disalbe Right click

Monday, July 10, 2017

சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
சில காரியங்களை தனி ஒரு நபரால் செய்ய முடியாது. அதனைச் செய்வதற்கு பல நபர்கள் தேவைப்படும். அந்த நபர்களை சட்டபூர்வமாக ஒன்றிணைக்க சங்கம் ஏற்படுத்துவது அவசியம்.
ஒரு சங்கத்தை அமைப்பதற்கு அதிக நபர்கள் தேவையில்லை. குறைந்தபட்சம் 7 நபர்கள் இருந்தால் போதும். ஆனால், அவர்களுக்கு வயது 18 ஆகியிருக்க வேண்டும்.
சங்கம் அமைத்தால் மட்டும் போதாது. அதனை தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 மற்றும் விதிகள் 1978ன்படி மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படியான அங்கீகாரத்தைப் பெறுகின்றது.
எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20தாண்டிவிட்டாலோ, அதனுடைய ஆண்டு வருமானம் அல்லது செலவு ரூ.10,000/-த்தை தாண்டிவிட்டாலோ மூன்று மாத காலத்திற்குள் சட்டப்படி கண்டிப்பாக அதனை ஒரு சங்கமாக பதிவு செய்ய வேண்டும்.
சங்கத்திற்கு பெயர் வைத்தல்
ஒரு சங்கம் ஏற்படுத்த முதலில் அதற்கு ஒரு நல்ல பெயரை சூட்டுவது மிக அவசியம். ஆனால், சங்கத்தின் பெயர் இந்திய இறையாண்மைக்கு மற்றும் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது. மேலும் வன்முறையைத் தூண்டுவதாகவோ, அறுவறுப்பானதாகவோ மற்றும் ஆபாசமாகவோ இருக்கக் கூடாது. ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற ஒரு சங்கத்தின் பெயரை மற்றோரு சங்கத்திற்கு சூட்டுவதும் கூடாது.  இதுபற்றி சங்கத்தை பதிவு செய்ய மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நீங்கள் விண்ணப்பிக்கும் போது அவர் உங்களுக்கு வழி காட்டுவார். 
பெயர் மாற்றம்
ஏற்கனவே ஒரு பெயரில் செயல்பட்டு வருகின்ற சங்கம் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று தன்னுடைய பெயரை பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்படுகின்ற சிறப்புத் தீர்மானம் மூலம் பொதுக்குழு கூட்டம் நடந்த தினத்தில் இருந்து 90 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம்.
பெயர் பலகை
அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி, சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி தெளிவாக தெரியுமாறு தமிழில் எழுதி, முகப்பில் விளம்பர பெயர் பலகை மாட்ட வேண்டும். ஒருவேளை சங்கத்தின் பெயர் வேறு மொழியில் இருந்தால் அதன் உச்சரிப்பை தமிழில் எழுதி கண்டிப்பாக போர்டு வைக்க வேண்டும்.
சங்க நிர்வாகக் குழு
சங்கத்தை நிர்வகிக்க குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம். சங்க துணை விதிகள் (By Laws) ஏற்படுத்தப் பட்டிருந்தால், அதில் குறிப்பிட்ட அளவின்படிதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களை பொதுக்குழுக்கூட்டம் மூலம் சங்கத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மேல் கண்டிப்பாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், சங்க உறுப்பினர்கள் மறுபடியும் சங்க நிர்வாகிகளாக இவர்களையே மீண்டும் தேர்ந்தெடுக்க எந்தவித தடையும் இல்லை.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை FORM-VII மூலமாக மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.
பொதுக்குழுக் கூட்டம்
ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுக் கூட்டம் கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும். சட்டப்படி கூட்டம் நடைபெறும் நாளுக்கு 21 நாட்கள் முன்னதாக உறுப்பினர்களுக்கு கூட்டம் பற்றிய அறிவிப்பானது அறிவிக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பில் நாள், இடம், கூட்டத்தின் குறிக்கோள் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு (நகல்கள்) உறுப்பினர்களுக்கு வழங்கி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். மற்றும் அதில் இயற்றப்படும் தீர்மானங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட உறுப்பினர்களால் (Quorum) ஏற்றுக் கொள்ளப்பட்டு கூட்ட நடவடிக்கை குறிப்பேடு என்ற Minutes Bookல் கையெழுத்திடப்பட வேண்டும். இதனையும் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.
உறுப்பினர்கள் மாற்றம்
உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கம் சம்பந்தமான விபரங்களை FORM-VI மூலமாக விண்ணப்பித்து மாவட்டப் பதிவாளர் அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும்.
சங்க துணை விதிகள்
சங்கத்திற்கென்று சட்டதிட்டங்களை ஏற்படுத்தி பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்டப் பதிவாளரின் ஒப்புதலோடு  சங்கத்தை நிர்வகிக்கலாம்.
மாவட்டப் பதிவாளர்
சங்க நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்களை மாவட்டப் பதிவாளர் அவர்கள் (தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்ட விதிகள் 1978 - விதி எண்: 50ன்படி) ஆய்வு செய்தே ஏற்றுக் கொள்ள வேண்டும்.  
கலைப்பு
சட்டவிரோதமாக ஒரு சங்கம் செயல்படுவதாக தெரியவந்தால், உரிய விசாரணைக்குப் பிறகு அதனை கலைக்க மாவட்டப் பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி


தாய்மை அடைந்ததைக் கண்டுகொள்ள உதவும் அறிகுறிகள்

தாய்மை அடைந்ததைக் கண்டுகொள்ள உதவும் அறிகுறிகள்
தாயாகும் பெண்ணே முழுமை அடைகிறாள் என்று சொல்வார்கள். முதன்முதலாக, தாய்மை அடைந்திருக்கிறோம் என்று உணரும் தருணம்தான் ஒரு பெண்ணின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம் என்பார்கள். திருமணமாகி சிலநாள்கள் ஆகிவிட்டன. மாதவிடாய் தள்ளிப்போய் உள்ளது. இதை மட்டுமே அறிகுறியாகக்கொண்டு தாய்மை அடைந்தேன் என எண்ணிக்கொள்ள முடியுமா
மருத்துவர் உறுதிப்படுத்தும் முன்பு, இதோ இந்த அறிகுறிகளைக் கண்டு ஓரளவு உணர்ந்துகொள்ளலாம்.
1. கருவிலிருக்கும் உங்கள் பாப்பாவுக்கு ஆக்சிஜன் தேவை என்பதால், உங்களுக்கு மூச்சு வாங்கும்.
2. மார்பகங்கள் தளர்ந்து போகலாம்.
3. உடலில் சுரக்கும் வேகமான ஹார்மோன்களால் சோர்ந்து போவீர்கள்.
4. குமட்டல் உண்டாகும்.
5.சிறுநீர்ப்பைக்கு அதிகப் பணிச்சுமை உண்டாவதால், அடிக்கடி சிறுநீர் போகும்.
6. ஹார்மோன்களின் விளைவால் அடிக்கடி தலைவலிக்கும்.
7. தசைநார்கள் தளர்வதால், பின் முதுகு வலி உண்டாகும்.
8. கருப்பை நீட்சி அடைவதால், அடிவயிற்றில் தசைப்பிடிப்பு.
9.அதீத பசி, தாகம், அஜீரணம் போன்றவையும் தோன்றும்.
10. தூக்கமின்மையால் மலச்சிக்கல் உருவாகலாம்.
11. பதற்றம், சந்தோஷம், பயம் என மாறி மாறி உருவாதல்.
12. உடலின் மறைவான பகுதிகள் சூடாகும்.
13. வாசனையை அதிகமாக உணர்வீர்கள். 14.வயிற்றின் நடுக்கோடு கருமையாகும்.
15. மறைவான பாகங்கள் மிருதுவாகும்.
16. இறுதியாக, வீட்டிலேயே மருத்துவச் சோதனைகள்மூலம் நீங்கள் கருவுற்றதைக் கண்டுபிடிக்கவும் செய்யலாம்.
மு.ஹரி காமராஜ்
நன்றி : விகடன் செய்திகள் - 10.07.2017


Sunday, July 9, 2017

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பிளக்ஸ் பேனர் விதிமீறல்!

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பிளக்ஸ் பேனர் விதிமீறல்!
உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, அனுமதியின்றி விதிகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு:
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டுவிழா, மதுரையில் நடந்தது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமிக்காக அனுமதியின்றி, விதிகளை மீறி, மதுரையில் ஜூன் 28ல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்காக ரோடுகளில் குழிகளைத் தோண்டி சேதப்படுத்தினர்.
திண்டுக்கல்லில் ஜூன் 22ல் அமைச்சர் சீனிவாசனுக்காக, பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்தன. இதை சிலர் கிழித்தனர். உடனே போலீஸ் பாதுகாப்புடன் பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டது.
விதிகளை மீறி, அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை, 5000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உண்டு. அனுமதியின்றி பேனர்கள் வைத்தவர்கள் மீது, இதுவரை போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. அதிகாரிகள் கடமை தவறியுள்ளனர். தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு புகார் அனுப்பினேன்.
மனுவை பரிசீலித்து மதுரை, திண்டுக்கல் கலெக்டர்கள், மதுரை போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு 'டிராபிக்' ராமசாமி மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள், 'இவ்வழக்கில் இரண்டாவது எதிர்மனுதாரராக இணைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,இடைப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.,விற்கு (தமிழக முதல்வர்) எதிராக, மனுதாரர் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அவரை, தேவையின்றி இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளதை நீக்கம் செய்கிறோம்,' என்றனர்.
தலைமைச் செயலர், உள்துறை செயலர், மதுரை தென்மண்டல ஐ.ஜி.,க்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூலை 24க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


நன்றி : தினமலர் நாளிதழ் - 08.07.2017

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அவமதிப்பு வழக்கு

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அவமதிப்பு வழக்கு 
6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க, முன்னாள் மாநில தேர்தல் கமிஷனர் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
தி.மு.க., வழக்கு : உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கு முறையான ஒதுக்கீடு இல்லை' என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். 'பழங்குடியினருக்கான ஒதுக்கீடு செல்லும்' என, உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் அறிவிப்பு முறையாக இல்லாததால், அதை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். 2016 டிசம்பருக்குள் தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த ஆண்டு, மே, 14க்குள் தேர்தலை நடத்தும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, 2017 பிப்ரவரியில் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், தேர்தல் கமிஷன் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. ஜூலைக்குள் தேர்தலை நடத்துவதாக, நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார். 
மாநில தேர்தல் கமிஷனராக இருந்த சீதாராமன், மாநில தேர்தல் கமிஷன் செயலர் ராஜசேகர், ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் பனிந்தர ரெட்டி, நகர பஞ்சாயத்து இயக்குனர் மகரபூஷனம், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக, அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் கமிஷன் மனு, நீதிபதிகள் நுாட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ''மே மாதத்தில் தேர்தலை
நடத்தும்படி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, மாநில தேர்தல் கமிஷன் மீறியுள்ளது; ஜூலையில் தேர்தல் நடத்துவதாக, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தையும், தேர்தல் கமிஷன் மீறியுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

நன்றி : தினமலர் நாளிதழ் - 08.07.2017

பொ.த.அலுவலரின் சொந்தச் செலவில் வழக்கறிஞர் நியமிக்கவேண்டும்!

பொ.த.அலுவலரின் சொந்தச் செலவில் வழக்கறிஞர் நியமிக்கவேண்டும்!
தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலருக்கு, அபராதமோ அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கோ ஆணையிட்டால், அந்த ஆணையை இரத்து செய்வதற்காக பொது தகவல் அலுவலர் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்வது வழக்கம். அவ்வாறான சூழ்நிலையில், இதுநாள்வரை பொது தகவல் அலுவலர் தனக்கு வாதாடுவதற்காக, அரசு வழக்கறிஞரையே நியமித்து கொள்வது வழக்கமாக இருந்தது. இதனால் பொது தகவல் அலுவலருக்கு எந்தவித செலவினமும் ஏற்பட்டதில்லை.
தமிழக அரசானது Letter (Ms) No.16152/AR.3/2017-1 dated 16.06.2017 of Personal Administrative Reform (AR-III), Secretariat, Chennai-600 009-ன் படி, இனிமேல் பொது தகவல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தண்டணை விதித்தால் (பணத்தண்டம் அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக), பொது தகவல் அலுவலரானவர், தமிழக அரசு வழக்கறிஞரை தனக்காக வாதிட ஏற்பாடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தகவல் ஆணையமயானது பொது தகவல் அலுவலருக்கு எதிராக தண்டணைகளுக்கான (பணத்தண்டம் மற்றும் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதது) ஆணைகளை பிறப்பித்தால், பொது தகவல் அலுவலர் அதை தனது சொந்த செலவிலேயே, தன் சார்பாக வாதிட வழக்கறிஞரை நியமித்து கொள்ள வேண்டும். ஆகவே, பொது தகவல் அலுவலர் முறையாக தகவல்களை மனுதாரருக்கு வழங்குவது என்பது தற்போது மிக அவசியமாகின்றது.
Thanks to Mr.Leenus Leo Edwards, Advocate

Tuesday, July 4, 2017

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை பறித்த மத்திய அரசு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை பறித்த மத்திய அரசு
புதுடில்லி: மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அவ்வப்போது பரபரப்பு உத்தரவுகளை பிறப்பித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
நீதிமன்றத்திற்கு இணையாக அதிகாரம்
தேசிய பசுமை தீர்ப்பாயம், 2010 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முதன்மை பெஞ்ச் டில்லியில் உள்ளது. இதுதவிர சென்னை உட்பட நாட்டின் நான்கு இடங்களில் இதன் மண்டல பெஞ்ச்கள் உள்ளன. இத்துடன் சிம்லா, ஷில்லாங், ஜோத்பூர் மற்றும் கொச்சியில் சர்க்கியூட் பெஞ்ச்கள் உள்ளன. இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவைகளை நிறுத்தி வைப்பது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது போன்றவற்றை இந்த தீர்ப்பாயத்தால மேற்கொள்ள முடியும். தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும். இந்த தீர்ப்பாயத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமன விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது.
மாற்றப்பட்ட விதிகள்
  1.  தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தான் பொறுப்பு ஏற்க முடியும் என முந்தைய விதிகளில் இருந்தது. இது, ஓய்வு பெற்ற நீதிபதிகள் அல்லது 25 ஆண்டுகள் சட்ட அனுபவம் உள்ளவர் இந்த பதவியை ஏற்கலாம் எனக்கூறி விதி திருத்தப்பட்டுள்ளது.
  2. . தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு தான் இறுதியானது என முந்தைய விதியில் இருந்து. இது, ஐந்து பேர் கொண்ட குழு, தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் என விதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோரை மத்திய அரசு நியமிக்கும்.
  3.  தீர்ப்பாயத்தின் தலைவரை நீக்க வேண்டும் என்றால், தலைமை நீதிபதியின் கருத்தை கேட்ட பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என முந்தைய விதிகளில் இருந்தது. இது, தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரை, விசாரணை நடத்திய மத்திய அமைச்சரவை நீக்க முடியும் என விதி மாற்றப்பட்டுள்ளது. 
  4.  தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள்; அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என முந்தைய விதிகளில் கூறப்பட்டு இருந்தது. இது, தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள் மட்டுமே; கிரேடு 1 அதிகாரிக்கு இணையான சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என, விதிகள் மாற்றப்பட்டுள்ளது.
  5.  தீர்ப்பாயத்தின் தலைவர் நியமனம், தலைமை நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி இடம் பெறும், ஐந்து பேர் கொண்ட குழுவால் தான் மேற்கொள்ளப்படும். இந்த குழுவின் பிற நான்கு உறுப்பினர்களை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் நியமிக்கும். 
இவ்வாறு பல்வேறு விதிகளை மாற்றி அமைத்து ஜூன், 1ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு சுற்றுசூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 04.07.2017

டேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

டேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தையில், ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு தொழில்நுட்பச் சாதனம் டேப்லெட். இது மக்களால் பெரிதும் விரும்பப்படுவதற்குக் காரணம், எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில், எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில், லேப்டாப் அளவுக்கு விலை அதிகமாகவும் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள், தாராளமாக டேப்லெட்டைத் தேர்வு செய்யலாம்.
டேப்லெட் வாங்குவதற்கு முன்...
தேவைகளை அறிந்து அதற்கேற்ப டேப்லெட்டைத் தேர்ந்தெடுங்கள். டேப்லெட்கள் பெரும்பாலும் வாசிப்பதற்கானவை, விளையாடுவதற்கானவை, அலுவலக வேலைகளுக்கானவை, குழந்தைகளுக்கானவை என ஒரு குறிப்பிட்ட தேவையை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வாசிப்புத் தேவைக்காகத் தயாரிக்கப்படும் டேப்லெட்களின் திரையின் தரம் சற்று மேம்பட்டு இருக்கும். ஆனால், அவை விளையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் டேப்லெட்களின் ரேம் மற்றும் பிராசஸரைக் கொண்டிருக்காது. குழந்தைகளுக்கு எனத் தயாரிக்கப்படும் டேப்லெட்களின் பயன்பாடு, அவர்களுடைய கற்றல்திறனை மேம்படுத்தும் வகையில் மட்டுமே இருக்கும். அவற்றில் மற்ற வேலைகளைத் திறம்படச் செய்யமுடியாது. எனவே, உங்களின் தேவையைப் பொறுத்து டேப்லெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திரை : டேப்லெட் வாங்க நினைப்பவர்கள் முதலில் அதன் திரையின் (ஸ்க்ரீன் சைஸ்) அளவையும், தரத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். 7 இன்ச் முதல் 10 இன்ச் வரை திரையின் அளவு கொண்ட டேப்லெட்கள் சந்தையில் கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப திரையின் அளவை முடிவு செய்யலாம். டேப்லெட் வாங்கும்போது திரையின் PPI (Pixels per Inch) அளவைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்த அளவு அதிகமாக இருந்தால், காட்சிகள் தெளிவாக இருக்கும். PPI-ன் அளவு அதிகமாக இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், குறைந்தபட்சம் 250 பிக்ஸலாவது இருக்க வேண்டும்.
பேட்டரி : டேப்லெட் இயங்கத் தேவையான சக்தியை அளிப்பது பேட்டரிதான். அதுவும் குறிப்பாக டேப்லெட்டில் திரையின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், அதிக பேட்டரித் திறன் இருக்கும் டேப்லெட்டை வாங்குவது நல்லது.
சிம் கார்டு வசதி : டேப்லெட்களைப் பொதுவாக சிம் கார்டு பயன்படுத்தக்கூடியவை, சிம் வசதி இல்லாதவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டேப்லெட்கள், சிம் கார்டு பயன்படுத்தும் வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சிம் இல்லாத டேப்லெட்களின் விலையைவிட இவற்றின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். சிம் வசதி இல்லாத டேப்லெட்கள் பொதுவாகக் குறைந்த விலைக்கும், அதே சமயத்தில் அதிக வசதிகளுடனும் கிடைக்கும்.
இயங்குதளம் : டேப்லெட்களைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐ.ஓ.எஸ் என அனைத்து வகையான இயங்குதளங்களிலும் கிடைக்கின்றன. ஆனால், ஆண்ட்ராய்டு டேப்லெட்களே சந்தையில் அதிகமாகக் கிடைக்கின்றன. சாதாரண உபயோகத்திற்கு ஆண்ட்ராய்டு டேப்லெட்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் விலையும் குறைவு. மற்றபடி, அலுவலக உபயோகத்திற்கு என்றால் விண்டோஸ் அல்லது ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் இயங்கும் டேப்லெட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
பிராசஸர், ரேம் மற்றும் மெமரி : டேப்லெட்டைத் தேர்வு செய்யும்போது அதன் ரேம் மற்றும் இன்டர்னல் மெமரி ஆகியவை அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒரு சில டேப்லெட்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி இருப்பதில்லை. குறைந்தபட்சமாக 2 ஜி.பி ரேம் இருக்குமாறு வாங்கினால் சிறப்பு. கேமிங் பயன்பாட்டுக்காக எனில் கிராபிக்ஸ் கார்டுகள், பிராசஸர் பொருத்தப்பட்ட டேப்லெட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.
எடை குறைவான டேப்லெட் வாங்கினால், எங்கும் எளிதாக எடுத்துச்செல்ல முடியும். டேப்லெட்டில் உள்ள கேமராவுக்குப் பொதுவாக அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதால், அதில் குறைவான கவனம் செலுத்தினால் போதும்.
மடிக்கணினியாகவும், அதில் இருந்து தனியே பிரித்தெடுத்து டேப்லெட்டாகவும் பயன்படுத்தும் வகையில் சில தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. நீங்கள் வாங்கும் டேப்லெட்டில் பென் டிரைவ் பயன்படுத்த உதவும் OTG வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். HDMI போர்டுகள் கொண்ட டேப்லெட்கள், மீடியா அவுட்புட் செய்வதற்கு வசதியாக இருக்கும்.
படங்கள் வரைய, எழுத எனில், ஸ்டைலஸ் எனப்படும் பேனா போன்ற உபகரணம் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள டேப்லெட்களை வாங்கலாம்.
மு.ராஜேஷ்

நன்றி : நாணயம் விகடன் - 09.06.2017