இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்
“காந்தி இருந்திருந்தால் அவருக்கும் சிறைதான்!” நெருப்பு நாட்கள்...
எமர்ஜென்சி நினைவலைகள்!
இந்திய அரசியலில் இரும்புப்பெண்மணி எனப்பட்ட இந்திராகாந்தி தன் அதிகாரத்தின் அதிகபட்ச எல்லையை நிறுவிய நாள் இன்று. ஆம், 1975 ஜூன் மாதம் இதேநாள் நள்ளிரவில்தான் இந்தியாவில் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
அது ஒரு கடும் கோடைக் காலம் முடிந்து வெயிலும் குளிரும் சன்னமாய் உணரப்பட்ட ஜூன் மாதம். அந்த மாதத்தின் 12 ந்தேதி ஒட்டுமொத்த இந்தியாவும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் வாயிற் கதவுகளில் தங்கள் காதை வைத்துக் காத்துக்கொண்டிருந்தது. பிரதமர் இந்திராகாந்தியின் அரசியல் வாழ்வை அன்றுமுதல் தீர்மானிக்கபபோவது இந்த நீதிமன்றம்தான்.
இந்திராவுக்கு எதிரான வழக்கு என்ன...
நேருவுக்குப்பின் காங்கிரஸின் பலம்வாய்ந்த தலைவராக உருவாகிவந்த பிரதமர் இந்திரா காந்தி 1971 பாராளுமன்றத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்திராவிற்கு அப்போது எதிர்கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு அலை இருந்தது.
இந்தத் தேர்தலில் தன் வெற்றிக்காக ஆட்சி இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்த இந்திரா, யஸ்பால் கபுர் என்ற உயரதிகாரியை அதற்கு பயன்படுத்தினார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனால் இந்திராவின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்புதான் 1975ம் வருடம் ஜூன் 12 ந்தேதி அறிவிக்கப்பட இருந்தது.
நாடே பரபரப்பாய் உற்றுநோக்கிக்கொண்டிருந்த தீர்ப்பை நீதிபதி ஜெகன்மோகன் சின்ஹா 10 நிமிடங்களில் வாசித்து முடித்தார். வழக்கின் அனைத்து அம்சங்களும் உறுதிப்படுத்தப்பட்டதாய்க் கூறிய அவர், இந்திராவின் வெற்றி செல்லாது என அறிவித்ததோடு அடுத்த 6 வருடங்களுக்கு இந்திரா தேர்தலில் போட்டியிட தடையும் விதித்தார். இந்த தீர்ப்பால் அகில இந்தியாவும் அதிர்ந்து நின்றது. 'தீர்ப்பின் எதிரொலியாக இந்திரா உடனயடியாக பதவி விலகவேண்டும்' என இந்திராவுக்கு எதிராக அன்றைக்கு போர் நடத்திக்கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
அசைந்துகொடுக்காத இந்திரா உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தார். மனுவை ஏற்று, முந்தையத் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை விதித்த உச்சநீதிமன்றம், 'இந்திரா எம்.பியாகவும் பிரதமராகவும் நீடிக்கத் தடை இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களிக்கக்கூடாது' என்றது.
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
இந்திரா சற்று நிம்மதியானார். ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த நிம்மதியை நீடிக்கவிடவில்லை. நாடு முழுவதும் இந்திரா எதிர்ப்பாளர்கள் கண்டனக் கூட்டங்கள் நடத்தி அவரை பதவி விலகச் சொல்லி பரபரப்பை கூட்டினர். உச்சகட்டமாக அவரை பதவியிலிருந்து அகற்ற மொரார்ஜி தேசாய் தலைமையில் எதிர்கட்சிகள் ஒரு போராட்டக்குழுவை அமைத்தன. நாடே பரபரப்பாக இருந்தது.
எதிர்க்கட்சிகளின் இந்த முடிவால் இந்திரா பதவி விலகும் முடிவுக்கு வந்தார். ஆனால் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு, தான் அஞ்சிவிடுவதா என்ற ஈகோ அவரது முடிவுக்கு முன் முட்டுக்கட்டையாக நின்றது. தனக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகரும் அன்றைய மேற்கு வங்க முதல்வருமான சித்தார்த் சங்கர் ரேவிடம் யோசனை கேட்டார். தேர்ந்த அனுபவம்பெற்ற அரசியல்வாதியான ரே, சில சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்துவிட்டு இந்திராவிடம் திரும்பிவந்தார்.
“பிரதமராக நீடிப்பதில் சட்டச்சிக்கல் இல்லாததால் பதவியில் தொடருங்கள். எதிர்கட்சிகளை பொருட்படுத்தாதீர்கள்” என யோசனை சொன்னார். ஓரிருநாளில் 'அடுத்துவரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் சஞ்சய் காந்தியின் மாருதி கார் விவகாரம், நகர்வாலா ஊழல் உள்ளிட்ட ஆட்சிக்கு சங்கடமான சில விவகாரங்களை கையிலெடுத்து எதிர்கட்சிகள் பிரச்னை கிளப்ப இருப்பதாக உளவுத்துறையிடமிருந்து இந்திராவுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. நிலைகொள்ளாமல் தவித்தார் இந்திரா. தன் அரசியலின் அந்திமக்காலம் இது என்பதை உணர்ந்தாலும் அவரது இயல்பான குணம் அதை ஏற்கவில்லை. என்ன ஆனாலும் சரி போராடிப் பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். இந்த காலகட்டத்தில் இந்திரா மவுனம் காப்பதும் வழக்கத்துக்கு மாறாக பிரதமர் இல்லம் சட்டவல்லுனர்களால் நிரம்பிவழிந்ததும் எதிர்கட்சித்தலைவர்களுக்கு கொஞ்சம் நெருடலை தந்தது.
இந்திரா காந்திஇந்திராவின் குணத்தை அறிந்த அவர்கள், அவர் அதிரடியாக எதையாவது செய்துவிடக்கூடும் என அஞ்சினார்கள். ஆனால், நேருவின் மகள் ஜனநாயகத்துக்கு விரோதமான எந்த முடிவுக்கும் போகமாட்டார் என அவர்கள் நம்பினர்.
ஜூன் 23 ரேவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திரா. இந்திராவுக்கு பதவியை விட மனமில்லை. அதேசமயம் அதிகாரமின்றி அதில் தொடர்வதிலும் விருப்பமில்லை என்பதை நீண்ட பேச்சின் முடிவில் புரிந்துகொண்ட ரே, இந்திரா 'எதிர்பார்த்த' ஒரு முடிவை அவருக்கு சொன்னார். “பிரதமராக நீடித்தாலும் எதிர்கட்சிகள் குடைச்சல் தருவதை நிறுத்தாது. அதனால் வேறுவழியில்லை; எமர்ஜென்சியை அறிவித்துவிடுவதுதான் இப்போதைக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். எல்லாப்பிரச்னைகளில் இருந்தும் தற்காலிகமாக தப்பிவிடலாம்” என்றார். அன்றே ரேவுடன் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்த இந்திரா, உளவுத்துறை அறிக்கையை சுட்டிக்காட்டி, 'ஆட்சியில் ஸ்திரத்தன்மை இல்லாத சூழலில் உள்நாட்டுக்கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது. அதனால் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த முடிவெடுத்திருப்பதாக' சொன்னார்.
“உடனே நெருக்கடி நிலை பிரகடனத்தை தயாரித்து அனுப்புங்கள். கையெழுத்திடுகிறேன்” என்றார் ஜனாதிபதி. அதிகாரிகள் விரைந்து காரியம் ஆற்றினார்கள். எது நடந்துவிடக்கூடாது என எதிர்கட்சிகள் அஞ்சினார்களோ அந்த பயங்கரம் நடந்தேறியது. ஆம் ஜூன் மாதம் 25 ந்தேதி இந்திய மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதிர்ந்து நின்றது இந்தியா. உலக நாடுகள் இந்திராவின் இன்னொரு முகத்தைக் கண்டு விக்கித்து நின்றன.
நெருக்கடி நிலையின் கோர முகம் 26ந்தேதி விடியற்காலையிலிருந்தே தெரிய ஆரம்பித்தது. சஞ்சய்காந்தியின் ஆலோசனையின்பேரில் இரவோடு இரவாக தலைவர்கள் கைதுப்படலமும் அரங்கேறியது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், பிலுமோதி, ராஜ் நாராயணன், பிஜூ பட்நாயக், அசோக் மேத்தா, மொரார்ஜி தேசாய், வாஜபாய், ஜார்ஜ் பெர்ணான்டஸ் உள்ளிட்ட தலைவர்கள் எந்தக் கேள்வியுமின்றி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். நெருக்கடி நிலை குறித்த செய்திகள், தலைவர்கள் கைது இவை மக்களிடம் சென்றுசேர்வதைத் தடுக்க டெல்லியில் முக்கிய நாளிதழ்களின் அலுவலகங்களுக்கு நள்ளிரவு முதல் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் பல பத்திரிகைகள் மறுதினம் வெளிவரவில்லை. எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட தகவல் மந்திரிகளுக்கே மறுநாள் காலையில்தான் சொல்லப்பட்டது.
இந்திராவை எதிர்த்தவர்களில் முக்கியமானவரான ஜெயப்பிரகாசரை கைது செய்தபோது “வீநாச காலே விபரீத புத்தி” என மனம்நொந்து சொன்னார். எமர்ஜென்சியை விமர்சிக்க அஞ்சி மற்ற மாநிலங்கள் வாய்மூடி மவுனம் காத்தபோது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக அதை கடுமையாக எதிர்த்தது. அதிமுக சற்று அடக்கிவாசித்தது. இந்திரா எதிர்ப்பாளர்களில் கைது செய்யப்படாத ஒரே தலைவர் தமிழத்தில் காமராஜர் மட்டுமே. ஏற்கெனவே கட்சிக்குள் இந்திராவின் சர்வாதிகாரப்போக்கினை எதிர்த்துத் தோல்வி கண்டவர் காமராஜர். தனக்கு எதிராக மாநிலத்தில் பலம் வாய்ந்த ஓர் தலைமை உருவாவதை விரும்பாத இந்திரா எடுத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் உடைந்து தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் என்றும், காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் எனவும் தனித்தனியே செயல்பட்டுவந்தன. இந்நிலையில் இந்திராவின் எமர்ஜென்சி அறிவிப்பு காமராஜரை மனம் நோகச் செய்தது. ஆனால் இந்திராவை கட்டுப்படுத்தும் கடிவாளம் அவரிடம் அப்போது இல்லை. “ நாட்டுக்கு உழைச்சவங்க எல்லாம் சிறையில் இருக்கும்போது எனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு நானும் சிறைக்கு போறேன்” என எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து அவர் மேடைபோட்டு பேச ஆரம்பித்தார்.
இந்திராகாந்தி
நேருவின் மகள் ஜனநாயகத்தை பழிதீர்த்துக்கொண்டதாக கட்சிப்பிரமுகர்களிடம் தெரிவித்த அவர், “நாட்டின் தலைவர்களையெல்லாம் கைது செய்துவிட்டு இவர்கள் ஆளப்போவது நாட்டையா, சுடுகாட்டையா” என மனம் நொந்துச் சொன்னார். பிளவுபட்ட காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஒட்டவைக்கும் ஆசை இந்திராவின் அடிமனதில் அப்போது இருந்ததுதான், காமராஜரை அவர் கைது செய்யாமல் விட்டதற்கு காரணம். ஆனால் எமர்ஜென்சி பிரகடனத்தின் எதிரொலியாக நாட்டில் நடந்தவைகளை காமராஜரால் ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. அவரது உடல் நலிவுற்றது. நெருக்கடி நிலை அமலுக்கு வந்த 4 மாதத்தில் காமராஜர் காலமானார்.
எமர்ஜென்சி பிரகடனத்தையொட்டி வானொலியில் உரையாற்றிய இந்திரா, மக்களின் நலனுக்காக, தான் எடுத்த சில முற்போக்கு நடவடிக்கைகளை பிடிக்காத சிலர் ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி செய்ததால் அவற்றை முறியடிக்க வேறு வழியின்றி எமர்ஜென்சியை கையிலெடுக்க வேண்டியதாகிவிட்டதாக கூறினார். அதேசமயம் சட்டத்தை மீறாத எந்த குடிமகன்களுக்கும் எதுவும் நேராது. வழக்கம்போல் சட்டப்படியான உரிமை அனைத்தும் கிடைக்கும். அசாத்தியமான சம்பவங்கள் எதுவும் நிகழாது. ஜனநாயக மாண்புகளை எள்ளளவும் மீறப்படாது என உறுதியளிக்கிறேன்” என்றார். ஆனால் நடந்ததெல்லாம் அதற்கு நேர் எதிர்.
நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு முந்தைய வாரம் தனது துக்ளக் இதழில் 'ஒண்ணரைப்பக்க நாளேடு' என்ற கற்பனைப்பகுதியில் 'எமர்ஜென்சியை அறிவித்தார் இந்திரா', என கற்பனையாக ஒரு செய்தியை வெளியிட்டு கைதாகப்போகும் தலைவர்கள் என கிண்டலாக ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார் பத்திரிகையாளர் சோ. ஆச்சர்யமாக பட்டியலில் இடம்பெற்ற தலைவர்கள் அத்தனைபேருமே அடுத்த ஒருவாரத்திற்குள் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
தொடர்ந்து பத்திரிகை தணிக்கை அமலுக்கு வந்தது. செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள், தலையங்கக்கட்டுரைகள் அரசின் தீவிர தணிக்கைக்குப்பிறகே வெளிவந்தன. பல பத்திரிகைகள் இந்திராவின் கடுமைக்கு பயந்து அவற்றை நிறுத்திக்கொண்டன. சில பத்திரிகைகள் இந்திராவின் எண்ண ஓட்டத்திற்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டன. வெளிநாட்டு பத்திரிகை அலுவலகங்கள் முடக்கப்பட்டு அவற்றின் நிருபர்கள் அவர்களின் நாட்டுக்கு மிரட்டி அனுப்பப்பட்டனர்.
எம்.ஜி.ஆர்
இப்படி ஜனநாயகத்தின் அத்தனை பண்புகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன. அதிகாரிகள் நினைத்தவை நடந்தன. எமர்ஜென்சியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மாணவர் தலைவர்கள், போராட்டக்காரர்கள் பலர் திடீர் திடீர் எனக் காணாமல்போயினர். பெற்றோர்கள் அவர்களை தேடித்தேடி அலைந்ததுதான் மிச்சம். கடைசிவரை அவர்கள் 'காணாமலேயே' போய்விட்டார்கள். கேரளாவில் மாணவப் போராட்டத்திற்கு தலைமை வகித்த சுகுமாரன் என்ற மாணவர் காணாமல் போக, அவரின் தந்தை பல வருடங்களுக்குத் தேடிவந்தார். வழக்கும் நடத்தினார். எமர்ஜென்சியின்போது காவல்துறையினரால் அவர் கொல்லப்பட்டு அடையாளம் தெரியாமல் இருக்க சர்க்கரையை கொட்டி எரித்த கொடூரமான கொலைச் சம்பவம், பல வருடங்களுக்குப்பின் வெளிச்சத்துக்கு வந்தது. தன் மகன் குறித்து அவர் எழுதிய நுால் இன்றளவும் எமர்ஜென்சியின் கொடூரத்திற்கு சாட்சியான ஓர் புத்தகம்.
சிறையில் அடைபட்டவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளானார்கள். தலைவர்களின் மனநிலையை சிதைக்க அவர்கள் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் சிலருக்கு சிறையில் அளித்த உணவு குறித்து பல அதிர்ச்சித் தகவல்கள் உலவின. மொரார்ஜி தேசாய் பாம்புகள் நிறைந்த பாழடைந்த பயன்படுத்தப்படாத சிறையில் அடைக்கப்பட்டார். “நல்லவேளை காந்திஜி உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவரும் சிறையில்தான் இருந்திருப்பார்” என நகைச்சுவையாக சொல்வார்கள் அந்நாளில். பாராளுமன்றக் கூட்டத்தொடர்களில் எதிர்கட்சிகள் சார்பில் பேச ஆளின்றி அத்தனைபேரும் தலைமைறைவாகியிருக்கும் நிலை ஏற்பட்டது. பலர் இந்தத் 'திருடன் போலீஸ் விளையாட்டு' பிடிக்காமல் தங்கள் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். ரேடியோவில் இந்திராவின் 20 அம்ச திட்டத்தைப் பற்றி பாடமுடியாது என்று சொன்ன பிரபல இந்தி பாடகர் கிஷோர்குமாரின் பாடல்கள் தடைசெய்யப்பட்டன.
சோ
துக்ளக் ஆசிரியர் சோ தணிக்கை அதிகாரிகளை கலாய்ப்பதற்காக ஒருமுறை தன் பத்திரிகையின் நகல் என அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிப்பட்டியலை அனுப்பிவைத்தார். 'எமர்ஜென்சியை எதிர்ப்பவரிடமிருந்து இப்படியொரு கட்டுரையா, இதென்ன சங்கேத பாஷையா' என குழம்பிப்போனார் அதிகாரி. அதனால் எதற்கு வம்பு என அதற்கு தடை போட்டதோடு சோவை அழைத்து விசாரித்தார். “நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற தேசிய கீதத்துக்கும் தடை போட்டிருக்கிறீர்களே எமர்ஜென்சியின்போது தேசியகீதம்கூட பாடக்கூடாதா?” என கேட்டு இன்னமும் அதிகாரியை எரிச்சலுாட்டினார் சோ. அப்போதுதான் சோ செய்த குறும்பு தெரியவந்தது அவருக்கு. நான் என்ன செய்வது அதிகாரிகள் சொல்வதை நான் கேட்கிறேன் என நொந்துகொண்டார் அந்த அதிகாரி.
இந்நிலையில், எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்ததோடு அதைக் கண்டித்து கட்சியின் செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக. தணிக்கையை கண்டிக்கும் விதமாக ஒருநாள் சலவைக்கு துணி போட்ட கணக்கு வழக்குகளை முரசொலியில் பிரசுரித்தது திமுக தலைமை. இந்நிலையில் 1976 ம் ஆண்டு ஜனவரி 31 ந்தேதி திமுக அரசு கலைக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மற்றும்சில இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன.
எமர்ஜென்சிக்கு எதிராக பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவுசெய்தனர். உச்சநீதிமன்றத்தில் இந்திராவுக்காக மேற்முறையீடு செய்திருந்த பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா இந்திராவைக் கண்டிக்கும் விதமாக அந்த வழக்கிலிருந்து விலகிக்கொண்டார். மத்திய அரசின் சோலிசிட்டர் நாரிமன் பதவி விலகினார்.இந்திராவின் உதவியாளர் ஜனகராஜ் என்பவர் இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டு துணிச்சலாக அவருக்கே கடிதம் எழுதினார். அவரை சிறையிலடைத்தார் இந்திரா. முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா, மரியாதையாக நீங்கள் பதவி விலகுங்கள் இந்திரா என நயமாக ஒரு கடிதத்தை இந்திராவுக்கு எழுதினார். நெருக்கடி நிலையைப்பற்றி தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த ஜார்ஜ் பெர்ணான்டஸை கைது செய்ய அவரது சகோதரரை அடித்துக்காயப்படுத்தியது தனிக்கதை.
20 அம்சத் திட்டம் பத்திரிகை வானொலிகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டதோடு எமர்ஜென்சியின்போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த அரசு முனைந்தது. ஒருவகையில் அது உண்மையே. அரசியல் மாச்சர்யங்களினால் தலைவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும் பொதுமக்களுக்கான சேவையில் அக்காலகட்டத்தில் அரசு இயந்திரம் சரிவர இயங்கியது. ரயில்கள் நேரத்தோடு ஓடின. அரசு ஊழியர்கள் முதல் அதிகாரிகள்வரை சரியான நேரத்தில் பணிக்கு வந்தனர். வேலைநிறுத்தங்கள் எதுவும் நடைபெறவில்லை. ரேஷன் கடையில் எல்லாப் பொருட்களும் முறையாக கிடைத்தன. கடத்தல், பதுக்கல் வேலைகள் நடக்கவில்லை' இப்படி பல நல்ல காரியங்களும் நடந்தன.
இதை மீறியும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பிய ஒருசமயம், “முன்னேற்றத்திற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எப்படி பாழாகின்றன என்பதை நெருக்கடி காலத்தில்தான் அறிய நேர்ந்தது. நம் நாட்டு மக்களின் பின்தங்கிய நிலை மாறவேண்டுமானால் நெருக்கடி நிலை தொடரவேண்டும்” என தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பேசினார் இந்திரா. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு சுமார் ஒண்ணரை ஆண்டுகள் கடந்த நிலையில் 1977 ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திரா மீதான மக்களின் கோபம் வாக்குப்பெட்டியில் வெளிப்பட்டது. தான் போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் அதே ராஜ் நாராயணனிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் இந்திரா. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தபோதே நெருக்கடி நிலையை ரத்து செய்த இந்திரா, தனது பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. மக்களின் கோபத்தைக் கண்ட இந்திரா நெருக்கடி நிலைப்பிரகடனத்தின் மூலம், தான் செய்த வரலாற்றுத்தவறை புரிந்துகொண்டார்.
எமர்ஜென்சியை அறிவித்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட இந்திரா, “என்னுடன் இருந்தவர்களின் பேச்சைக்கேட்டு எனது விருப்பத்துக்கு மாறாக சில முடிவுகளை எடுக்கவேண்டியதாகிவிட்டது. ஆனால் விளைவுகள் தங்களுக்கு பாதகமாகிவிட்டதும் அதற்கு காரணமானவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். எல்லா தீய விளைவுகளையும் நான் ஒருத்தியே சுமக்கவேண்டியதாகிவிட்டது” என வருந்தினார்.
இந்திராகாந்தி
எப்படியிருந்தாலும் இந்திராவின் இந்த நெருக்கடி நிலைப்பிரகடனம் அவர் வாழ்வில் ஒரு கரும்புள்ளி என்றே இன்றளவும் விமர்சிக்கிறார்கள். ஜனநாயக மாண்புகளின் மீது அபரிதமான நம்பிக்கை கொண்டிருந்த நேருவின் மகள் அதற்கு நேர் எதிராக ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி சர்வாதிகாரி என்ற பெயரைத்தான் இந்த நடவடிக்கையின் மூலம் பெறமுடிந்தது. எந்த நிலையிலும் மக்கள் அவரின் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை.
அதிர்ச்சி என்னவென்றால் இந்திரா என்ற இரும்புப்பெண்மணியை எதிர்த்து ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியின் தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் 3 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்சியை இழந்தனர். மீண்டும் இந்திராவை மன்னித்துவிட்ட வாக்காள பரமபிதாக்கள் 1980 தேர்தலில் அபரிதமான வெற்றியை அவருக்கு அளித்து மீண்டும் பிரதமராக்கி அழகு பார்த்தனர்.
எஸ்.கிருபாகரன்
நன்றி : விகடன் செய்திகள் - 25.06.2017