disalbe Right click

Tuesday, May 2, 2017

தகவலறியும் சட்டம்-தவறான தகவல் தந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம்

தகவலறியும் சட்டம்-தவறான தகவல் தந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம்
தகவலறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம்: ரயில்வே நிர்வாகம் அதிரடி
புதுடெல்லி: ரயில்வே கேன்டீன்களுக்கு 100 கிராம் தயிர் ரூ.972-க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் தந்த விவகாரத்தில் அதிகாரிகள் 3 பேரை ரயில்வே நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

ரயில்வே கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்து வருவது தொடர்பாக அஜய் போஸ் என்பவர் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய ரயில்வேயிடம் கேள்வியெழுப்பி இருந்தார். 

இதற்கு மத்திய ரயில்வே அளித்த பதிலில் 

100 கிராம் தயிர் ரூ.972, 
1 லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.1242-க்கும்
1 கிலோ உப்பு ரூ.40-க்கும் வாங்கப்படுவதாக கூறியிருந்தது. 

இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட விவரங்களில் தட்டச்சி பிழை இருக்கலாம் என ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது. இதனிடையே ரயில்வே உதவி வணிக மேலாளரை பணியிட மாற்றம் செய்த ரயில்வே நிர்வாகம், குடோன் கணக்கு பதிவாளர், சமயல் ஆய்வாளர், தகவலறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நன்றி : தினகரன் நாளிதழ் - 03.05.2017


கண்மாயில் சிறுவன் பலி, கலெக்டருக்கு நோட்டீஸ்!

கண்மாயில் சிறுவன் பலி, கலெக்டருக்கு நோட்டீஸ்!
மதுரை:மதுரை அவனியாபுரம் கண்மாயில் பள்ளி சிறுவன் மூழ்கி பலியானதற்கு இழப்பீடு கோரி தாக்கலான வழக்கில், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ஹிந்த்புரம் பாதுஷா தாக்கல் செய்த மனு:

எனது மகன் முகமது ஷபிர்,10, லட்சுமிபுரம் பகுதி பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார். பிப்.,18 ல் பள்ளி சென்றார். வீடு திரும்பவில்லை. அவனியாபுரம் கழிவுநீர் கண்மாயில் தவறி விழுந்து இறந்தார். 

எனது மகன் இறப்பிற்கு காரணம், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கண்மாய்தான். அதன் அருகில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை. வேலி, சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. அங்கு குப்பைகளை குவித்து வைக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ளவில்லை. 

எனது மகனின் இறப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வி.பார்த்திபன், விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 03.05.2017


Monday, May 1, 2017

போலி ஆவணங்கள் மூலம் உயில் பதிவு

போலி ஆவணங்கள் மூலம் உயில் பதிவு

திருப்பத்தூர்: போலி ஆவணங்கள் கொடுத்து உயிலை பதிவு செய்ய உடந்தையாக இருந்த சார் பதிவாளரை, திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ராஜ்கண்ணு. இவர் மனைவி பச்சையம்மாள். இவர்களது மகன் முரளி. இவருக்கு, இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் தன் மகனுக்கு சொத்துக்களை எழுதி வைக்க, ராஜ்கண்ணு மறுத்து விட்டார். இந்நிலையில், கடந்தாண்டு செப்., 24ல், உடல் நிலை சரியில்லாமல் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் ராஜ்கண்ணு சேர்க்கப்பட்டார். அப்போது சுய நினைவு இல்லாமல் இருந்த ராஜ்கண்ணுவிடம், சொத்துகள் அனைத்தையும், தன் பெயருக்கு தான செட்டில்மெண்ட் வழங்குவதாக முரளி உயில் எழுதி, அதில் கையொப்பம் வாங்கிக் கொண்டார். பின் இந்த உயிலுடன் சில போலி ஆவணங்களை கொடுத்து, திருப்பத்தூர் சப்-ரிஜிஸ்டர் ஆபிசில் அப்போதிருந்த சார் பதிவாளர் கருணாகரன் என்பவர் உதவியோடு, முரளி பதிவு செய்து கொண்டார்.
இந்நிலையில், ராஜ்கண்ணு இறந்து விட்டார். அதன் பிறகு தான் ராஜ்கண்ணுவின் சொத்துகளை, போலி ஆவணங்கள் கொடுத்து பதிவு செய்து, முரளி அபகரித்துக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, திருப்பத்தூர் போலீசில் பச்சையம்மாள் புகார் செய்தார். 
போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி ஆவணங்கள் கொடுத்த முரளி, 45, திருப்பத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வேலை செய்த உதவியாளர் சரவணன், 51, பத்திர எழுத்தர் சங்கர், 34, துணை சார் பதிவாளர் லட்சுமணன், 44, சார் பதிவாளர் கருணாகரன், 56, ஆகியோர் மீது, கடந்தாண்டு நவ., 5 ல், வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த சார்-பதிவாளர் கருணாகரன் தலைமறைவானார். 
மற்ற, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கருணாகரனை தேடி வந்தனர். இந்நிலையில் அரக்கோணத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர்.

நன்றி : தினமலர்  நாளிதழ் -29.03.2017


Sunday, April 30, 2017

ஆதார் ஏன் அவசியமாகிறது?

ஆதார் ஏன் அவசியமாகிறது?

இன்றைய தேதியில் நீங்கள் இந்தியாவில் வாழ எது அவசியமோ இல்லையோ ஆதார் அவசியம். ரேஷனில் அரிசி வாங்குவது முதல் வருமான வரி கட்டுவது வரை, பள்ளி அட்மிஷன் முதல் மருத்துவமனை அட்மிஷன் வரை, ரயில் டிக்கெட்டிலிருந்து விமான டிக்கெட் வரை… ஆதார் அவசியமாக்கப்படுகிறது.
``ஆதார் இல்லாத மனிதன் அரைமனிதன்'' என்று எதிர்காலத்தில் பள்ளிகளில் பாடமெல்லாம் நடத்துகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த 12 இலக்க ஒற்றை அடையாள எண், இந்தியர்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி நிற்கிறது.
தனிமனிதனின் கனவு!
இந்தியா குறித்த கனவு நம் எல்லோருக்குமே இருக்கிறது. சிலர் அதை நூலாகவும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் தாங்கள் காணும் கனவை செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நந்தன் நிலக்கனிக்கு அது கிடைத்ததால் உருவானதுதான் இந்த `ஆதார்'.
இந்தியாவின் மிக வெற்றிகரமான ஐ.டி நிறுவனம், இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர், நந்தன் நிலக்கனி. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்; மும்பை ஐ.ஐ.டி-யில் எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்தவர். 2008-ம் ஆண்டில் இவர் எழுதிய நூல், ‘Imagining India: The Idea of a Renewed Nation’. இதில் அவர், ‘விசேஷ அடையாளம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார்.
‘ஒவ்வொருவருக்கும் ஒரு எண் கொடுத்து, அந்த எண்ணை அடையாளமாக வைத்து லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் துவக்கலாம். இதன்மூலம் அரசின் சேவைகளைச் செழுமையாக்கி, ஊழலைக் குறைத்து இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லலாம்’ என்பது அவரது சிம்பிள் ஐடியா.
2009-ம் ஆண்டு இந்த நூல் வெளியான சில வாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து நிலக்கனிக்கு அழைப்பு வந்தது.
‘`அரசின் மானியங்களும் நலத்திட்ட உதவிகளும் நேரடியாக மக்களைச் சென்றடைவதற்கு, ஓர் அடையாள எண் உருவாக்கலாம். இதைச் செய்ய இருக்கும் Unique Identity Authority of India – அமைப்புக்கு நீங்கள் தலைமையேற்க வேண்டும்’ என்பது பிரதமரின் நேரடி வேண்டுகோள். அதை மறுக்காமல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி ஆணையத்தின் பொறுப்பை உடனே ஏற்றுக்கொண்டார். ஆதார் பிறந்தது!
நீதியின் முட்டுக்கட்டை!
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதார் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த பி.ஜே.பி, ஆட்சிக்கு வந்தபிறகு, காங்கிரஸைவிட வேகமாக, அதிகமாக, பரவலாக, ஆழமாக, தீவிரமாக இதை அமல்படுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைக்கூட மத்திய அரசு கண்டுகொள்வதில்லை.
2013-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
* ஆதார் எண் இல்லாத காரணத்தால் ஒரு குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை மறுக்கக் கூடாது.
* ஆதார் கட்டாயம் என எந்தெந்த அதிகார மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினீர்களோ, அவர்களுக்கெல்லாம் தகவல் தெரிவித்து, அந்த அறிவிப்பை மாற்றி அமைக்க வேண்டும்.
* ஆதார் எண் பெறுவது சட்டப்படி கட்டாயமில்லை என்று மத்திய அரசு ஊடகங்கள் வாயிலாக பரந்த அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, இதையெல்லாம் செய்யக்கூடாது என உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
`ஆதார் எண் பெறுவது மக்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, அதைக் கட்டாயமாக்கக் கூடாது’ என்றும் அறிவுரை சொன்னது உச்ச நீதிமன்றம். ஆனால், இது எதுவுமே காதில் விழாததுபோல் நடிக்கிறது மத்திய அரசு.
தகவல்கள் யாருக்கு?
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, தேவைப்படுபவர்களுக்கு தன் சேவைகளை அளிப்பது அரசின் கடமை. ``குடும்ப வருமானம், பாலினம், வயது, உடல் குறைபாடுகள் போன்ற விவரங்களின் அடிப்படையில்தான் சேவைகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, மக்களின் விரல் ரேகை, கருவிழிப்படலம் போன்ற பயோ மெட்ரிக் (உயிரியளவு) விவரங்களின் அடிப்படையில் தருவது சட்டவிரோதமானது’’ என்று உச்ச நீதிமன்றத்தில் ஆதார் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் வாதிடுகின்றனர்.
இப்படிப்பட்ட உயிரியளவுத் தகவல்களை படமெடுக்கும் வேலையை தனியார் நிறுவனங் களிடம் அரசு விட்டிருக்கிறது. இதன்மூலம், அவற்றைப் பாதுகாக்கும் ட்ரஸ்டி என்கிற கடமையிலிருந்து அரசு தவறுகிறது. உயிரியளவு உட்பட தனிமனிதர்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை வாங்குவதும் விற்பதும் இன்றைய உலகில் பெரிய தொழிலாக மாறிவருகிறது. நம்மைக் குறித்த தகவல்கள் உலகில் எங்கெல்லாம் செல்கின்றன, யார் யார் கைகளில் அவை இருக்கும் என்பதெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
மக்கள் படும் பாடு
ஆதார் எண் பெற்ற ஏழைமக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலுள்ள பல ரேஷன் கடைகளில் விரல்ரேகைப் பதிவு இயந்திரங்கள் (fingerprint reader) பொருள் பெறச் செல்வோரின் கைரேகைகளை ஏற்றுக்கொள்ளாததால் சுமார் 30 சதவிகித மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரேஷன் பெறத் தகுதியானவர்களுக்குக்கூட ஆதார் இல்லாததால் பொருள்கள் மறுக்கப் படுகின்றன். சில கிராமங்களில் மின்சாரம், இணையத் தொடர்பு கிடைக்காததால் பொருள்கள் வாங்க முடியவில்லை. அரசின் தவறுகளுக்கு ஏழைகள் பாதிக்கப்படுவது என்ன நியாயம்? இன்று இந்தியாவில் பெரும்பாலான ஏழைகள் உயிர் வாழ்வதே, இந்த ரேஷன் கடைகளால்தான். ஏற்கெனவே ஏபில், பிபில் என்று அவர்களைப் பிரித்து, உணவுப் பொருள்களின் அளவையும் குறைத்து வயிற்றில் அடித்துக்கொண்டிருக்கும் அரசுக்கு, இப்போது ஆதார் அட்டையையும் வசதியான இன்னொரு மறுப்புக் கருவியாக மாற்றி இருக்கிறார்கள்.
ஒரு பேட்டியில் இதைப் பற்றிய கேள்வி எழுந்தபோது, ‘`ஆதார் முறையில் 5 சதவிகிதம் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது’’ என்று பதற்றமே இல்லாமல் சொல்லி இருக்கிறார் நிலக்கனி. ஆனால், வெறும் ஐந்து சதவிகிதத் தவறு என்பது, இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு கோடி பேரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் என்பதுதான் உண்மை!
சமீபத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்ப் பெறப்பட்ட தகவல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 85 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதார் அடையாளங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன என்பதே அந்தத் தகவல். தகவல்கள் புதுப்பிக்கப்படாததே இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆதார் அமைப்பில் ஏற்படும் தவறுகளை சரி செய்யவும், தகவல்களைப் புதுப்பிக்கவும் தேவையான அளவுக்கு ஆள்களோ, தொழில்நுட்பமோ, பிற வசதிகளோ நம் அரசிடம் இல்லை என்பதே கசப்பான உண்மை!
ராஜஸ்தானில் தபால் அலுவலகம் வாயிலாக பென்ஷன் பெறும் ஆயிரக்கணக்கான முதியோரும் பெண்களும், வங்கிக் கணக்கு தொடங்கி ஆதார் நம்பரைப் பெற்று அதனுடன் இணைக்காததால் பென்ஷன் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஆதார் அட்டை இல்லாததால் எவ்வளவு பேர் நலத்திட்டங்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள் என்கிற தகவல்கூட அரசிடம் இல்லை.
அடையாளம் வேண்டாம்!
தலித்துகள், ஆதிவாசிகள் அடையாளம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்னையை எழுப்புகிறார், துப்புரவுப் பணியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் பெஜவாடா வில்சன். துப்புரவுப் பணியாளர்கள், செய்யும் தொழிலை அடையாளமாக வைத்து ஏற்கெனவே, ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். ``இந்த அடையாளத்தை அழிக்கும் தொழில்நுட்பம்தான் உடனடித் தேவை’’ என்கிறார் வில்சன். ‘`துப்புரவுப் பணியாளர்களைப் பற்றி முறையான சர்வேகூட செய்யாத அரசுகள் ஏன் எங்களுக்கு என்று ஒரு தொழில்நுட்பரீதியாக மாற்றமுடியாத அடையாளத்தைக் கொடுக்க இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றன?” என்கிறார் அவர். ஆதாருக்கு எதிரான உச்சநீதி மன்ற வழக்கில் இவரும் ஒரு மனுதாரர்.
தனியாரிடம் தகவல்கள்
நம்மைப் பற்றிய ஆதார் தகவல்கள் ஏன் தனியார் நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும் என்கிற அடிப்படையான கேள்விக்கு இதுவரை உருப்படியான பதில் இல்லை. புதிய கைபேசி இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. புதிதாக ஜியோ சிம் கார்டு வாங்கும்போது உங்கள் கைரேகையை உறுதிசெய்ய ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், புதிய இணைப்புப் பெறுபவரின் அடிப்படைத் தகவல்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கைக்குச் செல்கின்றன. ஒரு செல்போன் இணைப்புப்பெற தேவையான தகவல்களை மட்டும் அளிக்க வேண்டிய இடத்தில் நாம் ஏன் நம்முடைய ஒட்டுமொத்த விவரங்களையும் கொடுக்க வேண்டும்?
ஏன் இந்த அச்சம்?
ஆதார் சட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்ற மேலவையில் நடந்துகொண்டிருந்தபோதே ‘ட்ரஸ்ட் ஐடி’ என்கிற நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.``நீங்கள் வீட்டு வேலைக்கு அமர்த்த நினைக்கும் வேலைக்காரர், கார் ஓட்டுநர், டியூஷன் ஆசிரியர், பிளம்பர், எலெக்ட்ரிஷன் என வீட்டு வேலை செய்பவர்கள் பற்றிய விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மொபைல் ஆப் மூலம் உடனடியாக அறிந்து கொள்ளலாம்’ என்பதே அந்த விளம்பரம். ‘ஆதார் மையத்தின் தகவல் களஞ்சியம் ரகசியமானது, யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது என்கிற சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பே இப்படி ஒரு விளம்பரம் வந்தது எப்படி’ என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இப்படி ‘ஆதார் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு ஒரு தனிநபரின் முழுமையான பின்னணியை உங்களுக்குத் தருகிறோம்’ என்று மற்றொரு நிறுவனமும் விளம்பரம் செய்துள்ளது. இதுதான் ஆதாரின் எதிர்காலம். இதுதான் நம்மை அச்சமூட்டுகிறது.
தகவல்களை எங்கே வைத்திருக்கிறோம்?
அடுத்த முக்கியமான பிரச்னை, 120 கோடி இந்தியர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை ஆதார் ஆணையத்தின் ஒரே களஞ்சியத்தில் வைப்பது. ஆதார் தகவல் களஞ்சியம்தான் உலகத்திலேயே மிகப் பெரியதாக இருக்க முடியும். அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் வைத்திருக்கும் களஞ்சியத்தைவிட இது 10 மடங்கு பெரியதாக இருக்கும். ஒரு மோசமான அரசுக்கு, குடிமக்களை வேவு பார்ப் பதற்கும், எதிர்ப்பாளர்களை முடக்குவதற்கும் இதைவிட சிறந்த ஆயுதம் இருக்க முடியாது. யூதர்களின் வீடுகளை இலக்கமிட்டுத் தாக்கிய ஹிட்லர் போன்றவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் வழங்கிய ஆயுதமாகக்கூட இதை மாற்றும் சாத்தியம் உள்ளது. அது தவிர, அந்நிய சக்திகள், ராணுவத் தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இந்தியாவை ஒரே சொடுக்கில் முடக்குவதற்கும் வாய்ப்பிருப்பதாக விவரமறிந்வர்கள் அஞ்சுகின்றனர்.
வேவு பார்க்கவா அரசு?
30 கோடி மக்களைக்கொண்ட அமெரிக்காவும், ஆறரைக் கோடி மக்களைக்கொண்ட பிரிட்டனும், இரண்டரைக் கோடி மக்களைக்கொண்ட ஆஸ்திரேலியாவும் தேசிய அளவிலான ஒற்றை எண் அடையாளத்தை உருவாக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டன.
‘அதிக செலவாகும், தனிநபர் உரிமைக்கு ஊறு விளைவிக்கும்’ என்கிற இரண்டு காரணங்களைத் தான் இந்த நாடுகள் கூறியுள்ளன. ‘`இப்படிப்பட்ட திட்டத்தால், தனிமனித வாழ்க்கையில் அரசு ஊடுருவி அச்சுறுத்தும் நிலை ஏற்படும் '’ என்பது பிரிட்டன் அரசாங்கத்தின் கருத்து.
தொழில்நுட்பம் என்பது மக்களுக்கான கொள்கையின் வேலைக்காரனாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை கண்காணிக்கிற முதலாளியாகக் கூடாது. ஆதார் அதைத்தான் செய்கிறது. அதனால்தான், அது ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது!

ஆர்.விஜயசங்கர்
நன்றி : ஆனந்த விகடன் - 03.05.2017



ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் - 2017


ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் - 2017 

இன்றுமுதல் அமலுக்கு வருகிறது: வீடுகள் விலை உயரும் என கருத்து
மத்திய அரசு இயற்றியுள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.
ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்தவும் ஒழுங்குமுறைக் குள் கொண்டுவரவும் ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்தல் சட்டம் 2016-ஐ கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது. அதன்படி சட்டத்தில் சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்திருந்தது. அதில் குறிப்பிட்ட சில விதிகள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தன.
மீதமுள்ள விதிமுறைகள் 2017-ம் ஆண்டு மே 1-ம் தேதி அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுதவிர, அந்தந்த மாநில அரசுகள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய கேட்டுக் கொண்டது. தமிழக அரசு, விதிகளை ஜனவரி மாதம் இறுதி செய்து அறிவித்தது.
இந்த நிலையில் சட்டம் அமலுக்கு வரவுள்ளது. 
இந்த சட்டத்தின்படி முறைகேடான கட்டு மானங்கள் நடைபெறுவதையும், ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள மோசடிகளும் குறைக்கப்படும் என்று கருதப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டுமான நிறுவனங்கள் வீட்டை கட்டி வாடிக்கையாளரிடம் தரவில்லையென்றால் தண்டனை வழங்கும் ஷரத்துகளும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 45 நாட்களுக்குள் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப் பிக் கொடுக்க வேண்டும். கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பே கட்டிடத்தின் அசல் மாதிரி என்பது போன்ற படங்களை போட்டு விளம்பரம் செய்ய முடியாது. இதுதவிர ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கும் வகையிலும் ஷரத்துகள் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில் சட்டம் அமலுக்கு வருவதால் வீடுகளின் விலை சிறிது உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரடாய்) தமிழ்நாடு பிரிவை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தினர் கூறியதாவது:
ரெரா சட்டம் (RERA or The Real Estate (Regulation Development) Act) எனப்படும் இந்த சட்டம் அமலுக்கு வந்தால், ரியல் எஸ்டேட் தொழில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் படும். மேலும் தொழிலில் வெளிப் படைத் தன்மை உண்டாகும். இதனால் ரியல் எஸ்டேட் தொழில் மீதும் கட்டுமான நிறுவனங்கள் மீதும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை உருவாகும். குறிப் பிட்ட காலத்தில் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், அரசுத்துறை அனுமதிகளும் உடனுக்குடன் கிடைத்துவிடும்.
ஏற்கெனவே ஒழுங்குப்படுத்தப் பட்ட முறையில் இயங்கிவரும் நிறுவனங்களுக்கு சட்டத்தால் பாதிப்பு ஏற்படாது. ஒழுங்குப்படுத் தாத நிறுவனங்களுக்கு மட்டுமே பாதிப்பு. மேலும் அனைத்து கட்டுமான நிறுவனங்களும் முறை யான அனுமதி, உரிமம் போன்ற அனைத்து ஆவணங்களையும் பெற்றே ஆக வேண்டும். இதற் காக அரசுக்கு பல வகைகளில் கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இதன் காரணமாக வீடுகளின் விலையில் சிறிது ஏற்றம் இருக்கும். அதே வேளையில் நம்பகத்தன்மையும் வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெ.எம்.ருத்ரன் பராசு

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 01.05.2017


ஜெ.எம்.ருத்ரன் பராசு


போக்சோ சட்டம்-2012

போக்சோ சட்டம்-2012
குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012
குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட யாரும் எளிதில் தப்பிக்க வழியே இல்லாத மிக வலிமையான சட்டம் இதனை சுருக்கமாக ”போக்சோ” சட்டம் என்று அழைக்கிறோம்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை காப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு  இந்த  சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம் செய்தவர்க்கு தண்டனை வழங்கப்படும். மற்ற வழக்குகளை போல  பாலியல் வன்கொடுமை வழக்கை வெளிப்படையாக விசாரிக்க மாட்டார்கள், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணை குழந்தையின் எதிர்கால நலன் கருதி மறைமுகமாக நடத்தப்படும்.
குற்றங்கள்  நிரூபிக்கப்பட்டால்சம்பந்தப்பட்டவர்களுக்கு  கடுமையான தண்டனை வழங்கப்படும். 
இந்த குற்றம் சம்பந்தமாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்த பின் தான், விசாரிக்க வேண்டும் என்பதில்லை. புகார் வந்தவுடனேயே காவல்துறையினர் துரிதமாக விசாரனையை துவக்க வேண்டும் மேலும், பாதிக்கப்பட்ட குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக, யாராக இருந்தாலும், அவர்களின் வீட்டிற்கே சென்று விசாரனை செய்ய வேண்டும்.
இந்த குற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவரை உடன் வைத்துக்கொண்டு, பாதிப்புக்குள்ளான குழந்தைகளிடம் கண்டிப்பாக விசாரிக்க கூடாது. காவல் நிலைய எல்லை பிரச்சனையை காரணம் காட்டி, வழக்கு விசாரணையை காவல்நிலைய அதிகாரிகள் தட்டிக்கழிக்கவும் கூடாது. அவ்வாறு செய்யும் காவல்துறை அதிகாரிகளின் மீது, நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்வதற்கு, இந்தச் சட்டம் வழிவகை செய்துள்ளது.
நீதிபதியின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம், , ரகசிய வாக்குமூலம் பெற வேண்டும், அதை வீடியோவிலும் மற்றும் ஆடியோவிலும் பதிவு செய்ய வேண்டும். உடனடியாக அந்தக் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும். இவைகள்தான் இந்த  வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் ஆகும்.
இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டில் பல குழந்தைகள் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பானது அரசு, நீதித்துறை, காவல்துறை ஆகியவர்களுக்கு மட்டுமல்லாமல் சமானிய மக்களுக்கும்  உள்ளது. என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.04.2017

Saturday, April 29, 2017

கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?
ஜல்லிக்கட்டுப் போராட்டம் வரலாறு காணாத வகையில் மாபெரும் போராட்டமாக உருவெடுத்தது. ஆனால், போராட்டம் வன்முறை மற்றும் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தின் முடிவில் ஏராளமான டூவீலர்கள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் வன்முறையாளர்கள் வாகனங்களைச் சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு. அதேசமயம், போலீஸாரே பொதுச் சொத்துகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை போலீஸாரும் மறுத்துள்ளனர்.
கலவரம் வாகனம் தீ வைப்பு
இந்த நிலையில் வன்முறை மற்றும் கலவரத்தில் சேதம் ஆகும் வாகனங்களுக்கு இழப்பீடு குறித்து வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர் திருமலையிடம் பேசினோம். கலவரத்தில் பாதிப்படைந்த வாகனத்தின் உரிமையாளர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விவரமாக எடுத்துச் சொன்னார்.
ஜாக்கிரதையாக இருந்தால் இழப்பீடு கிடைக்காது!
"சென்னை கலவரத்தில் ஒரு சில வாகனங்களுக்குச் சிறிய அளவிலான சேதமே ஏற்பட்டு இருக்கும். பல வாகனங்களுக்குப் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டு இருக்கும். வன்முறை மற்றும் கலவரத்தில் வாகனம் பாதிப்படைந்து இருந்தால் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் எப்போதும் போல இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும். கலவரத்தில் பாதிப்படைந்த வாகனத்தை அதன் உரிமையாளர் ஸ்பாட் போட்டோ ஒன்று எடுத்து வைப்பது நல்லது.
இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்கும்போது, அவர்கள் கிளெய்ம் பார்ம் ஒன்றை வழங்குவார்கள். அந்த கிளெய்ம் பார்ம்-ல் வாகனம் பாதிப்படைந்ததற்கு என்ன காரணம் என்பதைக் குறிப்பிட வேண்டும். எங்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; எதற்காக அங்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; கலவரம் நடைபெற உள்ளது என்பதை முன்பே தெரிந்தும் ஏன் வாகனத்திற்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை என பலதரப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள். ஏனெனில் வாகனத்தின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாலிசிதாரர் எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளை பாலிசிதாரர் எடுத்திருக்கிறாரா என்பதை அறிவதற்காகப் பல கேள்விகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கேட்கின்றன. அதேசமயத்தில் பாலிசிதாரர் அஜாக்கிரதையாக இருந்தால் இழப்பீடு கிடைக்காது.
பொதுவாக வாகனத்துக்கு ஏதாவது ஒரு விபத்து நடைபெற்றால் என்ன நடைமுறையோ அதே வழிமுறைதான் வன்முறை மற்றும் கலவரம் போன்ற சம்பவத்திற்கும். மோட்டார் வாகன காம்ப்ரிஹென்ஸிவ் பாலிஸியில் பிரிவு ஒன்றில் Riot and Strike காரணமாக வாகனம் சேதமடைந்தால் இழப்பீடு உண்டு. பாலிசிதாரரின் வாகனம் சேதம் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பாலிஸி வழங்கிய இன்ஸூரன்ஸ் அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்திட வேண்டும். அருகில் உள்ள காவல்நிலையத்திலும் புகார் கொடுத்து FIR பெறுவது நன்று. வாகனம் மேலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
வாகன இழப்பீடு, தேய்மானம் மற்றும் கழிவுத்தொகையை கழித்துவிட்டு சர்வேயர் மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும். டயர் மற்றும் ட்யூப் சேதமாகியிருந்தால், புதிதாக மாற்றுவதில் 50 சதவிகிதம் கழிக்கப்பட்டு இழப்பீடு மதிப்பிடப்படும். நாளிதழ்களில் பாலிஸிதாரரின் வாகனம் சேதமடைந்ததைப் பற்றிய செய்திகள் பிரசுரமாகியிருந்தால் அந்த நாளிதழையும் உங்களது இழப்பீட்டு மனுவோடு இணைத்திடலாம்.
FIR தேவையா?
ஜல்லிக்கட்டு கலவரத்தில் போலீஸாரே வாகனங்களுக்கு தீ வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. இந்த நிலையில், வாகனத்தின் உரிமையாளர் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து FIR பெறுவது என்பது மிக முக்கியமில்லை. ஏனெனில் FIR என்பது கூடுதல் ஆதாரத்திற்காகத்தான் கேட்கப்படுகிறது.
காவல் நிலையத்தில் FIR போடவில்லை என்றால் CSR வழங்கினால் அதுவே போதும். எப்படி கடையில் ஏதாவது ஒரு பொருளை வாங்கினால் ரசீது வழங்கப்படுகிறதோ, அதைப் போல காவல் நிலையத்தில் வழங்கப்படுவதுதான் CSR (Community Service Register) எனும் ரசீது. CSR வழங்கினாலே, காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக் கொண்டார்கள் என அர்த்தம். இந்த CSR-ஐ இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பார்ம்-ல் இணைத்துக் கொள்ளலாம்" என்றார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பொறுத்தவரை முன்னமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பொதுவாக வாகனத்துக்கு ஏதாவது ஒரு விபத்து நடைபெற்றால் என்ன நடைமுறையோ அதே வழிமுறைதான் வன்முறை மற்றும் கலவரம் போன்ற சம்பவத்திற்கும் என்பதால் தாராளமாக இழப்பீடு கிடைக்கும்.
Image result for கலவரங்களில் பாதிப்படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

சோ.கார்த்திகேயன்
நன்றி : விகடன் செய்திகள் - 28.01.2017

ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மோசடி

ரூ.20 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மோசடி

பிரபல பில்டர் காசா கிராண்டி உரிமையாளர் அனிருதன் கைது
சென்னை : சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்தவர் குலசேகர். ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு பெருங்குடி திருவள்ளூர் சாலையில் ரூ.20 கோடி மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய குலசேகர் முடிவு செய்தார். அதன்படி பிரபல கட்டுமான நிறுவனமான “காசா கிராண்டி” நிறுவனத்தை அனுகியுள்ளார். இந்நிறுவனத்தின் உரிமை யாளர்கள் அருண்குமார், அனிருதன் (38).
அதில் அனிருதன்என்பவரை குலசேகர் அணுகியுள்ளார். அதன்பின் காலி இடத்தில் 26 கட்டிடங்கள் கட்டி இருவரும் ஆளுக்கு 13 வீடுகள் விற்பனை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து அதற்கான ஒப்பந்தம் போட்டுள்ளனர். பின்னர், அனிருதன், நிலத்தில் கட்டுமானம் கட்டுவதற்கான அனுமதியை பெற பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் தனது பெயரில் அனுமதி ெபற்று கட்டிடம் கட்டியுள்ளார். ஒப்பந்தப்படி குலசேகருக்கு 13 கட்டிடங்கள் வழங்க வேண்டும். ஆனால் அவருக்கு எந்த கட்டிடமும் கொடுக்கப்பட வில்லை. இதுகுறித்து குலசேகர் காசா கிராண்டி உரிமையாளர் அனிருதனிடம் கேட்டுள்ளார். அப்போது இந்த பிராஜெக்ட்டில் எனக்கு ரூ.3.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீ தான் எனக்கு பணம் தர வேண்டும். அதுமட்டும் இல்லாமல் இடம் எனது பெயரில் நான் பெருங்குடி டவுன் பஞ்சாயத்தில் அனுமதி பெற்று கட்டி உள்ளேன். இதனால் உனக்கு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த குலசேகர் பல முறை அனிருதனிடம் எனக்கு ஒப்பந்தப்படி கட்டிடம் தர வேண்டாம். என்னுடையே நிலத்திற்கான பணம் ரூ.20 கோடியை மட்டும் தந்தால் போதும் என்று கேட்டுள்ளார். அதற்கு எனக்கே நீ ரூ.3.5 கோடி பணம் கொடுக்க வேண்டும். இதில் நீ ரூ.20 கோடி கேட்கிறாயா? என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து குலசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில அபகரிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குலசேகரின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து காசா கிராண்டி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருதன் மீது மோசடி(465), ஏமாற்றுவதற்காகவே மோசடியில் ஈடுபடுதல்(468), போலியான ஆவணங்களை உண்மையானது ேபால் உபயோகித்தல்(471), ஏமாற்றுதல்(420) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்று அதிகாலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் அனிருதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்து நேற்று மாலை வரை விசாரணை நடத்தினர். பின்னர் மாலையில் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவுப்படி வரும் 18ம் தேதி வரை புழல் சிறையில் அடைத்தனர்.
முன்னாள் அமைச்சரின் பினாமி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காசா கிராண்டி நிறுவனம் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிறுவனத்துக்கு குறைவான முதலீடே செய்யப்பட்டிருந்தது. பின்னர் கடந்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றது. அதற்கு காரணம், முன்னாள் அதிமுக அமைச்சரின் பணம் வெளிநாட்டில் இருந்து, இந்த நிறுவனத்தில் கறுப்பு பணமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தின் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருந்த அமைச்சரிடம் இருந்து பரிந்துரை வந்ததால், போலீசார் எந்த புகாரையும் விசாரிக்காமல் இருந்து வந்தனர். தற்போதுதான் அந்த அரசியல் பிரமுகர், கட்சியில் இருந்து வெளியேறி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கிய தலைவராக உள்ளார். அதைத் தொடர்ந்து அனிருதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி : தினகரன் நாளிதழ் - 06.04.2017