GST A To Z கைடு
நாட்டில் ஏற்கெனவே அமலில் இருந்த
உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை சீர்செய்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி முறை
அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொருள்கள் மற்றும் சேவைகளின்
உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு
பெயரே ஜி.எஸ்.டி (Goods and Services Tax – GST). இதனைத் தமிழில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்கிறோம்.
நீண்ட காலத்தில் வளர்ச்சி!
மாநிலங்களுக்குத் தக்கபடி மாறும்
பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே
மாதிரியான வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டு வருவதே ஜி.எஸ்.டி.
இதனால் பொருள்கள் மீதான வரிச் சுமை
சுமார் 25 – 30% வரை குறையும்
என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி நடைமுறைக்கு வருவதன் மூலம்
உள்நாடு மற்றும் வெளிநாட்டில் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும். மொத்த உள்நாட்டு
உற்பத்தி வளர்ச்சி சுமார் 2% வரை அதிகரிக்கும் என்று ஓர் ஆய்வில்
கணிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி அமலுக்கு வருவதால், குறுகிய
காலத்துக்குப் பொருள்களின் விலை அதிகமாக இருந்தாலும், நீண்ட காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி
காணப்படும்.
முதன் முதலாக ஜி.எஸ்.டி..!
ஜி.எஸ்.டி-யை அறிமுகப்படுத்திய
முதல் நாடு பிரான்ஸ். வரி ஏய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் 1954-ல் இந்த ஒற்றை வரி விதிப்பு முறையைக் கொண்டுவந்தது பிரான்ஸ்.
தற்போது உலகில் 158 நாடுகளில் இந்த ஜி.எஸ்.டி முறை அமலில் உள்ளது. இதனை அமல்படுத்திய
நாடுகள், ஆரம்பத்தில் குறைவான வரி
விகிதங்களுடன் தொடங்கி, பின்னர் படிப்படியாக வரிகளை உயர்த்தின.
இந்தியா, கடந்த 17 ஆண்டுகளாக இந்த வரி பற்றி
விவாதித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர
முயற்சிகள் மேற்கொண்டு, 2017 ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது.
ஜி.எஸ்.டி எப்படி
செயல்படுத்தப்படுகிறது?
பொருள்கள் நுகர்வு அல்லது
பயன்படுத்தும்போது ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். எனவே, ஒரு சேவை அல்லது பொருள், நுகர்வோரால் பயன்படுத்தப்படும் வரை இந்த வரியின் கரங்கள் நீளும்.
விலையுள்ள பொருள்களுக்குத்தான்
ஜி.எஸ்.டி என்பதில்லை, விலையில்லா பொருள்களுக்கும்
ஜி.எஸ்.டி வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும் என்பது
பிரிவு 1-ல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
நிரந்தர மாற்றம் அல்லது வியாபாரச்
சொத்துகள் எங்கு உள்ளீட்டு வரவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்தச் சொத்துகள் (Permanent
Transfer or Disposition of Business Asset), சரக்குகள் மற்றும் சேவைகளை விநியோகம் செய்யும்போது (Related Party அல்லது District Person), ஏஜென்ட்டுக்கு
சப்ளை செய்யும்போது அல்லது சப்ளை, ஏஜென்ட்டினால்
செய்யப்படும் போது, சேவைகளை இறக்குமதி செய்யும்போது என
இவற்றுக்கெல்லாம் ஜி.எஸ்.டி வரி கட்டாயம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, ஒருவர் தன் தொழில் பயன்பாட்டுக்காகக் கணினியை வாங்கி, அதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறித்தத் தகவல்களைச் சேகரித்து
வைக்கிறார். எனவே, அது அவருடைய மூலதனச் சொத்தாகக்
கருதப்படும். அதற்கான உள்ளீட்டு வரியை அவர் ஏற்கெனவே எடுத்திருப்பார். இந்தச்
சொத்தை அவர் வெளியேற்றம் அல்லது மாற்றம் செய்யும்போது, ஜி.எஸ்.டி கட்டாயம் செலுத்த வேண்டும். மேலும், ஒரு பொருளைத் தானமாகத் தந்தாலும், தானமாகத் தரும் நபர் அதற்கான ஜி.எஸ்.டி-யைச் செலுத்தவேண்டும்.
ஜி.எஸ்.டி வரிவிகிதங்கள்!
ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் 5%, 12%, 18%,
28% என நான்கு விதமாக உள்ளன. இதில்
அதிகபட்சமாக 28% என்பது எந்தப்
பிரிவின் கீழும் வராமல் இருக்கும் பொருள்களுக்கு உள்ளது. உதாரணமாக, பொழுதுபோக்குக்காகத் தபால் தலைகள், காசுகள் சேகரித்து விற்கும் தொழிலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரி வகைகள்!
ஜி.எஸ்.டி-யில் பல வகையான வரி
வகைகள் இருக்கின்றன.
* CGST என்பது மத்தியப்
பொருள்கள் மற்றும் சேவை வரி. இதனை மத்திய அரசு நிர்வகிக்கும்.
* SGST என்பது மாநிலப்
பொருள்கள் மற்றும் சேவை வரி. இதனை மாநில அரசு நிர்வகிக்கும்.
* UTGST என்பது யூனியன்
பிரதேசப் பொருள்கள் மற்றும் சேவை வரி
* IGST என்பது
ஒருங்கிணைந்தப் பொருள்கள் மற்றும் சேவை.
ஐ.ஜி.எஸ்.டி என்பது வேறு
மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது விலைப் பட்டியலில் குறிப்பிட்டு
ஜி.எஸ்.டி-யின் கீழ் வரிச் செலுத்த வேண்டும்.
மேலும், சரக்குகளை இறக்குமதி செய்யும் போதும் தற்போதுள்ள சுங்க வரியுடன்
ஐ.ஜி.எஸ்.டியும் சேர்த்துச் செலுத்த வேண்டும்.
உள்ளீட்டு வரிவரவு!
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் வரவேற்புக்கு உரிய அம்சம் எனில், அது உள்ளீட்டு வரி (Input Tax Credit) தான். தற்போதுள்ள வரி முறைகளின்படி, வரிக்கு வரி செலுத்தி வரும் நடைமுறை நீக்கப்படுகிறது. முன்னரே
ஒருவர் செலுத்திய வரியை கழித்துக் கொண்டு தங்கள் விநியோகத்துக் கான வரியை மட்டும் செலுத்தினால்போதும். வெவ்வேறு நிலைகளில்
செலுத்தப்பட்ட வரியைக் கழித்துக்கொண்டு மீதியைச் செலுத்தினால் போதும். இதையே
உள்ளீட்டு வரி என்கிறோம். இதனால் வரி மேல் வரி விதிப்பு இல்லாமல் போகிறது. தொழில், வர்த்தகம் செய்பவர்களுக்கும், மக்களுக்கும் வரிச் சுமை குறைகிறது. ஜி.எஸ்.டி.யினால் ஏற்படும்
மிகப் பெரிய நன்மை இதுவாகும்!
கூட்டு விநியோகம்!
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட
பொருள்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய பொருள்களை
விற்பனை செய்வதே கூட்டு விநியோகம். டூத் பிரஷ், டூத் பேஸ்ட் போன்ற பொருள்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய
பொருள்களாகும். இதுபோன்ற பொருள்களைச் சேர்த்து விற்பனை செய்யும்போது, இது கூட்டு விநியோகம் என்று அழைக்கப்படும்.
உதாரணமாக, நாம் ரயிலில் பயணம் செய்கிறோம். அதற்காகப் பயணச் சீட்டு முன்பதிவு செய்கிறோம். ஆனால், பயணம் செய்யும்போது அங்கு தரப்படும் உணவு, போர்வை, தலையணைகளுக்கும் சேர்த்தே பணம்
செலுத்துகிறோம்.
இங்கே அடிப்படை விநியோகம் நாம் பயணிக்க உபயோகிக்கும் பயணச்சீட்டு மட்டுமே. இதற்கு என்ன வரி
விகிதம் விதிக்கப்படுகிறதோ, அதுவே உணவு, தலையணை, அனைத்துக்கும் பொருந்தும்.
கலப்பு விநியோகம்!
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட
தொடர்பில்லாத பொருள்களை விற்பனை செய்வதே கலப்பு விநியோகம் (Mixed supply) ஆகும். விற்பனை செய்யும்போது எதற்கு அதிக வரி
விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதுவே மற்ற பொருள்களுக்கும்
பொருந்தும்.
உதாரணமாக, டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குச் சென்று சலவை சோப்பு வாங்குகிறோம்.
அதன் விலை ரூ.50. இதற்கான வரி 2%. இதுவே ஒரு சோப்புத் தூள் பாக்கெட்டை வாங்கினால் ரூ.60. அதற்கான வரி 1%. இந்த இரு வெவ்வேறு பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து ஆஃபர் விலையில் வாங்கும்
போது இவற்றுக்கு விதிக்கப்படும் வரியானது 2 சதவிகிதமாக இருக்கும். காரணம், அதிகபட்ச வரியே கலப்பு விநியோகத்தில் விதிக்கப்படும்.
தொகுப்புமுறைத் திட்டம்!
முந்தைய நிதியாண்டில், உள் மாநிலத்துக்குள் ரூ.75 லட்சத்துக்கும் குறைவான மொத்த உற்பத்தி (Aggregate
Turnover) உள்ளவர்கள் இந்தத் தொகுப்பு முறைத்
திட்டத்தைப் (Composition Scheme) பயன்படுத்திக்
கொள்ளலாம். இதில் வரி என்பது 1% – 2.5% வரை இருக்கும்.
இவர்கள் உள்ளீட்டு வரி பெற அனுமதியில்லை.
இந்தத் திட்டத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், தணிக்கையாளர்கள்
போன்ற நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்குவார்களா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஒரே ஒரு நிரந்தரக் கணக்கு எண் (Pan Card) வைத்திருப்பவர் வெவ்வேறு நான்கு தொழில்களைச் செய்கிறார் எனில், அதில் ஒரு தொழிலை தொகுப்பு முறைத் திட்டத்திலும், மற்றத் தொழில்களை வெவ்வேறு திட்டத்திலும் பயன்படுத்தி, ஜி.எஸ்.டி வரியினைச் செலுத்த முடியாது. ஒரு தொழிலுக்குத் தொகுப்பு
முறைத் திட்டத்தினை எடுத்து வரி விகிதம் செலுத்தினால், மற்ற மூன்று தொழில் களுக்கும் அதே தொகுப்பு முறை திட்டத்தில் தான்
வரியினைச் செலுத்த வேண்டும்.
யாருக்கெல்லாம் இந்தத் தொகுப்புமுறை
திட்டம் பொருந்தாது?
உணவு விடுதி தவிர, எந்தச் சேவைக்கும் இந்தத் திட்டம் கிடையாது. இரு வேறு
மாநிலங்களுக்குள்ளாக விற்பனை செய்யும் போது இந்தத் திட்டத்தினை எடுத்துக்கொள்ள
முடியாது. உதாரணம், மின்னணு வர்த்தகம் மூலம் பொருள்களை
வழங்குபவர்கள் ப்ளிப்கார்ட், அமேசான் போன்று மின்னணு வர்த்தகம்
செய்பவர்கள்).
சில குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் – சி.ஜி.எஸ்.டி, எஸ்.ஜி.எஸ்.டி, யூ.டி.ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் வரிக்குட்படாதப் பொருள்களை
வழங்குபவர்கள், தொகுப்பு முறைத் திட்டத்தில்
உள்ளீட்டு வரி வரவு செய்ய முடியுமா?
தொகுப்பு முறைத் திட்டத்தின் கீழ்
பதிவு செய்யப்பட்ட நபர், உள்ளீட்டு வரி வரவை செய்ய முடியாது.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு
செய்தவர்களுக்கு வரி வசூலிக்க அனுமதி இல்லை. அதாவது, தொகுப்பு முறை விநியோகிப்பாளர் விலைப் பட்டியலைத் தரத் தேவையில்லை
என்பதால், அவரிடமிருந்து சரக்குகளை வாங்கும்
வாடிக்கையாளர்கள் உள்ளீட்டு வரி வரவை செய்ய முடியாது.
சாதாரண வரிதாரர் என்றால் என்ன?
சாதாரண வர்த்தகர் (Casual Tax
payer) என்பவர், ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வெவ்வேறு இடத்தில்
காலத்துக்குத் தகுந்தவாறு வியாபாரம் செய்பவர்கள்.
உதாரணமாக, பண்டிகைக் காலங்களில் பட்டாசு, துணிமணி போன்றவற்றை வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் வியாபாரம்
செய்யும் பொருள்களுக்கு வரி விதிப்பு இருந்தால், வருவாய் வரம்பு இல்லாமல் எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த
வேண்டும். ரூ.20 லட்சம் வரை இருக்கும் வரி விலக்கு
அவர்களுக்குக் கிடையாது.
ஜி.எஸ்.டி – யில் விநியோகம்!
விநியோகம் என்பதற்கான விளக்கம்
அரசினால் தரப்பட்டுள்ளது. விநியோகம் என்பது விற்பனை, சேவை, இறக்குமதி, பண்ட மாற்றம், பரிவர்த்தனை, வாடகை, சில வகை மதிப்பில்லாத மாற்றம் என
அனைத்து வகை மாற்றங்களையும் உள்ளடக்கும். சுருக்கமாகச் சொன்னால், பதிவு செய்யப்பட்ட வரிதாரரின் வரிக்குட்பட்ட பிராந்தியத்தில், வரிக்குட்பட்ட சரக்குகளையோ அல்லது சேவைகளையோ வியாபார அபிவிருத்தி
செய்யும் நோக்கில் செய்யும் பரிவர்த்தனை, விநியோகம் என்ற வரம்புக்குள் வரும்.
ஒரு நிறுவனத்தின் ஒரு கிளையில்
இருந்து மற்றொரு கிளைக்கு சரக்கு மாற்றம் செய்யும் போதும், விநியோகம் என்றே எடுத்துக் கொள்ளப்படும்.
ஹெச்.எஸ்.என் கோட்!
ஹெச்.எஸ்.என் (Harmonized
System Nomenclature) கோட் என்பது
பொருள்கள் மற்றும் சேவைகளின் உலகளாவிய தனித்துவம் பெற்ற அடையாளக் குறியீடு.
எந்தப் பொருளுக்கு என்ன வரி என்பதை எளிதில் கண்டுபிடிக்கவும், எந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய வரி என்பதனைக் கண்டறியவும்
கொண்டு வந்துள்ள நடைமுறையே ஹெச்.எஸ்.என் கோட் என்பதாகும்.
உதாரணமாக, இறக்குமதியாளர், பிளாஸ்டிக்
பொருள்களை இறக்குமதி செய்கிறார் எனில், உலகம் முழுவதும் அதன் ஹெச்.எஸ்.என் குறியீடு 39 ஆகும். பொறியியல் பொருள்களுக்கு 84. எலெக்ட்ரானிக் பொருள்களுக்கு 85 என்று இருக்கும். இந்த வழிமுறை மூலம், பொருள்களுக்கு உரிய கட்டணத்தை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். இந்த
இலக்க எண்கள் சர்வதேச சந்தைகளில் உள்ளபடியே உள்ளது. ஹெச்.எஸ்.என் கோட் முறை பத்து
வருடங்களுக்கு முன்னரே மத்திய கலால் வரியில் உள்ளது. தற்போது 100% நடைமுறைப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-யில் சேவைத் துறையைப்
பொறுத்தமட்டில், ஸ்டேக் (STAC –
Service Tax Accounting Code) என
வைத்துள்ளார்கள். உதாரணமாக, ஆடிட்டர்கள் எனில், அவர்களுக்குத் தனி குறியீட்டு எண் இருக்கும்.
ஹெச்.எஸ்.என் கோடு கட்டாயமா?
ரூ.1.5 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான
உற்பத்திக்கு இரண்டு இலக்கு ஹெச்.எஸ்.எண் கோடு குறிப்பிட வேண்டும். ரூ.5 கோடி -க்கு மேலான உற்பத்திக்கு நான்கு இலக்க ஹெச்.எஸ்.எண் கோடு
குறிப்பிட வேண்டும். இது போகப் போக எட்டு எண்களாக அதிகரிக்கப்படும்.
ஆரம்பத்தில் நடைமுறையை எளிதாக்கவே
இரண்டு இலக்க எண்களில் இருந்து தொடங்கப்படுகிறது. மத்தியக் கலால் வரி செலுத்தும்
உற்பத்தியாளர்களுக்கு ஏற்கெனவே இந்த நடைமுறை உள்ளது. பிற வர்த்தகர்களுக்கு இது
புதிதாக இருக்கும்.
பொருள்களுக்கான விநியோக இடம் எது?
விநியோகத்தில் பொருள்கள்
இயக்கத்தில் இருக்கும்போது – வழங்கல் இடம்
என்பது பொருள்களின் விநியோகம் நிறுத்தப்படும் இடமாகும். உதாரணமாக, ரவி என்பவர் டெல்லியிலிருந்து பொருள்களை ஹரியானாவில் (பஞ்சாப்)
உள்ள ராஜேஷ் என்பவருக்கு விநியோகம் செய்கிறார். இங்கு விநியோக இடம் என்பது ஹரியானா ஆகும். ஏனென்றால், ஹரியானாவில் பொருள்களின் இயக்கம் நிறுத்தப்படுகிறது.
விநியோகத்தில் பொருள்கள் இயக்கம் இல்லாதபோது – பொருள்கள் கிடைக்கப் பெறும் இடம் விநியோக இடமாகக் கருதப்படும்.
ஜி.எஸ்.டி – யில் வரி விதிப்பு நிகழ்வு எப்போது?
தற்போதுள்ள நடைமுறைப்படி பொருள்களை
உற்பத்தி செய்து தொழிற் சாலையில் இருந்து வெளியே அனுப்பும் போது உற்பத்தி வரி, பொருள்களை விற்பனை செய்யும்போது விற்பனை வரி, சேவை அளிக்கும்போது சேவை வரி என வரி விதிப்புகள் நிகழ்ந்தன.
ஜி.எஸ்.டி நடைமுறையில் பொருள்களை
விநியோகம் செய்யும்போது ஜி.எஸ்.டி மட்டுமே இருக்கும்.
உற்பத்தி என்கிற நடைமுறையிலிருந்து
விநியோகம் என்ற நடைமுறைக்கு வரி விதிப்பு மாறுவது கவனத்தில் கொள்ள வேண்டிய
மாற்றமாகும்.
விநியோக இடம்!
ஜி.எஸ்.டி ஆரம்பநிலை வரி முறையிலிருந்து
நுகர்வு சார்ந்த வரி முறைக்கு இந்தியா நகர்கிறது. இதன் விளைவாக, விநியோகமாகும் இடம் (Place of Supply) வரியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. என்ன சரக்கு, எங்கிருந்து அனுப்புகிறார், அனுப்புகிறவர் யார், பெறும் நபர் யார், சரக்கு சென்று
சேரும் இடம் எது, எந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய
வரி என்பதைக் கண்டறியவே விநியோக இடம் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
உதாரணமாக, A என்பவர் சேலத்திலிருந்து (தமிழ்நாடு) இருந்து கொச்சியில் (கேரளா) உள்ள B என்பவருக்குத் தன் பொருளை வழங்குகிறார். இது இரு மாநிலத்துக்கு
இடையேயான பரிவர்த்தனை. எனவே, ஐ.ஜி.எஸ்.டி (IGST) விதிக்கப்படும். எனினும், அதே பொருளை ஆலப்புழையிலிருந்து கேரளாவின் வேறொரு ஊருக்கு மாற்றினால், இது உள்ளார்ந்த விநியோகம்.
இறுதியில், இந்தப் பொருள்கள் மும்பைக்கு (மகாராஷ்ட்ரா) மாற்றப்பட்டு, இறுதியாக வாடிக்கையாளரைச் சென்றடையும்.
அந்த நிலையில், ஆலப்புழையில் இருந்து மும்பைக்கு வழங்கப்படும் விநியோகத்துக்கு
ஐ.ஜி.எஸ்.டி (IGST) விதிக்கப்படும்.
ஜி.எஸ்.டி இலக்கை அடிப்படையாகக் கொண்ட வரி முறை என்பதால் மகாராஷ்ட்ரா அரசு
வருவாய் ஈட்டும்.
விநியோகம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
விநியோகிப்பவரின் இடம், விநியோகம் நடைபெறும் இடம் ஆகிய இரண்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விநியோகம் மாநிலத்துக்குள் நடைபெறும் விநியோகமா அல்லது இரு மாநிலங்களுக்கு இடையில் இடம்பெறும்
விநியோகமா என்பது தீர்மானிக்கப்படும்.
உள்மாநில விநியோகம்
விநியோகிப்பவரின் இடம் மற்றும்
விநியோக இடத்தின் இருப்பிடம் ஒரே மாநிலத்தில் இருந்தால், விநியோகம் என்பது மாநிலத்துக்குள் நடைபெறும் விநியோகம் ஆகும்.
ஒரே மாநிலத்தில் உள்ள வேறு
கிளைகளுக்குச் சரக்குகளை எடுத்துச் சென்றால் டெலிவரி சலான் மற்றும் மின்னணு வழி
ரசீது இருந்தால் போதுமானது.
வெளிமாநில விநியோகம்
விநியோகிப்பரின் இடம் மற்றும்
விநியோக இடத்தின் இருப்பிடம் வேறு வேறு மாநிலத்தில் இருந்தால், விநியோகம் என்பது மாநிலங்களுக்கிடையே நடைபெறும் விநியோகம் ஆகும்.
இன்வாய்ஸ் என்பது என்ன?
ஜி.எஸ்.டி-யில் இன்வாய்ஸ் (பில்)
என்பது முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இது வரை இருந்த இன்வாய்ஸ் முறைகளை
முற்றிலும் மாற்றியமைத்துள்ளது அரசு. இன்வாய்ஸ் சரியாக இருந்தால் மட்டுமே
உள்ளீட்டு வரி வரவினைப் பெறமுடியும். சரக்குகளை வாங்கும்போதும், விற்கும்போதும் இன்வாய்ஸ் மிகவும் அவசியம்.
சரக்கு வாங்குபவர், விற்பவர் என இருவருமே இன்வாய்ஸை சரியாக வைத்திருந்தால் மட்டுமே
உள்ளீட்டு வரி வரவை எடுக்க முடியும். இதில் ஒருவர் பிழையாகக் கணக்குகளை வரித்
தாக்கலின் போது பதிவு செய்திருந்தாலும், இரண்டு கணக்குகளும் ஒத்துப்போகாமல் பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.
இன்வாய்ஸில் குறிப்பிடப்பட
வேண்டியவை
வரி இன்வாய்ஸில் ஜி.எஸ்.டி பதிவு
செய்யப்பட்ட விநியோகஸ்தரின் பெயர்,் முகவரி, ஜி.எஸ்.டி பதிவு எண், இன்வாய்ஸ் எண் தொடர்ச்சியாகவும், தனிப்பட்ட எண்ணாகவும் (Unique Number) இருக்க வேண்டும். இன்வாய்ஸின் தேதி, சரக்கினை வாங்குபவரின் பெயர்,முகவரி,அவருக்கு ஜி.எஸ்.டி பதிவு எண்
இருந்தால் குறிப்பிட வேண்டும்.
சரக்கு சென்று சேரும் மாநிலம்
மற்றும் மாநில எண் குறிப்பிடப்பட வேண்டும். தவிர, பொருள் டெலிவரி செய்யும் முகவரி, வாங்குபவரின் முகவரியில் இருந்து வேறுபட்டால் அதையும் குறிப்பிட
வேண்டும். சரக்கின் விவரம், சரக்கின் எண்ணிக்கை, சரக்கின் மதிப்பு, சரக்கின்
ஹெச்.எஸ்.என் குறியீட்டு எண் அல்லது சேவையின் அக்கவுன்டிங் கோட் ஆகியவற்றைக்
குறிப்பிட வேண்டும். மேலும், என்ன வரியின் கீழ் வருகிறது மற்றும்
டிஜிட்டல் கையொப்பம் அனைத்தும் இருக்க வேண்டும்.
ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்!
ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் என்பது, ஜி.எஸ்.டி பதிவு செய்யப்படாத நபரிடம் இருந்து ஜி.எஸ்.டி பதிவு
செய்த நபர் சரக்குகளை வாங்கியிருந்தால், அதற்குரிய வரியினை வாங்கியவரே செலுத்த வேண்டும். இந்த நடைமுறை இதுவரை
சேவைத் துறையில் மட்டுமே இருந்தது, தற்போது சரக்கு
களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்பணம் – வரி எப்போது செலுத்த வேண்டும்?
முன்பணம் பெற்றிருந்தால், அதற்கு ரெசிப்ட் வவுச்சர் கொடுக்க வேண்டும். அதற்குரிய வரியை அந்த
மாதமே செலுத்திவிட வேண்டும்.
முன்பணத்துக்கான வரி தெரியவில்லை
எனில், 18% வரி செலுத்த
வேண்டும். மேலும், முன்பணம் பெறும்போது அது உள்மாநில
விற்பனையா அல்லது வெளிமாநில விற்பனையா என்று தெரியவில்லை எனில், அதற்கு ஐ.ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். முன்பணம் வாங்கியதற்காக
செலுத்திய ஜி.எஸ்.டி வரியை, அந்த முன்பணத்துக் காக செய்யப்படும் விற்பனைக்கான ஜி.எஸ்.டி
வரியில் கழித்துக்கொள்ளலாம். பொருளை விற்பவர் முன்பணத்துக்கு வரி
செலுத்தியிருந்தால், வாங்குபவர் உள்ளீட்டு வரி வரவை
எடுத்துக்கொள்ள முடியாது. வாங்கிய முன்பணத்துக்கு சரக்கு தராமல் இருந்தால்
ரீஃபண்ட் ரசீது தரவேண்டும்.
ஜி.எஸ்.டி ஏற்றுமதி இறக்குமதி!
ஏற்றுமதிக்கு முந்தைய விற்பனைக்கு
தற்போதுள்ள ஜி.எஸ்.டி சட்டத்தில் வரி விலக்கு கிடையாது. இன்வாய்ஸில் வரி யினைக்
குறிப்பிட்டே விற்பனை செய்ய வேண்டும். ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மற்றும்
சேவைகள் பூஜ்ய விகித சப்ளையாக கருதப்படும். அதற்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது.
ஏற்றுமதி செய்வதற்காக, கொள்முதல் செய்யவதற்காகச்
செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி-யை ஏற்றுமதியாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஏற்றுமதி இன்வாய்ஸ் மூலமாக ஏற்றுமதி செய்யப்படு கிறதா அல்லது
ஒப்பந்தத்தின் கீழ் வரி செலுத்தாமல் ஏற்றுமதி
செய்யப்படுகிறதா என்பதைத் தெரிவிப்பது அவசியம்!
ஏற்றுமதியாளர் அவருடைய ஐ.இ.சி
மற்றும் நிரந்தர அடையாள எண் ஆகியவற்றை ஜி.எஸ்.டி பதிவில் குறிப்பிட வேண்டும்.
ஏற்றுமதியாளர்கள் ஐ.ஜி.எஸ்.டி செலுத்தி, உள்ளீட்டு வரி வரவினை எடுத்துக்கொள்ளலாம். அல்லது பிற்பாடு மொத்தமாக வரியைச் செலுத்தலாம். சரக்குகள் சென்று சேரும் நாட்டின்
எண்களை இன்வாய்ஸில் குறிப்பிட வேண்டும்.
இறக்குமதி செய்யப்படும்போது
வசூலிக்கப்படும் கூடுதல் வரி (Additional duty CVD) மற்றும் சிறப்புக் கூடுதல் வரிக்கு (Special
Additional Duty SAD) மாற்றாக
ஐ.ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும்.
இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்
மற்றும் சேவைகளுக்கு உள்ளீட்டு வரி வரவை எடுத்துக் கொள்ளலாம்.
ஜி.எஸ்.டி வரி வரம்பு மாறுபடும்
மாநிலங்கள்!
மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், அசாம், திரிபுரா, மிசோரம், சிக்கிம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு
மாநிலங்களுக்கும் மலைப் பிரதேசங்களுக்கும் ரூ.10 லட்சத்துக்கு மேல் வர்த்தகமாகும்போது ஜி.எஸ்.டி வரி செலுத்த
வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி மதிப்பீடு!
சரக்கு மற்றும் சேவைகள்
விநியோகத்தின் பரிவர்த்தனை மதிப்பை வைத்தே ஜி.எஸ்.டி வரி மதிப்பீடு (Valuation of
GST ) செய்யப்படும். ஒப்பந்த விலை என்று
கூறுவதும் பரிவர்த்தனை மதிப்பைக் குறிப்பிடுகிறது. வரிக் கணக்கிடவும் ஒப்பந்த
விலையே எடுத்துக் கொள்ளப்படும்.
ஒரு பொருளை விநியோகிக்கும்போது
தரப்படும் கமிஷன், பேக்கிங் கட்டணம் போன்ற செலவுகள், விநியோகிப்பாளர் பொருள்களை விநியோகம் செய்யும்போது வசூலித்த
கட்டணம் உட்பட அனைத்தையும் பரிவர்த்தனை மதிப்பில் செய்யலாம்.
விநியோகப்பாளர் செலுத்திய வட்டி, அபராதம் அனைத்தையும் பரிவர்த்தனை மதிப்புடன் சேர்க்கலாம். நேரடியாக
விலையில் இணைக்கப்பட்ட மானியங்களைப் பரிவர்த்தனை மதிப்பில் சேர்க்கலாம். இவற்றுள்
மத்திய, மாநில அரசுகளால் நேரடியாக
வழங்கப்பட்ட மானியங்கள் வராது.
சொகுசுப் பொருள்கள் என்பவை எவை?
ஜி.எஸ்.டி-யில் சொகுசுப்
பொருள்களுக்கு 28% வரி
விதிக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய்க்கும்
மேல் உள்ள சினிமா டிக்கெட், கார், புகையிலை, குளிர்பானங்கள், கோகோ இல்லாத சாக்லெட்கள், சாக்லெட்டுடன் கூடிய வேஃபர் பிஸ்கட்கள், சூவிங் கம், பான் மசாலா உள்ளிட்டவை 28% வரி அமைப்பில் உள்ளது.
பர்சனல் கேர் பொருள்களான சோப்பு, ஷேவிங் க்ரீம், ஷாம்பூ, டை, சன் ஸ்கிரீன், பெயின்ட், வால் பேப்பர், செராமிக் டைல்கள், வாட்டர் ஹீட்டர், அதிநவீன வாஷிங்மெஷின், ஏ.டிஎம், வெண்டிங் மெஷின், வாக்குவம் க்ளீனர், ஷேவர் ஆகியன 28 சதவிகித வரி விதிப்பில் வருகின்றன.
சேவை வரி உயருமா?
சேவை வரி தற்போது 15% மட்டுமே. ஆனால், புதிய
ஜி.எஸ்.டி-யில் சேவைத் துறைக்கு 18% வரி
நிர்ணயித்துள்ளது அரசு.
இதனால் வங்கிச் சேவைகள், இன்ஷூரன்ஸ் பிரீமியம், கிரெடுட் கார்டு பில், உள்ளிட்ட கட்டணம் அதிகரிக்கும். ரயில் பயணங்களைப் பொறுத்தவரையில், 4.5% ஏ.சி பெட்டிகளுக்கு சேவை வரி இருந்தது. ஜி.எஸ்.டி-யில் அது 5% உயரும். இதனால் சிறிய விலை ஏற்றம் இருக்கும்.
ஆனால், தொழில் முறையாகப் பயணம் செய்பவர்கள் ரயில் கட்டணத்தை உள்ளீட்டு வரி
வரவாக எடுத்துக்கொள்ளலாம். விமானப் போக்குவரத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கைக்கு இனி
12% வரி இருக்கும். முன்பு 9% வரி இருந்தது.
ஜி.எஸ்.டி… எப்படிப் பதிவு செய்ய வேண்டும்?
ஜி.எஸ்.டி பதிவு
எளிமையாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-க்கான அரசின் வலைதளத்தில், ஆன்லைன் மூலம் பதிவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெயர், நிரந்தரக் கணக்கு எண், இ-மெயில், மொபைல் எண் ஆகியவற்றை பகுதி-A எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
அந்த வலைதளத்தில், இணைய குறிப்பு எண் மற்றும் கடவு எண் கொடுக்கப்படும். பின் பகுதி B-ல் விண்ணப்பத்தை உரிய படிவத்தில், உரிய ஆவணங்களுடன் (புகைப்படம், வியாபார அமைப்புக்கான சான்றிதழ் என இதர ஆதாரங்கள்) சமர்ப்பிக்க
வேண்டும். இதனை டிஜிட்டல் கையெழுத்து மூலமாக உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பம்
சரிபார்க்கப்பட்டு, மூன்று நாள்களுக்குள் சான்றிதழ்
வழங்கபடும்.
யாரெல்லாம் பதிவு செய்தல் கட்டாயம்?
ஒரு மாநிலத்தில் இருந்து இதர
மாநிலங்களுக்கு விநியோகம் செய்பவர்கள், வரி செலுத்தும் சாதாரண வர்த்தகர்கள் (உதாரணமாக, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விற்பனை செய்பவர்களைச்
சொல்லலாம்), நேர்மாறான வரி விதிப்பு (Reverse Charge
Mechanism) அடிப்படையில் வரி செலுத்துபவர்கள், வரி செலுத்தும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், வருமான வரிப்பிடித்தம் (TDS) மற்றும் பதிலீடு வரி சேகரிப்பு (TCS) முறையில் வரி செலுத்துபவர்கள், உள்ளீட்டு சேவை விநியோகஸ்தர், மின்னணு வர்த்தக ஆபரேட்டர், இந்தியாவுக்கு வெளியே டிஜிட்டல் சேவை விநியோகம் தருபவர்கள் பதிவு
செய்து கட்டாயம்.
மேலே குறிப்பிட்டவர்களின் விநியோக
வரம்பு ரூ.20 லட்சத்துக்குள் இருந்தாலும், ஜி.எஸ்.டி பதிவு செய்துகொள்வது அவசியமாகிறது. ஒரு மாநிலத்துக்கு
ஒரு பதிவு என்ற முறையில் தனித்தனி பதிவு அவசியம்.
வரிக் கணக்கு தாக்கல்
செய்யாவிட்டால்..?
வரி விதிப்புக்குட்பட்ட பொருள்களை
வாங்கும் அல்லது விற்கும் விநியோகஸ்தர்கள் உரிய நேரத்தில் வரித் தாக்கல்
செய்யாவிட்டால், அந்த வியாபாரத்தில் தொடர்புடைய
மற்றவரும் பாதிக்கப்படுவார்.
உங்களுடன் வியாபாரம் செய்தவரும்
உள்ளீட்டு வரி எடுக்க முடியாமல் போய்விடும். விநியோகஸ்தர்கள் மேலும் கூடுதல் வரி
மற்றும் அபராதமும் செலுத்த நேரிடும்.
விலைப்பட்டியலில் வரியை எப்படிக்
குறிப்பிட வேண்டும்?
விலைப்பட்டியலில் விலையை
குறிப்பிடும்போது இந்தப் பொருள், வரியை
உள்ளடக்கியது என இனி காண்பிக்க முடியாது. வரி தனியாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
அப்போதுதான் வியாபார ரீதியாக
அவரிடம் பொருள் வாங்குபவர் உள்ளீட்டு வரியை தன்னுடைய வரித் தாக்கலில் காண்பிக்க
முடியும். பேக்கிங் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணங்களைக் கணக்கிடும்போது வரி
சேர்க்கத் தேவை இல்லை. விற்பனை தொகைக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும்.
மின்னணு வழி ரசீது!
மின்னணு வழி ரசீது (e-way bill) என்பது பொருள்களின் இயக்கத்துக்காக ஜி.எஸ்.டி-யின் பொது
வலைதளத்தில் கொடுக்கப்படும் ரசீதாகும்.
ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட நபர்
ரூ. 50,000-க்கு அதிக
மதிப்புள்ள பொருள்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இந்த மின்னனு வழி
ரசீது இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இந்த மின்னணு வழி ரசீதை எஸ்.எம்.எஸ்
மூலமாகப் பெற அல்லது ரத்து செய்ய வசதி உள்ளது.
ஒரு மின்னணு வழி ரசீதில் தனித்துவம்
வாய்ந்த ரசீது எண் உருவாக்கப்படும்போது பெறுபவர் மற்றும் வழங்குபவர், இடமாற்றுபவர் ஆகியோரால் பயன்படுத்தப்படும்.
எப்போதெல்லாம் மின்னணு வழி ரசீது
உருவாக்கப்படும்.?
பொருள்களை ஓர் இடத்தில் இருந்து
மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்லும்போது மின்னணு வழி ரசீது உருவாக்கப்படும்.
விநியோகம் செய்யும்போது, குறைபாடு இருப்பின் பொருளைத்
திருப்பி அனுப்பும்போது, பதிவு செய்யப்படாத நபரிடம் இருந்து
உள்ளார்ந்த வினியோகம் (Inward Supply) காரணமாக மின்னனு
வழி ரசீது உருவாக்கப்பட வேண்டும்.
கால அவகாசம் எப்படி கணக்கிடப்படும்?
சரக்குகள் பயணிக்கும் தூரத்தைக்
கொண்டு அதற்கான கால அவகாசத்துக்கு இந்த ரசீது செல்லுபடியாகும். இது தேதி மற்றும்
நேரத்தைப் பொறுத்துக் கணக்கிடப்படும்.
கமிஷனர், குறிப்பிட்ட வகை பொருள் களுக்கான மின்னணு வழி ரசீதின் கால
அவகாசத்தினை நீட்டிக்கலாம். இதற்கான கால அட்டவணை ஜி.எஸ்.டி வலைதளத்தில்
தரப்பட்டுள்ளது. உதாரணமாக, கோவையிலிருந்து மேட்டுப் பாளையம் செல்ல ஒரு மணி நேரமே ஆகும். ஆனால், சரக்கு ஏற்றிச் சென்ற வாகனம் ஆறு மணி நேரம் காலதாமதமாகி இருந்தால்
அது ஏன், எதற்கு எனப் பதில் அளிக்க வேண்டும்.
கால தாமதம்… அபராதம் எவ்வளவு?
காலதாமதமாகச் செலுத்தப்படும்
ஒவ்வொரு நாளுக்கும் குறைந்தபட்சம் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
அதிகபட்சம் ரூ.5,000 வரை அபராதம்
இருக்கும்.
இதுவே தொடர்ந்தால் மொத்த
உற்பத்தியில் 0.25% அபராதமாக
விதிக்கப்படும்.
வரிதாரர் உரிய வரிகளை உரிய தேதியில்
செலுத்தி வரித் தாக்கல் செய்யும் பொருட்டு அவரது வரி இணக்க மதிப்பீடு (Compliance
Rating) கணக்கிடப்படுகிறது.
நன்றி : நாணயம் விகடன் - 16.07.2017