எஸ்மா சட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா?
1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டமானது (Essential Services Maintenance Act – Esma)
போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுப்பதற்கு மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது. அந்த சட்டத்தின்படி தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்புகள் மற்றும் விமானம், ரயில், சாலை போக்குவரத்துகள் போன்றவை அத்தியாவசிய
சேவைகள் பட்டியலில் வருகின்றது. மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள்
போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் வருகின்றன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும்
அத்தியாவசிய சேவைகளாக இச்சட்டம் கருதுகிறது.
மேற்கண்ட அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள எந்தத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் இறங்குவதற்கு இச்சட்டம் தடை செய்கிறது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதோ அல்லது போராட்டத்திற்கு
ஆதரவு அளிப்பதோ மற்றும் தேவைப்படுகின்ற பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட இந்த சட்டத்தின் கீழ் விரோதமானது ஆகும்.
மேற்கண்டவாறு போராட்டத்தில் அல்லது வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் என்றால் வேலைநீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில்
உள்ள பிற பணியாளர்கள் என்றால் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வழி வகை செய்கிறது.
கடந்த 2002-ம் வருடம் அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் போனஸ், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தமாக போராட்டத்தில் குதித்த போது, தமிழகமே ஸ்தம்பித்தது. பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அதனால், சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர்
ஜெயலலிதா இச்சட்டத்தை பயன்படுத்தி வேலைநீக்கம் செய்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
***********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி