ஜனாதிபதி தேர்தல் - ஒரு கண்ணோட்டம்
இந்தியாவின் 15வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17ல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ல் நடைபெறும். ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகள். முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே.
இந்திய அரசியலமைப்பு விதி 54, ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடுகிறது. இது, மறைமுக தேர்தலாக அமைந்துள்ளது. மக்கள் நேரடியாக வாக்களிக்காமல்
அவர்களது பிரதிநிதிகளான எம்.பி., , எம்.எல்.ஏ,.க்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்களை உள்ளடக்கிய 'எலக்ட்டோரல் காலேஜ்' மூலம் ஒற்றை மாற்று ஓட்டு முறையில் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார்.
ஜனாதிபதி தேர்தலையும் தேர்தல் ஆணையமே நடத்துகிறது. இந்தியாவில்
மொத்தம் (லோக்சபா 543 + ராஜ்யசபா 233) 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். எம்.எல்.ஏ.,க் களில் 29 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே இத்தேர்தலுக்கு
கணக்கில் கொள்ளப் படுகிறது. லோக்சபாவில் இரண்டு, ராஜ்யசபாவில் 12 ஆகிய நியமன எம்.பி.,க்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.
வாக்குப்பதிவு மையம்
ஜனாதிபதி தேர்தல்வாக்குப்பதிவு டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகம் மற்றும் மாநில சட்டசபை வளாகங்களில் நடைபெறும்.
தகுதிகள்
* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்ப வராக இருக்கக் கூடாது.
* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முந்தைய பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில்
போட்டியிடலாம்.
* டெபாசிட் கட்டணம் 15ஆயிரம் ரூபாய்.
யாருக்கு வாய்ப்பு
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 1804 எம்.எல்.ஏ.,க்கள் மூலம் 2,39,923 வாக்குகளும், 336 லோக்சபா எம்.பி.,க்கள், 70 ராஜ்யசபா எம்.பி.,க்கள் மூலம் 2,87,448 வாக்குகளும் மொத்தம் 5,27,371 வாக்குகள் கைவசம் உள்ளன.
இது ஐ.மு. கூட்டணியை விட 1.74 லட்சம் வாக்குகள் அதிகம். இவர்களுடன் பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் சேர்ந்தாலும் தே.ஜ., கூட்ட ணியை விட 93 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியே இருக்கும். வெற்றிக்கு 5,49,474 வாக்குகள் தேவை என்பதால், கூடுதலாக சுமார் 22000 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பா.ஜ.,வுக்கு தேவை.
இது நடுநிலை வகிக்கும் சுயேச்சைகள், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் (36,500), தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் டி.ஆர்.எஸ்., ( 23,200 ), அ.தி.மு.க., (59,000) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் எளிதில் பா.ஜ., வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தற்போதைய காலியிடம்
லோக்சபா 2
ராஜ்யசபா 2
சட்டசபைகள் 4
நன்றி : தினமலர் நாளிதழ் - 07.06.2017