நீதிபதிகளை விமர்சிக்கலாமா?
விமர்சனத்துக்கான அளவுகோல் என்ன?
“ஜெயலலிதாவை நிரபராதி என்று விடுதலை செய்கிறேன். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு இந்த வழக்கில் பெரிய பங்கு இல்லை என்பதால், அவர்களையும் விடுதலை செய்கிறேன்” என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, மே 11, 2015 அன்று, தீர்ப்பை வாசித்ததும், இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் ‘நெட் டிராஃபிக்’ பிரச்னையில் சிக்கித் திணறின. அடுத்த சில நொடிகளில், சமூக வலைத்தளங்களின் ‘டிரெண்ட்’டில், டாப்பில் இருந்தவர்கள், ஜெயலலிதாவும் நீதிபதி குமாரசாமியும்தான்.
அந்த சமயத்தில், சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார், தமிழ்நாடு – பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம். அதில், ‘நீதிபதி குமாரசாமியையையும் அவருடைய தீர்ப்பையும் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்திருந்தார். அந்த அறிக்கையும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
பார் கவுன்சில் தலைவர் செல்வத்தின் அறிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதில், ‘‘செல்வத்தின் இந்தக் கருத்து தவறானது. ஜனநாயக அமைப்பில், நீதிமன்றத் தீர்ப்பை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். தமிழ்நாடு – பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாதா?என்ற கேள்விகளை, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் முன்பாக வைத்தோம். அவர்களின் கருத்துகள்…
‘‘அப்படியானால் மேல்முறையீடு செய்வதே தவறா?”
மூத்த வழக்கறிஞர் துரைசாமி: “நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்றால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாதே. மேல்முறையீட்டு வழக்கை நடத்தும் வழக்கறிஞர், ‘கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது. பொருத்தமில்லாதது. நீதிபதி இந்த வழக்குக்குப் பொருந்தாத வகையில் தீர்ப்பளித்துள்ளார்’ என்று சொல்லித்தான் மனுச் செய்கிறார். அதை ஏற்றுக்கொண்டுதான் அந்த மனுவையே விசாரணைக்கு எடுக்கிறது, மேல் நீதிமன்றம்.
கீழ் நீதிமன்றத்தில் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறானது என்று மேல் நீதிமன்றத்தில் குறிப்பிடப்படுவதற்கு என்ன அர்த்தம்? அங்கு நீதிபதியும் விமர்சிக்கப்படுகிறார் என்றுதான் அர்த்தம். அதேசமயம், நீதிபதிகளின் மீதான விமர்சனம், அவர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இருக்கலாமே தவிர, தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ஜெயலலிதா வழக்கில் கணக்கைக் தவறாகப் போட்டுக் காட்டி, ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை விமர்சிக்கலாம். குமாரசாமி தனக்கிருக்கும் அறிவை சரியாகப் பயன்படுத்தாமல் அல்லது முழுமையாகப் பயன்படுத்தாமல், தீர்ப்பை வழங்குவதில் தவறு செய்துள்ளார் என்று குறிப்பிட்டால் அது தவறில்லை. அதாவது, விமர்சனம் தவறில்லை. ஆனால், உள்நோக்கம் கற்பிப்பது தவறு. ஒரு நீதிபதி உள்நோக்கத்துடன் இந்தத் தீர்ப்பை எழுதி உள்ளார், ஆதாயம் அடைந்துள்ளார், பணம் வாங்கி உள்ளார் என்று விமர்சித்தால், அது உள்நோக்கம் கொண்ட விமர்சனம். அது தவறு.
1956-ம் ஆண்டு, திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்தவர் மலையப்பன். அவர் பிறப்பித்த மாவட்ட உத்தரவு ஒன்றை எதிர்த்து, அந்தப் பகுதி நிலச்சுவான்தார்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில், வழக்குக்கும் தீர்ப்புக்கும் சம்பந்தம் இல்லாத வகையில், தனிப்பட்ட முறையில் கலெக்டர் மலையப்பனைக் கடுமையாகச் சாடி இருந்தனர். அத்துடன், மலையப்பனுக்கு பதவி உயர்வு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் குறிப்பிட்டு தீர்ப்பெழுதி இருந்தனர். இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளின் தீர்ப்பில் உள்நோக்கம் உள்ளது என்று சொல்லி அந்தத் தீர்ப்பை பெரியார் தீயிட்டுக் கொளுத்தினார். பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.வி.ராஜமன்னார், பஞ்சாபசேச அய்யர் ஆகியோர் முன்பாக, பெரியார் 75 பக்கத்தில் தனது பதிலைக் கொடுத்தார். அதில், மலையப்பன் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான், டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அவரை இப்படிச் சாடி உள்ளனர் என்று குற்றம்சாட்டினார் பெரியார். இதையடுத்து நீதிபதிகள், ‘தீர்ப்பை பெரியார் விமர்சனம் செய்தது தவறில்லை. ஆனால், தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் சாதியைக் குறிப்பிட்டு பெரியார் உள்நோக்கம் கற்பித்தது தவறு’ என்று சொல்லி அவருக்கு நூறு ரூபாய் அபராதம் விதித்தனர். ஒரு தீர்ப்பைப் பற்றிய விமர்சனத்துக்கும் உள்நோக்கத்தோடு விமர்சிப்பதுக்கும் உள்ள வித்தியாசத்துக்கு இந்த வழக்குதான் சிறந்த உதாரணம்.”
கண்ணியமான மொழியில் விமர்சிக்கலாம்!
மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்: “கண்ணியமான மொழியில் எந்த ஒரு தீர்ப்பையும் அதை வழங்கிய நீதிபதியையும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்; அது குற்றமாகாது. சட்டத்தின் துணைகொண்டு தீர்ப்புகளை விமர்சிக்கலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் நலனைக் கருத்தில் கொண்டு விமர்சிக்கலாம். சமூக மேம்பாடு என்னும் லட்சியத்துடன் தீர்ப்புகளை விமர்சிக்கலாம். ஆனால், இந்த விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டும்.
ஆனால், நியாயமான விமர்சனம் என்பது எது? அதற்கான அளவுகோல் என்ன என்பதே கேள்வியாக இருக்கிறது.
ஒரு நீதிபதி, தீர்ப்பில் இழைத்துள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி தீர்ப்பு திருத்தப்பட வேண்டும் என்று பேசுவதும் விமர்சிப்பதும் நியாயமான விமர்சனம். அதை நீதிமன்ற அவமதிப்பாகக் கொள்ளமுடியாது.
ஆனால், குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காகவே நீதிபதி தீர்ப்பை எழுதியிருக்கிறார். அதற்காக அவர் ஆதாயம் அடைந்திருக்கிறார் என்று பேசுவது, நீதிமன்ற அவமதிப்பு.”
ஆரோக்கியமான விமர்சனங்களுக்குத் தடையில்லை!
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு: “தீர்ப்புகளை ஆரோக்கியமாக விமர்சனம் செய்வதற்கு சட்டத்தில் தடையில்லை. 1971-ம் வருட நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் ஐந்தாவது பிரிவில், ‘ஒரு வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாகத் தீர்ப்பு வழங்கியபின் அதன்மீது வைக்கப்படும் நியாயமான விமர்சனம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது. 1993-ல் உச்ச நீதிமன்றம் ரோஷன்லால் அகுஜா என்ற வழக்கில் கொடுத்த தீர்ப்பில், ‘நீதிபதிகளும், நீதிமன்றங்களும் முறையான, நியாயமான விமர்சனங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படாமலும், பாதிக்கப்படாமலும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மற்ற நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சமீபகாலங்களில், இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொதுவெளியில் கவனத்தைப் பெறுவதுடன் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றன.
ஒரு வகையில், இந்தப் போக்கு வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில், மக்கள் தாங்கள் விரும்பும் தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் குற்றத்துக்கு உள்ளாகி தண்டனை பெறும்போது உணர்ச்சிவசப்பட்டு சட்டத்தின் வரையறை புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்க முயலுவது வருந்தத்தக்கது. சட்டத்தின் மாட்சியை அது அவமானத்துக்கு உள்ளாக்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் அட்வகேட் ஜெனரல் அல்லது அவருடைய அனுமதியைப் பெற்ற தனிநபர் மட்டுமே அவதூறு வழக்குத் தொடரலாம். நினைத்தவர்கள் எல்லாம் வழக்குத் தொடங்க முடியாது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் சிறை அல்லது 2,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். இப்படி நீதிமன்றங்களை முறைகேடாக விமர்சனம் செய்து தண்டனை பெற்றவர்கள் ஏராளம்!”
நன்றி : ஜூனியர் விகடன் - 24.05.2015