disalbe Right click

Saturday, July 15, 2017

சசியிடமிருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்

Image may contain: 4 people
சசியிடமிருந்து மாதந்தோறும் ரூ.10 லட்சம் மாமூல்
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, அத்துறையின் டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் மீதே புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ம.ஜ.த., கட்சியைச் சேர்ந்த, கர்நாடகா, 'மாஜி' முதல்வர் குமாரசாமி கூறியதாவது: சிறை அதிகாரிகள்டி.ஜி.பி.,க்கு மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அதில், 25 லட்சம் ரூபாய், டி.ஐ.ஜி.,க்கு செல்ல வேண்டும். இந்த பணத்தை வழங்காமல், டி.ஜி.பி.,யே பெற்றுக் கொண்டதால் தான், முறைகேடு வெளியே வந்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.
விதிமுறைகளை மீறி, மீடியாக்கள் முன் பேட்டியளித்த, சத்யநாராயண ராவ் மற்றும் ரூபா ஆகியோரை, விடுப்பில் அனுப்பி விட்டு, விசாரணை நடத்த வேண்டும். எனக்கு கிடைத்துள்ள தகவலின் படி, சசிகலாவிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டது மட்டுமின்றி, மாதந் தோறும் 10 லட்சம் ரூபாய், 'மாமூல்' தரவேண்டு மென்றும் கூறியதாக தெரிய வந்துள்ளது.
நிர்வாகம் சரியில்லாததால் தான், அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொள்கின்றனர். மற்ற விசாரணை போன்று, இவ்விசாரணையிலும், 'பி' ரிப்போர்ட் வழங்கக் கூடாது. காங்கிரஸ் ஆட்சி முடியும் தருவாயில், ஒரு வழக்கிலாவது, உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கர்நாடக அரசுக்கு 'சிம்ம சொப்பனம்' ரூபா
* கர்நாடக மாநிலம் தாவணகரேயைச் சேர்ந்தவர் ரூபா, 42; எஸ்.எஸ்.எல்.சி.,யில், மாநில அளவில், 20வது ரேங்க் பெற்றார். பி.ஏ., பட்டப் படிப்பில், தங்கப்பதக்கம் பெற்று மாநிலத்தில் முதலிடமும்; எம்.ஏ., முதுகலை பட்டப் படிப்பில், மூன்றாவது இடமும் பெற்றார்.

* கடந்த, 2000ல் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தேசிய அளவில், 43வது இடத்தை பிடித்து, ஐ.பி.எஸ்., அதிகாரியானார்.
* ரூபாவின், 17 ஆண்டுகள் அரசு பணியில், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், 30க்கும் மேற்பட்ட முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* ஆரம்ப காலத்தில், வாடகை வீட்டில் தங்குவதற்கு கூட பணமில்லாமல் சிரமப்பட்டுள்ளார் யாத்கிரியில் பணியில் இருக்கும் போது, அரசு பள்ளியில் தன் மகளை சேர்த்து படிக்க வைத்தார் கலாசாரத்தை மதித்து, பண்டிகை யின் மகத்துவத்தை குழந்தைகளுக்கு விளக்கி கொண்டாடுவார்.
* பணியில் யார் குறுக்கிட்டாலும் அதை பொருட்படுத்தாமல் நினைத்ததை செயல்படுத்தியவர்.
* இரண்டு முறை, 'மிஸ் தாவணகரே' அழகி பட்டம் பெற்றதால், பல மொழி சினிமாக்களில் நடிக்க அழைப்பு வந்தும் அதை ஏற்க மறுத்து, மக்கள் நல பணியாற்றினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 14.07.2017

காமராஜர் கட்டாத அணைகள்

Image may contain: 1 person, text
காமராஜர் கட்டாத அணைகள்
ஒருவகையில் காங்கிரஸ் சாம்ராஜ்யத்தை அண்ணா வீழ்த்திய பிறகு இங்கு உருவான மாற்றங்கள் தமிழகத்தின் தனித்தன்மையை வளர்த்தெடுக்கவும் சுயமரியாதைமிக்க மாநில சுயாட்சிக்கான சகல திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் பெருமளவில் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் திமுக அதிமுகவின் சாதனைகளைவிட அவர்கள் ஆட்சியில் தமிழகம் கண்ட வேதனைகளே அதிகம்.
பறிபோன நீர்நிலைகள்
தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் பாழ்பட்டுப்போய் தமிழகத்தின் நீராதாரம் இன்று வானளாவிய கேள்விக்குறியாக நிற்பதற்கு ஆற்றுப் புறம்போக்கு ஆக்கிரமிப்பு, ஏரிப்புறம்போக்கு ஆக்கிரமிப்பு, பாசனக் கால்வாய்கள் காணாமல் போன கதைகள், ஊர்நடுவே ஊருக்கு வெளியே இருந்த குளங்கள் குளக்கரைகள் ஆக்கிரமிக்கப்பட்ட அவலங்கள் நடந்தேறியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளில் முக்கியமானது மினரல் பாட்டில்களும் தண்ணீர் கேன்களும் தண்ணீர் லாரிகளும் எப்போது வருமென மக்கள் ஆலாய் பறப்பதுதான்.
வெள்ளம் இல்லாத காலத்தில் மண்ணில் ஈரம் கொஞ்சமேனும் இருக்க தன்போக்கில் இருக்கும் சீரான ஆற்றுப்பாதைகள் முக்கியம். ஆற்றிலும் மணல் எடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுமதித்ததால், அதன் சதைகள் வெட்டப்பட்டு இன்று எலும்புக்கூடாகி, தமிழகத்தின் முக்கிய ஆறுகள் வறண்டு போயின.
வங்கிக் கணக்கும் இல்லாத முதல்வர்
இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பேச்சுக்கு, ''அந்த காலத்துல காமராஜர் ஆட்சியே தேவலாம்'' என்று சொல்வதுண்டு. காமராஜர் ஆட்சியில் ஊழலே இல்லையா? என்றும் கேட்லாம். உலக வரலாறு தோன்றிய நாளிலிருந்தே ஊழல் இல்லாத நிர்வாகமே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் காமராஜர் ஒரு முதலமைச்சராக இருந்தபோது தனக்கென்று ஒரு வங்கிக் கணக்குகூட வைத்துக்கொள்ளாதவர். அவர் இறக்கும்போது மிச்சம் இருந்தது சில வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான்.
அதன்பிறகு வந்த முதலமைச்சர்கள் மட்டும் அல்ல, சாதாரண அமைச்சர்களுக்குக்கூட ஒரு கல்லூரியாவது சொந்தமாக இருக்க வேண்டும். முதலமைச்சருக்கு உதவியாளராக இருந்தவருக்கே ரூ.350 கோடி சொத்து இருக்கிறது என்ற செய்தியை சர்வசாதாரணமாக இன்று நாம் ஜீரணித்துவிட்டுச் செல்கிறோம்.
இன்றைய காங்கிரஸ்
இதனால் காங்கிரஸ்காரர்கள் காமராஜர் ஆட்சியை தருவோம் என்று அடிக்கடி சொல்லி தமிழகத்தை ஆறுதல்படுத்துவதாக நினைத்து தங்களையே ஆறுதல்படுத்திக்கொள்வதுண்டு. 'மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்' என்ற வெடியை அவர்கள் அடிக்கடி பற்ற வைக்கிறார்கள்.
அது பல சமயங்களில் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் எதிர்க்கட்சியினர் மேடைகளிலும் ''டமால் டுமீல்'' என்று நகைச்சுவையாக வெடிக்கத்தான் செய்கிறது. ஆனால் காங்கிரசுக்கு தமிழகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச செல்வாக்கும் குறைந்துகொண்டு வருவது ஏன் என்பதையும் அதை எவ்வாறு சரி செய்வது என்பதிலும் அவர்களுக்கு கொஞ்சமேனும் சிரத்தை இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இன்று அதிமுகவிலும் நிறைய குழப்பம். எதிர்காலத்தில் திமுகவின் வெற்றி மதில்மேல் பூனை.
ஆனால் சைக்கிள் கேப்பில் பிஜேபியும் இங்கே நுழைந்து காலி இருக்கைகள் உருவாவதற்கான சாத்திய எதிர்பார்ப்புகளோடு முன்கூட்டியே துண்டு போடவும் பார்க்கிறது. அதற்காக சினிமா கவர்ச்சியையும் முன்னிறுத்த அவர்கள் தயங்க மாட்டார்கள் என்றுதான் தெரிகிறது. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு பாஜகவின் கடந்த மூன்றாண்டுகால ஆட்சியை நினைக்கும்போது தமிழகம் பாஜகவை வரவேற்க சிவப்புக்கம்பளம் விரிக்குமா என்பது சந்தேகம்தான்.
என்னதான் இவர்கள் வளர்ச்சி! நல்லாட்சி! என்றெல்லாம் சொன்னாலும் உண்மையான வளர்ச்சியும் நல்லாட்சியும் காமராஜர் ஆட்சிதான். அவர் காலத்தில் தோன்றிய தொழிற்பேட்டைகளும், நூற்பாலைகளும், கல்விச்சாலைகளும், நீர்ப்பாசன அணைத்திட்டங்களும், இரும்பு ஆலை, சிமெண்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், ரப்பர் ஆலைகள், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் என நாட்டின் அஸ்திவாரம் போன்ற நிர்மாணப் பணிகளை இன்றுவரை முறியடிக்க எவராலும் முடியவில்லை. இந்தியாவை அல்ல உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த நாட்கள் திரும்பவும் வருமா என்றும் சொல்வதற்கில்லை.
கட்டாத அணைகள்
அவரது ஆட்சியின்போது சட்டமன்றத்தில் நடந்த ஒரு உரையாடலை அடிக்கடி அக்கால பெரியவர்கள் நினைவுகூர்வதுண்டு. சட்டப்பேரவையில் எதிர்வரிசையில் இருந்தவர்களில் டாக்டர் சத்தியவாணிமுத்து எழுந்து ''விவசாயத்திற்கு காமராஜரின் சாதனை என்ன'' என்று கேட்டாராம்.
அதற்கு காங்கிரஸ் உறுப்பினர் எச்.வி.ஹண்டே சொன்னதாக சொல்வார்கள், ''காமராஜர் தமிழக விவசாயத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நீர்ப்பாசனங்களை ஒழுங்கு செய்ய தமிழகத்தின் முக்கிய ஆறுகளுக்கெல்லாம் அணைகளை கட்டியிருக்கிறார்.
அவர் கட்டாத அணைகள் சில உண்டு. அது கேஆர்ஆர், எஸ்எஸ்ஆர், எம்ஆர்ஆர்... ஆகிய ஆறுகளுக்கு எல்லாம்தான் அவர் அணை கட்டவில்லை'' என்று பதில் சொன்னதாக சொல்வார்கள்.
இவர்கள் மூவருமே திராவிட இயக்கங்களின் போர்வாளாக மேடைகளில் முழங்கி, காங்கிரஸை மட்டுமல்ல காமராஜரையும் கடுமையாக தாக்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் கட்டிய அணைகள்:
1. கீழ்பவானி, 2. மணிமுத்தாறு, 3. காவிரி டெல்டா, 4. ஆரணியாறு, 5. வைகை நீர்த்தேக்கம், 6. அமராவதி (அணை), 7. சாத்தனூர் (டாம்), 8. கிருஷ்ணகிரி, 9. புள்ளம்பாடி, 10. வீடூர் அணைத்தேக்கம், 11. பரம்பிக்குளம், 12. நெய்யாறு போன்றவைகளாகும்.

அதுபோல அவர் காலத்தில் தொடங்கப்பட்ட நீர் மின் திட்டங்கங்கள் 1. 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம், 2. 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம், 3. 8 கோடி ரூபாயில் கும்பார் – அமராவதி மின் திட்டம், 4. 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சார்ம் உபரியாக்க் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம் போன்றவைகளாகும்.
டெல்லிக்கு சென்றிருக்கக் கூடாது
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தேசிய பணியாற்ற வேண்டும் என்று காமராஜர் வேறு எதற்கோ சொன்னதை வைத்து அதையே ஒரு திட்டமாக ஆக்கிவிட்டார் நேரு. அதற்கு கே பிளான் (காமராஜர் பிளான்) என்றும் பெயர்வைத்தார். பிற மாநில தலைவர்களை டெல்லிக்கு அழைப்பதற்குமுன் முதற்கட்டமாக காமராஜரையே காங்கிரஸ் கமிட்டிக்கு தேசிய பணியாற்ற புதுடெல்லிக்கு வரவழைத்துவிட்டார்.
பின்னர் இந்திய அரசியலின் பெரும்சக்தியாக இந்திரா காந்தி உருவாக இவரே காரணமானார் என்பதும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இந்தி திணிப்பைக் கைவிடக் கோரியபோது யாரந்த அந்த காமராஜர் எனக் கேட்டதும் பிறகு வந்த வருடங்களில் இந்திரா காந்தி தனது ஆட்சியில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்ததும் அதை காமராஜர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்தும் வரலாறு...
எது எப்படியிருந்தாலும் காமராஜர் அந்த தவற்றை செய்திருக்கக் கூடாது. எனக்கு தமிழ்நாட்டில் இனிமேல்தான் வேலை அதிகம். எனது தாய்த்தமிழகத்தில் பணியாற்றுவதைவிட்டு நான் டெல்லிக்கு வரமுடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ தேசிய பாசம் அவரை அப்படி சொல்லவைக்க விடவில்லை. இழப்பு தமிழகத்திற்குத்தான். அது சாதாரண இழப்பு அல்ல. அதன்பிறகு தமிழகம் அல்ல இந்தியாவே அப்படியொரு தலைவரைக் காணவில்லை.
ஜூலை 15, இன்று காமராஜர் பிறந்தநாள்!
பால்நிலவன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 15.07.2017

Friday, July 14, 2017

வங்கியில் இனி இதற்கெல்லாம் ஜிஎஸ்டி கட்டணங்கள்!

வங்கியில் இனி இதற்கெல்லாம் ஜிஎஸ்டி கட்டணங்கள்! 
தற்போது வங்கிகளில் அளிக்கப்படும் சேவைகளுக்கு 15 சதவிகித வரி வசூலிக்கப்படும் நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு 18 சதவிகிதம் அளவிலான வரியை வசூலிக்கப்போகிறது வங்கிகள்.
இந்த நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு இனி வங்கியில் எதற்கெல்லாம் ஜிஎஸ்டி கட்டணங்கள் என்பது குறித்து பாங்க் ஆஃப் இந்தியா, முன்னாள் துணை மண்டல மேலாளர் மு.எ.பிரபாகரபாபுவிடம் கேட்டதற்கு...
ஜிஎஸ்டி-யில் சரக்குகளுக்கும் சேவைகளுக்குமாக பொதுவாக 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம், 43 சதவிகிதம் என மொத்தம் ஐந்து வரி விகிதங்கள் உள்ளன. அவ்வாறு இருக்க, வங்கிச் சேவையின் மீது ஜிஎஸ்டி-யில் (9 சதவிகிதம் மத்திய ஜிஎஸ்டி-யாகவும் (CGST), 9 சதவிகிதம் மாநில ஜிஎஸ்டி-யாகவும் (SGST)) 18 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கியில் இரண்டுவிதமான வருவாய்கள் உள்ளன. ஒன்று, வட்டியாக வருவது. மற்றொன்று, இதர வருவாய்கள். ஜிஎஸ்டி வரிகள், இதர வருவாய்களான கமிஷன், எக்ஸ்சேஞ்ச், கடன் ஆய்வுக்கட்டணம் போன்ற வங்கிக்கட்டணங்கள் மீது வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் எல்லாம் வங்கிக்கு வருவாய் என்பதால் இவற்றின் மீது அரசு வரி வசூலிக்கும். அந்த வரியே ஜிஎஸ்டி.
வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள்!
  • வாடிக்கையாளருக்கு எம்.ஐ.சி.ஆர் காசோலை வழங்கல்
  • இ-கணக்கு அறிக்கைகள் மற்றும் வங்கிக்கணக்குப் புத்தக நகல் வழங்கல்,
  • காசோலைக்குப் பணம் வழங்கலை நிறுத்துதல் (ஸ்டாப் பேமென்ட்) போன்றவற்றுக்கான கட்டணங்கள்
  • கணக்கு இருப்பு விசாரணை (Balance Enquiry) கட்டணம்
  • கணக்கை முடிப்பதற்கான கட்டணம்
  • இயக்காத கணக்கின் மீதான கட்டணம்
  • கேட்புக் காசோலைகள் (Demand Draft)/வங்கிக் கேட்புக் காசோலை (Bankers Pay Order) கட்டணம்
  • கேட்புக் காசோலைகள் ரத்துசெய்தல் கட்டணம்
  • கேட்புக் காசோலை நகல் வழங்கல் கட்டணம்
  • லெட்ஜர் தாள் கட்டணங்கள்.
  • வாடிக்கையாளருக்காகக் காசோலை, பில் தொகை வசூலித்தல் கட்டணம்,
  • கேட்புக் காசோலை, வெளியூர் காசோலைகள் வாங்குதல்/டிஸ்கவுன்ட் செய்தலுக்கான கட்டணம். 
  • வாடிக்கையாளரின் கேட்பு வகை பில்கள், காலக்கெடு பில்கள் போன்றவற்றை வாங்கி அல்லது தள்ளுபடி செய்து கணக்கில் பணம் வரவு வைப்பதற்கான கட்டணம் எனப் பலதரப்பட்ட சேவைகளுக்கு வங்கிகள் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும்.
இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் பல்வேறு சேவைகளைச் செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பணத்தை, அதே கிளைக்குள்ளேயோ, அதே வங்கிக்குள்ளேயோ, வேறு வங்கிகளுக்கோ, வெளியூர் நிறுவனங்களுக்கோ, வெளியூருக்கோ வாடிக்கையாளரின் கட்டளைப்படி பிறர் கணக்குக்கு அனுப்புதல். உதாரணமாக, ஆர்டிஜிஎஸ்/நெஃப்ட் மூலம் அல்லது ஆன்லைன் ஆர்டிஜி.எஸ் மூலம் பணம் அனுப்பும் கட்டணங்கள். நீண்டகால வைப்புத்தொகை ரசீது - நகல் வழங்கல் கட்டணம், பணமின்றி திரும்பிய காசோலையைத் திருப்பி அனுப்பும் கட்டணம், குறுஞ்செய்திக் கட்டணம், கையொப்பம் சான்றளித்தல் மற்றும் புகைப்படம் சான்றளிப்பு ஒப்பம் கட்டணம், கேட்புக் காசோலை புதுப்பித்தல் கட்டணம், வைப்புத்தொகையைப் பிற வங்கிக்குச் செலுத்தும் கட்டணம் போன்ற கட்டணங்களும் உண்டு. இவை யாவும் சேவைகள் என்பதால் இவற்றின் மீதும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி உண்டு.
கடன் வாடிக்கையாளர்கள்!
கடன் வாடிக்கையாளர்களும் வங்கியில் பல்வேறு கட்டணங்களுக்கு உள்ளாகின்றனர். எல்லா கடன்தாரர்களுக்கும் எல்லா கட்டணங்களும் பொருந்தாது. முன்னுரிமைக் கடன், வர்த்தகக் கடன் போன்ற கடன் வகைக்கேற்ப, கடன் தொகைக்கேற்ப கட்டணங்களும், கட்டணங்களின் அளவும் மாறுபடும். கடனுக்கு விண்ணப்பிக்கையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் ஆய்வுக்கட்டணம். கடன் வேட்பு முன்மொழிவின் மீதான மதிப்பீடு (appraisal) கட்டணம், தொழில்நுட்ப, பொருளாதார நம்பகத்தன்மை சான்றறிக்கை கட்டணம், அடமான கட்டணம், தொழில்நுட்ப, பொருளாதார நம்பகத்தன்மை சான்றறிக்கை (TEV) கட்டணம், கடன் அனுமதியில் மாற்றம் செய்வதற்கான கட்டணம், கடன்தீர் ஆற்றல் சான்றிதழ் (solvency ceritificate), பழைய ஆவணங்கள் கேட்புக் கட்டணம், கடன் தொகையை முன்னதாகவே செலுத்துதற்கான கட்டணம் போன்ற கட்டணங்கள் உள்ளன.
கடன் அனுமதி பெற்று கடன் ஆவணங்கள் பூர்த்திசெய்யும் கட்டத்தில் ஆவணக் கட்டணம், ஆவண நகல்கள் வழங்களுக்கான கட்டணம், தொழிலக/சரக்கு ஆய்வு (Inspection) கட்டணம், கடன் புதுப்பித்தல் கட்டணம், வட்டிச் சான்றிதழ் கட்டணம் போன்றவை பெரும்பாலான கடன் கணக்குகளுக்குப் பொருந்தும். இவையன்றி வங்கி உத்தரவாதப் பத்திரம் (BG), கடன் உறுதி மடல் (LC) போன்ற நிதிசாரா கடன் வசதிகளும் வங்கியில் உள்ளன.
வங்கி உத்தரவாதங்கள் இரு வகைப்படும். 
செயல்பாடு சார்ந்த வங்கி உத்தரவாதப் பத்திரக் கட்டணம், நிதி சார்ந்த வங்கி உத்தரவாதப் பத்திரக் கட்டணம். கடன் ஒப்பந்த ஆவணங்கள் வழக்குரைஞர் ஆவண சரிபார்ப்பு சான்று (vetting) கட்டணம், வாடிக்கையாளர்களின் ஏற்றுமதி/இறக்குமதி ஆவணங்கள் கையாளும் கட்டணம், ஏற்றுமதி/இறக்குமதி பரிவர்த்தனைகளில் வசூலிக்கப்படும் கமிஷன் கட்டணம், வெளிநாட்டு கரன்சி விற்றல்/வாங்கலில் உள்ள கட்டணம் போன்ற கட்டணங்களும் உண்டு. வட்டிகள் தவிர்த்த இந்த அனைத்துக் கட்டணங்களின் மீதும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
வங்கியில் சில கட்டணங்கள் ஓர் ஆண்டு காலத்துக்கும் மேலான காலத்துக்கு அல்லது இரண்டு நிதியாண்டுகளுக்கும் உரியதாக வசூலிக்கப்பட்டு வங்கி நிர்வகிக்கும் தனிக்கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். உதாரணமாக, பாதுகாப்புப் பெட்டகக் கட்டணம், வங்கி உத்தரவாதப் பத்திர (BG) கட்டணம், கடன் உறுதி மடல் (LC) கட்டணம் போன்ற, முன்னதாகவே மொத்தமாகப் பெறப்பட்டு, பிற்பாடு படிப்படியாக வருவாய் (amortization) கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி வரி முன்னதாகவே மொத்தக் கட்டணத்துடன் வசூலிக்கப்பட்டு வங்கி நிர்வகிக்கும் தனிக்கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். அத்தகைய கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி-யும் வசூலிக்கப்படும். ஆனால், அவற்றுக்கு வரி ஏற்றிய விலைப்பட்டி (invoice) வழங்காமல் ரசீது மட்டுமே வழங்கப்படும்.
சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் வழங்கும்போது, அவை முற்றிலும் இலவசமாகவோ, பகுதித் தொகை தள்ளுபடியாகவோ இருக்கக்கூடும். அந்நேரத்தில், ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு அதே சேவையை மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சேவையின் சந்தை மதிப்புக்கணக்கில் கொள்ளப்படும். அத்தகையவற்றில் சேவையின் மீதான ஜிஎஸ்டி-யை வாடிக்கையாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் முன்தொகையாக வசூலிக்கையில், (உதாரணமாக, கடனுக்கு விண்ணப்பிக்கையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் 50 சதவிகிதக் கட்டண முன்தொகை), ஜிஎஸ்டி-யும் அப்போதே வசூலிக்கப்படும். செலவினத் தொகையை வாடிக்கையாளரிடம் இருந்து பெறும்போது (உதாரணமாக, பொறியாளர் கட்டணம், வழக்குரைஞர் கட்டணம், சரக்கு இருப்புத் தணிக்கையாளர் கட்டணம் போன்றவை) வங்கியின் பெயரில் விலைப்பட்டி எழுதப்பட்ட பின்பும், அந்தத் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து எடுக்கப்படும். அதாவது, அதை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். வாராக் கடனைப் பொறுத்தவரையில், வங்கியால் செலுத்தப்பட்ட அப்படிப்பட்ட கட்டணம் (விலைப்பட்டித் தொகை + ஜி.எஸ்.டி) வாடிக்கையாளரிடம் இருந்து கடன் தொகை வசூலிக்கும்போதே வசூல் செய்யப்படும்.
வரிவிதிப்புக்குரிய எல்லா சேவைகளின் மீதும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். வங்கியில், இழப்புக் கணக்காகக் குறிப்பிட்டு கடன்தாரர்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கணக்கில் பெறப்படும் வரவுகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கி சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரிகள் தவிர்க்க முடியாதவை என்பதால், வாடிக்கையாளர் அனைவரும் அவசியம் ஜிஎஸ்டிவரியை செலுத்தவேண்டியது இருக்கும்" என்றார் மு.எ.பிரபாகரபாபு.
சோ.கார்த்திகேயன்
நன்றி : விகடன் செய்திகள் - 13.07.2017








காமராஜருடன் ஒருநாள் - எழுத்தாளர் சாவி

காமராஜருடன் ஒருநாள் - எழுத்தாளர் சாவி
இரண்டு மாதங்களுக்கு முன் காமராஜ் அவர்களை  சந்திக்க நான் டெல்லிக்குப் போயிருந்தபோது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார்.

சில தினங்கள் கழித்து மீண்டும் அவரை டெல்லியில் சந்தித்தேன். அப்போது அவர் முதலமைச்சராக அங்கு வரவில்லை. பதவியில் இருந்து விலகிவிட்ட வெறும் காமராஜராக வந்திருந்தார்.

அன்று மாலை காமராஜரைக் காண மெட்ராஸ் ஹவுஸிற்கு வந்திருந்தார் லால்பகதூர் சாஸ்திரி. வாசலில் நின்று கொண்டிருந்த ரிசப்ஷன் ஆபிஸர் தீனதயாளைக் கண்டதும் அவர்,”காமராஜரை பழையபடி கவனித்துக் கொள்கிறீர்கள் அல்லவா? முன்பு அவர் தங்கியிருந்த அதே அறைதானே? உபசரிப்பில் ஒன்றும் குறையில்லையே? என்று கேட்டுக்கொண்டே மாடிக்கு ஏறிச் சென்றார்.

காமராஜர் பதவியில் இருந்து விலகிவிட்டதால் எங்கே அவரை சரியாக கவனிக்காமல் இருந்துவிடுவார்களோ என்ற கவலையிலேயே சாஸ்திரி அவ்வாறு கேட்டார். ஆனால், உண்மையில் காமராஜூக்கு அங்கே முன்னைக் காட்டிலும் இரட்டிப்பு உபச்சாரம்.

மறுநாள் காலை. நான் மெதுவாக காமராஜ் தங்கியிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தேன். என்னைக் கண்டதும், “என்..ன? வாங்க..” என்று புன்முறுவலோடு அழைத்தார்.

விசிட்டர்கள் அதிகம் இல்லாத நேரமாகையால் நிம்மதியாக உட்கார்ந்து பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு யார் வரப்போகிறார்கள் என்பஹு பற்றி, பத்திரிக்கைகளில் ஏதேதோ செய்திகள் வெளியாகி இருந்தன. காமராஜரும் அதுபற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

“லால்பகதூர் சாஸ்திரியையே காங்கிரஸ் தலைவராகப் போட்டுவிடலாமே.....” என்று மெதுவாக பேச்சைத் தொடங்கினேன்.

ஆமாம். போட்டுவிடலாம்; அப்படித்தான் நாங்களும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். (நாங்கள் என்பது சஞ்சீவ ரெட்டியையும், அதுல்யா கோஷையும் சேர்த்து சொன்னது) சாஸ்திரியிடமும் கேட்டுப் பார்த்தோம். ஆனால், அவர் தலைமைப் பதவி தமக்கு வேண்டாம் என்கிறார். இன்றைக்கு மறுபடியும் சாஸ்திரியை சந்தித்து கன்வின்ஸ் பண்ண வேண்டும்.” என்றார்.  

ஆனால், மறுநாள் காலைப் பத்திரிக்கைகளைப் புரட்டியபோது தலைமைப் பதவிக்கு காமராஜரையே காரியக் கமிட்டி தேர்ந்தெடுத்திருப்பதைக் கண்டபோது எனக்கு வியப்பு.

”என்ன இப்படி ஆகிவிட்டது”? என்று காமராஜிடம் கேட்டேன்.

எனக்கு ஒன்றும் தெரியாது; காரியக் கமிட்டிக் கூட்டத்தில் அதுல்யா கோஷும் சஞ்சீவரெட்டியும் காதைக் கடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் செய்த வேலை இது என்று எண்ணுகிறேன்”  என்றார்.

“எப்படி இருந்தாலும் நல்ல முடிவு” என்று என் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு, விடை பெற்றேன். “பதினைந்து நாட்களுக்கு முன்னால், முதலமைச்சராக இங்கு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னால், பதவியில்லாத சாதாரண மனிதராக வந்தார். இன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைப் பதவி தேடி வந்திருக்கிறது. இத்தனை மாறுதல்களும் இரண்டே வாரங்களில் நடந்துவிட்டன. ஆனாலும், அவரிடத்தில் எந்தவித மாறுதலையும் காண முடியவில்லை. பதவியில் இருந்தபோது, பதவியை விட்டபோது, பதவி அவரை தேடி வந்துள்ளபோது ஆக எந்த நிலையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்” என்றார் தீனதயாள்.

மறுநாள் காலை காமராஜ் அறைக்குள் எட்டிப் பார்த்தேன். அவர் சோபா ஒன்றில் கால்களை சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். சட்டைப் பித்தான்களைக் கழற்றிவிட்டு, வலது கையை முதுகுப் பக்கமாக செலுத்தி இடது தோளைத் தேய்த்த படியே பத்திரிக்கை படிப்பதில் சுவாரஸ்யமாக இருந்தார். 

மேஜ மீது அன்றைய இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்துஸ்தான் டைம்ஸ், இண்டியன் எக்ஸ்பிரஸ் இவ்வளவு பத்திரிக்கைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

”பத்திரிக்கைகளில் அரசியல் செய்தி மட்டும்தான் படிப்பீர்களா? அல்லது...”  

”எல்லாந்தான். எந்த ஊரில் என்ன பிரச்சனை என்று பார்ப்பேன். ஒரு ஊரில் தண்ணீர் இல்லை என்ற செய்தி இருந்தால் அதையும்தான் பார்ப்பேன், தண்ணீர் இல்லை என்பதும் அரசியல் சம்பந்தப்பட்டதுதானே?” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார். எழுந்தவர் கவனமாக மின்விசிறியை நிறுத்திவிட்டு அடுத்த அறைக்குள் சென்றார். அதுதான் அவருடைய படிக்கை அறை. படுக்கை அறையை ஒட்டினாற்போல் இன்னொரு சின்ன அறை. அங்கேதான் அவருடைய பெட்டி இருந்தது. அந்த சின்ன அறைக்குள் இருந்த சிறு மேஜை, கோட் ஸ்டாண்ட், முகம் பார்க்கும் கண்ணாடி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கண்ணோட்டமிட்டேன்.

”என்ன... என்ன பாக்கறீங்க?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். 

“ஒன்றுமில்லை; தங்களை கூடவே இருந்து கவனிக்கப் போகிறேன், இது என்னுடைய நீண்டநாள் ஆசை” என்றேன்.

“ஓ, தாராளமா இருங்களேன், இப்படி வந்து உட்காருங்க” என்று கூறிக்கொண்டே பெட்டியிலிருந்த சலவைத் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே வைத்தார்.

அந்தப் பெட்டிக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும்  ஆவலில் கூர்ந்து கவனித்தேன்.

INSIDE AFRICA - by John Gunther.

ENDS AND MEANS - by Aldous Huxley

TIME MAGAZINE.

NEWS WEEK

சிந்தனைச் செல்வம் - வி.ச.காண்டேகர்

இவ்வளவும் இருந்தன. இவ்வளவையும் கவனிக்காததுபோல் கவனித்துக் கொண்டேன். நான் கவனிக்காததிபோல் கவனித்ததை அவரும் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்தாற்போல் பெட்டியில் இருந்து ஷேவிங் செட்டை எடுத்து கண்ணாடி முன் வைத்துக் கொண்டார். அந்த நித்திய கடமை முடிந்ததும், தமது சட்டையைக் கழற்றி ஒழுங்காக மடித்து அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைத்தார். அங்கு ஏற்கனவே பல சட்டைகள் இந்த மாதிரி மடித்து வைக்கப்பட்டிருந்தன.

“ ஒரு நாளைக்கு எத்தனை சட்டை மாற்றிக் கொள்வீர்கள்?”

“இரண்டு முறை குளிக்க வேண்டும் எனக்கு. ஒவ்வொரு முறை குளித்து முடிந்ததும் சலவைச் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.

“இப்படி ஓயாமல் அலைந்து கொண்டிருக்கிறீர்களே! இதனால் உடல் நலம் பாதிக்கப் படுவதில்லையா?”

“கிடையாது, நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்துவிடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காபி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாக இருந்தால், 11 மணிக்குள் சாப்பிட்டு விடுவேன். அத்துடன் இரண்டு மணிக்கு ஒரு கப் காபி, இரவு இட்லியும் சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம்.

கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்யும் நாட்களில் சிலசமயம் பகலில் மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடும். அந்த நேரத்தில் லேசாக மோர் சாதம் சாப்பிட்டால் போதும் என்று தோணும். ஆனால், எனக்கு சாப்பாடு போடுகிறவர்களிடம் மோர்சாதம் போதுமென்று சொன்னால் கேட்க மாட்டாங்க. இலையில் எல்லாவற்றையும் போட்டு கஷ்டப் படுத்திடுவாங்க. என் நிலையை புரிந்து கொள்ளாமல் தொந்தரவு கொடுப்பாங்க. இதற்காக நான் ஒரேயடியாக சாப்பாடே வேண்டாமென்று சொல்லி பட்டினி போட்டுவிடுவேன்.” 

“தாங்கள் கைக் கடியாரம் கட்டிக் கொள்வதில்லையே, ஏன்?”

“அதெல்லாம் எதுக்கு! அவசியமில்லை. யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்க. கிராமங்களுக்குப் போகும்போது மட்டும் சில சமயம் நேரம் தெரியாமல் போய்விடும். அதற்காக ஒரு சின்ன பைம்பீஸ் வாங்கி வைத்திருக்கிறேன்” என்றார்.

“தினமும் நூற்றுக்கணக்கான பேர் தங்களைத் தேடி வந்து தங்கள் வீட்டு  வாசலில் காத்திருக்கிறார்களே, அவர்களெல்லாம் தங்களிடம் என்ன கேட்பார்கள்?”

“சிபாரிசுக்கு வருவாங்க. ஏழை எளிய மக்கள் கேட்கிற உதவிகள் எல்லாம் சுலபமாக செய்யக் கூடியதாக இருக்கும். முடிந்ததை நானும் செய்து விடுவேன். படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க வந்து கேட்கிற காரியங்களில்தான் சிக்கல் இருக்கும். அவங்களே வக்கீலிடம் கேட்டுக்கொண்டு வந்து “இப்படிச்செய்யலாமே! என்று எனக்கு ஆலோசணை சொல்வாங்க. நான், “ஆகட்டும், பார்க்கலாம்” என்பேன். யாருக்காவது ஒரண்டொருவருக்குச் செய்துவிட்டு மற்றவர்களுக்குச் செய்யவில்லை என்றால்தானே கோபம் வருகிறது? ஆகையால் எல்லஓருக்கும் சமமாக இருந்துவிடுவேன். யாராவது ஒரு பையன் ஸ்கூல் அட்மிஷனுக்கு வருவான். மார்க் கொஞ்சமாக வாங்கியிருப்பான். “ நீ வாங்கியிருக்கும் மார்க்கை விட குறைந்த மார்க வாங்கியுள்ள பையன் யாருக்காவது அட்மிஷன் கொடுத்திருந்தால் சொல்” என்பேன். அப்படி இருக்காது. ஒருவேளை யாருக்காவது அம்மாதிரி அட்மிஷன் கொடுத்திருந்தால் அவனிடம், “ஆமாம், நீ சொன்னது உண்மைதான்” என்று ஒப்புக் கொள்வேன். அவன் அதிலேயே திருப்தியடைந்து போய்விடுவான்!”

தினந்தோறும் இவர்கள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி அனுப்புவது ரொம்ப கஷ்டமான காரியம் ஆயிற்றே? அலுப்பாக இருக்குமே!” 

”எனக்கு அலுப்பே கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். ஆனால், இதில் எனக்குள்ள சங்கடம் பத்திரிக்கை படிக்க நேரமில்லாமல் போய்விடுவதுதான். ஆகையால், காலை வேளையில் என்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது. பத்திரிக்கை படிக்கும் நேரம் எனக்கு ரொம்ப முக்கியம். விசிட்டர்களால் அது தடைபட்டுப் போகிறது. அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் எப்போது வந்தாலும் பார்க்கத் தயார்” என்றார்.

அன்றிரவு மணி 12 இருக்கும். காமராஜ் கட்டிலில் படுத்தவாறே மிக சுவாரஸ்யமாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன புத்தகம் அது என்று எட்டிப் பார்த்தேன்.

கம்ப இராமாயணம்!

நன்றி : ஆனந்தவிகடன் - 11.12.2013

Thursday, July 13, 2017

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை
சிறைத்துறை அதிகாரி பரபரப்பு அறிக்கை
பெங்களூரு:'பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள, அ.தி.மு.க., சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் விரும்பும் உணவுகளை சமைத்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்' என, கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
கர்நாடக மாநில சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக, ரூபா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார்; இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இம்மாதம், 10ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று, ஆய்வு செய்தார். அங்கு நடக்கும் பல மோசடிகளை, தன் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு, ரூபா சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் விரும்பும் உணவை சமைத்து கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், தாங்கள் பணம் பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறைத்துறை,டி.ஐ.ஜி.,யான நான், ஆய்வு நடத்தியதை, தங்களுக்கு . இவ்வாறு அந்த அறிக்கையில், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் ரூபா கூறுகையில் இதே அறிக்கையை, ஊழல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளேன்,'' என்றார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 12.07.2017