disalbe Right click

Friday, June 23, 2017

05: முதல் முறை என்ன தேவை?

05: முதல் முறை என்ன தேவை?

ஒரு தொழில் செய்வதற்கு முன் சின்னதாய் ஒரு ஆராய்ச்சி அவசியம்.
கண்ணில் படும் வாய்ப்புகளெல்லாம் கவர்ச்சியாகத் தெரியும். குறிப்பாக ‘ஸ்டார்ட் அப்’ பற்றி வரும் செய்திகள் ரொம்பவும் தெம்பு கொடுக்கும். குறுகிய காலத்தில் இத்தனை கோடி வருமானம், இத்தனை கோடி முதலீடு, இவ்வளவு பெரிய வளர்ச்சி என்று படிக்கையில் நாமும் அப்படி ஒன்று தொடங்கினால் என்ன என்று தோன்றும்.
ஆனால் முழு பக்க விளம்பரம் தரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என்றால் நம்புவீர்களா? முதலீடு செய்யப் பெரும் தந்திரம் தெரிந்த பலர் வியாபாரம் மூலம் பணம் பண்ண முடிவதில்லை. அதைவிடவும் முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து கம்பெனியின் மதிப்பை ஏற்றி, நல்ல நிலையில் உள்ளபோது தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வேறு தொழிலில் செட்டில் ஆவார்கள். Golden Tap எனும் புத்தகத்தைப் படிக்கையில் இந்த வியாபாரச் சூழல் புரியும்.
சந்தை ஆராய்ச்சி அவசியம்
அதனால் நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலின் சந்தை பற்றியும், அதில் ஏற்கெனவே உள்ள கம்பெனிகளின் நிலை, சந்தையின் வளர்ச்சி விகிதம், முக்கிய சவால்கள் என அனைத்தையும் ஆராயுங்கள். கட்டிடம் கட்டி விற்பது என்று முடிவெடுத்தால், ரியல் எஸ்டேட் பற்றிய ஆய்வுகள், அறிக்கைகள், அரசாங்கத் திட்டங்கள், முக்கியப் போக்குகள் எல்லாவற்றையும் படியுங்கள். எல்லாப் பெரிய நிறுவனங்களும் இப்படி ஒரு சந்தை ஆராய்ச்சி செய்யாமல் எந்தப் புதிய தொழிலிலும் இறங்குவதில்லை.
என்னைக் கேட்டால் பெரிய நிறுவனங்கள் செய்வதைவிட முதல் முறை தொழில் செய்ய நினைப்பவர்கள், இப்படி ஆராய்ச்சி செய்வது அத்தியாவசியம். தொழில் ஆலோசகர்களை நாடி அவர்களின் உதவியுடன் இதைப் புரஃபெஷனலாகச் செய்வது நல்லது.
எனக்குத் தெரிந்த ஒரு ஆடிட்டர் தன் மகனுக்குக் கார் பொட்டீக் (காரின் உள்புற வேலைப்பாடுகளுக்காக) ஒன்று வைத்துக் கொடுத்தார். வெறும் பிஸினஸ் மாடல் மட்டும் போட்டுப் பார்த்து, கையில் உள்ள பணத்தால் நல்ல இடத்தில்தான் தொழில் ஆரம்பித்தார். ஆனால் இரு ஆண்டுகள் ஆகியும் போதிய வியாபாரம் ஆகவில்லை. தொழிலை நடத்தவே மாதா மாதம் பணம் செலவானது. முதலில் சந்தை ஆராய்ச்சி செய்ய யோசித்தவர் தற்போது ‘பிஸினஸ் டயக்னாஸ்டிக்ஸ்’காக என்னிடம் வந்தார். கட்டிடம் கட்டுவதற்கு முன் பிளான் போடுவதற்கும் கட்டி முடித்த பின் மாற்றியமைக்கப் பிளான் போடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்?
இதற்கு இன்னொரு சிறந்த வழி தொழிலுக்கு வங்கி அல்லது தனியாரிடம் கடன் கேட்டுச் செல்வது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்கள் வேண்டுமென்றால் நிச்சயம் ஒரு ஸ்டடி செய்வது நல்லது.
குறை சொல்பவர்கள் வேண்டும்
பாஸிடிவாக யோசிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் தொழிலில் நெகடிவாக உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்வது. குறை கண்டு பிடிப்பதுகூட இங்குப் பெரும் திறன். அதனால் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கியவர்களைத் தேடிப் பிடித்து உங்கள் ஐடியாவைச் சொல்லுங்கள். நீங்கள் பார்க்காத பல அபாயங்களை அவர்கள் பார்க்கலாம். அதற்காகத் தொழிலைக் கைவிட வேண்டாம். உங்கள் திட்டத்தை இன்னமும் வலுப்படுத்திக் கொள்ளலாம்.
பலரின் கேள்விகளாலும் புறக்கணிப்புகளாலும் உங்கள் தொழில் எண்ணம் மெருகேறும். இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் தொடர்ந்து அளித்துவரும் நான் பிஸினஸ் என்று ஆலோசனைக்கு வருகையில் மட்டும் முதலில் அவர்கள் திட்டத்திலுள்ள குறைகளுடன்தான் செஷனை ஆரம்பிப்பேன். பிழை நீக்க மட்டுமல்ல, அவர்கள் இந்தத் தொழிலில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள் என்று அறியவும் இதைச் செய்வேன்.
உங்களுடைய முடிவுதான்!
பல திரைப்பட இயக்குநர்களுக்கு முதல் படம் தரும் வெற்றி இரண்டாம் தராது. காரணம் என்ன? ஒரு கதையை வருடக்கணக்கில் யோசித்து, நூற்றுக்கணக்கான கம்பெனிகள் ஏறி இறங்கிக் கதை சொல்லி, அவர்களில் பலர் கதையை நையப்புடைத்து, ஆயிரம் கேள்விகள் கேட்டு, பலரின் யோசனைகள் கேட்டு, பல பல மாறுதல்கள் செய்து, கடைசியாக ஒரு புரொடியூசர் சிக்குகையில் ஒரு காவியம் தயாராக இருக்கும்! அதனால்தான் சினிமாவில் கதை எழுதுவதைவிடக் கதையை விவாதிப்பார்கள். தயாரிப்பாளர் முதல் கடைசி அசிஸ்டெண்ட்வரை கருத்து சொல்லலாம். முதல் பட வெற்றிக்குப் பிறகு உடனடியாக அட்வான்ஸ் வாங்கித் தனியாகக் கதை யோசித்து அவசரமாக எடுக்கையில் படம் படுக்க வாய்ப்புகள் அதிகம்.
எத்தனை பேர் கருத்து சொன்னாலும் கடைசியாக எதை எடுப்பது, எதை விடுப்பது என்பது இயக்குனரின் தேர்வு. அது போலதான் தொழில் ஆலோசகர், வங்கி மேலாளர், முதலீட்டாளர், கடன் தரும் நண்பர் என யார் என்ன சொன்னாலும் கடைசியாக இந்தத் தொழிலை எப்படி நடத்துவது என்பது உங்களுடைய முடிவுதான்! பின் ஏன் இதை எல்லோரும் செய்வதில்லை? அவசரம் தான். தனக்கு நிறைய தெரியும் என்ற எண்ணம். பிறரைக் கேட்டால் குழப்பி விடுவார்கள் என்ற பயம். இப்படி நிறைய இருக்கும்.
ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?
பதினைந்து வருடங்களுக்கு முன் ஒரு கார்ப்பரேட் ஃபிலிம் எடுத்த போது படத்தைத் தொகுத்துக் கொண்டிருந்த எடிட்டர் சொன்னார்: “எஃப்.சி.பி. தான் இனி மேல் எல்லாம். ஒரு கம்ப்யூட்டரும் இந்த சாஃப்ட்வேரும் வாங்கிப் போட்டா அந்தக் காசை மூணு பட எடிட்டிங்கில எடுத்துடலாம். தவிர சீரியல் ஒண்ணு கையில் இருந்தா ரொம்ப சேஃப். அஞ்சு லட்சம் ரூபாய் போதும். அதிகப் பட்சம் ஆறு மாசத்துல பெரிசா லாபம் பார்க்கலாம்!”
தொழில் ஆரம்பித்த பின்புதான் எப்படித் தடாலடியாக தொழில்நுட்பத்தின் விலை குறையும், படங்கள் உள்ளே வருவதில் எவ்வளவு சிக்கல், சீரியலில் பேமெண்ட் வாங்குவதில் எவ்வளவு தாமதம் என எல்லாம் தெரிந்தது. சொன்ன நண்பர் ஆறு மாதத்தில் கம்பி நீட்டிவிட்டார். கடைசியாக மொத்தத்தையும் பாதி விலைக்குக் கொடுத்து வெளியே வந்தேன்.
“என்ன சார் நீங்க போய் இப்படிப் பண்ணீட்டீங்க? என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா?” என்று விஷயம் கேள்விப்பட்ட திரைப்படம் சார்ந்தவர்கள், ஒரு டஜன் பேராவது என்னிடம் கேட்டிருப்பார்கள். ஆனால், தொழில் தொடங்க நினைத்த போது யாரிடமும் ஆலோசனை கேட்கும் மனநிலை எனக்கு இல்லை.
பிறரிடம் ஆலோசனையோ உதவியோ கேட்கத் தயங்குபவர்கள் தொழிலில் ஜெயிப்பது சிரமம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 07.03.2017

04: ஏதாவது செய்ய முடியுமா?

04: ஏதாவது செய்ய முடியுமா?

தொழில் தொடங்கும் புள்ளி என்று எதைச் சொல்லலாம்? தொழில் எண்ணம் கொண்டவர்களுக்குச் சந்தையில் நிறைய வாய்ப்புகள் கண்ணில் தென்படும். ‘இதைச் செய்தால் காசு வரும்’ என்று தோன்றக்கூடிய பத்து ஐடியாக்களையாவது நீங்கள் தாண்டி வந்திருப்பீர்கள். தொழில் முனைவோரின் ஆதாரத் தகுதி சந்தை வாய்ப்புகளைக் கண்டு கொள்வதுதான்.
ஆரம்பிக்கலாம், பண்ணலாம், தரலாம்!
பிறர் கண்களுக்குத் தெரியாத தொழில் வாய்ப்புகளை நீங்கள் உணர்வீர்கள். மனம் ஒட்டுமொத்த வியாபாரச் சுழற்சியையும் ஒரு முறை நடத்தி ஒத்திகை பார்க்கும். பிறரிடம் சொல்லி சிலாகித்துக்கொள்வீர்கள்.
“சுத்து வட்டாரத்துல ஓட்டலே கிடையாது. இவ்வளவு கவர்மெண்ட் ஆஃபீஸ்கள் இருக்கு. ஒரு டிஃபன் சென்டர் போடலாம்!”
“நாங்க குடியிருக்குற ஃப்ளாட்ல மட்டும் 250 குடும்பங்கள் இருக்கு. நிறைய வயசானவங்க தனியா இருக்காங்க. அவங்களுக்கு தேவையான எல்லா வெளி வேலைகளையும் பாக்க ஒரு சர்வீஸ் ஏஜென்சீஸ் ஆரம்பிக்கலாம்!”
“ஃபைனல் இயர் படிக்கிற பசங்களுக்கு இண்டெர்ன்ஷிப் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு ஆப் (App) செஞ்சு காலேஜ் பசங்களையும் இண்டஸ்ட்ரி ஹெச். ஆர். எல்லாம் கனெக்ட் பண்ணலாம்!”
“எல்லாருக்கும் இயற்கை உணவு மேலதான் இப்ப கவனம் வந்திருக்கு. ஆனா போய் வாங்கத்தான் சிரமப்படறாங்க. அதனால் ஹோம் டெலிவரி செய்யலாம். ஆர்டரின் பேரில் வாங்கித் தரலாம்!”
இதில் எதுவும் பூமியைப் புரட்டிப் போடும் புதிய சிந்தனை இல்லை. இந்தத் தேவைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதை ஒரு வியாபாரமாக உருவாக்குவதுதான் தொழில் முனைவோரின் திறமை.
விரக்தி உருவாக்கியத் துறை
கண்ணில் படும் தேவையை வைத்துப் பிஸினஸ் மாடல் பிடிக்கலாம். ரெட் பஸ் போல. தீபாவளிக்கு முன் இரவு நாலைந்து மணி நேரங்கள் அலைந்தும் பஸ் கிடைக்காமல் விரக்தியோடு திரும்பியவர் மனதில் உதித்தது இதுதான். பல பிரயாணிகளுக்கு எந்தப் பஸ்ஸில் இடம் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் பண்டிகை நாளில்கூடச் சில பஸ்கள் முழுக்க நிரப்பப்படாமல் புறப்படுகின்றன. காரணம் இந்தத் தகவல் இரண்டு பக்கமும் இல்லை. இதைப் பூர்த்தி செய்ய ஒரு தகவல் தொடர்பு சேவை இருந்தால்? இந்த எண்ணம் ஒரு கம்பெனியை மட்டும் உருவாக்கவில்லை. ஒரு துறையையே உருவாக்கியுள்ளது.
நடந்தபடியே பாட்டுக் கேட்போமா?
எல்லாத் தேவைகளும் கண்ணில் படுமா? வாடிக்கையாளர்களுக்கே தெரியாத தேவைகள் நிறைய உள்ளன. அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள். கொடுத்தால் ஆர்வமாக வாங்கிக் கொள்வார்கள். உதாரணம் வாக் மேன்.
மியூசிக் சிஸ்டம் என்றால் வரவேற்பு அறையில் உட்கார்ந்து அமைதியாகக் கேட்பது என்பதுதான் உலகம் முழுதும் நடைமுறை. சாலையில் நடந்து போகும்போது இசை கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? சோனி நிறுவனர் அகியோ மொரீடோவுக்கு இப்படி ஒரு எண்ணம். ஆனால் இப்படி ஒரு தேவை இருப்பதாக எந்த சந்தை ஆய்வும் சொல்லவில்லை. யாரும் கடை தேடி வந்து கேட்கவும் இல்லை. ஒரு அனுமானம்தான் இருந்தது முதலாளிக்கு. போர்ட் உறுப்பினர்களிடம் சொன்ன போது யாரும் இதைப் பெரிதாக வரவேற்கவில்லை. மனம் தளராத மொரீடா இதைத் தன் ஆர் & டி பணியாக எடுத்துச் செய்ய ஆரம்பித்தார்.
ஒரு நாள் அதைச் சிறிய அளவில் வெளியிட்டார். வாக் மேன் என்று பெயரிட்டார். “என்ன பெயர் இது? நடக்கவும் உதவவில்லை. ஆண்களுக்கானதுமில்லை. ப்ராடெக்டும் புதுசு” என்று எல்லோரும் புருவம் உயர்த்தப் பெயரை மட்டுமாவது மாற்றலாமா என்று யோசித்தார். ஆனால் அதற்குள் இது பரபரப்பாக விற்பனை ஆனது, வாடிக்கையாளர்களிடம் பதிந்துவிட்ட பெயரை மாற்ற வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டார் அகியோ மொரீடா. வாக் மேன் ஒரு தலைமுறையையே தன் கட்டுக்குள் வைத்திருந்தது.
யாருக்கும் தெரியாத தொழில் தேவையை எப்படிக் கண்டு பிடித்தார்? அதனால்தான் அவர் தொழில் மேதை. சோனி நிறுவனம் நுழையாத துறை இல்லை எனும் அளவுக்கு வளர, இந்தக் குணம்தான் காரணமாக இருந்தது.
முதலீட்டுக்கும் முன்னால்
உங்களைச் சுற்றி, உங்களுக்குத் தெரிந்து, உங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பக்கூடிய தொழில் தேவைகளைப் பட்டியல் இடுங்கள். கண்ணில் படும் எல்லாத் தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்ய முடியாது. நூற்றுக்கணக்கான ஐடியாக்களில் சரியானதைத் தேர்வுசெய்வதில்தான் பாதி வெற்றி உள்ளது.
என்னிடம் தொழில் ஆலோசனை கேட்டு வரும் பலர் இந்த முதல் படியையே தாண்டுவதில்லை.
ஏதாவது தொழில் செய்யணும் சார். கொஞ்சம் பணம் இருக்கு. என்ன செஞ்சா நல்லா பெரிய லெவலுக்கு வரலாம்னு சொல்லுங்க!” என்று யாராவது கேட்டால் அவர்கள் பிஸினஸுக்கு இன்னமும் தயாராகவில்லை என்றுதான் பொருள்.
நூறு தொழில் யோசித்து, பத்துத் தொழில் ஆராய்ந்து, ஓரிரு தொழிலுக்கு மாதிரி தயாரித்து, ஆலோசனை கேட்டுவிட்டுப் பணம் முதலீடு செய்வது நல்லது. பணத்தைப் போட்டு ஆரம்பித்த பின் யோசித்தால் அதைக் காப்பாற்ற நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.
மறைந்த திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் ஒரு கருத்தைச் சொன்னார், “ பேப்பரில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதி எழுதிக் கிழித்துப் போடலாம்; ஆனால் ஃபிலிமில் எடுத்து வெட்டி வெட்டி எறியக் கூடாது!”
ஒரு இயக்குநர் என்பதை விடப் படத்தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் மீது அளப்பரிய மரியாதை உண்டு எனக்கு. பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கும் திரைப்படத் துறையிலேயே பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் லாபகரமாகப் படங்கள் எடுத்தவர் அவர். அவர் சொன்னது சினிமாவிற்கு மட்டுமல்ல. எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.02.2017

03.காதலும் தொழிலும் எப்படி ஒன்றாகும்?

03.காதலும் தொழிலும் எப்படி ஒன்றாகும்?
தொழில் செய்ய என்னதான் தகுதி வேண்டும்? ஆசை வேண்டும். ஒரு தொழிலை உருவாக்கி, பின் ஸ்திரப்படுத்தி அதைத் தொடர்ந்து லாபகரமாக நடத்தும் ஆசை வேண்டும். நம்மில் பலருக்குத் தொழிலில் வரும் பணம் மீது ஆசை இருக்கிறது. ஆனால் அதைத் தொழிலாக நடத்தும் முனைப்பு இல்லை.
பிறர் சொல்லிக் காதல் வருமா?
பெட்டி கடை போட்டவரெல்லாம் மாடி வீடு கட்டிட்டார் என்று பொறாமைப்படாமல் மட்டும் போதாது. காலை 6 முதல் இரவு 10 வரை கடையில் உட்கார்ந்து பொருள் வாங்குவது முதல் விற்பது வரை செய்யும் அந்த முனைப்பு இருக்க வேண்டும். தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் பாராமல், தொழிலே உலகம் என வாழும் அளவு முனைப்பு உள்ளதா!
தானாகத் தன்னை இயக்கிக் கொள்ளும் உந்துசக்தி தொழில் முனைவோருக்கு அத்தியாவசியம். தொழில் முனைவோர் என்றாலே சொந்தமாக ஆசைப்பட்டுத் தனியாகத் தொழில் செய்போர் என்று பொருள் கொள்ளலாம். பிறர் சொல்லிக் காதல் வருமா? அது போலத்தான் சொந்தத் தொழிலும்.
பலருக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகள் கண்ணில் படும். அற்புதமாக ஐடியாக்களை அள்ளிக் கொட்டுவார்கள். ஆனால் முதல் அடி எடுத்து வைக்காதவரை இவர்கள் எல்லாம் நாற்காலி ஆலோசகர்கள்தான். காலம் கடந்த பின்பு இவர்கள் சொல்வார்கள், “நிறைய ஐடியாக்கள் இருந்துச்சு. ஆனால் கை தூக்கி விட ஆளில்லை!”. தூக்கி விட ஆள் தேடுபவர்கள் சொந்தமாகத் தொழில் ஆரம்பிப்பது கடினம். ஆரம்பித்தாலும் அதைத் தக்க வைப்பது மிகக் கடினம்.
முனைப்பு வேண்டும்
நம் கல்வி அமைப்பு பணியாளர்களுக்கான மன நிலையை உருவாக்குவதிலும், ஒரு அமைப்பு சார்ந்து இயங்குவதை ஆதரிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. கம்பெனிக்கு ஆள் எடுக்கக் கொண்டு வந்ததுதானே மெக்காலே திட்டம்! இதனால்தான் சுயச் சிந்தனை, கேள்வி கேட்கும் சுதந்திரம், ஆய்வு மனப்பான்மையைத் தேட வேண்டியுள்ளது.
தொழில் நிர்வாகத்துக்குப் படிக்கும் எம்.பி.ஏ. மாணவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானோர் மட்டுமே தனியாகத் தொழில் செய்ய விரும்புவதாகச் சமீபத்திய நிர்வாகக் கல்வி ஆய்வு தெரிவிக்கிறது. இதனால்தான் தீவிரத் தொழில் முனைவு எண்ணம் கொண்டவர்கள் பாரம்பரியக் கல்வி முறையை விரைவில் துறந்துவிடுகின்றனர். படித்து விட்டு ஸ்திரமான வேலையில் உட்கார்ந்து சொன்ன வேலையைச் செய்யும் மனோபாவம் சொந்தத் தொழில் ஆரம்பிக்க உதவாது.
ரிஸ்கை சமாளி!
முதல் தேவை முனைப்பு என்றால் இரண்டாம் தேவை ரிஸ்க் எடுக்கும் மனோபாவம். “எனக்கு ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று உங்களால் சொல்ல முடியுமா? ஏனென்றால், ரிஸ்க் என்பது பணயம் வைப்பது போல. ஒரு ஸ்பெகுலேஷன் தன்மை உண்டு. வந்தால் வரும். வராமலும் போகும். பாதுகாப்பின்மையை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதுதான் risk taking-ன் அடி நாதம். முதலீடு போடுகிறோம். எவ்வளவு திரும்ப வரும் என்று தெரியாது. துணிந்து முதலீடு செய்ய முடியுமா? இதுதான் ரிஸ்க்.
“40 வயசு வரை சம்பாதிச்சிட்டு, ஈ.எம்.ஐ. இல்லாம இருந்து, வீட்டில் இன்னொரு வருமானம் இருந்து, குடும்பத்தை எதுவும் பாதிக்காதுன்னா நானும் தொழில் செய்வேன்” என்று நீங்கள் சொன்னால் உங்களுக்குப் பாதுகாப்பு உணர்வு மிக அதிகம். ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள் என்று பொருள். சொந்தத் தொழில் என்று நினைப்பவர்கள் இந்தப் பாதுகாப்பின்மையை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில்தான் தொழில் பற்றிய முடிவு இருக்கும். தங்கள் பாதுகாப்பு, வசதி, சவுகரியம், கவுரவம் என்று எதையும் விடத் தயாராகாதவர்கள் சொந்தத் தொழில் செய்வது கடினம்.
எல்லாவற்றையும் இழக்கும் அபாயத்தில், அகலக் கால் வைத்து ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால், “அவசியம் இல்லை”தான். கணக்கிட முடியாத ரிஸ்க் அவசியமில்லை. ஆனால் calculated risk இல்லாமல் பிஸினஸ் இல்லை.
ஒரு பாட்டில் ஆவதல்ல!
தொழில் செய்ய மற்றொரு ஆதாரக் குணம் கடின உழைப்பு. ஆரம்பக் காலத்தில் மட்டுமல்ல. வெற்றி பெற்ற பின்னும் இந்த உழைப்பு அவசியம், தொழிலைத் தக்க வைக்க. உழைப்பின் வடிவமும் வீச்சும் மாறலாம். ஆனால் என்றும் உழைப்பு தேவை. நினைத்துப் பார்க்காத வேலையை, நினைத்துப் பார்க்காத சமயத்தில் தீவிரமாகச் செய்ய நேரிடலாம். அந்தத் தயார் நிலை அவசியம்.
முக்கியமாக ஈகோ பார்க்காமல் வேலை செய்வது, சமரசங்களுடன் வாழப் பழகுவது, எதிர்பாராத சூழலைச் சமாளிப்பது, என்றும் ஒரு மாணவனைப் போலக் கற்றுக் கொள்ளும் மன நிலையோடு தொடர்ந்து உழைப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக, ஒரு பாட்டில் கோடீஸ்வரர் ஆக முடியாது.
இத்தனைக்குப் பிறகும் ‘சொந்தத் தொழில்’ என்று உறுதியுடன் நிற்பவர்களுக்கு நான் சொல்லும் முல்லா கதை இதோ: சூஃபியான முல்லா பேச்சைக் கேட்கப் பெரும் கூட்டம் வந்திருந்தது. அவர் வர ஒரு மணி நேரம் தாமதமாகச் சிலர் வெளியேறினர். வந்தவர் குடித்து விட்டு வந்ததால் வேறு சிலரும் புறப்பட்டனர். பேசத் தொடங்கியதும் தகாத சொற்களால் திட்டியதால் பெரும்பாலானோர் மனம் வெறுத்துக் கிளம்பினர். அதற்குப் பிறகும் வெகு சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்த முல்லா, “நீங்கள்தான் என் பேச்சைக் கேட்க வந்தவர்கள்” என்று சொல்லி அற்புதமான உரையை நிகழ்த்தினாராம்.
முல்லா உரை போலதான் சொந்தத் தொழிலும். எல்லாச் சோதனைகளையும் தாண்டி முனைப்புடன் உள்ளவர்களுக்குத் தேடி வந்தது கை கூடும்!
“எல்லாம் எனக்குப் பொருந்துகிறது. எல்லாவற்றுக்கும் நான் தயார். என்ன தொழில் என்று முடிவு எடுப்பதில்தான் சிக்கல் உள்ளது!” என்று கூறுகிறீர்களா?
உங்களுக்கு ஏற்றத் தொழில் எது என்று எப்படிக் கண்டு பிடிப்பது?
கண்டு பிடிப்போம். நாம் சேர்ந்து கண்டு பிடிப்போம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 21.02.2017

02: வெற்றிக்கு என்ன தேவை?

02: வெற்றிக்கு என்ன தேவை?

எடிசன் முதல் எல்லா விஞ்ஞானிகளும் கேட்ட கேள்வியைத்தான் முதலில் கேட்கணும். “தொழில் தொடங்க நினைப்பது ஏன்?” நோக்கம் தெரிந்தால் உங்களின் உந்துசக்தி புரியும். அதனால்தான் சொந்தத்தொழில் என்று ஆலோசனை கேட்டு வந்தால் இதை அவசியம் கேட்பேன்.
அதிகம் சொல்லப்படும் காரணங்களைப் பார்க்கலாம். அப்படியே என் ஆலோசனைகளையும் தருகிறேன். என்ன சார் இவ்வளவு வேகம் என்கிறீர்களா? நேரத்தை வீணடிக்க வேண்டாம். நேரடியாக வேலையை ஆரம்பிக்கலாம்!
தொழில் தெரிந்தால் போதுமா?
“எனக்கு இந்தத் தொழில் தெரியும் சார். பத்து வருஷம் வேலை பாத்திருக்கேன். அத்தனையும் அத்துப்படி. அதனால நாமே இதை செஞ்சா நல்ல லாபம்னு பாக்கறேன்!”
ஆதாரத் தொழில் அறிவு அவசியம். ஆனால் அது மட்டுமே வியாபாரத்துக்குப் போதாது. நல்ல சமையல் தெரியும் என்று ஓட்டல் ஆரம்பிப்பது போலத்தான் இதுவும். சமையல், ஓட்டல் தொழிலின் ஒரு பகுதி. முக்கியப் பகுதி. அவ்வளவுதான். சமையல் தெரியும் என்பதைவிட ஓட்டல் நிர்வாகம் தெரியணும். அதிலும் தொழிலாளியாய் இருப்பது வேறு. முதலாளியாய் இருப்பது வேறு. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்வது நல்லது.
ஒரு தொழிலில் அடிநாதமாய் உள்ள ஒரு செயல்திறன் உங்களுக்கு இருப்பதாலேயே நீங்கள் அந்தத் தொழிலில் வெற்றி பெறுவீர்கள் எனச் சொல்ல முடியாது. எத்தனையோ பிரம்மாண்ட படங்கள் கொடுத்த டைரக்டர்கள் சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தை அந்த அளவு வெற்றிகரமாக நடத்த முடியாமல் போனதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம். காரணம் என்ன? வெற்றிகரமான சினிமா இயக்குநரால் ஒரு படக் கம்பெனியை வெற்றிகரமாய் நிர்வாகம் செய்ய முடியும் என்று சொல்ல முடியாது.
இது ஏன் என்று போக போகச் சொல்கிறேன். இப்போதைக்குத் தெரிய வேண்டியது இதுதான்: ஆதாரத் தொழில் அறிவு இருப்பது நல்லது. அது மட்டும் போதாது!
நிஜமான முதலாளி
“யார் கிட்டேயும் கை கட்டி நிக்கக் கூடாது. நாமே ராஜா. நாமே மந்திரி. ஒரு பய கேள்வி கேக்கக் கூடாது. அதுக்குத்தான் சார் சொந்தமா பண்லாம்னு நினைக்கிறேன்.”
வேலையில் இருந்தால் ஒரு முதலாளிதான் கேள்வி கேட்பார். சொந்தத் தொழில் என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேள்வி கேட்பார். ஏனென்றால் வாடிக்கையாளர்தான் தொழிலின் நிஜமான முதலாளி. தவிர பங்குதாரர், பணியாளர், அரசு என எல்லோரையும் அணைத்துச் செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் இங்கு உண்டு. அதனால் தொழில் தொடங்கணும் என்றால் எல்லார் பேச்சையும் கேட்கத் தயாராக இருங்கள். பழைய காலத்துப் பண்ணையார் போல செயல்பட நினைத்தால், இந்தக் காலத்துத் தொழில் சூழல் இடம் அளிக்காது.
லாபம் அவசியம்
“இந்தத் தொழில் மேலுள்ள ஆசைதான் தூண்டுதல் எனக்கு. பணம் முக்கியமில்லை சார். நாம ஏதாவது பண்ணி பேர் வாங்கணும். அதுக்குதான் இந்த தொழிலை முயற்சி பண்றேன்.” இப்படி ஆசையின் தூண்டல் உங்களைத் தொழில் தொடங்க வைக்கும். ஆனால் தொழிலில் நீடிக்க பணத்தின் மேல் ஆசை கட்டாயம் வேண்டும். பல படைப்பாளிகள் தொழிலில் தோற்க காரணம் என்ன தெரியுமா? உணர்வு ரீதியான ஈடுபாடு சிறப்பான பணியைச் செய்ய வைக்கும். தொழிலைத் தக்க வைக்கவும் வளர்க்கவும் லாபத்தை நோக்கிச் செல்லும் எண்ணங்கள் தேவை. பணம் வராத செயலை செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது சேவை. அந்தத் தொழிலை நீண்ட நாட்கள் தக்கவைப்பதும் வளர்ப்பதும் பெருங்கடினம்.
சில சமயங்களில் வேலை கிடைக்காமல் சொந்தத் தொழில் ஆரம்பிப்பவர்கள் உண்டு. ஒரு விசிட்டிங்க் கார்ட்போலச் சொந்த கம்பெனியைப் பயன்படுத்தி வேலையைப் பெறுவர். முதல் புத்தகம் போடும் எழுத்தாளர்களைப் போல. ஆனால் உங்கள் தொழிலை லாபகரமாக நடத்தும் நீண்ட நாள் திட்டம் உண்டு என்றால் லாப நோக்கம் அவசியம். பணத்தை நேசிக்காமல் பணம் பண்ண முடியாது!
பணம் மட்டும் போதாது!
“என் நண்பர்தான் பார்ட்னர். அவருக்கு இந்தத் தொழில் தெரியும். அவர் ஃபுல்லா பாத்துப்பார், நான் பணம் மட்டும் போட்டா போதும். அதனாலதான் இதை சூஸ் பண்ணேன்!”
பணமுள்ள பங்குதாரர் கிடைப்பது நல்லதுதான். ஆனால் பிறரின் அனுபவத்தையும் அனுமானத்தையும் மட்டும் வைத்துத் தொழில் தொடங்குவது ஆபத்தானது. அனுபவஸ்தர் முதலீடு செய்தால் தேவலாம். அதே போல முன் பின் தெரியாதவர் பிஸினஸ் ஐடியா என்று பணம் கேட்டால் என்னென்ன கேள்விகள் கேட்பீர்களோ அவை அனைத்தையும் நண்பரிடம் கேட்பது அவசியம். பணத்தை மட்டும் போட்டுவிட்டால் போதும், அது தொழிலோடு வளர்ந்து மீண்டும் பெருகி திரும்ப வரும் என்று எண்ணுவது மடமை. தொழிலில் உங்கள் பங்கு என்ன என்று தெரிய வேண்டும்.
பணம் இல்லை என்பதால் தொழில் ஆரம்பிக்க முடியவில்லை என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள். சரியான தொழில் எண்ணத்திற்குக் கடனும் முதலீடும் நிச்சயம் கிட்டும். அதையெல்லாம் நாடினாரா உங்கள் நண்பர்? விசாரியுங்கள். முயற்சித்தும் பலன் இல்லை என்றால் செயல் திட்டம் தெளிவில்லை என்று பொருள்.
முயற்சி செய்யாமல் உங்களிடம் வந்திருந்தால், வேறு என்ன சொல்ல? “நீங்க ரொம்ப நல்லவரு!” இப்படி ஒரு புன்னகை மன்னன் கிடைக்க உங்கள் நண்பர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
“சரி, எந்தக் காரணம் சொன்னாலும் இப்படித் தட்டி விட்டால் எப்படித்தான் தொழில் தொடங்குவது?” என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் சொல்வது கேட்கிறது.
பொறுமை முக்கியம். அடுத்த வாரத்துக்குக் காத்திருங்கள்.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 17.02.2017

01: எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா?

01: எண்ணமும் உழைப்பும் மட்டும் போதுமா?
“சொந்தமா நாமே ஒரு தொழில் ஆரம்பிக்கலாம்னு ஒரு எண்ணம்.”
இதைச் சொல்லும் போது அந்த இளைஞனின் கண்களில் கனவு தெரிகிறது. “சொந்தமா... சார்...”
“பெரிசா வரணும் சார். எவ்வளவு கடின உழைப்பு தேவைப்பட்டாலும் கொடுக்கத் தயார். ஆனா ஜெயிக்கணும் சார்.”
இளைஞனின் குரல் காதல் வயப்பட்டது போலப் பரவசமாய் இருந்தது. கவுதம் மேனனின் கதாநாயகன் மாதிரி அவனைப் புரட்டிப் போட்டிருக்கு, இந்தப் பிஸினஸ் ஐடியா. “அப்பா கிட்ட அஞ்சு ரூபாவரை அரேஞ்ச் பண்ணக் கேட்டிருக்கேன். அவரும் நிலத்தை ஒத்தி வெச்சு தரேன்னுருக்கார். பத்தலேன்னா பாங்குல கேட்கலாம். இரண்டு வருஷத்துல போட்டதுக்கு மேலே நிச்சயமா மூணு மடங்கு வரும். ஏன்னா இந்தப் பிஸினஸ ஆறு மாசமா ஸ்டடி பண்ணியிருக்கேன். கண் கூடா எவ்வளவு காசு வரும்னு தெரியும். அதோட உங்க ஆலோசனையும் வேணும்!”
எல்லாத்தையும் அவன் பாத்துப்பான்!
தொழிலை அவர் விளக்கினார். விளங்கியது. பிஸினஸ் பிளான் உண்டா என்றதற்கு உதட்டைப் பிதுக்கினார். தன் உற்ற நண்பன் தான் பிஸினஸ் பார்ட்னர் என்றார். அவர் என்ன செய்வார் என்றதற்கு ‘எங்கூட இருந்து எல்லாத்தையும் பாத்துப்பான்’ எனப் பதில் வந்தது.
நெடுந்தூரம் பயணித்து ஆவலுடன் வந்த இளைஞரிடம் மிகச் சில ஆதாரக் கேள்விகளைக் கேட்டேன். எதற்கும் சத்தான பதில் இல்லை. ஒரு சின்ன ஹோம் வொர்க் போல ஒன்றைக் கொடுத்து “இதைச் செய்துவிட்டு ஒரு மாதம் கழித்து வாங்க. அது வரை அவசரப்பட்டு பணம் போடாதீங்க” என்று சொல்லி அனுப்பினேன். சுருங்கிய பலூனாய் திரும்பிப் போனார். (பிறகு என்ன ஆனது அந்த வியாபாரம் என்பதைப் பிறகு சொல்கிறேன்!)
தொழில் தொடங்கி வெற்றி பெறுதல் என்பது உயிர் பெறுதல் போலத்தான். ஆயிரக்கணக்கான விந்துகள் முந்தியும் ஒன்றுதான் இலக்கை அடைகிறது. மற்றவை அழிந்து போகின்றன. அந்த உயிர் நிலை கொண்டு சீரான சூழலில் வளர்ந்து உலகின் ஒளியைக் காண நேரம் பிடிக்கிறது. அதற்குப் பின்தான் புற வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த அத்தனை விதிகளும் தொழில் தொடங்குவதற்கும் பொருந்தும். ஆயிரம் பேர் தொழில் தொடங்கினாலும் வெற்றி ஒருவருக்குத் தான். அதுதான் நிதர்சனம். ஆனால், அந்த ஒன்று நாமாக இருப்போமே என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் முதலீடு செய்கின்றனர்.
நாமளே ‘கிங்’ ஆகிடலாம்
சினிமா எடுப்பவர்கள் யாராவது படம் ஓடாது என்று நினைத்தா பூஜை போடுகிறார்கள்? எந்தப் படம் ஓடும் எது ஓடாது என்ற தங்க விதி தெரிந்தால் மற்றவர்கள் ஏன் காசைக் கரியாக்கப் போகிறார்கள்? உண்மை என்னவென்றால் அப்படி ஒரு தங்க விதி இல்லை!
ஆனாலும் தனியாகத் தொழில் தொடங்கும் எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. காரணங்கள்தான் வேறுபடும். “ஒருத்தருக்கு கீழே வேலை செய்யப்படாது”, “நம்ம தகுதிக்கு வேலைக்குப் போகலாமா?”, “பெருசா பணம் சேக்கணும்னா பிஸினஸ்தான்”, “யாருக்கோ பண்ற உழைப்பை நமக்கே போட்டா நாமளே கிங் ஆயிடலாம்”, “நமக்குத் தெரிஞ்ச தொழில். கண்டிப்பா தப்பு பண்ணாது” இப்படி ஆயிரம் சொல்லலாம்.
சொந்தத் தொழில் ஆபத்தா?
தொழிலில் ஜெயித்தவர்களுக்கு மட்டுமே ஊடக வெளிச்சம் உண்டு. “ரெட் பஸ் ஆரம்பிச்ச பசங்க அஞ்சு வருஷத்துல ஆயிரக்கணக்கான கோடி டர்ன் ஓவர் பண்ணாங்க!”, “அம்பானிகூடப் பெட்ரோல் பங்குல வேலை பாத்துதான் பெரிய ஆளானார்!”.
எங்கோ ஆழ்மனதில் இந்தச் செய்திகள் எல்லாம் நல்ல வியாபார எண்ணமும் கடின உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்; அவை வெற்றியைத் தந்துவிடும் என்ற தவறான படிப்பினையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் தொழில் தொடங்கித் தோற்றவர்கள்தான் அதிகம். ஏன் தோற்றோம் என்று அறிய முடியாதவரை வெற்றிக்குப் போடும் மூலதனங்கள் வீணே!
உங்களுடைய சுற்றத்திலேயே பாருங்கள். தொழில் செய்து முன்னேறியவர்கள் எத்தனை பேர்? தொழில் செய்து இழந்தவர்கள் எத்தனை பேர்? குறிப்பாக முதல் தலைமுறையினருக்குத் தொழில் செய்தல் பெரும் சவாலே. இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் சிறு தொழில் முனைவோர் இழக்கும் செல்வம் அவர்கள் குடும்பம் சம்பாதித்தவை. அல்லது வாங்கிய கடனுக்கு வாழ்வெல்லாம் வட்டி கட்டுவர். அவர்கள் என்ன விஜய் மல்லையாவா என்ன, கடன் வாங்கிக் கட்டாமல் வாழ!
சொந்தத் தொழில் அவ்வளவு ஆபத்தா? இந்தியாவில் சாலையில் வண்டி ஓட்டுவதே பெரிய ரிஸ்க் தான். இந்தியர்களை அதிகம் கொல்வது மாரடைப்பைவிடச் சாலை மரணங்கள்தான். அதற்காக வண்டியில் போகாமல் / ஓட்டாமல் இருக்கிறோமா என்ன? நன்கு ஓட்டத் தெரிந்து கொண்டு சாலைக்கு வருவதுதான் பாதுகாப்பு. அதேபோலத்தான் தொழில் முயற்சியும். கற்றுத் தேர்ந்து வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என வணிக நிர்வாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வழிகாட்டுதல் இங்கே
இன்று incubation center என்று ஐ.ஐ.டி/ ஐ.ஐ.எம். நிறுவனங்களில் தொழில் முனைவோரை முதல் ஆறு மாதம் அடை காத்துத் தொழில் ஓட்டத்தைச் சீராக்கி வெளியே அனுப்புகின்றனர். ஆனால் இவை படித்தவர்களுக்கும், நகரவாசிகளுக்கும், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும்தான் பயன்படுகின்றன.
ஆனால், நம் கிராமங்களில், சின்ன டவுன்களில், பெரு நகரங்களில் பல இளைஞர்கள் தொழில் செய்யத் தயாராக இருக்கிறார்கள். எண்ணம், உழைப்பு, கடன் வாங்கும் தகுதி எல்லாம் உள்ளன. ஆனால், வழிகாட்டுதல் இல்லை. பாடத்திட்டத்தில் இது இல்லை. வாழ்க்கையில் பட்டுத்தெளிந்து மீண்டும் முயற்சிக்கும் வசதிகள் பலருக்கு இல்லை.
எளிய தமிழில் தொழில் முனைவின் சகலக் கூறுகளையும், வியாபார உதாரணங்களுடன், நடைமுறைப்படுத்தக்கூடிய ஆலோசனைகளை இவர்களுக்கு வழங்கினால் எப்படி இருக்கும். அதைத்தான் செய்யப் போகிறோம்.
யாருக்கு வியாபாரம் ஒத்து வரும், என்ன பிஸினஸ் மாடல், யார் பார்ட்னர், எப்படிப் பதிவு செய்வது, எப்படிக் கடன் வாங்குவது, எப்படிச் சந்தைப்படுத்துவது, எப்படி முதலீட்டாளர்களைப் பெறுவது, பணத்தை-பணியாளர்களை கையாள்வது எப்படி, போட்டியைச் சமாளிப்பது எப்படி, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது எப்படி, வியாபாரத்தை மாற்றுவது எப்படி எனப் பல ‘எப்படி’களைப் பார்க்கப் போகிறோம்!
இந்தக் கேள்விகள் எல்லா வளர்ந்த நிறுவனங்களுக்கும் உண்டு.
நீங்கள் பண முதலீடு செய்வதற்கு முன் இதைப் படிப்பது தற்காப்பு மட்டுமல்ல இதுவும் ஒரு முதலீடுதான்!
கலக்கலாம் பாஸ்! வாங்க தொழில் தொடங்கலாம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 07.02.2017

Thursday, June 22, 2017

6 முக்கிய சாலை விதிகள்...மீறினால் 6 மாதம் உரிமம் ரத்து...அரசு அதிரடி!

6 முக்கிய சாலை விதிகள்...மீறினால் 6 மாதம் உரிமம் ரத்து...அரசு அதிரடி!
சென்னை : சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலான 6 முக்கிய சாலை விதிகளை மீறினால் நிச்சயம் 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழக போக்குவரத்துத் துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 6 முக்கிய சாலை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டள்ளது.
இதன்படி அதிவேகமாக வாகனம் ஒட்டுவது, சிவப்பு விளக்கு மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது/சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதே போன்று செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுவது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுவது உள்ளிட்ட விதிகளை மீறுவோருக்கும் 6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற நடவடிக்கையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தல் அடிப்படையில் போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் வகிக்கும் நிலையில் இதனை குறைக்கும் வகையில் போக்குவரத்து ஆணையர் மூலமாக RTO அலுவலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜூன் 6 ம் தேதி தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், டி.ஜி.பி போக்குவரத்து செயலர் கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக தான் ஜூன் 20 அறிவிப்பில் வாகன ஒட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் லைசன்ஸ் இருக்க வேண்டும் என அறிவிப்பு செய்திருந்தார்கள்.
இதற்கு முன்பு குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேக விபத்துக்கு மட்டுமே லைசன்ஸ் ரத்து என்ற விதி இருந்தது. இதே போன்று ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதல் முறை ஒரு கட்டணம், அடுத்தடுத்த முறை அதிக கட்டணம் என அபராதம் வசூலிக்கப்படுகிறது.
By: Gajalakshmi
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் – 22.06.2017

Tuesday, June 20, 2017

பெயில் பற்றிய முழு விபரங்கள்

பெயில் பற்றிய முழு விபரங்கள்
குற்றம் புரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்து, அவர்களை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி, சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்து அவர்களால்தான் அந்தக் குற்றம் செய்யப்பட்டது என்பதை நிரூபித்து குற்றவாளிகளுக்குத் தண்டணை பெற்றுத் தருகிறார்கள். இது போன்ற வழக்குகளானது அதில் செய்யப்பட்டதாக சொல்லப்படுகின்ற குற்றங்களைப் பொறுத்து, பெயிலில்விடக்கூடிய வழக்கு’  மற்றும் பெயிலில் விட முடியாத வழக்குஎன்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
பெயிலில்  விடக்கூடிய வழக்குகள் (Bailable Offence)
இவை பெரும்பாலும் சிறு சிறு குற்றங்களாகும். இது போன்ற குற்றங்களில் காவல்துறை அதிகாரியே கைது செய்யப்பட்டவரை பெயிலில் விடுவிக்கலாம். ஜாமீன் தருவோர்கூட தேவையில்லை. கைது செய்யப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை காவல்துறை அதிகாரி பெயிலில் விடலாம். 
பெயிலில் விட முடியாத வழக்குகள் (Non Bailable Offence)
இவை இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டணை விதிக்கும் அளவிற்கு உள்ள பெரிய குற்றங்களாகும். இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்களை காவல்துறை அதிகாரியால் கைது செய்யத்தான் முடியும். பெயிலில் விட முடியாது. எனவே இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உரிய நீதிமன்றத்தில்தான் பெயில் பெற முடியும். 
அவ்வாறு பெயிலில் விட முடியாத வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒருவர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டால், அவருக்கு எதிராக வாதாடக்கூடிய, அரசு தரப்பு வழக்கறிஞர் அந்த குற்றவாளிக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்று ஆட்சேபணை செய்வார். எதனால் ஆட்சேபணை செய்கிறீர்கள்? என்று நீதிபதி கேட்டால், கீழ்க்கண்ட காரணங்களைக் கூறுவார். 
1. குற்றவாளி விசாரணையின் போது முறையாக ஆஜராக மாட்டார்
2. சாட்சிகளை கலைத்துவிடுவார்.
3. பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் வேறு குற்றங்களைப் புரிவார்
4. காவல்துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை
 5. திருட்டுபோன பொருட்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை
6. குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை
7. சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
8. சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து.
குற்றம் சாட்டப்பட்டவர் அரசு தரப்பு / எதிர் தரப்பு வழக்கறிஞர் கூறும் இத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்து பதிலளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் பெயில் கிடைக்காது. 
பெயிலில் வர மனு எப்படிப் போடுவது?
குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்கும்போது தன்னுடைய உறவினர்களின் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ பெயிலில் வருவதற்கு தகுந்த வழக்கறிஞரின் உதவியை நாடலாம். 
இலவசமாக பெயில் எடுப்பதற்கு, வாரம் ஒருமுறை நேரடியாக ஜெயிலுக்கே வந்து, ஜெயிலில் உள்ளவர்களை இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் ஒருவர் சந்திப்பார். அவர் மூலமாகவும் உறவினர்களை  அல்லது நண்பர்களை தொடர்பு கொண்டு முயற்சி செய்யலாம்.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்டநுணுக்கங்கள் தெரிந்தவராக இருந்தால் நேரடியாகவே ஜெயில் அதிகாரி மூலமாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம். அந்த மனுவில் பெயில் பெறுவதற்காக கீழ்க்கண்ட தகுந்த காரணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர் குறிப்பிட வேண்டும்.
1. பெயிலில் செல்லாவிட்டால் தனது வேலையை இழக்க நேரிடும்.
2. குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் வருமானம்     இன்றி பாதிக்கப்படுகிறது
3. தனக்கு உடல் நலமில்லை,  வெளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை    எடுத்தால்தான் குணமாக முடியும்.
4. மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனு நிலுவையில்    இருக்கும்போது தண்டனை கைதியை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு    எதிரானது.
ஜாமீன்
குற்றஞ்சாட்டப்பட்டவரை பெயிலில் எடுப்பதற்கு அது சிறிய குற்றம் என்றால், ரூ.50,000/- மதிப்புள்ள அசையா சொத்து வைத்திருக்கும் இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும். வழக்கறிஞர் குறிப்பிடும் நாளில் ஜாமீன்தாரர்கள். நீதிமன்றத்திற்கு அசல் குடும்ப அட்டையுடன் செல்ல வேண்டும். நீதிபதி அவர்களிடம், குற்றம் சாட்டப்பட்டவரை உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் பெயர் என்ன? அவரது தந்தையின் பெயர் என்ன? அவர் எந்த ஊரில் வசித்து வருகிறார்? அவரது மனைவி பெயர் என்ன? என்ன குற்றம் செய்துள்ளார்? உங்கள் பெயர் என்ன? உங்கள் தந்தையின் பெயர் என்ன? உங்கள் சொத்து எந்த ஊரில் உள்ளது? அதன் மதிப்பு என்ன? என்ற கேள்விகளை கேட்பார். அவற்றிற்கு தகுந்த பதில்களை ஜாமீன் அளிப்பவர் சொல்ல வேண்டும். குறிப்பிடும் நிபந்தனைகளின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அல்லது காவல் நிலையத்தில் ஆஜராகாவிட்டால் உங்களை கைது செய்ய நேரிடும்! என்பதையும் நீதிபதி ஜாமீன்தாரர்களிடம் தெரிவிப்பார். பின்பு ஜாமீந்தாரர்களின் குடும்ப அட்டையில் நீதிமன்ற முத்திரை வைத்து பெயில் வழங்கப்படும்.
பெயில் மறுப்பு மற்றும் மேல் முறையீடு
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை பெயிலில்விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதனை வைத்துதான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
ஒருவரது பெயில்மனு தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்
முன் ஜாமீன் (Anticipatory Bail)
தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன்மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயலக்கூடும் என ஒருவர் எண்ணினால் முன் ஜாமீன் கேட்டு மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு
இதற்கான மனுவை அவர் மாவட்ட நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். வாரன்ட் இல்லாமல் போலிசாரால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த முன் ஜாமீன்  மூலம் நீதிமன்றம் உறுதி செய்கிறது.
குறிப்பு:
உச்சநீதிமன்றத்தில் பெயில் ஆர்டர் பெற்றிருந்தால்கூட, தண்டனை கொடுத்தவர்களே பெயில் கொடுக்க வேண்டும் என்பதால் தண்டணை வழங்கப்பட்ட நீதிமன்றத்தில்தான் அந்த பெயில் ஆர்டரை கொடுத்து பெயில் பெற வேண்டும் என்பது சட்டமாகும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயல்லிதா அவர்கள் மீது போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அவர்களால் ஜெயில் தண்டணை வழங்கியபின், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு உச்சநீதிமன்றத்தில் அவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு, அவருக்கு அங்கு பெயில் ஆர்டர் வழங்கப்பட்டு அதனை கர்நாடகா நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அவர்களிடம் சமர்ப்பித்துதகுதியானவர்கள் ஜாமீன் கொடுத்து அவர் சிறையில் இருந்து வெளியில் வந்த்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

போலீஸ் கேஸ் டைரியை தாக்கல் செய்ய உத்தரவு - எப்போது?

 போலீஸ் கேஸ் டைரியை தாக்கல் செய்ய உத்தரவு - எப்போது?
காவல்நிலையத்தில் பணியில் இருக்கும் காவலர்கள் தாங்கள் அன்றாடம் செய்த பணிகள் பற்றிய விபரங்களை ஒரு குறிப்பேட்டில் தினசரி நேரம் குறிப்பிடப்பட்டு எழுதிவர வேண்டும் என்பது சட்டமாகும். இந்த குறிப்பேட்டை “போலீஸ் கேஸ் டைரி” என்று சொல்வார்கள். இதனை பார்க்கின்ற அதிகாரம் அல்லது இதிலுள்ள குறிப்புகளை கேட்கின்ற அதிகாரம் நீதிமன்றத்தைத் தவிர யாருக்கும் இன்னும் வழங்கப்படவில்லை. சில வழக்குகளில் காவல்துறையினர் செய்த தில்லுமுல்லுகளை இந்த டைரியைப் பார்த்தால் இலகுவாக கண்டுபிடிக்கலாம். அதுபோன்ற ஒரு வழக்கை கீழே காண்போம், வாருங்கள். 
*******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 
முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிரான புகார்: ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா எப்ஐஆரில் யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன்?- கேஸ் டைரியை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பதிவு செய்துள்ள எப்ஐஆரில் யாருடைய பெயரும் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து போலீஸார் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் கேஸ் டைரியை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கறிஞர் எம்.பி.வைரக் கண்ணன் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர் பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத் திடம் சில கேள்விகளை கேட் டேன். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், டிடிவி தினகரன், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அவர் கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் அதிகாரிகள் அமைதியாக இருந்து வருகின்ற னர். எனவே, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி டிடிவி தினகரன், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட் டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், ‘‘இதுதொடர்பாக ஏப்ரல் 18-ம் தேதியே அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்’’ என தெரிவித்தார்.
அந்த எப்ஐஆர் நகல் மனுதாரர் தரப்புக்கு வழங்கப்பட்டது. அதை படித்துப் பார்த்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ‘‘இந்த எப்ஐஆரில் குற்றம்சாட்டப் பட்டவர்கள், அடையாளம் தெரியாதவர்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது. அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் 34 பக்க ஆவணங்களை போலீஸில் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அந்த புகார் அடிப்படையில்தான் அபிராமபுரம் போலீஸார் 583/17 என்ற குற்ற எண்ணில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். அப்படியிருக்கும்போது எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் என்று குறிப்பிடவில்லை. அந்த வழக்கு எதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடவில்லை. இந்த எப்ஐஆரில் டிடிவி தினகரன், முதல்வர் கே.பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர் இடம்பெறாதது ஏன்’’ என வாதிட்டார்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி வாதிடும் போது, ‘‘இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘எப்ஐஆரில் குற்றம்சாட்டப்பட்ட வர்களின் பெயர்கள் இடம்பெறாதது ஏன் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, எப்ஐஆரின் கேஸ் டைரியையும், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத் தின் 34 பக்க ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 20.06.2017

பிழைகளை நீக்கி, புதிய மின்னணு குடும்ப அட்டை பெற

பிழைகளை நீக்கி, புதிய மின்னணு குடும்ப அட்டை பெற
மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலோ அரசு இசேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் மாற்று அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தலைமைச் செயலகம், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை பெருநகர மாநகராட்சி தலைமை அலுவலகம், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள் ஆகிய இடங்களில் செயல்படும் இசேவை மையங்களில் பொதுமக்கள் மாற்று மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு பழைய மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்துள்ள செல்போன் எண் மிக அவசியம் ஆகும். அந்த எண்ணுக்கு (One Time Password) ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் அனுப்ப்ப்படும். அந்த கடவுச் சொல்லை பயன்படுத்தி, புதிய மின்னணு குடும்ப அட்டை அவர்களுக்கு வழங்கப்படும். பழைய மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த செல்போன் எண் தெரியாதவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்க இயலாது.
புதிய மின்னணு குடும்ப அட்டையில் உள்ள விபரங்களை திருத்தும் பணி மேற்கூறிய இசேவை மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு பொதுமக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்குதல் மற்றும் மாற்றம் செய்தல், குடும்ப அட்டையின் வகையை மாற்றம் செய்தல், கேஸ் சிலிண்டர் விபரங்களை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்ற சேவைக்காக 60 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அந்த விண்ணப்பங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகு விண்ணப்பித்தவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றவர்கள் அருகிலுள்ள இசேவை மையத்தை அணுகி 30 ரூபாய் செலுத்தி திருத்தப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கூறிய இரண்டு சேவைகளும் 20.06.2017 முதல் நடைமுறைக்கு வருகின்றது. இந்த சேவை தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என்றால், 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
நன்றி : தினமணி நாளிதழ் – 20.06.2017