இராம் பிரசாத் என்பவர் மீது இ. த. ச பிரிவு 323 ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர் இந்த வழக்கில் 5 ஆம் எதிரி ஆவார். மற்ற எதிரிகள் மீது இ. த. ச பிரிவுகள் 302 மற்றும் 34 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறுந்தகடு (CD)
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டது. அதில் ஒரு வீடியோவும், ஒரு குறுந்தகடும் சான்றாவணமாக குறியீடு செய்யப்பட்டது. இராம் பிரசாத் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அந்த குறுந்தகடின் நகலை தனக்கு தர வேண்டும் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
காவல்துறை மறுப்பு
அந்த மனுவிற்கு பதிலுரை தாக்கல் செய்த காவல்துறையினர் இ. த. ச பிரிவு 29 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 3 ஆகியவற்றின்படி குறுந்தகட்டை ஒரு ஆவணமாக கருதக்கூடாது, எனவே இராம் பிரசாத்க்கு குறுந்தகட்டின் நகலை தர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினர்.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு
காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட குற்றவியல் நடுவர் இராம் பிரசாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடஉத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
அந்த உத்தரவை எதிர்த்து இராம் பிரசாத் இந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. வைத்தியநாதன் விசாரித்தார்.
இந்திய சாட்சிய சட்டத்தில், 2000 ஆம் ஆண்டில் சட்டம் 21/2000 ன்படி புதிதாக 65(B) என்கிற சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டு அது 17.10.2000 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி மின்னணு நகல்களை சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதற்கு ஏதுவாக எதிரிக்கு வழங்க வேண்டும். அப்படி எதிரிக்கு வழங்காவிட்டால் அவரால் சாட்சிகளை முழுமையாக குறுக்கு விசாரணை செய்ய முடியாது.
இதுபோக இந்திய தண்டனைச் சட்டத்தில் 17.10.2000 ஆம் தேதியில் புதிதாக சட்டப் பிரிவு 29(A) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதில் மின்னணு ஆவணங்கள் என்ற சொற்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 ல் பிரிவு 2 உட்பிரிவு 1 கூறு (2) ல் கூறப்பட்டுள்ள பொருளையே கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின்படி குறுந்தகட்டின் நகலை பெற எதிரிக்கு உரிமை உள்ளது என்று கூறி இராம் பிரசாத் மனுவை தள்ளுபடி செய்து குற்றவியல் நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதியரசர் உத்தரவிட்டார்.
வழக்கு எண் : CRL. OP. NO - 18495/2013, dt- 7.1.2014
இராம் (எ) இராம் பிரசாத் Vs ஆய்வாளர், கண்டோன்மெண்ட் காவல் நிலையம், திருச்சி
2014-2-MLJ-CRL-83