disalbe Right click

Wednesday, August 16, 2017

தொலை தூரக் கல்வியில் முறைகேடு - தூங்கும் தமிழக அரசு

தொலை தூரக் கல்வியில் முறைகேடு - தூங்கும் தமிழக அரசு!
       பல்கலை மானியக்குழு தடை, ஐகோர்ட் உத்தரவு என எதையுமே மதிக்காமல்,  பாரதியார் பல்கலை சார்பில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்தப்பட்டு, விதவிதமான பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது; ஆனால், எந்த நடவடிக்கையுமே எடுக்காமல், தமிழக உயர் கல்வித்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
நம் நாட்டில், நான்கு விதமான கல்வி நிறுவனங்கள் நடத்துவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, அரசு சார்பிலும், அரசின் நிதியுதவியுடனும், முழுக்க முழுக்க சுயநிதியில் தனியாராலும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, அரசியலமைப்பு உரிமைகளின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் சார்பில், பல்கலைகள் நடத்தவும் அனுமதிக்கப் படுகிறது.
விதிமுறைகளுக்கு பஞ்சமில்லை!
அரசால் நடத்தப்படும் பல்கலைகளுக்கு,மத்திய அரசின் பல்கலை மானியக்குழு (U.G.C.,)சார்பில், நிதி வழங்கப்படுகிறது. இந்த பல்கலை நிர்வாகங்களின் கீழ், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் இணைக்கப்படுகின்றன. பல்கலை மானியக்குழு வகுத்துள்ள விதி முறைகளின்படி மட்டுமே, இந்த கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள், பட்டப்படிப்புகள் நடத்தப்பட வேண்டும்; கல்லுாரிகளின் கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் போன்றவற்றுக்கும் ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன.
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லுாரிகளில், தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது போன்றவையும் பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுவது அவசியம். இக்கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, அவரவர் பெற்றுள்ள பிளஸ் 2 மதிப்பெண் அல்லது இளங்கலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம் அடிபடையிலேயே, முறையே இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மாணவர்களின் செமஸ்டர் வருகைப்பதிவு, படித்து தேர்வை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றை மதிப்பிட்டே, ஒரு மாணவர் பட்டம் பெற முடியும். ஆனால், சமீபகாலமாக, தமிழகத்தில் பெட்டிக்கடை போன்ற கட்டிடங்களில், தொலைதுாரக் கல்வி மையம் என்ற பெயரில், பட்டப்படிப்புகள், தெருவோரக்கடையில் விற்கப்படும் காய்கறிக் கூறு போல கூவிக்கூவி விற்கும் அவலம் உருவாகியுள்ளது.
இந்த முறைகேட்டில், முதலிடம் பிடித்துள்ளது, கோவை பாரதியார் பல்கலைக்கழகம். ஏழை, எளிய மாணவர்கள், பணிக்குச் செல்வோர் ஆகியோர், மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்பதற்காகவே, தொலை துார கல்வி மையங்களை நடத்திக்கொள்ளலாம் என்று பல்கலை மானியக்குழு அனுமதி அளிக்கிறது. இவற்றை கண்காணிக்க, தொலைதுாரக் கல்வி அமைப்பு (Distance Education Bereau) என்ற அமைப்பும், யு.ஜி.சி.,யின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பு, தொலைதுாரக் கல்வி மையங்களுக்கு, பல்வேறு வரன்முறைகளையும் உருவாக்கியுள்ளது.
எல்லை தாண்டிய 'சேவை'
இந்த விதிகளின்படி, ஒவ்வொரு பல்கலையும் அதனதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே, இந்த மையங்களை நடத்திக் கொள்ள வேண்டும்; அவற்றையும் பல்கலை நிர்வாகமே நடத்த வேண்டும். பல்கலை அனுமதித்துள்ள பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே, இந்த மையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், இவை எதையுமே பாரதியார் பல்கலை நிர்வாகம் மதிப்பதே இல்லை.
சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), 
சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), 
சி.பி.பி., (Centre for Participatory Programme) 
என பல்வேறு பெயர்களில், தொலைதுார கல்வி மையங்களை உருவாக்க அனுமதியை   வாரி   வழங்கியுள்ளது.   கடந்த 2007 ம் ஆண்டில்,     ஒன்றிரண்டாக துவங்கிய இந்த மையங்கள், இப்போது வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள் என உலகம் முழுவதும் 360க்கும் அதிகமாகவுள்ளன.
வெறும் பத்துக்குப் பத்து சதுரடி பரப்பிலான கட்டிடங்களில், ஏதாவது ஒரு பெயரில் இந்த மையத்தைத் துவக்கி, பாரதியார் பல்கலை சான்று தருவதாகக் கூறி, மாணவர்கள் சேர்க்கப் படுகின்றனர்
பல்கலை எல்லையைத் தாண்டி நடத்தப்படும் இந்த மையங்களில், எந்த கலை, அறிவியல் கல்லுாரியிலும் நடத்தப்படாத புதுப்புது பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று விளம்பரம் தரப்படுகிறது.
               பாரதியார் பல்கலையே அனுமதி தர முடியாத மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு படிக்கலாம் என்றும் துணிச்சலோடு இந்த மையங்கள் விளம்பரங்கள் செய்கின்றன. அதற்கான தேர்வையும் நடத்தி, பல்கலை சான்றையும் தருகின்றன. இதுபோன்ற எந்த பட்டப்படிப்புக்கான சான்றும் செல்லாது என்று, பல்கலை மானியக்குழு பகிரங்கமாகவே அறிவித்து விட்டது. ஆனால், இன்று வரையிலும் இந்த மையங்களில் சேரும் மாணவர்களுக்கு, பாரதியார் பல்கலை சான்று, தாராளமயமாக வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது, விடை தாள் திருத்துவது எல்லாமே, சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது என்று கல்வியாளர்கள் பகிரங்க குற்றம்சாட்டி வருகின்றனர். எதைப்பற்றியும், பல்கலை நிர்வாகம் கவலைப்படுவதே இல்லை. நான்கு ஆண்டுகளில், இந்த மையங்களின் விதி மீறல், உச்சத்துக்குச் சென்று விட்டது. இதனால், கல்லுாரிக்குச் சென்று, கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கும் மாணவர்கள், கடும் விரக்திக்கு உள்ளாகியுள்ளனர்.
தரமான மாணவர்களை உருவாக்க அரும்பாடுபட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள், பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லுாரிகளை நடத்தும் சுயநிதிக் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எல்லோரும் பெரும் கொதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பாரதியார் பல்கலையின் இந்த அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிண்டிகேட், செனட் உறுப்பினர்களாலும் முடியவில்லை; மாறாக, பெரும்பாலானோர், இதற்கு துணை போவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதில் பெரிய அளவில் காசு வருவது தெரிந்து, மதுரை காமராஜர், அழகப்பா பல்கலைகளும் இதே பாணியில் செல்வதை அறிந்த பின்பே நிலைமை மோசமாவதை உணர்ந்து, தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம், இப்பிரச்னையைக் கையில் எடுத்தது. இந்த சங்கம்,  தாக்கல் செய்துள்ள வழக்கின் அடிப்படையில், இந்த மையங்களை மூடவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சங்கத்தின் புகாரை ஏற்று, தொலைதுார கல்வி மையம் நடத்தும் அனுமதியும் யு.ஜி.சி.,யால் மறுக்கப்பட்டுள்ளது.
               இவ்வழக்கு தொடர்பாக, பல்கலை நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், 'நடப்பு கல்வியாண்டில், இந்த மையங்களுக்கான அனுமதியை விலக்கிக் கொள்வதாக' உறுதி தந்தது. ஆனால், இப்போது வரை எந்த மையமும் மூடப்படவில்லை; மாணவர் சேர்க்கையும் நிற்கவில்லை. இதனால், கொதித்துப்போன சுயநிதி கல்லுாரிகள் சங்கத்தினர், கடந்த ஜூலை 19 அன்று, பல்கலை துணைவேந்தர் கணபதியை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
சொன்னது என்னாச்சு?
அவர்களுக்கு பதிலளித்த துணைவேந்தர் கணபதி, 'இந்த மையங்களை மூடுவது தொடர்பாக, விரைவில் சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி, முடிவு எடுக்கப்படும்; அதற்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும்' என்றார். அந்த அவகாசமும் முடிந்து விட்டது; சிண்டிகேட் கூட்டப்படவில்லை; எந்த மையத்தை மூடவும், பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இதற்காக, உயர் கல்வித்துறையும் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், இந்த சங்கத்தின் புகார்குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலருக்கும் பல்கலை மானியக்குழு, கடந்த ஆக.,4ல் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால், பாரதியார் பல்கலை மீது, உயர் கல்வித் துறையோ, தமிழக கவர்னரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், தமிழகத்தில் பெறப்படும் பட்டங்களுக்கு, எந்த ஊரிலும் மதிப்பே இல்லாமல் போய் விடும் என்பது நிச்சயம்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லுாரிகள் நடத்துவதும், மூன்று ஆண்டுகள் கல்லுாரிக்குச் சென்று படித்து பட்டம் வாங்குவதும் அர்த்தமற்றதாகி விடும். ஐகோர்ட் உத்தரவு, பல்கலை மானியக்குழு தடை அனைத்தையும் மீறி, இந்த மையங்களை நடத்த பல்கலை ஆதரிக்கிறது என்றால், அதில் பணம் விளையாடுகிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை; இருந்தும், இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பி லுள்ள உயர் கல்வித் துறை, எப்போது உறக்கம் கலைக்குமோ தெரியவில்லை.
எழுதினாலே 'பாஸ்' தான்!
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர் களின் விடைத்தாள்கள், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் (சென்ட்ரல் வேல்யேஷன்) திருத்தப்படுகின்றன. ஒரு நாளில், அதிகபட்சம் 40 விடைத்தாள்கள் மட்டுமே, ஒருவர் திருத்துவதற்குத் தரப்படுகிறது. ஆனால், சி.பி.ஓ.பி., உள்ளிட்ட தொலைதுாரக்கல்வி மையங்களில் தேர்வு எழுதுவோரின் விடைதாள்கள், மாலை 5:00 மணிக்கு மேல், திருத்தப்படுகின்றன.
அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள், நுாற்றுக்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படுவதாகவும், அதற்கு ஆயிரம் ரூபாய் வீதம், ஆசிரியர்களுக்குக் கட்டணம் தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எதையும் பார்க்காமல், 'பாஸ் மார்க்' போட வேண்டும் என்பதே, இவர்களுக்குத் தரப்படும் ஒற்றைக் கட்டளை. இது பற்றி துணைவேந்தர் கணபதியிடம் கேட்டதற்கு, ''நேரம் இல்லாததால், மாலைக்கு மேல் அந்த விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன,'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
5 பல்கலைகளுக்கே அனுமதி!
நடப்பு கல்வியாண்டில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்துவதற்கு, அனுமதிக்கபட்டு உள்ள பல்கலைகளின் பட்டியலை, பல்கலை மானியக்குழு, கடந்த மே 2 அன்று வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலை கழகம், தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா, அன்னை தெரசா மகளிர் பல்கலை மற்றும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது போன மாசம்...இது இந்த மாசம்!
தொலைதுாரக் கல்வி மையங்களின் அத்து மீறலைக் கண்டித்து, முற்றுகையிட்ட சுயநிதி கல்லுாரிகள் சங்க நிர்வாகிகளிடம், 'இன்னும் 15 நாட்களில் தீர்வு காண்பதாக' கூறியது பற்றியும், ஐகோர்ட்டில் 'இந்த மையங்களின் அனுமதியை இந்த கல்வியாண்டிலேயே திருப்பிக் கொள்வதாக' பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது குறித்தும் துணைவேந்தர் கணபதியிடம் கேட்டதற்கு, ''சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூட்டப்பட்டு, இந்த மையங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து மையங்களுக்கான அனுமதியை விலக்கிக் கொள்வதாகவே, ஐகோர்ட்டில் 'அபிடவிட்' தாக்கல் செய்துள்ளோம்,'' என்றார்.
எங்களிடம் சொன்ன கால அவகாசத்துக்குள், பாரதியார் பல்கலை துணைவேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. உயர் கல்வித்துறை செயலரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளோம்; அடுத்த கட்டமாக, கவர்னரைச் சந்தித்து மனு கொடுத்து, நேரில் விளக்குவதற்கு முயற்சி செய்து வருகிறோம். அது கை கூடினால், நல்ல தீர்வு வருமென்று நம்புகிறோம்.
ஏ.எம்.எம்.கலீல்தலைவர், தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.08.2017 

Tuesday, August 15, 2017

கொங்கு மோசடி - 4

கொங்கு மோசடி - 4 
யாருமே கண்டுகொள்ளாத மண்ணுளி பாம்பில் துவங்கி, நாக மாணிக்க கல், ரைஸ் புல்லிங் போன்ற மோசடிகளில் மட்டுமல்ல. ஆன்லைன் மோசடிகளின் துவக்கமும் கொங்கு மண்டலம்தான். "இந்த வாரம்... மோசடி வாரம்" எனச்சொல்லி விளம்பரம் செய்யும் அளவுக்கு மோசடிகள் அடுத்தடுத்து அரங்கேறி வந்தது கொங்கு மண்டலத்தில்தான். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது 
ஆன் லைன் மோசடி. 
வேறு எந்த மோசடிகளும் சாதிக்காததை ஆன்லைன் மோசடி சாதித்தன. பல ஆயிரம் கோடி ரூபாயை ஆன்லைன் நிறுவனங்கள் மோசடி செய்திருப்பதாக காவல்துறை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது. எப்படி பல ஆயிரம் கோடியை ஏமாற்ற முடியும் என்கிறீர்களா? சில ஆயிரங்களில் துவங்கி, பல ஆயிரம் கோடி வரை மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட ஆன்லைன் மோசடியைப் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
5 கேள்வி... 2 ஆயிரம்.... ஆன் லைன் மோசடியின் துவக்கம்

மிகப்பெரிய விருட்சம் சிறிய விதையில் இருந்து துவங்கி, மெல்ல மெல்ல செடியாக, மரமாக வளர்வதை போலத்தான் ஆன் லைன் மோசடியும். இமெயில் என்பது அனைவரிடமும் அறிமுகமாயிராத காலகட்டம் அது. 10 ல் ஒருவரிடம் இமெயில் கணக்கு இருக்கலாம். அப்போது அந்த இமெயில்களுக்கு 'கேள்விக்கு பதில் சொன்னால் பரிசு' என்ற அறிவிப்போடு ஒரு மெயில் வரும். 
உங்களுக்கு 5 கேள்வி கேட்கப்படும். அதற்கு நீங்கள் சரியான பதில் சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு 2 ஆயிரம் பரிசு. ஆனால் அதற்கு முன்னர் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும்' என அழைத்தது அந்த இமெயில். டெல்லியில் தலைமை அலுவலகம் இருப்பதாக சொல்லி, கோவையில் அலுவலகத்தை துவக்கியது அந்த ஆன்லைன் நிறுவனம். 
மெயிலை பார்த்து ஏமாந்த சிலர் மட்டும், அங்கு சென்று டெபாசிட் கட்டினர். அவர்களுக்கு கேள்விகள் அனுப்பப்பட்டன. அந்த கேள்விகளுக்கு குழந்தைகள் கூட எளிதில் பதில் சொல்லிவிடலாம்; அவ்வளவு எளிதானவை. பதில் அனுப்பிய உடன், அவர்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இது போதாதா... டெபாசிட் பணம் குவிந்தது. பலர் பல முறை வெவ்வேறு பெயர்களில் 10 ஆயிரம் கட்டி கேள்விகளை வரவழைத்துக்கொண்டனர். ஓரிரு வாரங்களில் பணம் வருவது முற்றிலுமாய் நின்று போய் விட்டது. 
கோவையில் இருந்த அலுவலகம் மூடப்பட்டது. அப்புறம் என்ன 'பணம் ஸ்வாகா' தான். இந்த மோசடியில் மட்டும் 4 ஆயிரம் பேர் 4 கோடியை ஏமாந்ததாக சொல்கிறது போலீஸ் புள்ளிவிவரம். வழக்கில் சிக்கியதென்னமோ ஏஜென்டுகள்தான். 'பாஸ் எங்கே...?' என போலீஸ் அவர்களிடம் விசாரித்தால், டெல்லியிலோ, கொல்கத்தாவிலோ இருப்பதாக சொன்னார்கள். அந்த 'பாஸ்' களை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை. 
வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கலாம் - இது அடுத்த மோசடி...!'

உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கா? அப்போ நீங்க வீட்டில இருந்தே மாசம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்' என வீட்டு வாசலை தட்டிய டேட்டா என்ட்ரி விளம்பரம்தான் அடுத்த ஆன்லைன் மோசடி. நாங்க கொடுக்குற டேட்டாவை டைப் பண்ணி தரணும். ஒரு வரிக்கு இத்தனை ரூபாய். மாசம் இவ்வளவு சம்பாதிக்கலாம்'னு சொல்ல ஏகப்பட்டவங்க விண்ணப்பிச்சாங்க. இதுக்காக கடனை வாங்கி கம்யூட்டர் வாங்கினவங்க எல்லாம் உண்டு. 'முதல்ல ரெண்டு மாசம் டிரெய்னிங், அதுக்கு அப்புறம் உங்களுக்கு வேலை' எனச்சொல்லி சில ஆயிரங்களை வாங்கி பயிற்சி கொடுப்பாங்க. டெபாசிட்டா சில ஆயிரங்களை வாங்கிக்குவாங்க.
அதுக்கு அப்புறம் உங்களுக்கு சில காகிதங்கள்ல இருக்குறதை டைப் பண்ணி ப்ளாப்பியில் போட்டு கொடுக்கச்சொல்வாங்க. முதல்ல பணம் கட்டுனவங்களுக்கு சில வாரங்கள், சில ஆயிரங்கள் பணம் வர ஆரம்பிக்கும். அதுதான் அவங்க முதலீடு. அதுக்கு அப்புறம் நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு டெபாசிட் தொகை அவங்களுக்கு குவிஞ்சது. பலர் கடனில் கம்ப்யூட்டர் வாங்கி, டெபாசிட் கட்டி வேலை பார்க்க ஆரம்பிச்சாங்க.
ஆனா கொஞ்ச நாள்ல அவங்க கொடுத்த வேலைகளுக்கு பணம் ஏதும் வரலை. ஆனாலும் வேலை மட்டும் வந்துட்டே இருந்துச்சு. 'நம்ம பணம் எங்கேயும் போகாது.. அதுதான் வேலை வருதே.. மொத்தமா வாங்கிக்கலாம்!' என தொடர்ச்சியாக வேலை செய்தார்கள். ஆனால் பணம் வராமல் போகவே... சிலர் கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க.
கேள்வி கேட்டவங்களுக்கு 'உங்கள் வேலை சரியில்லை. நீங்க சென்னை ஆபீஸ் வந்து பாருங்க' என்று மட்டும் பதில் வரும். படிப்படியாக எல்லோருக்கும் வேலை நிறுத்தப்படும்போதுதான் எல்லோரும் ஏமாற்றப்பட்டதே தெரியவந்தது. அப்புறம் என்ன பலகோடி ரூபாய் அம்போதான்.
இதில் வேலை தேடியவர்கள் மட்டுமல்ல. நல்ல வேலையில் இருந்தவர்கள் கூட, 'வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாங்கறப்ப எதுக்கு ஆபீஸ் போயிட்டு..?' என வேலையை விட்டு ஏமாந்தவர்கள் எல்லாம் உண்டு. இதில் டெபாசிட் தொகையாக ஒரு லட்சம் வரை கட்டியவர்களும் இருக்கிறார்கள்.
விளம்பரத்தை க்ளிக் செய்தால் பணம்?

ஆன்லைன் மோசடியின் அடுத்த கட்டம்தான் இது. குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்து பார்த்தால் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் பணம் வரும் என சொல்லப்பட்டது. 'இன்டர்நெட்ல ஒரு மணி நேரம் வேலை செஞ்சா போதும்.. மாசம் 6,000 ரூபாய் சம்பாதிக்கலாம்'னு கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் இது அறிமுகமாச்சு. 
இதை நம்பி அந்த வெப் சைட்டுக்கு போனா, இவ்ளோ பணம் கட்டுங்கனு சொல்லி சிரிக்கும் அந்த சைட். அதுக்கு அப்புறம் அது வேற வெப்சைட் லிங்குக்கு போகும். அங்கேயும் கொஞ்சம் பணம் கட்டணும். 20 ஆயிரம் வரைக்கு நீங்க கட்டுனா, உங்களுக்கு தனி பேஜ் கிரியேட் பண்ணிக்கொடுப்பாங்க. அதுல வர்ற விளம்பரங்களை க்ளிக் பண்ணா. பணம் தருவோம்னு சொன்னாங்க. 
முதலில் மாசம் சில ஆயிரங்கள் வந்துச்சு. இதை நம்பி நிறைய பேர் டெபாசிட் பண்ண, அவ்வளவுதான் அந்த வெப்சைட் நிரந்தரமாக மூடப்பட்டது.
'டெபாசிட் கட்டு... கடனை வாங்கு!'

தொழில் அபிவிருத்திக்கு கடன் வேண்டுமா? குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் எனச்சொல்லி மோசடி செய்வது அடுத்த ஆன்லைன் மோசடி. உங்களுக்கு கடன் தேவை என்பதை அறிந்தால் யாராவது மூலம் ஒருவர் உங்களிடம் அறிமுகமாவார். உங்களுக்கு என்ன தேவை? அதன் விவரம் உள்ளிட்டவற்றை எல்லாம் தெரிந்து கொள்வார்கள். தொழில் சார்ந்த ஆவணங்களையும் அந்த நபர் சரிபார்ப்பார். வங்கி கணக்கு விவரங்களையும் கேட்டு பெற்றுக்கொள்வார். 
ஓரிரு வாரங்களுக்கு பின்னர் தொடர்பு கொள்வார். உங்களுக்கு 50 லட்ச ரூபாய் கடன் தொகை ஓகே ஆகியுள்ளது. 10 சதவீதம் அதாவது ரூ. 5 லட்சத்தை செலுத்தி கடன் தொகைக்கான செக்கை பெற்றுச்செல்லலாம் என்பார்கள். 5 லட்சம் டெபாசிட் செலுத்தினால், உங்களுக்கு செக் கிடைக்கும். ஆனால் அந்த செக் போலியானதாக இருக்கும். இப்படி பலரிடம் மோசடி நடக்க, மக்கள் உஷாராகி விட்டனர். இதையடுத்து இதில் ப்ளான் பி'யை செயல்படுத்தியது மோசடி கும்பல்.
அதாவது, முன்னரைப்போலவே உங்களுக்கு 50 லட்சம் கடன் ஓகே ஆகியுள்ளது என்பார்கள். அப்போது உங்கள் கணக்கில் சில லட்சங்கள் வந்து விழும். 'உங்கள் கணக்கில் ரூ.4.40 லட்சம் அனுப்பியிருக்கிறேன். அதை எடுத்து வையுங்கள். நான் வந்து உங்கள் கடன் பணம் தருகிறேன்' என்பார்கள். அந்த பணத்தை நீங்கள் எடுத்து வைத்திருந்தால் அதை வாங்கிக்கொண்டு, 1.50 கோடிக்கான செக்கை கொடுப்பார்கள். 'நான் 50 லட்சம் தானே கேட்டேன். 1.50 கோடிக்கு கொடுத்திருக்கிறீர்களே...?' என கேட்டால், 'உங்கள் தொகையை எடுத்துக்கொண்டு மீத தொகையை என்னிடம் கொடுத்து விடுங்கள். இப்போதைக்கு எனக்கு சில லட்சம் தேவை' எனச்சொல்லி' அதை வாங்கி சென்று விடுவார்கள். 
அந்த செக்கை வங்கியில் செலுத்தினால்தான் அது போலி என்பதே தெரியவரும். முதலில் கணக்கில் செலுத்தப்பட்ட 4.40 லட்சமும் வேறு யார் கணக்கில் இருந்தோ உங்கள் கணக்குக்கு மோசடியாய் மாற்றப்பட்டிருக்கும். இப்போது பல லட்சங்களை இழந்து, மோசடி வழக்கில் நீங்கள் குற்றவாளியாகியிருப்பீர்கள். இது தான் அந்த மோசடி.
அரிசி, புளியும் ஆன்லைன்ல மோசடி செய்யலாம்

ஆன் லைன் மூலம் அரிசி, புளி, வேர்கடலை வாங்கி ஏமாற்றிய கதைதான் இது. பொள்ளாச்சியில் ஒரு மிகப்பெரிய குடோன் ஒன்று, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம், உங்களின் புளி, வேர்கடலை எங்களுக்கு தேவை. நாங்கள் கோவை அருகே உள்ள பொள்ளாச்சியில் மிகப்பெரிய விற்பனையாளர் எனச்சொல்லி, நிறுவனம், குடோன்களின் விவரம், படத்தை அனுப்பி வைத்தார்கள். முதலில் சிறிய ஆர்டர்களுக்கு பணம் சரியான நேரத்தில் சென்று விடும். 
நல்ல வாடிக்கையாளர் என்ற பெயரை எடுத்த பின்னர், பெரிய ஆர்டர் ஒன்றை கொடுத்தார்கள். நீங்கள் எங்கள் நிறுவனத்தை பார்த்து விட்டு, நம்பிக்கை இருந்தால் பொருட்களை அனுப்புங்கள் என வலை விரிப்பார்கள். அடுத்த ஓரிரு தினங்களில் பெங்களூரு நிறுவனத்தினர் இங்கு வந்து, நிறுவனத்தை நேரில் வந்து பார்த்து, அதன் உரிமையாளரிடம் பேசி விட்டு செல்வார். 
நிறுவனத்தை பார்த்து விட்டு நம்பி, பெரிய அளவில் லோடு வந்து இறங்கும். ஆனால் அந்த நிறுவனத்துக்கு பணம் மட்டும் வந்து சேராது. அதுவரை தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள் செயலிழந்திருக்கும். அந்த இடத்துக்கு போனால் அங்கு வேறு நபர் வேறு டீலிங் பேசிக்கொண்டிருப்பார். அவரிடம் விசாரித்தால் இந்த கம்பெனிக்கு நான்தான் ஓனர். உங்களை யாரோ ஏமாத்திட்டாங்க போல என்பார்கள். 
அடுத்த ஓரிருவாரங்களில் இன்னொரு நிறுவனம் வரும். பொருட்களை தரும். பின்னர் வேறு ஓனர் மாறி இருப்பார். இப்படி அரிசியையும், புளியையும் வாங்கி பல கோடி மோசடி செய்த வரலாறும் கொங்கு மண்டலத்துக்கு உண்டு. 
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதுதான் இந்த மோசடி கும்பலின் கேப்டன் பாணி. பினாமி பெயரில் கம்பெனியை பதிவு செய்வர். ஆபீஸ் பிடித்து, போலி வங்கிக் கணக்குகளை துவங்கி, கம்ப்யூட்டர் தெரிந்த ஆளை பணிக்கு அமர்த்தி, கம்பெனியின் எம்.டி. என்கிற அந்தஸ்தில் பணக்கார நபரை நியமித்து, 'நீங்கள் ஆபீஸை பார்த்துகோங்க. மத்த வேலைகளை எல்லாம் (?) நான் பாத்துக்கிறேன்' என்பார். எந்த ஆவணங்களிலும் மோசடி செய்பவரின் பெயர் இருக்காது. 
மகாநதி படத்தின் கமல் கேரக்டர் மாதிரி ஒன்றுமே செய்யாமல் எம்.டி.யாக நியமிக்கப்பட்டவர் சிக்குவார். அல்லது தலைமறைவாகி வாழ வேண்டி வரும்.
பல ஆயிரம் கோடியை எட்டிய ஆன் லைன் மோசடி

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஃபைனான்ஸ் கம்பெனியில் பணத்தை போட்டு ஏமாந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது புதிது புதிதாக முதலீடுகளைப் பெற்று ஏமாற்றுகின்றனர். கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட மக்களை குறிவைத்து நடைபெறும் இந்த மோசடியில் சுருட்டப்படுவது பல ஆயிரம் கோடி ரூபாய்கள். 
அதில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டது பாசி போரெக்ஸ் மற்றும் பைன் பியூச்சர் மோசடிகள்தான். உங்கள் முதலீடு வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு உங்களுக்கு தரப்படுகிறது என்ற கணக்கில், நீங்கள் ஒரு லட்சம் கட்டினால், மாதம் 8,500 வீடு தேடி வரும். உங்களின் ஒரு லட்சம் பணம் அப்படியே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனச்சொல்லி, பல ஆயிரம் கோடி முதலீடாக பெறப்பட்டது. 
முதலில் மாதா மாதம் கிடைக்கும் தொகை சரியாக வழங்கப்பட்டு வந்தது. முதலீடு பெருமளவில் சேர்ந்த பின்னர், அந்த தொகை நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு பின்னர்தான், நம் பணம் அம்போ என்பது மக்களுக்கு தெரிந்தது. இன்றும் அந்த மோசடியில் ஏமாந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நீதிமன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். முதலீட்டாளர்களும் கைதாகியிருக்கிறார்கள். ஆனால் மோசடி பணம்தான் என்ன ஆனது என்பதே தெரியவில்லை.
எந்த ஆவணத்திலும் உரிமையாளர்கள் விவரம் இல்லை. நாங்க பணம் வாங்கினோம்னு ஆதாரம் இருக்கா? என தில்லாக கேட்கிறார்கள் இவர்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பாவமாய் முடங்கி கிடக்கிறார்கள். என்னமோ போங்க பாஸ்.
பாசி, பைன் பியூச்சர் மோசடி நடந்த பின்னராவது மக்கள் விழித்திருக்கலாம். ஆனா எங்கே விடுறாங்க. புதுசு புதுசா அறிமுகப்படுத்திடுறாங்களே... அடுத்தது விவசாயிகளுக்காக போடப்பட்ட பிரத்யேக ப்ளான். பருவமழை பொய்த்துப்போய் காடு கழனிகளை விற்றுவிடலாமா என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்பொழுது அதிரடியாக கவர்ச்சிகரமாய் அறிமுகப்படுத்தப்பட்டது அந்த மோசடி. என்னானு கேட்கறீங்களா? அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் - 14.08.2015

கொங்கு மோசடி - 3 (ரைஸ் புல்லிங்)

Image result for கோபுர கலசம்
கொங்கு மோசடி - 3 (ரைஸ் புல்லிங்)
ரைஸ் புல்லிங்

'இந்த கல் மோதிரத்தை போட்டா உங்க பிரச்னை எல்லாம் தீர்ந்துடும். இந்த உலோகத்தை வீட்டு பீரோவுல வைச்சிருந்தா உங்களுக்கு பணப்பிரச்னையே வராது' என்பன போன்ற சாதாரண டெக்னிக்தான் ரைஸ் புல்லிங். ஆனால் அவ்வளவு சாதாரணமாக இல்லாமல் இதை பிரம்மாண்டப்படுத்தியதில்தான் இவை மோசடிகளில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துக்கொண்டன. 'உங்களை யாராலும் அசைக்க முடியாத சக்ரவர்த்தியாக இந்த பொருள் மாற்றும்' என யாரையாவது நம்ப வைத்து, அதை அவர்களிடம் பல கோடிக்கு விற்க முடியுமா? முடியும் என்றால் அது நிச்சயம் ரைஸ் புல்லிங் மட்டும்தான். ஆன்மீகத்தை கலந்து அரங்கேற்றப்படும் இந்த மோசடி, கொங்கு மண்டல மோசடிகளில் மிக மிக பிரசித்தி பெற்றது.
ரைஸ் புல்லிங் மோசடி என்றால்?
கோவிலில் உள்ள கோபுர கலசத்தில் உள்ள இரிடியம் எனும் உலோகம், இடி தாக்குவதால் சக்தி வாய்ந்த உலோகமாக மாறிவிடும் என்றும், அதை நீங்கள் வைத்திருந்தால் எந்த கொம்பனாலும் உங்களை அசைக்க முடியாது என்பதும்தான் இந்த மோசடி. அப்படி இந்த மோசடியை நடத்தும்போது, கோபுர கலசத்தில் உள்ள இரிடியத்தின் சக்தியை விவரிக்க மோசடியாளர்கள் செய்யும் ஹைடெக் சோதனைக்கு (?) பெயர்தான் ரைஸ் புல்லிங்.
அதாவது சக்திவாய்ந்த இரிடியத்தை கொண்ட கோபுர கலசம் என்றால், சுற்றிலும் அரிசியை போட்டால் இழுத்துக்கொள்ளும் சக்திவாய்ந்ததாக சொல்லப்படும். கலசத்தில் சக்தி வாய்ந்த இரிடியம் இருக்கா என சோதிக்கும் முறைதான் இது.
அரிசியை இழுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதால் இது ரைஸ் புல்லிங் அதாவது அரிசியை இழுப்பது என்ற பெயர் பெற்றுள்ளது.
இரிடியத்தின் பெயரால்...
ரைஸ் புல்லிங் என அழைக்கப்பட்டாலும், இந்த மோசடியின் மூலமாக இருப்பது இரிடியம்தான். இரிடியம் என்பது கெட்டியான, அடர்த்தியான ஒரு உலோகம். இதன் உருகுநிலை என்பது மிக அதிகம் என்பதால், உயர் வெப்ப நிலைகளில் இந்த உலோகம் பயன்படும். மேலும் இடி விழுந்தாலும் இது தாங்கும் என்பதால் கோவில்களில் கடவுள் சிலையை பாதுகாக்க, பொக்கிஷங்களை பாதுகாக்க இரிடியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழமையான கோவில் கலசங்களில் இந்த இரிடியம் பயன்படுத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த இரிடியம் இடி தாக்கப்பட்டால் அது சக்தி மிக்கதாய் மாறி விடும் என்றும், அதை வைத்திருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான் எனச்சொல்லி இரிடியத்தின் பெயரால்தான் இந்த மோசடி நடத்தப்படுகிறது.
மோசடி நடப்பது எப்படி?
வெறுமனே கோபுர கலசம், இடி, இரிடியம் எனச்சொல்லி யாரையும் நம்ப வைக்க முடியாதல்லவா? அதனால் இதற்கு மிகப்பெரிய ஆன்மீக பின்புலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். "கோவில்ல தீர்த்தமா கொடுக்கறது வெறும் தண்ணீர்தான். ஆனா அது எப்படி நம் நோயை தீர்க்குது. பிரச்னையை தீர்க்குது? ஏன்னா கோவில்ல கிடைக்குற பாசிட்டிவ் வைப்பரேசன். மந்திரங்கள் சக்தியா மாறி தீர்த்தம் நோய் தீர்க்குற, பிரச்னை தீர்க்குற மருந்தா மாறுது. அது மாதிரிதான் கோவில்ல ஆயிரக்கணக்கான முறை உச்சரிக்கிற மந்திரங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறி கோவில் கலசத்தை அடையும்.
அதுல இடி, மின்னல் தாக்கும் போது அதன் சக்தி உச்சம் பெறும். அப்படி சக்தி மிக்க கலசத்தை வைச்சிருக்குறவங்கதான் ராஜா. அவங்களுக்கு ஒரு பிரச்னையும் வராது" என்று ஆன்மீக காரணத்தைச் சொல்லிதான் இந்த மோசடி அரங்கேறுகிறது.
ஏமாற்றுவது யாரை?
மற்ற மோசடிகளை போல் இதில் சாதாரணமானவர்கள் குறிவைக்கப்படுவதில்லை. ஆனால் பயன்படுத்தப்படுவார்கள். இந்த மோசடியின் டார்கெட். ஆன்மீக நம்பிக்கை கொண்ட மிகப்பெரிய செல்வந்தர்களும், தொழிலதிபர்களும், அரசியல் பிரமுகர்களும்தான். அவர்களை நம்ப வைக்க சாதாரண மக்கள் பயன்படுத்தப்படுவார்கள். 'ரைஸ் புல்லிங் கலசம் ரொம்ப சக்தி வாய்ந்தது. அது கிடைச்சா கோடியில் பணம் கிடைக்கும். சக்தி வாய்ந்த கோவில் கலசங்கள் பற்றி தகவல் சொன்னாக்கூட பல லட்சம் கிடைக்கும்.
அப்படி சக்தி வாய்ந்த கோபுர கலசத்துக்குப் பக்கத்தில் அரிசியைக் கொண்டு போனால், அது மெரூன் கலராகி கலசத்துல ஒட்டிக்கும். டார்ச் லைட் அடிச்சா பல்ப் ஃப்யூஸ் ஆகிடும். கலசத்துக்கு மேல் ஊசியைப் போட்டா அந்தரத்தில் நிற்கும்...'' என ஏராளமான கதைகளை அள்ளிவிட்டு, வேலையே செய்யாம பணக்காரர்களாகணும்னு இருக்குற சாதாரணமானவர்களை டார்ச் லைட்டும் கையுமா, கோவில் கோவிலா சுத்த வைச்சுருவாங்க. அதுக்கு அப்புறம் இது உண்மைதான்னு நம்ப வைக்குற மாதிரி சில புத்தகங்களை இவங்களே பிரிண்ட் பண்ணுவாங்க.
டார்கெட் பண்ற ஆட்கள் கிட்ட இந்த பேச்சு, புக், செய்தி எல்லாம் போய் சேர்ற மாதிரியான வேலைகளை செய்வாங்க. இதுக்கு அப்புறம் அதுக்கு அவ்வளவு சக்தியா?னு ஆர்வம் ஆயிட்டா அவ்வளவுதான். அடுத்த ஓரிரு சந்திப்புல கோபுர கலசமும், பல கோடி பணமும் கை மாறி இருக்கும்.
ஏமாறுவதை தவிர வேறு வழியே இல்லை?
அட போங்க பாஸ். இதுக்கெல்லாம் ஏமாறுவாங்காளா?னு தானே கேட்கறீங்க. நிச்சயம் ஏமாறுவாங்க. ஏன்னா அவங்க சொல்ற முறையும், தேர்வு செய்யுற ஆளும் அப்படி. அரசியல்ல அல்லது தொழில்ல நல்ல வளர்ச்சி கண்டு சமீபத்துல கொஞ்சம் இறங்கு முகத்துல இருக்குறவங்க, இல்லை பெரிய வளர்ச்சியை எதிர்பார்த்துட்டு இருக்குறவங்க கிட்ட, ஆன்மீகம் கலந்து சொல்லும்போது, அதுவும் இவங்க ஸ்டைல்ல சொல்லும் போது ஏமாற்றதை தவிர வேறு வழி இல்லைங்கற மாதிரிதான் தோணும். அப்படி ஏமாத்துவாங்க.
கோவில், மந்திரங்கள், பாசிட்டிவ், நெகட்டிவ் வைப்பரேசன், கலசம், இடி என இவர்கள் அடுக்கடுக்காய் சொல்லும் விஷயங்கள் உங்களை கொஞ்ச நேரம் சிலிர்க்க வைத்து, அப்படியே நம்ப வைத்துவிடும்.
இதற்காக மோசடியாளர்கள் பின்பற்றும் டெக்னிக் மிக நுட்பமானது. கோவில் மந்திரங்களையும், கலசத்தையும், இடியையும் வைத்து இவர்கள் விளையாடும் வார்த்தை விளையாட்டில் நிச்சயம் மயங்கி விடுவீர்கள். அந்தளவுக்கு பேசி ஆளை மயக்குவதில் சிறந்து விளங்குவார்கள் இவர்கள்.
யாகம் நடத்தி ஏமாற்றும் கும்பல்
நீங்கள் ஏமாறத் தயாராகிவிட்டீர்கள் என்பதை உங்கள் செயல்பாட்டில் இருந்து அறிந்து கொள்ளும் அவர்கள், அடுத்து சமீபத்தில் கோவில் கோபுர கலசம் திருடப்பட்ட ஒரு செய்தியை காட்டுவார்கள். 'இந்த கலசம் ரொம்ப சக்தி வாய்ந்தது. 5 மாசமா பத்திரமா இருக்கு. இதன் சக்தியை கூட்ட தொடர்ச்சியா மந்திரங்கள் ஓதிட்டு வர்றோம். இது மட்டும் உங்க கிட்ட இருந்தா அவ்வளவுதான் நீங்க எங்கேயே போய்டுவீங்க' என உங்களின் ஆசையை தூண்டுவார்கள்.
சமீபத்தில் அரசியலில் பெரும் எழுச்சி பெற்றவரை சுட்டிக்காட்டி, "அவர்கிட்ட இந்த கலசம் இருக்கு. இந்த கலசம் வந்த பின்னாடிதான் எல்லா பிரச்னைகள்ல இருந்து வெளியே வந்தார். கலசம் இருக்குற வரை அவருக்கு இறங்கு முகங்கறதே இல்லை," என நீங்கள் சர்வசாதாரணமாய் தொடர்பு கொள்ள முடியாத ஒருவரைப்பற்றி தத்ரூபமாய் கதை சொல்வார்.
'நீங்க வேணா அந்த கலசத்தோட சக்தியை பாருங்க. அப்போ தெரியும் அதோட சக்தி' என அடுத்த மீட்டிங்கான நாள் குறிக்கப்படும். நடுநிசி ஒன்றில் யாகம் நடத்தப்படுவதைப்போன்று அந்த சோதனை நடக்கும். அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ கோவில் கருவறையில் அமரவைக்கப்படுவதை போல சட்டையில்லாமல், மாலை அணிவித்து அமர வைக்கப்படுவார்கள். சிறிய யாகம் வளர்த்து, பட்டுத் துணியால் போர்த்தப்பட்ட கலசம் கொண்டு வரப்படும். பின்னர் கலசத்தை வைத்து சுற்றிலும் அரிசியை கொட்ட அரிசியை வேகமாக உள்ளிழுத்துக்கொள்ளும் கலசம். அந்த நேரம் கடவுளை நேரில் காணும் காட்சி போல அந்த காட்சி மிகப்பெரியதாய் உருவகப்படுத்தப்படும்.
இதை பார்த்தவர் கோடிகள் அடங்கிய பெட்டியை கொடுத்து விட்டு, பணத்தை பெற்றுச்செல்வது நிச்சயம்.
’ஏமாற்றுவது எப்படி?
எப்படி அரிசி, கலசத்தை நோக்கி இழுக்கப்படும் என கேட்கிறீர்கள் தானே. அது ரொம்ப சிம்பிள் டெக்னிக் தான். கலசத்தில் காந்தம் பொருத்தப்பட்டிருக்கும். அரிசியில் இரும்பு துகள் இருக்கும். இரும்பு துகள் இருக்கும் அரிசியை காந்தம் கவர்ந்திழுப்பது அதிசயமா என்ன? இதைத்தான் ஏதோ மிகப்பெரிய அதிசயம் நடந்ததாக சொல்லி ஏமாற்றப்படுகிறார்கள். அரிசி முழுவதும் இரும்பு துகளாய் இருந்தால் வேகமாக இழுத்துக்கொள்ளும். வேகமாக இழுத்துக்கொண்டால் இதன் சக்தி மிகவும் அதிகம் என்பார்கள். ' ஏ.. அப்பா... 20 செ.மீ தூரம் அரிசியை இழுத்திருக்கு. இது மாதிரி எந்த கலசமும் இழுத்ததில்லை. ரொம்ப சக்தி வாய்ந்த கலசம்!" என்பார்கள். உண்மையில் அவை டுபாக்கூர் கலசங்கள்.
இதை தயாரிப்பதற்கென்றே சில இடங்கள் இருக்கிறது. காந்தம் வைத்து தயாரிக்கப்பட்ட இந்த சாதாரண கலசம், சில கோடிகளுக்கு கைமாற்றப்பட்டிருக்கும். அதை இன்னும் சக்திவாய்ந்தது என பலர் வீட்டில் வைத்திருக்க கூடும். உண்மை தெரிந்து திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அதை தூர எரிந்து விட்டு அடுத்த வேலையை பார்த்துக்கொண்டிருக்க கூடும்.
இதிலும் உண்டு 'ப்ளான் பி'
கடந்த வாரம் நாக மாணிக்க கல் மோசடியில் சொல்லப்பட்டதைபோல, இதிலும் ப்ளான் பி உண்டு. கலசத்தை சுற்றி அரிசியை கொட்டி, அரிசியை இழுப்பதை எல்லாம் காட்டிய பின்னர், அதாவது கடைசி நேரத்தில் நீங்கள் இந்த டீலுக்கு ஒத்து வரவில்லை என்றால், நீங்கள் அங்கிருந்து நிச்சயம் பணத்துடன் திரும்ப முடியாது. 
அதுதான் ப்ளான் பி.
நீங்கள் இந்த டீலுக்கு ஒத்துவரமாட்டீர்கள் என தெரிந்தால், உடனே அங்கு போலீஸ் வரும். போலீஸ் என சத்தமிட்டு, அந்த கும்பல் கலசங்களோடு உங்கள் பணத்தையும் பறித்துக்கொண்டு செல்லும். எல்லாவற்றையும் பின்னர் பேசலாம் என்பார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு அழைப்பே வராது. கலசத்தை மையப்படுத்தி அதுவரை பேசி வந்தவர்கள் எல்லாம் திடீரென காணாமல் போவார்கள். அப்படி நடக்கும் போது அவர் முழுமையாக ஏமாற்றப்பட்டிருப்பார்.
இரிடியம் சக்தி வாய்ந்ததா?
இது தொடர்பாக மின்னியல் துறை சார்ந்த சிலரிடம் கேட்டோம். "இரிடியம் ரொம்ப காஸ்ட்லியான உலோகம். இது, எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகிறது. இந்தியாவில் உற்பத்தியாகறது இல்லை. ஒரு கிராம் இரிடியம் எப்படியும் 3 ஆயிரத்துல இருந்து 7 ஆயிரம் வரை கிடைக்குது. இரிடியம் வெப்பத்தை தாங்கும், அரிமானத்தைத் தடுக்கும் அப்படீங்கறதால ராக்கெட்டுகளில் கோட்டிங் மெட்டீரியலாகப் பயன்படுத்துகிறார்கள். கோபுரக் கலசங்களிலும் இதை கோட்டிங் கொடுத்து இருக்கலாம். இரிடியத்துக்கு வேற எந்த விதமான விசேஷ குணமும் கிடையாது. இது எல்லாம் சுத்தப்பொய். காசு பிடுங்கற வேலை," என்றார்.
யார் சொன்னா கேக்குறாங்க? நீங்க இந்த கட்டுரையை படிச்சுகிட்டு இருக்கறப்போ கூட ஏதோ ஒரு இடத்தில், யாரோ ஒருவர் கோபுர கலசத்துல டார்ச் அடிச்சு பாத்துட்டு இருப்பார். இன்னொரு இடத்தில் கலசத்தை சுத்தி அரிசியை கொட்டி இன்னொரு கும்பல் பேச்சு நடத்திட்டு இருக்கலாம்.
மண்ணுளி, நாக மாணிக்கம், ரைஸ் புல்லிங்னு கொங்கு மண்டலத்துல ஆன்மீகத்தை வைத்துதான் இவ்வளவு மோசடியும் நடக்குது என நினைத்து விட வேண்டாம். ஆன்லைன் மோசடிகளிலும் கொங்கு மண்டலம்தான் நம்பர் ஒன். மோசடி நிறுவனங்களில் இழந்த தொகை மட்டும் பல ஆயிரம் கோடி. அப்படி ஆன் லைனில் எப்படி மோசடி பண்ணுனாங்கனு கேட்கறீங்களா?
அவசரப்பட்டால் எப்படி, அடுத்த வாரம் பார்ப்போம்...
- ச.ஜெ.ரவி
 (விகடன் செய்திகள் -07.08.2015)

கொங்கு மோசடி-2

கொங்கு மோசடி-2
கொண்டாட்டங்கள், சடங்குகள் மற்றும் வழிபாடுகளையும் மட்டுமே சொல்லி வந்த ஆன்மீகம், காலப்போக்கில் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் என சொல்லப்பட்டது. அந்த நேரத்தில், மக்களின் பிரச்னைகளையும், அவர்களின் ஆசையையும் கணக்கில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது தான் நாக மாணிக்க கல். நாக மாணிக்க கல் என்றால் என்ன? எப்படியெல்லாம் இதில் மோசடி நடக்கிறது? உண்மையில் நாக மாணிக்க கல் என்பது உண்மையா என்பதை பார்க்கலாம்...
எவர்கிரீன் மோசடி
கொங்கு மண்டலத்தில் நடக்காத மோசடிகளே இல்லை. அந்தளவுக்கு இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா? என நாம் யோசிக்கவே முடியாத அளவுக்கான மோசடிகள் எல்லாம் சர்வசாதாரணமாய் நடந்த பகுதி கொங்கு மண்டலம். அதில் எவர்கிரீன் மோசடி என்றால் அது நாக மாணிக்க கல்தான். 'வாழ்க்கையில் உள்ள பிரச்னைகள் அத்தனைக்கும் ஒரே தீர்வு இருக்கிறது. அது உங்களின் அத்தனை பிரச்னைகளையும் தீர்த்து விடும்' என ஒருவரை நம்ப வைத்த மோசடி என்றால் அது நாக மாணிக்க கல் மோசடிதான். இதில் ஆன்மிகத்தின் பங்கு மிக அதிகம். ஆன்மீகத்தில் திளைப்பவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதுதான் இந்த மோசடி. 
இந்த மோசடி என்பது சர்வ சாதாரணமானது அல்ல. அது எப்படி என்கிறீர்களா? அதற்கான பதில் இந்த கட்டுரையின் இறுதியில் உள்ளது. முதலில் நாக மாணிக்க கல் என்றால் என்ன என பார்ப்போம். 
சில மோசடி செய்திகளிலோ அல்லது ஆன்மீகம் சார்ந்த கட்டுரைகளிலோ இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 
மாணிக்கம், மரகதம், கனகபுஷ்பராகம், வைரம், வைடூரியம், முத்து, பவழம், நீலக்கல், கோமேதகம் என 9 வகை நவரத்தின கற்களை கேள்விப்பட்டிருப்போம். அதென்ன நாக மாணிக்கம்னு கேட்கறீங்களா? மற்ற எல்லா நவரத்தினமும் பூமியில இருந்தும், கடலில் இருந்தும் கிடைக்குது. ஆனா நாக மாணிக்கங்கறது நாகப்பாம்பு வாயில இருந்து வருமாம். இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற போதிலும், செவி வழி செய்தியாய் நீண்ட நாட்களாய் வழக்கத்தில் உள்ளது நாக மாணிக்க கல்லும், அதைப்பற்றிய கதையும்.
நாக மாணிக்கம் என்பது ஆன்மீகத்தில் கூறப்பட்ட ஒன்று. 

அதனாலேயே பலராலும் நம்பப்பட்டு வருகிறது. நாக மாணிக்க கல் பற்றி என்ன சொல்லப்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம். "100 ஆண்டுகள் கடந்து வாழும் நாகம், தன் வாழ்நாளில் எந்த மனிதரையும், கீரியையும் தன் விஷத்தை பயன்படுத்தி கடிக்காமல் இருந்தால், 100 ஆண்டுகளில் அந்த விஷம் பாம்பின் கடைவாயில் இறுகிப்போய் ஒளி வீசும் மாணிக்கமாய் மாறிவிடும். ஒரு லட்சம் பாம்புகளில் ஒரு பாம்பு இப்படி நாக மாணிக்கத்தை உருவாக்கும். இப்படிப்பட்ட பாம்புகள் இளமையை பாதுகாத்துக்கொள்ளும். 200 ஆண்டுகள் வரை கூட இந்த நாகங்கள் வாழும். நாகமாணிக்கத்தை உருவாக்கும் நாகங்கள், இறக்கைகள் முளைத்து பறக்கும் வல்லமை பெறும். ஆனால் கண் பார்வை மட்டும் இந்த நாகங்களுக்கு மங்கி இருக்கும்.
அமாவாசை தினத்தில் பார்வை குறைபாடால் இரைதேட சிரமப்படும்போது, தன் கடைவாயில் உள்ள நாக மாணிக்கத்தை வெளியில் கக்கி, அதன் ஒளியில் இந்த நாகம் இரைதேடும். நாக மாணிக்கம் மிகுந்த பிரகாசமானது. இரை தேடி முடிந்த பின் மீண்டும் நாக மாணிக்கத்தை அந்த நாகம் உள்ளெடுத்துக் கொள்ளும். 100 வருடங்கள் சேமித்த இந்த நாக மாணிக்க கல் மிகக் கொடிய விஷத்தன்மை கொண்டது. 
இந்த நாக மாணிக்கம் தங்கம், வெள்ளியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பாலில் மூழ்கிய நிலையில் இருக்க வேண்டும். அவற்றை நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்" என பொதுவாக சொல்லி, கடவுள் நம்பிக்கைகொண்டவர்களால் நம்பப்பட்டும் வருகிறது. கிட்டத்தட்ட சினிமா கதை போன்றதுதான் இது.
ஏமாற்றுவது இப்படித்தான்...

இந்த ஆன்மீக கதைதான் மோசடியாளர்களின் மூலதனம். "நாக மாணிக்கம் என்பது சாதாரணமானது அல்ல. அது மிகப்பெரிய பொக்கிஷம். நாகரத்தினத்தை அணிந்தால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. எதிரிகள் இருக்க மாட்டார்கள். வளமான வாழ்க்கை இருக்கும். செல்வம் கொழிக்கும். மகத்தான சக்தி கிடைக்கும். அதனால் மன்னர்கள் இந்த நாக மாணிக்கத்துக்காக அலைந்து திரிந்த வரலாறுகள் எல்லாம் உண்டு. இது போன்ற அற்புத சக்தி வாய்ந்த நாகங்கள் அதிகம் உள்ளது நாம் வெள்ளியங்கிரி மலையில்தான்.." என துவங்கும், மோசடியாளர்களின் உரையாடல்கள். 
அரசியலில் எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் போன்றவர்கள்தான் இவர்களின் முக்கிய டார்கெட். வைர நகைகள் விற்கும் கடையில் வெள்ளி ஸ்பூனும் விற்பது போன்று, அவ்வப்போது சிறிய தொழிலதிபர்களிடமும் இந்த மோசடி நடக்கும்.
அரசியலிலோ, தொழிலிலோ அடுத்தடுத்து சரிவை சந்திப்பவர்கள் அல்லது மிகப்பெரிய எழுச்சிக்காக காத்திருப்பவர்கள், அதற்காக ஆசைப்படுபவர்கள்தான் இவர்களின் டார்கெட். அவர்களுக்கு நெருக்கமானவர்களை முதலில் ஏமாற்ற வேண்டும். எத்தகைய பிரச்னையாக இருந்தாலும் நாக மாணிக்கம் வைத்திருந்தால் அந்த சக்தியால் முழுமையாக தீரும். நாக மாணிக்க கல் வைத்திருந்த மன்னன்தான் தன் எல்லையை விரிவுபடுத்தி, எவ்வித பிரச்னையும் இல்லாமல் நாடாளுவதை உறுதி செய்தது. அதுபோல் அண்ணனும் நாக மாணிக்க கல் வைச்சிருந்தா பிரச்னை தீரும்" என முதலில் அவருக்கு நெருக்கமானவர்களை நம்ப வைப்பார்கள். அதன் பின்னர் அந்த முக்கிய பிரமுகருடன் சந்திப்பு நடக்கும்.
கதையாய்.. கதையாய் காரணங்கள்

மிக ரகசியமாக நடக்கும் அந்த சந்திப்பு. வாட்டசாட்டமான புரோக்கர் ஒருவர், அவருடன் பணம் படைத்த சிலர் மட்டுமே அந்த அறையில் இருப்பார்கள். சின்ன நகைப்பெட்டி ஒன்றை எடுத்து காட்டுவார் புரோக்கர். அறையின் விளக்குகள் அணைக்கப்படும். சின்னப்பெட்டியை திறந்து உள்ளே நிரப்பி வைக்கப்பட்ட பஞ்சை சற்று விளக்கினால், உள்ளே இருந்து பளீரென வெளிச்சம் அறை முழுவதுவம் பாயும். அவசரமாய் அந்த பெட்டியை மூடிவிட்டு, அறையின் விளக்குகள் போடப்படும். "இங்கே எதுவும் பேச வேண்டாம். அப்புறம் பேசிக்கலாம். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க" என முடியும் அந்த சந்திப்பு.
அடுத்த சந்திப்பில் நாக மாணிக்க கல்லின் பெருமைகள் பற்றி மட்டும் பேசப்படும். நாக மாணிக்கம் வைத்திருந்தால் கிடைக்கும் நன்மை என சில நிமிடங்கள் இடைவிடாது உரையாற்றுவார் அவர். நாக மாணிக்க கல் குறித்து ஆன்மீகத்தில் சொல்லப்பட்டதை விளக்குவார். சில கதைகளையும் அவரே புனைவார். சமீபத்தில் மிக வேகமாய் வளர்ந்த அரசியல் பிரமுகரோ, தொழிலதிபரோ நாக மாணிக்க கல்லால் தான் வளர்ச்சி பெற்றார் என சொல்லுவார். அதற்கான ஆதாரங்கள் என சிலவற்றையும் காட்டுவார். எல்லாமே அவரால் கிரியேட் செய்யப்பட்டதாக இருக்கும். 
இப்படி ஓரிரு மணி நேரம் நாக மாணிக்க கல்லின் புராணங்கள் மட்டுமே இருக்கும். நாகமாணிக்கக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட சொல்லியிருக்கிறார். இங்க பாருங்க இந்த வெப்சைட்டை என வெளிநாட்டினர் நாக மாணிக்க கல் பற்றி எழுதி இருப்பதாக சொல்லி, இவர்களால் எழுதப்பட்ட சில இணைய பக்கங்களை காட்டுவார்.
நீலவேணு நாகம்

கொங்கு மண்டலத்தில் நடக்கும் இந்த மோசடியின்போது மோசடியாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் நாகத்தின் பெயர் நீலவேணு நாகம். "உலகத்துல சில இடத்துலதான் நீலவேணு நாகம் இருக்கு. அதுல ஒண்ணு நம்ம வெள்ளியங்கிரி. ஆதிசேஷனின் பரம்பரையில் வந்தது இந்த நீல வேணு நாகங்கள். ஒவ்வொரு நாகமும் குறைஞ்சது 20 அடி நீளம் இருக்கும். இது நாக தேவதை இனத்தைச் சேர்ந்தவை.
இந்த நாகங்கள், யாரையும் தீண்டாமல் இருந்தால் 100 வருடத்துக்கு ஒரு அடி குறையும். இது 600 ஆண்டுகள் வரை வாழும். 600 ஆண்டுக்கு பின்னர் அது பறக்கும் சக்தியை பெறும். இந்த நாகத்தின் மாணிக்கத்துக்கு ரொம்ப சக்தி அதிகம். எல்லோரின் தேவையையும் இந்த மாணிக்கம் நிறைவேற்றும்." என வெள்ளியங்கிரி மலையை மையப்படுத்தி கதை கதையாய் சொல்கிறார்கள் மோசடியாளர்கள். 
அப்போது உங்கள் உடல் சிலிர்த்துவிடும்.
தொட்டா நிச்சயம் சாவு தான்...

சம்பந்தப்பட்ட தொழிலதிபரோ, அரசியல் பிரமுகரோ அதை முழுமையாக நம்பி விட்டார் என அந்த பிரமுகர் நினைத்தால், அடுத்த சந்திப்பு ஒரு வனப்பகுதியில் நடக்கும். சக்தி வாய்ந்த நாக மாணிக்கம் என ஒன்று மீண்டும் காட்டப்படும். '150 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற பாம்போட நாக மாணிக்கம் இது. அந்த பாம்புக்கு தெரியாம பசுஞ் சாணத்தால கல்லை மூடித்தான் கொண்டு வந்திருக்கோம். கையில காயம் இருக்கிறவங்க கல்லைத் தொட்டா உடனே செத்துருவாங்க. பார்த்துத் தொடணும். கல்லை எப்பவும் பால்லதான் போட்டு வைக்கணும்’ என டெரர் 'பில்ட்-அப்’ கொடுப்பார்கள். 
'கொடிய விஷத்தை கொண்டது இந்த நாக மாணிக்கம். கையில் காயத்தோட தொட்டா நிச்சயம் சாவுதான். பாத்து தொடுங்க. உங்க கையில காயம் எதுவும் இல்லையே?' என உங்களிடம் கேட்டால், உங்கள் கையில் காயம் எதுவும் இல்லை என்றாலும் நீங்கள் நிச்சயம் அதை தொட மாட்டீர்கள்தானே?. ஆம் தொடமாட்டீர்கள். அப்படித்தான் அவரும் அதை தொட்டுக் கூட பார்க்க மாட்டார். 
நாக மாணிக்க கல் அடங்கிய சிறிய பெட்டியும், பணக்கட்டுகள் அடங்கிய பெரிய பெட்டியும் கைமாறிக்கொள்ளும். உண்மையில் அந்த சிறிய பெட்டியில் இருப்பது எந்த மாணிக்கமும் கிடையாது. அது ஒரு சாதாரண கல். எல்.இ.டி. விளக்கு உபயத்தால் பளீரென்ற வெளிச்சத்தை தரும். பலர் இந்த எல்.இ.டி லைட்டை இன்னும் நாக மாணிக்கமாக நினைத்து வைத்திருப்பவர்கள் உண்டு. உண்மை தெரிந்து 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை' எனும் கதையாக அதை தூக்கி எறிந்து விட்டு, வழக்கம் போல் தங்கள் வேலையை பார்க்கிறவர்களும் உண்டு.
'ப்ளான் ஏ' தோல்வியடைந்தால் 'ப்ளான் பி'

வனத்தில் நடக்கும் சந்திப்பில், திட்டமிட்டு நாக மாணிக்க கல் என ஒன்றை கொடுத்து ஏமாற்றுவது பிளான் ஏ. அப்போது அவர் சுதாரித்து விட்டால், அப்போதும் பணத்தை நூதனமாக பறிப்பதுதான் ப்ளான் பி. வனத்தில் நடக்கும் சந்திப்பில் எப்போதும் போல் அவர்கள் உணவில் உப்பை சேர்ப்பது போல், ஏராளமான ஆசைகளோடு லேசான பயத்தையும் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களா என்பதையும் சோதித்துக்கொண்டே இருப்பார்கள். உங்களுக்கு திடீரென சந்தேகம் வருகிறது. இப்போது இது வேண்டாம் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், ப்ளான் ஏ'வை கை கழுவி விடுவார்கள் மோசடியாளர்கள்.
அப்போது ப்ளான் பி செயல்பாட்டுக்கு வந்து விடும். அதென்ன ப்ளான் பி என கேட்கிறீர்களா? அதே வனப்பகுதி.. பஞ்சு நிரப்பிய பெட்டியில் எல்.இ.டி விளக்கு உபயத்தால் எரியும் சிவப்பு நிறக்கல். மற்றொருவரிடம் பணப்பெட்டி. இப்போது வேண்டாம். இன்னொருமுறை பார்த்துக்கொள்ளலாம் எனும் மன நிலைக்கு அந்த தொழிலதிபரோ, பிரமுகரோ வந்து விட்டால் அப்போது சைரன் ஒலியுடன் போலீஸ் வரும். அந்தப் பதற்றத்தில் பிரமுகரிடம் கல் திணிக்கப்பட்டு, பணம் கைமாற்றப்பட்டு விடும். அந்த பிரமுகரும் போலீசுக்கு பயந்து அங்கிருந்து ஓடி விடுவார். அந்த போலீசும் அவர்களின் செட்டப் தான். ஆக... எப்படியும் பணம் கைமாறி விடும் இந்த மோசடியில்.
நாகமாணிக்கம் என்பது உண்மை தானா?

நாக மாணிக்க கல் என்பது உண்மை தானா? அந்த கேள்வியை முன்வைத்து சில நிபுணர்களிடம் நாம் பேசினோம்.
உண்மையில் நாக மாணிக்க கல் என்பதை அடையாளம் காட்ட கூட எந்த வழியும் இல்லை என்பதுதான் உண்மை. மாணிக்க கற்களில் பல வகை உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த நாக மாணிக்கம் என ஏமாற்றுகிறார்கள். நாக மாணிக்கம் என்பது உண்மை என பலரால் நம்பப்பட்டு வருவது ஆச்சரியமளிக்கிறது. பாம்பின் விஷம் ஒளிவீசும் நாகமாணிக்கமாய் மாறும் என்பதும், அது தங்கள் பிரச்னைகளை எல்லாம் தீர்க்கும் முழுக்க முழுக்க பொய். உண்மையில் நாகத்தில் எந்த கற்களும் உருவாவதில்லை.
ஆனால் பாம்பு கற்களை துப்புவது போன்ற வீடியோ காட்சிகளை காட்டி, உண்மை என நம்ப வைக்கப்படுகிறார்கள். பாம்பு தான் விழுங்கிய பொருட்களில் தேவையில்லாதவற்றை வெளியே கக்கி விடும். உதாரணமாக பாம்பு முட்டையை விழுங்கினால், முட்டையில் ஓட்டை மட்டும் வெளியே துப்பி விடும். அப்படி பாம்பு முட்டை என நினைத்து விழுங்கும் பறவையின் எச்சத்தின் மூலம் சில கற்களை பாம்பு வெளியே துப்பும். அந்த காட்சிகளைதான் நாம் வீடியோவில் பார்க்கிறோம். 
இதை பார்ப்பவர்கள் பாம்பு நாக மாணிக்கம் வைத்திருப்பதாகவும், அதில் இருந்து வரும் ஒளியினால் இரவில் இரை தேடுவதாகவும் கதை கட்டுகிறார்கள். எந்தவித உயர்ந்த கற்களுக்கும் சுயமாக ஒளிவீசும் தன்மை கிடையாது என்பதை படித்தவர்களும் மறந்துவிட்டு, கற்களை தேடி அலைவதுதான் பரிதாபமாய் இருக்கிறது. தன்னை பிரதிபலித்து கற்கள் காட்டிக்கொள்ளும். ஆனால் அதில் இருந்து ஒளி கிடைக்கவே கிடைக்காது. எனவே இதெல்லாம் சுத்தப்பொய்" என்றனர்.
100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற..

இந்த மோசடி சாதாரணமானது இல்லை. நாகமாணிக்கம் என ஒரு கல்லே இல்லாத நிலையில், அது தான் இது எனச்சொல்லி ஏமாற்றுவது என்பது நிச்சயம் சாதாரணமானது விஷயமில்லை. அப்படி இல்லாத ஒரு கல்லுக்கு உருவகம் கொடுத்து, அடையாளங்கள் கொடுத்து கோடிகளில் விற்பது என்றால் சாதாரணமானதா என்ன?
இப்போது கூட இன்னோர் ஊரில் இன்னொருவரிடம், '100 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ற...’ என்று கதைசொல்ல ஆரம்பித்து மோசடி செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஏமாறவும் கூட. முட்டாள்கள் மட்டுமே இதுபோன்ற மோசடி வியாபாரத்தின் வாடிக்கையாளர்கள். ஆனால் புத்திசாலிகளையும் முட்டாள்களாக்கி விடும் கலையை அறிந்து வைத்திருக்கிறார்கள் மோசடியாளர்கள். 
ஒரு மோசடியில் சிக்காமல் தப்பித்து விட்டால், அவர்களுக்கு இன்னொரு வலை விரிக்கப்படுகிறது. நாக மாணிக்க கல்லில் சிக்காமல் தப்பியவர்கள், ரைஸ் புல்லிங் மோசடியில் சிக்கிய சம்பவங்களும் உண்டு. பீரோ புல்லிங், ஆயில் புல்லிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன ரைஸ் புல்லிங் என்கிறீர்களா? அது தான் மிகப்பெரிய நூதன மோசடி அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் - 30.07.2015)

கொங்கு மோசடி -1

கொங்கு மோசடி -1
சதுரங்கம் ஆட்டத்தை பற்றி நமக்கு தெரியும். இரு அணிகளுக்கும் ராஜா தலைமையில் ராணி, மந்திரிகள், சிப்பாய்கள் என 16 பேர் அடங்கிய படை. ராஜா, ராணி என ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் இயங்குவார்கள் என இருவருக்கும் ஒரே மாதிரியான விதி. ஒரு படை இன்னொரு படையை தாக்கி, ராஜாவை சிறைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆட்டம். 
தாக்குதல் நடத்துவதும், அதில் இருந்து தற்காத்துக்கொள்வதும்தான் ஆட்டம் என்று நினைத்தால் நிச்சயம் நீங்கள் இதில் வெல்ல முடியாது. தந்திரமாய் சிப்பாயையோ அல்லது வேறு வீரரையோ தாக்கும்படி வாய்ப்பு ஏற்படுத்தித் தந்து, ஆசையை உருவாக்கி, அந்தப் படையை கவர்ந்திழுத்து, அதன் பின்னர் சுற்றிவளைத்து தாக்கி ராஜாவை சிறைபிடிக்க வேண்டும். அப்படியென்றால்தான் நீங்கள் வெல்ல முடியும். 
அதாவது ஆசை காட்டி, கவர்ந்திழுத்து தாக்க வேண்டும். சதுரங்கத்தில் உள்ள இந்த உளவியலை தீர்க்கமாய் அறிந்தவர்களுக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்து வந்தது. கிடைத்தும் வருகிறது. இனியும் கிடைக்கக் கூடும். 
'மாட்டாத வரை எதுவும் தவறில்லை!'

இன்றைய சமூகத்தில் ஒருவர் கற்றவரா, பண்பாளரா என்பதையெல்லாம் தாண்டி அவர் செல்வந்தரா என்பது முக்கிய தகுதியாய் இருக்கிறது. செல்வந்தராக இருந்தால், அவர் எவ்வழியில் பொருளீட்டினார் என்பதெல்லாம் பார்க்கப்படுவதில்லை. மாட்டாமல் இருக்கும் வரை எதுவும் தவறில்லை என்பதுதான் பொதுவான கோட்பாடாக மாறிப்போனது. 
மந்திரிகுமாரியில் ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு. நாட்டை சூறையாடிவந்த கொள்ளையனை சிறையில் அடைத்திருப்பார்கள். அவனிடம் ராஜதந்திரியான அவனது தந்தை, குற்றத்தை ஒப்புக்கொண்டு ராஜாவிடம் விடுதலை பெறுமாறு அவனிடம் சொல்வார். அப்போது கொள்ளையனான அவரது மகன், கொக்கரிப்போடு சிரித்துவிட்டு, 'குற்றம்...எது குற்றம்? உங்களுக்குதான் அது குற்றம். எனக்கு அது கலை' என்பான் இறுமாப்பாக. 
நிஜத்தில் நடந்துகொண்டிருப்பது அதுதான். மாட்டிக்கொண்டால் குற்றம். மாட்டாத வரை அது ஒரு கலை, கொஞ்சம் முன்னேறி இன்று அதுவே சாமார்த்தியம் என்றாகிவிட்டது.
இந்தச் சூழல் பெரும்பாலானோர் உடனடி பணக்காரராகிவிட வேண்டும் என்றும், உழைக்காமல், குறுகிய காலத்தில் பணம் சேர்த்துவிட வேண்டும் எனவும் யோசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இப்படி எப்படியாவது பணம் ஈட்டிட வேண்டும் என நினைப்பவர்கள்தான் மோசடியாளர்களின் டார்கெட்.
சர்வசாதாரணமாய் இல்லாமல் இவர்களை ஏமாற்றுவது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அனைத்தும் மிக நூதனமானவை. இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா அல்லது இப்படியெல்லாம் ஏமாறுவார்களா என யோசிக்க வைப்பவை. ஆனால் அத்தனையும் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றது. லட்சங்களில் துவங்கி பல ஆயிரம் கோடி வரை மோசடிகள் சர்வ சாதாரணமாய் நிகழ்ந்த பகுதி என்றால் தமிழகத்தின் மேற்கு பகுதியான இந்த கொங்கு மண்டலம்தான். எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள், இந்த மோசடிகளின் நதி மூலம், ரிஷி மூலம் எல்லாம் என்ன என விவரித்தால், இப்படியெல்லாமா ஏமாந்தார்கள்? என்ற அதிர்ச்சி மேலோங்கும்.
ஆனால், அதே நேரத்தில் அடுத்த மோசடி சத்தமில்லாமல் துவங்கியிருக்கும். முந்தைய மோசடிக்கு அதிர்ச்சி தெரிவித்தவர், இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவராக இருப்பார். அப்படி விதவிதமாய் நடந்த மோசடிகளைதான் நாம் இந்தத் தொடரில் பார்க்க இருக்கிறோம்...
மோசடிகளின் துவக்கம் மண்ணுளிப் பாம்பு!

கொங்கு மண்டலத்தில் மோசடிகளின் துவக்கம் என்றால் அது மண்ணுளிப் பாம்புகள்தான். மண்ணுளிப் பாம்பு என்றால்கூட ஊரில் பலருக்கு தெரியாது. இரு தலை மணியன் என்றால்தான் பலருக்கு தெரியும். மண்புழு வகையைச் சேர்ந்த இந்த மண்ணுளிப் பாம்பை 2000-க்கு முன் யாரும் சீண்டியதுகூட இல்லை. 2000-க்குப் பின்னர் இதற்கு ஏற்பட்ட கிராக்கி எக்கச்சக்கம். ஒவ்வொரு பாம்பும் 50 லட்சம் வரை பேரம் பேசப்பட்டதெல்லாம் நடந்தது. ஒருவரை ஏமாற்றி பல லட்ச ரூபாய்க்கு விற்றதுதான் கொங்கு மோசடியின் துவக்கம்.
அதெப்படி யாரும் சீண்டாத மண்ணுளியை 50 லட்ச ரூபாய்க்கு ஏமாற்றி விற்க முடியும் என்கிறீர்களா? அதுதான் இதில் உள்ள ட்ரிக். இந்தப் பாம்பு அதற்கு நல்லது என்றும், இதற்கு நல்லது என்றும், இத்தனை லட்சத்துக்கு மண்ணுளிப் பாம்பை வாங்க ஆட்கள் தயாராக உள்ளார்கள் என்றும் ஊர் முழுவதும் முதலில் தகவல்கள் பரப்பப்பட்டன. 3 கிலோவுக்கு மேல் எடை இருந்தால் ஓரிரு லட்சம், அதுவே 5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட மண்ணுளி என்றால் அதற்கு பல லட்சம் கிடைக்கும் என பரப்பப்பட்ட தகவல்கள் மக்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவியது. வேலையே செய்யாமல் பணக்காரராகி விட வேண்டும் என இருந்தவர்கள், பணக்காரராக இதுதான் வாய்ப்பு என மண்ணுளியைத் தேடி பயணம் போனார்கள். இன்னும் சிலர் வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு மண்ணுளிப் பாம்பைத் தேடத்துவங்கினர். அப்படி வந்ததுதான் மண்ணுளிக்கு வந்த கிராக்கி. இந்த கிராக்கிதான் அதுவரை யாராலும் கண்டுகொள்ளப்படாத, பாம்பாக கூட மதிக்கப்படாத மண்ணுளி பல லட்சத்துக்கு விலை போகும் என நம்புவதற்கு காரணமாய் இருந்தது.
மண்ணுளி வாஸ்து பாம்பாம்!

சும்மா கிராக்கி உருவாக்கினா மட்டும் போதுமா? இத்தனை விலை கொடுத்து மண்ணுளிப் பாம்பை ஏன் வாங்கணும்? அதற்கும் விதவிதமாய் காரணங்கள் சொல்லப்பட்டது. அப்படி மண்ணுளிப் பாம்புக்கான டிமாண்டை ஏற்ற முதலில் சொல்லப்பட்ட காரணம்... அது வாஸ்துவுக்கு சிறந்தது என்பதுதான். 'இந்தப் பாம்பை வீட்டில் வளர்த்தால் வாஸ்து சாஸ்திரப்படி ராசி. இந்த பாம்பு இருக்கும் வீடுகளில் லட்சுமி குடியிருப்பாள்' எனச் சொல்லப்பட்டது. 'பொள்ளாச்சி பக்கத்துல விவசாயம் எல்லாம் ஒடிஞ்சு போய் இருந்தானே சுப்பிரமணி. இப்ப எப்படி நிலம், பங்களானு வாங்கி கோடீஸ்வரனா இருக்கான் தெரியுமா? காரணம் இந்த மண்ணுளிதான். வீட்டுல வாங்கி வளர்த்துட்டு வந்தான். ஆறே மாசத்துல பெரிய பணக்காரன் ஆயிட்டான்ல' இப்படி சில கதைகள் சொல்லப்படும். ஆம்... அந்தப் பாம்பால்தான் நான் கோடீஸ்வரன் ஆனேன் எனச் சொல்லவும் சிலர் இருப்பார்கள். இப்படி மெல்ல மெல்ல நம்பவைத்து முதலில் ஓரிரு லட்சங்களுக்கு விலை போனது.
பாம்பில் இருந்து வயாக்ரா?

இதில் கிடைத்த லாபம் குறைவு என்பதாலோ என்னவோ, அடுத்த காரணத்தைத் தேடினர் மோசடியாளர்கள். அதுதான் ஆண்மை பெருக்குவதற்கான மருந்து இதில் உள்ளது என்பது. வயாக்ரா போன்ற மாத்திரைகள் அறிமுகமான காலத்தில் அதுபோன்ற மாத்திரைகள் இந்தப் பாம்பின் மூலம்தான் தயாரிக்கப்பட்டு வந்ததாகச் சொல்லப்பட்டது. இந்தப் பாம்புக்கான தேவை வெளிநாடுகளில் மிக அதிகம் இருக்கிறது. இந்தப் பாம்பை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினால் கோடியில் விற்கலாம் என ஆசை வார்த்தை கூறப்பட்டது. வெளிநாடுகளில் இதன் தேவை இருப்பதை போன்று சூழலை இவர்களே உருவாக்கி, அதை நம்ப வைப்பார்கள். 'போன மாசம் தர்மபுரியில 4 கிலோ பாம்பு கிடைச்சது. அதை 10 லட்சத்துக்கு ஒருத்தர் வாங்கினார். ரெண்டு நாளுக்கு முன்னாடி இந்தப் பாம்பை செக் பண்ணி பாத்துட்டு ஒரு கோடிக்கு வாங்கிட்டாங்க. இந்த பாம்பு 5 கிலோ இருக்கு. விலை 15 லட்சம்தான். ஒரு மாசம் வீட்டுல வெச்சு பாத்துகிட்டீங்கனா எப்படியும் ஒன்றரை கோடிக்கு விலைக்குப் போகும். அதுக்கு நான் கியாரண்டி. ஆனா, எடை குறையாமா பாத்துக்கோங்க" என்பார்கள். நான் பாம்பை வாங்கிக்கறேன்னு சில போன் அடுத்தடுத்து வரும். இதெல்லாம் புரோக்கர்களால் உருவாக்கப்படும்.
எய்ட்ஸ்க்கு இதுதான் மருந்தாம்!

இதுவும் கொஞ்சம் ஓய்ந்த பின்னர், மண்ணுளிப் பாம்புக்கான டிமாண்டை உருவாக்க அடுத்து சொல்லப்பட்ட காரணம்... இந்தப் பாம்பில் இருந்து எடுக்கப்படும் மருந்துதான் எய்ட்ஸ் மற்றும் கேன்சருக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். இதனால், மண்ணுளிப் பாம்பின் விலை தாறுமாறாக நிர்ணயிக்கப்பட்டது. 
"எய்ட்ஸ் நோய், கேன்சர் நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை அணுக்களோட செயல்பாடு ரொம்ப குறைஞ்சுடும். இதனால் சீக்கிரம் சாக வாய்ப்பிருக்கு. இந்த மண்ணுளிப் பாம்புல வெள்ளை அணுக்கள் நிறைய இருக்கு. 5 கிலோ எடைக்கு மேல இருக்குற பாம்புகள்லதான் இந்த வெள்ளை அணுக்கள் அதிகம் இருக்கும். இதனாலதான் இந்தப் பாம்புக்கு ஏக கிராக்கி. 
கோடிக்கணக்குல விலை கொடுத்து வாங்க ஆள் ரெடியா இருக்கு. குறைஞ்ச விலையில உங்களுக்கு கிடைச்சிருக்கு. வாங்கி கை மாத்தி விட்டா 10 மடங்கு லாபம் கிடைக்கும். நீங்களே முடிவு பண்ணிக்கோங்க" என ஆசையைத் தூண்டி விட்டு இந்த பிசினஸ் நடக்கிறது.
யாரை ஏமாற்றுவார்கள்?

இதற்கான ஆளை தேர்வு செய்வதுதான் மிகப்பெரிய வேலை. ஒரு ஊரில் யார் உழைக்காமல் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள்தான் இவர்கள் டார்கெட். அவர்களிடம் ஓரளவு பணம் இருக்க வேண்டும், புத்திசாலித்தனமாக யோசிக்கக் கூடாது. எளிதில் ஆசை காட்டி கவர்ந்திழுத்திருக்கக் கூடியவராக இருக்க வேண்டும். இப்படி ஒருவரைத் தேர்வு செய்துவிட்டால், அவரைச் சுற்றி மண்ணுளி பாம்புக்கு ஏக கிராக்கி உள்ளதை போன்று காட்சிகள் உருவாக்கப்படும். அவரிடமோ, அவர் அருகில் இருக்கும்போதோ 'மண்ணுளிப் பாம்பு கிடைச்சா பல லட்சத்துக்கு விலை போகுதாம். பக்கத்து ஊர்ல கூட நடராஜ் இப்படிதான் பல லட்சம் சம்பாதிச்சு புது வீடு வாங்கிட்டான்' எனச் சிலர் திரும்பத் திரும்ப பேசுவார்கள். அதன் பின்னர், 'மண்ணுளிப் பாம்பு ஒண்ணு இருக்கு. ஒரு மாசம் வெச்சு கை மாத்தி விட்டா பல லட்சம் கிடைக்கும். யாராவது ஆள் இருக்காங்களா?'னு அவர்கிட்டயே கேப்பாங்க. அப்புறம் என்ன..? அவரிடம் சில லட்சங்களுக்கு மண்ணுளி விற்கப்படும். ஆனால், பின்னாளில் பாம்பின் எடை குறைந்துவிட்டது எனச் சொல்லியோ வேறு காரணங்களைச் சொல்லியோ அவர் ஏமாற்றப்படுவார்.
இந்த மோசடியில் மூன்று தரப்பினர் சிக்கலுக்கு உள்ளாகின்றனர். லாபம் அடைவது புரோக்கர் மட்டும்தான். அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண மக்கள். மண்ணுளிப் பாம்பு கிடைத்தால் பல லட்சம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட தகவலை நம்பி, வேலை வெட்டியை விட்டு மண்ணுளிப் பாம்பைத் தேடி சுற்றித்திரியும் மக்கள். காடுகளில் தேடி கஷ்டப்பட்டு மண்ணுளிப் பாம்பைப் பிடித்தவர்கள் சிலர், வனத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு. அப்படியே பாம்பு பிடித்து வந்தாலும் 'இது 3 கிலோவுக்கும் குறைவா இருக்கு. எதுக்கும் அதை கொஞ்ச நாள் வெச்சு வளர்த்துட்டு வா. 4 கிலோ ஆனா கூட வித்துடலாம்' எனச் சொல்லி அவர்களை ஏமாற்றினர். இவர்கள் பணத்தை இழக்காவிட்டாலும் பாம்பைத் தேடியும், பாம்பைப் பற்றி பேசியுமே இவர்களின் காலம் கழிந்துவிடும்.
இரண்டாவதாக பாதிக்கப்பட்டவர்கள், சிறிய முதலீடைக் கொண்டு பெரிய லாபம் அடைந்துவிடலாம் என எண்ணிய நடுத்தர வர்த்தகத்தினர். சிறிய கடைகளை நடத்தி, சிறு விவசாயிகளாக இருந்து மண்ணுளிப் பாம்பைக் கைமாற்றினால் பல லட்சம் கிடைக்கும் என எண்ணி ஓரிரு லட்சங்கள் கொடுத்து வாங்கியவர்கள். 'அட பாம்பு வெயிட் குறைஞ்சிடுச்சு. நல்ல நேந்திரம் பழமா வாங்கி போடுங்க. போட்டுட்டு அங்க நிக்காதீங்க. நீங்க பார்த்தா பாம்பு பழத்தை சாப்பிடாது' என ஏகப்பட்ட விதிமுறைகளைச் சொல்லி, மாதக்கணக்கில் பாம்புக்குப் பழம் வாங்கிப் போட்டு, தான் சாப்பிட மறந்துபோன இவர்கள், நாம் ஏமாற்றப்பட்டதை யாரிடமும் சொல்ல முடியாமல், அந்தப் பாம்பை என்ன செய்வது எனத் தெரியாமல், யாருக்கும் தெரியாமல் அதை வெளியே வீசிச் சென்ற பரிதாபமும் உண்டு.
மூன்றாவதுதான் செல்வந்தர்கள். 'இந்தப் பாம்பு இருக்கும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும்' எனச் சொல்லியதில் வந்து விழுந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர்களும் கொங்கு மண்டல மோசடியில் சிக்கியது இப்படித்தான். இது ஆண்மைக்கு நல்லது, கேன்சருக்கு மருந்து போன்றவற்றை சொல்லியும் செல்வந்தர்கள் ஏமாற்றப்பட்டனர். எய்ட்ஸ், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள், உயிர் மேல் உள்ள பயத்தில் பணத்தைப் பற்றி கவலைப்படாமல், அதுவரை அருவெருப்புடன் நாம் ஒதுக்கித் தள்ளிய இருதலை மணியன் எனும் மண்ணுளிப் பாம்பை ஆசையாய் வாங்கிச் சென்று வளர்த்தனர்.
இதெல்லாம் உண்மையா?
மண்ணுளிப் பாம்பை மையப்படுத்திய இந்த தகவல்கள் எந்தளவுக்கு உண்மை?
மருத்துவர்கள் உள்ளிட்ட சில நிபுணர்களிடம் பேசினோம். அவர்களின் பதில்... அனைத்துமே பொய் என்பதுதான். "மண்ணுளிப் பாம்பு, மண்புழு குடும்பத்தைச் சேர்ந்தது. அது மண்ணில் இருப்பது, மண் வளத்தை பாதுகாக்கும். அதை வாஸ்து பாம்பு எனச் சொல்லி வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது நல்லதல்ல. அதனால் எந்தப் பலனும் நிச்சயம் கிடைக்காது.
இரண்டாவது இது ஆண்மைக்கான மருந்தெல்லாம் கிடையாது. ஏற்கெனவே கடல் ஆமைகளில் ஒரு வகை ஆமையை விரும்பி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்று ஒரு வதந்தி பரவியது. அப்போது கடல் ஆமைகளுக்கு பெரிய டிமாண்ட் ஏற்பட்டது. அதில் உண்மை ஏதும் இல்லை. அது போன்றதுதான் இதுவும். மண்ணுளிப் பாம்பில் இருந்து மருந்து எதுவும் எடுத்ததாக தகவல் இல்லை. அதேபோல் எய்ட்ஸ் மற்றும் கேன்சருக்கு இதுவரை உரிய மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. அதற்கான ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மண்ணுளி பாம்பில் இருந்து வெள்ளை அணுக்கள் எடுக்கப்பட்டு எய்ட்ஸ், கேன்சர் தாக்கியவர்களுக்கு செலுத்தப்படுவதாக கூறுப்படுவது முற்றிலும் பொய். மக்களை ஏமாற்றிட, மண்ணுளி பாம்பு அணுக்கள் மூலம் இந்த நோய்களை குணப்படுத்திடலாம் என வதந்தியைப் பரப்புகிறார்கள்" எனச் சொன்னார்கள்.
ஆனால் இன்றும் தொடர்ந்து வருகிறது இந்த மண்ணுளிப் பாம்பு மோசடி. இப்போதும் மண்ணுளிப் பாம்பைத் தேடித்திரிபவர்கள் இருக்கிறார்கள். நட்சத்திர ஹோட்டல்களில் மண்ணுளிப் பாம்பை வைத்து பேரம் நடக்கிறது. புதிய புதிய ஆட்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
2000-ம் ஆண்டின் துவக்கத்தில் மண்ணுளிப் பாம்பை வாங்கி கைமாற்றிவிட நினைத்து ஏமாந்தவர்களில் ஒருவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன். பாம்பின் எடை குறைந்ததால் லட்சாதிபதி ஆகும் வாய்ப்பை இழந்துவிட்டதாக இன்றும் நம்புபவர். 'நமக்கு மண்ணுளி பாம்பு ராசியில்லை' என இதில் இருந்து ஒதுங்கியவர், ஆபத்தில் இருந்து தப்பி ஆற்றில் விழுந்த கதையாக இன்னொரு பிரச்னையில் சிக்கிக்கொண்டார். 
அது... நாகமாணிக்கக் கல் மோசடி. "யாரையுமே கடிக்காத ராஜ நாகத்தோட விஷம் கெட்டிப்பட்டு இறுகிடும். அது ஒரு மாணிக்கமா மாறும். அதுதான் நாகமாணிக்கம். அமாவாசை இரவுல அந்த ராஜநாகம் மாணிக்கத்தைத் துப்பி அந்த வெளிச்சத்துல ஆடும். அந்தப் பாம்புக்குத் தெரியாம மாட்டுச் சாணியால மூடி நாகமாணிக்கத்தை எடுத்து வந்தா லட்சக்கணக்குல கிடைக்கும்" என யாரோ சொன்னதை நம்பி, நாகமாணிக்கக் கல்லைத் தேடி அலைந்தார்.
அதென்ன நாகமாணிக்கக் கல் மோசடி என்கிறீர்களா? அதை அடுத்த வாரம் விரிவா பார்க்கலாம்...
- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் - 14.07.2015)

பெற்றோருக்கு வீடு இருந்தாலும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் அவசியம்

பெற்றோருக்கு வீடு இருந்தாலும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் அவசியம்
புதுடில்லி: 'திருமணமான பெண், குடும்ப பிரச்னையால், கணவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழ்நிலையில், அவருக்கு, நிதி பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்' என, டில்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டில்லியை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குடும்ப வன்முறை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, அந்த பெண்ணுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பெண்ணின் கணவர் முறையீடு செய்தார். 'அந்த பெண், 2006ல், வழக்கறிஞராக பதிவு செய்தவர்; தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்' என, மனுவில், கணவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி, தீபக் கார்க் பிறப்பித்த உத்தரவு: 
கணவர் வீட்டில் வசிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணுக்கு, நிதி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அந்த பெண்ணின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு இருந்தாலும், அந்த வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால், தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.
இந்த வழக்கில், கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. குடும்ப வன்முறை வழக்கு முடியும் வரை, அந்த பெண்ணுக்கு, மாதம், 20 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தரப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி, தீபக் கார்க் உத்தரவு பிறப்பித்தார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.08.2017

அரசு ஊழியர் - உரிய அனுமதியின்றி உயர்கல்வி பயிலலாமா?

அரசு ஊழியர் -  உயர்கல்வி பயில என்ன செய்ய வேண்டும்?
அரசு ஊழியர்களுக்கென்று சில நடத்தை விதிகளை அரசு நிர்ணயித்துள்ளது. அதில் அரசு ஊழியர்கள் உயர்கல்வி  பயில சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. அதனை கீழே காண்போம்.
(அ) அஞ்சல் வழிக் கல்வி
அஞ்சல் வழிக் கல்வி பயில்வதற்கு அந்த அரசு ஊழியர் பணிபுரிகின்ற அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அவர்களிடம் எழுத்து மூலமாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்..
(அரசாணை எண்:328, நிர்வாகத்துறை நாள்:09.04.1993 மற்றும் அரசு கடித எண்:22536/54, நிர்வாகத்துறை நாள்:22.09.1993)
(ஆ) மாலை நேரக் கல்வி
மாலை நேரக் கல்வி  பயில்வதற்கு அந்த அரசு ஊழியர் பணிபுரிகின்ற துறைத் தலைவர் அவர்களிடம் அவர்களிடம் எழுத்து மூலமாக விண்னப்பித்து அனுமதி பெற வேண்டும்.  (அரசாணை எண்:1341, பொது நாள்:27.08.1993 மற்றும் அரசு கடிதம் எண்:98189/84-8 நிர்வாகத்துறை நாள்:13.08.1983) 
மேற்கண்ட அஞ்சல் வழிக்கல்வி மற்றும் மாலை நேரக்கல்வி பயில்வதற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எந்தவித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசு ஆணை எண்:200, நிர்வாக சீர்திருத்தத்துறை,  நாள்:19.04.1995.
(இ) தனது சொந்தச் செலவில் உயர்கல்வி  பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண்: 362, நிர்வாகத்துறை, நாள்:04.11.1992 மற்றும் அரசு கடித எண்:99147/பணி-ஏ/93, நாள்: 22.06.1993)
(ஈ) அரசு ஊழியர் ஒருவர் (Private Study) பயிலதற்கும் துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms. No.:360, P & A.R., Date:04.11.1992) 
***********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Monday, August 14, 2017

இந்திய தேசிய பெருமைகள் - தொகுப்பு

Image may contain: text
இந்திய தேசிய பெருமைகள் - தொகுப்பு
நமது தேசியச் சின்னம்!
குழந்தைகளே! நமது தேசியச் சின்னம் என்ன தெரியுமா? சாரநாத்திலுள்ள அசோகர் ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்ட அசோகச் சக்கரமாகும். அதில் இருப்பவை நான்கு சிங்கங்கள்! ஒன்று மறுபுறத்தில் இருப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை. அவற்றின் கீழே ஒரு சக்கரமும் (தர்ம சக்கரம்-WHEEL OF LAW) இடையே சீறிப்பாயும் குதிரைகளும், காளைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கீழே முண்டக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்ட "வாய்மையே வெல்லும்' என்னும் பொருள் கொண்ட "சத்ய மேவ ஜயதே' என்ற வார்த்தைகள் தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இது இந்தியாவின் தேசியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது! 
இந்த தேசியச் சின்னத்தை நமது இந்திய அரசாங்க அலுவலக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்!
இந்திய குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள், மாநில ஆளுநர்கள், அரசின் தலைமை அதிகாரிகள், மாநில அமைச்சர்கள் மற்றும் தேசிய இலாகாக்களின் ஒரே அதிகார பூர்வ முத்திரை இதுவே!
தேசியச் சின்னம், அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களிலும், சில மிக முக்கிய அதிகாரிகள், மற்றும் வெளிநாட்டு அரசுடனான தொடர்புக்கான எழுது தாள்களிலும் நீல வண்ணத்தில் அச்சிடப்பட வேண்டும். அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் எழுது தாள்களில் சிகப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். 
மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசியச் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும்.
தேசியக் கொடி! 
கடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் வரையறுக்கப்பட்ட நீள, அகலங்களும் கொண்ட மூவர்ணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே ஓர் அசோகச் சக்கரமும் (கடல் நீல வண்ணம் கொண்டது) அதை சுமந்து 24ஆரக் கால்களும் உள்ளன.
தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கையையும், வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த "பிங்களி வெங்கைய்யா' என்பவரே இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்.
தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் அமைய வேண்டும்.
மூவர்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22இல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது. 
1947ஆம் ஆண்டு 15ஆம் தேதி இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோது ராஷ்டிரபதிபவன் என்று பெயர் சூட்டப்பட்ட தில்லி வைஸ்ராய் ஹவுஸில் 31 குண்டுகள் முழங்க இந்திய தேசியக் கொடி முதல் முதலாகப் பறக்க விடப்பட்டது.
எல்லா வருடமும் ஆகஸ்டு 15ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றும் சடங்கு 1948முதல் துவங்கியது.
இந்திய தேசியக் கொடி முதன்முதலாக விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது 1971இல்! அமெரிக்காவின் அப்பல்லோ-15 என்னும் செயற்கைக் கோள் இதை விண்வெளிக்குச் சுமந்து சென்றது.
தேசிய கீதம்!
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது! (தாகூரின் இந்த முழுப் பாடல் மொத்தம் ஐந்து செய்யுள் கொண்டது. எனினும் முதல் செய்யுள் மட்டுமே தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகிறது.) 
இந்தியாவின் பூபாளப் பாடல் என்னும் இப்பாடலின் சாராம்சம் வருமாறு...
""இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்!
நின் திருப்பெயர் பஞ்சாப்பையும், சிந்துவையும், குஜராத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது!
நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை, ஆறுகளின் இன்னொலியில் ஒன்று படுகின்றன. இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. 
அவை நின்னருளை வேண்டுகின்றன. நின் புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே, உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!
இந்தப் பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். 
இந்திய அரசியலமைப்புக் குழு 1950 ஜனவரி 24இல் "ஜன கண மன....பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. 
தாகூர் வங்காள மொழியில் எழுதிய பாடலின் இந்தி மொழி பெயர்ப்பே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. 
1911, டிசம்பர் 27ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மகா நாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது. (மகா நாட்டின் இரண்டாம் தினம்) முதல் நாளில் "வந்தே மாதரம்' பாடலே பாடப்பட்டது. 
1912இல் தாகூரின் தத்துவபோதினி பத்திரிகையில் "பாரத விதாதா' என்னும் தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது. 
1919இல் "பஏஉ ஙஞதசஐசஎ நஞசஎ ஞஊ ஐசஈஐஅ' எனும் தலைப்பில் தாகூரே இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
வந்தே மாதரம்!
"ஜன கண மன' தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டபோதே சுதந்திர போராட்டத்தில் மக்களுக்கு உத்வேகமூட்டிய வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதத்துக்கு வழங்கப்படும் உயர்ந்த இடத்தை வழங்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தப் பாடல்.......
வந்தே மாதரம்!
சஸ்ய சுபலாம் மலயஜ சீதலாம்
சஸ்ய சியாமலாம் மாதரம்!
சுப்ரஜோத்சனா புளகீத யாமி னீம்
புல்லகுசுமித துருமதள சோபினீம்
சுகாசினீம் சுமதுர பாஷிணீம்
சுகதாம் வரதாம் மாதரம்!......
இப்பாடலை அரவிந்தர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்! அதன் தமிழ்ப்பொருள்....
""அம்மா வணங்குகின்றேன். இனிய நீர்ப்பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற்(மலைகளின் குளிர்ச்சி)சிறப்பினை, பைந்நிறப்(சியாமள நிறம்)படினம் பரவிய வடிவினை, வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மணம் பல செறிந்தனை. குறுநகையுடன் குலவிய மாண்பினை. நல்குவை இன்பம்! வரம் பல நல்குவை! அம்மா வணங்குகிறேன்!
1882இல் வெளியான பங்கிம் சந்திரரின் ஆனந்த மட் எனும் நாவலில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் செய்யுள் இது. 
சமஸ்கிருத மொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது. 
1896இல் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மகாநாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.
தேசிய மொழி!
அரசியல் சட்டத்தின் பிரிவு 343(1) இன் படி தேவநாகரி லிபியிலான இந்தியே நாட்டின் அதிகாரபூர்வமான மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளது. 
அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் முதன்முதலாக 14 மொழிகள் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. தற்போது இதில் மொத்தம் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. அவை.....,
1.இந்தி, 2.தமிழ், 3.மலையாளம், 4.வங்காளி, 5.அசாமி, 6.தெலுங்கு, 7.மராத்தி, 8.ஒரியா, 9.பஞ்சாபி, 10.சமஸ்கிருதம், 11.சிந்தி, 12.குஜராத்தி, 13.காஷ்மீரி, 14.உருது, 15.கன்னடம், 16.கொங்கணி, 17.மணிப்பூரி, 18.நேப்பாளி, 19.தோஹ்ரி, 20.போட்டோ, 21.சந்தாலி, 22.மைதிலி போன்றவை.
தேசியக் காலண்டர்!
சைத்ர மாதத்தை முதல் மாதமாகக் கொண்ட "சக' வருடக் காலண்டரே (1957 மார்ச் 22ஆம் தேதி காலண்டர்) மறு சீரமைப்புக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய தேசியக் காலண்டர். 
சக வருடக் காலண்டர் கி.பி. 78இல் மன்னர் கனிஷ்கரால் துவங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. 
சக ஆண்டு 365 நாட்கள் கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ர முதல் தேதி மார்ச் 22ஆகும். லீப் வருடத்தில் சைத்ர முதல் தேதி 21ஆம் தேதியாகும்.
தேசிய நாட்காட்டி சக ஆண்டு 1879இல் சைத்ர முதல் நாளில் (கி.பி.1957 மார்ச் 22) தொடங்கியது. 
சக வருட மாதங்கள் சைத்ரம், வைசாக, ஜேஷ்ட, ஆஷாட, ச்ராவண, பாத்ர, ஆஸ்வின, கார்த்திக, அக்ரஹாயன, பெüஷ, மாகம், பால்குன.
இதனுடன் நாம் இன்று வெகுவாகப் பயன்படுத்தும் ஆங்கிலக் கிரிகோரிய காலண்டரும் புழக்கத்தில் உள்ளது. 
கிரிகோரியன் காலண்டர் வருடத்திலிருந்து 78ஐக் கழித்தால் அப்போதைய சகவருடம் கிடைக்கும். (சான்றாக....2016-78=1938--சக வருடம்)
தேசிய விலங்கு!
புலி! ஆம்! இதுவே தேசிய விலங்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது! ஆசியப் பகுதியின் சிறப்பு மிக்க விலங்கு இது! 
புலி இனம் அழிந்து போகாமல் இருக்க இந்தியாவில் புலி பாதுகாப்புத் திட்டம் 1973இல் துவங்கப்பட்டது.

தேசியப் பறவை!
மயில்! 1963இல் இந்தியாவின் தேசியப் பறவையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சமஸ்கிருத மொழியின் ஆதி நூலான ரிக்வேதத்தில் மயில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தேசிய மரம்!
""அட! அற்புதம்!'' என்று நினைக்கும்படியான மரம்! ஆம் ஆலமரம்! எவ்வளவு சரியான தேர்வு! பல்வேறு மாநிலத்தவரும், பல்வேறு மொழியினரும் விழுதுகளாய் பாரதத் தாயால் உருவாக்கப்பட்டோம்! இன்று அத்தாயை இவ்விழுதுகள் போல் வேரூன்றிக் காப்போம்! என்று கட்டியம் கூறுவது போல் அல்லவா இது அமைந்துள்ளது!
தேசியக் கனி!
"பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் "மாம்பழம்' தான் நமது தேசியக் கனி!
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மாங்கனிச் சாகுபடி நடந்ததாம்! (அன்னை, தந்தையே உலகம் என்று எல்லோருக்கும் விநாயகர் மூலமாக ஞானம் வழங்கிய கனி அல்லவா?)
தேசிய விளையாட்டு!
ஹாக்கி! இதுவரை இந்தியா இந்த விளையாட்டில் 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது! இந்த விளையாட்டின் சிறந்த வீரரான தியான்சந்திரன் பிறந்த தினமான ஆகஸ்டு 29ஆம் நாள் "தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப் படுகிறது.
தேசிய விருதுகள்!
பாரத ரத்னா! இந்தியாவின் மிகச் சிறந்த விருது இதுதான்! இன்னொரு சுவாரசியமான செய்தி! இந்தியாவைப் போல் பாகிஸ்தானின் மிக உயர்ந்த விருது "நிஷான் இ பாகிஸ்தான்' ஆகும். இந்த இரு விருதுகளையும் பெற்ற ஒரே நபர் மொரார்ஜி தேசாய்!
பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையிலுள்ள உயர்ந்த சிவிலியன் விருதுகள் முறையே பத்ம விபூஷண்! பத்ம பூஷண்! பத்மஸ்ரீ! ஆகியவை! 
பாரத ரத்னா விருதுகள் பெற்றோரைப் பற்றி மற்றொரு விரிவான கட்டுரையில் பார்ப்போம்!
தேசிய தினங்கள்!
குடியரசு தினம்..........ஜனவரி 26
சுதந்திர தினம்............ஆகஸ்டு 15
காந்தி ஜெயந்தி...........அக்டோபர் 2
தேசிய நீர் வாழ் உயிரி!
டால்பின்! இந்தியாவில் கங்கை நதியிலும், பிரம்மபுத்திரா நதியிலும் மற்றும் கடல் பகுதிகளிலும் காணப்படும் கடல் வாழ் உயிரினம்! அழகும் நட்பும் நிறைந்தது! 1972 வன உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவ்வுயிரினம் உட்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப் படுகிறது.
தேசிய நதி!
2008ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய நதியாக "கங்கை' அறிவிக்கப்பட்டது! இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக தண்ணீர் பரப்பு கொண்ட நதி. அதிக எண்ணிக்கையிலான துணை நதிகள் கொண்ட நதி என்று பல சிறப்புகள் உடையது இது!
தேசியப் பாரம்பரிய விலங்கு!
இந்திய வரலாற்றிலும், கலாசாரத்திலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் "யானை'யே இந்தியாவின் தேசியப் பாரம்பரிய விலங்காகக் கருதப்படுகிறது. ஆசிய யானைகளில் 60 சதவிகிதமும் இந்தியாவிலேயே உள்ளன.
இன்னும் இந்தியாவின் சிறப்புகள் எண்ணில் அடங்காது! எத்தனை மொழி! எத்துணைக் கலாசாரம்! இந்நாட்டின் கலாசாரத்தையும், மாண்பையும், காப்போம்! கல்வி, விளையாட்டு போன்ற அத்தனை துறைகளிலும் மேன்மேலும் சாதிப்போம்! நம் தாய்க்குப் பெருமை சேர்ப்போம்! ஒற்றுமையுடன், அன்புடன், உறவாடுவோம்! ஜெய்ஹிந்த்!
தொகுப்பு: எம்.ஆர்.பெரியாண்டவர், தேவிபட்டினம்.
நன்றி : தினமணி நாளிதழ் - 12.08.2016