disalbe Right click

Tuesday, October 17, 2017

தவறுதலாக வழக்குகள் பதிவு, போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தவறுதலாக வழக்குகள் பதிவு, 
போலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை:'அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடும் என கருதி, ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது' என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, போலீஸ் நிலையங்களுக்கு,டி.ஜி.பி., அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
பொது அமைதிக்கு ஒருவர் பங்கம் விளைவிக்க கூடும் என கருதினால், அவ்வாறு செய்யாமல் இருக்க, உரிய உத்தரவாதம் அல்லது ஜாமின் கோர, தாசில்தாருக்கு அதிகாரம் உள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 107 இதற்கு வகை செய்கிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, வடக்கு பாளையத்தை சேர்ந்தவர், ராஜ்குமார். இவர் உள்ளிட்ட மூவர் மீது, தாராபுரம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:
குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு, 107 ன்கீழ் குற்றம் புரிந்ததாக, எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்ய முடியாது. இந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு அதிகாரம் இல்லை.எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், ஜி.கார்த்திகேயன், ''அமைதிக்கு இடையூறு ஏற்படுத்த கூடும் என தகவல் வந்ததாக கூறி, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, வழக்கு பதிவு செய்ய முடியாது. பல போலீஸ் நிலையங்களில், இவ்வாறு தவறுதலாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி சி.டி.செல்வம் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் வழக்கறிஞர், கார்த்திகேயன் வாதம்சரியாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவேட்டில், குற்றம் புரியக்கூடும் என, குறிப்பிடக்கூடாது. தாசில்தார் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கான தகவலை, போலீசார் பெற்றால், அதை, தனியாக ஒரு பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். பின், தாசில்தாரின் நடவடிக்கைக்காக, அனுப்ப வேண்டும்.
போலீசாருக்கு தகுந்த உத்தரவுகளை பிறப் பிக்க ஏதுவாக, இந்த உத்தரவின் நகலை, டி.ஜி.பி.,க்கு அனுப்பலாம்இந்த வழக்கை பொறுத்த வரை, தாராபுரம் போலீஸ் பதிவு செய்த வழக்கு, ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.10.2017 

Monday, October 16, 2017

வீட்டுவேலை செய்யும் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்..

Image may contain: text
வீட்டுவேலை செய்யும் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.. 
மனைவிக்கு அதிரடி உத்தரவிட்ட மகாராஷ்டிரா கோர்ட்
சோலாப்பூர்: மகாராஷ்டிராவில் வீட்டு வேலை செய்யும் கணவருக்கு, வேலைக்கு சென்று சம்பாதிக்கும் மனைவி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விவாகரத்து வழக்கு ஒன்றில் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகே உள்ள சதாரா என்ற இடத்தை சேர்ந்தவர் அனில் (38). இவரது மனைவி சரிதா (47). கடந்த 2004ம் ஆண்டு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.
சரிதா நன்கு படித்தவர், ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் அனில் அவ்வளவாக படிக்கவில்லை. இதனால் சரிதா வேலைக்கு செல்ல, வீட்டு வேலைகளை அனில் கவனித்து வந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மோதலின் உச்சமாக அனிலை வீட்டை விட்டு வெளியே விரட்டினார் சரிதா.
இதனால் சோலாப்பூர் நீதிமன்றத்தில் சரிதா மீது வழக்குத் தொடுத்தார் அனில்.
வழக்கு விசாரணையின் போது, "எனக்கு திருமணமானதிலிருந்து என்னை சரிதா அனைத்து வீட்டு வேலைகள் செய்ய வைத்தார். அதோடு பலமுறை அடித்தும் கொடுமைகள் செய்தார்.
ஒரு கட்டத்தில் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டார். இதனால் எனக்கு உதவித்தொகை வழங்கிட உத்தரவிட வேண்டும்" என அனில் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை சரிதா மறுத்தார். விசாரணையின் இறுதியில் அனில் பக்கம் நியாயம் இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து மாதாமாதம் சரிதா, அனிலுக்கு ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
By: Jayachitra
நன்றி : ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் - 17.10.201

Sunday, October 15, 2017

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம்!

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம்!
தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது.
மூன்று மொழிகள்
இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில், சில மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.., பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளில் ஒன்று, மூன்றாவது மொழியாக கற்று தரப்படுகிறது.
ஆனால், அடுத்த ஆண்டு முதல், மூன்றாம் மொழியாக பிறநாட்டு மொழிக்கு பதில், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை, கூடுதலாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாடத்திட்டம்
இந்நிலையில், தமிழகத்தில், பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், பாடத்திட்டம் மட்டுமின்றி, மொழி வாரியாகவும் மாணவர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில், மூன்று மொழிகளை கற்பிக்கலாம் என, கல்வியாளர்கள் சிலர், பாடத்திட்ட கமிட்டியிடம் மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளும், மும்மொழி திட்டத்தை கொண்டு வர ஆலோசனை வழங்கி உள்ளனர்.
எனவே, புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது, மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தலாமா என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆறாம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், தாய்மொழி வழியிலும், பின், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆங்கில வழியிலும் பாடம் படிக்க, மாணவர்களுக்கு வசதி செய்யலாமா என்றும், பரிசீலிக்கப்படுகிறது.
தமிழ் கட்டாயம்
இந்த திட்டம் வந்தால், தமிழ் கட்டாயமாகும். இரண்டாவது மொழியாக, ஆங்கிலமும், பின், ஹிந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பிறமொழிகளில் ஏதாவது ஒன்றும், அரசு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
நன்றி : தினமலர் (கல்விமலர்) – 16.10.2017