disalbe Right click

Wednesday, May 31, 2017

ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்

ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்
1970க்கு முந்தய நிலை :
1970க்கு முன்னர், அத்திபூத்தாற் போல சில நிறுவனங்கள் சில பணிகளில் மட்டும் ஒப்பந்த தொழிலாளர் முறையை புகுத்தின.
இதை அந்நிறுவன நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் போராடி தடுத்து நிறுத்தின. சில இடங்களில் இந்த ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்யக்கோரி, நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் தொழிற் சங்கங்கள் மூலமாக நீதிமன்றத்தை அணுகின. அந்த வழக்குகளை விசாரித்த, தொழிலாளர் நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள், ஒப்பந்த தொழிலாளர் முறையில் தொழிலாளர்கள் அதிகமான சுரண்டலுக்கு உள்ளாகின்றனர் என்று கூறியது, ஒப்பந்த தொழிலாளர் முறை தொழிலாளர் நலன்களுக்கு விரோதமானது எனக் கூறி ஒப்பந்த தொழிலாளர்முறையை ரத்து செய்தது.index
மத்திய அரசு முதலாளிகளின் அழுத்தத்திற்கு பணிந்தது
இந்நிலையில், முதலாளிகள் பேரழுத்தம் கொடுத்ததன் விளைவாக, 1970ல் பாராளுமன்றம் ஒப்பந்த தொழிலாளர் முறையை முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல் சட்டம் கொண்டுவந்தது. இச்சட்டம், நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்த இடங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை முதலாளிகள் நியமித்து தொழில் செய்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கிறது. மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள், மாநில அரசின் தொழில் நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பந்த தொழிலாளர் முறை கொண்டு வரப்பட்டது.
இப்படித்தான் தொழிலாளர்களுக்கிடையே புதிய முறையில் தொழில் வருணாசிரமம் கொண்டுவரப்பட்டது. நிரந்தர தொழிலாளருக்கான கேன்டீன், ஓய்வறை, மருத்துவமனை, குடியிருப்பு, நிர்வாகத்தின் வாகனத்தில் பயணித்தல் உட்பட எதிலும் ஒப்பந்த தொழிலாளர்களை அனுமதிப்பதில்லை. அதாவது, நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.
முதலாளிகள் மின்கட்டணம், கச்சா பொருளுக்கான செலவு, கலால் வரி போன்ற மற்ற வரிகள் ஆகியவற்றில் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, தொழிலாளர்களுக்கு எவ்வளவு குறைந்த கூலி கொடுக்க முடியுமோ, அப்படி கொடுத்து மிகுந்த லாபம் அடைவதே முதலாளிகள் தேர்ந்தெடுக்கும் வழி.
இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை மிகுதியாகவும், நிறுவனங்களின் நேரடி தொழிலாளர் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. சில நிறுவனங்களில், அனைத்து தொழிலாளர்களுமே ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தில் பெரும் அளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரியும் நிலையை நேரடி தொழிலாளர்கள் அனுமதித்ததன் விளைவாக அவர்களின் பேரம் பேசும் சக்தி மிகவும் குறைந்து விட்டது.
நேரடி தொழிலாளர்களிலும் தினக்கூலி, நாள் கூலி(Casual), தற்காலிக தொழிலாளர் (Temporary) ,பதிலி (Substitute), பயிற்சி தொழிலாளர்(Trainee) என பிரித்து குறைந்த கூலி அளித்து கொள்ளை லாபம் பெறுகின்றனர் முதலாளிகள். இவர்கள் எவரும் தொழிற்சங்கத்தில் இல்லை. தொழிற்சங்கத்தில் சேர்ந்தால், இவர்களின் வேலை காலியாகிவிடும்.
எனவே சமவேலைக்கு சம ஊதியம், 480 நாள் பணிமுடித்தால் நிரந்தரம் என்று சட்டம் கூறினாலும், சம ஊதியமும் நிரந்தரமும், மேற்கூரிய நேரடித் தொழிலாளர்களுக்கும் எட்டாக்கனியாகவே நடைமுறையில் உள்ளது.
சமவேலைக்கு சமஊதியம்:
சமவேலைக்கு சமஊதியம் என்று 1970- ஆம் ஆண்டு ஒப்பந்த தொழிலாளர் சட்டம் கூறுகின்றபோதிலும், நிரந்தர தொழிலாளர் செய்யும் அதே பணியை ஒப்பந்த தொழிலாளர் செய்தாலும், நிரந்தர தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்த நிறுவனமும் வழங்குவதில்லை.
ஒப்பந்த முறையை தடுக்கும் அதிகாரம் அரசுக்கே:
மேற்சொன்ன 1970 ஆம் ஆண்டு சட்டப்படி, ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர் முறையை தடை செய்வது பற்றிய முடிவை சம்பந்தப்பட்ட அரசாங்கம்தான் (மத்திய அரசோ, மாநில அரசோ) எடுக்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு இதற்கான அதிகாரம் இல்லை என்கிறது இந்தச் சட்டம்.
ஒப்பந்த முறைக்கு ஆதரவாக மாறிய உச்சநீதிமன்றம்:
தமிழக அரசின் தொழிலாளர் இலாக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் துப்பரவு மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது என்று தமிழக அரசு போட்ட உத்தரவினை உச்சநீதிமன்றம் 2001இல் ரத்து செய்தது.
ஒப்பந்த தொழிலாளர் முறை, தொழிலாளர்களை மிகவும் சுரண்டும் முறை என்று முன்னர் கூறிய உச்சநீதிமன்றத்தின் போக்கில் இது ஒரு மாறுதல் ஆகும்.
1970 ஆம் ஆண்டு சட்டத்திற்குப்பின், உச்ச நீதிமன்றத்தின் நிலைபாடு மாறிவிட்டது. ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒரு குறிப்பிட்ட பணியில் அரசு ஒழித்து உத்தரவு போட்டாலும் , அந்த உத்தரவை ரத்து செய்து, ஒப்பந்த தொழிலாளர் முறையை ஊக்குவிக்கும் நிலைக்கு வந்துள்ளது.
தமிழக அரசு ஒப்பந்த முறையை ஊக்குவிக்கிறது:
இன்றைய தேதியில், சிமெண்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில், சிமெண்டை பைகளில் நிரப்பும் பணியிலும், அப்பைகளை அச்சிடும் பணியிலும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு நியமிக்கத் தடை விதித்து அளித்த உத்தரவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சில பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்முறையை ஒழித்து போட்ட உத்தரவும் தவிர வேறெந்த நிறுவனங்களிலும் ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு தமிழக அரசு தடைவிதிக்கவில்லை.
அதாவது, சிமெண்ட் தொழிற்சாலையில் மேற்சொன்ன பணிகளை தவிர, தமிழக அரசின் தொழிலாளர் இலாக்காவின் கீழ் வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை நியமித்து கொள்ளை லாபம் பெற சட்டப்படி தடை ஏதும் இல்லை. எனவே இன்று இந்த சட்ட நிலையை பயன்படுத்திஅதாவது 1970 ஆம் ஆண்டின் சட்டத்தை பயன்படுத்தி நிறுவனங்கள் அனைத்து பணிகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கின்றன.
இச்சட்டத்தின் கீழ், தமிழக அரசிற்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நிரந்தரமான பணிகளில் எந்த நிறுவனமும் ஒப்பந்த தொழிலாளர் முறையில் தொழிலாளர்களை பணிக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்று தடை விதித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. அப்படி தமிழக அரசு பிறப்பித்தாலும் முதலாளிகள் அந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றால், அந்த உத்தரவை இந்த நீதிமன்றங்கள் ரத்து செய்ய மறுத்து உறுதி செய்யுமா என்பது ஐயமே.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒப்பந்த முறையை உறுதி செய்வதில் முடிந்தது:
1976 ஆம் ஆண்டில் துப்பரவுப் பணி, சுத்தம் செய்யும்பணி, காவலர் பணி ஆகிய பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்களை
மத்திய அரசின் தொழிலாளர் இலாக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் பணி அமர்த்துதல் கூடாது என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இதனால் பலதொழில் நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் இந்த பணிகளில் நியமனம் செய்யப்படுவது தடுக்கப்பட்டது.
இந்த உத்தரவையும் மீறி, ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் நிறுவனங்களை எதிர்த்து போராடுவதன்மூலமும், நீதிமன்றம் செல்வதன் மூலமும், ஒப்பந்த தொழிலாளர் முறையை இப்பணிகளில் புகுத்துவதை தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தடுத்து நிறுத்தின.
ஆனால், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (Steel Authority of India) நிறுவனம் தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, 2001 ஆம் ஆண்டில் மேற்சொன்ன 1976 ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ரத்து செய்ததின் விளைவாக, ஒப்பந்த தொழிலாளர் முறையை மேற்சொன்ன பணிகளில் மட்டுமன்றி, நேரடி உற்பத்தி பிரிவுகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு மோசமான சூழலை உண்டாக்கிவிட்டது.
மத்திய அரசின் தொழிலாளர் இலாக்காவின் கீழ் உள்ள சுரங்கங்களிலும், இன்னும் சில நிறுவனங்களிலும் சில பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்முறையை ஒழித்து உத்தரவுகள் போட்டிருப்பினும், மேற்சொன்ன தீர்ப்பிற்க்குப்பின் எல்லா பணிகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை
நியமிப்பது என்பதே நடைமுறையாகிவிட்டது.
இன்று அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் வித்தியாசமின்றி அனைத்து பணிகளிலும் ஒப்பந்த தொழிலாளர்களை மிக மிக குறைந்த கூலிக்கு வேலை வாங்குகிறது. இவர்களுக்கு விடுப்புக்கான உரிமை கிடையாது. அகவிலைப்படி என்றால் என்ன என்று இவர்கள் கேட்பர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளத்தில் உயர்வு இருக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் ஒப்பந்தம் போடும் நிலையை இவர்கள் அறியமாட்டார்கள்.
இவர்களுக்கு போனஸ் உத்தரவாதம் கிடையாது. ஓய்வு பெற்றால், பணிக்கொடை(Graduvity) கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை. அதேபோல, வருங்கால சேம நல நிதியில்(Provident Fund) இந்த தொழிலாளர்களை பணியமர்த்தும் ஒப்பந்ததாரர்கள் நிர்வாக பங்கையும், இத்தொழிலாளர் பங்கையும் செலுத்துகின்றனரா
என்பது ஒரு கேள்விக்குறியே. ஒப்பந்த தொழிலாளர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியே.
சமீபத்தில், எண்ணூர் காமராஜ் துறைமுகத்தில் கப்பல்கள் மோதி எண்ணெய் படலம் உண்டான விபத்தே இதற்கு சான்று. துறைமுக எல்லைக்குள் கப்பல் நுழைந்தவுடன், அதன் இயக்கம் முதல் அனைத்து பணிகளும் துறைமுக நிர்வாகத்தால் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் செய்யப்படுகிறது. அங்கு இங்கெனாதபடி இறைவன் இருக்கிறானோ இல்லையோ, ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லாத இடமில்லை. இன்று ஒப்பந்த தொழிலாளர் முறை கட்டுப்படுத்த முடியாத அளவில் சுரண்டல் வேட்டைக்கான முறையாக மாறிவிட்டது.
மத்திய, மாநில அரசுகளின் முழு உதவியுடன் இந்த சுரண்டல் வேட்டை தொடர்கிறது. அரசும், நீதிமன்றமும் தொழிலாளர்களை காக்கும் நிறுவனங்களாக இல்லாமல், வேலியே பயிரை மேய்ந்த கதைதான் நடைபெறுகிறது.
எனது அனுபவங்கள் :
மத்திய அரசின், டெலிபோன் நிறுவனம் எனது வீட்டிற்கு சமீபத்தில் தொலைபேசி இணைப்பு அளித்தது. அந்த வேலையை செய்த தொழில் நுட்ப பணியாளர், அரசின் தொலைபேசி நிறுவன ஊழியர் அல்ல. அவர் ஒரு ஒப்பந்த தொழிலாளி. நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு வழக்கு என்முன் விசாரணைக்கு வந்தது; சென்னை மாநகராட்சி, ஒப்பந்த முறையில் பல் மருத்துவரை ஒப்பந்த தொழிலாளியாக நியமித்தது. அதற்கு நான் தடைவிதித்தேன்.
பின்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரியாது.
ஒரு நகராட்சியில், துப்பரவு பணியை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒப்பந்த முறையில் அளித்ததாக நகராட்சியும், நகராட்சியின் நேரடி தொழிலாளர்கள் என்று துப்பரவு தொழிலாளர்களும் என் முன் வாதிட்டனர். அந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் பெயர்ரோஜா மலர், வாடாமல்லி. அந்த துப்பரவு பெண் தொழிலாளர்கள் நகராட்சியின் நேரடி தொழிலாளர்கள் என்று நான் இறுதி தீர்ப்பு அளித்தேன். பின்னர் என்ன நிகழ்ந்தது என்று தெரியாது.
பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள்
பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் செயல்படவே அனுமதிப்பது கிடையாது. எந்த சட்டமும் இவர்களை தீண்டாது. தொழிலாளர் இலாக்கா இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுசரணையாக நடந்துக்கொள்ளும். பன்னாட்டு நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்களே பெருமளவில் பணிபுரிகின்றனர்.
உதாரணத்திற்கு, சென்னைக்கு அருகில் உள்ள ஹூண்டாய் (Hyundai) கார் கம்பெனியில், இரண்டு ஆண்டுக்கு முன் வந்த பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர் பற்றிய விவரத்தை கீழே தருகிறேன்.
பிரிவு தொழிலாளர்களின் மாத எண்ணிக்கை சம்பளம்(ரூ.)
நிரந்தர தொழிலாளர் 1550 28000
ஒரு வருட பயிற்சியாளர் 250 10500
மூன்று வருட பயிற்சியாளர் 350 5400
கம்பெனி அப்ரண்டிஸ் 1250 4500
கவர்மெண்ட் அப்ரண்டிஸ் 2550 2600
ஒப்பந்த தொழிலாளர் 4600 3100
பன்னாட்டு முதலாளிகள் எப்படி குறைந்த கூலி கொடுத்து கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர் என்பதை இது தெளிவாக்கும்.
இந்து பத்திரிக்கையின் இரு கட்டுரைகள் :
இந்து பத்திரிகையில் திரு. சம்பத் என்பவர் எழுதிய கட்டுரையில் பன்னாட்டு நிறுவனமான மாருதி கார் கம்பெனியில் மார்ச் 2012 இல் ஒரு தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது என்றும், இதனை ஒட்டி நிறுவனத்தின் 546 நேரடி தொழிலாளர்களையும், 1800 ஒப்பந்த தொழிலாளர்களையும் இந்த நிறுவனம் வேலை நீக்கம் செய்தது என்றும், இச்சூழலில் ஒரு தொழில் தகராறில் ஒரு மேலாளர் இறக்கவும், 40 அதிகாரிகள் காயமடைந்த வன்முறை நிகழ்ச்சி 2012 ஜூலையில் நடந்தது என்றும், அதில் 147 தொழிலாளர்களை குற்றவாளிகளாக காண்பித்து அரியானா அரசு அத்தொழிலாளர்களை
கைது செய்து சிறையில் அடைத்தது என்றும், அதில் 113 தொழிலாளர்கள் இரண்டு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வந்தார்கள் என்றும், மற்ற 34 தொழிலாளர்களுக்கு இதுவரை பிணை கிடைக்காமல் சிறையில் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இந்த குற்ற வழக்கை நடத்துவதற்காக திரு. துள்சி என்ற பிரபல வழக்குரைஞரை, அரசு சிறப்பு வழக்குரைஞராக அரியானா அரசு ரூபாய் 5.5 கோடி செலவில் நியமித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். திரு. சம்பத் அவர்கள் மற்றொரு கட்டுரையில், ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (Honda motor cycles and scooters) தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் உள்ள 3000 தொழிலாளர்களில், 466 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள் என்றும், மற்றவர்கள் மிக குறைந்த கூலிக்கு பணியில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என்றும் பதிவு செய்து உள்ளார்.
ஒப்பந்த தொழிலாளர்களை புறக்கணிக்கும் தொழிற்சங்க இயக்கம் :
நான் வழக்குரைஞராக இருந்தபொழுது, நிரந்தர தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் இடது சாரி கருத்துடைய தொழிற்சங்கங்களே அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலார்களுக்காக வீதிக்கு வந்து போராடவும் இல்லை, சட்ட ரீதியாகவும் போராடவில்லை என்ற வருத்தமான நிலையை பதிவு செய்ய விரும்புகிறேன். பெஸ்ட் & கிராம்டன் ஒப்பந்த தொழிலாளர்களும், இந்தியன் ஆயில் ஒப்பந்த தொழிலாளர்களும், காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர்களும் நடத்திய சட்ட போராட்டத்தையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இதற்கு நிரந்தர தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் எந்த ஆதரவும் தரவில்லை என்பதே உண்மை. அப்படியெனில், மற்ற தொழிற்சங்கங்களைப் பற்றி கூறுவதற்கு ஏதும் இல்லை.
சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், சிம்சன் தொழிற்சங்க தேர்தலை நடத்தும் பணியை எனக்கு அளித்தது. என்னை சந்திக்க வந்த இரு தரப்பையும், தேர்தல் குழுவிடமும் விசாரித்ததில், நிரந்தர தொழிலாளர்கள் மட்டுமே சங்கத்தில் உறுப்பினர்கள் என்றும், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கு இணையாக ஒப்பந்த தொழிலாளர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு மிகக் குறைந்த கூலிதான் கொடுக்கப்படுகிறது என்பதையும், அவர்களை சங்கத்தில் சேர்ப்பதில்லை என்றும் கூறினர். இதே நிலைதான் மற்ற அனைத்து நிறுவனங்களிலும் இருப்பதாக கூறினார்கள் .எனவே, மேற்சொன்ன தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் குசேலர், அனைத்து தொழிற்சங்கங்களையும் கூட்டி ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய கோரி இந்த கருத்தரங்கை நடத்த போவதாகவும், அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியவுடனே அதனை ஒப்புக் கொண்டேன்.
மத்தியிலும் மாநிலத்திலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்கப்போவதில்லை.
அவர்கள் 1970 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் ஏதேனும் சில பணிகளில் ஒப்பந்த தொழிலாளரை நியமிப்பதற்கு தடை விதித்து உத்தரவு போட்டாலும், நீதிமன்றங்கள் அந்த உத்தரவுகளுக்கு உடனே தடை கொடுத்து விடும் வாய்ப்பு உள்ளது.
எனவே, 1970 ஆம் ஆண்டு சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும், நிரந்தர வேலைகள் எதிலும் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணி நியமனம் செய்யக் கூடாது என்றும் கோரும் ஒரு மாபெரும் இயக்கமே இன்றயை தேவை.
மீத்தேன், கெயில், ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு எதிர்ப்பு போன்றவற்றில் வெற்றியை ஈட்டியதுமாபெரும் மக்கள் இயக்கங்களே. எந்த கட்சியும், ஆட்சியும் இந்த வெற்றிகளுக்கு உரிமை கொண்டாட முடியாது. அப்பாதையே தொழிலாளர்கள் முன்னிருக்கும் ஒரே பாதை.
நிரந்தர தொழிலாளர் ஒப்பந்த தொழிலாளர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து தொழிலாளர்களும் ஒரே அணியில் திரள்வதே ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க ஒரே வழி. இதை இந்த காலகட்டத்தில் செய்யத் தவறினால், நிரந்தரத் தொழிலாளர் ஒப்பந்த தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் .
அரி பரந்தாமன்முன்னாள் நீதிபதிசென்னை உயர் நீதிமன்றம்.
Thanks to : www.visai.in – 24.04.2017

விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!

விரல்களை மடக்கினால் வியாதிகள் பறக்கும்!
நமது பிரபஞ்சம், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன. கட்டை விரல் நெருப்பு, ஆள்காட்டி விரல் காற்று, நடுவிரல் ஆகாயம், மோதிர விரல் நிலம், சுண்டு விரல் நீரையும் குறிக்கின்றன.
சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை:
தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வர்.
Image result for தியான முத்திரை:
இதே நிலையில் இருபது நிமிடம் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, பதற்றம் ஆகியவை அகலும்.
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை:
Image result for தியான முத்திரை:
மூட்டுவலி, ரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்து கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி, தியான நிலையில் அமரவும்.
காது நன்கு கேட்க:
காதில் வலி எனில், நாற்பது நிமிடங்கள் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி, அழுத்திக் கொண்டு உட்காரவும். சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை: மனப்பதற்றம், உடலும் உள்ளமும் சோர்ந்து போவதை தடுக்க, நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்கவும் பிருதிவி முத்திரை பயன்படும்.
Image result for தியான முத்திரை:
மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்தால், தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக்கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன் இம்முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான நாளாக அமையும்.
ரத்தம் சுத்தமாக வருண் முத்திரை:
ரத்தம் சுத்தமாக, தோல் நோய்கள், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.
Image result for லிங் முத்திரை:
வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றல் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாக்கும்.
கொழுப்பு கரைய சூரிய முத்திரை:
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும்.
Image result for தியான முத்திரை:
மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
பிராண முத்திரை:
உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும்.
Image result for தியான முத்திரை:
சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல், மோதிரவிரல் நுனிகள் தொடுமாறு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
காய்ச்சல் குணமாக லிங் முத்திரை:
2 உள்ளங்கைகளையும் விரல்களையும் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக்கை பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும்.
Image result for லிங் முத்திரை:
பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.05.2017

Tuesday, May 30, 2017

புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம் : இது பசுமை தகனம்

புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம் : இது பசுமை தகனம்

இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று.இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.
பசுமை தகனம்
அறிவியல் ரீதியாக அதற்கு 'அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்' என்று பெயர். ஆனால் சுலபமாகப் புரிந்துகொள்வது என்றால் பசுமை தகனம்.
தீயிலிட்டு தகனம் செய்வதைவிட, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மென்மையான முறையில் இந்த தகனம் நடைபெறும் என்று அதற்கான விளக்கக் குறிப்பு கூறுகிறது.
பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத்தன்மையுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும்போது, எலும்புகளைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக்கூடு மட்டுமே எஞ்சும்.
சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினை
அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் புதைக்கப்படும்போது, அது சவப்பெட்டியில் வைத்தே புதைக்கப்படுகிறது. சில சமயம் சவக்குழிகளின் பகுதிகள் சிமெண்ட் கலவையால் பூசப்படுகின்றன. பல சமயங்களில் சவப்பெட்டிகள் உலோகத்தால் செய்யப்படுகின்றன.
மரணம், அடக்கம்
சவப்பெட்டிக்கான செலவு சில சமயம் மலைக்க வைக்கும்
அப்படி செய்யும்போது அவை மக்கிப்போவதில்லை.
சரி தகனம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு உடலை தகனம் செய்யத் தேவைப்படும் வெப்பத்தை வைத்து, மிகவும் கடுங்குளிர் நிலவும் அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை, குளிர்காலத்தில் ஒரு வாரத்துக்கு கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்மாக எவ்வளவுபேர் இரசாயன தகனத்தை விரும்புவார்கள் எனும் கேள்வியும் இதில் உள்ளது.
முற்போக்கு சிந்தனையும், சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த எண்ணத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பொருளாதாரம் இடம் கொடுக்குமா?
ரசாயன தகனத்துக்கான கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கு 7.5 லட்சம் டாலர்கள்-அதாவது சுமார் ஐந்து கோடி இந்திய ரூபாய்- செலவாகிறது என்று அதை அமைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.
கரைத்து கரையேற்றும் முறை
இதற்கு பயன்படுத்தப்படும் உலோகப் பெட்டி எஃகால் செய்யப்பட்டது. 6 அடி உயரம், 4 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட அந்தப் பெட்டி பாதுகாப்பு பெட்டகம் போலவுள்ள அறையில் பொருத்தப்பட வேண்டும்.
மரணம், அடக்கம்
இரசாயனக் கரைப்புக்காக எடுத்த்துச் செல்லப்படும் உடல்
உடல் முழுவதும் கருப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் கொண்டுவரப்படும் சடலம், எஃகுத் தகடில் வைத்து மெல்ல அந்த கரைசல் இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது.
மரணம், அடக்கம்
முதல் நிலையில் உடல் இயந்திரத்தினுள் செலுத்தப்படும்
பின்னர் கணினி உதவியுடன் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தத் தகடு நகராதவாறு பூட்டப்படுகிறது.
அடுத்த கட்டமாக அந்த உடல் எடை போடப்படும். பிறகு அந்த உடல் மூழ்கும் அளவும், அதற்கு எவ்வளவு தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடும் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.
மரணம், அடக்கம்
இரண்டாவது நிலையில் நீருடன் இரசாயனம் கலக்கப்படுகிறது
மிகவும் காரத்தன்மை வாய்ந்த அந்தக்கரைசல் 152 செண்டிகிரேட் அளவுக்கு சூடாக்கப்படும். ஆனால் அந்த இரசாயன திரவம் கொதிநிலைக்கு உள்ளாவதில்லை. அழுத்தம் மூலமாகவே உடல் கரைக்கப்படுகிறது.
விரைவாக உருக்குலையும்
புதைக்கப்படும் உடல் என்னவாகுமோ அதேதான் இந்த முறையிலும் நடைபெறுகிறது. ஆனால் ஒரே வித்தியாசம் புதைத்தால் உடல் உருக்குலைந்து போவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.
மரணம், அடக்கம்
மூன்றாவது நிலையில், இரசாயனக் கலவை சூடாக்கப்படுகிறது
ஆனால் இந்த முறையில் 90 நிமிடங்களிலேயே அது நடந்து முடிந்துவிடுகிறது. பின்னர் பல முறை நீரில் அலசப்படும். அதற்கு மீண்டும் அதே அளவு நேரம் பிடிக்கிறது.
மூன்று அல்லது நான்கு மணி நேரங்களுக்கு பிறகு, மூடிய கதவு திறக்கும். உடலுடன் உள்ளே தள்ளப்பட்ட எஃகுத்தகடு வெளியே இழுக்கப்படும்.
சிதறிய ஈர எலும்புகளும், உடலில் ஏதாவது மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவையும், அந்தத் தகடில் எஞ்சி இருக்கும். ரசாயன திரவத்தில் கரைந்த இதர பகுதிகள் வடித்தெடுக்கப்படும்.
மரணம், அடக்கம்
நான்கவது நிலையில், உடலின் தசைப்பகுதிகள் கரைந்து போயிருக்கும்
வடித்தெடுக்கப்பட்ட திரவம் சோப்பு வாடையுடன் இருக்கும். அதில் உப்பும் சர்க்கரையும் கலந்திருக்கும். கழிவாக வெளியேறும் திரவம் சோதிக்கப்படுகிறது.
வெள்ளை சாம்பல்
மனித மரபணுக்கள் ஏதும் இல்லாத அந்த திரவம் பின்னர், மாசு நீர் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு போன்ற ஒன்றின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வடிகட்டப்படுகிறது. எஞ்சியுள்ளவை நுண்துகள்களாக மாற்றப்படுகின்றன.
மரணம், அடக்கம்
கடைசியாக பையில் அள்ளப்படும் சாம்பல்
மரபுரீதியான தகனத்தின் பின்னர் கிடைக்கும் சாம்பல் போலன்றி, பளிச்சென்று வெண்மை நிறத்தில் மாவு போல் இந்த நுண்துகள்கள் இருக்கும்.
இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஈர எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உலர்ந்த பிறகு அலங்காரமான குடுவையில் அடைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இடப்பிரச்சினை
சரி இதனால் என்ன பலன்? முதலாவதாக இறந்தோரை புதைப்பதற்கான இடுகாடுகள் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றன. அவற்றை பராமரிக்கும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
ஆகவே இடப்பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது.
மரணம், அடக்கம்
பல இடங்களில் சடலங்களை ஒன்றின் மேல் அல்லது கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது
இதனால் பல நாடுகளில் இடுகாடுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு, ஒன்றன் கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது.
புதைப்பதில் இப்படியான பிரச்சினைகள் என்றால், எரிப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எரிபொருள் செலவு, அதனால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம். ஒவ்வொரு தகனத்தின் போதும் 320 கிலோகிராம் கரியமில வாயு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி கரியமில வாயுவைவிட நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் தகனம் செய்யப்படும்போது வெளியேறுகின்றன. இப்படியான காற்றை கோடிக்கணக்கான மக்கள் தினமும் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், பொருளாதாரம் போன்ற 18 அளவுகோல்களின்படி, மற்ற எவ்வகையான இறுதிக்கிரியைவிட இராசயன தகனமே சிறந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செலவு?
இரசாயன தகனத்துக்கான செலவு மற்ற இருவகைகளுக்கு ஆகும் செலவில் ஒரு சிறுதுளி மட்டுமே எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
சடலம் ஒன்றை புதைப்பதற்கு நிகர செலவு -இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்போது 4500ம், அதை எரிப்பதற்கு 3500ம் ஆகின்றன அதை இரசாயன முறையில் கரைப்பதற்கு 300 ரூபாய் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மரபுகளை அறிவியல் எண்ணங்கள் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
Thanks to : BBC News - 28.05.2017


மனைகள் வரன்முறை - நடைமுறைகள் அறிவிப்பு

மனைகள் வரன்முறை  - நடைமுறைகள் அறிவிப்பு
மனைகள் வரன்முறைக்கு நவ., 3 வரை அரசு கெடு
பரிசீலனை நடைமுறைகள் அறிவிப்பு
அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறைக்கு, நவம்பர், 3க்குள் மனைப்பிரிவு உரிமையாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2016 அக்., 20க்குள் விற்கப்பட்ட அங்கீகாரமில்லா வீட்டு மனைகள், உருவாக்கப்பட்ட மனைப்பிரிவு களுக்கான வரன்முறை திட்டத்தை, மே, 4ல், அரசு அறிவித்தது. மனைகளின் தகுதி, கட்டணம், நிபந்தனைகள் உள்ளிட்ட விபரங்களும் அறிவிக்கப் பட்டன.
நடைமுறை என்ன?
இத்திட்டத்துக்கு, உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இதற்கான செயல் திட்டம் உருவாக்கும் முயற்சியில், கலெக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர். உள்ளாட்சிகள் வாரியாக, மனை குறித்த விபரங்களை திரட்டி வருகின்றனர்.
வரன்முறை திட்டத்தில், விண்ணப்பங்களை, ஆன் - லைன் முறையில் பதிவு செய்ய, புதிய இணையதளம்உருவாக்கப்பட்டு உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் பெயர், முகவரி, இ - மெயில் மற்றும் மெபைல் எண் அளித்து, நுழைவு குறியீட்டு எண், ரகசிய குறியீடு ஆகியவற்றை பெறலாம்.
பரப்பளவு அடிப்படையில் வரன்முறை,
இதை பயன்படுத்தி, மனைகளின் விபரங்களையும், ஆவணங்களின் பிரதிகளையும் பதிவேற்றலாம். இதை, அதிகாரிகள் பரிசீலிப்பதற்கான, விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு
உள்ளன. இதன்படி, விண்ணப்பிப்போரிடம், ஆய்வு கட்டணமாக, 500 ரூபாய் வசூலிக்கப்படும்.
அந்த மனை வரன்முறைக்கு தகுதி பெற்றால், பரப்பளவு அடிப்படையில் வரன்முறை, வளர்ச்சி கட்டணங்கள் முடிவு செய்யப்படும். முதல் நிலை ஆய்வில், அதிகாரிகள் தெரிவிக்கும் திருத்தங்களை, விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டும்.
தகுதியின்றி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தகவல் தெரிவிக்கப்பட்ட, 30 நாட்களுக்குள், மேல் முறையீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.கெடுஇத்திட்டத்தில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் அனைவரும், நவ., 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.
'விண்ணப்பிக்காத மனைகள் மீது, நகரமைப்பு சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்படுவதோடு, விற்பனை பதிவும் தடை செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 30.05.2017
Image may contain: text


தினமலர் நாளிதழ் - 23.06.2017 - மதுரை பதிப்பு - பக்கம் 19


Monday, May 29, 2017

ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் பறிமுதல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய
ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் பறிமுதல்
முதல்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியது தமிழக அரசு
6 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்து களை கையகப்படுத்தும் நடவடிக் கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991-96ம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 4 பேருக்கும் தலா 4 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலி தாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் சொந்த மான 68 சொத்துகளை கைப்பற்று மாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. மாநில அரசின் உத்தர வின்படி இந்த சொத்துகளைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை தொடங்குமாறு 6 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (டிவிஏசி) கடிதம் எழுதியுள்ளது. அதன் நகலை மாநில கண்காணிப்பு ஆணையருக்கும் அனுப்பியிருக்கிறது. இந்த 68 சொத்துகளின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கண்காணிப்பு இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
நிலம், வீடு உள்ளிட்ட இந்த சொத்துகளை அடையாளம் கண்ட பிறகு மாவட்ட வருவாய் அதிகாரிகள் அந்தந்த இடங்களில், ‘இது தமிழக அரசுக்கு சொந்த மானது’ என்று அறிவிப்பு பலகைகளை வைப்பார்கள். சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கைப் பற்றப்பட்ட இந்த சொத்துகள் தொடர்பாக எந்தவித பரிமாற்றத் தையும் அனுமதிக்கக் கூடாது என்று பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பிக்கும்.
அபராதத்துக்கு ஈடு அல்ல
இந்த சொத்துகள், சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் செலுத்த வேண்டிய ரொக்க அபராதத்துக் கான ஈடு அல்ல. இந்த வழக்கில் மொத்தம் 128 சொத்துகள் கையகப் படுத்தப்பட்டாலும், விசாரணை நீதிமன்றம் அவற்றில் 68-ஐ மட்டும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் இந்த சொத்துகள் உள்ளன. இவற்றின் கொள்முதல் விலை, 20 ஆண்டுகளுக்கு முந்தைய வழிகாட்டு மதிப்பு விலைக்கு இணையாக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் இன்றைய சந்தைய மதிப்புக்கு மிகமிகக் குறைவானதாகும். இனி இந்த சொத்துகளுக்கு தமிழக அரசுதான் உரிமையாளர். தமிழக அரசு விரும்பினால் இந்த சொத்துகளைத் தன்னுடைய பயன் பாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் பொது ஏலத்தில் விற்று பணமாக்கிக் கொள்ளலாம்.
1991 ஜூலை 1-ம் தேதியில் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இருந்த சொத்துகள் மற்றும் ரொக்கத்தின் மொத்த மதிப்பு ரூ.2.01 கோடிதான் என்று சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது. ‘1991 ஜூலை 1-க்குப் பிறகு (1.7.1991 முதல் 30.4.1996 வரை) இவர்கள் இருவரின் சொத்துகளின் மதிப்பு மளமளவென்று உயர்ந்து கொண்டே போனது. ஜெயலலிதா (அரசிடம் ஊதியம் பெற்றதால் அரசு ஊழியர்) மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் ரூ.66.65 கோடிக்கு சொத்துகளைக் குவித்தனர். அவர்களுடைய அறிவிக்கப்பட்ட வருவாய்க்கு இது பொருந்தாத சொத்துக் குவிப்பாகும்’ என்பது தான் அரசுத் தரப்பின் வாதம்.
இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், வருவாய்க்கு பொருந்தாத வகையில் குவிக்கப்பட்ட சொத்தின் அளவு ரூ.53.60 கோடி என்று நிர்ணயித்தது. அதன் அடிப்படை யில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயல லிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதம் என்று தீர்ப்பு வழங்கியது.
குன்ஹா தீர்ப்பு செல்லும்
தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் வங்கிக் கணக்குகளில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை மற்றும் இதர ரொக்கக் கையிருப்பு ஆகிய அனைத்தையும் அரசுக்கு வழங்குமாறும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்துக்கு அவற்றை ஈடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. அப்படி செய்த பிறகும் அபராதத் தொகை முழுதாக வசூலாகவில்லை என்றால் கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகளை ரிசர்வ் வங்கி அல்லது பாரத ஸ்டேட் வங்கிக்கு விற்றோ அல்லது பொது ஏலத்தில் விற்றோ பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். மீதமுள்ள தங்க, வைர நகைகளை தமிழக அரசு கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தது.
6 நிறுவனங்கள்
வங்கிகளில் இருக்கும் ரொக் கத்தை பறிமுதல் செய்வதிலும் தங்க, வைர நகைகளை விற்பதி லும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்ககத்துக்கு பங்கு எதுவும் கிடையாது. வழக்கில் தொடர் புள்ள லெக்ஸ் பிராப்பர்ட்டி டெவலப் மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ராமராஜ் அக்ரி ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் (பி) லிமிடெட், ரிவர்வே அக்ரோ பிராடக்ட்ஸ் (பி) லிமிடெட், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் பார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அசையாச் சொத்துகள் அனைத்தையும் மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற ஆணையின் மூன்றாவது பகுதி கூறுகிறது.
இந்த 6 நிறுவனங்களுக்கான வருவாய் முழுவதும் குறிப்பிட்ட அந்தக் காலத்தில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரிலான நிறுவனங்களுக்கு வந்துள்ளன. இந்த நிறுவனங்கள் வியாபாரத்தில் தங்களுடைய பணம் எதையும் முதலீடு செய்யவில்லை என்பது விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் கணக்கில் வராத பெருந் தொகையை ஜெயலலிதா, சசிகலா வங்கிக் கணக்குகளில் மாற்றுவதற்கு பயன்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தும் உண்மையில் வழக்கில் முதல் எதிரியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவருக்காக (ஜெயலலிதா) உள்ளவை என்பதை விசாரணைகள் அடிப்படையில் பதிவு செய்கிறேன். எனவே, இந்த சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று விசாரணை நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா பெயரில் உள்ள இதர சொத்துகள், அவரது சட்டப் பூர்வ வாரிசுக்கு போய்ச் சேரும். இல்லையென்றால் மாநில அரசால் கையகப்படுத்தப்படும். ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு முடிவுக்கு வந்தாலும், சொத்துகளை கைப்பற்றுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணை தொடர்கிறது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை, அபராதத்துக்கு ஏற்ப வசூலிப்பது தொடர்பாக கர்நாடக விசாரணை நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கும். 6 நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ததும் அதை விசாரணை நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தெரிவிக்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 30.05.2017