disalbe Right click

Monday, June 5, 2017

கிரெடிட் கார்டுகளை கவனமாக கையாள...

கிரெடிட் கார்டுகளை கவனமாக கையாள...
மத்திய அரசு ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதைத் தொடர்ந்து, புதிய கிரெடிட் கார்டுகளை வாங்குவது தற்போது மிகவும் எளிதான விஷயமாகும். உங்களுக்கு கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் தகுதி வந்துவிட்டது என வங்கிகளின் கஸ்டமர் கேரில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கும். நம்மில் பலர் ஏற்கெனவே ஒரு சில கார்டுகளை வைத்திருப்போம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பதன் மூலம் நம்முடைய கடன் வாங்கும் தகுதி உயரும். ரிவார்ட் மற்றும் கேஷ்பேக் பாயின்ட்ஸ் உள்ளிட்ட பயன்களை நாம் அனுபவிக்கலாம். ஆனால் அதிக கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது என்பது இருமுனை கத்திபோல. பல கார்டுகளை எப்படி கையாளுவது என்பதை பார்ப்போம்.
கிரெடிட் கார்டு வரம்பு
கூடுதல் கிரெடிட் கார்டை வைத்திருப்பது நல்ல ஐடியா என்பதில் சந்தேகம் இல்லை. அவசர மருத்துவ தேவைக்கு கூடுதல் கார்டு பயன்படும். முக்கியமான கிரெடிட் கார்டை தொலைத்துவிட்டாலோ அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பயன்படுத்த முடியாமல் போகும் போது, கூடுதல் கார்டு உதவியாக இருக்கும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். தேவைப்பட்டால் மட்டுமே கூடுதல் கார்டை பயன்படுத்த வேண்டும்

கைவசம் கூடுதலாக இருக்கும் கிரெடிட் கார்டுகளை, மொபைல் போன் வாங்குவதற்காகவோ, தொலைக்காட்சி உள்ளிட்ட உடனடி அவசியம் அல்லாத பொருட்கள் வாங்குவதற்கோ தேய்க்க வேண்டாம்.
கடன் வரம்பு அதிகமாக இருப்பதால், அதிகம் செலவு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும். இதனால் கடன் என்னும் பொறியில் சிக்க வேண்டி இருக்கும். இரு வழிகளில் கிரெடிட் கார்ட் மூலமான செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். செலவுகளை கட்டுப்படுத்துவதற்கென பிரத்யேக செயலிகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தும்போது, அதிகம் செலவு செய்யும் பட்சத்தில் நமக்கு எச்சரிக்கைகளை அனுப்பும். அடுத்ததாக நெட்பேங்கிங் உள்ளிட்ட இதர வழிகளில் பணத்தை செலுத்தலாம்.
போனஸ் புள்ளிகள்
பல வகையான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் பல சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. போனஸ் புள்ளிகள், கேஷ் பேக், தவிர சினிமா டிக்கெட் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, சிட்டி பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும்போது கேஷ்பேக் சலுகைகள் இருப்பதால் உங்களால் அதிகம் சேமிக்க முடியும்.

அடிக்கடி பயணம் செய்பவர்கள் என்றால் ஐசிஐசிஐ அல்லது சிட்டி வங்கியின் பியூல் கார்டுகள் பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்களுக்கென பிரத்யேக கார்டுகளும் இருக்கின்றன.
எவ்வளவு சலுகைகள் இருந்தாலும் மூன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. அனைத்து கார்டுகளையும் கையாளுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதர சலுகைகளுக்காக நீங்கள் ஐந்து கார்டுகளை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொண்டால், அனைத்து வங்கிகளும் உங்களுடைய பில் செலுத்தும் தேதியை நினைவுபடுத்தும் என சொல்ல முடியாது. ஒரு வேளை நினைவுபடுத்தினால் கூட, பணம் செலுத்திவிட்டோம் என நீங்கள் நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை நீங்கள் சரியான நேரத்தில் பணத்தை செலுத்தவில்லை என்றால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய இதர சலுகைகளை விட அபராதம் அதிகமாக இருக்கும். சிறிய பலன்களுக்காக, அதிக அபராதம் செலுத்த வேண்டாம்.
இறுதியாக சில வார்த்தைகள்
உங்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை கையாள முடியும் என்றால் வைத்துக்கொள்ளலாம். இருந்தாலும் மூன்றுக்கு மேல் கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொள்ள வேண்டாம். ஒரே கார்டில் மொத்த தொகையையும் செலவழிப்பதை விட, இதர கார்டுகளை பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு கார்டிலும் அதிகபட்சம் 50 சதவீத வரம்புக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

உங்களுக்கு நிதி சார்ந்த கட்டுப்பாடுகள் இருந்தால், கூடுதலாக ஒரு கிரெடிட் கார்டினை வாங்கலாம். அதிகம் செலவழிப்பவராகவோ, சரியான சமயத்தில் தொகையை திருப்பி செலுத்தாதவராகவோ இருக்கும் பட்சத்தில் கூடுதல் கார்டு வாங்குவதைத் தவிர்க்கவும்.
- gurumurthy. k@thehindu. co. in
குருமூர்த்தி. கே
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் 05.06.2017

ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு
அவமதிப்பு வழக்கில் கலெக்டர் ஆஜர்  
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுக்கோட்டை கலெக்டர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை புத்தாம்பூர் குமரேசன் தாக்கல் செய்த மனு: 
புதுக்கோட்டையில் நீர்நிலைகள், ரோடு, பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர், அதிகாரிகளிடம் மனு அளித்தேன். நடவடிக்கை இல்லை. உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தேன். நீதிபதிகள், 'ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பிப்.,2 ல் உத்தரவிட்டனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் செந்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய (என்.எச்.ஏ.ஐ.,) திட்ட இயக்குனர் முத்துடையார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குமரேசன் மனு செய்திருந்தார். நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு விசாரித்தது.
கலெக்டர் கணேஷ் உட்பட நான்கு அதிகாரிகள் ஆஜராயினர்.

நீதிபதிகள் உத்தரவு: 

இந்நீதிமன்றம் பிப்.,2 ல் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை ஜூன் 27 க்குள் அகற்ற வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கலெக்டர் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஜூன் 28 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.06.2017


இந்திய சாட்சியச் சட்டம் மூலம் ஆவண நகல்களைப் பெற

இந்திய சாட்சியச் சட்டம் மூலம் ஆவண நகல்களைப் பெற.....
(இணைப்பு : மாதிரி கடிதம்)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தான் ஆவண நகல்களைப் பெற முடியும் என்பது இல்லை. அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே இந்திய சாட்சியச் சட்டம் (INDIAN EVIDENCE ACT) நமக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆவண நகல்களை நாம் எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றி கீழே காணலாம்.
இந்திய சாட்சியச் சட்டம் - 1872
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 74ல் பொது ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. 
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 75ல்  தனியார் ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. 
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76 ஒரு பொது ஊழியரின் வசம் உள்ள பொது ஆவணங்களை ஆய்வு செய்யவும், அவற்றை சான்று ஒப்பம் இட்ட ஆவண நகலாக பெறவும் நமக்கு உரிமையை வழங்கியுள்ளது.  அதற்கென்று சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள கட்டணத்தை நாம் அவர்களிடம் செலுத்த வேண்டும். சான்றொப்பம் இட்டு ஆவண நகல்களை அளிக்க முடியாவிட்டால், அந்த ஆவண நகல்களின் கீழே உண்மை நகல் என்று கையொப்பம் இட்டு பொது ஊழியர் அதனை நமக்கு வழங்க வேண்டும்.
ஆவண நகல்களைப் பெற என்ன செய்ய வேண்டும்? 
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு நீங்கள் எழுதுகின்ற விண்ணப்பத்தின் வலதுபுறத்தில் ஐந்து ரூபாய் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டவேண்டும். தலைப்பில் இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76ன் கீழ் ஆவண நகல்கள் வேண்டி விண்ணப்பம் என்று குறிப்பிட வேண்டும்.   அந்தக் கடிதத்தில் உங்களுக்குத் தேவையான ஆவண நகல்களைப் பற்றி குறிப்பிட வேண்டும்.  கடிதத்தை பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டை இணைத்து அனுப்ப வேண்டும். 
கடிதம் அனுப்பி 30 நாட்கள் ஆனபிறகும் எந்தவித பதிலும் அவர்கள் உங்களுக்கு தரவில்லை என்றால், ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அவர்களுக்கு அனுப்பவேண்டும். அந்த நினைவூட்டல் கடிதம் அனுப்பி 15 நாட்கள் ஆனபிறகும் உங்களுக்கு அவர்கள் தரப்பில் இருந்து பதில்  தரவில்லை என்றால், சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.  
அறிவிப்பு அனுப்பி 15 நாட்கள் ஆன நிலையில்   குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு : 2(4)ன் கீழ்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அல்லது குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு : 200ன் கீழ்  நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மூலம் வ்ழக்கு தொடுத்து  ஆவண நகல்களைப் பெறலாம். 
இணைப்பு : முகநூல் நண்பர் திரு Vasu Devan  அவர்களின் மாதிரி கடிதம். 

அனுப்புனர் 
                     செ.பெ.வாசுதேவன்
                     மாநில பொதுச் செயலாளர்
                     குளோபல் லா பவுண்டேஷன் 
                     (பதிவு எண்:1/Book No:4/262/2018),
                     ...........................................................................
                     ...................................
                      கரூர் மாவட்டம் - 621311.
பெறுநர்
                   வருவாய் கோட்டாட்சியர் அவர்கள்
                   .....................................................................
                   .....................................................................
                   .....................................................................
ஐயா,
                   பொருள்: இந்திய அரசியலமைப்பு சாசனம்-1950, கோட்பாடு 19(1)அ   மற்றும்  இந்திய சாட்சியச்  சட்டம்-1872,    பிரிவுகள் 74, 76ன் கீழ்  நகல்கள்   கோரும் மனு.
              கீழ்வரும் ஆவணங்களானது இந்திய அரசிலமைப்பு சாசனம் 1950 கோட்பாடு 19(1)அ மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவுகள் 74, 76ன் கீழ் பொது ஆவணங்கள் ஆகும்.
               இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 74ன் கீழ் அரசுத்துறை அதிகாரத்தின் கீழ் அதன் செயல்முறைகளோடு இணைந்த ஆவணங்கள் அனைத்துமே பொது ஆவணங்கள் எனப்படுகின்றது. அரசு அதிகாரம் பெற்ற குழுக்கள் அல்லது அவற்றின் பதிவேடுகள், அரசு அதிகாரத்தின் கீழ் இயற்றப்பட்ட ஆவணங்கள், பதிவேடுகள், ஆணைகள், அரசிதழ்கள் உள்ளிட்ட பொது ஆவணங்களை பொதுமக்கள் பார்வையிடலாம். அந்த ஆவணத்தின் நகல் ஒன்று தேவைப்பட்டால், உரிய கட்டணம்  செலுத்தப்படுவதன் பேரில், அதனை இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி வழங்க வேண்டும்.
                   மேற்கண்டவாறு வழங்கப்படுகின்ற நகலின் கீழ் அப்போது அந்த ஆவணத்தை பாதுகாத்து வருகின்ற பொது அலுவலர் அவர்கள் உண்மை நகல் (True Copy) என சான்றளிக்க வேண்டும். அவரது பெயர், பதவி, சான்றளிக்கப்பட்ட நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அவரது கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரை வைக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு சான்று அளிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற நகல்கள் “சான்று அளிக்கப்பட்ட நகல்கள்” எனப்படுகின்றன. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எண்:W.P.(C), 210/2012 உத்தரவில், இந்திய சாட்சியச் சட்டத்தைப்பற்றி மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
                    இவ்வாறு பெறப்பட்ட சான்று நகல்களை இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 77ன் கீழ்  நீதிமன்றத்தில் தக்க சான்றுகளாக தாக்கல் செய்யலாம் என்பதையும், இவ்வாறு தங்களால் வழங்கப்படுகின்ற தகவல்கள் மற்றும் சான்று நகல்கள் தவறானதாக இருந்தால், இந்திய தண்டணைச் சட்டம் 1860, பிரிவு 166ன் கீழ் கடமை தவறியது மற்றும் ஷை சட்டம் பிரிவு 167ன் கீழ் தவறான ஆவணத்தை உருவாக்கியது என்ற  குற்றங்களை தாங்கள் செய்தவர் ஆவீர்கள்!  என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டு உள்ளேன்.
                   வருவாய்த்துறையில் பணியாற்றி வருகின்ற பணியாளர்கள் தங்களது அன்றாடப் பணிகள் குறித்த முழு விபரங்கள் அடங்கிய நாட்குறிப்பை பராமரித்து வரவேண்டுமென வருவாய் நிலை ஆணைகளின் வழியாக உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, வருவாய் வட்டாட்சியர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த வேலைகளை காட்டும் நாட்குறிப்பொன்றை பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பவேண்டும் என்று வருவாய்த்துறை அரசாணை (நிலை)  எண்:581, நாள்:03.04.1987ல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதையும். தங்களது கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டு உள்ளேன்.
  1. மேற்கண்ட விதிமுறைகளின்படி பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு கடந்த 01.01.2017 முதல் 31.03.2017 வரை தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட நாட்குறிப்புகளின் நகல்களை (Certified Copies)  இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் வழங்கவும். 
  2. மேற்கண்ட விதிமுறைகளின்படி பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் ஆய்வு குறிப்புரையுடன் கூடிய கடந்த 01.01.2017 முதல் 31.03.2017 வரையிலான தங்களின் நாட்குறிப்புகளின் நகல்களை (Certified Copies)  இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் வழங்கவும். 
                  மேற்படி சான்று நகல்கள் நீதிமன்றத்தில் சான்றாவணமாக சமர்ப்பிக்க வேண்டியதிருப்பதால், ஒருங்கிணைந்த விதி 1971ன்படி மிகவும் அவசரமாக 7 தினங்களுக்குள் வழங்கிட கோருகிறேன். இத்துடன் ரூ.5/-க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டியுள்ளேன். மேற்கண்ட நகல்களைப் பெற ஏதேனும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருந்து, அதனை எனக்கு உரிய வழியில் தெரிவித்தால் அதையும் செலுத்த தயாராக இருக்கிறேன் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாள்    :  XX.XX.2019    .                                                                                                                               இப்படிக்கு
இடம் :  
                   
      

******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Sunday, June 4, 2017

ரயில் பயணிக்கு ரூ.75,000/- இழப்பீடு!

ரயில் பயணிக்கு ரூ.75,000/- இழப்பீடு!
முன்பதிவு செய்த இருக்கையில் வேறு ஒருவர் பயணம்: பயணிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு; ரயில்வே துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
முன்பதிவு செய்த இருக்கையை வேறு ஒருவர் ஆக்கிரமித்து பயணம் செய்ததால் பாதிக் கப்பட்ட பயணிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு டெல்லி மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த விஜய் குமார் மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் ஒரு புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லிக்கு தக்சின் விரைவு ரயிலில் பயணம் செய்வதற்காக கீழ் படுக்கை இருக்கையை முன்பதிவு செய்தேன். ஆனால் மத்திய பிரதேச மாநிலம் பினா ரயில் நிலையத்தில் ஏறிய ஒருவர் எனது இருக்கையில் வந்து அமர்ந்திருந்தார்.
மேலும் முன்பதிவு செய்யாத சில பயணிகள் அந்தப் பெட்டிக்குள் ஏறி இன்னல் கொடுத்தனர். இதனால் நான் உட்பட முன்பதிவு செய்த பயணிகள் அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து புகார் செய்வதற்கு பயணச் சீட்டு பரிசோதகரை தேடினேன். ஆனால் அவரைக் காணவில்லை. எனக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இதை விசாரித்த மாவட்ட நுகர்வோர் மன்றம், சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் யாரும் ஆஜராகாததால், சேவைக் குறைபாடு காரணமாக பயணிக்கு ரூ.75 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. இந்தத் தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடக் கோரி விஜய் குமார் டெல்லி மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.
அதிகாரி சம்பளத்தில்..
இதை விசாரித்த ஆணையத் தின் தலைவர் நீதிபதி வீனா பீர்பால், மாவட்ட நுகர்வோர் மன்ற உத்தரவுப்படி ரூ.75 ஆயிரத்தை பயணிக்கு வழங்க உத்தரவிட்டார். இந்தத் தொகை யில் 3-ல் ஒரு பங்கை கடமையை செய்யத் தவறிய அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் உத்தரவிட்டார். அதேநேரம், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க ஆணையம் மறுத்து விட்டது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 05.06.2017

Saturday, June 3, 2017

CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள்

CBSE பள்ளி நடத்துவதற்குரிய அரசு விதிமுறைகள்
Central Board of Secondary Education எனப்படுகின்ற மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி   பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
'நீட்' தேர்வுமருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு;
மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படுகின்றன.
இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி வருகின்றன.
இக்கல்வி திட்டத்தை செயல்படுத்த, பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. சில பள்ளிகளே, அவற்றை முறையாக கடைபிடித்து அனுமதி பெற்றுள்ளன. பெரும்பாலான பள்ளிகள் அனுமதி பெறுவதற்காக, விண்ணப்பங்களை மட்டும் அனுப்பி உள்ளன.இன்னும் சில பள்ளி கள் விண்ணப்பிக்காமலேயே, சி.பி.எஸ்.இ., என விளம்பரம் செய்து, பெற்றோரிடம் கட்டண வசூலில் மும்முரம் காட்டுகின்றன. பெற்றோரும், சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான அனுமதி அல்லது அங்கீகாரம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.
விதிமுறைகள்
·  பள்ளி பரப்பளவு, 2 ஏக்கர் இருக்க வேண்டும்.
·  வகுப்பறை, 500 ச.அடி; ஆய்வகம் 600 ச. அடியில் இருக்க வேண்டும்.
· நுாலகம், படிக்கும் அறையுடன், 14 மீ.,க்கு 8மீ., என்ற அளவில் இருக்க வேண்டும்.
· கணிப்பொறி, கணித ஆய்வகங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
· பள்ளிக்கான தற்காலிக அனுமதி பெறுவோர், அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று, அத்துறை மூலம், மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
· தமிழக அரசின் அங்கீகாரத்தையும், மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
·  ஒரு வளாகத்தில், மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி மட்டுமே இயங்க முடியும்.
· அனுமதி எண்ணை, பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது. அதன்படி பள்ளிகள் செயல்படுகின்றனவா என பெற்றோர் அறிவது அவசியம்.
· பள்ளி முதல்வராக இருக்கும் ஆசிரியர்கள் அதற்கான தகுதித் தேர்வை (Principal Eligibility Test-PET) எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
· புத்தகங்கள், நோட்டுகள், சீருடை உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மாறக் கூடாது.
இணையத்திலிருந்து (04.06.2017)
*********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி


20 லட்சம் ரூபாய் வழிப்பறி... கடலூரை அதிரவைத்த 3 போலீஸ்காரர்கள்

20 லட்சம் ரூபாய் வழிப்பறி... கடலூரை அதிரவைத்த 3 போலீஸ்காரர்கள்
கடலூரில் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த தலைமைக் காவலர்கள் மூன்றுபேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் நேற்றிரவு ஆம்னி பேருந்தில் சென்னையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு 50 லட்ச ரூபாய் பணத்தைக் கைப்பையில் எடுத்துச் சென்றுள்ளார். கடலூர் ஆல்பேட்டை மதுவிலக்குச் சோதனைச் சாவடியில் காவலர்கள் அந்தப் பேருந்தைச் சோதனை செய்தனர். அப்போது ஜலாலுதீன் கைப்பையில் பணம் இருப்பதைக் கண்ட காவலர்கள் அவரைப் பேருந்தைவிட்டு கீழே இறக்கி விசாரணை செய்தனர்.
இது ஹவாலா பணம் தானே என்று ஜலாலூதீனை மிரட்டி 20 லட்ச ரூபாயைப் பறித்துக்கொண்டு, செல்போனையும் பறித்துக்கொண்டு அவரை விரட்டித்துள்ளனர். இதுகுறித்து ஜலாலுதீன், மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை செய்து வழிப்பறி செய்த மூன்று காவலர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜலாலுதீன் வழக்கறிஞர் சுந்தர் கூறுகையில், 'ஜலாலுதீன் நாகப்பட்டினத்தில் வீடு வாங்குவதற்கு சென்னையிலிருந்து உறவினர்களிடம் 50 லட்ச ரூபாய் பணம் வாங்கி வந்துள்ளார். அதைத் தனியாக காரில் எடுத்துக்கொண்டு போனால் கொள்ளையடித்து விடுவார்கள் என்று பயத்தில் ஆம்னி பேருந்தில் வந்துள்ளார். சோதனை என்ற பெயரில் போலீஸார் அவரை பேருந்திலிருந்து இறக்கி மிரட்டி 20 லட்ச ரூபாயையும் செல்போனையும் வழிப்பறி செய்து அதை முட்புதரில் பதுக்கி வைத்திருந்தார்கள். இதுதொடர்பாக எஸ்.பி., அவர்களிடம் விசாரணை செய்தபோது அதுபோல் எதுவுமே இங்கு நடக்கவில்லை என்று சொல்லியுள்ளார்கள்.
அவர்களை நம்பாமல் எஸ்.பி ஸ்டேஷனிலிருந்த சப்-இன்ஸ்பெக்டரை விசாரிக்கச் சொல்லியுள்ளார். அவர் அந்த இடத்தைச் சோதனை செய்தபோது முட்புதரிலிருந்து ரூபாய் 20 லட்சத்தைக் கண்டெடுத்துள்ளார். இதனையடுத்து சோதனைச் சாவடியில் பணியிலிருந்த தலைமைக் காவலர் ரவிக்குமார், காவலர்கள் செல்வராஜ், ஓட்டுநர் அந்தோனிசாமிநாதன் மூவரையும் புதுநகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்தனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி நரசிம்மன் கூறுகையில், 'தொடர்ந்து அந்த காவலர்களிடம் விசாரணை செய்துவருகிறோம். இந்தப் பணத்துக்கான தக்க ஆதரம் கொடுத்தால் பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் கருவூலத்தில் செலுத்தி அரசிடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.
க.பூபாலன் & எஸ்.தேவராஜன்
நன்றி : விகடன் செய்திகள் -03.06.2017



ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அபராதம்

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அபராதம்!
புதுடில்லி:'எந்த ஒரு பரிவர்த்தனையிலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வாங்கினால், அதே அளவு தொகையை, அபராதமாக செலுத்த நேரிடும்' என, வருமான வரித் துறை எச்சரித்து உள்ளது.
ஊக்குவிப்பு
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்கவும், மின்னணு பரிவர்த்தனையை அதிகரிக்கவும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், அந்த பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை அபராதமாக செலுத்தும்வகையில், நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இது, இந்த ஆண்டு, ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு பத்திரிகைகளில், வருமான வரித் துறை நேற்று வெளியிட்டு உள்ள விளம்பரங்களில் கூறியுள்ளதாவது:
கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், ரொக்கப் பயன் பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்யக் கூடாது.
ஒரு நாளில் அல்லது ஒரு நபர் அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை அபராதமாக செலுத்த நேரிடும்.
இது போன்ற பரிவர்த்தனைகள் நடப்பது தெரியவந்தால், blackmoneyinfo@incometax.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தருவோர் குறித்த விபரங்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும். இவ்வாறு அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2017

Friday, June 2, 2017

ஜிஎஸ்டி! வணிகர்களுக்குத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

ஜிஎஸ்டி! வணிகர்களுக்குத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விரைவில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியைச் சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு (GSTN)நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஜிஎஸ்டி தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் தாங்களாகவே இந்த இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். 4.1.2017 முதல் இப்பதிவை மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டது. இந்த இணையதளத்தில் பதிவு செய்ய தற்காலிக ஐடி மற்றும் பாஸ்வேர்டு வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித்துறை இணையதளம் https://ctd.tn.gov.in மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. வணிகர்கள் இந்த தற்காலிக ஐடி மற்றும் பாஸ்வேர்டுடன் இணையதளத்தை உபயோகப்படுத்தி இந்தப் பதிவை மேற்கொண்டு வருகிறார்கள். GST பதிவு செய்யும் இணையதளம் தற்காலிகமாக 1.5.2017 முதல் 31.5.2017 வரை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 1.6.2017 முதல் திறக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு அனைத்து பதிவு பெற்ற வணிகர்களும் GST இணையதளத்தில் இணையும் வசதி, நாடு முழுவதும் 15.6.2017 அன்று முடிவடையவுள்ளது.
தமிழ்நாடு வணிகவரித்துறையில் பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் GST இணைய தளத்தில் தங்களது Digital Signature Certificate (DSC) (நிறுவனங்கள் என்றால்) அல்லது ஆதார் எண் உதவியுடன் மின் கையொப்பமிட்டு (e-Signature) (உரிமையாளர் / பங்குதாரர் என்றால்) தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே GST இணைய தளத்தில் விவரங்கள் பதிவு செய்த பெரும்பாலான வணிகர்கள் மேற்கூறப்பட்ட Digital Signature Certificate (DSC) / மின்கையொப்பத்துடன் பதிவு செய்யவில்லை. எனவே, அனைத்து வணிகர்களும் உடனடியாக GST இணையதளத்தில் தங்களின் விவரங்களை Digital Signature Certificate (DSC)/ மின்கையொப்பத்துடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
சகாயராஜ் மு
நன்றி : விகடன் செய்திகள் - 02.06.2017




Thursday, June 1, 2017

SBI சேவைக் கட்டணங்கள் - 10 அம்சங்கள்

SBI சேவைக் கட்டணங்கள் - 10 அம்சங்கள்
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :
1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.
3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல்  ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.
4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும். 
5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.
6. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.
7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும். ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.
8. செக் புக் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட  புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.
9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.
10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2017