காசோலை என்றால் என்ன?
காசோலை என்பதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காசோலை என்றால் என்ன? என்பதைத் தெரியாத பாமர மக்கள்கூட இன்று காசோலைகளை சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களிடம் காசோலையை செக் என்று சொன்னால்தான் அவர்களுக்குத் தெரியும்.
ஒரு வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கமாக அதே நேரத்தில் பாதுகாப்பாக பணத்தைச் செலுத்துவதற்கு, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படுவது காசோலை ஆகும். இன்றைய சூழலில் ஆன்லைன் மூலமாகவும், கிரடிட் கார்டு மூலமாகவும் பணப்பரிமாற்றம் நடந்து வந்தாலும் காசோலைகளின் பயன்பாடு குறையவில்லை. அந்த காசோலை பற்றிய தகவல்களை இங்கு காண்போம்.
மாற்றத்தக்க ஆவணச் சட்டம் (Negotiable Instruments Act)
காசோலை பற்றி மாற்றத்தக்க ஆவணச் சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. காசோலையை பொறுத்த வரையில் அது (1) (Drawer) காசோலை எழுதிக் கொடுப்பவர், (2) (Payee) காசோலையை பெற்றவர், (3) (Drawee) காசோலைக்கு பணம் அளிப்பவர் என்ற மூன்று நபர்கள் சம்பந்தப்பட்டதாகும். மேற்கண்ட மூவருக்குமே இதில் முக்கிய பொறுப்புகள் உண்டு.
காசோலை அளிப்பவருக்குள்ள (Drawer) பொறுப்புகள் என்ன?
1 ஒருவருக்கு காசோலை அளிப்பதற்கு முன், வங்கியில் உள்ள தனது கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்ற விபரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
2. காசோலையில் நிரப்புகின்ற தொகை இருப்புத் தொகையைவிட குறைவாக இருக்க வேண்டும்.
3. காசோலையில் தேதி கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
4. பணம் பெறுகின்றவரது பெயர் அல்லது நிறுவனத்தின் பெயர், ஊர் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.
5. தனி நபர் ஒருவருக்கு காசோலை மூலமாக பணம் அளிப்பதாக இருந்தால் அந்தக் காசோலையின் இடது பக்க மேல் மூலையில் மறக்காமல் குறுக்குக் கோடு (crossed cheque) இட வேண்டும்.
6. அளிக்க இருக்கின்ற தொகையினை அதற்குரிய இடத்தில் எண்ணாலும் எழுத்தாலும் எழுத வேண்டும்.
7. கண்டிப்பாக காசோலையில் மறக்காமல் கையெழுத்து இட வேண்டும்.
8. காசோலைகளின் எந்த இடத்திலும் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது.
9. காசோலைகளில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் இருக்க வேண்டும்.
10. ஒரு காசோலையில் வேறு வேறு பேனாக்களின் மூலமாகவோ, வேறு வேறு வண்ண மைகளைக் கொண்டோ எழுதக்கூடாது.
11. நீங்கள் கொடுத்த காசோலை தொலைந்துவிட்ட தகவல் உங்களுக்கு கிடைத்தவுடன் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு எழுத்து மூலமாகவும் அறிவிக்க வேண்டும்.
காசோலை பெற்றவருக்குள்ள (Payee) பொறுப்புகள் என்ன?
1. காசோலை பெற்றவுடன் அதனைப் பெற்ற நாள், அதனை வழங்கிய நபர், காசோலையின் எண், வங்கியின் பெயர், அதில் எழுதப்பட்டுள்ள தொகை ஆகியவற்றை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.
2. பெற்ற காசோலையில் உள்ள தேதியை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்தத் தேதிக்குப் பின்னரே அதனை அந்த வங்கியில் அளித்து தொகையைப் பெற முடியும்.
3. காசோலையில் குறிப்பிட்டுள்ள தேதியில் இருந்து மூன்று மாத காலத்திற்குள் அதனை பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அது செல்லாதது ஆகிவிடும்.
4. காசோலையின் பின்புறம் கையெழுத்து இட வேண்டும். குறுக்குக் கோடிட்ட காசோலையாக இருந்தால் அந்தக் காசோலையின் பின்புறத்தில் அந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருந்தால், உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணையும் எழுத வேண்டும்.
5. காசோலை அளிக்கப்பட்ட வங்கியில் உங்களுக்கு கணக்கு இல்லை என்றால், உங்களுக்கு எந்த வங்கியில் அக்கவுண்ட் உள்ளதோ அந்த வங்கியில் அந்தக் காசோலையை செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், சில நாட்கள் கழித்தே பணம் உங்கள் அக்கவுண்டிற்கு வந்து சேரும்.
6. பெற்ற காசோலை தொலைந்துவிட்டால், அதனை உடனடியாக காசோலை வழங்கியவருக்கும், வங்கிக்கும் தெரியப்படுத்த வேண்டும்
காசோலைக்கு பணம் அளிப்பவருக்குள்ள (Drawee) பொறுப்புகள் என்ன?
1. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்குக் குறைவாக அதனை கொடுத்தவர் அக்கவுண்டில் பணம் இருந்தால், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
2. பெறப்பட்ட காசோலை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
3. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்கு முன்னர் வங்கியில் செலுத்தப்பட்டால் அதற்கு பணம் வழங்க வேண்டியதில்லை.
4. வங்கியின் நேரம் முடிந்த பிறகு கொடுக்கப்படுகின்ற காசோலைக்கு பணம் வழங்க வேண்டியதில்லை.
5. காசோலையில் அடித்தல், திருத்தல் இருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
6. காசோலையினை வழங்கிய நபர் இறந்திருந்து அந்த செய்தி வங்கி ஊழியருக்கு தெரிந்திருந்தால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
7. காசோலையினை வழங்கிய நபர் அந்த காசோலைக்கு பணம் அளிக்க வேண்டாம் (Stop Payment) என்று வங்கிக்கு அறிவித்து இருந்தாலும் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
8. காசோலையினை வழங்கிய நபர் கணக்கிலிருந்து யாருக்கும் பணம் அளிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டு இருந்தாலும், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
9. காசோலையினை வழங்கிய நபர் வங்கிக்கு ஏதேனும் பணம் கொடுக்க வேண்டியது இருந்தால், அந்த பற்றுத்தொகைக்கு மட்டுமே அவரது அக்கவுண்டில் பணம் இருந்தால்,
அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
10. குறுக்குக் கோடு (crossed cheque) இடப்பட்ட காசோலையை கொண்டு வருபவருக்கு அந்த வங்கியில் அக்கவுண்ட் இல்லை என்றால் அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
11. கையெழுத்து இல்லாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
12. வேறு வேறு வண்ணங்களில் எழுதப்பட்ட காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
13. முழுமையாக நிரப்பப்படாத காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
14. காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மூன்று மாதங்களுக்கு முந்தியது என்றால், அந்த காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டியதில்லை.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.02.2018