பெண் தொழிலதிபர்களை உருவாக்கும்
வங்கிக் கடனுதவித் திட்டங்கள்!
கடந்த 20 ஆண்டுகளில், பெண் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை
பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு வங்கிகள் கைகொடுப்பதே. குறிப்பாக, பெண் தொழில்முனைவோருக்கு சிறப்புக் கடன் திட்டங்கள் மூலம் உதவி
அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பெண்கள் எந்த வகையான தொழில்களை ஆரம்பிக்கலாம், அதற்கான வங்கிக் கடனுதவியை எப்படிப் பெறலாம் என விளக்கமாக
எடுத்துச் சொன்னார் சென்னை, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா
நிறுவனத்தின் மண்டல அலுவலக முதன்மை மேலாளர் தங்கம்.
“மதிப்புக் கூட்டுப் பொருள்களின் உற்பத்தி
சார்ந்த தொழில்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. பனை, வாழை, தென்னை, பாக்கு போன்ற மரங்களில் இருந்து எக்கச்சக்கமான மதிப்புக் கூட்டுப்
பொருள்களை ஆண்டு முழுக்க உற்பத்தி செய்யலாம். சில நாள்கள் பயிற்சி எடுத்தால்
போதும், இந்த மதிப்புக் கூட்டுப் பொருள்களை
எளிதில் செய்யத் தொடங்கிவிடலாம்.
அதேபோல, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் டிசைனிங், டிரெஸ் டிசைனிங், ஃபெசிலிட்டி
மேனேஜ்மென்ட், கட்டட வடிவமைப்பு, ஜுவல்லரி டிசைனிங் உள்ளிட்ட டிசைனிங் சார்ந்த பல தொழில்கள்
நகர்ப்புறப் பெண்களின் தற்போதைய தேர்வாக இருக்கின்றன. இந்தத் தொழில்களில் வீட்டில்
இருந்தபடி டிசைனிங் செய்துகொடுத்தாலே கைநிறைய சம்பாதிக்க முடியும்.
பெண்கள் சிறப்பாக சுயதொழில்
செய்தாலும், மார்க்கெட்டிங் செய்வதில்தான்
பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அதைச் சரிசெய்ய சுயதொழில் தொடங்குதல், செயல்படுத்துதல், மார்க்கெட்டிங்
செய்தல் போன்றவற்றுக்கான அடிப்படைப் பயிற்சிகளை அரசு வழங்கினால் சிறப்பாக
இருக்கும். தவிர, கிராமப்புறப் பகுதிகளில்
தயாரிக்கும் பொருள்களுக்கு, நகர்புறப் பகுதிகளில் எல்லாக்
காலத்திலும் வரவேற்பு இருக்கிறது. எனவே, இவை இரண்டுக்குமான இடைவெளியைச் சரிசெய்யக் கண்காட்சி, சிறப்பு விற்பனை நிலையங்கள் போன்றவற்றை அரசு அதிகப்படுத்தினால்
இன்னும் வளர்ச்சி அதிகரிக்கும்.
முன்பெல்லாம் தொழில் தொடங்கப் பணம்
கிடைக்காமல் சிரமப்பட்ட பெண்கள், இன்று யாரையும்
எதிர்பார்க்காமல் வங்கியை அணுகி எளிதாகக் கடன் பெறுகிறார்கள். தனியாகவோ அல்லது
குழுவாகவோ இணைந்து தொழில் தொடங்கும் பெண்களுக்கு வங்கிகள் பலவித வங்கிக்
கடனுதவிகளை வழங்குகின்றன. ஆனால், அவை பற்றிய
விவரங்கள் பெரும்பாலான பெண்களுக்குச் சென்று சேராமலேயே இருக்கின்றன. இதுதான்
தொழில்முனைவோருக்கும் வங்கிகளுக்கும் மிகப்பெரிய இடைவெளியாக இருக்கிறது.
பெண் தொழில் முனைவோர்களை வரவேற்கும்
விதமாக பல வங்கிகளும் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
உதாரணமாக, எங்கள் வங்கியில் ‘சென்ட் கல்யாணி’ (பார்க்க பெட்டிச்
செய்தி) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம்” என்றார் அவர்.
“முன்பெல்லாம் பியூட்டி பார்லர், உணவு சார்ந்த தொழில்கள் போன்றவற்றைத் தொடங்கவே பெண்கள் ஆர்வம்
செலுத்துவார்கள். ஆனால், இன்று டிசைனிங், உற்பத்தி, சர்வீசஸ் போன்ற பல புதிய
தொழில்களில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இன்னுமுள்ள ஏராளமான புதிய தொழில்களில் கவனம் செலுத்தினால், தனித்துவத்துடன் எளிதாக வெற்றி பெறலாம்’’ என்றபடி, பெண் தொழில்முனைவோர்களுக்குப் பல
பயனுள்ள தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை, அண்ணா நகர் கிளை முதன்மை மேலாளர் சந்தியா ரவிமோகன்.
‘‘புதிதாகத் தொழில் தொடங்க
விரும்புபவர்கள் மாவட்டத் தொழில் மையத்தில் தங்களுக்குப் பிடித்தமான தொழில், அதற்கான வளர்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
அருகிலுள்ள வங்கிகளிலோ அல்லது அந்த வங்கிகளின் இணையதளத்திலோ கடனுதவி பற்றிய
விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், எம்.எஸ்.எம்.இ (MSME - Ministry of Micro, Small & Medium
Enterprises) மற்றும் கே.வி.கே (KVK - Krishi
Vigyan Kendra) போன்ற அரசு நிறுவனங்களும் ஏராளமான
தொழில் உதவிகளைச் செய்கின்றன.
மத்திய அரசின் முத்ரா, ஸ்டாண்ட்அப் இந்தியா போன்ற திட்டங்களில் பெண்கள்தான் அதிகளவில்
பயன்பெறுகின்றனர். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரையிலான
தொகையைப் புதிதாகத் தொழில் தொடங்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பெண் தொழில்முனைவோருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடனுதவியாக
வழங்குகின்றன.
சுயதொழில் செய்யும் பெண்களுக்குக்
கடனுதவி அளிக்க எங்கள் வங்கி உள்பட பல வங்கிகள் இன்முகத்துடன் காத்திருக்க, அதனைப் பற்றிய விழிப்பு உணர்வு பெண்களிடம் போய்ச் சேர வேண்டியது
முக்கியம். அடுத்த 20 ஆண்டுகளில் தொழில் துறையில்
ஆண்களுக்குக் கடும் சவால் கொடுக்கும் வகையில் பெண்கள் முன்னேறுவார்கள்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
வீட்டில் பெண்கள் முடங்கியிருந்த
காலம் போய்விட்டது. இனி, தொழில் துறையிலும் அவர்கள் கலக்க
வந்துவிட்டார்கள் என்பதே இன்றைய யதார்த்தம்.
பெண்களுக்கான சில வங்கிக் கடன்
திட்டங்கள்!
பெண் தொழில்முனைவோர்களுக்காகப்
பல்வேறு வங்கிகள் சிறப்புத் திட்டங்கள், லோன் வசதி, வட்டி விகிதம் குறைப்பு, விசேஷக் கடன் என பல வசதிகளைச் செயல்படுத்தி வருகின்றன. அவற்றில்
முக்கியமானவை இங்கே!
1. சென்ட் கல்யாணி திட்டம்வங்கி: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா
தொழில்கள்: கைவினைத் தொழில்கள், உணவு சார்ந்த தொழில்கள், விவசாய மற்றும் கூட்டு நடவடிக்கைகள், சில்லறை வணிகம் மற்றும் அரசாங்க ஆதரவுத் திட்டங்கள் உள்ளிட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: அதிகபட்சமாக ரூ.1 கோடி.
வட்டி விகிதம் குறைப்பு: ரூ.10 லட்சம் வரை 0.25%, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 0.50% (தொழில் மற்றும் நபர்களைப் பொறுத்து வட்டி விகிதம் மாறலாம்).
வட்டி: ரூ.10 லட்சம் வரை, 8.95%. ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை 9.40%
2. ஸ்ரீ சக்தி திட்டம்
வங்கி: ஸ்டேட் பேங்க்
தொழில்கள்: சிறு, குறு, நடுத்தர மற்றும் புதிய தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: ரூ.25 லட்சம்
வட்டி விகிதம் குறைப்பு: ஆண்களைவிட
பெண்களுக்கு 0.5%. குறைவு வட்டி: 8.1%
3. தேனா சக்தி திட்டம்
வங்கி: தேனா வங்கி
தொழில்கள்: விவசாயம், உற்பத்தி, விற்பனை மற்றும் சேவைத் தொழில்கள், சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட சிறு, குறு தொழில்கள்.
கடன் உச்சவரம்பு: தொழில் மற்றும்
நபரைப் பொறுத்து மாறுபடும்.
வட்டி விகிதம் குறைப்பு: ஆண்களைவிட
பெண்களுக்கு 0.25% குறைவு.
வட்டி: 11%
4. பி.என்.பி வனிதா திட்டம்
வங்கி: பஞ்சாப் நேஷனல் வங்கி
தொழில்கள்: வருமானத்துக்கு
வழிவகுக்கும் டிரேடிங், சர்வீஸ், தொழில் விரிவாக்கம், புதுப்பித்தல், உபகரணங்களை
வாங்குதல்.
கடன் உச்சவரம்பு: ரூ.25,000.
வட்டி விகிதம்: 8.35%
(அடிப்படை வட்டி விகிதம்)
நன்றி : நாணயம் விகடன் - 30.07.2017