disalbe Right click

Friday, April 28, 2017

புதிய மாற்றங்கள்... எளிதாகும் வருமான வரி கணக்குத் தாக்கல்!

புதிய மாற்றங்கள்... எளிதாகும் வருமான வரி கணக்குத் தாக்கல்!
த்திய அரசின் திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்ப்பிப்பது படிப்படியாகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இப்போது வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய ஆதார் எண் தரவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளது மத்திய அரசு. வருமான வரிப் படிவத்தில், கணக்குத் தாக்கல் செய்பவரின் வங்கிக் கணக்குத் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருக்கிறது.
இந்த நிலையில், வருமான வரித் தாக்கலில் ஆதார் எண்ணைப் பதிவு செய்வதன் மூலம், வரி செலுத்துபவரின் ‌வங்கிக் கணக்கு விவரங்கள், நிதி நடவடிக்கைகளை எளிதாக‌ப் பின்தொடர முடியும் என மத்திய அரசு கருதுகிறது‌. இதையொட்டி வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாதச் சம்பளதாரர்களுக்காக புதிய வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படிவத்துடன் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த நடைமுறை 2017 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில், இரண்டு வருடங்களுக்குமுன்பு அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் செயலற்றுக் கிடக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்கள் நீக்கப்பட்டு, மூன்று பக்க விண்ணப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குத் தாக்கல் படிவம் சிக்கலாக இருப்பதால், வரி வரம்புக்குள் உள்ள 29 கோடி பேரில் 6 கோடி பேர்தான் தாக்கல் செய்தனர். இப்போது இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கான விண்ணப்பப் படிவத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆடிட்டர் லதா ரகுநாதனிடம் பேசினோம்.
இதுவரையில் பக்கம்பக்கமாக இருந்த படிவம், கைக்கடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் படிவங்கள் ITR 1 – 7 மட்டுமே. 2, 2ஆ என்பது போல இருந்த பல ஆவணங்கள் ஒன்றாக இணைக்கப் பட்டு ஏழு படிவங்களாகக் குறைக்கப் பட்டுள்ளன. இதில் மிக அதிகமாக உபயோகப்படும் படிவம் ITR 1 என்பதால், இது ஒரேயொரு பக்கமாகச் சுருக்கப் பட்டுள்ளது. இதன் இன்னொரு பெயர் சஹஜ்என்பதாகும். மாற்றங்கள் எல்லாப் படிவங்களிலும் உள்ளவை என்கிறபோதும், இந்த சஹஜ்படிவம் அதிகம் உபயோகப்படும் என்பதால், இதுபற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 
யார் உபயோகிக்கலாம்?
சம்பளம், ஒரே ஒரு வீடு மற்றும் வங்கி வட்டி வருமானம் பெரும் தனிநபர்கள் மட்டுமே. அரசாங்கத்தின் பார்வையில் இது இரண்டு கோடி தனிநபர்களுக்கு உபயோகப்படும் என்று சொல்லப்படுகிறது.
செய்யப்பட்ட மாற்றங்கள்
மொத்த வருமானத்திலிருந்து சாப்டர் ஆறு ஏ-வின் கீழ் அனுமதிக்கப்படும் வரிச் சலுகைகள், இப்போது 80சி, 80டி, 80டிடிஏ, 80ஜி போன்ற நான்கு பிரிவுகளின் கீழ் மட்டுமே படிவத்தில் காட்டப்படு கின்றன. இந்த மாற்றத்துக்குக் காரணம், பெரும்பாலான வரி செலுத்துபவர்கள் இந்தவிதமான வரி விலக்கைத்தான் கடந்த பல வருடங்களாகக் கோரி வந்துள்ளனர். இவற்றைத் தவிர, வேறு பிரிவுகளின் கீழ் வரி விலக்குக் கோருபவர்கள் அவற்றைத் தனியே வேறு சிலஎன்பதில் காண்பித்துப் பெறலாம்.
சொத்துகள் பற்றிய விவரங்கள் கொடுக்க, சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றம் இப்போது நீக்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் 30-ம் தேதி வரையில், அதாவது பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், இரண்டு லட்சம் ரூபாய்க்கு  வங்கிகளில் கணக்குக் கட்டப்பட்டிருந்தால், இவற்றைத் தனியாகக் காண்பிக்க ஒரு பத்தி  கொடுக்கப்பட்டுள்ளது. 
கடைசியாக, ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும். இந்த மாற்றம் எல்லா எண் படிவங்களுக்கும் பொதுவான ஒன்று.
எதற்காக இந்த நடவடிக்கை
இந்தக் கடைசி மாற்றம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டி இருக்கிறது. இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சில  முக்கியமான காரணங்கள் உள்ளன. முதலில், வரி ஏய்ப்பை இதனால் தடுக்க இயலும். காரணம், தற்போது ஆதார் எண் எல்லா விதமான தினசரி நடவடிக்கைகளிலும் தரப்படுகிறது. இதனால் நிதிப் பரிவர்த்தனை தொடர்பான ஒருவரது எல்லா நடவடிக்கைகளும் அரசின் பார்வைக்கு வந்து விடும். இவற்றை மறைத்து இனி வரி ஏய்ப்பு செய்வது கடினம். 
சிலர், ஒன்றுக்கு மேலான பான் கார்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, சில கணக்குகளை மாற்றிக் காண்பித்து வரி ஏய்ப்பு செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இந்த வகையில், இனி வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஏனென்றால், ஆதார் கார்டுடன்  பான் கார்டை இணைப்பது அவசியம்.
மேலும், தற்போது ஆதார் கார்டு வங்கிக் கணக்குகள், பேபால் கணக்குகள் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே இவற்றின் மூலம், வருமான வரிச் செலுத்த மற்றும் ரிட்டர்ன்ஸ் சமர்ப்பிக்க சுலபமாக முடியும். முக்கியமாகடிசம்பர் 30-க்குமுன் இணைப்பைச் செய்யத் தவறினால், பான் கார்டு செல்லாது எனக் கொள்ளப்படும். ரூ.5 லட்சத்துக்குக் குறைவான வருமானம், ரீஃபண்ட் இல்லாதவர்கள் மற்றும் சஹஜ்’-ல் சமர்ப்பிக்கும் 80 வயதுக்கு மேலானவர்கள் இ-ஃபைலிங் செய்வதைவிடமேனுவல் ரிட்டர்ன் தாக்கல் செய்வது நல்லது. அப்படிச் செய்வதால், இந்த இணைப்புப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்என்றார் அவர்.
அனைவரும் ஆதார்எண் தர வேண்டும்
ஆதார்எண் பெறத் தகுதியானவர்கள்  மட்டுமே  வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது, ‘ஆதார்எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் என்று வருமான வரித்துறை விளக்கம் தந்துள்ளது. அதாவது, ‘ஆதார்எண் பதிவு என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடாது. ஆதார்எண்ணுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய 12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில் வசித்த தனிநபர்கள் மட்டுமே இந்தியாவில் வசிப்பவர்களாகக் கருதப்பட்டு, ‘ஆதார்எண் பெறத் தகுதி உடையவர்கள்  என்று ஆதார் சட்டம் கூறுகிறது. எனவே, இந்தியாவிலேயே ஆண்டு முழுக்க வசித்து, ‘ஆதார்பெற்ற  அனைவருமே வருமான வரிக் கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்எண் குறிப்பிடுவது கட்டாயம் என்று வருமான வரித் துறை அறிவித்திருக்கிறது.  
வருமான வரித் துறை கொண்டுவந்துள்ள இந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, இனி வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வோமா?
ஆதார் பான் எண் இணைப்பு: சிக்கலும் தீர்வும்!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா திருத்தத்தின்படி, வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, ‘ஆதார்எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், வருமான வரி நிரந்தரக் கணக்கு, பான் உடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான இணையதளத்தில் ஆதார்எண்ணை இணைக்க முயலும்போது, சிலருக்குச் சிக்கல் ஏற்பட்டது. காரணம், பான் எண் தொடர்பான ஆவணங்களில், எல்லோரின் பெயரிலும் தந்தை பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், ஆதார் எண் ஆவணங்களில், தந்தை பெயரின் முதல் எழுத்து (இன்ஷியல்) மட்டுமே குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த முரண்பாடுகளால் பான் எண்ணுடன் ஆதார்எண்ணைச் சிலரால் இணைக்க முடியவில்லை.
இதற்கு வருமான வரித்துறை ஒரு தீர்வைக் கண்டுள்ளது. ஆதார் இணையதளத்தில் சென்று (https://uidai.gov.in/), பெயர் மாற்றத்துக்கான கோரிக்கை விடுத்து, அதற்கு ஆதாரமாக பான் கார்டின் ஸ்கேன் காப்பியை அப்லோட்செய்ய வேண்டும். இதன் மூலம், ஒரே மாதிரியான பெயர் கிடைப்பதால், அதை பான் எண்ணுடன் இணைக்க முடியும் என்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள். 
சில பெண்கள் திருமணத்துக்குப்பிறகு கணவர் பெயரைச் சேர்த்திருப்பார்கள். இவர்களுக்கு, ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டை (ஓ.டி.பி.) வருமான வரித்துறை அனுப்பும். அப்போது, பான், ஆதார் என இரு ஆவணங்களிலும் அவர்களின் பிறந்த ஆண்டு ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று வருமான வரித்துறை சரிபார்க்கும். அந்த ஓ.டி.பி-யைப் பயன்படுத்தி, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க முடியும் என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. மாதச் சம்பளக்காரர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தக்கல் செய்ய வேண்டும். வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகும். (பான் எண்ணுடன் ஆதார்எண்ணை இணைக்க: https://incometaxindiaefiling.gov.in/). ஏப்ரல் 19, 2017 வரைக்கும் 1,10,16,997 பேர் பான் எண்ணுடன் ஆதார்எண்ணை இணைத்திருக்கிறார்கள்.
சோ.கார்த்திகேயன்
 சோ.கார்த்திகேயன்



நன்றி : நாணயம் விகடன் - 30.04.2017
·        



போலி என்.ஓ.சி. - போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

போலி என்.ஓ.சி. - போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

தூத்துக்குடியில் போலி தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குறிப்பிட்ட டிரைவிங் ஸ்கூல் மூலம் சிலர் கனரக வாகனங்கள் ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் உள்ளிட்டவைகளைப் பெற விண்ணப்பங்கள் அளித்திருந்தனர். இதனை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்த போது, விண்ணப்பங்களுடன் இணைக்கப்பட்டிருந்த, காவல்துறையினர் வழங்கும் தடையில்லாச் சான்றிதழ்கள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அந்தச் சான்றிதழ்கள் சிப்காட் இன்ஸ்பெக்டர் வழங்கியது போல இருந்தது.

இதனை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் காட்டியபோது, அந்த சான்றிதழ்களில் உள்ள கையெழுத்து தன்னுடையது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், பல சான்றிதழ்களில் இன்ஸ்பெக்டருடைய ரப்பர்ஸ்டாம்ப் குத்தப்பட்டு அவருக்காக என்று கையெழுத்து போடப்பட்டி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி ஆனந்த் அவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். 

காவல்துறை நடத்திய விசாரனையில் போக்குவரத்து அலுவலக புரோக்கரான, முனியசாமிபுரத்தைச் சேர்ந்த டேவிட்(52) என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், தட்டப்பாறை சிறப்பு இன்ஸ்பெக்டர் சங்கர் (50) என்பவருடன் சேர்ந்து போலிச் சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, புரோக்கர் டேவிட், சிறப்பு எஸ்.ஐ. சங்கர் ஆகிய இருவர் மீதும், போலியாக ஆவணங்கள் தயாரித்தல், அதனை உண்மைச் சான்றிதழ்கள் போல பயன்படுத்துதல், போலி முத்திரை தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புரோக்கர் டேவிட் கைது செய்யப்பட்டுள்ளார். சிறப்பு எஸ்.ஐ. சங்கரை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ்  உத்தரவிட்டுள்ளார்.


04.04.2017 - www.tutyonline.net -ல் இருந்து


  

பயணியை எழுப்பாததற்கு 5000 ரூபாய் அபராதம்

பயணியை எழுப்பாததற்கு 5000 ரூபாய் அபராதம்

பயணியை எழுப்பி விடாததால் ரயில்வேக்கு 5,000 ரூபாய் அபராதம்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஷ் கார்க் என்ற வழக்கறிஞர், கடந்த 2015-ம் ஆண்டு கோவை-ஜெய்ப்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். அவர் கோட்டா என்ற பகுதிக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார். அப்போது, 139 என்ற ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்ட அவர், கோட்டா ரயில் நிலையம் வந்தால் என்னை அலர்ட் செய்து எழுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு 139 சேவை தரப்பிலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், கோட்டா ரயில் நிலையம் வந்தபோது அவரை, 139 சேவை மையம் அலர்ட் செய்யவில்லை. இதையடுத்து, அவராகவே சுதாரித்துக் கொண்டு கடைசி நேரத்தில், கோட்டா ரயில் நிலையத்தில் இறங்கினார். இதைத்தொடர்ந்து  அவர், "நான் இந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்து விட்டேன். இதனால் எனக்கு ரயில்வே நிர்வாகம் 20,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, கிரிஷின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி நீதிமன்றத்தில், ரயில்வே நிர்வாகம் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மன வேதனை அடைந்த கிரிஷ்க்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த மாத இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கு செலவுகளுக்காக, கிரிஷ்க்கு 2,000 ரூபாய் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரா.குருபிரசாத்
நன்றி : விகடன் செய்திகள் - 29.04.2017




சாட்சி கையெழுத்து போட்டால் சிக்கல் வருமா?


சாட்சி கையெழுத்து போட்டால் சிக்கல் வருமா? 
மீபத்தில் நில அபகரிப்பு புகாரில் மாட்டிக் கொண்டார் நண்பர் ஒருவர். யாரோ ஒருவர் போலியாக தயாரித்த ஆவணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டதுதான் நண்பர் செய்த தவறு. இதற்காக நீதிமன்றத்திலிருந்து அவரை விசாரிக்க அழைப்பு வர, நண்பரின் குடும்பமே மிரண்டு போனது. நல்லவேளையாக, அவருடைய வழக்கறிஞர் நண்பர்கள் சிலர் அவருக்குத் தைரியம் சொல்ல, நீதிமன்றத்திற்குச் சென்று, பதில் சொல்லிவிட்டு வந்தார். சாட்சி கையெழுத்து போட்ட இன்னொருவரோ, நீதிமன்ற விசாரணை என்றவுடன் ஊரை விட்டே ஓடிவிட்டார்.  
சாட்சி கையெழுத்து போடலாமா? கூடாதா? சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா? பிரச்னையில் மாட்டாமல் இருக்க வேண்டுமெனில் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல கேள்விகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
கையெழுத்து கட்டாயம்
''சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.
பதிவுத் திருமணம், பத்திரப் பதிவு, உயில் எழுதுவது, பாகப்பிரிப்பு பத்திரம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து போடுவார்கள். பொதுவாக குறைந்தபட்சம் இரண்டு சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கமாக உள்ளது. சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்தைக் கட்டாயமாக வைத்துள்ளது சட்டம். உதாரணமாக, உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்.
கட்டாயமில்லை
சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்து வாங்குவது சட்டப்படி கட்டாயம் இல்லை என்றாலும், தொன்றுதொட்டு வந்த பழக்கத்தால் சாட்சி கையெழுத்து போடப்படுகிறது. இந்த ஆவணங்களில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் அந்த ஆவணம் செல்லுபடியாகும். இதற்கு உதாரணம் புரோநோட். பொதுவாக புரோநோட்டில் சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கம். ஆனால், சட்டப்படி புரோநோட்டில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் செல்லு படியாகும். பாதுகாப்பிற்காக சாட்சி கையெழுத்து வாங்கப்படுகிறது.
கேரண்டி VS சாட்சி கையெழுத்து
வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர்தான் அந்த கடனை திரும்பச் செலுத்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரன்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரன்டி கையெழுத்தின் சாராம்சம்.
ஆனால், சாட்சி கையெழுத்து அப்படியில்லை. எந்த ஆவணமாக இருந்தாலும் அந்த ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர் எனக்கு முன்பாகதான் கையெழுத்து போட்டார் என்பதை ஊர்ஜிதப் படுத்த கையெழுத்து போடுவதுதான் சாட்சி கையெழுத்து. கேரன்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார்.
சாட்சி கையெழுத்து போடும் போது அந்த ஆவணத்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவணத்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, உங்கள் வீட்டை போலியாக வேறு ஒரு நபர் விற்கிறார். அந்த ஆவணத்தில் சாட்சியாக உங்களிடமே கையெழுத்து வாங்குகிறார் எனில், நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டதனாலேயே அந்த வீட்டை விற்க நீங்கள் ஒப்புக் கொண்டதாக ஆகிவிடாது. நீங்கள் அந்த ஆவணத்தின் தரப்பினராக சட்டப்படி கருதப்பட மாட்டீர்கள்.
ஆனால், சில விதிவிலக்கான நேரத்தில் சாட்சி கையெழுத்து போடுபவருக்குச் சிக்கல் வரவாய்ப்பிருக்கிறது. அதாவது, நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவணத்தில் கையெழுத்து போடுகையில் அந்த ஆவணத்தில் இருக்கும் தன்மை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, ஒரு தந்தை தனது மகளுக்கு ஒரு சொத்தை செட்டில்மென்ட் செய்து கொடுக்கிறார் எனில், அப்போது தனது மகனை அந்த செட்டில்மென்ட் டாக்குமென்டில் சாட்சியாக கையெழுத்து போட வைக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த மகன், 'அந்த டாக்குமென்டில் இருக்கும் தன்மை எனக்கு தெரியாதுஎன சொல்வது நம்பும்படியாக இருக்காது.
காதல் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து
இளசுகளை பொறுத்தவரை காதல் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போடுவது மிகவும் பிரபலம். இதனால் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ? என்று பலரும் பயப்படுகிறார்கள். ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கும் ஒரு காதல் கல்யாணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டு, பிற்காலத்தில் அந்த தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து வரை போனால்கூட சாட்சி கையெழுத்து போட்டவருக்கு எந்தவித பிரச்சனையும் வராது.

ஆனால், இங்கும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த கையெழுத்தைப் போட்டது அந்த இருவரும்தான் என நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏதாவது வரும்போது, சாட்சி கையெழுத்து போட்ட நபர்களிடம்தான் விசாரணை நடத்துவார்கள். 
என்ன சிக்கல்கள் வரும்?
சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல் வரும்? தற்போது நில அபகரிப்பு மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஒரு நிலத்தை ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு விற்கும்போது அந்த நபர்கள் போடும் கையெழுத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் சாட்சி கையெழுத்து போடும் நபர் கையெழுத்து போடுவார். ஏதாவது பிரச்னை வரும்போது இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல்லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது.அல்லது புரோநோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும்போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதிமன்றம் விசாரணைக்கு வரச் சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.
எந்த விவரமும் தெரியாமல் ஒருவர் சாட்சி கையெழுத்து மட்டும் போட்டிருந்தால்  எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை சாட்சி கையெழுத்து போடுபவரும் போலி நில விற்பனைக்கு உடந்தையாக இருந்திருந்தால், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். போலியான ஆவணங்கள் தயாரிக்க சாட்சி கையெழுத்து போடுபவர்கள் உடந்தையாக இருந்துவிடாமல் கவனமாக இருப்பது நல்லது.
நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற்பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும்!
பானுமதி அருணாசலம்
நன்றி : நாணயம் விகடன் - 25.12.2011 

Thursday, April 27, 2017

பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

பாம்பு கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

பாம்புகள் என்றாலே பலருக்கும் அலர்ஜி அல்லது பயம் தான். அதனாலே எவை விஷப்பாம்பு எவை விஷமற்றவை என்பதை கூட தெரிந்துகொள்ள முயல்வதில்லை. ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால் என்ன செய்வது? கடித்தது விஷப்பாம்பா என்பதை எப்படி அறிவது? சில டிப்ஸ் இதோ.
என்ன செய்ய வேண்டும்?
1) சினிமாவில் பார்த்திருப்போம். கடித்த இடத்தின் அருகில் இறுக்கி கட்டுப் போட வேண்டும். ஆனால், ரொம்ப இறுக்கினால் விஷம் ஓரிடத்திலே தங்கி அந்த இடம் அழுகிப்போகும். எனவே லேசாக கட்டினால் போதும்.
2) கடிப்பட்டவர் பதற்றமடையக் கூடாது. அப்படி ஆனால், ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக ஏறும். கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஆனால், அதுதான் தேவை
3) கடிபட்டவரை நடக்க விடக்கூடாது. அவர் உடல் குலுங்கும்படி தூக்கிக்கொண்டு ஓடவும் கூடாது. இலகுவாகத்தான் கையாள வேண்டும்.
4) ரத்தம் வெளியே வந்தால் வர விடுங்கள். விஷம் ஏறிய ரத்தம் தான் முதலில் வெளிவரும். கடிப்பட்ட இடத்தை ஓடும் நீரில், சோப்பு கொண்டு கழுவுங்கள்.
5) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது படுக்க வைத்து அழைத்துச் செல்லவும்
6) பாம்புக் கடிக்கு அரசு மருத்துவமனையே சிறந்தது. தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே அழைத்துப் பேசி விடவும். இல்லையேல், அங்கு போன பிறகு உதவ மருத்துவர்கள் இல்லை என தட்டிக்கழிப்பார்கள்.
7) கடித்தது எந்தப் பாம்பு எனத் தெரிந்தால் மருந்து தருவது எளிது. எனவே நோயாளி நினைவுடன் இருக்கும்போது இது பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பாம்பின் நீளம், நிறம், தடிமன் ஆகியவை வைத்துக் கூட அது என்னப் பாம்பு என்பதை அறியலாம். பெயர் தெரியாவிட்டாலும் இது போன்ற தகவல்களை நோயாளியிடம் கேட்டுப் பார்க்கலாம்.
8) கடிப்பட்ட இடத்தில் வரிசையாக பல பற்களின் தடம் தெரிந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு இல்லை. ஒன்றோ அல்லது இரண்டு மட்டும் இருந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு பல் மட்டும் பதிந்திருந்தால் அது தோலை மட்டுமே தீண்டியிருக்கும். விஷம் அதிகம் ஏறியிருக்கும் வாய்ப்புக் குறைவு. எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்
9) எல்லா சமயங்களிலும் மருத்துவமனைக்கு கொண்டு வருவது சாத்தியம் ஆகாது. அப்படிப்பட்ட நேரத்தில் கிராமங்களில் பின்பற்றப்படும் வைத்தியங்களை செய்து பார்க்கலாம். நோயாளிக்கு வாழைச் சாற்றை கொடுப்பது நமது கிராமங்களில் உண்டு. அது விஷ முறிவுக்கு நல்ல மருந்து என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள். அல்லது மஞ்சளை தீயில் காட்டி எரிந்துகொண்டிருக்கும் மஞ்சளை பாம்பு கடித்த இடத்தில் வைத்து அழுத்துவார்கள். அப்படி செய்தாலும் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்து பார்ப்பது நல்லது.
10) நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். கண் இமை சுருங்கும். பேச்சு குழறும். கட்டு விரியன் கடித்தால் இதனுடம் வயிறும் சேர்ந்து வலிக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் வலி அதிகமாக இருக்கும்.
என்ன செய்யக்கூடாது?
1) வாயால் ரத்தத்தை எடுக்க முயலாதீர்கள். அது விஷத்தை இன்னொருவருக்கும் கடத்தும். மேலும், பாக்டீரியாக்களை கடிபட்ட இடத்தில் அதிகரிக்க செய்து, விஷத்தின் வீரியத்தை மேலும் தீவிரமாக்கும்
2) காயத்தை மேலும் பெரிதாக்காதீர்கள். சிலர் காயத்தை வெட்டி பெரியதாக்கி, அதன் பின் வாயால் ரத்தத்தை எடுப்பார்கள்.
3) ஐஸ் பேக்குகள் அல்லது குளிர்ந்த பொருட்களை காயத்தின் மேல் வைக்காதீர்கள்.
கார்க்கிபவா

நன்றி : விகடன் செய்திகள் - 27.04.2017

Wednesday, April 26, 2017

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-280

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-280
ஒரு நாள் குற்றவியல் நீதிமன்றம் ஒன்றில் கொலை வழக்கு பற்றிய விசாரணை நடந்து கொண்டிருந்தது. கொலை செய்ததாக குற்றவாளிக் கூண்டில் ஒருவரை நிற்க வைத்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.  ஆனால், கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றவரின் பிரேதம் கைப்பற்றப்படவில்லை. 
எதிரியின் வழக்கறிஞர் முன் வைத்த வாதம்
குற்றஞ்சாட்டப்பட்டவரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தனது வாதங்களை கோர்ட்டார் முன் வைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவர், ”எனது கட்சிக்காரர் கொலைகாரர் அல்ல, அவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிரோடு இங்கு வரப்போகிறார், பாருங்கள்!” என்று கூறினார். அதனைக் கேட்ட பார்வையாளர்கள் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
ஆனால், யாரும் வரவில்லை.
சற்று நேரம் கழித்து, அந்த வழக்கறிஞர், எனது கட்சிக்காரரால், கொலை செய்ததாக கூறப்படுகின்றவர்  இன்னும் சற்று நேரத்தில் வரப்போவதாக நான் கூறியபோது எல்லோரும் சந்தேகத்துடன் வாசலையே பார்த்தார்கள். அதனால், அந்த சந்தேகத்தின் பலனை எனது கட்சிக்காரருக்கு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தனது வாதத்தை முடித்தார்.
நீதிபதி எழுதிய தீர்ப்பு
நீதிபதி தனது தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்டவரை, கொலைகாரன் என்று தீர்மானித்து தீர்ப்பு எழுதினார். 
Image result for குற்றவாளி
என்ன காரணத்தினால், எனது கட்சிக்காரருக்கு தண்டணை வழங்கினீர்கள்? என்று வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டபோது,  கொலை செய்யப்பட்டவர் உயிரோடு இங்கு வரப்போகிறார் என்று நீங்கள் கூறியபோது, எல்லோரும் வாசலை பார்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர் வாசலை பார்க்கவில்லை. தன்னால் கொலை செய்யப்பட்டவர் உயிரோடு எப்படி இங்கு வரமுடியும்? என்ற நம்பிக்கையில் அவர் தலை குனிந்து கொண்டு நின்றார். அதனால்தான், அவரை குற்றவாளி என்று தீர்மானித்தேன் என்றார்.
CrPc-280
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 280ல் ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, ”தரப்பினரின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, அவர்களது முகக்குறிப்பையும் பதிவு செய்ய வேண்டும்!” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 

*************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 26.04.2017

Tuesday, April 25, 2017

வீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை!

வீடு வாங்க பி.எஃப். தொகையில் இருந்து 90 சதவீதம் எடுக்க சலுகை!
சொந்த வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, பி.ஃஎப். சேமிப்பிலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளும் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடுத்தரவர்க்கத்தினருக்கு, சொந்த வீடு என்பது கனவு. போராடினாலும் பலருக்கும் கைகூடாத காரியம்தான். காலம் முழுக்கச் சேமித்தாலும் 45 வயதில் நகரத்தைவிட்டுப் பல கிலோமீட்டர் தாண்டிதான் ஃப்ளாட் ஒன்றை வாங்க முடியும். பணத்தைத் திரட்டுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். மத்திய அரசு ஏற்கெனவே, 'எல்லோருக்கும் வீடு' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்தத் திட்டம் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என மாற்றியமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
திட்டத்தின் அடிப்படையில் நடுத்தரவர்க்கத்தினருக்கு உதவிடும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வங்கிக்கடன்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன.
மாதச் சம்பளக்காரர்களுக்கு உதவிடும் வகையில் பி.ஃஎப். நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் பி.ஃஎப். பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் 36 மாத பி.ஃஎப். தொகையை வீடு வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது.
வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு 24 மாத பி.ஃஎப் சேமிப்பைப் பெற்றுகொள்ளும் வசதியும் இருந்தது.
தற்போது, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு, பி.ஃஎப் பணத்திலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தொகையை எடுக்க, சில கட்டுப்பாடுகளை பி.ஃஎப் அலுவலகம் விதித்துள்ளது.
அதன்படி, பி.ஃஎப் பயனாளர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவுச் சங்கம் உருவாக்க வேண்டும்.
அந்தச் சங்கம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவர்களின் பி.எஃப். கணக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பி.ஃஎப். நிறுவனமே நிலம் வாங்குபவர்களிடம் அல்லது ஃபிளாட் வாங்குபவர்களிடம் நேரடியாகப் பணத்தைச் செலுத்தும்.
பயனாளர்களிடம் நேரடியாகத் தொகை வழங்காது. ஏப்ரல் 21-ம் தேதி முதல் இந்தச் சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்மூலம் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 10 பேர் கூட்டாகச் சேர்ந்து ஃபிளாட் வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.ஏதாவது ஒரு காரணத்தினால் வீடு வழங்க முடியாமல்போனால், 15 நாள்களுக்குள் எடுத்த பணத்தை பி.ஃஎப் நிறுவனத்துக்குத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.
இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பாண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், '' இந்தத் திட்டத்தின்படி நான்கு கோடி பேர் பயனடைவார்கள்.
ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து வீடு வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தொழிலாளர்கள் கூட்டுறவு சொசைட்டியை உருவாக்கி இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வோர் இந்தியரும் சொந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் கனவு” என்றார்.
பி.ஃஎப் கமிஷனர் வி.பி.ஜாய், ''தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை பி.ஃஎப் பயனாளர்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவில்லை'' என, கடந்த ஜனவரி மாதம் குறைபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எம்.குமரேசன்


இருசக்கர வாகன காப்பீடு

இருசக்கர வாகன காப்பீடு
இரு சக்கர வாகன காப்பீடு பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!
இரு சக்கர வாகன காப்பீடு, வாகனத்தை இழத்தல் அல்லது பல்வேறு காரணங்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதியை அளிக்கிறது.
இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளின் கீழ் வருகின்றன,
அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.
விரிவான காப்பீட்டுத் திட்டம்
ஒரு இரு சக்கர வாகன விரிவான காப்பீட்டுத் திட்டம் ஒருவேளை பின்வரும் எதிர்பாராத சம்பவங்கள் நேர்ந்தால் காப்பளிக்கிறது:
1. விபத்து அல்லது தீ விபத்து, மின்னல் வெட்டு, வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது.
2. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தீவைக்கப்படுதல் அல்லது அந்நியர்களால் வன்முறையில் அழிக்கப்படுதல் அல்லது திருட்டு அல்லது கொள்ளை ஆகிய காரணங்களால் வாகனத்தை இழத்தல் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் காப்பீடளிக்கிறது. விபத்து
3. விபத்துக் காரணமாக மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடளிக்கிறது.
4. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.
மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக் காப்புறுதித் திட்டம்.
இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டம் மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக்களுக்கு மட்டும் காப்புறுதி அளித்தால், பின்பு காப்பீட்டு நிறுவனர், மூன்றாம் தரப்பினரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான செலவுகளுக்கு மட்டும் பணம் செலுத்தவும் அல்லது மூன்றாம் தரப்பினரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பணம் செலுத்தவும் மட்டுமே பொறுப்புடையவராகிறார்.
உதிரிப் பாகங்கள் மேலும் சில இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் உதிரிப் பாகங்கள் மற்றும் துணைக் கருவிகள் போன்றவற்றிற்கான காப்புறுதிகள், பின்னிருக்கையில் சவாரி செய்யும் பயணிகளுக்கான விபத்துக் காப்பீடுகள், இது போன்ற மற்றும் பலவற்றிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட காப்புறுதிகளையும் வழங்குகிறது.
கணக்கீடு காப்பீட்டுத் திட்டத்திற்கான முனைமத் தொகையானது, வாகன உரிமையாளரின் வயது, செய்யப்பட்ட காப்பீட்டின் அறிவிக்கப்பட்ட மதிப்பு, வாகனத்தின் கன திறன் மற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
இணையச் சேவை இரு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்கள் சிக்கல்களில்லாதது மேலும் இப்போதெல்லாம் இந்தக் காப்பீட்டுத் திட்டங்களை இணையத்திலேயே வாங்கிக் கொள்ளவும் வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.
Written by: Prasanna VK
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் »24.04.2017




Monday, April 24, 2017

குற்றவியல் வழக்குகள்

குற்றவியல் வழக்குகள்
குற்றவியல் வழக்குகளானது
1. அழைப்பாணை வழக்கு என்ற Summons Case 
2.பிடிகட்டளை வழக்கு என்ற Warrant Case 
3. சிறு குற்ற வழக்கு என்ற Petty Case 
என்று மூன்றுவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.அழைப்பாணை வழக்கு (Summons Case) 
குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 2 (W)ன் படி அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை தண்டணை வழங்கப்படுகின்ற (பிடிகட்டளை அல்லாத) வழக்குகளை அழைப்பாணை வழக்குகள் என்கிறோம்.
2.பிடிகட்டளை வழக்கு (Warrant Case )
குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 2 (X)ன் ப்டி, மரண தண்டணை அல்லது ஆயுள் தண்டணை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தண்டணை வழங்கப்படுகின்ற வழக்குகளை அழைப்பாணை வழக்குகள் என்கிறோம்.
3.சிறு குற்ற வழக்குகள் (Petty Case )
குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 206(2)ன் படி 1000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் மட்டுமே விதித்து தண்டிப்பதற்குரிய குற்றங்களைப் பொறுத்த ஒரு வழக்கு சிறு குற்ற வழக்கு ஆகும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.04.2017