கடந்த 2017ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக்குகளில் 1058 விரிவுரையாளர் பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு, 16.09.2017ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
2017- நவம்பர் 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
எழுந்த குற்றச்சாட்டு
இந்த முடிவுகளில் விடைத்தாளில் இருப்பதைவிட சிலருக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்தினர். தேர்வு முடிவுகளை வெளியிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் உட்பட 8 பேரை அவர்கள் கைதும் செய்தனர்.
196 தேர்வர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் வழங்கி, முறைகேடாக மதிப்பெண் பட்டியல் தயார் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற விரிவுரையாளர்
பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தேர்வு எப்போது?
மறு தேர்விற்கான விளம்பரம் 2018 மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க
வேண்டிய தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரும் விண்ணப்பிக்க
வேண்டும்
ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தேர்வுக்கான தேர்வுக்கட்டணம்
செலுத்தத் தேவையில்லை.
புதிதாக அந்தத் தேர்வை எழுத நினைக்கும் விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.02.2018