பிரசவ தேதியைக் கண்டிபிடிக்க என்ன செய்ய வேண்டும்?
கருத்தரித்த பெண்கள் குழந்தை பிறக்கும் நாளை அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால பல சிரமங்களையும், உயிர் சேதங்களையும் தவிர்க்கலாம்.பொதுவாக கருத்தரித்த பெண்கள் மருத்துவரிடம் செல்லும் போது, குழந்தை பிறக்கப் போகும் பிரசவ தேதியை அவர் கணித்து சொல்வார்.
இதனை எப்படி கணிக்கிறார்கள்?
எளிமையான, நாமே இதனை கணக்கிடலாம். மாதவிலக்கு நின்ற நாளை வைத்து இதனை கணக்கிட வேண்டும். அதனை மறந்து போனவர்களுக்கும் வேறு வழி இருக்கிறது.
சீராக மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு
உதாரணமாக கடைசியாக மாதவிலக்கு நிகழ்ந்த நாள் செப்டம்பர் மாதம், 5ம் தேதி என்று வைத்துக் கொள்வோம். அந்த பெண் கருத்தரித்த மாதத்திலிருந்து, ஒன்பதாவது மாதம், ஜூன் மாதம் வரும். கடைசியாக மாதவிலக்கு ஆன நாளான ஐந்தாம் தேதியுடன், ஏழு நாட்களை கூட்டினால் வரும், ஜூன் மாதம் 12ம் தேதியே, பிரசவ தேதி ஆகும்.
மாறுபட்ட மாதவிலக்கு சுழற்சி உள்ள பெண்களுக்கு
கடைசி மாதவிலக்கு நிகழ்ந்த நாள் ஜூன் செப்டம்பர் மாதம், 5ம் தேதி என்று வைத்துக் கொள்வோம். அந்த பெண் கருத்தரித்த மாதத்திலிருந்து, ஒன்பதாவது மாதம், ஜூன் மாதம் வரும். . உதாரணத்துக்கு, அந்தப் பெண்ணுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு நிகழும் எனில், அந்த எண்ணிலிருந்து, 30 நாட்களை கழிக்க வேண்டும்.
சீரான மாதவிடாய் இருப்பவரின் பிரசவ தேதியான, ஜூன், 12 உடன், கழித்து வரும், 10 நாட்களை கூட்டினால் கிடைக்கும், ஜூன் மாதம், 22ம் தேதி, பிரசவ தேதியாகும்.
மாதவிலக்கு ஆன நாளை மறந்த பெண்களுக்கு
வேறு வழியே இல்லை. ஸ்கேன் செய்துதான் பார்க்க வேண்டும்.
ஸ்கேன் எந்த நாளில் எடுக்க வேண்டும்?
பொதுவாக, பெண்கள் கருவுற்ற , 11வது வாரத்திலிருந்து 14வது வாரத்துக்குள் எடுக்கப்படும் முதலில் எடுக்கப்படுகின்ற ஸ்கேன், கருமுட்டை வெளியான நாளை, சரியாக கணிக்கும். இதை, 'பர்ட்ஸ் ட்ரைமெஸ்டர் ஸ்கேன்' (First trimester scan) என்று குறிப்பிடுவர்.
வயிற்றி கரு உருவாகி, 30 வாரங்கள் ஆன நிலையில், சில காரணங்களால் அதன் வளர்ச்சி, சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், பிரசவ தேதியை அதற்கேற்ப பின் தள்ளி மாற்றிச் சொல்லும்.
இது போக கருவானது அந்த மாத வளர்ச்சியை விட, சற்று அதிக வளர்ச்சி இருந்தால், அதற்கேற்றாற் போல், முன்கூட்டியே பிரசவ தேதி நிர்ணயிக்கப்படும். ஆகையால், முதல் முறை எடுக்கின்ற, பர்ஸ்ட் ட்ரைமெஸ்டர் ஸ்கேன் (First trimester scan) தெரிவிக்கும் பிரசவ தேதியே, மிகச் சரியானதாக இருக்கும்.
ஆகவேதான், எட்டாவது மாதத்துக்கு பின், முதன்முறையாக மருத்துவமனைக்கு , 'செக்-அப்' செய்ய வருகின்ற பெண்களிடம், பர்ஸ்ட் ட்ரைமெஸ்டரில் (First trimester scan) எடுத்த ஸ்கேனை கேட்கின்றனர்.
டவுண் சிண்ட்ரோம் (down syndrome)
கரு உருவான, 11வது வாரம் முதல், 14வது வாரத்துக்குள் எடுக்கப்படும் ஸ்கேனில், சிசுவுக்கு, 'டவுண் சிண்ட்ரோம்' பிரச்னை இருந்தால் கண்டறியலாம்.
20வது வாரத்தில் எடுக்கப்படுகின்ற ஸ்கேனில், கருவில் ஏதேனும் சரி செய்ய முடியாத பிரச்சனை ஏதாவது இருந்தால், கருவைக் கலைக்க, குடும்பத்தினருக்கு மருத்துவ ஆலோசனை தரப்படும். கடைசி மாதவிலக்குத் தேதியை மறந்து போய், கரு வயிற்றில் உருவானதை தாமதமாக உணர்ந்து, அதற்குப்பிறகு பின்னால் வருகின்ற மாதங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில், கருவுக்கு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டால், சட்டப்படி கருவை கலைக்க முடியாமல் போய்விடும். இதனால், குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கஷ்டம் ஏற்படும். ஆகையால் கடைசி மாதவிலக்கான நாளை மறக்காதீர்கள் பெண்களே!
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.01.2018