மூத்த குடிமக்கள் பலரும் பலவகையாக வாழ்கிறார்கள்.
சொந்த வீட்டில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மூத்த குடிமக்களோடு, பிள்ளைகள் பல காரணங்களுக்காக உடன் வசிப்பதில்லை.
எல்லா தேவைகளுக்கும்
பிறரைச் சார்ந்திருக்க
வேண்டிய நிலை. மருத்துவம் போன்ற அவசர பணத் தேவைகளுக்கு உடனடியாக யாரையும் கேட்க முடியாது.
பிள்ளைகளோடு சேர்ந்து வாழ்ந்தாலும் தங்கள் நியாயமான பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத பிள்ளைகள் பல குடும்பங்களில் உள்ளனர். பிள்ளைகள் தம்மோடு வாழ்ந்தாலும்,
வசதியாக இருந்தாலும்
அவர்களிடம் ஒவ்வொருமுறையும்
பணத்துக்காக அணுகவேண்டிய
நிலை. கொடுப்பார்களோ
மாட்டார்களோ எனும் அச்சம். அவர்களுக்கு என்னென்ன பணப் பிரச்னையோ எனும் சிந்தனை.
தூர தேசத்தில் வசிக்கும் பிள்ளைகள். ஆனால், இப்போது பெற்றோரின் தேவைகளைக் கவனிக்காதவர்கள். மகளைத் திருமணம் செய்துகொடுத்துவிட்டு பிற்பாடு ஆதரவில்லாமல், சொந்த செலவுகளுக்கு
உதவுவோர் இன்றிச் சிரமப்படுபவர்கள். வாரிசுகள் யாருமே இல்லாதவர்கள்.
இப்படிப் பலர்… வீட்டின் பொருளாதாரம் கழுத்தை நெரிக்கும்போது, தன் பெயரில் வீடு இருந்தாலும், வாழ்க்கையின்
இறுதிக்கட்டம் பென்ஷன் வாங்குபவர், வாங்காதவர் எனப் பலருக்கும் அமைதியாக இருப்பதில்லை.
இந்த வகைகளில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும்!
இருக்கக் கூடாது!
வீட்டை பிற்காலத்தில்
அனுவிக்கப் போகும் வாரிசு அல்லது வாரிசுகள் இருக்க. சொத்து வைத்துக்கொண்டே
செலவினங்களுக்காகச் சிரமப்படும்
உங்களின் சீரான வருமானத்துக்காக வரைவு செய்யப்பட்ட
திட்டம்தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ். பல வங்கிகளில் இந்தக் கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.
இந்தக் கடன் திட்டத்தில் நீங்கள் வசிக்கும் வீட்டின் நிகர மதிப்பையே பெற்றுக்கொண்டு, வங்கி கடன் கொடுக்கிறது. பொதுவாக இந்தத் திட்டத்தில் கடன் வாங்குவோர் இறக்கும்வரை வங்கிக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.
கடன் காலத்தில் அந்த வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கலாம். வசிக்கத்தான் வேண்டும். இடையில் வேறு வீட்டுக்குக்
குடிபோகக் கூடாது. பிறகு எப்படிக் கடனை அடைப்பது என்று வருந்துகிறீர்களா?
கடனாளி இறந்தபின் அவரது வாரிசுக்கு அந்த வீட்டைப் பற்றிய சிந்தனை வரும். அந்தக் கடனை அடைத்துவிட்டு வங்கியிலிருந்து வீட்டுப் பத்திரத்தைத் தன் பெயருக்குத்
திரும்பப் பெறலாம்.
கடனை அவ்வாறு திருப்பிச் செலுத்தாதபட்சத்தில் வங்கி அந்த வீட்டை வங்கி விதிமுறைகளின்படி விற்று கடனை அடைத்துக்கொள்ளும். இதுதான் இந்தத் திட்டத்தின் சுருக்கம். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும், சட்ட வரையறைகளுக்கும்
உட்பட்டது இந்தத் திட்டம்!
இந்தத் திட்டத்தில்
கடன் வாங்க உங்களின் நிகர மொத்த வருமானம் போன்றவை கடன் கொடுப்பதற்காகப் பரிசீலிக்கப்படமாட்டாது. மருத்துவச் செலவு போன்ற பல அதி அத்தியாவசிய செலவுகளுக்குக்
கடன் கிடைக்கும்.
அது என்ன ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன்? முதலில் அதைத் தெரிந்துகொள்வோம்.
வழக்கமான வீட்டு அடமான கடன் திட்டத்தில்
கடனாளி தான் வாங்கிய கடனை மாத தவணையில் திருப்பிச் செலுத்துவார்.
அப்படி மாதாமாதம் திருப்பிச் செலுத்துவதற்கேற்றபடி அவருக்கு மாத வருமானமோ, சீரான வரும்படியோ இருக்கும். ஆனால் இந்த மார்ட்கேஜ் கடன் (“மாறுபட்ட வீட்டுக் கடன்”) திட்டம் முற்றிலும் மாறுபட்டது.
இதில் தனது வாழ்வாதாரமாகப் போதுமான வருமானம் இல்லாத ஒருவர் தான் வசித்துக்கொண்டிருக்கும் வீட்டை (அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பை),
வங்கியில் அடமானம் செய்ததும், வங்கி அவருக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும். அதனாலேயே இது “மாறுபட்ட வீட்டுக் கடன்” திட்டம் ஆனது. அதாவது-ரிவர்ஸ் மார்ட்கேஜ்!
❤ இந்தக் கடன் உங்களுக்கு வேண்டுமென்றால், சொத்து பத்திரப்படி அந்த நிலத்துடனான
வீட்டின் உரிமையாளராக
நீங்கள் 60 வயது முடிந்தவராக இருக்க வேண்டும்.
❤உங்களது . 55 வயதுக்கு மேற்பட்ட கணவர் அல்லது மனைவியை இணை கடனாளியாகச் சேர்ந்துக் கொள்ளலாம்.
❤ வீடு கணவர்-மனைவி இருவர் பெயரில் இருக்குமானால், இருவரும் இணைந்தே கடன் பெறவேண்டி இருக்கும்!
❤கடன் வாங்கும்போது
உங்கள் வீட்டின் மீதி வாழ்வுக் காலம் கடனுக்குண்டான காலத்தைவிட ஒன்றரை மடங்கு அதிகமுள்ளதாக இருப்பது அவசியம்.
❤அதாவது, குறைந்தது இன்னும் 20 வருட காலம் நிலைக்கவல்ல வீடாக இருக்க வேண்டும்.
❤ அடுக்குமாடிக் குடியிருப்பானால்
10 வருடத்துக்குமேல் பழையதாக இருக்கக் கூடாது.
❤ சொத்துக்கான
அரசு அனுமதி பெற்ற வரைபடம், கட்டட அனுமதி அவசியம்.
❤அதனுடன் வீட்டின் சமீபத்திய சந்தை மதிப்பீடு, வங்கியில் பதிவுபெற்ற பொறியாளர் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படும்.
❤முக்கியமாக உங்கள் வீட்டுச் சொத்து எந்த வில்லங்கமும் இல்லாததாக இருக்க வேண்டும்.
❤ பூர்வீக வீட்டின் பேரில் கடன் கிடைக்காது.
கடன் தொகை வரம்பு..!
குறைந்தபட்ச கடன் தொகை ரூ.2 லட்சம். அதிகபட்ச கடன் தொகை ரூ.25-50 லட்சம் வரை. வங்கிக்கு வங்கி மாறுபடலாம். கடன் வாங்கும்போது என்னென்ன வங்கி விதிமுறைகள் உண்டோ அவையே பின்பற்றப்படும். அப்போதைய வட்டி விகிதமே கணக்கில் பொருத்தப்படும். வட்டி விகிதமும் மிகக் குறைவே! தற்போது 12.5%-க்கும் கீழே!
கடன் காலம் எவ்வளவு?
கடனின் அதிகபட்ச கால வரையறை 15 வருடம். 65 வயதை முடித்தவருக்கு அதிகபட்சமாக
10 வருடம்.
இரண்டில் நீங்கள் எந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள்?
மார்ஜின் தொகையாக உங்களிடமிருந்து ஏதும் அவசியமில்லை.
ஆனால், சொத்து மதிப்பில் இவ்வளவு கடன் தொகைதான் அனுமதிக்கப்படும் என்கிற வரம்பு இருக்கிறது. சொத்தின் மதிப்பில் 45 முதல் 65 சதவிகிதம் வரைக்கும் மொத்தக் கடன் தொகை இருக்கும்.
வங்கிக் கடன் தொகையை வழங்கும் விதம்…?
கணக்கிலிருந்து உங்களுக்குத்
தொகை வழங்கும் விதமும் சற்று வேறுபட்டது. மத்திய அரசு நிர்ணயித்தபடி
கடன் தொகையின் 50% வரையே மருத்துவம் போன்ற செலவுக்கு – தற்போது அதிகபட்சம் 12.50 லட்சம் ரூபாய் – மொத்தத் தொகையாகச் சேமிப்புக் கணக்கில் வழங்கப்படும். இப்படி வழங்கப்படும்
மொத்தத் தொகையை நீங்கள், உங்களுக்கு, உங்கள் துணைவர் / துணைவி, சார்ந்து வாழ்ந்துவரும் குடும்ப உறுப்பினர் ஆகியோரின் மருத்துவச் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள 50% தொகையை வங்கியும் நீங்களும் முதலிலேயே ஒப்புக்கொண்டபடி
மாத / காலாண்டு / அரைவருட / வருடாந்திர தொகைகளாக மேற்படி கணக்கில் வழங்கப்படும்.
அரசால் நிர்ணயிக்கப்பட்ட
தற்போதைய மாத தொகை அதிகப்பட்சம் ரூபாய் 50,000.
திருப்பிச் செலுத்துவது
எப்படி?
கடனாளி இறந்தபின் வங்கி எப்படிக் கடனை வசூலிக்கும்?
கடன் காலத்தில் தவணையோ வட்டியோ நீங்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டியதில்லை
என்பதால், கடன் தொகை அளவு ஒவ்வொரு மாதமும் கணக்கில் கூடிக்கொண்டே
போகும். ஆனாலும், கடன் தொகைக்கும் சொத்து மதிப்புக்கும் இடையிலான இடைவெளி குறைந்தபட்சம் 35 % வரையே அனுமதிக்கப்படும்.
இது இப்படி இருக்க, கடன் கால முடிவுக்கு முன்னரே கணக்கை முடித்துக்கொள்ள நீங்கள் விரும்பினால்
செய்யலாம். அதற்கு அபராத தொகை ஏதுமில்லை. கடன் வட்டி ஒவ்வொரு மாத முடிவிலும் கணக்கில் சேரும்.
கடனாளிக்குச் சில வசதிகளும் உண்டு; கண்டிப்புகளும்
உண்டு!
இந்தத் திட்டத்தில்
கடன் பெறுவோரின் வசதிக்கேற்ப சில வசதிகளும் உண்டு. கடனாளி வாழும்போதே, கடனாளிக்கோ, அவரது வாரிசுக்கோ வீட்டை விற்காமலே கடனை அடைக்கும் முதல் உரிமை உண்டு. தவணையும் வட்டியும் தனிக் கடனாளியின் இறப்பு அல்லது இணைக் கடனாளியின் இறப்புக்குப் பின்னரோ, கடனாளி நிரந்தரமாக வேறு முகவரிக்கு மாறும்பட்சத்திலோ, கடனாளி வீட்டை விற்க முனைந்தாலோ வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடனாளியின் இறப்புத் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள்
இந்தக் கடன் அடைக்கப்பட வேண்டும்.
கடனாளி இறந்தால் 6 மாதத்திற்குள் அவரது வாரிசுக்குக்
கடனை அடைக்கும் வசதி உண்டு. அப்படி அந்த 6 மாதத்திற்குள்
வாரிசுகள் ஏதும் நடவடிக்கை எடுக்காத நிலையில், வங்கியில் வழக்கமான சட்டப்பூர்வ
நடவடிக்கை எடுக்கப்பட்டு
சொத்து விற்கப்பட்டு
கடன் வசூல் செய்யப்படும். விற்பனைத் தொகை அதிகமாக இருப்பின், கடனை அடைத்தது போக உபரித்தொகை வாரிசுகளுக்கு வழங்கப்படும்.
வாழுங்கள் மூத்த குடிமக்களே!
– மு.எ.பிரபாகரபாபு, துணை மண்டல மேலாளர் (நிறைவு), பேங்க் ஆஃப் இந்தியா.
நன்றி : விகடன் பைனான்ஸ் - 25.06.2015