ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள்
மற்றும் பதில்கள் - பாகம் :
5
அறிவோம் ஜிஎஸ்டி: விற்பனையில்லாத காலத்திலும் வரித்தாக்கல் செய்ய
வேண்டுமா?
மின்னணு வரி
ரசீது உபயோகப்படுத்தப் படுவதால் சோதனைச் சாவடி (செக் போஸ்ட்) சோதனை குறையும்
என்பது சாத்தியமா?
50,000 ரூபாய்க்கு மேல்
சரக்கு ஏற்றிச் செல்லப்படும் வாகனங்கள் கணிணி மூலம் மின்னணு-வழி (E-way) பில் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் இப்போது உள்ள மாநில
எல்லைகளில் சோதனை சாவடி (Check Post) கதவுகள் இனி
இருக்காது. ஆனால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பறக்கும் படை, வாகனங்களைக் கண்காணிக்க வாய்ப்புகள் உண்டு. ஜி.பி.எஸ் மூலமாக
கண்காணிக்கவும் செய்வார்கள்.
தற்போது
அமெரிக்காவில் சுமார் 740 கிலோமீட்டர் வரை
ஒரு லாரி பயணிக்க முடிகிறது. ஆனால் இந்தியாவில் செக்போஸ்ட் காரணமாக ஒரு லாரி
நாளொன்றுக்கு 230 கிலோமீட்டர்
வரைதான் பயணிக்க முடியும் என்று ஒர் ஆய்வறிக்கை சொல்கின்றது. இனி சோதனைச் சாவடி
முறை நீங்குவதால் போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் சாலை வசதிகளும் மேம்படுத்தப்படும் போது சோதனைச் சாவடி முறை
நீக்கப்படுவதும் உற்பத்தி அதிகரிக்க கைக்கொடுக்கும். மேலும் அழுகக்கூடிய பொருட்களை
தேங்காமல் தடுக்கப்படுவதால் உற்பத்தியும் அதிகரிக்கும்.
தொகுப்பு
வரித்திட்டத்தில் வணிகம் செய்யும் வர்த்தகர் உள்ளீட்டு வரி எடுக்கும்
நோக்கத்திற்காக சாதாரண ஜிஎஸ்டி வரிமுறைக்கு தனது வர்த்தகத்தை மாற்ற இயலுமா? ஆம் எனில் வழிமுறைகள் என்னென்ன?
வர்த்தகர்
உள்ளீட்டு வரி எடுக்கும் நோக்கத்திற்காக தொகுப்பு வரித் திட்டத்தில் இருந்து
சாதாரண வரிமுறைக்கு தனது வணிகத்தை மாற்றிக் கொள்ளலாம். இருப்பினும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் தொகுப்பு வரித்திட்டத்தை உபயோகிக்க
முடியாது.
தொகுப்பு வரித்
திட்டத்திற்கு மொத்த விற்பனையை கணக்கிடும் வழிமுறை என்ன?
ஒட்டுமொத்த
விற்பனை என்பது அனைத்து விநியோகங்களின் மதிப்பு (வரி விதிப்புக்குட்பட்ட மற்றும்
உட்படாத விநியோகங்கள் + விலக்கு அளிக்கப்பட்ட விநியோகங்கள்+ஏற்றுமதிகள்). அதில் CGST,
SGST, IGST-ன் கீழ் செலுத்தப்பட்ட வரிகள்+உள்ளே
வந்த விநியோகத்தின் மதிப்பு+ அதே நிரந்தர கணக்கு எண் உள்ள நபரின் நேர்மாறான வரி
விதிப்புக்குள்ளான விநியோகங்களின் மதிப்பு சேராது.
நான்கு வேறுவேறு
தொழில் புரியும் வர்த்தகர் ஒரே நிரந்தர எண்ணை பயன்படுத்தி தொகுப்பு முறை மற்றும்
சாதாரண ஜிஎஸ்டி வரிமுறை என இரண்டையும் பயன்படுத்தலாமா?
ஒரே நிரந்தர
எண்ணை பயன்படுத்தி தொகுப்பு முறை மற்றும் சாதரண ஜிஎஸ்டி இரண்டையும் பயன்படுத்த
முடியாது. ஒரு நிரந்தர எண் மூலம் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.
இயற்கை
காரணங்களால் பொருட்கள் விநியோகத்திற்கு முன்பாக சேதமடைந்தால் அவருக்கு வரியிலிருந்து
தள்ளுபடி அளிக்கப்படுமா?
வரி செலுத்தப்பட
வேண்டியிருந்தால் மட்டுமே வரி தள்ளுபடி அளிக்கப்படும். அதாவது வரி செலுத்த வேண்டிய
நிகழ்வு ஏற்பட வேண்டும். விநியோகத்திற்கு முன்பாக சேதமடைந்தால் வரி செலுத்த
வேண்டிய நிகழ்வு ஏற்படாது. ஆகையால் தள்ளுபடி கிடையாது.
சரக்கு
குறியீட்டு எண் (HSN) ஏன் அவசியமாகிறது?
எந்தப்
பொருளுக்கு என்ன வரி என்பதை எளிதில் கண்டுபிடிக்கவும், செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதனைக் கண்டறியவும் கொண்டு
வந்துள்ள நடைமுறையே சரக்கு குறியீட்டு எண் (HSN). ஜிஎஸ்டிக்காக ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு முதல் எட்டு இலக்கு
எண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக சில
பொருளுக்கு இரண்டு இலக்க எண்களும், பி2பி (B2B) தொழில்களுக்கு நான்கு இலக்கு எண்கள் என மத்திய அரசு
நிர்ணயித்துள்ளது. இதனால் அனைத்து தகவல்களும் (data base) மிகச் சரியாக இருக்கும். HSN குறியீடு மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் தனித்துவம் அடையாளம்
காணப்படும்.
ரூ.1.5 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை
உற்பத்திக்கு மேல் இரண்டு இலக்க சரக்கு குறியீட்டு எண் குறிப்பிட வேண்டும். ஐந்து கோடி ரூபாய்க்கு
மேல் உற்பத்திக்கு 4 இலக்க சரக்கு குறியீட்டு எண் குறிப்பிட வேண்டும். இது போகப்போக எட்டு எண்களாக அதிகரிக்கப்படும். ஆரம்பத்தில்
நடை முறையை எளிதாக்கவே இரண்டு இலக்க எண்களில் இருந்து துவக்கப்படுகிறது. மத்திய
கலால் வரி செலுத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஏற்கனவே இந்த நடைமுறை உள்ளது. பிற
வர்த்தகர்களுக்கு இது புதிதாக இருக்கும்.
பதிவு பெற்ற நபர்
விற்பனையில்லா காலகட்டங்களில் வரித்தாக்கல் செய்ய வேண்டுமா? ஏன்?
விற்பனையில்லா
காலத்திலும் பதிவு பெற்ற நபர் வரித்தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். தொடர்ந்து 6 வரித் தாக்கல் செய்யாவிட்டால் ஜிஎஸ்டி பதிவு எண் ரத்து
செய்யப்படும். உதாரணமாக தொகுப்பு முறையில் வணிகம் செய்பவர் காலாண்டு வரித்தாக்கல்
செய்ய வேண்டும். தொடர்ந்து 6 காலாண்டுகளுக்கு
செய்யாவிடில் பதிவு ரத்தாகிவிடும்.
ஒருவர் சப்ளைக்கு
நேர்மாறான வரியாக (Reverse Charge Mechanism) செலுத்தும் வரியை மொத்த விற்பனையில் சேர்த்து கொள்ளலாமா? எப்படி?
நேர்மாறான வரியை
செலுத்தும் வரியை மொத்த விற்பனையில் சேர்த்து கொள்ள முடியாது.
ஜிஎஸ்டி-ன் கீழ்
ஏற்றுமதி எவ்வாறு கருதப்படும்?
ஏற்றுமதி
செய்யப்படும் விநியோகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பூஜ்ய விகிதங்களாக கருதப்படும்.
சரக்குகள் அல்லது சேவைகள் ஏற்றுமதிக்கு வரி செலுத்த வேண்டும். இருந்த போதிலும்
உள்ளீட்டு வரி வரவு உள்ளது. இதை ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ள
வாய்ப்புள்ளது அல்லது வெளியீட்டு வரி இருந்தால் அதில் சமன் செய்து கொள்ளலாம்.
யாருக்கெல்லாம்
இந்த தொகுப்புமுறை திட்டம் பொருந்தாது?
உணவு விடுதி தவிர
எந்த சேவைக்கும் இந்த திட்டம் கிடையாது.
இரு வேறு
மாநிலங்களுக்குள்ளாக விற்பனை செய்யும் போது இந்தத் திட்டத்தினை எடுத்துக் கொள்ள
முடியாது.
மின்னணு
வர்த்தகம் மூலம் பொருட்களை வழங்குபவர்கள் (உதாரணம் பிளிப்கார்ட், அமேசான் போன்று மின்னணு வர்த்தகம் செய்பவர்கள்).
சில குறிப்பிட்ட
உற்பத்தியாளர்கள்
சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, யூடிஜிஎஸ்டி சட்டத்தின் கீழ்
வரிக்குட்படாத பொருட்களை வழங்குபவர்கள்.
தொடரும்..
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.06.2017