பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?
நம் நாட்டில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும்
பி.எஃப் பணத்தை, ஆன்லைனில் எளிதாகப் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ), ஆரக்கிள் ஓ.எஸ் மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டரை டெல்லி அருகே உள்ள துவாரகாவில் அமைத்துள்ளது. இந்த டேட்டா சென்டருடன் நாடு முழுவதிலும் உள்ள 123 இ.பி.எஃப்.ஓ அலுவலகங்களும் இணைக்கப்படும்.
இதன் மூலம் பி.எஃப் பணத்தை ஆன்லைனில் திரும்பப் பெறும் புதிய வசதி நமக்குக் கிடைத்துள்ளது.
பி.எஃப் நடைமுறை
இதற்குமுன் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறவேண்டுமெனில், வேலை பார்த்த நிறுவனத்தின் கையொப்பம் அவசியம் தேவை. பி.எஃப் பணத்தை எடுக்கும்போது படிவம் எண் 19, 10சி ஆகியவற்றைப் பூர்த்தி செய்து வேலை செய்யும் நிறுவனத்திடம் தரவேண்டும். அதன்பிறகு அந்தப் படிவம், நிறுவனத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
நிறுவனம் ஒப்புதல் அளித்தபிறகு, பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு, ஊழியருக்கு பி.எஃப் பணம் செட்டில்மென்ட் செய்யப்படும். இந்த நடைமுறையினால் பி.எஃப். பணத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
நிறுவனத்தில் ஏதோவொரு பிரச்னை காரணமாக வேலையிலிருந்து
விலகியவர்களுக்கும் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக நிறுவனத்தின்
கையொப்பம் இல்லாமல் பி.எஃப் பணத்தை எடுக்க, யு.ஏ.என் (Universal Account Number) எண் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம், வேலை பார்க்கும் நிறுவனத்தின்
கையொப்பம் இல்லாமல் ஒருவர் தனது பி.எஃப் பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை உருவானது.
யு.ஏ.என் ஆக்டிவேட் அவசியம்
தற்போது பி.எஃப் பணத்தைப் பெறுவதற்கு யு.ஏ.என் அவசியம். பி.எஃப் சந்தாதாரர்கள் அனைவரும் இந்த யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்து வைத்திருப்பது நல்லது. இந்த யு.ஏ.என் எண் பெறுவதற்கு ஆதார் எண், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வங்கிக் கணக்கு எண் ஆகியவை தேவை. இந்த எண்ணை வேலை பார்க்கும் நிறுவனத்தின்
மூலம் பெறலாம்.
வேலையில் இல்லாதவர்களும்
ஆன்லைனில் விண்ணப்பித்து,
இந்த எண்ணைப் பெற முடியும். இந்த எண் கிடைத்தபிறகு, ஊழியர்கள் அதை ஆக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு பி.எஃப் பணத்தைப் பெறுவதற்கு பி.எஃப் அலுவலகத்தில்
நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
பி.எஃப் பணத்தை எடுப்பதற்கான விண்ணப்பத்தைப்
பூர்த்தி செய்து அதனுடன் வங்கிக் கணக்கு விவரம், ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதன்பிறகு பி.எஃப் செட்டில்மென்ட்
பணம் நேரடியாக ஊழியரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது இதுவரை பி.எஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையாக இருந்தது.
ஆன்லைன் மூலம் பி.எஃப் பணம்
இப்போது பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எளிதாகப் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் சலில் சங்கர் மற்றும் உயர் அதிகாரி சங்கரிடம் கேட்டோம்.
``பி.எஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கும் நடைமுறைகளை பி.எஃப் அமைப்பு மிகவும் எளிமைப் படுத்தியுள்ளது. பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்து பெற்றுக் கொள்ளலாம். இது ஜூன் முதல் வாரத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.
பி.எஃப் சந்தாதாரர்களுக்கு யு.ஏ.என் எண் இருந்து வங்கிக் கணக்கு, மொபைல் நம்பர் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால், பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் பணத்தை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.
⧭ இந்தப் புதிய வசதியில் சந்தாதாரர்களின் பி.எஃப் கணக்குடன் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் யு.ஏ.என் எண்ணை அவசியம் இணைத்திருக்க வேண்டும்.
⧭ அப்படி இணைத்திருந்தால், பி.எஃப் இணையதளத்தில் பணத்தை எடுப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
⧭ விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பி.எஃப் பணம், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படும்.
⧭ பி.எஃப் பணத்தை ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வதற்குமுன், உங்களுக்கு யு.ஏ.என் எண் அவசியம் இருக்க வேண்டும்.
⧭ யு.ஏ.என் எண்ணை ஆக்டிவேட் செய்யும்போது எந்தத் தொலைபேசி எண்ணை வழங்கினீர்களோ, அந்த எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
⧭ இதுதவிர, உங்களுடைய பி.எஃப் கணக்கின் கே.ஒய்.சி ஆவணத்தில் ஆதார் விவரத்தை இணைத்திருக்க வேண்டும்.
⧭ உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்திருந்தால், பி.எஃப் பணத்தை ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்துப் பெறலாம்” என்றனர்.
பி.எஃப்- ஐ பொறுத்தவரை, குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு நீங்கள் இ.பி.எஃப்.ஓ உறுப்பினராக இல்லாவிட்டால், உங்கள் பான் கார்டு எண்ணைச் சமர்பிக்க வேண்டும். தொடர்ந்து 60 நாள்களுக்கு மேல் வேலையில்லாமல் இருந்தால் பி.எஃப் பணத்தை எடுக்க முடியும். ஆனால், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும்போது பணத்தை எடுக்க முடியாது. நிரந்தரமாக வெளிநாட்டுக்குச் செல்லும்போது, 55 வயது முடிந்து நிரந்தரப் பணி ஓய்வு பெறுபவர் எந்தவிதமான காத்திருப்புக் காலமும் இல்லாமல் பி.எஃப் பணத்தைத் திரும்பப் பெறமுடியும்.
இந்தியாவில் பி.எஃப் சந்தாதாரர்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட நான்கு கோடி பேர் பங்களிக்கின்றனர். இதில் 1.72 கோடி பேர் மட்டுமே ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை யு.ஏ.என் எண்ணுடன் இணைத்துள்ளனர்.
பி.எஃப். சந்தாதாரர்கள் இந்த வசதியினைப் பயன்படுத்தி நன்மை பெறலாமே!
சோ.கார்த்திகேயன்
நன்றி : நாணயம் விகடன் - 25.06.2017