disalbe Right click

Wednesday, June 28, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 6

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 6
அறிவோம் ஜிஎஸ்டி: மின்னணு ரசீதுக்கு கால அவகாசம் உள்ளதா?
ஜிஎஸ்டி முறையால் வரிதாரர்கள் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்?
தற்போது உற்பத்தி வரி வரம்பு ரூ.1.5 கோடி யாகவும் சேவை வரி வரம்பு ரூ.10 லட்சமாகவும், மதிப்புக்கூட்டப்பட்ட வரி வரம்பு தமிழ்நாட்டில் ரூ.10 லட்சமாகவும் உள்ளது. ஜிஎஸ்டி முறையில் இந்த வரிகள் உள்ளடக்கப்பட்டதாலும் வரம்பு ரூ.20 லட்சமாக உள்ளதாலும் ஏராளமானோர் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொருள் மற்றும் சேவைக்கான உள்ளீட்டு வரி வசதியை பெறுவதற்கும் ஜிஎஸ்டி பதிவு அவசியம். இத்தகைய காரணங்களால் நிச்சயம் வரிதாரர் எண்ணிக்கை அதிகரித்து அரசுக்கு வருவாய் அதிகரிக்கும்.
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் அமல் செய்வதால் பாதிப்பு எப்படி இருக்கும்?
இந்தியா போன்ற நாடுகள் ஒரு வரி விதிப்புக்குக் கீழ் வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு முன்பு மாறிய நாடுகள் கூட, துவக்கத்தில் பணவீக்கத்தை சந்தித்தன. அதாவது, வாங்கும் பொருட்களின் விலை அதிகரித்தது. ஒரு வரியின் கீழ் வருவதால், தொடர்ந்து கண்காணித்து, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு நிலைமை சரியாகும். ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் கொண்டு செல்வது எளிதாகும். தினப்படி விற்பனை பொருட்களின் விலை குறையும்.
ஜிஎஸ்டி-யில் ரீஃபண்டு எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?
பொதுவாக ரீஃபண்டு 3 மாதத்திற்குள் திருப்பித் தரப்பட வேண்டும். அவ்வாறு 3 மாதத்திற்கு மேல் ஆகும் பட்சத்தில் ரீஃபண்டு வட்டியுடன் திருப்பித் தரப்படும்.
ஜிஎஸ்டி உலக சந்தைக்கு எப்படி தயார் செய்கிறது?
சிறு குறு அளவிலான சப்ளையர்கள் ரூ. 20 லட்சம் வரையிலான வரம்பிற்குள் அதே நிலையில் தொடருவார்கள்.
இது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறைக்கு இடையே உள்ள விலை இடைவெளியை குறைக்கும்.
வரி தடைகளை நீக்கி இலகுவான வரவு ஏற்படுத்துவதால் பொது சந்தையில் இந்திய பொருளாதாரத்தை உற்பத்திச் சங்கிலியின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் வழிவகுக்கும்.
வியாபாரத்தை எளிதாக்க வழிவகுப்பது - ஒற்றை ஜிஎஸ்டி-க்குள்ளே இருக்கும் பல வரிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை கணிசமாக வரி இணக்கம் மற்றும் பரிவர்த்தனை செலவின செலவுகளைக் குறைக்கும்.
இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதற்கான, நிலையான, வெளிப்படையான மற்றும் முன்கூட்டிய வரி விதிப்பானது குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
மின்னணு ரசீது உருவாக்கப்பட்ட பிறகு சரக்குகள் பயணிக்கப்படவில்லை எனில் என்ன செய்வது?
மின்னணு ரசீது உருவாக்கப்பட்ட பிறகு சரக்குகள் பயணிக்கப்படவில்லை என்றால் அதனை ரத்து செய்து அதற்கான காரணத்தை குறிப்பிடவேண்டும்.
மின்னணு ரசீதுக்கு ஏதேனும் கால அவகாசம் உள்ளதா?
சரக்குகள் பயணிக்கும் தூரத்தைக் கொண்டு அதற்கான கால அவகாசத்துக்கு இந்த ரசீது செல்லுபடியாகும். இது தேதி மற்றும் நேரத்தினைப் பொறுத்து கணக்கிடப்படும். உதாரணமாக ஒரு சரக்கு பயணிக்கும் தூரம் 100 கி.மீ எனில் அதற்கான கால அவகாசம் 1 நாளாகும். இதற்கான அட்டவணை ஜிஎஸ்டி வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ரேடியோ அதிர்வெண் சாதனம் (RFID- Radio frequency identification) என்றால் என்ன?
ரேடியோ அதிர்வெண் அடையாளம் (RFID) என்பது ஒரு பொருளின் இயக்கத்தை கண்காணிக்கும் சாதனம். ஒவ்வொரு வகையைச் சேர்ந்த போக்குவரத்துக்கும் தனிப்பட்ட ரேடியோ அதிர்வு சாதனத்தைப் பெற வேண்டும். அத்தகைய ரேடியோ அதிர்வு சாதனத்தினைப் பரிமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு பொருட்களின் இயக்கத்துக்கு முன்னர் ரேடியோ அதிர்வு சாதனமும் மின்னணு வழி ரசீதும் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் பொருட்களின் இயக்கத்தை அறிய முடியும். ஆனால் நடைமுறையில் ஒரு பெரிய அதிகாரத்தில் உள்ள ஆணையர் ஒவ்வொரு முறையும் ரேடியோ அதிர்வு சாதனத்தினைப் பெற்று அதனை உபயோகிப்பது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விலையில்லா பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி
விலையுள்ள பொருட்களுக்குத் தான் ஜி.எஸ்.டி என்பதில்லை, விலையில்லாப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். இது பிரிவு 1 -ல் அரசு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. நிரந்தர மாற்றம் அல்லது வியாபார சொத்துகள் எங்கு உள்ளீட்டு வரவு எடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த சொத்துக்கள் (permanent transfer or disposition of business asset), சரக்கு மற்றும் சேவைகள் விநியோகம் செய்யும் போது (related party அல்லது district person), ஏஜென்ட்டுக்கு சப்ளை செய்தால் அல்லது சப்ளை ஏஜென்ட்டால் செய்யப்பட்டால், சேவைகளை இறக்குமதி செய்யும் போது என இவற்றுக்கெல்லாம் ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் தனது தொழிலில் பயன்பாட்டுக்காக கணினியை வாங்குகிறார். கணினியின் மூலமாக வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து வைக்கிறார். எனவே அது அவருடைய மூலதனச் சொத்தாகவே கருதப்படும். அதற்கான உள்ளீட்டு வரியை ஏற்கெனவே அவர் எடுத்திருப்பார். இந்த சொத்தை அவர் வெளியேற்றம் அல்லது மாற்றம் செய்யும் போது ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். மேலும் ஒரு பொருளைத் தானமாகக் கொடுத்தாலும் தானமாகக் கொடுக்கும் நபர் அதற்கான ஜி.எஸ்.டி.யை செலுத்த வேண்டியது அவசியம்.
இறக்குமதி செய்யப்படும் போது ஜிஎஸ்டி-ன் தாக்கம் என்ன?
தற்போது இறக்குமதியின் போது சுங்க வரி, கூடுதல் மாற்றுவரி(CVD), மற்றும் சிறப்பு கூடுதல் வரி (SAD) வசூலிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் போது வசூலிக்கப்படும் கூடுதல் மாற்று வரி (Additional duty CVD) மற்றும் சிறப்பு கூடுதல் வரிக்கு (Special additional duty SAD) மாற்றாக ஐ.ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உள்ளீட்டு வரி வரவு எடுத்துக் கொள்ளலாம்.
மின்னணு வர்த்தகம் செய்பவர்கள் பதிவு முறை என்ன?
ஆன்லைன் மூலமாக (இணையதளங்கள், செயலிகள்) மூலமாக நடக்கும் வர்த்தகங்களையே மின் வர்த்தகம் (இ-காமர்ஸ்) என்கிறோம். இன்றைய காலகட்டத்தில் மின் வர்த்தகத்துக்கு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று மிகப் பெரிய சந்தை வாய்ப்பினைத் தன்வசம் வைத்துள்ளது. இந்த மின் வர்த்தகத்தினை வலைதளத்தின் மூலமாக செயல்படுத்துபவர் ஆபரேட்டர். உதாரணமாக அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்களைச் சொல்லலாம். இது மாதிரியான வலைதளங்கள் மாறிவரும் நுகர்வுச் சந்தைக்கு ஏற்ப வியாபாரம் பெருக உதவியாக இருக்கிறது. மேலும் இந்த வலைதளங்களில் வியாபாரம் செய்யும் விநியோகஸ்தர்களுக்கும் கட்டாய பதிவிற்கு உட்படுவார்கள். மின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரி விலக்கு கிடையாது.
இந்த வலைதளத்தினை நடத்தும் ஆபரேட்டர்கள் என்பவர் தகவல் தொடர்பு சாதனம் மூலம் ஒரு சாத்தியமிக்க வாடிக்கையாளரை ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பெயரின் மூலமாக தொடர்புகொண்டு சேவை அளிப்பார். உதாரணமாக ஒலா கேப் (OLA CABS) நடத்துபவரைச் சொல்லலாம். இவர்களுக்கு என்ன விநியோக மதிப்பு இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்.
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 29.06.2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 5

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 5
அறிவோம் ஜிஎஸ்டி: விற்பனையில்லாத காலத்திலும் வரித்தாக்கல் செய்ய வேண்டுமா?
மின்னணு வரி ரசீது உபயோகப்படுத்தப் படுவதால் சோதனைச் சாவடி (செக் போஸ்ட்) சோதனை குறையும் என்பது சாத்தியமா?
50,000 ரூபாய்க்கு மேல் சரக்கு ஏற்றிச் செல்லப்படும் வாகனங்கள் கணிணி மூலம் மின்னணு-வழி (E-way) பில் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் இப்போது உள்ள மாநில எல்லைகளில் சோதனை சாவடி (Check Post) கதவுகள் இனி இருக்காது. ஆனால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பறக்கும் படை, வாகனங்களைக் கண்காணிக்க வாய்ப்புகள் உண்டு. ஜி.பி.எஸ் மூலமாக கண்காணிக்கவும் செய்வார்கள்.
தற்போது அமெரிக்காவில் சுமார் 740 கிலோமீட்டர் வரை ஒரு லாரி பயணிக்க முடிகிறது. ஆனால் இந்தியாவில் செக்போஸ்ட் காரணமாக ஒரு லாரி நாளொன்றுக்கு 230 கிலோமீட்டர் வரைதான் பயணிக்க முடியும் என்று ஒர் ஆய்வறிக்கை சொல்கின்றது. இனி சோதனைச் சாவடி முறை நீங்குவதால் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் சாலை வசதிகளும் மேம்படுத்தப்படும் போது சோதனைச் சாவடி முறை நீக்கப்படுவதும் உற்பத்தி அதிகரிக்க கைக்கொடுக்கும். மேலும் அழுகக்கூடிய பொருட்களை தேங்காமல் தடுக்கப்படுவதால் உற்பத்தியும் அதிகரிக்கும்.
தொகுப்பு வரித்திட்டத்தில் வணிகம் செய்யும் வர்த்தகர் உள்ளீட்டு வரி எடுக்கும் நோக்கத்திற்காக சாதாரண ஜிஎஸ்டி வரிமுறைக்கு தனது வர்த்தகத்தை மாற்ற இயலுமா? ஆம் எனில் வழிமுறைகள் என்னென்ன?
வர்த்தகர் உள்ளீட்டு வரி எடுக்கும் நோக்கத்திற்காக தொகுப்பு வரித் திட்டத்தில் இருந்து சாதாரண வரிமுறைக்கு தனது வணிகத்தை மாற்றிக் கொள்ளலாம். இருப்பினும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தொகுப்பு வரித்திட்டத்தை உபயோகிக்க முடியாது.
தொகுப்பு வரித் திட்டத்திற்கு மொத்த விற்பனையை கணக்கிடும் வழிமுறை என்ன?
ஒட்டுமொத்த விற்பனை என்பது அனைத்து விநியோகங்களின் மதிப்பு (வரி விதிப்புக்குட்பட்ட மற்றும் உட்படாத விநியோகங்கள் + விலக்கு அளிக்கப்பட்ட விநியோகங்கள்+ஏற்றுமதிகள்). அதில் CGST, SGST, IGST-ன் கீழ் செலுத்தப்பட்ட வரிகள்+உள்ளே வந்த விநியோகத்தின் மதிப்பு+ அதே நிரந்தர கணக்கு எண் உள்ள நபரின் நேர்மாறான வரி விதிப்புக்குள்ளான விநியோகங்களின் மதிப்பு சேராது.
நான்கு வேறுவேறு தொழில் புரியும் வர்த்தகர் ஒரே நிரந்தர எண்ணை பயன்படுத்தி தொகுப்பு முறை மற்றும் சாதாரண ஜிஎஸ்டி வரிமுறை என இரண்டையும் பயன்படுத்தலாமா?
ஒரே நிரந்தர எண்ணை பயன்படுத்தி தொகுப்பு முறை மற்றும் சாதரண ஜிஎஸ்டி இரண்டையும் பயன்படுத்த முடியாது. ஒரு நிரந்தர எண் மூலம் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.
இயற்கை காரணங்களால் பொருட்கள் விநியோகத்திற்கு முன்பாக சேதமடைந்தால் அவருக்கு வரியிலிருந்து தள்ளுபடி அளிக்கப்படுமா?
வரி செலுத்தப்பட வேண்டியிருந்தால் மட்டுமே வரி தள்ளுபடி அளிக்கப்படும். அதாவது வரி செலுத்த வேண்டிய நிகழ்வு ஏற்பட வேண்டும். விநியோகத்திற்கு முன்பாக சேதமடைந்தால் வரி செலுத்த வேண்டிய நிகழ்வு ஏற்படாது. ஆகையால் தள்ளுபடி கிடையாது.
சரக்கு குறியீட்டு எண் (HSN) ஏன் அவசியமாகிறது?
எந்தப் பொருளுக்கு என்ன வரி என்பதை எளிதில் கண்டுபிடிக்கவும், செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதனைக் கண்டறியவும் கொண்டு வந்துள்ள நடைமுறையே சரக்கு குறியீட்டு எண் (HSN). ஜிஎஸ்டிக்காக ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முதல் எட்டு இலக்கு எண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சில பொருளுக்கு இரண்டு இலக்க எண்களும், பி2பி (B2B) தொழில்களுக்கு நான்கு இலக்கு எண்கள் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் அனைத்து தகவல்களும் (data base) மிகச் சரியாக இருக்கும். HSN குறியீடு மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் தனித்துவம் அடையாளம் காணப்படும்.
ரூ.1.5 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை உற்பத்திக்கு மேல் இரண்டு இலக்க சரக்கு குறியீட்டு எண் குறிப்பிட வேண்டும். ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்திக்கு 4 இலக்க சரக்கு குறியீட்டு எண் குறிப்பிட வேண்டும். இது போகப்போக எட்டு எண்களாக அதிகரிக்கப்படும். ஆரம்பத்தில் நடை முறையை எளிதாக்கவே இரண்டு இலக்க எண்களில் இருந்து துவக்கப்படுகிறது. மத்திய கலால் வரி செலுத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே இந்த நடைமுறை உள்ளது. பிற வர்த்தகர்களுக்கு இது புதிதாக இருக்கும்.
பதிவு பெற்ற நபர் விற்பனையில்லா காலகட்டங்களில் வரித்தாக்கல் செய்ய வேண்டுமா? ஏன்?
விற்பனையில்லா காலத்திலும் பதிவு பெற்ற நபர் வரித்தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். தொடர்ந்து 6 வரித் தாக்கல் செய்யாவிட்டால் ஜிஎஸ்டி பதிவு எண் ரத்து செய்யப்படும். உதாரணமாக தொகுப்பு முறையில் வணிகம் செய்பவர் காலாண்டு வரித்தாக்கல் செய்ய வேண்டும். தொடர்ந்து 6 காலாண்டுகளுக்கு செய்யாவிடில் பதிவு ரத்தாகிவிடும்.
ஒருவர் சப்ளைக்கு நேர்மாறான வரியாக (Reverse Charge Mechanism) செலுத்தும் வரியை மொத்த விற்பனையில் சேர்த்து கொள்ளலாமா? எப்படி?
நேர்மாறான வரியை செலுத்தும் வரியை மொத்த விற்பனையில் சேர்த்து கொள்ள முடியாது.
ஜிஎஸ்டி-ன் கீழ் ஏற்றுமதி எவ்வாறு கருதப்படும்?
ஏற்றுமதி செய்யப்படும் விநியோகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பூஜ்ய விகிதங்களாக கருதப்படும். சரக்குகள் அல்லது சேவைகள் ஏற்றுமதிக்கு வரி செலுத்த வேண்டும். இருந்த போதிலும் உள்ளீட்டு வரி வரவு உள்ளது. இதை ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது அல்லது வெளியீட்டு வரி இருந்தால் அதில் சமன் செய்து கொள்ளலாம்.
யாருக்கெல்லாம் இந்த தொகுப்புமுறை திட்டம் பொருந்தாது?
உணவு விடுதி தவிர எந்த சேவைக்கும் இந்த திட்டம் கிடையாது.
இரு வேறு மாநிலங்களுக்குள்ளாக விற்பனை செய்யும் போது இந்தத் திட்டத்தினை எடுத்துக் கொள்ள முடியாது.
மின்னணு வர்த்தகம் மூலம் பொருட்களை வழங்குபவர்கள் (உதாரணம் பிளிப்கார்ட், அமேசான் போன்று மின்னணு வர்த்தகம் செய்பவர்கள்).
சில குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள்
சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, யூடிஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரிக்குட்படாத பொருட்களை வழங்குபவர்கள்.
தொடரும்..
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.06.2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 4

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 4
அறிவோம் ஜிஎஸ்டி: ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன பயன்?
தொழில்நுட்ப வசதி இல்லாத சிறு விற்பனையாளர்கள் வரித் தாக்கல் செய்வது எப்படி?
வரித் தாக்கல் செய்வதற்கு நேரடியாக தொழில்நுட்ப வசதி இல்லையென்றாலும், அவர்களுடைய தேவைகளுக்கேற்ப பிறரது உதவுடன் வருமான வரி தாக்கல் தயாரித்தல் (TRPS) இணையதளத்தை பயன்படுத்தலாம். ஒரு வரி செலுத்தும் நபர் TRPS இணையதளத்தில் உள்ள படிவங்களில் தங்களது தகவல்களை உள்ளீடு செய்தால் வரித் தாக்கல் விவரங்களை தயார் செய்துவிடலாம். TRPS ல் தயார் செய்யப்பட்ட விவரங்களில் தவறுகள் இருந்தால், அதற்கான பொறுப்பு வரி செலுத்துபவரையே சேரும்.
இதுதவிர இதற்காக பதிவு பெற்ற உதவி மையங்களிலும் (Facilitation Centres) தாக்கல் செய்யலாம். இந்த உதவி மையங்களில் வரி செலுத்துகை படிவங்களை வரி செலுத்துபவர் களுக்கு அளிப்பார்கள். அதை பூர்த்தி செய்தபின் அடையாளக் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தரவுகளை பதிவேற்றம் செய்வார்கள். பதிவுக்கு பிறகு இவர்கள் தரும் ஆவணங்களை வாடிக்கையாளர் பத்திரப்படுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி பதிவு சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள முடியுமா?
விண்ணப்பம் அளித்த தேதியிலிருந்து 15 வேலை நாட்களுக்குள் தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் சில குறிப்பிட்ட முக்கியமான தகவல்களை திருத்தம் செய்ய அதற்குரிய அதிகாரிக்கு மட்டுமே அனுமதியுண்டு. எனினும் ஜிஎஸ்டி பதிவிற்கான இணையதளம் மூலம் பதிவு சான்றிதழின் இதர தகவல்களை திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லாதவர்களும் பதிவு செய்ய வேண்டுமா?
ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லாத நபர்கள் பதிவு செய்வது கட்டாயமில்லை என்றாலும் அவசியமானது. தாமாகவே முன்வந்து பதிவு செய்வதன் மூலம் சட்ட முறைக்குள் வருபவர் ஆகிறார். வரி செலுத்தும் நபருக்குரிய சட்ட விதிமுறைகள் இவருக்கும் பொருந்தும். எதிர் காலத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.
ஜிஎஸ்டி சட்டத்தின்படி யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்?
வரி செலுத்துவதற்குட்பட்ட சரக்கு, சேவைகளை விற்பவர்கள் அனை வரும் பதிவு செய்ய வேண்டும். அதாவது, ஜிஎஸ்டி சட்டப்படி சரக்கு வழங்குதல் / அல்லது சேவைகள் வரி விதிக்கப்பட வேண்டியவை என வரையறுக்கப்படுகிறது. ஒருவரின் ஆண்டு மொத்த பரிவர்த்தனை ரூ. 20 லட்சத்துக்கு மேற்படும்பட்சத்தில் தானாக முன்வந்து பதிவு செய்ய வேண்டும். தவிர இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 279A(4)(g)யின் படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் வர்த்தகம் செய்பவர்களின் ஆண்டு பரிவர்த்தனை ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்டாலும் பதிவு செய்ய வேண்டும்.
யாரெல்லாம் பதிவு செய்ய தேவையில்லை?
தான் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்யும் விவசாயி பதிவு செய்ய வேண்டியதில்லை. தவிர ஜிஎஸ்டி சட்டத்தின்படி வரியில்லாத பொருட்களை அல்லது மொத்தமும் வரி விலக்கு அளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அனைத்து வர்த்தகத்தையும் பதிவின்கீழ் கொண்டு வருவதை ஜிஎஸ்டி அறிவுறுத்துகிறது.
பல மாநிலங்களில் தொழில் செய்பவர் ஒரே ஒரு இடத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்து கொள்ளலாமா?
ஜிஎஸ்டி சட்டம் இதை அனுமதிக்கவில்லை. சிஜிஎஸ்டி / எஸ்ஜிஎஸ்டி சட்டப்படி ஒரு நபர் பல மாநிலங்களில் வர்த்தகம் செய்பவராக இருந்தால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும். அவர் எந்தெந்த மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறாரோ அந்தந்த இடத்தில் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத வர்த்தகர் வரியை வசூலிக்க முடியுமா? இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியுமா?
ஜிஎஸ்டி பதிவு பெறாத வர்த்தகர் அவருடைய வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியை வசூலிக்க முடியாது. அதுபோல ஜிஎஸ்டிக்கு செலுத்திய இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை பெறவும் உரிமை இல்லை.
ஜிஎஸ்டியால் வர்த்தகருக்கு என்ன வகையான பயன் கிடைக்கும்?
சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு முறைப்படுத்தப்படுகிறது. வரி மேல் வரி விதிப்பு தவிர்க்கப்படுகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் முறையாக கணக்கில் காட்டப்பட்டு வரிகள் செலுத்தப்படுகின்றன.
சரக்கு அல்லது சேவைகள் வழங்குபவர் சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறார். உள்ளீட்டு சரக்கு / சேவைகளுக்கான வரியை, சரக்கு / சேவைகள் வழங்கலுக்கான வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். சரக்கு வாங்கியவர்களிடமிருந்து சட்டப்படி வரியை வாங்கலாம். ஜிஎஸ்டி சட்டப்படி அறிவிக்கப்படும் பலன்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
பெறுநர் சரக்குகளை வாங்காமல் திருப்பி அனுப்பினால் என்ன செய்வது?
பெறுநர் சரக்கை திருப்பி அனுப்பும்பட்சத்தில், சரக்கை அனுப்பிய நபர் அந்த சரக்குகளின் விவரங்கள் அடங்கிய கடன் குறிப்பை (credit note) அவருக்கு அனுப்ப வேண்டும். இந்த கடன் குறிப்பை (credit note) வழங்கிய மாதத்தின் வருமான வரி தாக்கலில் இந்த விவரங்களை அனுப்புநர் சேர்க்க வேண்டும்.
பெறுநர் தன்னுடைய வரி தாக்கல் கணக்கிலோ அல்லது இன்புட் டாக்ஸ் கிரெடிட்டை திரும்பப் பெறுவதற்கான ஆவணங்களில் இதை குறிப்பிடுவார். பெறுநருக்கும், அனுப்புநருக்கு மான இந்த கடன் குறிப்பு (credit note) விவரங்கள் ஒப்பிட்டு பார்க்கப்படும். இந்த தகவல்கள் இரு தரப்பினருக்கும் தெரிவிக்கப்படும்.
சரக்குகளை போக்குவரத்து மூலமாக அனுப்பும்போது, அந்த போக்குவரத்து தனி சேவையாக கணக்கிடப்பட்டால் அதற்கு யார் வரி செலுத்துவது?
ஒரே மாநிலத்துள்ளான அனுப்புகை என்றால் அந்த சரக்கை பெறுபவர் அல்லது அந்த நபரின் இடம்தான் பொருள் வழங்கும் இடமாகக் கருதப் படும். ஒருவேளை அவர் பதிவு செய்யாம லிருந்தால் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு எங்கே கொடுக்கப்படுகிறதோ அந்த இடம் பொருள் வழங்கல் இடமாகக் கருதப்படும்.
அதேபோல சர்வதேச பொருள் போக்குவரத்து சேவைகளைத் தவிர, உள்நாட்டு போக்குவரத்து சேவைகளைப் பொறுத்தவரையில் அந்த பொருள் சேரும் இடம்தான் சேவை வழங்கும் இடமாகக் கணக்கிடப்படும்.
கூரியர் மூலமான சேவை எனில் பொருட்கள், கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் இடம்தான் பொருள் / சேவை வழங்கும் இடமாகக் கணக் கிடப்படும். அதேநேரத்தில் இப்படி கொடுக்கும் போது, அது சேர வேண்டிய இடம், சிறு அளவில் இந்தியாவில் இருந்தாலும் வழங்கல் இந்தியாவில் நடந்ததாகக் கருதப்படும்.
தொடரும்..
ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 27.06.2017
ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 3
அறிவோம் ஜிஎஸ்டி: ரசீது இல்லாமல் பொருட்களை அனுப்பலாமா?
ஜாப் ஒர்க் மேற்கொள்ள சரக்குகளை ஒப்படைக்கும்போது அதற்கு உரிமையாளர் யார் ?
வரி செலுத்தும் நபரால் அனுப்பப்படும் சரக்குகள் மீது கூடுதலாக மேற்கொள்ளப்படும் பணிகள் ஜாப் ஒர்க் என்று ஜிஎஸ்டி வரையறுக்கிறது. அதாவது வேறொருவரின் சரக்குகளைக் கையாள அல்லது பிராசஸ் செய்வதற்காக வாங்கப்படுகிறது என்று பொருள் தருகிறது. ஜாப் ஒர்க் வாங்குபவர் பணியாளர் என்றும், பணி அளிப்பவர் சரக்குகளுக்குச் சொந்தக்காரர் என்றும் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் தற்போது இப்படி ஒப்படைக்கப்பட்டால் உற்பத்தி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் பணி அளிப்பவர்தான் சரக்குகளின் உரிமையாளராக இருப்பார்.
ஜாப் ஒர்க் நிறுவனங்களும் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டுமா?
ஜாப் ஒர்க் என்பதும் சேவையின் கீழ் வருவதால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். வேலைப் பணி பெற்றவர் அல்லது நிறுவனத்தின் லாப வரம்பு, வரி விலக்கு வரம்புக்குள் இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும்.
ஜாப் ஒர்க் இடத்திலிருந்து சரக்குகளை திரும்ப எடுக்கவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு?
ஜாப் ஒர்க் இடத்திலிருந்து குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சரக்குகள் திரும்பப் பெறப்படாவிட்டால் பணி அளிப்பவர் சரக்குகளை வெளியே அனுப்பிய அதே நாளில் அவர் விற்பனை செய்ததாக கணக்கிடப்படும். அல்லது ஜாப் ஒர்க் இடத்துக்கு அனுப்பி, அவரால் பெறப்பட்ட தேதியில் விற்பனை செய்யப்பட்டதாக கணக்கிடப்படும்.
தற்போது 14 சதவீத வரி விதிப்பில் உள்ள ஒரு பொருள் ஜிஎஸ்டியில் 18 சதவீதமாகிறது என்று வைத்துக் கொள்வோம். ஜூலை மாதத்தில் இது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதற்கான பணத்தை முன்பணமாக ஏற்கெனவே வாங்கியிருந்தால் எத்தனை சதவீத வரி கணக்கிடப்படும்?
விற்பனைச் சரக்கும் அதற்கான ரசீதும் ஜூலை 01ம் தேதிக்கு பிறகே வழங்கப்படும் என்றால் புதிய வரி விகிதமான 18 சதவீதத்தின் அடிப்படையில் விற்பனை கணக்கு கணக்கிடப்பட வேண்டும்.
ரசீது இல்லாமல் பொருட்களை அனுப்பலாமா? அல்லது எத்தனை நாட்களில் ரசீது அளிக்க வேண்டும்?
ஜிஎஸ்டி சட்டப்படி ரசீதுகள் இல்லாமல் பொருளை அனுப்பக் கூடாது. வரி செலுத்தும் நபர் பொருட்களின் விவரம், அளவு, அதன் மதிப்பு மற்றும் அந்த மதிப்புக்கு செலுத்த வேண்டிய வரி என எல்லாவற்றையும் கணக்கிட்டு உடனடியாக ரசீதுகள் அளிக்க வேண்டும். பொருட்களை அனுப்பும்போது உடனடியாகவோ அல்லது டெலிவரி பெறுபவருக்கு பொருட்கள் கிடைக்கும்போதோ ரசீது அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக அளித்துவரும் சேவைகளுக்கு ரசீதும் உடனடியாக அளிக்க வேண்டுமா?
சேவைகள் தொடர்ச்சியாக அளிக்கும் பட்சத்தில், அதற்கான ஒப்பந்தத்தில் பணம் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே பணத்தை தரும் தேதிக்கு முன்னரோ அல்லது பிறகோ ரசீது வழங்க வேண்டும். ஒப்பந்தத்தில் பணம் பெறுவதற்கான தேதி குறிப்பிடவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் சேவை அளித்த பின்னர் வழங்கலாம். அல்லது பணம் பெறும் முன்னர் அல்லது பெற்ற பிறகு அளிக்கலாம். ஆனால் சேவைகளை அளிப்பவர் தனக்கு பணம் வருகிறதோ இல்லையோ இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் ரசீதுகளை வழங்க வேண்டும்.
வரித் தாக்கலுக்கு அளிக்கும் விவரங்கள் பொருந்தாமல் இருந்தால் என்ன செய்வது?
அளித்துள்ள பணத்துக்கு ஈடாக சரக்குகளின் மதிப்பு குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ அது குறித்து அதை விற்பனை செய்தவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது அவரது மாதாந்திர வரிக் கணக்கில் திருத்தப்பட வேண்டும். விற்பனையாளர் அளிக்க வேண்டிய நிலை இருந்தால், மாதத்தின் அடுத்த மாதம் அவர் செலுத்த வேண்டிய தொகையுடன் இது கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படும். அவரது மாதாந்திர நிலுவைத் தொகையுடன் சேர்த்து இந்த தொகைக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும். ஆனால் வர்த்தகத்தை முறையாக மேற்கொள்ளும்பட்சத்தில் விவரங்கள் பொருந்தாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
வரி செலுத்தாத மூன்றாவது நபருக்கு சரக்குகளை அனுப்பினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் யாருக்கு கிடைக்கும்?
வரி செலுத்தும் நபர் கேட்டுக் கொண்டதன் பேரில் மூன்றாவது நபருக்கு சரக்குகள் அனுப்பினால், பதிவு செய்துள்ள நபர் அல்லது நிறுவனம் பெற்றதாகவே எடுத்துக் கொள்ளப்படும். அல்லது யாருக்காக மூன்றாவது நபருக்கு சரக்கு அளிக்கப்பட்டதோ அவரது பெயரில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்கும்.
தள்ளுபடி சரக்குகளுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்குமா?
தள்ளுபடி சரக்குகளின் மீது இன்புட் டாக்ஸ் கிரெடிட் கேட்க முடியாது. தவிர பரிசாக கிடைத்த அல்லது இலவச மாதிரி பொருட்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்காது. முறையாக வாங்கப்பட்ட சரக்குகள் பல்வேறு காரணங்களால் அழிந்து அல்லது தொலைந்து போனாலும் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியாது.
நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக சரக்குகள் வாங்கினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்குமா?
அசையாச் சொத்துகளை கட்டுவதற்கு சரக்குகள் வாங்கினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்காது. ஆனால் பொருத்தப்பட்ட கருவிகள், இயந்திரம் வாங்குகிற பட்சத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுக்கலாம். நிலத்துக்கும் கட்டிடத்துக்கும் பெற முடியாது.
வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியுமா?
ஜிஎஸ்டியில் தனிப்பட்ட ஒவ்வொரு பரிவர்த் தனைக்கும் வரி தாக்கல் செய்யப்படுகிறது என்பதால், திருத்தப்பட்ட வரி தாக்கலுக்கு தேவை ஏற்படாது. ஆனால் பற்று/வரவு குறித்த விவரங்கள் மாற்றப்பட வேண்டும் என்றால் வரி தாக்கலிலும் மாற்றம் தேவைப்படும். ஆனால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வரி தாக்கலில் திருத்தங்கள் செய்வதற்கு பதிலாக மாற்றப்பட வேண்டிய விவரங்களை மட்டும் மாற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
தொடரும்..
- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 25.06.2017

Tuesday, June 27, 2017

15: நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட!

15: நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட!

எதையும் முறைப்படி செய்வது நல்லது. முதலில் எப்படியாவது தொழில் தொடங்கினால் போதும் என்று இருக்கும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோபாவம் மேலோங்கி நிற்கும். குறிப்பாக இரண்டு விஷயங்களில் தவறு செய்ய வாய்ப்புகள் உள்ளன.
தடபுடலான தொடக்கம்
ஒன்று உங்கள் தொழில் பற்றிய சட்ட திட்டங்களைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது. அதற்கான ஆவணங்களைச் சரியாகப் பெறாமல் இருப்பது. இப்போதைக்கு இது போதும் என முடிவெடுத்துச் செயல்பட ஆரம்பிக்கும்போது திடீரென ஒரு நோட்டீஸ் வந்து உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
நண்பர் ஒருவர் சென்னையின் மிக நவ நாகரிகப் பகுதி ஒன்றில் ஒரு குளிர்பானக் கடை தொடங்கத் திட்டமிட்டார். ஒரு முக்கியச் சாலையில், ஒரு வீட்டின் முன் பகுதியை வாடகைக்கு எடுத்தார். வீட்டுக்காரருக்கும் அரசாங்கம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்கானவர். பல ஆண்டுகளாக அங்கு இருப்பதால் மிகவும் பிரபலமானவரும்கூட. நல்ல வாடகை, அதிகச் சிக்கல் இல்லாத தொழில், படித்தவர் ஆரம்பிக்கிறார் என்று முழு ஆதரவு தந்தார். நண்பரும் மொத்த முதலீடும் செய்தார். இதற்காக வீட்டை மாற்றி, கடை அருகிலேயே புது வீடு புகுந்தார். தடபுடலாக நண்பர்களை அழைத்துத் தொழில் தொடங்கினார்.
இரண்டுமே கடினம்தான்!
சரியாக மூன்றாம் நாள் மாநகராட்சி ஆட்கள் வந்தார்கள். குடும்பங்கள் வாழும் பகுதியில் கடை நடத்த ஆட்சேபம் தெரிவித்து அங்கிருந்த குடியிருப்போர் சங்கம் புகார் தெரிவித்திருந்தது. சாலை நடை பாதை ஆக்கிரமிப்பு உட்படப் பல பிரிவுகளில் புகார்கள் இருந்தன. விசாரிக்கையில் அந்த வீடே அனுமதியின்றி விதிகள் மீறிக் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. நண்பரும் வீட்டுக்காரரும் நடையாய் நடந்தார்கள். எல்லா வழிகளிலும் முயன்றார்கள். பின்னணியில் வீட்டுக்காரருக்கு ஆகாத ஒரு காவல்துறை அதிகாரி செயல்படுவது தெரிந்தது. எதுவாயிருப்பின் என்ன? நண்பர் கடையை மூடினார். பெருத்த நஷ்டம். பின்னர் அதேபோல இடம் தேடி, குடும்பத்தைப் பழைய இடத்துக்கு மாற்றுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.
நீங்கள் தொழில் செய்ய யாருடைய ஆட்சேபணையும் இருக்கக் கூடாது. குறிப்பாக நீங்கள் சிறு தொழில் தொடங்குபவராகவோ அல்லது முதல் முறை தொழில் தொடங்குபவராகவோ இருந்தால் ஒரு முறைக்குப் பல முறை அனைத்தும் சரியாக உள்ளனவா என்று பார்த்துப் பின் முதலிடுவது நல்லது.
இந்தியாவில் தொழில் தொடங்குவது, அதைத் தொடர்ந்து நடத்துவது இரண்டுமே கடினமான காரியங்கள். Ease of Doing Business Index என்று ஒன்று உண்டு. எந்தெந்த நாடுகளில் தொழில் தொடங்குவது, நடத்துவது எளிது என்ற பட்டியல் இது. 160 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 130-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இப்போது புரிகிறதா இங்கு தொழில் செய்ய ஏன் இவ்வளவு சிரமங்கள் என்று?
ஆவணங்களைப் பாதுகாக்கவும்
அதனால் தொழில் தொடங்குவதற்கு முன் அனைத்து அரசாங்க சட்டத் திட்டங்கள் அறிந்து தகுந்த ஆவணங்கள் பெறுதல் முக்கியம். அதே போல என்னென்ன மாதாந்தர வருடாந்தர அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்க வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன? தொழிலாளர் வருகைப்பதிவு போன்றவை நமக்காக மட்டுமல்ல. தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் வந்து சோதனையிடலாம். அதனால் தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் சரிவரப் பாதுகாத்துச் சமர்ப்பிப்பது நல்லது.
சட்டத்துக்குச் சின்ன வகையில்கூடப் புறம்பாகச் செயல்படாமல் இருப்பது நல்லது மட்டுமல்ல, புத்திசாலித்தனமும்கூட.
அடுத்த விஷயம், நிதி தொடர்பானது. உங்கள் வியாபாரத்துக்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பது முதல் நிதி தொடர்பான எல்லாப் பரிமாற்றங்களையும் தகுந்த ஆதாரத்துடன் ஆவணப்படுத்துங்கள். வரி ஏய்ப்பு செய்யக் கறுப்பு பணத்தில் பரிமாற்றங்கள் நடத்தினால் என்றுமே ஆபத்துதான்.
பலர் தங்கள் லாபத்தைக் குறைத்துக் காண்பிப்பதையும், வங்கிக் கணக்குக்குப் பணம் வராமல் பார்த்துக்கொள்வதையும் சாமர்த்தியம் என்று நினைக்கின்றனர். இது குறுகிய காலச் சிந்தனை. உங்கள் வியாபாரத்தைப் பெருக்க நினைத்தால் இது உதவாது.
நீங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுவந்து, உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்து, லாபக் கணக்கு எழுதினால் தான் உங்கள் நிறுவனத்தின் மதிப்பீடு பெருகும். வங்கிக் கடன் தாராளமாகக் கிடைக்கும். வெளி முதலீட்டாளர்கள் வருவார்கள். உங்கள் தொழில் பெருகும்.
நாணயமாக இருந்து என்ன பயன்?
ஆனால், குறுகிய காலத்தில் வரிகள் உங்களை வாட்டியெடுக்கலாம். பணத் தட்டுப்பாடு வரலாம். உங்கள் நலம் விரும்பிகள் ‘பேசாமல் கறுப்பில் பரிமாற்றம் செய்’ என்பார்கள். இவ்வளவு நாணயமாக இருந்து என்ன பயன் என்று உங்களுக்கே தோன்றலாம்.
இதே அளவில் தொழிலில் இயங்க இந்தச் சிந்தனை உதவலாம். பன்மடங்காகப் பெருக உதவாது. வங்கிகள், வெளி முதலீட்டாளர்கள், தொழில் துறை நண்பர்கள் உங்கள் தொழிலைப் பரிசீலனை செய்ய உங்களுக்குப் போதிய சான்றுகள் வேண்டும்.
99 சதவீதத்தினர் தங்கள் வியாபாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றனர் அல்லது ஓரளவுக்கு உயர்த்துகின்றனர். 1 சதவீதத்துக்கும் குறைவானோர்தான் வியாபாரத்தைப் பன்மடங்காகப் பெருக்குபவர்கள். அவர்கள் அரசாங்கத்தையும் நிதி நிர்வாகத்தையும் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் என்பதுதான் உண்மை.
லாபத்தை மறைத்து நஷ்டக் கணக்கு எழுதுவதை விட லாபத்தைக் காட்டித் தொழிலைப் பெருக்குவதுதான் வியாபாரச் சூட்சமம்.
நம் பெரும்பாலான வியாபாரத் தவறுகள் பயத்தாலும் பேராசையினாலும் செய்யப்படுபவை. வரி ஏய்ப்புகள், அரசாங்க விதி மீறல்கள், கறுப்புப் பண நடமாட்டம் இவை யாவும் தொழில் தொடங்குவோர் கவனமாகத் தவிர்க்க வேண்டிய தவறுகள்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 16.05.2017

14: திட்டத்தை எழுதுங்கள்!

14: திட்டத்தை எழுதுங்கள்!

இதுதான் தொழில் என்று முடிவு செய்துவிட்டீர்கள். ஓரளவு ஆராய்ச்சி செய்துவிட்டீர்கள். அடுத்தது என்ன? நல்ல தொழில் திட்ட அறிக்கை ஒன்று தயார் செய்யுங்கள். பிசினஸ் பிளான் எழுதுவது கடன் வாங்க மட்டுமல்ல. உங்கள் எண்ணத்தைத் தெளிவுபடுத்தவும்தான்.
இது பிசினஸ் பிளான் அல்ல!
என்னைப் பொறுத்தவரை பிசினஸ் பிளான் எழுதுவது திரைக்கதை எழுதுவது போலத்தான். மனதில் உள்ள கதையை நம் பார்வைக்குக் காட்சிவாரியாக வரிசைப்படுத்தித் தெளிவாகச் சொல்வது திரைக்கதை. அதே போல பிசினஸ் ஐடியாவைச் செயல்முறையில் வடிவமைத்துத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் தெளிவாகச் சொல்வது பிசினஸ் பிளான்.
எதையும் யோசிக்கையில் சுலபமாக இருக்கும். பார்வைக்குப் பகட்டாக இருக்கும். உட்கார்ந்து எழுதினால் நிதர்சனங்கள் புலப்படும். “இந்த ஏரியாவில் செம்ம கூட்டம். ஒரு டிஃபன் சென்டர் போடலாம். ஒரு ஆள் 50 ரூபாய்க்குச் சாப்பிட்டாக்கூட ஒரு நாளைக்கு 20,000 ரூபாய்க்கு விற்பனையாகும். நல்ல லாபம் பார்க்கலாம்” என்று தோராயக் கணக்குப்போடுவது பிசினஸ் பிளான் அல்ல.
அடுக்கடுக்காகக் கேள்விகள்
எவ்வளவு முதலீடு தேவைப்படும்? எத்தனை தொழிலாளிகள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்? தொழிலாளிகள் தொடர்ந்து கிடைக்க என்ன வழி? செலவு போக லாபம் எவ்வளவு நிற்கும்? உங்களின் நேரடி மேற்பார்வை எவ்வளவு நேரம் தேவைப்படும்? நீங்கள் இல்லாவிட்டால் யார் பார்ப்பார்கள்? ஒரு வருடத்தில் எத்தனை நாட்கள் கடை இருக்கும்? போட்டியாளர்கள் யார்? கடை வாடகைக்கு உள்ளது என்றால் மாற்ற வேண்டிவந்தால் என்ன செய்ய? சாலையோரக் கடை என்றால் சாலை விரிவாக்கத்தில் அடிபடுமா? இந்தக் கடை சார்ந்த அனைத்து அரசாங்க விதிகளும் உங்களுக்குத் தெரியுமா? போட்ட முதலீடு எத்தனை மாதங்களில்/ வருடங்களில் திரும்பக் கிடைக்கும்?
வங்கிக் கடன் கிடைக்குமா? அதற்கான தகுதி உள்ளதா? அல்லது வேறு ஏற்பாடு என்ன? மாதந்தோறும் கட்ட வேண்டிய கடன் எவ்வளவு? வருமானத்தில் கடனும் செலவும் போனால் நிற்கின்ற லாபத்தில் குடும்பம் நடத்த முடியுமா? அதற்கு வேறு ஏற்பாடு செய்தால் அதன் பாதிப்பு உங்கள் தொழிலில்/ வாழ்க்கையில் உண்டா? எத்தனை வருடங்கள் இந்தத் தொழிலை நடத்த எண்ணம்? நிர்வாகத்தில் உங்களுடன் பங்கு கொள்ளப்போவது யார்? இந்தத் தொழிலை விட்டு அடுத்த தொழிலுக்குப் போக நினைத்தால் இதை நல்ல விலைக்கு விற்க முடியுமா? லாபத்துடன் வெளியேற முடியுமா?
இதை எல்லாம் நீங்களும் நினைத்து வைத்திருப்பீர்கள். ஆனால் எழுத்தில் நிரப்பப்பட்ட அறிக்கை உள்ளதா? எழுதியதை மாற்றலாம், திருத்தலாம். ஆனால் ஆதார அறிக்கை ஒன்று அவசியம் வேண்டும். இப்படி எழுதுவதால் பல நஷ்டங்களை ஆரம்பக் காலத்திலேயே தவிர்க்கலாம்.
சிற்றூரில் நடக்குமா?
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் தொழில் ஆலோசனைக்கு வந்தார். ஒரு சின்ன ஊரில் திருமண ஒப்பந்தக்காரர் ஆக அவருக்கு ஆசை. முதல் உள்ளது. சொந்தமாக இடம் உள்ளது. தெரிந்த மக்கள். மனைவியும் ஒத்தாசையாக இருக்கிறார். சொந்தக்காரர்களின் திருமணங்களை நடத்திவைத்தாலே நல்ல காசு பார்க்கலாம் என்றார். திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் குறைந்த செலவில் செய்துதரலாம் என்றார். மண்டபம், பத்திரிகை, சாப்பாடு, அலங்காரம், ஃபோட்டோ, வீடியோ என்று கட்டு சாப்பாடு வரை செய்யலாம் என்று பட்டியல் இட்டார். பெரிய நகரங்களில் இது பெரிய இண்டஸ்ட்ரியாக வளர்ந்து வருகிறது. ஆனால் அவர் வசிக்கும் சிற்றூரில் நடக்குமா? அதனால் பிசினஸ் பிளான் எழுதச் சொன்னேன். ஒரு மாதம் கழித்து விரிவாக எழுதி வந்தார்.
எழுதும்போதே பல தெளிவுகள் வந்தது அவருக்கு. பெரிய ஆஃபீஸ் போட்டு வாடிக்கையாளர்கள் பிடிக்கலாம் என்ற எண்ணம் மாறியிருந்தது. முதலீடு பணமாக அதிகம் வேண்டாம். சரியான முயற்சிகள்தான் தேவை எனப் புரிந்துகொண்டார். பின்னர் நான் பரிசீலிக்கையில் அவர் தன் தொழிலை B2C (Business to Consumers), அதாவது நுகர்வோரை நேரடியாகத் தொடர்புகொண்டு செய்யும் வணிகம் மாடலில் வடிவமைத்திருந்தார். நான் B2B (Business to Business), அதாவது தொழில் நிறுவனங்களுடன் தொழில் புரிவது எனும் வணிகம் செய்யலாம் என்று சொன்னேன்.
மனமாற்றம் தொழிலைக் காப்பாற்றியது
கல்யாணம் முடிவான குடும்பங்கள்தான் வாடிக்கையாளர்கள் என்று நினைத்தவருக்குக் கல்யாண மண்டப முதலாளிகள்தான் (பல இடங்களில் மேலாளர்கள்தான்!) வாடிக்கையாளர்கள் என்பது புரியவந்தது. ஆஃபிஸுக்குக் கொடுத்த அட்வான்ஸைச் சந்தோஷமாகத் திருப்பி வாங்கிக்கொண்டார். கல்யாணத்துக்கு வேலை / சேவை செய்யும் அனைத்து வியாபாரிகளிடமும் தன் வியாபாரத்தை அறிமுகப்படுத்தினார். இந்த மாடலில் ஒரு ஊர் என்று சுருங்கத் தேவையில்லை என்று புரிந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள எல்லா மண்டபங்களுடனும் ஒப்பந்தம் போட்டார்.
தானே இறங்கி வேலை செய்து விலையைக் குறைக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறித் தரமான சேவையைச் சற்று அதிக விலைக்குக் கொடுக்கலாம் என்ற நிலைக்குவந்தார். இந்த மன மாற்றம் அவர் தொழிலைக் காப்பாற்றியது. முதலாண்டு செலவுக்கு இரண்டு லட்சம் என்று எடுத்து வைத்திருந்தவர் ஒரு ப்ரீ பெய்ட் மொபைலையும் மோட்டார் பைக்கையும் வைத்து வெற்றிகரமாகத் தொழிலை ஆரம்பித்தார்.
தொழில் திட்டத்தை எழுதுங்கள். ஆயிரம் கேள்விகள் வரும். சில கேள்விகளுக்கு விடை தெரியும். பல கேள்விகளுக்கு விடை தெரியாது. ஆனால் இந்தக் கேள்விகளைத் தொழில் தொடங்கும் முன் கேட்பது நல்லது. ஒரு தொழில் இப்படித்தான் நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஆனால் தொழில் பற்றிய முதலீட்டு முடிவுகள் எடுப்பதற்கு முன் ஆயிரம் கேள்விகள் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 09.05.2017