செல்ல விரும்புவார்கள். பிள்ளைகளுக்கு சுற்றுலாவாகவும் பெரியவர்களுக்கு யாத்திரையாகவும் இருக்கும் ஸ்தலம் என்றால், அது திருப்பதிதான்.

`திருப்பதியா... அது பணக்காரசாமியாச்சே... அங்கெல்லாம் நாம எப்படிப் போக முடியும்?’ என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக அப்படிக் கிடையாது.

'எவரெவர் எங்கிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், அங்கிருந்தே என்னை உளப்பூர்வமாக நினைத்தால், நிச்சயம் என்னை வந்து அடைவார்கள்' என்பதற்கிணங்க நாம் சுவாமியை எந்தத் தடையுமில்லாமல் வணங்கவேண்டுமென சந்தேகத்துக்கு இடமின்றி நினைத்தால் நிச்சயம் அது இயல்பாக நிகழும்.

சரி, எந்த ஊராக இருந்தாலும், தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் பணம் செலவாகுமே... என்ன செய்வது? என்றுதானே கவலைப்படுகின்றீர்கள். அது பற்றி கவலைப்படத் தேவை இல்லை. தேவை வைராக்கியமும் பொறுமையும்தான்.

திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம் என்று பாருங்கள்... இலவசம் என்பதால் அவை நம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாக இருக்கும். ஆனால், ஆடம்பர வசதிகள் இருக்காது என்பதை முதலிலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

* திருப்பதி பஸ்-ஸ்டாண்டின் எதிர்புறம் இருக்கும் சீனிவாசன் காம்ப்ளக்ஸில் இலவசக் குளியலறைகள், கழிவறைகள் உள்ளன. இவை தவிர நமது லக்கேஜ் பையை வைக்க, இலவச லாக்கர்களும் உள்ளன.

*அதில் நாம் கொண்டு போன லக்கேஜ்களை வைத்துவிட்டு, அங்கிருக்கும் ஹாலில் ஓய்வெடுக்கலாம். இரவு நேரம் என்றால் அங்கேயே படுத்து உறங்கலாம். சுத்தமாகவும் சிறப்பாகவும் அவை பராமரிக்கப்படுகின்றன. கீழ்த் திருப்பதியிலிருக்கும் கோவிந்தராஜ சுவாமி கோயில், அலமேலு மங்காபுரம் ஆகிவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம்.

* ரயிலில் வருபவர்களுக்கு வசதியாக ரயில் நிலையம் எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்திலும் இதே போல் வசதிகள் உள்ளன.

* கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்துசெல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக அலிபிரிக்கும், அலிபிரிக்கும், ஸ்ரீவாரிமெட்டுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இலவச பஸ் வசதி உண்டு.

* திவ்ய தரிசனம் செய்ய, நடந்தே மலையேறி வருபவர்களுக்கு வசதியாக அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை இலவசமாகக் கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.

* திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல இடங்களிலும் இலவச லாக்கர் வசதி உண்டு. இதில் நம் லக்கேஜ்களை வைத்துச் செல்லலாம். ஆனால், மிகவும் காஸ்ட்லியான நகைகள், அளவுக்கு அதிகமான பணம் இவற்றைத் தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுங்கள்.

* திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் இலவசக் கழிப்பறைகள், பக்தர்கள் காலைக் கடன்களை முடிக்க எளிதாக உதவக்கூடியவை.

* உங்களின் செல்போன், காலணிகளைப் பாதுக்காப்பாக வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அங்கு வைத்து டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.

* 'கல்யாணக்கட்டா' என்று சொல்லப்படும் முடிக்காணிக்கை செய்யும் இடத்தில் முடிக்காணிக்கைக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. இங்கு சந்தனம் மற்றும் புதிய பிளேடு ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

* சர்வதரிசன க்யூவில் சென்று சுவாமி தரிசனம் செய்தால், தரிசனம் செய்ய எந்தக் கட்டணமும் கிடையாது. செவ்வாய், புதன்கிழமைகளில் கூட்டம் மிகவும் குறைவாக இருக்கும். தரிசனத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் பொங்கல், சாம்பார் சாதம், உப்புமா இவற்றில் ஏதேனும் ஒன்று இலவசமாக வழங்கப்படும். சிலவேளைகளில் பசும்பால் வழங்கப்படும்.

* தரிசனம் முடித்து வரும் அனைவருக்கும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். இல்லாவிட்டால், பொங்கல், புளியோதரை, மிளகு சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.

* கோயிலின் பிரதான வாசலைத் தாண்டி வெளியே வந்தால், தரிகொண்டா வெங்கமாம்பா இலவச அன்னதானக்கூடம் இருக்கிறது. இங்கு வேண்டுமளவு சாதம் சாம்பார், ரசம், மோர், பொரியல் துவையலுடன் இலவசச் சாப்பாடு வழங்கப்படுகிறது.

* இதையெல்லாம் தாண்டி மலை முழுவதும் சுற்றி வர, இலவச பஸ் ஆரஞ்சு நிறத்தில் ரதம்போல பவனி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பஸ் என காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை மலையைச் சுற்றி வருகிறது. இதில் ஏறி நாம், திருமலையில் எந்த இடத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கிக் கொள்ளலாம்.

* இது தவிர இலவச மருத்துவமனை ஒன்றும் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது.

- எஸ்.கதிரேசன்

நன்றி : விகடன் செய்திகள் - 02.04.2017

பணி செய்யாத போலீசாருக்கு பைன்?


ஒழுங்கா வேலை செய்யவில்லையென்றால் அபராதம்

பணி செய்யாத போலீசாருக்கு பைன்?
புதுடில்லி: பாஸ்போர்ட் தொடர்பான விசாரணை சரிபார்ப்பு நடவடிக்கையை 20 நாட்களுக்குள் முடிக்காத போலீசார் அல்லது வழக்கு பதிவு செய்த அறிக்கையை உடனடியாக வழங்காத போலீசாருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆய்வு:
போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவு அமைப்பு, பொது மக்களுக்கு போலீசார் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், அவர்கள் நேர்மையாகவும், பொறுப்பாகவும் செயல்பட எடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தியது. போலீசார் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகள் என 45 வகையிலான பணிகளை இந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
பட்டியல்:
இதன்படி, உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் சரிபார்ப்பு, லைசென்ஸ் வழங்குதல், பல நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா சான்று வழங்குதல், பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்தல், போராட்டங்களுக்கு தடையில்லா சான்று அளித்தல், கைது நடவடிக்கைகளை தாண்டி விசாரணை மற்றும் வழக்கமான கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட பணி வழங்கப்பட்டுள்ள ஒரு அதிகாரி அந்த பணியை, உரிய காரணமில்லாமல் செய்யாமல் இருந்தாலோ அல்லது கால தாமதம் ஏற்படுத்தினாலோ அந்த அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம்.
மேலும், ஒரு பணியை செய்யாமல் கால தாமதம் செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கு நாள் தோறும் ரூ.250 அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பணியை செய்ய கால நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 729 பேருக்கு ஒரு போலீசாரே உள்ளதாக கூறி, இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாஸ்போர்ட் குறித்த சரிபார்ப்பு மற்றும் ஆயுதங்கள் வைத்திருக்க லைசென்ஸ் வழங்கு ஆகிய பணிகளை 20 நாட்களுக்குள் போலீசார் முடிக்க வேண்டும்.
விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, சட்ட நடவடிக்கைகள் முடித்து 3 நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்பட வேண்டும்.
வெளிநாட்டினர் வருகை குறித்த பதிவை 7 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
போலீசார் சரியாக முடிக்காத பட்சத்தில், பொது மக்கள் சம்பந்தப்பட்ட உயரதிகாரியிடம் முறையீடு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.04.2017

இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரி


இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரி

இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை அதிகாரியானார் சேலம் பிரித்திகா யாசினி சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே காவல் துறை அதிகாரியாக பதவி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.
சேலம்: சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்துள்ளது.
சேலத்தைச் சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. திருநங்கையான இவர், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதினார்.
இதில் அவர் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பணி நியமன ஆணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வழங்கினார். இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் யாசினி பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பணி நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.
அப்போது எஸ்.ஐ.பணிக்கு தேர்வான பிரித்திகா யாசினி தருமபுரியில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் 02.04.2017

Saturday, April 1, 2017

ஒன் மேன் ஆர்மி - டிராபிக் ராமசாமி

Image may contain: 1 person

ஒன் மேன் ஆர்மி - டிராபிக் ராமசாமி

முட்டாள் யார்? - விடை சொல்லும் டிராபிக் ராமசாமி!

01.04.1934 அன்றுதான் இந்த அவதாரப் புருஷன் அவதரித்த நாள். ஆமாம்... அன்றைய தினம் முட்டாள்கள் தினம். ‘குற்றங்களையும் குணக்கேடுகளையும், சமூக அவலங்களையும் எவனொருவன் சகித்துக்கொள்கிறானோ அவனே முட்டாள்’ என உரத்துச் சொல்லும் இந்தக் கிழட்டுப்பயல், முட்டாள்கள் தினத்தில் அவதரித்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஊரே கூடும் அளவுக்கு ஒப்பாரி வைத்து புழுதி கிளம்பும் அளவுக்குப் பூமியை உதைத்த பிறகே நான் பிறந்தேன் என்றாள் என் அம்மா சீத்தம்மாள்.

புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில்தான் வீடு. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்குதான். என் அப்பா ரெங்கசாமி எங்கள் ஏரியாவில் பெரிய மனிதர். இங்குள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் பக்த சபாவின் தலைவராக இருந்ததால் ஏரியாவாசிகளிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. தீவிர காங்கிரஸ்காரர். நேர்மைமிகு ராஜாஜியின் பக்தர்.

நான் வீட்டுக்குத் தலைப்பிள்ளை. எனக்கு அடுத்து ஐந்து தம்பிகள், ஐந்து தங்கைகள். வீடு குழந்தைகளால் நிரம்பி வழிந்தது. வீட்டு வேலைகள் செய்யவும், அப்பாவுக்குப் பணிவிடை செய்யவுமே அம்மாவுக்குத் தலைசுற்றும். தம்பி, தங்கைகளைக் கவனிப்பதுதான் என் முதல் முக்கிய வேலை. அவர்களுக்கு ஆயா முதல் அம்மா வரை எல்லாம் நான்தான். 

பிறகுதான் படிப்பு, பள்ளிக்கூடம் எல்லாம். தம்பி தங்கைகளைப் பராமரித்தப் பிறகு, அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்பிப் போவேன். தெருவுக்குப் பக்கத்தில் இருந்த கார்ப்பரேசன் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியையும் முடித்தேன்.

அப்பா பெரம்பூர் பி.என்.சி. மில்லில் வேலை செய்தார். அவரின் வருமானம் மட்டும்தான். பிள்ளைகளின் தேவைகளைத் தீர்த்து வைப்பதற்குப் போராடுவார். நானும் வேலைக்குப் போனால் அப்பாவின் கஷ்டத்தைக் குறைக்கலாம் என்று எண்ணி ஒரு வேலையில் சேர்ந்துவிட முடிவெடுத்தேன்.

அப்பா வேலை பார்த்த பி.என்.சி. மில்லில் எனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தார். 1954ல், 48 ரூபாய் சம்பளத்தில் வீவிங் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று வருடம் ட்ரெய்னியாக வேலை. 

தேடும் நேரத்தில் கிடைக்கிற வேலை வயிற்றைப் பிடித்து இழுத்தபோது கிடைக்கிற ஆகாரத்தைப்போல். 

அதனால், அந்த வேலையில் மிகுந்த ஆர்வத்தோடு பணியாற்றினேன். இதுதான் வேலை, இத்தனை மணிக்கு வந்தால் போதும் என்கிற சுதந்திரத்தை எல்லாம் சட்டை செய்யாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தேன்.

எவனொருவன் கடிகாரத்தைப் பார்க்காமல் உழைக்கிறானோ... அவனே கடமைக்காரன். வயிற்றுக்குப் படியளப்பவனிடம் வரையறைக் காட்டி உழைப்பது தவறு.
வேலை முடிய இரவு எந்நேரமானாலும் அதுவரை இருந்து பணியை முடித்த பிறகே கிளம்புவேன். இந்தக் கடமை உணர்வு மில்லின் மேலாளர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. அதனால், என்னை விரைவிலேயே பாராட்டி பணி நிரந்தரம் செய்தார்கள்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்து இயங்கியதால் அந்த மில்லில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். எல்லா விதத்திலும் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். ஒரு மிலிட்டரி கேம்ப்போல் அந்த மில் இயங்கும்.

நேரம் எவ்வளவு நெகிழ்வானது, நேர்த்தியானது, நேரத்தின் நாடிபிடிக்கும் வித்தையை இங்குதான் கற்றுக்கொண்டேன். நேரத்தை நேர்மையாகச் செலவிடக் கற்றுக்கொண்டால் வாழ்வின் நேர்கோட்டுப் பயணத்தில் நாம் எந்த நெருடலுக்கும் ஆளாக மாட்டோம் என்பது என் எண்ணம்.

மில்லில் நல்லபடியான உத்யோகம்தான் என்றாலும், என் சமூக ஆர்வம் அடிக்கடி கண்விழித்து என்னை உசுப்பேற்றும். காக்கி யூனிபார்முடன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெறிப்படுத்துதலில் இயங்கும் போலீஸாரைப் பார்க்கும்போது அவ்வளவு ஆசையாக இருக்கும்.

எத்தகைய அர்ப்பணிப்பான பணி இது? காக்கி உடுப்பை உடுத்திக்கொள்ளும்போது எவ்வளவு பெருமிதமாக இருக்கும்?

கைநிறையச் சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும், இந்த போலீஸ் அதிகாரிகளைப்போல் சமூகப் பொறுப்பு மிக்க மனிதனாக உருவெடுக்க முடியவில்லையே என்கிற உறுத்தல் எனக்கு மிகுதியாக இருந்தது.

வேலையை விட்டுவிட்டு போலீஸ் பயிற்சி, அதற்கான படிப்புகளில் இறங்கிவிடலாமா என்கிற எண்ணம் பெருக்கெடுத்து ஓடியது. காக்கிச் சட்டையின் மீது நான் கட்டி வைத்திருந்த காதல் அத்தகையது. 

எந்தக் காக்கி உடுப்பை விரும்பினேனோ... எதை அணிய முடியவில்லை என ஏங்கித் தவித்தேனோ... அந்தக் காக்கிச் சட்டைகளையே பிடித்து உலுக்கும் ஒருவனாக நான் உருவெடுத்தது காலத்தின் கோலம். 

இன்றைக்கு வேண்டுமானால் காக்கி உடுப்பின் மீது எனக்கு தீராதக் கோபமும், ஆத்திரமும் இருக்கலாம். ஆனால், அன்றையக் காலகட்டத்தில் நான் காவல்துறை மீது வைத்திருந்த மரியாதை சாதாரணமானது அல்ல.

‘போலீஸ் உத்தியோகம் பார்க்கிறோமோ இல்லையோ... அவர்கள் செய்யும் சேவையில் பாதியையாவது செய்தே தீருவது’ என முடிவெடுத்தேன். சனி, ஞாயிறு நாட்களில் மில் விடுமுறை என்பதால், ஊர்க்காவல் படையில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். 

அப்போது ஊர்க்காவல் படை, போலீஸுக்கு நிகராக இருந்தது. அதில் வேலைக்குச் சேர்ந்தது கிட்டத்தட்ட பாதி போலீஸ் அதிகாரி ஆனதற்குச் சமம்? அதனால், எனக்குப் பெருமை பிடிபடவில்லை. 1963ல் இருந்து 1971 வரை அதில் பணிபுரிந்தேன். 3 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள்.

கோவிந்தசாமி நாயுடு அவர்கள்தான் அப்போது ஏரியா கமாண்டராக இருந்தார். கடமையைக் கண்ணியத்தோடு செய்யக் கூடியவர். சனி, ஞாயிறுகளில் ஜெயின் ஜார்ஜ் ஸ்கூலில் (புத்தகக் கண்காட்சி நடக்குமே) ட்ரெய்னிங் இருக்கும். ட்ரெய்னிங்கில் உடற்பயிற்சி ஹெவியாக இருக்கும். டிராஃபிக் கிளியர் செய்வது எப்படி என்கிற பயிற்சியை இங்குதான் தெரிந்துகொண்டேன். போலீஸின் அதிகாரங்கள் என்னென்ன என்றும், அவர்களின் வேலை என்ன என்பதையும் விளக்கமாக அறிந்தேன்.

மில்லில் வேலை செய்வது, ஊர்க்காவல் படையில் பணியாற்றுவது என 24 மணி நேரமும் பிஸியாக இருந்தாலும், நிமிட நேரத்தைக்கூட வீணடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி ஜவுளி தொடர்பான உயர் படிப்பை (A.I.M.E.) அஞ்சல் வழியில் படித்து பாஸ் செய்தேன். டாடா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்பிவிட்டு, பழைய மில் வேலையிலேயே தொடர்ந்தேன்.

நிர்வாகம் நடத்திய பதவி உயர்வுத் தேர்வுகள் பலவற்றை பாஸ் செய்து மேலாளருக்கு அடுத்த நிலையில் வந்து அமர்ந்தேன். பொறுப்பு அதிகரிக்கும்போது வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். ஒருகட்டத்தில் 24 மணி நேரமும் போதாது என்கிற அளவுக்கு வேலைப்பளு. வேலையைப் பார்த்து அலுத்துக்கொள்கிற ஆள் இல்லை நான். 

ஆனாலும், வெளி உலகக் கவனிப்புகள் மீது ஆர்வம் பூண்டிருந்த என்னால் ஒரு கட்டடத்துக்குள் அடைபட்டுக் கிடக்க முடியவில்லை என்பதே உண்மை. பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நமக்குக் கீழே நான்கு பேர் கைக்கட்டி நிற்பதைப் பார்த்துப் பெருமிதப்படுவது என நம் எண்ணங்களுக்கு எதிரான சூழல் உருவாகிவிடுமோ... நாமும் அதற்குப் பழக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயம் எனக்குள் உருவானது. 

அதனாலேயே மில் வேலையில் இருந்தப் பிடிப்பு மெல்ல மெல்லத் தகர்ந்தது. இருப்பது ஒரு வாழ்க்கை. இந்த வேலையிலேயே நம் ஆயுள் கரைந்து போய்விடுமோ என்கிற யோசனை என்னை விழுங்கத் தொடங்கியது. எப்போது நாம் பார்க்கின்ற வேலையில் நம் பிடி தளர்கிறதோ... அப்போதே அதில் இருந்து வெளியேறுவது நல்லது. நமக்கு மட்டும் அல்ல... நாம் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அது நல்லது.

அதனால், மிக நல்ல பதவி, கைக்குப் போதுமான சம்பளம் என்கிற நிலையிலும் தைரியமாக ராஜினாமா கடிதம் எழுதினேன். மேல் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. ‘என்னாச்சு உங்களுக்கு?’ எனப் பதறினார்கள். 48 ரூபாயில் தொடங்கிய என் ஊதியம் 2,700 ரூபாயாக உயர்ந்து நிற்பதைச் சுட்டிக் காட்டினார்கள். அன்றைய காலகட்டத்தில் 2,700 ரூபாய் என்பது இன்றைய அரை லகரத்துக்குச் சமம்.

‘இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்யணும்னு நினைக்கிறேன் சார். இந்த மில்லுக்குள் அடைந்து கிடந்தால் என்னால் ஏதும் செய்ய முடியாமல் போய்விடும். அதனால்தான் வெளியே போறேன்’ எனச் சொன்னேன். ஏதோ பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார்கள்.

வேலையை உதறிவிட்டு வீட்டுக்கு வந்தால்... டாடா மில்லில் இருந்து வேலைக்கான அழைப்பு வந்திருந்தது. எந்த வேலைக்காக நான் விண்ணப்பம் அனுப்பிக் கனவுகளோடு காத்திருந்தேனோ... அதே வேலை! உடனே கிளம்பி பம்பாய்க்கு வரச் சொல்லி இருந்தார்கள். சம்பளம் 4,500 ரூபாய். ‘அலுவலக வேலைகளே வேண்டாம்... இந்த சமூகம் சார்ந்த ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமே’ என்கிற எண்ணத்தைத் தவிடுபொடியாக்க எத்தனை விதமான தூண்டில்கள் என்னை மொய்க்கின்றன?

எப்போதுமே எதை நாம் விட்டுவிட நினைக்கிறோமோ... அதுதான் நம்மை விடாப்பிடியாகத் துரத்தும். ''
வேலை கேட்டு நாயாக அலைந்தபோது கிடைக்காத வேலை... அதைவிட்டுவிடத் துடிக்கிறபோது வீடு வரை துரத்தி வருகிறது. அதுதான் விதி. அதுவும் பெரிய அளவு சம்பளம் என்கிறபோது கொள்கையாவது கோட்பாடாவது என மனதைத் தோற்கடித்துவிடுகிறது புத்திசாலி மூளை.

நீண்ட நேரம் யோசனையில் இருந்தேன். 4,500 ரூபாய் அல்ல... நாலு லட்சமே சம்பளம் கொடுத்தாலும் அது எனக்குத் தேவை இல்லை என உறுதியாக முடிவெடுத்தேன். பம்பாய் டாடா கம்பெனியின் அழைப்புக் கடிதத்தை சட்டெனக் கிழித்துப் போட்டேன். காரணம், அது கையில் இருக்கும் வரை மனதும் சலனத்துடனேயே இருக்கும். 

எந்த முடிவையும் யோசித்து எடுப்பது நல்லதுதான். ஆனால், அந்த யோசனை ஒருபோதும் நம்மை சபலப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.

சமூகம் சார்ந்து இயங்க வேண்டும் என்கிற உந்துதல் ஒருபக்கம்... அதே நேரம் குடும்பத்தினரைப் பிரிந்து பம்பாய்க்குப் போய் வாழ்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை. இந்த ஒரு பிறப்பில் நம் உறவுகளாக வாய்த்தவர்களைப் பிரிந்துபோய் லட்சக்கணக்கில் சம்பாதித்துத்தான் என்ன புண்ணியம்? குடும்பத்தைப் பிரிந்து போனால் கோடி ரூபாய் லாபம் என்றாலும், அது நமக்கு வேண்டாம் என முடிவெடுத்தேன். அன்பின் கதகதப்பை இழந்து எதையும் சம்பாதித்துவிட முடியாது என்பது என் எண்ணம்.

ஆனால், எந்தக் குடும்பத்தைப் பிரியக் கூடாது என்றெண்ணி பம்பாய் வேலையை உதறினேனோ... அந்தக் குடும்பமே என்னை அநாதையாகத் தவிக்கவிட்டுப் போனதுதான் வாழ்க்கையின் விசித்திரம்!

- டிராஃபிக் ராமசாமி எழுதிய விகடன் பிரசுரத்தின் ‘ஒன் மேன் ஆர்மி’ நூலில் இருந்து...

மருத்துவ காப்பீடு - 12 யோசணைகள்


மருத்துவ காப்பீடு - 12 யோசணைகள்

மருத்துவக் காப்பீடு... மணியான தகவல்கள்!இன்றைய வாழ்க்கையின் இன்றியமையாத தேவையாகிவிட்ட மருத்துவக் காப்பீடு எடுப்பது தொடர்பான ஆலோசனைகளை, இந்த இதழுக்கான `ஒரு டஜன் யோசனை’களாக வழங்குகிறார், சென்னையில் உள்ள நிதி ஆலோசக நிறுவனமான `ஃபண்ட் இந்தியா லிமிடெட்’டின் தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன்.

பெண்களுக்கு: 
பொதுவாக பெண்கள் தங்களுடைய 18-ம் வயதில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த பாலிசி அவர்களின் மகப்பேறு காலத்தில் உதவும். ஆனால், மகப்பேறு காலத்துக்குக் கவரேஜ் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். பெண்கள் ஏற்கெனவே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தாலும், 35-ம் வயதில் ‘சிறப்பு கிரிட்டிக்கல் இல்னஸ் கவரேஜ்’ பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இதில், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இருப்பதாக உறுதி செய்யப்பட்டாலே, குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு
குழந்தையின் தாய் மகப்பேறுகால கவரேஜ் எடுத்திருந்தால், குழந்தைக்கும் கவரேஜ் கிடைக்கும். அப்படி இல்லாத சூழலில் குழந்தை பிறந்து 90-ம் நாளில் பெற்றோர், குழந்தைக்குச் சேர்த்து ஒரு ‘ஃப்ளோட்டர் பாலிசி’ எடுத்துக்கொள்ளலாம். இது குழந்தையின் 18 வயது வரை உதவும்.

காத்திருப்புக் காலம்:ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்தவுடன் முதல் க்ளெய்ம் செய்ய 30 முதல் 90 நாட்கள்வரை காத்திருக்க வேண்டும். ஒருசில நோய்களுக்கு (உதாரணம்: சிறுநீரகம், குடல் இறக்கம்) மட்டும் காத்திருப்புக் காலம் மாறுபடும். பொதுவாக, பாலிசியின் காத்திருப்பு நாட்கள் குறைவாக உள்ள பாலிசியை எடுப்பது சிறந்தது.

தனிநபர் பாலிஸி: குறைவான தொகைக்கு பாலிசி எடுத்தால் இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக வரும் இதயநோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போதுமானதாக இருக்காது. எனவே, அலுவலகத்தில் வழங்கப்படும் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை கணக்கில்கொள்ளாமல், ஒரு தனிநபர் ஹெல்த் பாலிசியை, வயதுக்குத் தகுந்த கவரேஜுடன் எடுக்கலாம். 

வயது... கவரேஜ் தொகை:30 வயதுக்குக் கீழ், திருமணம் ஆகாதவர் என்றால்... ரூபாய் 3 லட்சம் கவரேஜ் தொகை போதுமானது. 

30 ப்ளஸ் வயது, மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால்... ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசியின் கவரேஜ் தொகை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு இருக்க வேண்டும். 

40 ப்ளஸ் வயதுள்ளவர்கள் எவ்வளவு தொகைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள் என்பதைவிட, என்ன மாதிரியான பாலிசிகளை எடுக்கிறார்கள் என்பது முக்கியம். இந்த வயதில் சாதாரண ஹெல்த் பாலிசிகளை எடுப்பதைவிட, குடும்பத்தில் தாய், தந்தைக்கு என்ன மாதிரியான நோய்கள் (கேன்சர், வாதம், சர்க்கரை) வந்திருக்கிறது, மரபுரீதியாக அது தனக்கும் வர வாய்ப்புகள் உள்ளதா என்பதை குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அதற்கான சிறப்பு பாலிசிகளை எடுக்க வேண்டும். 

வயதை மறைக்காதீர்கள்:பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பாலிசி எடுக்கும்போது, அந்நிறுவனத்தால் பாலிசிதாரருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய் இருப்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், பாலிசி ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, நிறைய பாலிசிதாரர்கள் மருத்துவப் பரிசோதனையைத் தவிர்க்க வயதைக் குறைத்துக் குறிப்பிடுவார்கள். இதனால் ப்ரீமியம் கட்டும்போது பிரச்னை வராது. எனினும், க்ளெய்ம் செய்யும்போது நிச்சயமாகப் பிரச்னை வரும். மேலும், வயதை தவறாகக் குறிப்பிட்ட காரணத்துக்காகவே க்ளெய்மை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. 

மூத்த குடிமக்கள் பாலிசி: 60 வயதைத் தாண்டிய முதியவர்களுக்கு மூத்த குடிமக்கள் (சீனியர் சிட்டிசன்) பாலிசிகள் எடுத்துக் கொள்வது நல்லது. பாலிசி எடுப்பவர் நிச்சயமாக 60 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் அவரின் வாழ்நாள் வயதுவரை புதுப்பித்துக்கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெய ருடன் முதியவர்களைச் சேர்த்து ‘ஃப்ளோட்டர் பாலிஸி’ எடுப்பதைத் தவிர்த்து, பிரீமியம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அவர்களின் பெயரில் பிரத்யேகமாக இந்த சீனியர் சிட்டிசன் பாலிசி எடுப்பதே சிறந்த பயனைத் தரும். 

நோயை மறைக்காதீர்கள்: ஏற்கெனவே நோய் இருந்தால் பாலிசி எடுப்பது பயனற்றது என பலரும் நினைக்கிறார்கள். மேலும் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் கிடைக்காது என நினைத்து பாலிசி எடுக்கும்போது, அந்நோய் பற்றிய தகவல்களை மறைத்துவிடுகிறார்கள். இதனாலும் க்ளெய்மில் பிரச்னை வரலாம். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கும் தாராளமாக பாலிசி எடுக்கலாம். பெரும்பாலும் காத்திருப்புக் காலமும் பிரீமியமும்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எனவே, நோயைக் குறிப்பிட்டே பாலிசி எடுத்துப் பயன்பெறலாம்.

சிகிச்சை பெறும் மருத்துவமனை:சிகிச்சை எடுக்க நேரிடும்போது, பாலிசி எடுத்துள்ள நிறுவனம் டை-அப் வைத்துள்ள ஏதேனும் ஒரு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவசரச்சூழலில் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அந்தத் தகவலை 24 மணி நேரத்துக்குள் அந்நிறுவனத்தின் `டிபிஏ’-வுக்கு (Third Party Administer) தெரிவிப்பது அவசியம். அதேபோல சிகிச்சை எடுத்துக்கொண்ட 15 நாட்களுக்குள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

க்ளெய்ம் முறைகள்:மருத்துவக் காப்பீட்டில் இரண்டு வகையில் க்ளெய்ம் பெற முடியும். ஒன்று, கேஷ்லெஸ். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது பாலிஸி தாரர் பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. நேரடியாக நிறுவனமே செலுத்திவிடும். இன்னொன்று, மெடிக்ளெய்ம். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்த, அந்தக் கட்டண ரசீதுகளை எல்லாம் சமர்ப்பித்து பிறகு பாலிசியில் க்ளெய்ம் செய்வது. இதில்தான் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அல்லது குறைக்க பாலிசியில் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம்.

க்ளெய்முக்குத் தேவையான ஆவணங்கள்: மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது மருத்துவமனையால் வழங்கப் படும் அறிக்கை, சிகிச்சைக்கு தொடர்புடைய ஆவணங்கள், மருந்து வாங்கியதற்கான ஆதாரம், அதற்குரிய மருத்துவர் அறிக்கை, மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் படிவத்துடன் இணைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கலாம். 

முகவரி மாற்றம்:இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு முகவரியில் ஏதாவது மாற்றம் இருந்தால் அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் தவறு ஏதேனும் இருந்தால், அதை உடனடியாக பாலிசி நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். முகவரி மாற்றத்தை அப்டேட் செய்யவில்லை என்றால் க்ளெய்ம் கிடைக்க காலதாமதம் ஆகலாம்.

சு.சூர்யா கோமதி
அவள்விகடன் - 26.01.2016





இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?


இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?

சட்டமே துணை: இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா?

இஸ்லாமியப் பெண்ணை அவரது கணவர் மும்முறை ‘தலாக்’ சொல்லியோ, மூன்று மாதங்களில் மாதம் ஒரு தலாக் சொல்லியோ விவாகரத்து செய்துவிட முடியும்.

 நொடிப் பொழுதில் முத்தலாக் சொல்லி ஒரு பெண்ணின் மண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது, பெண்ணின் அடிப்படை உரிமைக்கு ஊறு விளைவிக்கும் செயல் இல்லையா? 

இஸ்லாமிய அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்குவது திருக்குரானைக் கேள்விக்குட்படுத்துவதா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தின் பேரமர்வு இந்த ஆண்டு மே மாதம் விவாதிக்க இருக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கும் விவாகரத்து உரிமை, இஸ்லாமியப் பெண்களுக்கும் உண்டா? உண்டு.

ஷெரீப்புக்கு அவரது மகள்கள் நஸ்ரினையும் நௌஷத்தையும் நன்றாகப் படிக்க வைக்க விருப்பம். நல்ல மதிப்பெண்கள் எடுத்த நஸ்ரினைச் சட்டக் கல்லூரியில் சேர்த்தார். ஆனால், கல்லூரிக்குச் சென்ற முதல் ஆண்டே நஸ்ரினுக்குத் திருமணமாகிவிட்டது.

 படிப்பை விடாமல் பட்டம் பெற்றார் நஸ்ரின். வழக்கறிஞராக வேலை பார்ப்பதற்குக் கணவர் அனுமதி தரவில்லை. அதனால் வங்கி வேலையில் சேர்ந்தார். நௌஷத் கல்லூரிக்குப் போக மாட்டேன் என்று அடம்பிடித்து, தன் முறைப் பையனைத் திருமணம் செய்துகொண்டார். வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்தார்.

இரு குழந்தைகள் பிறந்ததும் நெளஷத்தின் கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் ஆசை வந்தது. 

நௌஷத்துக்கு ஓய்வு வேண்டும் என்றும் வீட்டு வேலைகளை இன்னொரு மனைவி பார்த்துக்கொள்வார் என்றும் கூறினார். 

நெளஷத்தால் மறுக்கவோ எதிர்க்கவோ முடியவில்லை. இரண்டாவது மனைவி வீட்டுக்கு வந்ததிலிருந்து தினமும் சண்டை, சிக்கல்கள் அதிகமாயின.

நௌஷத் நான்கு வருடங்களாக எல்லா இன்னல்களையும் தன் குழந்தைகளுக்காகப் பொறுத்துக்கொண்டார். தான் படிக்காமல், வேலைக்குப் போகாமல் இருந்தது எவ்வளவு தவறு என்பதை உணர்ந்தார். தன்னுடைய அடையாளம் தனது அழகு, அதற்கு இணை எதுவும் இல்லை என்று நினைத்ததெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று உணர்ந்தார். 

இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தபோதும் நௌஷத் தீர்வைப் பற்றி நினைத்ததே இல்லை.

நௌஷத் தான் ஒரு மனுஷி என்பதையும், தனக்குள்ள அடிப்படை உரிமைகள் தன்னிடமிருந்து பிரிக்க முடியாத ஓர் அம்சம் என்பதையும் உணராமல் வளர்க்கப்பட்டதே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று கருதினார் நஸ்ரின். 

இந்தக் கொடுமையிலிருந்து மீள, விவாகரத்து ஒன்றுதான் வழி என்பதை அவர் குடும்பத்தார் ஏற்கவில்லை.

இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து எதற்கு? 

பணமும் வசதியும் உள்ள கணவன் மனைவிக்குச் சோறுபோட்டுப் பராமரித்தால், ஒரு பெண் விவாகரத்து பெற முடியாது என்றே உறவினர்கள் நினைத்தார்கள். 

சட்டப்படி விவாகரத்து பெற முடியுமா என்பதை நஸ்ரின் தெளிவுபடுத்தினார்.

1939-ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள இஸ்லாமிய விவாகரத்துச் சட்டமானது, பெண்கள் கீழ்கண்டவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களோ இருந்தால் விவாகரத்து கோரலாம் என்கிறது.

1) கணவர் எங்கு சென்றார் என்பதே தெரியாமல் நான்கு ஆண்டுகள் இருப்பது.

2) கணவர் மனைவியை இரண்டாண்டுகள் பராமரிக்காமல் இருப்பது. 

3) கணவர் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்குக் கூடுதலான சிறைத் தண்டனை பெற்றிருப்பது (தீர்ப்பு உறுதியாக்கப்பட்டால் மட்டுமே விவாகரத்து உத்தரவு பெற முடியும்). 

4) நியாயமற்ற காரணங்களைக் கூறி, குடும்பக் கடமைகளை கணவர் ஆற்றாமல் இருப்பது. 

5) இரண்டாண்டுகள் வரை மனநோயாளியாகவோ, கடும் பாலியல் நோயாளியாகவோ, தொழுநோயாளியாகவோ இருப்பது. 

6) தன் தந்தை அல்லது பாதுகாவலர் பதினைந்து வயதுக்கு முன்னரே திருமணம் செய்து கொடுத்திருந்தால், 18 வயது நிறைவடையும் முன்னர் தாம்பத்திய வாழ்க்கை தொடங்காமல் இருந்தால், அந்தத் திருமணத்தை ரத்து செய்யும்படி கோரலாம். 

7) கணவர் மனைவியைக் கீழ்க்கண்ட வகைகளில் கொடுமைப்படுத்தினால் விவாகரத்து கோரலாம்: 

அ. உடல் ரீதியான கொடுமைகள் இல்லாமல் இருந்தாலும், வாழச் சாத்தியமற்ற வகையில் கொடுமைப்படுத்தினால்.

ஆ. முறை தவறிய வாழ்க்கை வாழும் பெண்களுடன் உறவுகொண்டால்.

இ. நடத்தை குறைவான வாழ்க்கையை வாழும்படி கட்டாயப்படுத்தினால்.

ஈ. பெண்ணின் சொத்துகளை அவள் அனுமதியின்றி விற்றால் அல்லது பிறருக்குக் கொடுத்தால்.

உ. மத ரீதியான வாழ்க்கை முறைக்கு இடையூறு செய்தால் அல்லது தடுத்தால்.

ஊ. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டு வாழும்போது எல்லோரையும் சமமாக நடத்தவில்லை எனில், கொடுமை இழைத்ததாகக் கருதி விவாகரத்து தரலாம் என்று சட்டம் கூறுகிறது.

நௌஷத்துக்கு விவாகரத்துப் பெற போதுமான காரணம் இருந்தது. இவ்வளவு காரணங்களின் அடிப்படையில் இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருந்தாலும், விவாகரத்து செய்த பின்னர் கணவரிடமிருந்து ஜீவனாம்ச உரிமையோ அல்லது நிரந்தர வாழ்க்கைப் பொருளுதவியோ கோருவதற்கு இந்தச் சட்டம் உரிமை அளிக்கவில்லை. 

விவாகரத்து வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளலாம். அதிகபட்சம் குழந்தைக்கு இரண்டு வயதுவரை மட்டுமே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று 1986-ல் போடப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்து உரிமைப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.

மற்ற மதங்களைச் சார்ந்த மனைவிகள், குழந்தைகள், பெற்றோர்களுக்கு ஜீவனாம்ச உரிமை (125 Cr.P.C) சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகள் விவாகரத்தான இஸ்லாமியப் பெண்களுக்கு இல்லை. 

இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்துச் சட்டம் இருந்தாலும், நிவாரணம் இன்றி அல்லலுறும் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள். 

ஆனால், இஸ்லாமியக் குழந்தைகளுக்குப் பொது ஜீவனாம்ச சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இஸ்லாமிய ஜீவனாம்ச சட்டத்தின் எல்லையை விரிவாக்கி, குழந்தைகளுக்கு ஜீவனாம்ச உரிமையை உறுதி செய்துவிட்டது.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 02.04.2017