disalbe Right click

Tuesday, May 9, 2017

நீதிபதி கர்ணனுக்கு இதுபோல பல தண்டனை கொடுக்கலாம்:

நீதிபதி கர்ணனுக்கு இதுபோல பல தண்டனை கொடுக்கலாம்

நீதிபதி சந்துரு பேட்டி
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருபகிர்ந்து கொண்டார்.
''நீதிபதி கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, கர்ணன் குற்றவாளி என முடிவு செய்தது. இது தொடர்பாக அவருக்கு அறிவிக்கை வழங்கப்பட்டது'' என நீதிபதி சந்துரு நினைவுகூர்ந்தார்.
மேலும், இது குறித்து நீதிபதி சந்துரு கூறுகையில், ''ஆனால், நீதிபதி கர்ணன் இதனை புறக்கணித்துவிட்டு, மேலும் மேலும் நீதிமன்றத்தை அவதூறு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்'' என்று தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை கர்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதி சந்துரு, ''நீதிபதி கர்ணனின் அனைத்து குற்றங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க நேரிடலாம்'' என்று தெரிவித்தார்.
தற்போது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை அவர் மீதுள்ள முதல் குற்றத்துக்கான சிறைத்தண்டனை. அவர் மீதுள்ள அனைத்து குற்றங்களுக்கும் இது போல தண்டனை கொடுக்கலாம். ஆனால், அது அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்று நீதிபதி சந்துரு தெரிவித்தார்.
கர்ணனின் கருத்துக்களை உத்தரவு என்று கூறுவது தவறு
நீதிபதி கர்ணன் விதிக்கும் உத்தரவுகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது பற்றிக் கருத்துத் தெரிவித்த நீதிபதி சந்துரு, ''இந்திய அரசியல் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் விதிக்கும் உத்தரவை உத்தரவு என்று கூறலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட ஒருவர் தனது வீட்டில் அமர்ந்து கொண்டு லெட்டர்ஹெட்டில் எழுதுவதையெல்லாம் உத்தரவு என்று ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன'' என்று நீதிபதி சந்துரு விமர்சித்தார். சாலையில் செல்லும் மனநோயாளி ஒருவர் சொல்வதை எல்லாம் உத்தரவு என ஊடகங்கள் கூறுவது தவறு என்று நீதிபதி சந்துரு மேலும் கூறினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் இது போன்ற மோதல் போக்கு இதற்கு முன்பு இருந்துள்ளதா என்று கேட்டதற்கு பதிலளித்த நீதிபதி சந்துரு, ''இதற்கு முன்னர் கூட ஊழல் குற்றச்சட்டுக்கள் சுமத்தப்பட்ட மற்றும் பிரச்சனை உண்டாக்கிய சிலர் இடம்மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்களால் பிறகு பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால், நீதிபதி கர்ணன் விஷயத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னரும், அவரால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதன் விளைவுதான் தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவு'' என்று தெரிவித்தார்.
கர்ணனுக்கு மனநலன் சரியில்லையா என்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது அவருக்கு கொடுக்கப்பட்ட கடைசி வாய்ப்பு. அதனையும் கர்ணன் வீணாக்கிவிட்டார். உச்ச நீதிமன்ற ஆணைகளுக்கு கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்தது சிறுபிள்ளைத்தனமானது. அவர் நீதிமன்றத்தை விளையாட்டுத்தனமாக கருதி விட்டார் என்று சந்துரு குற்றம் சாட்டினார்.
''தான் தலித் என்பதால் தன் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதிபதி கர்ணன் கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, மூன்று தலைமை நீதிபதிகள் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும், 21 நீதிபதிகள் கையெழுத்திட்டு அவர் மீது எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளனர்'' என்று நீதிபதி சந்துரு நினைவு கூர்ந்தார்.
''மேலும் தலித் நீதிபதிகளும் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். நானும் அவருடன் பணியாற்றியுள்ளேன். ஆனால், அவர் கூறியடி சாதி ரீதியான பாரபட்சம் காட்டப்படவில்லை. அவர் கூறிய சாதி ரீதியான பாரபட்ச குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமுமில்லை '' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவற்றையெல்லாம் உச்ச நீதிமன்றம் இவ்வளவு நாட்களாக விசாரிக்காத காரணத்தால்தான் கர்ணன் என்ற விஷ விருட்சம் வளர்ந்ததற்கு காரணம் என்றும் நீதிபதி சந்துரு குற்றம் சாட்டினார்.
''நான் ஓர் ஒய்வு பெற்ற நீதிபதி. நான் ஒரு லெட்டர்ஹெட்டில் எது வேண்டுமானாலும் எழுதினால் அது தீர்ப்பாகி விடுமா? அதே போல் நீதிமன்ற பணி செய்ய தடை விதிக்கப்பட்ட கர்ணன் தனது லெட்டர்ஹெட்டில் எழுதியவை எல்லாம் தீர்ப்பாகுமா, அவரது கிறுக்கலாக வேண்டுமானால் இருக்கலாம்'' என்று நீதிபதி சந்துரு விமர்சித்துள்ளார்.
Thanks to : BBC News – 09.05.2017



போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?

போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?
ஆர்டிஐ ஆர்வலர்களைப் போட்டுக்கொடுத்தாரா பல்லாவரம் நகராட்சி அதிகாரி?
விதிமுறைமீறல்கள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொடூரக் கொலை
சென்னையில் பாரஸ்மால் என்ற ஆர்டிஐ ஆர்வலர், கட்டட விதிமுறைகள் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டார். இந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட பில்டருக்குத் தெரிந்துவிட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாரஸ்மால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட பில்டருக்குத் தெரிந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விதிமுறை மீறல் கட்டடம்
இது ஒருபுறம் இருக்க குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள ஒரு குடியிருப்பில் கார் பார்க்கிங் பகுதிக்கு ஒதுக்கிய இடத்தில் கட்டடம் கட்டி இருக்கிறார்கள்.
இது குறித்து அந்தப் பகுதியிலுள்ள அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரன் மற்றும் 5 பேர் பல்லாவரம் நகராட்சிக்கு ஆர்.டி. மூலம் தகவல் கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கட்டடத்தில் பிளான், அப்ரூவல் நகல் ஆகியவற்றை அனுப்பும்படி கேட்டிருக்கின்றனர். ஏறக்குறைய பல மாதங்களுக்குப் பின்னும் ஆர்.டி. கேள்விகளுக்கு பல்லாவரம் நகராட்சி பொதுத்தகவல் அலுவலர் உரிய பதிலளிக்கவில்லை.
ஆர்வலர்களுக்கு மிரட்டல்
இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.டி. விண்ணப்பம் செய்த ஒருவரின் வீட்டுக்கு வந்த சிலர், 'என்ன எங்க பில்டர் பத்தி புகார் சொல்றீங்களா. தொலைச்சுப்புடுவோம். ஜாக்கிரதை' என்று மிரட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஆர்.டி. போட்ட இன்னொருவர் பெண். பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வருகிறார். அவருடைய விடுதிக்குச் சென்ற சிலர், அந்தப் பெண்ணோடு தங்கியிருக்கும் இன்னொரு பெண்ணிடம் செல்போனை வாங்கி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்தனர். 'என்னம்மா ஆர்.டி.- போட்டு கேள்வி கேட்கிறாயா? உனக்கு வேலை வெட்டி இல்லையா . இனிமேல் அதுமாதிரி எல்லாம் செய்யாதே' என்று மிரட்டி இருக்கின்னர். அதில் அந்தப் பெண் பயந்து போயிருக்கிறார்.
தகவல் எப்படி லீக் ஆகிறது?
இது குறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் மனோகரனிடம் பேசினோம்.
"நான் இந்த பகுதியில் உள்ள கட்டட விதிமுறைகள் குறித்த நிறைய மனுக்கள் செய்திருக்கிறேன். 12 கட்டடங்கள் விதிமுறையை மீறி இருப்பதாக சிஎம்.டி. வுக்குக் கடந்த 2015 டிசம்பரில்-ல் விண்ணப்பம் போட்டேன். அவர்கள் 12 கட்டடங்களை ஆய்வு செய்து பல்லாவரம் நகராட்சியிடம் நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார்கள். சி.எம்.டி.-விலிருந்து பல்லாவரம் நகராட்சிக்கு 4 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி விட்டனர்.
ஆனால், அதன்பிறகும் 12 கட்டடங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இது மட்டுமில்லை. ஒரு குறிப்பிட்ட சாலையில் சாலை போடும் பணியில் விதிமுறை மீறல் இருந்தது தெரியவந்தது. அது குறித்து பல்லாவரம் நகராட்சியிடம், சாலை போடும் பணி யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று தகவல் கேட்டோம். உடனே அரசியல்வாதிகள், கவுன்சிலர், ஒப்பந்ததாரர்களிடம் சொல்லி விட்டனர். அவர்கள் வந்து எங்களை மிரட்டினர். மிரட்டி விட்டால், ஆர்.டி. போடமாட்டார்கள் என்று அவர்கள் கருதுகின்றனர். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புப் பற்றி கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி ஆக்கிரமிப்பாளர்களிடம் சொல்லிவிட்டார். அவர்கள் ஆர்.டி. மனுப்போட்டவரை மிரட்டினர். இப்போது, குரோம்பேட்டை ராதா நகரிலுள்ள கட்டடம் குறித்து மார்ச் 17-ம் தேதி ஒரு ஆர்.டி. போட்டேன். கட்டடத்தை முறையாக ஆய்வு செய்தீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தேன். கட்டடத்தின் பிளான் நகல் தரும்படியும் கேட்டிருந்தேன். ஏப்ரல் 10 வரை பதில் வரவில்லை. இதே போல மேலும் 2 பேர் மனு செய்திருந்தனர்.
பதில் வரவில்லை என்பதால் அறப்போரிலிருந்து மேலும் 3 பேர் மனுப்போட்டனர் . 14-ம் தேதி வணிக வளாகத்தில் கட்டடம் திறக்கப்பட்டது. ஆர்.டி. போட்ட இரண்டு மிரட்டி இருக்கின்றனர்.
ஆர்.டி. விண்ணப்பம் குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், பல்லாவரம் பொதுத் தகவல் அதிகாரிக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் இருந்த முகவரி எப்படி சம்பந்தப்பட்ட பில்டரிடம் கொடுக்கப்பட்டது. இது பொதுத்தகவல் அதிகாரியைத் தவிர வேறு யாரும் இது போல செய்திருக்க முடியாது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் புகார் செய்திருக்கிறோம்" என்றார்.
விசாரணை நடக்கிறது
இது குறித்து பல்லாவரம் நகராட்சி நகரமைப்பு திட்ட அலுவலர் சிவக்குமாரிடம் கேட்டோம்.
"ஆர்.டி. மனு செய்தவர் பற்றி நான் யாரிடமும் கூறவில்லை. அது தவறான தகவல். இது குறித்து புகார் கொடுத்திருக்கின்றனர். உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். என்னுடைய தரப்பிலிருந்து அந்த தகவல் சொல்லப்படவில்லை. உரிய விசாரணைக்குப்
பின்னர்தான் யார் தவறு செய்தார்கள் என்பது தெரியவரும்" என்றார்.
கே.பாலசுப்பிரமணி
நன்றி : விகடன் செய்திகள் - 09.05.2017

Monday, May 8, 2017

போலீஸ்-பொதுமக்கள் இணைந்த வாட்ஸ்-அப் குழு உதயம்

போலீஸ்-பொதுமக்கள் இணைந்த வாட்ஸ்-அப் குழு உதயம்

குற்றங்களை தடுக்க காவல் ஆணையர் புது நடவடிக்கை: சென்னை காவல் நிலையங்களில் வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவு - பொது மக்கள், போலீஸார் உறுப்பினர்களாக இருப்பார்கள்

சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல் ஆணை யர் கரன் சின்ஹா சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலை யங்களிலும் வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
இன்று இணைய தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓர் இடத்தில் நடக்கும் நிகழ்வு அடுத்த விநாடியே மற்றொரு இடத்துக்கு வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துவிடுகிறது. குற் றத்தை தடுக்கும் வகையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அழைப்பு
அதன்படி சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களி லும் (135 காவல் நிலையங்கள்) வாட்ஸ்-அப் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் அட்மினாக அந்தந்த காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்கள் இருப்பார்கள். மேலும் குற்றப்பிரிவு போலீஸார், போக்குவரத்து போலீஸார், ரோந்து பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
பொதுமக்கள் சார்பில் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், வணிக வளாக காவல் மேலாளர் கள், தன்னார்வ தொண்டு அமைப் பினர், அரசு அதிகாரிகள், ஹோட் டல் பாதுகாப்பு மேலாளர்கள் உள்ளிட்ட 13 வகையைச் சேர்ந்த வர்கள் உறுப்பினர்களாக இருப் பார்கள்.
கருத்து தெரிவிக்கலாம்
சம்பந்தப்பட்ட குழுவை துணை ஆணையர்கள், உதவி ஆணை யர்கள் கண்காணிப்பார்கள். அந் தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நிகழ்வுகள், சம்பவங்கள், பாதுகாப்பு குறைபாடுகள், மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
மேலும் நடக்கும் குற்ற நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அனுப்பலாம். வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் கள் (தெற்கு மற்றும் வடக்கு) ஆய்வு செய்வார்கள்.
வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்படும் தேவையான தகவல்களை சேகரித்து போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என சென்னை காவல் ஆணையர் கரன் சின்ஹா தெரிவித் துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.05.2017