disalbe Right click

Saturday, April 15, 2017

மாஜிஸ்திரேட்களின் அதிகாரங்கள்

மாஜிஸ்திரேட்களின் அதிகாரங்கள்
பிறந்த நாள் சான்று வழங்கும்படி உத்தரவிட மாஜிஸ்திரேட்டுகளுக்கு அதிகாரமில்லை
சென்னை,: 'பிறந்த நாள், இறந்த நாள் சான்றிதழ் வழங்கும்படி, மாஜிஸ்திரேட்டுகள் உத்தரவு பிறப்பிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
திண்டிவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில், ஒருவருக்கு, செஷன்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது தந்தை மனு தாக்கல் செய்தார்.
'சம்பவம் நடந்த போது, சிறுவனாக இருந்தான்; சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நிவாரணம் பெற உரிமை உள்ளது என்பதால், விடுதலை செய்ய வேண்டும்' என, மனுவில் கூறப்பட்டது. பிறந்த நாள் சான்றிதழும், ஆதாரமாக காட்டப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் நாகமுத்து, பி.என்.பிரகாஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. பிறந்த நாள் சான்றிதழை சரிபார்க்கும் போது, மாஜிஸ்திரேட் உத்தரவு அடிப்படையில், அந்த சான்றிதழ் பெறப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, இதுபோன்று எத்தனை வழக்குகளில், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன என்ற, விபரங்களை தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநிலம் முழுவதும், 2014 ஏப்ரல் முதல், 2015 செப்டம்பர் வரை, 21 மாதங்களில், 4.13 லட்சம் எண்ணிக்கையில், பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது தெரிய வந்தது.
நீதிமன்றங்களை தவறாக பயன்படுத்துவதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் பதிவு சட்டத்தின் கீழ், இத்தகைய சான்றிதழ்களை வழங்கும்படி, மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உத்தரவிடக் கூடாது என, உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
அதை தொடர்ந்து, 2017 ஜன., 25ல், தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், 'ஓராண்டுக்குள் பிறந்த நாள், இறந்த நாளை பதிவு செய்திருக்கவில்லை என்றால், வருவாய் கோட்ட அதிகாரியின் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியின் உத்தரவுப்படி, பதிவு செய்து கொள்ளலாம்; மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி அல்ல' என, தெளிவுபடுத்தியது.
இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
பிறந்த நாள், இறந்த நாள் பதிவு சட்டத்தின் கீழ், 2017 ஜன., 25க்கு பின், சான்றிதழ் வழங்கும்படி, மாஜிஸ்திரேட்டுகள் உத்தரவு பிறப்பிக்க முடியாது. வருவாய் கோட்ட அதிகாரி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியின் உத்தரவுப்படி, பிறந்த நாள், இறந்த நாள் பதிவு செய்து கொள்ளலாம் என, 2017 ஜன., 25ல், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும்.
எனவே, ஜனவரி, 25க்கு பின், மாஜிஸ்திரேட்டுகள் பிறப்பித்த உத்தரவு அடிப்படையில், பிறந்த நாள், இறந்த நாள் பதிவு நடந்திருந்தால், அவற்றை பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டும்.
சட்டப்படி, வருவாய் கோட்ட அதிகாரியின் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிக்கு தான், உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது.இத்தகைய விண்ணப்பங்களை அணுகும் அதிகாரிகளுக்கு, தேவையான வழிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி அல்லது வருவாய் ஆய்வாளர்களிடம் அறிக்கை பெற்று, விசாரணை நடத்தி கொள்ளலாம்.
இந்த வழக்கில், அட்வகேட் கமிஷனராக நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஆர்.மோகன்தாசின் பணிகள் பாராட்டத்தக்கது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.04.2017

சம்பாதிப்பதால், பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது


சம்பாதிப்பதால்,  பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது

புதுடில்லி : 'சம்பாதிக்கும் திறன் இருப்பதால், விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுக்க முடியாது' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.
டில்லியைச் சேர்ந்த பெண், மாஜிஸ்திரேட் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கை தொடர்ந்துள்ள பெண், பட்டதாரி. அவர் நினைத்தால், தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியும் என, கணவன் கூறியுள்ளதை ஏற்க முடியாது. ஒரு பெண், வேலைக்கு சென்று சம்பாதிக்கும் திறன் பெற்றிருந்தாலும், அதை காரணம் காட்டி, ஜீவனாம்சம், இழப்பீடு தர முடியாது என கூற முடியாது. இவ்வாறு கோர்ட் கூறி உள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 15.04.2017

அடுக்குமாடி வீட்டுக்கு பட்டா இருக்கிறதா?


அடுக்குமாடி வீட்டுக்கு பட்டா இருக்கிறதா?

அடுக்குமாடி வீடுகளை வாங்குபவர்கள் பத்திரப் பதிவு முடிந்தவுடன் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதாக நிம்மதியாக இருந்துவிடுகிறார்கள். ஆனால் வேலை அத்துடன் முடிந்துவிடாது. வீட்டுக்குப் பட்டா வங்க வேண்டுமல்லவா? தனி வீட்டுக்குப் பட்டா வாங்கலாம். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எப்படிப் பட்டா வாங்குவது? உதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் 6 வீடுகள் இருந்தால், இந்த ஆறு பேரும் தங்களுக்கெனத் தனியாக உட்பிரிவுப் பட்டா வாங்க வேண்டும்.

அடுக்குமாடி வீட்டையோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியையோ வாங்கி, பத்திரப் பதிவு செய்துவிட்டால் சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைக்கக் கூடாது. அப்படி வாங்கிய சொத்துக்குப் பட்டா வாங்க வேண்டும். அதாவது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியிருந்தாலோ அல்லது அடுக்குமாடி வீட்டில் வீடு வாங்கியிருந்தாலோ அதற்கு உட்பிரிவுப் பட்டா வாங்குவது மிகவும் அவசியம். ஏனென்றால், நாம் வீடு வாங்குவதற்கு முன்போ அல்லது மனையில் ஒரு பகுதியை வாங்குவதற்கு முன்போ, அந்த மனை ஒருவருக்குச் சொந்தமாக இருந்திருக்கும். அந்த மனைக்குரிய பட்டா அவரிடம் இருக்கும். ஒரு வேளை உட்பிரிவுப் பட்டாவை வாங்காமல் இருந்துவிட்டால் பிற்காலத்தில் சிக்கல்கள் வரலாம்.

நிலங்களை வகைப்படுத்தி, அது எந்த வகையான நிலம் என்பதை ஆவணப்படுத்துவது வருவாய்த் துறையின் வேலை. இந்த நிலங்களின் உரிமையாளர்களுக்குப் பட்டாவையும் அரசு வழங்கியிருக்கும். வருவாய்த் துறை அளித்த பட்டா ஒருவருக்கு இருக்கும்போது அந்த மனை அவருக்குரியதாகவே இருக்கும். பத்திரம் இருந்தாலும், பட்டாதான் செல்லுபடியாகும். நாம் உட்பிரிவுப் பட்டா வாங்காமல் இருந்தால், தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கோரலாம். பட்டாவைக் காட்டி இன்னொருவருக்குச் சொத்தை விற்பனைகூட செய்யலாம். அதனால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அந்தச் சொத்துப் பத்திரப் பதிவு மூலம் உங்களுக்குரியது என்பதை மறைத்துச் சொத்தை விற்கலாம். வருவாய்த் துறையின் ஆவணப்படி உங்கள் வீடு அமைந்துள்ள குறிப்பிட்ட இடத்துக்கு உட்பிரிவுப் பட்டா இல்லை என்றால் சிக்கல் எழும். உட்பிரிவுப் பட்டா பெறாமல் இருக்கும்பட்சத்தில் சொத்தை விற்றவருக்கு அனுகூலமாகிவிடும். அடுக்குமாடி வாங்கியவர்கள் உட்பிரிவுப் பட்டா கோரி விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மனையில் ஒரு பகுதியை வாங்கியவர்கள் உட்பிரிவுப் பட்டா கேட்டு விண்ணப்பித்தாலோ, சொத்து பிரிக்கப்பட்டு, மனையை உட்பிரிவு செய்து வருவாய்த் துறை பட்டா அளிக்கும். உதாரணத்துக்கு உங்கள் மனையின் சர்வே எண் 35/1 என்று வைத்துக்கொள்வோம். 6 அடுக்குமாடி உரிமையாளர்கள் உட்பிரிவுப் பட்டா கேட்டு விண்ணப்பித்தால் 35/1ஏ, 35/1பி, 35/1சி… என வரிசைப்படுத்தி உட்பிரிவுப் பட்டா வழங்குவார்கள். குறிப்பிட்ட மனை 6 பேருக்கும் சொந்தமாக இருக்கும்.

இதேபோல ஒரு மனையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாங்கியிருந்தால், அது இரண்டாகப் பிரிக்கப்படும். மேலேசொன்னபடி உட்பிரிவு செய்து பட்டா வழங்குவார்கள். அதோடு குறிப்பிட்ட அந்தச் சொத்தின் வரைபடத்தில் நமக்குரிய பகுதியைக் குறிப்பிட்டு வருவாய்த் துறை ஆவணப்படுத்தி வைப்பார்கள். இதன்மூலம் உங்களுடைய சொத்து முழுமையாக உங்களுடையதாகும். பழைய உரிமையாளர் எக்காரணம் கொண்டும் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாத நிலை உருவாக்கப்படும்.

எனவே இதுவரை பத்திரப் பதிவு செய்து பட்டா பெறாமல் இருந்தால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே வருவாய்த் துறை அலுவலங்களில் பட்டா கேட்டு விண்ணப்பம் அளிக்கலாம். இந்த உட்பிரிவுப் பட்டா என்பது அடுக்குமாடி வீடுகளுக்கு மட்டுமல்ல. மனைகளுக்கும் மற்ற பயன்பாட்டு நிலங்களுக்கும் பொருந்தக்கூடியது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.04.2017


Thursday, April 13, 2017

இலவசக் கல்வி - உங்கள் ஊர் பள்ளியில் இடம் எத்தனை?


இலவசக் கல்வி - உங்கள் ஊர் பள்ளியில் இடம் எத்தனை?

இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு பள்ளி வாரியாக காலியிடம் அறிவிப்பு! 
தனியார் மெட்ரிக் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இலவச சேர்க்கைக்கான காலியிடங்கள் பட்டியலை, தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு உள்ளது.

மத்திய அரசின் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பான ஒன்றாம் வகுப்பில், மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, நலிந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். 

அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசே பள்ளிகளுக்கு செலுத்தும். அதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கை, எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்புக்கு நடத்தப்பட உள்ளது. 

தேர்வுத்துறை இணையதளம் மூலம், ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. ஏப்., 20 முதல், மே, 18 வரை பதிவு செய்யலாம். அதன்பின், குலுக்கல் முறையில் வெளிப்படை தன்மையுடன், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இந்த இலவச சேர்க்கைக்கு, 9,000 பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. இந்த இடங்களின் பட்டியலை, பள்ளிகள் வாரியாக, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. 

தேர்வுத்துறையின்www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாவட்ட வாரியாக எந்த பள்ளியில், எத்தனை இடங்கள் உள்ளன; அவற்றில், இலவச சேர்க்கைக்கான இடங்கள் எத்தனை என்ற விபரங்கள் இடம் பெற்றுள்ளன.

நன்றி : தினமலர் - கல்விமலர் - 13.04.2017


Wednesday, April 12, 2017

கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?


கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?
ஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை இன்றுவரை அரசால் அளிக்க முடியவில்லை. அரசு அளிக்கும் நீரை குடிநீராகப் பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் கூடத் தயங்குகின்றனர். இதனால் சின்னச் சின்ன கடைகளில்கூட தண் ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது. 
கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படிச் சுத்தப்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதுபற்றி யாருக்கும் தெரிவதில்லை. பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு நடத்தியபோதுதான் புற்றீசல்போல ஆயிரக்கணக்கில் கேன் தண்ணீர் நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. என்னதான் புது லேபிள் ஒட்டினாலும், பலர் குழாய் நீரையே பிடித்து கேனில் அடைத்து விற்பனை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.
உண்மையில், தண்ணீர் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது? இப்படிப்பட்ட தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசினோம்.
கேன் குடிநீர்பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளருமான எஸ்.கே.சங்கர் கூறுகையில், 'கேன், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் பூச்சிக்கொல்லி இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷோடிக் என்னும் ஆராய்ச்சியாளர், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் கிடைக்கும் பாட்டில் நீரில் ஆன்டிமோனி என்ற நச்சு கலந்திருப்பதாக கண்டறிந்தார். நீரில் இந்த நச்சு இல்லை. கேன், பெட் பாட்டில் தயாரிக்கப்படும் மூலப் பொருட்களில் இந்த நஞ்சு இருப்பதுதான் தண்ணீர் விஷமாகக் காரணம். என்னதான் தண்ணீரைச் சுத்தப்படுத்தினாலும், பாட்டிலில் அடைக்கும்போது இந்த நச்சு கலந்துவிடுகிறது. நச்சு அதிகரிக்கும்போது சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது.
இது தவிர, இந்த பாட்டிலில் பிஸ்பினால் ஏ (Bisphenol A) என்ற நச்சு உள்ளது. இது கருவில் உள்ள சிசு முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. 'இன்றைக்கு பெண் குழந்தைகள் மிக விரைவாக பூப்பெய்துவதற்கு இந்த பிஸ்பினால் ஏ-வும் ஒரு காரணம்என்கிறது அமெரிக்க நலவாழ்வு நிறுவனத்தின் அங்கமான 'தேசிய நச்சு இயல் திட்டம்என்ற அமைப்பு. மேலும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட வேறு சில பாதிப்புகளையும் இது ஏற்படுத்துகிறது என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கிறது.
2008-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், மனிதக் கழிவில் உள்ள நச்சுக்கள் பாட்டில் குடிநீரில் உள்ளதாக தெரியவந்தது. சென்னையில் விற்கப்படும் கேன் நீரைச் சோதனை செய்ததில் ஈகோலை மற்றும் கோலிபார்ம் கிருமிகள் இருப்பது தெரியவந்தது. இப்படி பாட்டில் மற்றும் கேன் குடிநீரில் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளன.
சிங்கப்பூர், நியூயார்க், லண்டன் போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களில் அரசாங்கமே பாதுகாப்பான குடிநீரை குழாய்களில் விநியோகம் செய்கிறது. ஆட்சியாளர் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் அந்த நீரையே பயன்படுத்துகின்றனர். அங்கு எல்லாம் இது சாத்தியமாகும்போது இங்கு மட்டும் ஏன் இது சாத்தியமாகாது?
தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆனால், மழைப் பற்றாக்குறை மாநிலம் இல்லை. இதனால்தான் நம் முன்னோர் 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டினர். இவற்றைப் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ அரசும், மக்களும் தவறிவிட்டனர். இதனால்தான் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு சென்றுள்ளோம். சென்னையில் மட்டும் வருடத்துக்கு சராசரியாக 1200 மி.மீ. மழை பொழிகிறது. நகரின் ஒட்டுமொத்த வருடத் தேவையைவிட அதிகம் இது. ஆனால், இந்த மழை நீரை சேகரிக்கவோ, பாதுகாக்கவோ அரசிடம் உரிய திட்டம் இல்லை. சென்னை மக்கள் மட்டும் ஒரு வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீருக்குச் செலவிடுகின்றனர். இது ஒவ்வோர் ஆண்டும் 40 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அரசு நினைத்தால் 1000 மடங்கு குறைந்த செலவில் பாதுகாப்பானக் குடிநீரை விநியோகிக்க முடியும். இதற்கான தொழில்நுட்பமும், நிதியும் அரசுக்கு பெரிய சிக்கலாக இருக்காது. இதை நிறைவேற்ற ஆள்வோரின் ஆழ்ந்த விருப்பமும், அரசியல் உறுதியும்தான் தேவை' என்றார்.
'கேன் தண்ணீர் பலகட்டப் பரிசோதனைக்குப் பிறகே விற்பனைக்கு அளிக்கப்படுகிறது' என்கிறார் தண்ணீரை பரிசோதிக் கும் மைக்ரோ பயாலஜிஸ்டான ஜெயந்தி. வாட்டர் பிளான்ட்களில் தண்ணீர் சுத்திகரிப்புச் செய்வது பற்றி அவர் கூறுகையில், 'போர் தண்ணீர், கிணற்று நீர், லாரிகளில் கொண்டு வரப்படும் நீர் ஆகியவற்றை சுத்தம் செய்து மக்கள் குடிக்கும் வகையில் மாற்றும் பணியை நாங்கள் செய்கிறோம். இந்தத் தண்ணீரில் டி.டி.எஸ். (Total dissolved solids) என்பது எவ்வளவு என முதலில் கண்டறிய வேண்டும். குடிக்கத் தகுதியானதுதானா என்பதை முடிவுசெய்வது இந்த டி.டி.எஸ்.-தான். டி.டி.எஸ். அளவு அதிகரிக்கும்போது  தண்ணீர் துவர்ப்பாக, உப்பாக இருக்கும். டி.டி.எஸ். எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்தபிறகு, தண்ணீரைச் சுத்தப்படுத்தும் செயல்பாடு தொடங்கும்.
முதலில் கார்பன் பில்ட்டர் என்ற வடிகட்டியில் தண்ணீர் செலுத்தப்படும். இதில் மிதக்கும் தூசுகள் வடிகட் டப்படும். பிறகு சான்ட் பில்ட்டர் எனப்படும் மணல் வடிகட்டியில் நீர் செலுத்தப்படும். இப்போது கலங்கலாக இருந்த நீரானது தெளிவாகும். இதன் பிறகு மைக்ரான் பில்ட்டர் எனப்படும் மிக நுண்ணிய தூசு, கிருமிகளை வடிகட்டும் வடிகட்டியினுள் நீர் செலுத்தப்படும். முதலில் 0.5 மைக்ரான் வடிகட்டியினுள் தண்ணீர் சுத்திகரிக்கப்படும், அதைத் தொடர்ந்து 0.1 மைக்ரான் அளவுள்ள மிகவும் நுண்ணிய வடிகட்டியினுள் செலுத்தி தண்ணீரில் உள்ள எல்லா தூசுக்கள், நுண்ணிய பொருட்கள், கிருமிகள் வடிகட்டி சுத்தப்படுத்தப்படும்.
இதன் பிறகு ரிவர்ஸ்ஆஸ்மோசிஸ் எனப்படும் சவ்வூடு பரவல் முறையில், தண்ணீர் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தப்பட்டு வெளிவரும்போது மிகத் தூய்மையானதாக, குடிக்கத் தகுந்ததாக கிடைக்கும். இந்தத் தண்ணீரில் அல்ட்ரா வயலட் கதிர் செலுத்தி 100 சதவிகிதம் சுத்தமான குடிநீராக மாற்றப்பட்டு கேன்களில் நிரப்பப்பட்டு, மக்களுக்குக் குடிக்க அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான நிறுவனங்கள் இந்த சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சுத்திகரிப்பு அனைத்தையும் முறையாக செய்தாலே தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும்.
இதன்பிறகு, மைக்ரோபயாலஜிஸ்ட், கெமிஸ்ட் ஆகியோர் இந்த நீரைப் பரிசோதனைகளைச் செய்வர். மைக்ரோபயாலஜியில் ஆறு விதமான பரிசோதனைகள் செய்து, அந்தத் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை உறுதிப்படுத்துவோம். கெமிஸ்ட்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு தாது உப்புக்கள் உள்ளதா என்பதை ஆறு - ஏழு வகையான பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்துவார்கள். அதன் பிறகே கேனில் நிரப்பப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பரிசோதனைகளை எங்கள் ஆய்வகத்தில் மட்டும் செய்வதில்லை; மாதத்துக்கு ஒரு முறை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்வோம்'' என்றார்.
'சுத்திகரிப்பு முறைகள் என்னதான் துல்லியமாக இருந்தாலும், தண்ணீர் அடைக்கப்படும் கேனும், அது வைக்கப்படும் கிடங்குகளும் பாதுகாப்பானதாக இல்லை எனில் அந்தத் தண்ணீர் கெட்டுவிடும்'' என்கிறார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சி.பி.ராஜா.
'சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். தேவை அதிகமாக இருப்பதால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் விற்பனையாகி விடுகிறது. தண்ணீர் கேன்களை சுத்தமான, சூரிய ஒளி நேரடியாகப் படாத இடத்தில் வைக்கவேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரானது எளிதில் மற்ற பொருட்களின் மணத்தைக் கவரும் தன்மை கொண்டது. எனவே, அதன் அருகில் இறைச்சி, ரசாயனங்கள் என எதையும் வைக்கக்கூடாது' என்றார்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்து டாக்டர் புகழேந்தி கூறுகையில், 'தண்ணீர் வியாபாரத்தில் அதிகப்படியான வருவாய் கிடைப்பதால் அது தனிநபர் சொத்தாக மாறிவிட்டது. தனியார் நிறுவனங்கள் பெருமளவில் நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றன. தண்ணீரில் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு தாது உப்புக்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, தண்ணீர் நிறுவனங்கள் பரிசோதனை செய்யும். இந்தப் பரிசோதனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? இதை அவ்வப்போது வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் செய்வதன் மூலம் தான் அது பாதுகாப்பான குடிநீரா என்பது தெரியவரும்.
உலகில் 23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, ஹெபாடைடிஸ் வரையிலும் பல நோய்கள் ஏற்படுகிறது. பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்யவில்லை எனில் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், பல நிறுவனங்கள் சுத்திகரிப்பு ஏதும் செய்யாமல் நேரடியாக கேன்களில் நீரைப் பிடித்து விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை' என்றார்.
- பா.பிரவீன் குமார்
 எப்படி கண்டறிவது?
  • பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை ஆய்வகங்களில் மட்டுமே கண்டறிய முடியும். நீங்கள் வாங்கும் கேன் தண்ணீரின் நிறம் கலங்கலாக இருந்தாலோ, சுவையில் மாறுபாடு இருந்தாலோ அது சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்காது. இதுபற்றி உடனே பி.ஐ.எஸ்.-ல் (Bureau of Indian Standards-BIS)புகார் தெரிவிக்கலாம்.
  • உலக அளவில் குடிநீர் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. விரைவில் 'இது முதல் இடத்துக்கு வந்துவிடும்என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது.
  • சென்னை 'மெட்ரோ வாட்டர்நீரின் தரம்பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்விகள் கேட்டது. இதற்கு சென்னை மாநகராட்சி அளித்த பதில், '2007-ம் ஆண்டு முதல் தோராயமாக மேற்கொள்ளப்பட்ட 440 பரிசோதனைகளிலும் அந்த நீர் 'குடிக்க தகுதியற்றதுஎனத் தெரியவந்தது' என்பதாகும்.

 நன்றி : டாக்டர் விகடன் - 16.08.2013

·       


Tuesday, April 11, 2017

கடன் வாங்கியவரின் உரிமைகள்

Image may contain: 1 person, text

கடன் வாங்கியவரின் உரிமைகள் 

கவலைப்படாதீர்கள் கடனாளிகளே! உங்களுக்கான 10 உரிமைகள்!

கடன் வாங்கியவர்கள் அதை சரியாகக் கட்டமுடியாத நிலை ஏற்படும் பட்சத்தில், அவர்களைக் கேவலமாகப் பேசும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

அதிலும் விஜய் மல்லையா வாங்கிய ரூ.9,000 கோடி கடனை திரும்பத் தராமலே வெளிநாடு ஓடியபின்பு, கடன்காரர்கள் நிலைமை படுமோசமாக மாறியிருக்கிறது. ஆனால், எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு அசம்பாவிதத்தில் சிக்கி, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் கடனாளிகளுக்கு சில உரிமைகளை வழங்கி இருக்கிறது நம் அரசாங்கம். அந்த உரிமைகள் என்ன என்று விளக்குகிறார் கடனாளிகள் நலச் சங்கத்தின் தலைவர் எம்.எம்.கினி.

‘‘ஒரு வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய வருபவரைவிட, கடன் வாங்க வருபவரைத்தான் கூடுதலாக மதிக்க வேண்டும். அவர் தரும் வட்டியும் கட்டணமும்தான் வங்கிக்குக் கிடைக்கும் முக்கிய வருமானம் ஆகும். ஆகவே, கடனாளிதான் வங்கியின் ஒரு முக்கியமான கூட்டாளி என்பதை நாம் உணர வேண்டும்’’ என்றபடி கடன் வாங்கியவருக்கு உள்ள உரிமைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

1. வங்கித் திட்டங்கள்!
வங்கியில் கடன் வாங்க வருகிறவருக்கு வங்கி தரும் கடன் திட்டங்களைப் பற்றி முழுமை யாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை உண்டு. கடன் தொகையை எப்படிக் கட்டினால் எளிதில் கடனைக் கட்டி முடிக்கலாம், எந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்கி னால் வட்டி குறையும் என்று முழு விவரத்தையும் கடன் வாங்கு பவருக்கு வங்கியாளர்கள் கட்டாயம் விளக்க வேண்டும்.

2. தகுதி!
ஒருவருக்கு கடன் கிடைக்குமா என்பதை வங்கியாளர் உடனடியாக அல்லது எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொல்ல வேண்டும். தேவை இல்லாமல் கடன் வாங்க வருபவரை இழுத்தடிக்கக் கூடாது.

3. திட்டத்தைப் பின்பற்றச் சொல்வது!
உதாரணமாக முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை எந்தப் பிணையமும் இன்றி முழுமையாக வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை 7 வருடம் வரை கட்டலாம். இது போன்ற உரிமைகளை கடன் வாங்குபவர் வங்கியாளர்களிடம் இருந்து கட்டாயம் கேட்டு தெரிந்து கொண்டு கடன் வாங்கலாம். இதற்கு பிணையம் தரச் சொல்லி, கடனாளியை வங்கிகள் நிர்பந்திக்கக் கூடாது.

4. கூடுதல் கடன்! 
ஒரு நிறுவனம் அல்லது தனிநபர், கடன் வாங்கி தன் நிறுவனத்தை நிறுவி சரியாக நடத்திக் கொண்டிருக்கும்போது, குறிப்பாக வங்கியில் வாங்கியக் கடனை சரியாக காலம் தவறாமல் செலுத்தி, நல்ல லாபம் ஈட்டி தொழில் முன்னேறும் சமயத்தில் கூடுதல் கடன் கேட்டால் வங்கி கள் தேவையான மதிப்பீடுகளை செய்து கடனை வழங்க வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் நன்றாக செயல்பட்டு வரும் நிறுவனத்துக்கு கூடுதல் கடன் வழங்க முடியாது என்று சொல்லக்கூடாது.

5. அவமானப்படுத்தினால் இழப்பீடு!
ஒருவர் தன் சொந்தத் தேவைக்காகவோ அல்லது தன் நிறுவனத்தின் சார்பாகவோ மற்றொருவருக்கு காசோலையை கொடுக்கிறார். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகை, காசோலை வழங்கிய வங்கிக் கணக்கில் இருந்து, ஏதோ ஒரு காரணத்துக்காக காசோலையில் பணம் இல்லை என வங்கியானது அதை திருப்பி அனுப்பிவிட்டால், அதனால் ஏற்பட்ட அவமானத் துக்கு வங்கியிடம் நஷ்டஈடு கேட்கலாம்.

6. நோட்டீஸுக்கு 60-வது நாள்!
ஒருவர் வங்கியில் வாங்கிய கடனை 90 நாட்களுக்கு மேல் தன் தவணைகளை செலுத்த வில்லை என்றாலோ அல்லது வாராக் கடனாக வங்கியில் தீர்மானிக்கப்பட்டாலோ, கடன் வாங்கியவரின் சொத்தை விற்றுக் கடனை மீட்க வங்கிக்கு உரிமை இருக்கிறது. ஆனால், சொத்தை கையகப்படுத்தி விற்பதற்குமுன், கடனாளிக்கு தன் கடனை திருப்பிச் செலுத்த ஒரு நோட்டீஸ் அனுப்பி 60 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். அப்படி 60 நாட்களில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால்தான் சொத்தை கையகப்படுத்தி விற்று கடனை மீட்டுக் கொள்ளலாம்.

7. மதிப்பீடு எவ்வளவு
கடன் வாங்கியவரால் 60 நாட்களுக்குள் பணத்தைக் கட்ட முடியவில்லை எனில், கடனாளியின் சொத்து எவ்வளவு தொகைக்கு வங்கி மதிப்பீட்டாள ரால் மதிப்பிடப்பட்டிருக்கிறது, எங்கு, எப்போது ஏலம் விடப் போகிறார்கள் என்கிற தகவல் களை கடன் வாங்கியவருக்கு தகவல் சொல்ல வேண்டும்.

8. கடன் வாங்கியவரே தன் சொத்தை விற்கலாம்!
ஒருவேளை வங்கி மதிப்பீட் டாளர் மதிப்பிட்டிருக்கும் தொகையைவிட கூடுதல் தொகைக்கு கடனாளியின் சொத்து இருக்கும் என்றால் தாராளமாக வங்கியிடம் புகார் தெரிவித்து, மறு மதிப்பீடு செய்யச் சொல்லலாம். கடன் வாங்கியவரே கூட வங்கி மதிப்பீட்டைவிட கூடுதல் விலைக்கு சொத்தை வாங்கும் ஆட்களை வங்கிக்கு அறிமுகப்படுத்தலாம்.

9. கடன் போக உள்ள தொகை!
சொத்தை விற்றுவரும் பணம், வங்கியில் வாங்கிய கடன் மற்றும் ஏலம் நடத்தியதற்கான செலவுகள் போக மீதம் இருந்தால், அந்தப் பணத்தை வங்கியிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். வங்கியாளர் வழங்கும் எந்த நோட்டீஸாக இருந்தாலும், அதற்கு கடனாளி ஏதாவது மறுப்பு தெரிவித்தால், அடுத்த 7 நாட்களுக்குள் வங்கியாளர் கடனாளிக்கு பதில் சொல்ல வேண்டும்.

10. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை!
ஒரு கடனாளியை, வங்கி அதிகாரிகள் அல்லது ஏஜென்ட்டுகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே சந்தித்து கடனைப் பற்றி விசாரிக்கலாம். வங்கி அதிகாரிகளோ அல்லது ஏஜென்ட்டோ சந்திக்க வேண்டிய இடத்தை தீர்மானிக்க வில்லை என்றால் கடனாளியின் வீட்டுக்கோ அல்லது வேலை பார்க்கும் இடத்துக்கோ சென்று சந்திக்கலாம். ஆனால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடனாளியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் வரும் வகையில் வங்கியாளர்கள் நடந்து கொள்ளக்கூடாது. கடனாளியின் குடும்ப உறுப்பினர்களை கிண்டலாகவோ, அவமரியாதை யாகவோ நடத்தக் கூடாது.

இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் முதலில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் புகார் கொடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் அடுத்து பிராந்திய மேலாளரிடம் புகார் தரவேண்டும். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால் மத்திய ரிசர்வ் வங்கியிட மும், பேங்கிங் ஆம்்புட்ஸ் மேனிடமும் புகார் தெரிவிக்க லாம். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களை படிப்படியாக அணுகலாம்’’ என கடன் வாங்கியவர்களுக்கு உள்ள உரிமைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஆனால், இத்தனை உரிமைகள் இருக்கிறதே என்று வாங்கியக் கடனை மட்டும் திரும்பக் கட்டாமல் கம்பி நீட்டிவிடா தீர்கள். நாம் கட்டத் தவறும் ஒவ்வொரு ரூபாயும், வங்கி களுக்கும், அதில் டெபாசிட் செய்தவர்களுக்கும் மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் நாம் செய்யும் துரோகம் ஆகும்.

நன்றி : நாணயம் விகடன் - 01.05.2016

வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமா?

வெளிநாட்டில் வேலை செய்ய விருப்பமா?

இன்று தமிழ்நாட்டில் இருந்து உலகம் முழுவதும் வேலைவாய்ப்புக்காகச் சென்று குடியேறி வாழ்ந்து கொண்டிருப்போர் 2.5 கோடி தமிழர்கள். ஆண்டுதோறும் பல லட்சம் டாக்டர்கள், என்ஜினீயர்கள், நர்ஸ்கள், ஆசிரியர்கள், வெல்டர், டர்னர், கொத்தனார், கம்பி கட்டுவோர் என பல தொழில்நுட்பப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.

பலர் சட்டப்படி தேவையான வேலைவாய்ப்பு விசாவில் செல்லாமல் சுற்றுலா விசாவில் சென்று அவதிப்படுகின்றனர். பலர் திரும்பி வருகின்றனர். பலர் தருவதாகச் சொன்ன சம்பளம் கிடைக்காமல், அதிக நேரம் பணியாற்றி, குறைந்த சம்பளம் பெற்று கஷ்டப்பட்டு திரும்புகின்றனர். 

இந்நிலை மாற தமிழ்நாடு அரசு 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். இன்று பல லட்சம் பேரை சட்டப்பூர்வ விஸாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ள மிகச்சிறந்த நிறுவனமாக இது விளங்குகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தமிழக இளைஞர்களை (ஆண் / பெண்) வெளிநாடுகளுக்கு அனுப்பும் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகச் செயல்படுகிறது.

பயண ஏற்பாடு, டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் பணிகளைச் செய்கிறது.

இன்சூரன்ஸ் செய்து தரும். தேவையான அன்னிய செலாவணிக்கு ஏற்பாடு செய்து உதவுகிறது. பாஸ்போர்ட் எடுப்பது, வேலைக்குச் செல்ல உதவுவது என எல்லா பணிகளையும் செய்து தருகிறது.

கம்ப்யூட்டர் உதவியோடு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு தகவல் வங்கி(Data Bank)யினை உருவாக்கியுள்ளது. விளம்பரம் செய்து, நேரில் பதிவு செய்தும், மாவட்டத் தலைநகர்களில் முகாம்கள் நடத்தியும் சிறந்த, நல்ல மதிப்பெண் பெற்ற, அனுபவம் மிக்கவர்களைப் பதிவு செய்கிறது.

சென்னையில் நேர்முகப் பேட்டி நடத்த ஏற்பாடு செய்கிறது. அரசுப் பணியில் இருந்தால் 5 ஆண்டு விடுமுறை பெற்றுத் தருகிறது. மருத்துவ மற்றும் உடல் பிட்னஸ் சான்றிதழ் பெற உதவுகிறது.

சௌதி அரேபியா, குவைத், U.A.E., மாலத்தீவுகள், வங்காளதேசம், சூடான், பிரான்சு, பஹ்ரைன், கனடா, மலேசியா, ஜோர்டான், ஏமன், சிங்கப்பூர், அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏராளமான பணியாளர்களை அனுப்பி வருகிறது.

டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், டிரைவர்கள், எலக்ட்ரீஷியன், பெட்ரோலியப் பணியாளர்கள், பிளாஸ்டிக் / அச்சக வல்லுநர்கள், கோவில் பணியாளர்கள், கணக்காளர்கள், ஐடிஐ படித்தோர், ஆயில் கம்பெனி பணியாளர்கள், ஆசிரியர்கள், கட்டடப் பணியாளர்கள், ஜேசிபி, கிரேன் ஆபரேட்டர், வீட்டு பணியாளர், என்ஜினீயரிங் பணியாளர்கள், விவசாய / மீன் பிடிப்பு பணியாளர்கள், குடிநீர் திட்ட ஊழியர்கள் என பல்வேறு பணிகளுக்கு வெளிநாடுகளில் ஆட்கள் தேவை. உடனே நேரில் அணுகி, பதிவு பெற்று, சட்டப்பூர்வமாக வெளிநாட்டு வேலைக்குச் சென்று பயன் பெறுங்கள்.

நிர்வாக இயக்குநர், 
தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 
42, ஆலந்தூர் ரோடு, மகளிர் ஐடிஐ காம்ப்ளக்ஸ், 
திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, 
சென்னை - 600 032.
தொலைபேசி : 044-2250 5886


www.omcmanpower.comhttp://www.mea.gov.in/
**********************************************************************
By - எம்.ஞானசேகர்

தினமணி நாளிதழ் - 22.03.2016

தகுதித்தேர்வு - உயர்நீதிமன்றம் உத்தரவு



தகுதித்தேர்வு - உயர்நீதிமன்றம்  உத்தரவு

2011-க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களை தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தக்கூடாது: உயர்நீதிமன்றம்
 2011-ஆம் ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது கடைசி வாய்ப்பு என்றும், ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் தகுதித் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்றும், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறி, நிகழாண்டு மார்ச் 1-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.சரோஜினி, எஸ்.சுதா உள்பட நான்கு ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: 
தமிழக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு முன்பாகவே, பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தகுதி தேர்வு எழுத வேண்டியது இல்லை என, கடந்த 2013 செப்டம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து பணியில் சேரும் ஆசிரியர்கள்தான் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
எனவே, அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு இது பொருந்தாது என்று உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர் என மனுவில் ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி டி.ராஜா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு, நவம்பர் 15-ஆம் தேதிக்கு பின்பு பணியில் சேரும் ஆசிரியர்கள் மட்டுமே தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவு பொருந்தும்.
மாறாக, அதற்கு முன்னர் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமல்ல. அவர்கள் தேர்வை எழுத வேண்டியது இல்லை. அவர்களை கட்டாயப்படுத்தவும் கூடாது எனக் கூறி உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நன்றி : தினமணி நாளிதழ் - 12.04.2017

12.04.2017 தினமலர் நாளிதழ் செய்தி

மோட்டார் வாகன சட்ட திருத்தம் - 2016


மோட்டார் வாகன  சட்ட திருத்தம் - 2016

புதுடெல்லி: மக்களவையில் மோட்டார் வாகன  சட்ட திருத்த மசோதா மக்களவையில் (10.04.2017) நிறைவேறியது. மக்களவையில், ‘2016 மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா’ மீதான விவாதம் நடந்தது. 

அப்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளிக்கையில், ``இந்த மசோதா நிறைவேறிய பிறகு போக்குவரத்து துறையில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் நடைபெறும். 100 சதவீத மின்னணு நிர்வாகத்தை இந்த மசோதா உறுதி செய்யும். 

மேலும், மின்னணு நிர்வாகம் செயல்பாட்டுக்கு வந்தால், போலி ஓட்டுனர் உரிமங்களை தயாரிக்க முடியாது. மேலும், வாகன திருட்டும் நடைபெறாது'' என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவின்படி, 
  1. சாலை விதிகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 
  2. அதேபோல், உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.5000 அபராதமும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2000மும்,
  3. மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் அபராதம் விதிக்கப்படும். 
  4. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். 
  5. சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் தரப்படும். 
கடந்த 1989ம் ஆண்டு இந்திய மோட்டார் வாகன சட்டம் மேம்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 28 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக, விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு தொகையை உயர்த்தவேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சங்கர் பிரசாத் தத்தா கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 37 ஓட்டுக்களும், எதிராக 221 ஓட்டுக்களும் கிடைத்தன. விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீடு தொகையை உயர்த்த வாய்ப்பில்லை என்று நிதின் கட்கரி கூறினார்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 11.04.2017

உயில் - முக்கிய தீர்ப்புகள்

உயில் - முக்கிய தீர்ப்புகள்


  1.  உயிலை நிரூபிப்பதற்கு, உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது. (AIR-2001-SC-3522)&(1996-1-MLJ-481)
  2. உயிலில் சாட்சியாக கையொப்பம் போடுபவர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் தங்களது கையெழுத்தை, உயிலை எழுதி வைப்பவரின் முன்பாக போடுதல் வேண்டும். இதுவே போதுமானதாகும். இவ்வாறு நிலைகள் சந்தேகத்தை ஏற்படுத்தாது. சாதாரண முரண்பாடுகள் எல்லாம் சந்தேக சூழ்நிலைகளை ஏற்படுத்தாது. (AIR-1997-SC-127) 
  3. உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை, உயில் எழுதி வைத்தவர் பார்க்கவில்லை. அதேபோன்று உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை உயிலை தயாரித்தவரும் பார்க்கவில்லை. அதனால் உயிலில் சாட்சி கையெழுத்து போட்டது நிரூபிக்கப்படவில்லை. (AIR-1998-M. P - 46)
  4.  உயிலானது, உயிலை எழுதி வைத்தவரின் சுதந்திரமான போக்கில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் திருப்தியடைந்திருத்தல் வேண்டும்.           (1998-2-MLJ-SC-128)
  5. ஒரே ஒரு சாட்சியை மட்டும் உயிலை நிரூபிக்க விசாரித்தது போதுமானதாகும். (ஆனால் மனநிறைவு அடையாவிட்டால் வெறும் ஒரு சாட்சியை விசாரித்தது மட்டுமே போதுமானதாகாது) (AIR-2003-SC-761)
  6. உயில் பதிவு செய்யப்பட்டது என்ற காரணத்தால் மட்டுமே அந்த உயிலின் மீதான சந்தேக சூழ்நிலைகள் அகன்று விடாது. பதிவு செய்யப்பட்ட உயில் என்றாலும் அதனை சாட்சிகளை கொண்டு நிரூபிக்கவேண்டும். (1999-2-MLJ-609)
  7. Indian Evidence Act - sec 68 - உயிலை எழுதி வைத்தவர் உயிலில் கண்ட சொத்து விவரத்தின் கீழ் கையொப்பமிட்டார். மற்றபடி ஒரு பக்கத்தை தவிர மற்ற பக்கங்களில் கையொப்பம் செய்திருந்தார். எனவே இந்த உயில் செல்லக்கூடியதாகும். (AIR-1999-KER-274)
  8. உயிலை எழுதி வைத்தவர் உயிலில் பெருவிரல் ரேகையைப் பதித்திருந்தார். உயிலை எழுதி வைத்தவருக்கு கையெழுத்து போட தெரியும். எனினும் கையெழுத்து போடததற்கு என்ன காரணம் என்று உயிலில் குறிப்பிடப்படவில்லை . அதற்கான காரணத்தை அறிய சார்பதிவாளர் விசாரிக்கப்பட்டார். ஆனால் அது போதுமானதாக இல்லை. உயில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. (1999-3-MLJ-608)
  9. அசல் உயில் ஒப்படைக்கப்படவில்லை. உயிலின் சான்றிட்ட நகல் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அது இரண்டாம் நிலை சாட்சியமாகும். அது சான்றாவணமாக அனுமதிக்கப்பட்டது. அசல் உயிலை ஒப்படைக்காதது பாதிப்பை ஏற்படுத்தாது. (1999-3-MLJ-651) 
  10. உயில் எழுதப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் மற்றும் உயிலை தயாரித்தவர் என அனைவரும் இறந்து விட்டார்கள். இந்த உயிலில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த உயிலை உண்மையானது என்று ஊகிக்கலாம். (AIR-2002-A. P - 164-NOC)  (1999-3-MLJ-577)
  11. Hindu Succession Act - sec 63 - உயில் எழுதி வைக்கப்படும்போது உயிலை எழுதி வைக்கும் பெண் மற்றும் உயிலில் கையொப்பமிட்ட சாட்சிகள் அனைவரும் உடன் இருந்தார்கள் என்பதையும், சாட்சிகள் உயிலில் கையொப்பமிடுவதை உயிலை எழுதி வைத்த பெண் பார்த்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டும். (2000-3-MLJ-46)
  12. தனது விதவை மகளுக்கு அவளது வாழ்நாள் வரையில் ஜீவனாம்சத்திற்கான உரிமை அளித்து ஒரு உயில் எழுதி வைக்கப்பட்டது. அந்த உயில் இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 14(1)ன்படி முழுமையான ஒன்றாகும். (2000-3-MLJ-SC-60)&(AIR-2000-SC-1908)
  13. முஸ்லீம் சட்டம் - வாய்மொழி கொடை செல்லத்தக்கதாகும். (AIR-2000-KAR-318)
  14. முஸ்லீம் சட்டம் - கொடை - முஸ்லீம் கொடையில் 3 கூறுகள் முக்கியமானதாகும். அதாவது கொடை கொடுப்பதற்கான அறிவிப்பு இருக்க வேண்டும். அந்த கொடை யாருக்கு கொடுக்க அறிவிக்கப்படுகிறதோ அவர் அதனை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த கொடையை அவரிடம் ஒப்படைத்தல் வேண்டும். (2001-1-MLJ-307)
  15. சென்னை, பம்பாய் போன்ற மாநகரங்களின் பகுதிகளுக்குள் எழுதி கொடுக்கப்பட்ட உயில் இணைப்புகளுக்குத்தான் உயில் மெய்ப்பிதழ் நடைமுறை பொருந்தும். (AIR-2001-A. P - 326)
  16. உயில் பதிவு செய்யப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தாது. (AIR-2002-Oris-101)
  17. Hindu Succession Act - sec 61 - Evidence Act - sec 100&101 - உயில் போலியானது என்று யார் கூறுகிறாரோ அவரே அதனை நிரூபிக்க வேண்டும். (AIR-2005-SC-233)
  18. பிரதிவாதி தரப்பு சாட்சி - 2 ஆல் கருப்பு மையில் உயில் ஆவணம் எழுதப்பட்டது. அந்த உயில் ஆவணத்தில் வேறு மையால் உயிலை எழுதி வைத்தவர் கையெழுத்து போட்டுள்ளார் இது போலியான உயிலாகும். (2005-2-LW-734)
  19. உயில் பற்றியோ அல்லது உயிலில் இடப்பட்ட சாட்சிக் கையொப்பம் பற்றியோ பிரச்சினை எழாதபோது உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ள சாட்சிகளை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. (AIR-1990-KER-226)
  20. உயிலில் சான்றொப்பமிட்டதை நிரூபிப்பதற்கு உயிலை எழுதி வைத்தவர் முன்னிலையில் சான்றொப்பமிட்டவர் கையெழுத்து செய்தார் என்பதை நிரூபிக்க வேண்டும். (1975-1-Cuttack-WR-512)

நன்றி : நண்பர் வழக்கறிஞர் Dhanesh Balamurugan