disalbe Right click

Tuesday, May 16, 2017

போலி பத்திரம் தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை

போலி பத்திரம் தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை
போலி பத்திரம் தயாரிப்பு-குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை
வழக்கின் சுருக்கம்: காளையார்கோவில் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமாக கடைகள் உள்ளது. அதில் ஒரு கடையை (1) ஜான்போஸ்கோ என்பவருக்கு வாடகைக்கு பேசி ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தம் 02.04.2007 அன்று முடிவடைந்த நிலையில் ஆரோக்கியம் கடையை காலிசெய்து தருமாறு (1) ஜான்போஸ்கோவிடம் கேட்கிறார். ஆனால் அவர் (2) ரத்தினவேல்சாமி மற்றும் (3) ஆ. சோமன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு கூட்டுச்சதி செய்து மீண்டும் ஒரு வாடகை ஒப்பந்தத்தை 13.06.2007 அன்று ஆரோக்கியம் எழுதிக் கொடுத்தது போல ஒரு பத்திரத்தை காட்டுகிறார். அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் பல குளறுபடிகள் இருந்ததால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
(நேரடியாக வழக்கை படித்தால் புரியாது. அதனால் இந்த வழக்குச் சுருக்கம்)
இப்ப உள்ள போய் பாருங்க! ....அன்புடன் செல்வம் பழனிச்சாமி
நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - 2 சிவகங்கை
முன்னிலை : திரு. வீ .வெங்கடேசபெருமாள் பி.எல்
நீதித்துறை நடுவர் எண்- 2
சிவகங்கை
2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம் நாள் வியாழக்கிழமை
திருவள்ளுவராண்டு 2044 மன்மதவருடம் தை மாதம் 14 ம் நாள்
ஆண்டு பட்டிகை வழக்கு எண் 1 / 2013
குற்றம் முறையிடுபவர் :
அரசுக்காக
சார்பு ஆய்வாளர்
மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையம்
குற்ற எண் 11/2011
குற்றம் சாட்டப்பட்டவர் :
1. ஜான்போஸ்கோ (வயது 47-16)
த-பெ சவரிமுத்து
3811-1¸ திருநகர்
காளையார்கோவில்
சிவகங்கை
2. ரத்தினவேல்சாமி (வயது 60-16)
த-பெ சாமியாபிள்ளை
மறவமங்கலம்
3. ஆ. சோமன் (வயது 76-16)
த-பெ ஆண்டிகோனார்
மேலத்தெரு
மறவமங்கலம்
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
குற்றம் முறையிட்டது : 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் முறையிடப்பட்டுள்ளது.
குற்றம் வனையப்பட்டது : 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் வனையப்பட்டுள்ளது.
தீர்மானம் : இறுதியில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் இழைத்துள்ளதாக அரசு தரப்பில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என தீர்மானம்.
தீர்ப்பு : இறுதியில் அரசு தரப்பு 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள்120(பி)¸ 468¸ 471 ன் கீழான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்காததால் 1 முதல் 3 எதிரிகள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்மானித்து 1 முதல் 3 எதிரிகளை கு.வி.மு.ச. பிரிவு 248(1) ன் கீழ் விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
1. குற்ற இறுதி அறிக்கையின் சுருக்கம்
இவ்வழக்கின் வாதியான ஆரோக்கியம் என்பவர் தனக்கு பாத்தியமான காளையார்கோவில் மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் ளு.யு. பில்டிங்கில் உள்ள கடையில் 6 வது கடையான கதவு எண். 7/1யு என்ற கடையை 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த03.04.2001 ல் வாடகைக்கு விட்டு ரூ.10¸000- முன்பணம் பெற்று மாத வாடகை ரூ.500- என பேசி ஐந்து வருடங்களுக்கு வாடகை ஒப்பந்தம் கடந்த 02.04.2007 ல் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் கடையை காலி செய்ய சொன்ன போது குற்றம் சாட்டப்பட்டவர் ஏமாற்றி மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சதி செய்து 13.06.2007 ம் தேதி சாட்சி ஆரோக்கியம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வாடகை ஒப்பந்தம் எழுதிக் கொடுத்ததாகவும்¸ ரூ.40¸000- முன்பணம் பெற்றுக் கொண்டதாகவும்¸ ஒரு போலியான வாடகை ஒப்பந்தத்தை தயார் செய்து அதன் நகலை வாதியிடம் கொடுத்து வாதியின் கடையை காலி செய்ய மறுத்ததாகவும்¸ தன்னிடம் உள்ள அசல் வாடகை ஒப்பந்தத்தை ஆஜர் செய்ய நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பியும்¸ சம்மனை பெற்றும் அசல் ஆவணத்தை ஆஜர் செய்யாமல் இருந்த குற்றத்திற்காக 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றம் புரிந்ததாகக் கூறி குற்ற முறையிடுபவரால் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் கு.வி.மு.ச.பிரிவு 207ன் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது.
3. போதிய அவகாசம் கொடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றம் பற்றி விளக்கிக் கூறி வினவப்பட்டபோது அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளார்கள். ஆவணங்களின் அடிப்படையில் 1 முதல் 3 குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றச்சாட்டுகள் வனைந்து விளக்கி வினவிய போது 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
4. அரசு தரப்பில் அ.சா.1 முதல் 9 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அ. சா ஆ. 1 முதல் அ. சா ஆ. 3 வரை சான்றாவணங்கள் குறியிடப்பட்டன. 
அரசு தரப்பு சாட்சிகளின் சுருக்கம் பின்வருமாறு.
அ.சா.1 கொடுத்த புகார் அ.சா.ஆ.1 ஆகும். அ.சா.1 கொடுத்த புகாரைப் பெற்று சார்பு ஆய்வாளர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அ.சா.ஆ.2 ஆகும். அ.சா.1 தனது சாட்சியத்தில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு பில்டிங் தொழில் செய்வதற்காக காளையார் கோவிலில் உள்ள தனக்குச் சொந்தமான 6 கடைகளில் 1 கடையை 5 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.10¸000 முன்பணமாக பெற்று¸ மாதவாடகையாக ரூ.500- பேசி கடையை வாடகைக்கு விட்டதாகவும்¸ சிறிது காலம் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர் வாடகை கொடுத்ததாகவும்¸ பின்னர் 5 வருட ஒப்பந்தத்தின் முடியும் தருனமான 2007 ம் வருடம் அ.சா.1 ரூ.40¸000- முன் பணம் பெற்றுக்கொண்டு மாதவாடகையாக ரூ.600- நிர்ணயம் செய்தது போல அ.சா.1ன் பெயரில் போலி பத்திரம் தயார் செய்ததாகவும் கூறி சாட்சியம் அளித்துள்ளார். அ.சா.2 முதல் அ.சா.7 வரையானவர்கள் தங்களது சாட்சியத்தில் அ.சா.1 ன் சாட்சியத்தை ஒத்து சாட்சியம் அளித்துள்ளார்கள். அ.சா.8 புலன் விசாரணை அதிகாரி தனது சாட்சியத்தில் வழக்கின் புலன் விசாரணை முடித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.
5. பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதகமான சங்கதிகளை குறித்து கு.வி.மு.ச.313(1)(ஆ)ன் கீழ் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் எடுத்துக்கூறி விளக்கி வினவிய போது அரசுத்தரப்பு சாட்சியம் பொய் என்றும் தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளாக யாரையும் முன்னிட்டு விசாரணை செய்யவில்லை.
6. இவ்வழக்கில் தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை யாதெனில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இதச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசுத் தரப்பால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதா?  இல்லையா? என்பதுதான்.
7. பிரச்சனை
கற்றறிந்த அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ புகார்தாரரும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவரும் கடை உரிமையாளர்¸ வாடகைதாரர் எனவும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் ஏதோ புகார்தாரர் அவருக்கு வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகு 13.06.2007 ம் தேதி புகார்தாரர் ரூ.40¸000- முன்பணமாக பெற்றுக் கொண்டு 5 வருடங்களுக்கு வாடகை ஆவணம் செய்து கொடுத்ததாக புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு¸ போலி வாடகை ஒப்பந்த பத்திரம் தயாரித்துள்ளார்அந்த போலி பத்திரத்திற்கு 2 மற்றும் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியாக கையொப்பம் இட்டு மோசடி செய்து போலியான பத்திரத்தை தயாரித்து அதனை உண்மை போல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியத்தின் மூலம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
8. கற்றறிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ அரசு தரப்பு சாட்சிகளில் அ.சா.1 முதல் அ.சா.6 வரையான சாட்சிகளில் அ.சா.1 புகார்தாரரின் மகன் அ.சா.2 ஆவார் என்றும்¸ அ.சா.3 முதல் அ.சா.6 வரையான சாட்சிகள் அ.சா.அ.சா.2 ன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரே ஊர்க்காரர்கள் என்றும்¸ வாடகைதாரான 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் வாடகைதாரர் என்ற நிலையில் புகார்தாரர்/கட்டிட உரிமையாளரிடம் சில பிரச்சினைகள் இருந்ததைப் பயன்படுத்தி 1 வது குற்றம் சாட்டப்பட்டவரை பழிவாங்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்¸ அ.சா.அ.சா.9 ஆகியோரின் சாட்சியத்தின் படி புகார்தாரரின் உறவினரான சேம்பர் என்ற ஊரைச் சேர்ந்த அருளானந்து என்பவர் மூலம் பத்திரம் வாங்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்¸ அந்த அருளானந்து அ.சா.1 ன் உறவினர் என அ.சா.1 தனது சாட்சியத்தில் கூறி உள்ளதாகவும்¸ மேலும்¸ அந்த பத்திரம் போலிப் பத்திரம் என்றால் அந்த பத்திரத்தை வாங்கியவரை ஏன் சாட்சி;யான விசாரணை செய்யவில்லை என்பதற்கான விளக்கம் அரசு தரப்பில் இல்லை எனவும்¸ உண்மையில் போலி பத்திரம் எதுவும் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் தயார் செய்யவில்லை எனவும்¸ 2¸3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதில் சாட்சிக் கையொப்பம் செய்யவில்லை எனவும்¸ புகார்தாரரே ஏதோ பத்திரத்தை தயார் செய்துவிட்டு இந்த 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது பொய்யாக வழக்கு கொடுத்து இருப்பதாகவும்¸ உண்மையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி பத்திரம் தயார் செய்தார்கள் என்பது அரசு தரப்பு தகுந்த ஆவணம் மற்றும் சாட்சியம் மூலம் நிரூபிக்க தவறி உள்ளது எனவும்¸ அதே போல் சட்ட அறிவிப்பு 19.04.2010 ம் தேதி புகார்தாரருக்கு கிடைத்து உள்ளது. புகார்தாரர் 30.04.2010 ம் தேதியில் மறு பதில் அறிவிப்பு அனுப்பி உள்ளார். ஆனால் அதிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் காலதாமதமாக ஏன் புகார் கொடுத்தார்¸ 6 மாதங்கள் காலதாமதமானதற்கு சரியான விளக்கம் இல்லை எனவும்¸எனவே தகுந்த சாட்சியங்கள் மூலம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் தான் புகார்தாரருடைய கையெழுத்தை இட்டு போலியான 13.06.2007 ம் தேதியிட்ட ஒரு வாடகை ஒப்பந்த பத்திரத்தை தயார் செய்தார் என்பதையோ¸ 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்து இட்டார்கள் என்பதையோ அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறிவிட்டதாக வாதிட்டார்.
9. புகார்தாரருக்கு பாத்தியமான மதுரையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் காளையார்கோவில் என்ற ஊரில் உள்ள ளு.யு. பில்டிங்ஸ் என்ற கடைகளில் 6 வது கடையான கடை எண். 7/1யு என்ற கடையை புகார்தாரர் 03.04.2001 ம் தேதியில் ரூ.10¸000- முன்பணம் பெற்றுக் கொண்டு மாத வாடகையாக ரூ.500- என பேசி 5 வருடங்களுக்கு அதாவது 02.04.2005 ம் தேதி வரை 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாடகைக்கு விட்டார் என்பது இரு தரப்பிலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. புகார்தாரர் தரப்பில் வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகு 13.06.2007 ம் தேதியில் புகார்தாரருக்கு ரூ.40¸000- முன்பணம் வழங்கியது போலும்¸ 2¸ 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்கு சாட்சிக் கையெழுத்து இட்டது போல் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூட்டுச் சதி செய்து புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு போலியாக ஒரு வாடகை ஒப்பந்தம் எழுதி¸ அதனை உண்மை போல் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குற்றச்சாட்டாகும்.
10. கற்றறிந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிடும் போது¸ வாடகை ஒப்பந்த பத்திரம் எதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தயாரிக்கவில்லை என்றும்¸ இப்படி ஒரு வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை புகார்தாரர் தான் தயாரித்தார் என குறிப்பிடுகிறார். 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பான அ.சா.ஆ.3 ல் தெளிவாக¸ "எமது கட்சிக்காரர் தங்களின் வாடகைதாரராக யாதொரு காலதாமதமும் இன்றி முறையாக மாதாந்திர வாடகையை செலுத்தி அனுபவித்து வருகிறார் என்றும்¸ 3.04.2002 ம் தேதிய வாடகை உடன்படிக்கை முடிந்த பிறகு தொடர்ந்து மேற்படி சொத்தில் எமது கட்சிக்காரர் வாடகைதாரராக இருந்து தொழில் செய்ய தாங்களும் சம்மதித்து மீண்டும் 13.06.2007 ம் தேதி வாடகை உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு கூடுதல் அட்வான்சாக ரூ.40¸000- ம் அட்வான்சாக பெற்றுக் கொண்டு மொத்த அட்வான்ஸ் தொகை ரூ.50¸000- என்றும்¸ மேற்படி உடன்படிக்கை தேதியில் இருந்து மாத வாடகை ரூ.600- என நிர்ணயம் செய்து அதன்படி எமது கட்சிக்காரர் தங்களின் வாடகைதாரராக இருந்து தொடர்ந்து மேற்படி சொத்தில் தொழில் செய்து வருகிறார்"
என்று குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரருக்கு அனுப்பிய சட்ட அறிவிப்பில் தெளிவாக 13.06.2007 ம் தேதியில் புகார்தாரருக்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டது என குறிப்பிடுகிறார். எனவே வாடகை ஒப்பந்தமே இல்லை¸ அதனை புகார்தாரர் தான் தயாரித்துள்ளார்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதுவும் தெரியாது என்ற கற்றறிந்த எதிர் தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஏற்புடையதாக இல்லை என இந்நீதிமன்றம் கருதுகிறது.
11. புகார்தாரருக்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே கடை உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற நிலையில் பிரச்சினை இருந்து வந்ததும்¸ இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டதும் சாட்சிகளின் சாட்சியத்திலிருந்து அறிய முடிகிறது. புகார்தாரர் 13.06.2007 ம் தேதியிட்ட வாடகை உடன்படிக்கை பத்திரத்தில் தான் கையெழுத்து இடவில்லை என கூறுகிறார். அந்த வாடகை உடன்படிக்கை ஒப்பந்தத்தின் நகல் காளையார் கோவில் காவல் நிலையத்தில் 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார்தாரர் புகார் கொடுத்த போது தான் புகார்தாரரே அந்த வாடகை உடன்படிக்கை பத்திரத்தையே பார்த்தார் என குறிப்பிடப்படுகிறது. 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நிலையத்தில் கொடுத்த அந்த நகலை ஏன் புலன் விசாரணை அதிகாரி அந்த காவல் நிலையத்தின் உரிய அதிகாரி மூலம் கைப்பற்றி இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்பதற்கோ¸ அந்த காவல் நிலைய அதிகாரி ஏன் சாட்சியாக விசாரணை செய்யப்படவில்லை என்பதற்கோ அரசு தரப்பில் விளக்கம் இல்லை. அதே போல் போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் அசல் பத்திரம் 1 வது குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரிடம் இருந்ததால் கைப்பற்ற முடியவில்லை என்ற புலன் விசாரணை அதிகாரியின் சாட்சியம் ஏற்கும்படி இல்லை. சட்ட நடைமுறைப்படி யாரிடம் அசல் பத்திரம் உள்ளதோ அவருக்கு முறையாக சம்மன் அனுப்பி அந்த ஆவணத்தை பெறுவதற்கு முயற்சி செய்ய புலன் விசாரணை அதிகாரி தவறி உள்ளார். அதே போல் அசல் ஆவணம் இல்லாத நிலையில் நகல் ஆவணத்தை காளையார்கோவில் காவல் நிலையத்திலிருந்து பெற்று அதனை அறிவியல் பூர்வமாக சோதனைக்கு அனுப்பி உண்மையில் அந்த பத்திரத்தில் உள்ளது புகார்தாரரின் கையெழுத்து தானா இல்லையா என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறி உள்ளது.
12. ஒரு நபர் ஒரு பத்திரத்தில் கையெழுத்து இட்டார் என்பதை அந்த நபரின் சாட்சியத்தின் மூலமும்¸ அதனை கண்ணுற்ற பிற நபர்களின் சாட்சியத்தைக் கொண்டு நிரூபிக்கலாம். ஆனால் ஒரு பத்திரத்தில் ஒரு நபர் கையெழுத்து இடவில்லை என்பதை பிற சாட்சிகளின் சாட்சியத்தின் மூலம் அறிய இயலாது. பிற சாட்சிகள் கூறும் சாட்சியம் அந்த நபர் கையெழுத்து இடவில்லை என அந்த நபர் தான் தெரிவித்தார் என்று கேள்விநிலை சாட்சியமாகத்தான் இருக்க முடியும்.இவ்வழக்கிலும் புகார்தாரர் தான் 13.06.2007 ம் தேதிய உடன்படிக்கையில் கையெழுத்து இடவில்லை என்பதை அ.சா.2 முதல் அ.சா.6 வரையான சாட்சிகள் சொல்வது புகார்தாரர் சொல்வதைக் கேட்டு சொல்லும் சாட்சியம் ஆகும். அந்த சாட்சியங்களை வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது. அதே போல் அ.சா.1 க்கும்¸ 1 வது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கடை உரிமையாளர்¸ வாடகைதாரர் என்ற நிலையில் பல பிரச்சினைகள் இருக்கும் போது புகார்தாரர் கூறும் சாட்சியத்தை மட்டும் அடிப்படையாக வைத்து புகார்தாரரின் கையெழுத்தை 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் போலியாக இட்டார் என்று ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அரசு தரப்பு அசல் ஆவணத்தை கைப்பற்றியோ அல்லது உரிய நகலை எடுத்து அறிவியல் பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிஉள்ளது. அதே போல் 19.04.2010 ம் தேதியிட்ட வழக்கறிஞர் அறிவிப்பை பெற்ற புகார்தாரர் 5 மாதம் காலதாமதமாக 12.09.2010 ம் தேதியில் முதன் முதலில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளதாக சாட்சியம் அளித்துள்ளார்.பத்திரம் போலியானது என்று தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்காமல் ஏன் 5 மாதம் காலதாமதமாக புகார் கொடுத்துள்ளார் என்பதற்கான சரியான விளக்கம் அரசு தரப்பில் இல்லை. அதே போல் அ.சா.7 தனது சாட்சியத்தில் போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் வாடகை ஒப்பந்தப் பத்திரம் எழுதப்பட்ட பத்திரம் அருளானந்து¸ சேம்பர் என்ற பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த சேம்பர் என்ற ஊரைச் சேர்ந்த அருளானந்து என்பவர் அ.சா.1 ன் உறவினர் என அ.சா.1 தனது சாட்சியத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். போலியாக தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் வாடகை ஒப்பந்த பத்திரம் எழுதப்பட்ட பத்திரம்¸ அ.சா.1 ன் உறவினர் பெயரில் வாங்கப்பட்டிருப்பது இந்நீதிமன்றத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு 1 வது குற்றம் சாட்டப்பட்டவர் புகார்தாரரின் கையெழுத்தை போலியாக இட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம் தயாரித்துள்ளார் என்பதையோ¸ 2¸ 3 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த பத்திரத்தில் சாட்சியாக கையெழுத்து செய்தார்கள் என்பதையோ அரசு தரப்பு தகுந்த ஆவணம் மற்றும் நேரடி சாட்சியம் அல்லது அறிவியல் பூர்வ சாட்சியம் மூலம் நிரூபிக்க தவறிவிட்டது என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் 1 முதல் 3 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இ.த.ச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் சுமத்திய குற்றச்சாட்டுக்களை அரசு தரப்பு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கத் தவறியுள்ளதாக என இந்த பிரச்சினையை இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.
இறுதியாக அரசுத்தரப்பு 1 முதல் 3 எதிரிகள் இ.த.ச பிரிவுகள் 120(பி)¸ 468¸ 471 ன் கீழ் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்மானித்து கு.வி.மு.ச. பிரிவு 248(1)ன் கீழ் 1 முதல் 3எதிரிகளை விடுதலை செய்து இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
17.05.2017
நன்றி : http://www.tamiljudgements.org

கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்!

கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்!

பாதுகாப்பு வழிமுறைகள் இவைதான்!
உங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியுமா?! தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் 'வான்னா க்ரை' (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது.
சமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த 'வான்னா க்ரை' ரான்சம்வேர் தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கணினிகளும் அடக்கம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கணினிகளில் தான் இது மிக அதிகமாகப் பரவி வருகிறது. இந்த ரான்சம்வேர் கணினியில் நுழைந்த சில நொடிகளில், கணினியில் உள்ள தகவல்களை என்க்ரிப்ட் செய்துவிடும். அதன்பின் மீண்டும் கணினியைப் பயன்படுத்தவும், அதில் உள்ள தகவல்களை அக்சஸ் செய்யவும் சுமார் 300 அமெரிக்க டாலர்களை பிட் காயினாக செலுத்தும்படி ஒரு செய்தி திரையில் தோன்றும். தகவல்களை மீண்டும் பெறுவதற்காகப் பலரும் பணத்தைச் செலுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
ரான்சம்வேர் என்றால் என்ன?
கணினியைத் தாக்கி அதில் தீங்கு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் மால்வேர் என அழைக்கப்படும். இவற்றில் ஸ்பைவேர், வார்ம்ஸ் (Worms), ட்ரோஜன் வைரஸ், ரான்சம்வேர், பாட்ஸ் (Bots) எனப் பல வகைகள் உண்டு. இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்யும். ஆனால் ரான்சம்வேர் கொஞ்சம் அபாயகரமானது.
இ-மெயில் அல்லது இணையத்தின் ஏதாவது ஒரு வழியில் கணினி ஒன்றில் நுழைந்து, அதன் ஒட்டுமொத்தத் தகவல்களையும் லாக் செய்துவிடும் இந்த ரான்சம்வேர். தகவல்கள் அனைத்தும் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருக்கும் என்பதால் அதனை பயனாளர்களால் அக்சஸ் முடியாது. மீண்டும் கணினியையும், அதில் இருக்கும் தகவல்களையும் அன்லாக் செய்ய, குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி ரான்சம்வேர் எச்சரிக்கும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்தாவிட்டால், டேட்டாவை அழித்துவிடுவதாக ஹேக்கர்கள் மிரட்டுவார்கள். சில நேரங்களில் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, செலுத்த வேண்டிய தொகையானது இரட்டிப்பாகும்.
பிட் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸி மூலம் செலுத்தப்படுவதால், பணம் யாருக்குச் சென்று சேருகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். இதன் காரணமாகவே, ஹேக்கர்கள் பொதுவாக ரான்சம்வேர் மூலம் தாக்குதல் ஏற்படுத்தும்போது, பிட் காயின் மூலமாகவே பணத்தைப் பெறுகிறார்கள். சுருக்கமாக சொல்வதென்றால், உங்களுடைய கணினியில் நுழைந்து, உங்களுடைய தகவல்களை லாக் செய்து, அதை மீண்டும் உங்களிடமே தருவதற்கு பணம் கறப்பது தான் ரான்சம்வேர்.
பாதுகாப்பு வழிமுறைகள் :
இ-மெயில் மூலமாக தான் ரான்சம்வேர் அதிகளவில் பரப்பப்படுகிறது. எனவே, தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிலைத் திறக்காமல் இருந்தாலே பாதிப் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். முன்பின் தெரியாத முகவரியிலிருந்து மெயில் வந்தால், அதிலிருக்கும் அட்டாச்மென்ட்டை திறப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு முறை இணைப்பைத் திறந்ததுமே, ரான்சம்வேர் தனது வேலையைக் காட்டத் துவங்கிவிடும். சில நேரங்களில், வங்கியின் பெயரில் கூட, ரான்சம்வேர் பரப்பும் மெயில்களை அனுப்புவதை ஹேக்கர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தரமான ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளைக் கணினியில் நிறுவுவதோடு, அதை அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். பாதிப்பை ஏற்படுத்தும் மால்வேர்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப பாதுகாப்பு தரும்படி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளில் மாறுதல்களைக் கொண்டுவருவார்கள். எனவே, ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்வது கூடுதல் பாதுகாப்பைத் தரும். இதே போல கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்டேட் செய்வது நல்லது. 'வான்னா க்ரை' போன்ற ரான்சம்வேர் தாக்குதல் நடக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதமே அப்டேட் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ரான்சம்வேர் கணினியைத் தாக்கி, தகவல்களை லாக் செய்தால் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அனுப்ப வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில், பணம் செலுத்தினாலும் கூட தகவல்கள் திரும்பக் கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. கணினியிலுள்ள டேட்டாவை அவ்வப்போது பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம், ரான்சம்வேர் தாக்குதல் நடந்தாலும் பேக்கப் எடுத்து வைத்த டேட்டாவை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேக்கர்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை கணினியுடன் இணைக்கும்பொழுது அதை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். மெயில்களில் வரும் அட்டாச்மென்ட்டை டவுன்லோடு செய்து திறப்பதற்கு முன்பும் ஸ்கேன் செய்வது அவசியம்.
உங்கள் கணினியானது ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிப்பது நல்லது. ஏனெனில், = கணினியிலுள்ள தகவல்கள் இணையம் மூலமாக மற்றொரு கணினிக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க முடியும். மேலும், உங்கள் கணினியிலிருந்து மற்ற கணினிக்கும் ரான்சம்வேர் பரவுவதையும் தடுக்க முடியும்.
முன்னணி ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் நிறுவனமான காஸ்பர்ஸ்கை, ஐரோப்பிய காவல்துறையின் சைபர்கிரைம் தடுப்புப் பிரிவு, இன்டெல் நிறுவனம் ஆகியவை இணைந்து நோமோர் ரேன்சம் (https://www.nomoreransom.org/) என்ற இணையதளம் ஒன்றை நிறுவியிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்ட எண்ணற்ற ரேன்சம்வேர்களில் இருந்து, தகவல்களை மீண்டும் அன்-லாக் செய்யும் அப்ளிகேஷன்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. மேலும், ரான்சம்வேர்களில் இருந்து தகவல்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளும் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.
இந்தியாவிலுள்ள கணினிகளில், 'வான்னா க்ரை' ரான்சம்வேர் விரைந்து பரவிவருவதால் முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்படி ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கருப்பு

நன்றி : விகடன் செய்திகள் - 15.05.2017

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

தவறுதலாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரிப் படிவங்கள், வரி செலுத்துபவரை பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றன. மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், வட்டி, அபராதம் எனக் கூடுதல் செலவுகளையும் இழுத்துவிடுகிறது. ஆகவே, வரி செலுத்துபவர்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது அதிகக் கவனத்தோடு இருக்கும்பட்சத்தில், சிறிய தவற்றையும் தவிர்க்க முடியும். வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?
1.குறைபாடுள்ள படிவம் 26AS
படிவம் 26AS-ல் உள்ள குறைபாடுகளை, வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்குமுன்பாக, வருமான வரி இணையதளத்தில் உள்ள படிவம் 26AS-ல் என்ன பதிவாகி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் வருமான வரிப் பிடித்தம், முன்கூட்டியே கட்டிய வரி (Advance Tax), சுய மதிப்பீட்டு வரி (Self- Assessment tax) என மூன்றும் இருக்கும். இந்த மூன்றில் ஏதேனும் ஒரு விவரம் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால், வரி செலுத்துபவருக்கு அதற்குரிய வரவு (Credit) கிடைக்காது.
உதாரணமாக, உங்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்தவர், அதை வருமான வரி இலாகாவுக்கு செலுத்தா விட்டாலோ, செலுத்தியபின் அதற்குரிய படிவத்தைத் (TDS Return) தாக்கல் செய்யா விட்டாலோ அல்லது தாக்கல் செய்யும்போது தவறு செய்திருந்தாலோ அதற்குரிய வரவு, உங்கள் 26AS-ல் வந்து சேராது.
ஆகவே, நீங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் முன்பு 26AS-ல் உங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வருமான வரிப் பிடித்தம், முன்கூட்டியே கட்டிய வரி (Advance Tax), சுய மதிப்பீட்டு வரி (Self-Assessment Tax) என மூன்றும் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
2. தவறுதலான தனிநபர் விவரங்கள்
ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான வரிப் படிவங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. பெயர், வங்கிக் கணக்கு, இந்திய நிதி அமைப்புக் குறியீடு (IFSC Code) மற்றும் முகவரி போன்றவை சரியாகக் குறிப்பிடப்படாததால், ஏராளமான வரி தாக்கல் கணக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. உங்களுக்கு வர வேண்டிய அதிகம் செலுத்திய வரியும் (Refund) ரத்தாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே, உங்கள் விவரங்களும், படிவத்தில் இருக்கக்கூடிய விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
3. கணக்கில் வராத வருமானம்
பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, டிவிடெண்ட், காப்பீட்டு பாலிசி முதிர்வுத் தொகை ஆகியவை வருமான வரிக்கு உட்படாதவை. ஆனாலும், இவற்றின் விவரங்களை வரிக் கணக்குத் தாக்கலில் குறிப்பிட வேண்டும். இவை கட்டாயமாக இல்லையென்றாலும் வருமான வரி சம்பந்தமான தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்க இது உதவும்.
4. நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி
வரிச் செலுத்துபவர்கள் நிறையபேர், தங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டியை வருமான வரிக்கு உட்படுத்துவதில்லை. இது தவறான செயல். வங்கிச் சேமிப்புக் கணக்கில் ரூ.10,000 வரை பெறும் வட்டிக்கு மட்டும்தான் வரி விலக்கு உள்ளது. அதற்கு மேல் பெறும் தொகைக்கு உரிய வரியைக் கட்டும்பட்சத்தில் வருமான வரித் துறையின் கேள்விகளிலிருந்து தப்பிக்கலாம்.
5. சரியான படிவம்
வருமான வரித் துறையில் வரி தாக்கல் செய்ய ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகை வரிப் படிவங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். சரியான படிவத்தைப் பூர்த்திசெய்து தந்தால்தான் வரிப் படிவங்கள் சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்டதாக அர்த்தம். இல்லையெனில் உங்களது வரிப் படிவம் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.
6.படிவங்களைச் சரிபார்ப்பது
வருமான வரியை மின்னணு முறையில் (இ - ஃபைலிங்) செய்வதுடன், அதற்கான ஒப்புதல் படிவத்தை (Acknowledgement) 120 நாள்களுக்குள் கையொப்ப மிட்டு, மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்துக்கு (Centralized Processing Center) அனுப்ப வேண்டும் அல்லது டிஜிட்டல் கையொப்பமிட்டு வருமான வரி ஒப்புதல் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் வருமான வரி தாக்கல் முழுமை அடையும்.
7. சொத்துகள் பற்றிச் சரியாகக் குறிப்பிடாமல் இருப்பது
வரி செலுத்துகிறவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பார்கள். வருமான வரிச் சட்டத்தின்படி, ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும்தான் சுய ஆக்கிரமிக்கப்பட்ட வீடு எனக் கருதி வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்குச் சந்தையில் உள்ள வாடகை வருமானத்தைக் (Fair Market Value) குறிப்பிட்டு, அதில் 30 சதவிகிதத்தைப் பராமரிப்புச் செலவுக்காகக் கழித்துவிட்டு வரும் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும்.
8.முந்தைய பணியின் வருமானத்தைத் தவிர்த்தல்
வேலை செய்பவர் வேறு பணிக்கு மாறும்போது, முந்தைய பணியின் மூலமான வருமானத்துக்கு வரியைக் கணக்கிடாமல் விட்டு விடுதல். முந்தைய நிறுவனம் மூலம் பெற்ற வருமானம், தற்போது பணியாற்றும் நிறுவனம் மூலம் பெறும் வருமானம் என இரண்டு வருமானத்தையும் கணக்கிட்டு வருமான வரிப் பிடித்தம் செய்ய சொல்ல வேண்டும்.
9.வெளிநாட்டிலுள்ள சொத்துகளை அறிவிக்காதது
நீங்கள் இந்தியராக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் உங்களுக்குச் சொத்துகள் இருந்தாலோ, வெளிநாட்டில் வருமானம் இருந்தாலோ, அதை இந்திய வருமான வரிச் சட்டப்படி வருமான வரிக் கணக்கில் குறிப்பிட்டு அதற்குரிய வரியைச் செலுத்த வேண்டும். மறைக்கப்படும் பட்சத்தில் வட்டி, அபராதத்துடன் சிறைத் தண்டணையும் உண்டு. ஆகவே, வெளி நாட்டுச் சொத்துகள் பற்றி முழுமையாகக் குறிப்பிடுவது அவசியம். 10.காலகெடுவுக்குள் வரிக் கணக்குத் தாக்கல்
காலகெடுவுக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, வீணாக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க உதவும். மேலும் வருமான வரி துறையினர், நீண்ட காலமாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர் களைத்தான் குறி வைக்கிறார்கள்.
ஆகவே, இதிலிருந்து தப்பித்துக் கொள்ள, வருமான வரிக்கணக்குத் தாக்கலைச் சரியான தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.!
ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோயம்புத்தூர்

நன்றி : நாணயம் விகடன் 21.05.2017

Monday, May 15, 2017

ஜீவனாம்சம் அளிப்பது கட்டாயமா?

ஜீவனாம்சம் அளிப்பது கட்டாயமா?

டில்லி கோர்ட் அதிரடி உத்தரவு!
புதுடில்லி: 'தன் திருமணம் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, அதற்கான கோர்ட் உத்தரவை கணவன் பெறும் வரை, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், அனைத்து பலன்கள் மற்றும் பாதுகாப்பை பெற, மனைவிக்கு உரிமை உண்டு' என, டில்லி கோர்ட் கூறி உள்ளது.
டில்லியைச் சேர்ந்த ஒருவர், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த மனைவிக்கு, மாதந்தோறும், 5,000 ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டுமென, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, டில்லி செஷன்ஸ் கோர்ட்டில், மேல்முறையீடு செய்த அந்த நபர், தன்னை திருமணம் செய்வதற்கு முன், தன் மனைவி, வேறொருவரை திருமணம் செய்திருந்ததாக, மனுவில் குறிப்பிட்டார்.
உரிமை உண்டு:
இந்த வழக்கை விசாரித்த, செஷன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டதாவது:ஆண், பெண் இடையே நடந்த திருமணம், செல்லாததாக கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு, அதற்கான உத்தரவை கணவன் பெறும் வரை, குடும்ப வன்முறை சட்டப்படி, அனைத்து பலன்கள் மற்றும் பாதுகாப்பை பெற, மனைவிக்கு உரிமை உண்டு. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக, திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. முதல் திருமணம் நடந்ததை நிரூபிக்க, சான்றிதழ் மட்டும் போதாது; எனவே, மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வரதட்சணை :
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தாக்கல் செய்திருந்த மனுவில், 'கடந்த, 2013ல், எனக்கு திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே, கணவரும், அவர் குடும்பத்தினரும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். 'இரண்டு மாதங்களில், அந்த வீட்டை விட்டு என்னை துரத்திவிட்டனர். எனவே, எனக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தர வேண்டும்' என, கூறியிருந்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -16.05.2017

பெண்களின் சொத்துரிமையும், திருமண ஒப்பந்தங்களும்


பெண்களின் சொத்துரிமையும், திருமண ஒப்பந்தங்களும்

இன்று ஆணும் பெண்ணும் ஓரளவிற்கு மன முதிர்ச்சி அடைந்த பிறகே திருமணம் செய்து கொள்வதால், சமீப காலங்களாக, திருமணத்தை ஒரு ஒப்பந்தமாகப் பார்க்கும் பழக்கமும், அதன் அடிப்படையில் மேலை நாடுகளைப் போலவே, இந்தியாவிலும், திருமண ஒப்பந்தங்கள் போட்டுப் பதிவு செய்து கொள்வதும் புழக்கத்தில் வர ஆரம்பித்துவிட்ட்து. ஆகவே, சராசரி மக்களும் இது குறித்து அறிந்து கொள்வதும், இது பற்றிப் பேச வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது.திருமண ஒப்பந்தம் என்பது, திருமணத்திற்கு ஆகும் செலவு முதல், திருமணத்தின் பின், இணைந்து வாழும் தாம்பத்ய வாழ்க்கையில் ஆகும் செலவுகளும், ஒரு வேளை பிரிய நேர்ந்தால், எவருக்கு எந்த சொத்து உரிமையானது என்பது பற்றியும், ஒருவர் இறந்தால் அடுத்தவர் அந்த சொத்தை என்ன செய்ய வேண்டும் என்பது வரை திட்டமிட்டு, அதை ஒப்பந்தமாகப் பதிவு செய்வதும் ஆகும். இதில் ஆண் பெண் இருவரின் கடமைகளும், உரிமைகளும் இடம் பெறும்.
ஒப்பந்தம் தேவையா?
இந்தியாவில் இந்த வழக்கம் ஆரம்பித்திருக்கிறது என்றாலும், இங்கே, திருமணம் என்பது தனிப்பட்ட இரு நபர்களின் இணைவாகப் பார்க்கப்படாமல், குடும்ப இணைப்பாகவும், சமூக நிகழ்வாகவும் பார்க்கப்படுவதால், இது போன்ற திருமண ஒப்பந்தங்கள் போட்டுக் கொள்வதில் சிக்கித்தான் நிற்கிறது.
இந்திய வழக்கத்தில் இந்த ஒப்பந்த முறை வருமாயின், அதை எந்த அளவுக்கு அனுமதிக்கலாம், அப்படி அனுமதிக்கும் விசயங்களில் என்னென்ன மாறுதல்கள் தேவை அல்லது எவ்வெவற்றை நாம் சட்டபூர்வமாக மாற்ற வேண்டும் என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இஸ்லாமிய திருமணங்களில் அவை ஏற்கனவே ஒப்பந்தம் போலவே பாவிக்கப்படுகிறது. கிறித்தவர்களிடையேயும் ஓரளவிற்கு இதே நிலை. இந்து திருமணங்களில் தான் திருமணம் என்பது ஜன்ம பந்தம் என்பது போன்ற நம்பிக்கைகள் நிலவுவதால், அதை ஒட்டி எழுந்து, பின் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட இந்து சட்டங்கள்ஆனதால், திருமண ஒப்பந்தங்களுக்கு ஏற்ப தம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. அது மட்டுமன்றி, இந்து திருமண பந்த்த்தில் சாத்திரம் எனும் பெயரில் நிலவும் பாரபட்சமும் களையப்பட வேண்டி இருக்கிறது. அதற்கு இந்த ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு உதவுகின்றனதான்.
திருமணச் செலவுகள்
இந்திய திருமணத்தைப் பொருத்த வரையில், குறிப்பாக தமிழக இந்து திருமணத்தைப் பொருத்த வரையில், பெண்ணின் பெற்றோரே திருமணத்தின் முழு செலவையும் ஏற்கின்றனர்.அவளின் திருமண செலவானது, அந்த குடும்பத்தின் அந்தஸ்தை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. இங்கே திருமணச் செலவு என சொல்லப்படுவதில் அவளுக்கு தொகையாகவோ நகையாகவோ கொடுக்கப்படும் சொத்துக்கள் அல்லாமல், திருமணத்தை எந்த மண்டபத்தில் நடத்துவது, எத்தனை பேரை அழைப்பது, பத்திரிகை, உணவு, போன்றவற்றை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால், அது அந்த குடும்பத்தின் அந்தஸ்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பதாக நினைக்கப்படுகிறது.பின் ஒரு நாளில், அந்த குடும்பத்தின், அதாவது அவளின் பெற்றோரின் சொத்தானது பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டால், குடும்ப அந்தஸ்துக்காக செலவழிக்கப்பட்ட தொகையும், அவளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
உயில் எழுதாமல் பெற்றோர் இறந்தால்...?
உதாரணமாக ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு குடும்பத்தில் இருக்கிறார்கள் எனில், பெற்றோர் இருவரும் உயில் எழுதாமல் இறந்திருந்தால், பெற்றோரின் சொத்து மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் பெண்ணிற்கு ஏற்கனவே கொடுத்த தொகை மற்றும் நகை போன்றவற்றிற்கான தொகை பெண்ணின் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு, அதன் பின் உள்ள தொகை பகிரப்பட வேண்டும். ஆனால், உண்மையில் அவளுக்கான தொகையில் , மொத்த குடும்பத்தின் அந்தஸ்திற்காக செலவழித்த தொகையும் அதாவது கல்யாண செலவும், கழிக்கப்படுகிறது. உண்மையில் அந்தத் தொகை அவள் கைக்கு வந்திருக்கவே இல்லை. அவள் கைக்கு வராத தொகை அவள் கணக்கில் இருந்தே எடுக்கப்படுகிறது. அது போலவே, அவளின் கைக்கு வராமலேயே, அவள் செலவாகவே, பிள்ளை பிறப்புச் செலவு, அந்த விசேசங்களுக்கு செலவழிக்கப்படும் தொகையும். புது குடும்பம்:
மனைவியின் பங்கு...?
அதே போல, உயில் ஏதும் எழுதாமல், ஒருவன் இறந்துவிட்டால், அவனின் சொத்தானது, அவனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சம பாகங்களாக பிரித்துக் கொடுக்கப்படும். மனைவியும், இரு பிள்ளைகளும் இருந்தால், மொத்த சொத்தும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒரு பங்கு மனைவிக்கு வரும்.உண்மையில் அந்த சொத்தை சம்பாதிக்க அவளின் உழைப்பும் அதில் இருந்திருக்கிறது. ஒரு வீட்டில், உணவுக்கானவற்றைப் பெற்றுவருதல், அப்படிப் பெற்று வந்தவற்றை உணவாக மாற்றுதல் என இரு வேலைகளே முதன்மையானவை. அதில் பிள்ளை பெறுதல் போன்ற வேலைகள் பெண் மட்டுமே செய்ய முடியும் என்பதால், அவள் வீட்டில் இருந்தபடி, பொருட்களை உணவாக மாற்றும் சமையல் வேலையையும், அதனாலேயே, மற்றொரு வேலையான உணவை சம்பாதித்து வரும் வேலையை ஆணும் கைக்கொள்கிறார்கள். குடும்பத்தின் மொத்த வேலைகளை ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவள் சமைத்த உணவு அவளுடையது அல்ல. அந்தக் குடும்பத்தினுடையது. அது போலவே அவன் சம்பாதித்தது அவனுடையது அல்ல. அந்தக் குடும்பத்தினுடையது. அந்த இருவர் ஆட்சியின் குடிமகன்களே பிள்ளைகள், பெற்றோர் எல்லாம்.அப்படி இருக்க, அவன் இறந்துவிட்டால், அந்த சொத்து முழுவதுமே அவளுடையது மட்டுமே. (இன்றைய சட்டம் அப்படிப் பார்க்கவில்லை)
பெற்றோர்கள்?
ஆம். அந்த சொத்தில் அதாவது, அவளும் அவனும் இணைந்து சம்பாதித்த சொத்தில், அண்டி வாழும் நிலையில் இருக்கும் அந்த இருவரின் பிள்ளைகளும், அந்த இருவரின் பெற்றோர்களும் உதவி பெறத்தக்கவர்களே ஆவார்கள். கவனிக்க..இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது ”இருவரின் பெற்றோருமே.”ஆனால், உண்மையில், அந்த ஆண்/பெண் இருவரின் சம்பாதித்த சொத்தானது, அவனின் சொத்தாகவே கொள்ளப்பட்டு, அந்த சொத்தில், அவனின் மனைவி, அவனின் பெற்றோர், குழந்தைகள் மட்டுமே பெற முடிகிறது. அவளின் சம உழைப்பு அங்கு கவனிக்கப்படுவதே இல்லை. காரணம் நம் இந்திய மனங்களில், ஒரு திருமணம் என்பது ஒரு ஆண் பெண் -னின் இணைப்பு, ஒரு ”புது குடும்ப உருவாக்கல்” எனும் எண்ணம் இல்லாமல், பெண் வந்து ஆணின் குடும்பத்தோடு இணைவதாகவே பதிந்திருப்பதே காரணம்.இறந்த ஒருவனின் சொத்தில் மனைவிக்கு, ”அவனின் பெற்றோருக்கு”, அவனின் பிள்ளைகளுக்கு என ஆளுக்கு ஒரு பங்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டால், அங்கே கணக்கு முடிக்கப்படுவதாகவே பொருள். கமிட்மெண்ட் ஏதும் இல்லை என்றாகிவிடுகிறதல்லவா?
விவாகரத்து:
திருமணம் ஆன ஒரு தம்பதி விவாகரத்து செய்து கொள்கிறார்கள் எனில், அந்த விவாகரத்தின் பின் அதுவரை அவர்கள் சம்பாதித்த அவர்களின் சொத்தைப் பகிர்வதில் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேர்கிறது.இருவரும் சேர்ந்து சம்பாதித்த சொத்தில், எவர் பெயரில் சொத்து இருக்கிறதோ அதை அவர் எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், அது கூட்டு சம்பாத்தியம். அநேக சமயங்களில் சொத்துக்கள் ஒருவரின் பெயரில் மட்டுமே வாங்கப்படுகின்றன. அது பெரும்பாலும் அந்த வீட்டின் ஆணின் பெயரில். பெண்ணின், பிறந்த வீட்டில் அவளுக்கு கொடுக்கப்பட்ட நகைகளை வைத்து வாங்கிய சொத்து என்றால்தான் அது அவள் பெயரில் கிரயம் ஆகிறது. இது சரிதான். அதே போல, அவனின் பெற்றோர் அவனுக்குக் கொடுத்த சொத்தில் இருந்து வாங்கிய வீடு எனில் அவன் பெயரில் கிரயம் ஆகிறது. இதுவும் சரிதான். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சம்பாதித்த சொத்து?
ஒப்பந்த விவரங்கள்
இந்த இடத்தில்தான் மேலைநாட்டு சட்டமும், சில இஸ்லாமிய சட்டங்களும் ஒப்பந்த வடிவில் இன்று புழக்கத்தில் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த ஒப்பந்தங்களில் திருமண செலவு, ஆண்/பெண் இருவரின் பொறுப்பும். அதை அவர்கள் தமது பெற்றோரிடமிருந்து பெறுகிறார்களா? அல்லது கடனாக வாங்குகிறார்களா? சம்பாதிக்கிறார்களா? என்பது அவர்கள் பிரச்சனை. ஒப்பந்தப்படி, திருமண செலவில் எதை எவர் செய்வது என்பது முடிவாகிறது. அதன் பின் அவர்கள் இருவரும் சம்பாதிக்கும் சொத்துக்கள் இருவரும் சேர்ந்திருந்தால் எப்படி அனுபவிப்பது, பிரிந்தால் எப்படி பிரித்துக் கொள்வது? ஒருவர் இறந்தால் அந்த சொத்தில் மற்றவருக்கு எந்த அளவுக்கு பாத்தியதை? என எல்லாமும் தெளிவாக குறிப்பிடப்படுகிறது. இஸ்லாத்தில், பெண்ணுக்கு ஆண் தரும் மஹர் தொகையானது, அவளுக்கு அவள் கணவன் தர வேண்டிய கடன் தொகை போலவே பாவிக்கப்படுகிறது. கணவனுடன் அவள் சேர்ந்து வாழ்ந்திருக்கையிலேயே, கணவனானவன், மனைவிக்குத் தர வேண்டிய மகர் தொகையைத் தந்திருக்காவிடில், அந்த்த் தொகையை கடனை வசூலிப்பது போல மனைவி வழக்கிட்டும் கூட வசூலிக்கலாம்.அது போலவே இந்த ஒப்பந்தங்களிலும், ஒருவர் மற்றவருக்குத் தர வேண்டிய கடப்பாடுகள் எவையும் இணைந்து வாழ்கையிலும் கடன் தொகை போலவே பாவிக்கப்படுகிறது.
பிள்ளையில்லா விதவை இறந்தபின்?
இந்து சொத்துரிமைச் சட்டத்தின்படி, பிள்ளை இல்லாத ஒரு விதவை தம் கணவனிடமிருந்து பெற்ற சொத்துக்கள், அவளது கணவனின் சகோதரர்களின் சொத்தாக அவன் பக்கம் மட்டுமே பிரிக்கப்படும். அதாவது, பிள்ளையில்லாத தம்பதிக்கு, கணவனின் குடும்ப சொத்து, தவிர, அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்த மண வாழ்க்கையில் சம்பாதித்த சொத்தானது, அந்த தம்பதி இருவருமே இறந்ததும், உயில் ஏதும் எழுதிவைக்காவிட்டால், அது அந்த ஆணின் சகோதர,சகோதரிகள் வசமே சென்றுவிடும். இதுதான் இப்போது நிகழ்வது. உண்மையில் அதில் அவளின் உழைப்பு?விதவையின் உயிலில்லா சொத்து:கணவனின் இறப்பிற்குப் பின் அவன் அந்த சொத்தை தன் மனைவிக்கு எழுதி வைக்கிறான். இந்நிலையில் அந்த சொத்தை அனுபவித்துவந்த மனைவியும், இறக்கிறாள் எனில், அந்த சொத்தானது, அவனது பிள்ளைகள் தவிர அவனது பெற்றோருக்கும் பங்காக பிரிக்கப்படுகிறது. இந்த சூழலில், அந்த மனைவி தம் பெற்றோரைப் பாதுகாத்து வந்திருந்தால் கூட இன்றைய நிலவரப்படி, அந்த சொத்தில் அவளின் பெற்றோருக்கு உரிமை இல்லை.
சட்டத்தில் இல்லாத அம்சம்
அதாவது, ஒரு குடும்பத்தில் அண்டி வாழும் நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு உள்ள உரிமை போலவே, ஆணின் பெற்றோருக்கும் சொத்துரிமை போய்ச் சேர்கிறது. மூத்தோர் பாதுகாப்புச் சட்டப்படி, பெண்ணுக்கும் தம் பெற்றோரைப் பாதுகாக்கும் கடமை இருப்பதைப் போலவே, அவர்களுக்கும் அந்த சொத்தில் உரிமை உண்டு எனினும் அது சட்டத்தால் தரப்படவில்லை என்பதே இன்றைய நிஜம். காலம் மாற மாற, சமூக சிந்தனைகள் மாற மாற சட்டமும் அதற்கேற்ப தன்னை மாற்றியே வருகிறது. ஆனால், ஆண்/பெண் உறவு முறை திருமணம் போன்றவற்றில் தம்மை மாற்றிக்கொள்ள சட்டத்திற்கு அதிக காலம் ஆவதாலேயே இது போன்ற ஒப்பந்தங்கள் மக்களுக்குள் புழக்கத்தில் வர ஆரம்பித்திருக்கிறது.இந்திய சமூகத்தில் திருமண ஒப்பந்தங்கள் வெல்லுமா? சட்டங்கள் உடனிருக்குமா?
- ஹன்ஸா ஹன்ஸா(வழக்கறிஞர்)Legally.hansa68@gmail.com
நன்றி : தினமலர் நாளிதழ் - 03.12.2016

பான் அட்டை, ஆதார் எண்ணில் தவறுகளை களைய புதிய வசதி

பான் அட்டை, ஆதார் எண்ணில் தவறுகளை களைய புதிய வசதி
வருமான வரித்துறை அறிமுகம்
பான் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளில் தவறான விவரங்கள் இருந்தால் ஆன்லைன் மூலமாக சரிசெய்து கொள்ளும் வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைத்து கொள்ளும் வசதியை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இரண்டு இணையதள ஹைப்பர்லிங்கை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. ஒன்றில் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைக்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணில் ஏதேனும் மாறுதல் செய்யவேண்டுமென்றாலும் அல் லது புதிய பான் எண்ணுக்கு விண்ணபிக்க வேண்டுமென்றாலும் இந்த இணைப்பை பயன்படுத்தலாம்.
ஆதார் அட்டையில் பெயர் அல்லது மற்ற விவரங்கள் தவறாக இருந்தால் சரிசெய்து கொள்வதற்கு இரண்டாவது இணைப்பை பயன்படுத்தலாம்.
ஆதார் அட்டையில் நீங்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஸ்கேன் செய்து ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே 1.22 கோடி பேர் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 25 கோடி மக்கள் இந்தியாவில் பான் எண் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 111 கோடி பேர் இந்தியாவில் ஆதார் அட்டை வைத்துள்ளனர். வரித்துறை தகவலின்படி 6 கோடி பேர் தற்போது வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர்.
நிதி மசோதா 2017-18ன் படி வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்று கூறப்பட்டது. மேலும் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை கடந்த வாரம் வரித்துறை அறிமுகம் செய்தது. ஆதார் எண், பான் எண் ஆகிய இரண்டிலும் ஒரே மாதிரியான விவரங்கள் இருக்க வேண்டும். ஒரே மாதிரியான விவரங்கள் உள்ளனவா என்பதை தனிநபர் அடையாள ஆணைய விவரங்களோடு சரிபார்க்கப்படும். சரிபார்ப்புக்குப் பிறகு ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பது முடிவடையும். ஒருவேளை விவரங்கள் பொருந்த வில்லையென்றால் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைத் தேர்வு செய்து அதை மொபைல் மூலம் உறுதி செய்துகொள்ள முடியும்.
https://incometaxindiaefiling.gov.in
நன்றி ; தி இந்து தமிழ் நாளிதழ் - 15.05.2017