disalbe Right click

Monday, December 11, 2017

பெண்களே, எதிர்க்கப் பழகுங்கள்!

Image may contain: 2 people, people smiling, beard and text
பொது இடங்களில் பாலியல் கேலி, சீண்டல், தொல்லை தரும் ஆண்களை அடக்குவதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்வது பற்றியும், அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்கான சட்ட நடவடிக்கைகள் பற்றியும் பெண்களுக்கு வழிகாட்டுகிறார் தமிழ்நாடு கடலோர காவல்படையின் கூடுதல் டிஜிபி டாக்டர் சி.சைலேந்திர பாபு.
எதிர்க்கப் பழகுங்கள்!
பொதுவாக, பேருந்து, ரயில், தியேட்டர், கூட்ட நெரிசல்கள் போன்ற பொது இடங்களில் ஈவ்டீஸிங் செய்யும் கயவர்கள், தைரியமான பெண்களைவிட, பயந்த சுபாவம் கொண்ட பெண்களைத்தான் இலக்காக்குவார்கள். காரணம், தங்களுக்கு ஆண்கள் தொல்லை தந்தாலும், அதை எதிர்க்கத் தயங்கி அந்தப் பெண்கள் சகித்துக்கொள்வது அல்லது பிரச்னை எதுவும் இன்றி ஒதுங்கிவிடுவதுதான். இதுதான் தவறு செய்வதற்கான பலத்தை அந்த ஆண்களுக்குத் தருகிறது. எனவே, ஒரு ஆண் தன்னை பாலியல் சீண்டல் செய்கிறான் என்றால், அது எந்த இடமாக இருந்தாலும், முறைப்பதில் தொடங்கி, சத்தம் போட்டு அவனை எச்சரிப்பது, திட்டுவது, அந்தக் கூட்டத்திடம் சொல்லிக் கேவலப்படுத்துவது என்று அந்தப் பெண் தன் எதிர்ப்பை வெளிப்படையாக, அவன் வெலவெலத்துப் போகும்படி காட்ட வேண்டும்.
பெண்களுக்கு முக்கியம் ஃபிட்னஸ்!
இரண்டு, மூன்று பேர் சேர்ந்த கும்பலிடம் மாட்டிக்கொள்ளும்போது, நாங்கள் எப்படி எதிர்ப்பது?’ என்று பெண்கள் கேட்கலாம். நீங்கள் ஃபிட்னஸுடன் இருந்தால், அது சாத்தியமே. ஈவ்டீஸிங் செய்பவர்கள் எல்லாம் ஸ்போர்ட்ஸ் மேன்கள் அல்ல. எனவே, ஒரு பெண் ஃபிட்டாக இருந்து, ஈவ் டீஸிங் கும்பலிடம் இருந்து தப்பித்து ஒரு கிலோ மீட்டர் வேகமாக ஓடினால், அவர் வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது. அவர் சுலபமாகத் தப்பித்துவிடலாம். எனவே, பெண்கள் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதுடன், காரத்தே போன்ற தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்வதும் சிறந்தது.
பெப்பர் ஸ்பிரேவைத்துக்கொள்ளுங்கள்!
பெண்கள் தங்கள் ஹேண்ட் பேகில் பெப்பர் ஸ்பிரே வைத்துக்கொள்ளப் பழகினால், ஆபத்து நேரங்களில் குற்றவாளியின் முகத்தில் அதை ஸ்பிரே செய்துவிட, அவனால் ஒரு அடி கூட நகர முடியாது. இந்த ஸ்பிரேயை பயன்படுத்துவது குறித்து ஒரு சின்ன பயிற்சி எடுத்துவிட்டால், பாதுகாப்பு உங்கள் கைப்பைக்குள்!
ஆபத்து நேர அழைப்பு எண்கள்!
பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிய பின் எந்த இடத்தில், எந்த நேரத்தில் ஆண்களால் பாலியல் தொல்லை அனுபவிக்க நேர்ந்தாலும் 100 அல்லது பெண்களுக்கான ஹெல்ப் லைன் நம்பரான 1091 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இடம், அந்த ஆணின் அடையாளம் ஆகியவற்றைச் சொல்லுங்கள். நிச்சயமாக உதவி கிடைக்கும், நடவடிக்கை பாயும். மேலும், ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் உதவியையும் நாடுங்கள்.
தண்டனைகள் என்னென்ன?
இந்திய சட்டத்தின்படி ஈவ்டீஸிங் என்ற சொல் கிடையாது. பெண்களைத் துன்புறுத்துதல் அல்லது ஒரு பெண்ணின் கௌரவத்தை சீர்குலைத்தல் என்று அது குறிப்பிடப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் படி, ஒரு பெண்னை மானபங்கம் செய்தாலோ, அவர் மீது தாக்குதல் நடத்தினாலோ, பலவந்தப்படுத்தினாலோ 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனை உண்டு. மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு, ‘பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்மூலம் ஆயுள் தண்டனை மற்றும் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும் சாத்தியம் இருக்கிறது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவும் இதில் அடங்கும்.
தைரியமாகப் புகார் கொடுங்கள்!
பெரும்பாலும் பெண்கள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புகார் கொடுக்க முன்வருவது இல்லை என்பது வருத்தமான விஷயம். இதுதான் ஆண்களுக்குத் தைரியத்தைக் கொடுத்து, தொடர்ந்து குற்றங்கள் நடைபெற காரணமாகிறது. குற்றவாளிகளே தைரியமாக இருக்கும்போது, பெண்கள் ஏன் தயங்க வேண்டும்? தைரியமாக காவல் நிலையம் வாருங்கள். உங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவனுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கச் செய்யலாம். காவல் நிலையத்தில் நீங்கள் புகாரை சமர்பித்த காவலரிடம் நடந்த சம்பவங்களைச் சொல்லுங்கள். அரசு தரப்பு பிரதிநிதியாக அவர் உங்களுக்காக வாதாடுவார். அவரே அந்த வழக்கையும் நடத்துவார்.
ஆண்களுக்கான எச்சரிக்கை!
இது என் அறிவுரை
பெண்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பெண்ணுக்கு பாலியல் தொல்லை தருவது தண்டனைக்குரிய குற்றம். சம்பந்தப்பட்ட பெண் புகார் கொடுத்தால்தானே என்ற உங்களின் அசட்டு தைரியத்தை, இன்று காவல் நிலையங்களில் தைரியமாகப் புகார்களைப் பதிவு செய்து வரும் சகோதரிகள் சுக்குநூறாக உடைக்கத் தொடங்கிவிட்டனர். இதில் அவர்களுக்கு எந்த அவமானமும் இல்லை என்பதை உணரத் தொடங்கிவிட்டார்கள். ஒரு பாலியல் குற்றத்துக்காக உங்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது உங்களுக்கும், இப்படி ஒரு பிள்ளையை வளர்த்த உங்கள் குடும்பத்துக்குமான அவமானமே. நாகரிகம் பழகுங்கள் ஆண்களே!’’
நன்றி : விகடன் செய்திகள் – 10.12.201

பதிவு துறையில் குறையா? : புகார் தெரிவிக்க வசதி

சென்னை: பதிவுத்துறை பணிகள் தொடர்பான சேவை குறைபாடுகள் இருந்தால், அதை தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பு: சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் பதிவு, திருமணங்கள், சங்கங்கள், சீட்டு மற்றும் கூட்டு நிறுவனங்கள் பதிவு தொடர்பான பணிகளை, பத்திரப் பதிவுத் துறை மேற்கொள்கிறது. இந்த சேவைகள் தொடர்பாக குறைகள் இருந்தால், அவற்றை, பொது மக்கள் எளிய முறையில் தெரிவிக்கலாம்.
இதற்காக, பதிவுத்துறையில், 1800 102 5174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தும், கணினியில் பதிவு செய்து, பதிவுத்துறை தலைவரின் பார்வைக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வசதியை, அனைத்து அலுவலக நாட்களிலும், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:45 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 11.12.2017 

நீதிமன்றங்களை, தவறாக வழி நடத்தும் வழக்கறிஞர்கள்

 
சென்னை:நீதிமன்றங்களை, தவறாக வழி நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ஆனந்த் குமார் ஜவஹர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தி.நகர், ரங்கநாதன் தெருவில், நானும், வி.எஸ். ஜெயராஜன் என்பவரும் பங்குதாரர்களாக, வாடகை கட்டடத்தில் துணிக்கடை நடத்தினோம். அந்த கட்டடம், சாந்தி மீனாட்சி என்பவருக்குச் சொந்தமானது. இடையில், எனக்கும், ஜெயராஜனுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், கடை ஆறு மாதங்களாக மூடி கிடப்பது போல சித்தரித்து, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் மற்றும் லோக் அதாலத் நீதிமன்றங்களை, வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் திட்டமிட்டு ஏமாற்றி, என்னை கடையில் இருந்து வெளியேற்றினர்.
அந்த சம்பவங்கள் அனைத்தும், கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கடையை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:
வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்பதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். பணத்துக்கு ஆசைப்பட்டு, நீதிமன்ற ஊழியர்களும், தவறான வழியில் சென்றுள்ளனர். அதனால், மாம்பலம் போலீஸ் துணை கமிஷனர், உடனடியாக அந்த கடையை மீட்டு, ஆனந்த் குமார் ஜவஹரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல், ஜெயராஜன், சாந்தி மீனாட்சி ஆகியோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவுத்துறை சம்பந்தப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றங்களை தவறாக வழிநடத்தி, பெறப்பட்ட அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நீதிமன்றங்களை தவறாக பயன்படுத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, ஏற்கனவே, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.
நீதிமன்றத்தை ஏமாற்றியவர்கள் மீது, நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, தலைமை வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நன்றி : தினமலர் நாளிதழ் - 10.12.2016