disalbe Right click

Friday, September 8, 2017

புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை

புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை
காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
காவல் நிலையங்களில் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புகார்களை பதிவு செய்வது தொடர்பாக 8 வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.
மோசடிப்புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, மதுரையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் உட்பட 69 பேர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி சி.டி.செல்வம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
இவற்றை விசாரித்து நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
காவல்நிலையங்களில் அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு வழக்குகளில் உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுபடி போலீஸார் நடந்து கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. போலீஸார் தங்கள் விருப்பம்போல செயல்படுகின்றனர்.
இந்தியாவில் 2012-ம் ஆண்டில் 60 லட்சம் வழக்குகள் பதிவாயின. அதே அளவு புகார்கள் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளன. போலீஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் புகார்தாரர்களுக்கு பாதிப்பு ஏற்படும். வழக்கின் விசாரணையும் பாதிக்கப்படும். சில நேரங்களில் போலீஸார் உண்மைகளை திரித்து, சாதாரண குற்றத்தை கடுமையானதாகவும், கடுமையான குற்றத்தை சாதாரணமாகவும் மாற்றுகின்றனர். எனவே, தமிழக காவல்துறை இயக்குநருக்கு சில வழிகாட்டுதல்களை தெரிவிக்க விரும்புகிறது.
வழிகாட்டுதல்கள் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நீதிமன்றம் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை போலீஸாருக்கு டிஜிபி நினைவு படுத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
வழிகாட்டுதல்கள்
⧭⃝ புகார்களில் முகாந்திரம் இருந்தால் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டியதில்லை.
⧭⃝ புகாரில் குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் தெரியாமல் போனால், முதல்கட்ட விசாரணை நடத்தி முகாந்திரம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
⧭⃝ விசாரணைக்குப் பின், புகாரில் உண்மையில்லை எனத் தெரிந்து, அந்தப் புகார் முடிக்கப்பட்டால், புகார்தாரருக்கு அதற்கான ஆவணத்தை, ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். அதில் புகார் முடிக்கப்பட்ட காரணத்தை குறிப்பிட வேண்டும்.
⧭⃝ புகாரில் உண்மை இருந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் கடமை தவறும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
⧭⃝ புகார் உண்மையானதா? பொய்யானதா? என்பதை பார்க்காமல், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும்.
⧭⃝ குடும்பத் தகராறு, வணிகக் குற்றங்கள், மருத்துவ கவனக்குறைவு, ஊழல், தாமதப் புகார்கள் மீது 7 நாள்களுக்குள் முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டும்.
⧭⃝அதற்குமேல் புகாரை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை காவல்நிலையக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
⧭⃝ காவல்நிலைய பொது குறிப்பேடு, நிலையக் குறிப்பேடு, தினக் குறிப்பேட்டில் காவல் நிலையங்களுக்கு வரும் அனைத்து புகார்களின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.03.2015

மகப்பேறு காலம்- என்ன செய்ய வேண்டும்?

Image may contain: 1 person, smiling, text and closeup
மகப்பேறு காலம் - என்ன செய்ய வேண்டும்?
மகப்பேறு காலம்முக்கிய தருணம்!
மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனை யை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.
இதில், திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் பாலுடன் விதாரி, சதாவரி, ஆஸ்திமது, பிரமி ஆகிய சில மூலிகைகளுடன் தேன் மற்றும் நெய் கலந்து குடிக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. 
இந்த காலகட்டத்தில் சிசுவின் உடலில் கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சி நடைபெறும். 
இம்மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய், ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு, உணவை தாயின் ரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும், ஒரே உணவாக அமைகிறது. கொழுப்பு, காரம், உப்பு மற்றும் நீரை சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு துளசியை 
உட்கொண்டு வந்தால் பிரசவ வலி குறையும். 
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும், கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். 
அவை: 
 கர்ப்பிணிகள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள்,பழங்கள், தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. ஆகவே, மாத்திரை உட்கொள்ளும் அளவிற்கு, காய்கறிகளையும் சேர்த்து கொள்வது அவசியம். 
  மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம். 
  கர்ப்பிணிகள் சரியான நேரத்திற்கு, உணவு அருந்த வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. 
  முக்கியமான ஒன்று, புத்தகத்தை படிப்பது சிந்தனைகளை வளர்க்கும். நல்லவையே கேட்டல், பழகுதல் மூலம் நாளடைவில், குழந்தைகளின் குணமும் அவ்வாறே அமைய வாய்ப்புள்ளது.
நன்றி :தினமலர் நாளிதழ் - 30.08.2015

Thursday, September 7, 2017

நதிகளைக் காப்போம், வாருங்கள்!

நதிகளைக் காப்போம், வாருங்கள்!
அழிந்துவரும் நதிகள் மாற்றம் உருவாக்க சத்குரு சொல்லும் வழி!
சத்குரு: இன்று நாம் இவ்விதமாய் உருவாகியிருப்பதற்குக் காரணமே நதிகள்தான். மொகஞ்சதாரோ-ஹரப்பா போன்ற பண்டைய நாகரீகங்கள், நதிக்கரையில் பிறந்தன. நதிகள் திசைமாறியபோது அவையும் அழிந்தன.
மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்வழி கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஓர் ஆபத்தை இதன்மூலம் உருவாக்குவோம்.
இன்று பல நதிகள் துரிதமாக அழிந்து வருகின்றன. இன்னும் இருபதாண்டுகளில் அவை அருகிப் போக வாய்ப்பிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10, 12 நதிகள் முற்றிலும் அழிந்துப்போவதை நான் பார்த்திருக்கிறேன். இன்று, தென்னிந்தியாவின் மிக முக்கிய நதிகளாகிய காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை ஆண்டின் சில மாதங்களுக்கு கடலில் கலப்பதே இல்லை.
பூமி சூடாவதன் காரணமாக, இருபுறமும் கடல்கள் கொண்ட இந்தியாவின் தென் பிரதேசங்களில் கூடுதலாக மழை பொழிகிறது. கடலோர மாநிலங்களான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகள் பருவமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்குக்கு உள்ளாவதைப் பார்க்கிறோம்.
2016 டிசம்பர் மாதத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்திற்குப் பிறகு சென்னைவாசிகள், மழை என்றாலே அஞ்சத் தொடங்கிவிட்டார்கள். இப்போது இரண்டு நாட்கள் மழை பெய்தாலும் மீட்புப் படகுகளை தயார்நிலையில் வைத்துக்கொள்கிறார்கள்.
மழையின்மையால் வரும் பாதிப்பை விடவும், கூடுதல் மழை தென் மாநிலங்களை விரைவில் பாலைவனம் ஆக்கிவிடும். ஏனெனில், அதிகப்படியான மழை, காலப்போக்கில் பூமியை விவசாயத்திற்குத் தகுதி இல்லாததாகச் செய்துவிடும். இந்நிலை, தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே உருவாகத் துவங்கிவிட்டது. ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது இருநூறு அடிகளிலேயே தண்ணீர் கிடைத்த நிலை மாறி, இப்போது ஆயிரம் அடிகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.
ரயில்களிலும் லாரிகளிலும் தண்ணீர் விநியோகித்து இந்த தேசத்தை எத்தனை காலங்களுக்கு நடத்திச் செல்ல இயலும்
நான் எச்சரிக்கை மணி அடிப்பவனாக ஆக விரும்பவில்லை. ஆனால், நதிகளைத் தவறாக நடத்துவதால் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். இத்தனை கோடி மக்கள் தொகையை வைத்துக்கொண்டு, நதிகள் வற்றினால் ஒருவரையொருவர் கொன்று ரத்தத்தையா குடிக்க முடியும்?
பனிக் கட்டிகளால் உருவாகும் நதிகளை உடனடியாக மீட்க முடியாது. ஏனெனில், பனிப்பொழிவு என்பது உலகளாவிய விஷயம். ஆனால், வனங்களில் உருவாகும் நதிகளை நம்மால் உயிர்ப்பிக்க முடியும். மக்கள் உடனடித் தீர்வுகளை எதிர்நோக்கி நதிகளை இணைத்து, அதன்மூலம் கூடுதல் நீரை நிலங்களுக்கு விநியோகிக்க முடியுமென எண்ணுகின்றனர். இது இன்னும் ஆபத்தாகத்தான் முடியும். பெருந்தொகையைச் செலவழித்து சூழலியலுக்கு ஆபத்தினை விளைவித்து விடுவோம்.
நதிகளுக்கு என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி, செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஆதாயம் தரும் தீர்வுகளைத் தந்தால்தான் மக்கள் நதிகளைக் காக்க முன்வருவார்கள். மரக்கன்றுகளை வளர்ப்பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு 1 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதன்மூலம், நாட்டில் பெருமளவு நிலம் பசுமைப் போர்வைக்குள் வரும்.
பருவமழை தவறாத சூழலை ஏற்படுத்தி, பூமி சிதைவுறுவதைத் தடுக்க முடியும். இது முழுமையான தீர்வாக அமைவதோடு, நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவில் 10% மட்டுமே ஆகும்.
நதியின் இரு கரைகளுக்கும் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மரப்பயிர் விவசாயம் செய்யவேண்டும். அரசு நிலமாக இருந்தால் காடு வளர்க்கவும், தனியார் நிலமாக இருந்தால் மரப்பயிர் செய்யவும் திட்டமிட வேண்டும்.
தேவையான பயிற்சியையும், மானியத்தையும் அரசு வழங்கி ரசாயனக் கலப்பின்றி இயற்கை விவசாய முறையில் மரப்பயிர் செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம், விளைநிலங்கள் முன்பைவிட நல்ல வருவாயை ஈட்டித் தரும்.
அரசாங்கங்கள் நதிகளின் நலனுக்கு உகந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் நம் கருத்தை ஏற்று, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இதுகுறித்து, மத்திய அரசுக்கு ஈஷா அறக்கட்டளை ஒரு விரிவான திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளது.
தாங்கள் என்ன செய்தாலும் எதுவும் மாறாது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டதாலேயே பலரும் தோல்வியைத் தழுவுகிறார்கள். ஆனால், மாற்றத்தை உருவாக்க இதுவே நேரம். பத்தாண்டுகள் தாண்டினால் காலம் கடந்து போய்விடும்.
நமது பொருளாதார வேட்கையால் நதிகளையும் நிலங்களையும் பராமரிக்கத் தவறிவிட்டோம். நம் தலைமுறையிலேயே அவற்றை அழித்து விடக்கூடாது. இந்த ஆண்டு மரம்நட்டு, இரண்டு ஆண்டுகள் பராமரித்து அதன்பின், அடுத்த மரத்தை நட்டுப் பராமரிக்கத் துவங்கினால், இதுவே ஓர் இயக்கமாக மாறிவிடும்.
இதைச் செய்ய முடியுமாமுடியாதா என்பதல்ல கேள்வி; செய்ய விரும்புகிறோமாஇல்லையா என்பதே கேள்வி.
இது போராட்டமல்ல, இது ஆர்ப்பாட்டமல்ல, நம் நதிகள் வற்றி வருவதைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் இது. தண்ணீர் குடிக்கும் ஒவ்வொரு மனிதரும் நம் நாட்டின் உயிர்நாடிகளான நதிகளை காக்க செயல்புரிய வேண்டும்.
இதனை நாம் நிகழச் செய்வோம்.
அன்பும் அருளும்,
சத்குரு
நன்றி : தினமலர் நாளிதழ் - 01.09.2017

Wednesday, September 6, 2017

கட்சி,நன்கொடைகள்,அடையாளம்,தெரியாதோர்,அளித்ததே,அதிகம்

கட்சி நன்கொடைகள் -அடையாளம் தெரியாதோர் அளித்ததே அதிகம்!
கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகள்; அடையாளம் தெரியாதோர் அளித்ததே அதிகம்
கட்சி,நன்கொடைகள்,அடையாளம்,தெரியாதோர்,அளித்ததே,அதிகம்
புதுடில்லி : 'கடந்த, 2015 - 16 நிதியாண்டில் கிடைத்த மொத்த வருவாயில், பெரும்பகுதி, அடையாளம் தெரியாதவர்கள் அளித்த நன்கொடை உள்ளிட்ட வழிகளில் கிடைத்தவை' என, தேசியக்கட்சிகளான, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளன.
தாக்கல்:
பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட, ஏழு தேசிய கட்சிகள், ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய வரவு - செலவு கணக்கை, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் ஆகியவை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களுடைய வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்தன. பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள், 2015 - 16 நிதியாண்டுக்கான வரவு - செலவு கணக்கை, சமீபத்தில் தாக்கல் செய்தன.
இது குறித்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அரசு சாரா அமைப்பு, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: 
கடந்த, 2015 - 16 நிதியாண்டில், பா.ஜ.,வின் மொத்த வருவாய், 570.86 கோடி ரூபாய்
காங்., மொத்த வருவாய், 261.56 கோடி ரூபாய். 
'மொத்த வருவாயில், அடையாளம் தெரியாதவர்கள் அளித்த நன்கொடை உள்ளிட்ட வழிகளில் கிடைத்தவை, 81 சதவீதம்' என, பா.ஜ., கூறியுள்ளது; '71 சதவீதம்' என, காங்., கூறியுள்ளது.
அவசியமில்லை:
அரசியல் கட்சிகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையை நன்கொடையாக அளிப்போரின் பெயரை, கட்சிகள் குறிப்பிட வேண்டியதில்லை. இதைத் தவிர, கூப்பன்கள் விற்பனை உள்ளிட்ட வழிகளில் கிடைக்கும் வருவாய்க்கான ஆதாரங்களை, தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அடையாளம் தெரியாத வழிகளில், பா.ஜ.,வுக்கு, 460.78 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சிக்கு, 186.04 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
வரவு, செலவு:
ஏழு தேசியக் கட்சிகளின் மொத்த வருவாய், 1,033.18 கோடி ரூபாய். 
இதில், 754.45 கோடி ரூபாயை கட்சிகள் செலவு செய்துள்ளன. 
பா.ஜ., 570.86 கோடி
காங்கிரஸ், 261.56 கோடி
மார்க்சிஸ்ட், 107.48 கோடி
பகுஜன் சமாஜ், 47.39 கோடி
திரிணமுல் காங்கிரஸ் 34.58 கோடி
தேசியவாத காங்கிரஸ், 9.14 கோடி
இந்திய கம்யூனிஸ்ட், 2.18 கோடி ரூபாயை செலவிட்டுள்ளன.
குறைந்தது:
கடந்த, 2014 - 15 நிதியாண்டில், பா.ஜ.,வின் வருவாய், 970.43 கோடியாக இருந்தது. அது, 2015 - 16 நிதியாண்டில், 41 சதவீதமாக குறைந்தது. இதே காலகட்டத்தில், 593.31 கோடி ரூபாயாக இருந்த காங்கிரஸ் மொத்த வருவாய், 56 சதவீதம் குறைந்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 07.09.2017 

Tuesday, September 5, 2017

மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -7

Image may contain: grass and text
மண்ணுளி முதல் ஈமு வரை..! - மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -7
நில மோசடிகள்

"இங்கே தோண்டுன வட்ட கிணத்தை காணோம் சார்... !' என சினிமாவில் நகைச்சுவைக்காக செய்யும் மோசடி வித்தைகள் எல்லாம் கொங்கு மண்டலத்தில் சர்வ சாதாரணம்.

அந்தளவுக்கு நிலமே இல்லாமல் ப்ளாட் விற்பனை, காடு, மலை என அனைத்தையும் லே அவுட் போட்டு விற்பனை செய்துவிட்டனர். 'படையப்பா படத்தில் வருமே, அதே மாதிரி 'இங்கே தான் கிரானைட் கற்கள் நிறைஞ்சிருக்கு' என மலையை காட்டி சாதாரணமாய் விலை பேசுவது போன்ற ரியல் எஸ்டேட்டில் ஏமாற்றும் வித்தைகளைக் கற்றறிந்த மலை முழுங்கி மகாதேவன்களைக் கொண்ட பகுதி கொங்கு மண்டலம்.
நிலத்தைக் காட்டி எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பது மிக சுவாரஸ்யமான விஷயம். அதைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம்...
தவணை முறை நில மோசடி
மாதத் தவணையில் ப்ளாட் விற்பனை... நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அதற்கும் கீழாக உள்ள மாத சம்பளம் வாங்குபவர்களை மையப்படுத்தி இன்றும் கொடி கட்டி நடந்து வரும் ரியல் எஸ்டேட் மோசடி. எப்படியாவது ப்ளாட் வாங்கி விட வேண்டும் என்பவர்கள்தான் மோசடியாளர்களின் டார்கெட்.

நகரின் மையப் பகுதியில் ஒரு அலுவலகத்தைத் தொடங்குவார்கள். மாதத் தவணைத்திட்டத்தில் ப்ளாட் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்துவார்கள். எங்கோ ஓர் மூலையில் உள்ள சில ஏக்கர் இடத்தை ப்ளாட் போட்டுள்ளதாக சொல்வார்கள். 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. மாதம் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை 4 வருடங்கள் செலுத்தினால் போதும், 1200 சதுர அடி நிலம் உங்களுடையது என்பார்கள். எப்படியாவது சொந்த நிலத்தை வாங்க மாட்டோமா என ஏங்கி கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினர், இவர்கள் பேச்சில் அப்படியே மயங்குவார்கள்.
'முதலில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட தொகைக் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் மாதம் தோறும் தவணை. தவணை முடிந்ததும் நிலம் உங்களுக்கு கிரையம் செய்து தரப்படும்' என சொல்லுவார்கள். எப்படியாவது ஒரு ப்ளாட் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்கள், பணத்தைக் கொட்டுவார்கள் மாதம் தவறாமல் தவணையும் செலுத்துவார்கள். கட்டிய பணத்துக்கு பக்காவாக ரசீதும் வழங்கப்படும்.
அவர்கள் குறிப்பிட்ட அந்த நாள் வரும். ஆனால் இடம் கிரையம் செய்து தரப்பட மாட்டாது. இடத்தை கிரையம் செய்து தரச்சொல்லி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முறையிட்டு விட்டு, நிறுவனம் பூட்டப்பட்டதும், தவணை முறை திட்டத்தில் பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக காவல்நிலையத்துக்கு நடையாய் நடப்பார்கள்.
போலீசில் புகார் கொடுத்த பின்னர்தான் அவர்கள் பெயரில் நிலமே இல்லை என்பதும், நிலமே இல்லாமல் மோசடி செய்தார்கள் என்பதும் தெரியவரும். இது போன்று சில நூறு மோசடிகளாவது கொங்கு மண்டலத்தில் நடந்தேறி இருக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இன்றும் இந்த மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நிலமே இல்லாமல் மோசடி?
அவங்க பேர்ல நிலமே இல்லை. அப்புறம் எப்படி ப்ளாட் விற்பனை செய்வார்கள் என்கிறீர்களா? அதுதான் இங்கே தந்திரமே.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் வெறுங்கையால் முழம் போடுவதில் கில்லாடிகள். ஒரு கிராமத்தில் சில ஏக்கர் நிலத்தை வாங்குவது போல நில உரிமையாளரிடம் பேசுவார்கள். அதற்கு அட்வான்ஸாக சிறுதொகையை செலுத்தி ஒப்பந்தம் போடுவார்கள். அதன் பின்னர் அந்த ஏரியாவில் 15 ஏக்கர் நிலத்தை வாங்கியது போல, இடத்தை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்குவார்கள். மாத தவணை என்பதால், பணம் முழுவதும் கட்டி முடித்த பின்னர்தான் கிரையம் செய்து தர வேண்டும் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது.
அதுவரை, 'உங்க இடம் இதுதான்!' என குறிப்பிட்டு ரசீது தருவார்கள்.. அவ்வளவுதான். பணம் எல்லாம் கட்டி முடித்த பின்னர்தான் அங்கு அவர்களுக்கு இடமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியவரும். அப்போது சில கோடிகளுடன் அவர்கள் எஸ்கேப் ஆகியிருப்பார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்த பின்னர்தான் அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வரும்.
இதில் இன்னொரு ரகமும் உண்டு. ஒரு இடத்தை காட்டி, மாத தவணையில் விற்பதாகச் சொல்வார்கள். 'லே அவுட்' போடுவார்கள். உங்களுக்குக் காட்டப்படும் இடம் 3 முதல் 4 பேருக்கு விற்கப்படும். இறுதியில் எல்லோருக்கும் பெப்பேதான். "தவறுதலாக இப்படி நடந்து விட்டது. இந்த இடம் இல்லை.. வேறு வேண்டுமானால் தருகிறேன்..!" என சொல்லி, மற்றொரு இடம் காட்டப்படும். மிகக் குறைந்த விலைக்குப் போகும் அந்த இடம் தான் உங்களுக்கு. இந்த நிலம் அப்படியே இருக்கும். மீண்டும் 'லே அவுட்', மாதத் தவணை விற்பனை என ஒன்றுக்கும் பெறாத மற்றொரு நிலம் கைமாற்றி விடப்படும்.
ஏமாற்றுவது இப்படித்தான்
அட நிலமே இல்லாம மோசடி நடக்குதா? நிலத்தை வாங்குறவங்க இதைக் கூட யோசிக்க மாட்டாங்களா? என்று தானே யோசிக்கிறீர்கள். யோசிக்க விட்டாதானே. அந்தளவுக்கு பேசுவார்கள். உங்கள் ஆசையைத் தூண்டி விட்டால், நீங்கள் அதன் பின்னால் எதையும் யோசிக்க மாட்டீர்கள். அதுதான் இவர்களின் டெக்னிக்.
"இந்த இடத்தோட இப்போதைய மதிப்பு 3 லட்ச ரூபாய். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்தான் வருது. வேணும்னா விசாரிச்சுக்கோங்க..." என்பார்கள்.

அப்போது அங்கு வருபவர்களிடம் அவர்களே கேட்பார்கள். அவர்கள், "நிலத்தின் மார்க்கெட் வேல்யூ 3 லட்சத்துக்கு மேலே...!" என சொல்வார்கள்" உண்மையில் அங்கு வருபவர் ஒன்று அவர்களின் ஆளாக இருப்பார் அல்லது நிலத்தின் மதிப்பு 3 லட்சத்துக்கு மேல் என ஏற்கெனவே நம்பவைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
"மாசம் 5 ஆயிரம் கட்டினா போதும். இந்த இடம் உங்களுக்குச் சொந்தம். அப்போ இந்த நிலத்தோட மதிப்பு 15, 20 லட்சமா இருக்கும். நீங்க கட்டுறது வெறும் 2 லட்சம் தான். அப்போ 13 லட்சம் உங்களுக்கு லாபம். அதுவும் ரொம்ப ஈசியா மாச தவணையில கட்டிடலாம்" என இவர்கள் பேசுவது எல்லாம் மக்களின் ஆசையைத் தூண்டும் ரகம் தான். அடுத்து ரசீது. 'ஏமாற்றத்தானே போகிறோம். ரசீது எதற்கு தர வேண்டும்?' என இல்லாமல், கொடுக்கும் பணத்துக்கு பக்காவாக ரசீது வழங்குவார்கள்.
சாதாரணமாக பெயரை எழுதி பூர்த்தி செய்து கொடுக்காமல், அனைத்து விவரங்களுடன் அந்த ரசீது இருக்கும். 'ரசீதை பத்திரமா வைச்சுக்கோங்க. கிரையம் அன்னைக்கு தேவைப்படும்" என அவர்கள் ஒவ்வொரு முறை சொல்லும் போதும், 'இவர்களை எல்லாம் சந்தேகப்பட்டா அவ்வளவுதான்!' என மனசு சொல்லும். அந்தளவுக்கு இவர்களின் பேச்சும், நடவடிக்கையும் இருக்கும். இதையெல்லாம் மீறி ஒருவர் அந்த இடம் குறித்து விசாரித்தால் கூட பலரும் ஏமாறாமல் தடுக்க முடியும். ஆனால் 100ல் ஒரு இடத்தில் கூட அப்படி நடப்பதில்லை என்பதுதான் கொடுமை.
காட்டுக்கும், மலைக்கும் கூட லே அவுட் 
மிக குறுகிய காலத்தில் கோடிகளில் சுருட்ட முடியும் என்பதுதான் இந்த மோசடியாளர்களின் ஐடியா. இதில் இன்னுமொரு மோசடி இருக்கிறது. கேட்பாரற்று கிடக்கும் நிலத்தை லே அவுட் போட்டு விற்பது. கோவை, திருப்பூர் பகுதியில் இந்த மோசடி படு பிரபலம். அதாவது குறிப்பிட்ட இடத்தில் லே அவுட் போடுவார்கள். விற்பனையும் நடக்கும். ஆனால் உண்மையில் அது யாருக்கும் சொந்தமான இடமாக இருக்காது.

காடு, மலை, புறம்போக்கு என எந்த கணக்குமில்லாமல் லே அவுட் போட்டு விற்று விடுவார்கள் மோசடியாளர்கள். அப்ரூவல் இருக்கிறதா? ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், இன்வெஸ்ட் செய்து ஏமாந்த ஜனங்கள் எக்கச்சக்கம்.
இது தவிர அரசு விதிகளை மீறி, ஒரு ஏக்கரில் 12 ப்ளாட்களுக்கு பதிலாக அதிக ப்ளாட்களை போட்டு விற்று விட்டு எஸ்கேப் ஆகும் ரியல் எஸ்டேட் ஆசாமிகளும் உண்டு. இடத்தை வாங்கி வீடு கட்டும் போதுதான், இந்த இடத்தில் பார்க் வரணும். இது ரிசர்வ் லேண்ட் என அரசு தரப்பு சொல்ல.. சிக்கல் கிளம்பும்.
'இந்த நிலத்துல கிரானைட் இருக்கு பாஸ்..!'
இவற்றை எல்லாம் மீறி மற்றொரு நில மோசடி இருக்கிறது. அதுதான் விலை உயர்ந்த கற்கள் மண்ணில் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றி விற்பது. கோவையில் நடந்த மோசடி சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தில் மலைப் பாறைகள் நிறைந்த பகுதி அது. அங்கு கிரானைட் கற்கள் நிறைந்திருப்பதாக சொல்லி ஒரு கும்பல் ஊடுருவுகிறது. திருப்பூரில் உள்ள தொழிலதிபர் அவர். கிரானைட் கற்கள் நிறைந்திருப்பதாக சில புகைப்படங்களை அவர்களிடம் அந்த கும்பல் காட்டுகிறது. " 'படையப்பா' படம் பார்த்தீங்களா? அதுல ரஜினிக்கு சொந்தமான இடத்துல வெட்ட வெட்ட கிரானைட் கற்கள் கிடைக்குமே அது மாதிரிதான் இந்த இடத்துலயும் வெட்ட வெட்ட கிரானைட் கிடைக்கும்" எனச்சொல்லி அவரை நம்ப வைத்தவர்கள், கிரானைட் அந்த விலைக்கு போகும், இந்த விலைக்கு போகும்.. என் இடத்தை வாங்குனா நீங்க பெரிய கோடீஸ்வரர். என்னை மறந்துடாதீங்க..!" என புரோக்கர் போல பேசி, ஆசையைத் தூண்டுவார்கள். "நீங்க சொன்னா இடத்தைப் பார்க்கலாம்..!" என்பார்கள்.
அந்த இடம் செல்ல நாள் குறிக்கப்பட்டது. மலைப்பாறைகள் நிறைந்த பகுதியில் விலை உயர்ந்த சொகுசு காரில் தொழிலதிபரும், மற்றவர்களும் வந்திறங்கினார்கள். இந்த இடத்தில் கிரானைட் கற்கள் உள்ளதாக சொல்லி, சாட்டிலைட் மேப்பில் (?)காட்டுவார்கள். அப்போது அங்கு மற்றொரு சொகுசு காரில் மற்றொருவர் வந்திறங்கினார். பரஸ்பர அறிமுகத்துக்கு பின்னால், காரில் இருந்து நகைப்பெட்டி ஒன்றை எடுக்கிறார். அதில் கிரானைட் கற்கள் மின்னுகிறது.
அவசரமாய் பெட்டி மூடப்பட்டு காரில் போடப்படுகிறது. "சரி.. இங்கே யூரின் போற மாதிரி, நிலத்தைப் பாருங்க. மத்ததை வெளியில போய் பேசிக்குவோம். இங்கே கிரானைட் இருக்குறது தெரிஞ்சுதுன்னா, பக்கத்து நிலத்துக்காரன் விலையை கன்னா பின்னானு கூட்டிடுவான்!" எனச்சொல்லி, அவசர அவசரமாய் தொழிலதிபரை காரில் ஏற்றிக்கொண்டு பறந்து விடுவார்கள்.
இன்னும் இருக்கு மோசடிகள்!
அதன் பின்னர் மீண்டும் ஆசை தூண்டப்படும். எல்லாம் முடிவான பின்னால், அட்வான்ஸ் என சில லட்சங்கள் கை மாறும். நிலத்தை கிரையம் செய்ய நாள் குறிக்கப்படும். அன்று இடத்துக்கு சென்றால் டிப் டாப் உடையணிந்து சிலர் நின்று கொண்டிருப்பார்கள். "கனிம வளத்துறை அதிகாரிகள் ரெய்டு...நாம் இங்கே இருக்க வேண்டாம்!' எனச்சொல்லி திரும்பி விடுவார்கள். "அதிகாரிகளைச் சமாளிக்க கொஞ்சம் பணம் வேணும்.. ஒரு 5 லட்சம் கொடுங்க!" என தொழிலதிபரிடம் கேட்டு வாங்குவார்கள். அதோடு சரி.. அவர்கள் எஸ்கேப்!

உண்மையில் அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது. கிரானைட் நிலம் அடிமாட்டு விலைக்கு கிடைக்கிறது என நினைத்து, பல லட்சங்களை இழந்த சம்பவம்தான் இது. இப்படி பல வகைகளில் நில மோசடிகள் அரங்கேறிய பகுதி கொங்கு மண்டலம்.
இப்படி பல மலைமுழுங்கி மகாதேவன்கள் நடமாடும் கொங்கு மண்டலத்தில் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது ஒன்றுதான் மோசடியைத் தடுக்கும் வழி. ஆனால் மக்கள் எப்போது ஜாக்கிரதையாக இருந்தார்கள்?
இன்னும் ஏராளமான மோசடிகள் நித்தமும் அரங்கேறிக்கொண்டுதான் இருந்தன. மக்களை ஏமாற்றிய கதையும், மக்கள் ஏமாந்த கதையும் இங்கு ரொம்பவும் அதிகம். இன்னுமா மோசடிகள் இருக்கின்றன என்கிறீர்களா? நிறைய இருக்கின்றன. அவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்...
- ச.ஜெ.ரவி
நன்றி : விகடன் செய்திகள் - 04.09.2015 

இதய நோயாளிகளுக்கான இலவச சிகிச்சைக்கு....

இதய நோயாளிகளுக்கான இலவச சிகிச்சைக்கு....
இந்த கட்டுரை கொஞ்சம் பின்னோக்கி அதாவது 2007ல் ஆரம்பிக்கிறது.
சென்னையில் வேலை பார்க்கும் ராஜ்குமார் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் உள்ள குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு திரும்புகிறார்.
அவர் திரும்பும் அதே பஸ்சில் ஒரு கிராமத்து அம்மாவும்-மகளும் பயணிக்கின்றனர்.மகள் பெயர் மணிமேகலை வயது ஏழு என்பதும் கடுமையான இதய நோய் காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிபாரிசு செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் சென்னைக்கு புதிது என்பதுடன் கையில் போதுமான காசு இல்லை என்பதும் தெரியவந்தது.
சரி வீட்டிற்கு பிறகு போய்க்கொள்ளலாம் முதலில் இவர்களுக்கு உதவுவோம் என்று முடிவு செய்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்கிறார். மணிமேகலையின் அழகுச்சிரிப்பும், பேச்சும் காந்தம் போல இழுக்க திரும்ப திரும்ப சென்று பார்த்து அன்பையும் ஆறுதலையும் வழங்குகிறார்.
அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ கட்டணம் கிடையாது ஆனால் தொடர்ந்து தங்கியிருக்கும் போது ஏற்படும் குடும்பத்தினரின் உபரி செலவிற்காக நண்பர்கள் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு போய்க் கொடுத்தார். இன்னும் கொஞ்சம் பணம் திரட்டினால் மணிமேகலையை விரைவில் குணப்படுத்தலாம் என்பது தெரியவரவே மீண்டும் பணத்தை திரட்ட தொடங்கினார்.
முன்பின் தெரியாத யாரோ ஒரு ஜீவனின் உயிருக்காக ராஜ்குமார் பாடுபடுவதைக் கேள்விப்பட்டது அவர் வேலை பார்க்கும் டாடா நிறுவனம். ராஜ்குமாரை அழைத்து உனக்கு தேவைப்படும் பணத்தை கம்பெனி அறக்கட்டளையில் இருந்து தருகிறோம் என்று சொல்லி தந்தும் விட்டனர்மணிமேகலையும் அபாயகட்டத்தை தாண்டி பிழைத்துக்கொண்டார்.
மணிமேகலையுடன் ராஜ்குமார் தனது சேவையை நிறுத்திக்கொள்வார் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த போது இன்னும் பல மணிமேகலைக்கு நமது உதவி தேவை என்று முடிவு செய்து இதய நோயாளிகளுக்கான சிகிச்சை களத்தில் முழுமையாக இறங்கிவிட்டார்.
இவருக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தது தினமலரில் வரும் உயிர்காக்க உதவுங்கள் விளம்பரங்களே.அந்த விளம்பரங்களில் உள்ள நபர்களை நேரில் தொடர்பு கொள்வது,சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுடன் பேசுவது என்று நிறைய நேரம் செலவிட்டு கிடைத்த அவர்களின் விவரத்தை தேவையை டாடா அறக்கட்டளையிடம் கொடுத்துவிடுவார்.
அறக்கட்டளை அவர் சிபாரிசு செய்யும் நோயாளிகளுக்கு உதவ ஆரம்பித்தது இப்படி 2007ல் ஆரம்பித்த இந்த இதய நோயாளிகளுக்கான இலவச சிகிச்சைக்கான பயணம் 2017 வரை தொடர்கிறது இதுவரை 347 நோயாளிகள் சிகிச்சை பெற்று பூரணநலம் பெற்றுள்ளனர்.
ஒரு வேடிக்கை என்னவென்றால் ராஜ்குமார் டாடா நிறுவனத்தைவிட்டு வெளியேறி வேறு நிறுவன வேலையில் சேர்ந்துவிட்டார் ஆனாலும் அறக்கட்டளை இவர் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இப்போதும் இவர் சிபாரிசு செய்யும் நோயாளிகளுக்கு உதவி வருகிறது.
இதய நோயாளிகளுக்கும் இதயம் இருக்கிறது சிகிச்சை எடுத்துக்கொண்டால் மற்றவர்களைப் போல சந்தோஷமாக வாழமுடியும் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் ராஜ்குமார் இதய நோயாளியான பத்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இப்போது சந்தோஷமாக குடும்பம் நடத்தும் தன் மனைவி பத்மா பெயரில் பத்மா அறக்கட்டளையை உருவாக்கி, சதிஷ்எல்டின் கெல்லி மற்றும் சிவராம் ஆகிய அறக்கட்டளை உறுப்பினர்களுடன் இணைந்து இதய நோயாளிகளுக்கான தொண்டை தற்போது விரிவு படுத்தியுள்ளார்.
டாடா அறக்கட்டளை தரும் பணத்தை தவிர வேறு யாரிடமும் பணம் வாங்குவதில்லை என்பது அறக்கட்டளையின் பிரதான குறிக்கோள்.இரண்டாவதாக இதய நோய் பற்றிய பயத்தை நோக்கி அவர்களுக்கான தரமான சிகிச்சை பெறவைப்பதுதான் முக்கிய நோக்கம். இதய நோய் சிகிச்சை பெற விரும்புபவர்கள் தமிழக அரசின் மருத்துவகாப்பீட்டு அட்டை வைத்திருக்கவேண்டியது அவசியம், அதன் மதிப்பீட்டைவிட அதிகமாக எவ்வளவு செலவானாலும் அறக்கட்டளை பார்த்துக்கொள்ளும் அந்த வகையில் முப்பது லட்ச ரூபாய் கூட செலவு செய்து சிலர் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலான பள்ளிக்குழந்தைகள் இதய நோயினால் அவதியுறுகின்றனர் ஆகவே பள்ளிகளில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்பதில் அறக்கட்டளை ஆர்வமாக உள்ளது.
தன் வேலை நேரம் போக மற்ற நேரம் முழுவதையும் இதய நோயாளிகளின் நலனிற்காகவே செலவிடும் ராஜ்குமார் கேட்டுக் கொள்வதெல்லாம் இதயத்தில் ஒட்டை , இதய வால்வு பாதிப்புஇதய வால்வு மாற்றம் என்று இதயம் சம்பந்தமான எந்த பிரச்னை என்றாலும் கவலைப்படவேண்டியது இல்லை, பணம் அதிகம் செலவாகுமோ என்று பயப்படவேண்டியதும் இல்லை 
ஒரே ஒரு போன் செய்யுங்கள் எங்களால் முடிந்தளவு உங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லும் ராஜ்குமாரின் எண்கள் 7373748212, 8939057671.
-எல்.முருகராஜ் , murugaraj@dinamalar.in
நன்றி : தினமலர் நாளிதழ் - 18.08.2017