disalbe Right click

Saturday, February 24, 2018

கலெக்டர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

நிலத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை: சென்னை மாவட்ட கலெக்டர் ஆஜராக உத்தரவு
நிலத்தை ஆர்ஜிதம் செய்து, 30 ஆண்டுகள் ஆகியும் அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்காததால், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலம்

சென்னை, மயிலாப்பூரில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான, 487 சதுர அடி இடம் இருந்தது. இந்த இடம் பறக்கும் ரயில் திட்டத்துக்காக, 1986ம் ஆண்டில் அரசால் கையகப்படுத்தப்பட்டது; 1993-ம் ஆண்டில், அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு ரூபாய் 2..33 லட்சம் இழப்பீடாக அரசால் நிர்ணயிக்கப்பட்டது.

குறைவான இழப்பீட்டுத் தொகை

அந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலத்தின் உரிமையாளர் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2017 ஜூலையில் 35.44 லட்சம் ரூபாயாக இழப்பீட்டு தொகையை நிர்ணயித்து,உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், 'இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகியும், அதற்கான பலனை அதன் உரிமையாளர் அனுபவிக்க வில்லை. .

'எனவே, ஒரு லட்சம் ரூபாய், அவரது வழக்கு செலவு தொகையாக அளிக்க வேண்டும். மொத்த தொகையை 12 வாரங்களில் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டது.

கண்டு கொள்ளாத கலெக்டர்

உயர்நீதிமன்றம் நிர்ணயித்த கெடு முடிந்ததும், இழப்பீட்டு தொகையை வழங்கும்படி, 2017 டிசம்பரில், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, ராமசாமி, 'நோட்டீஸ்' அனுப்பினார்; ஆனால், எந்த பதிலும் இல்லை. 2018 ஜனவரியில், நினைவூட்டும் கடிதத்தையும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார்.நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக, அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி, கிருபாகரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:

சொத்தை இழந்தும், இழப்பீட்டின் பலனை, 30 ஆண்டுகளாக அதன் உரிமையாளரால் அனுபவிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை சென்னை மாவட்ட ஆட்சியர் மீறியிருப்பது தெரிகிறது.

நேரில் ஆஜராக வேண்டும்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு, அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. உத்தரவுகள் எப்படி எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். எனவே, மார்ச், 5ம் தேதி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி, நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.02.2018

Friday, February 23, 2018

கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு அபராதம்

தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்.முத்தழகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2011 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்காக போளூர் தாலுகாவைச் சேர்ந்த கேளூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கல்விக்கடன் கோரி நான் விண்ணப்பித்தேன். வங்கி நிர்வாகம்  எனக்கு  கல்விக்கடன் வழங்கவில்லை. ஆகவே கனம் நீதிபதி அவர்கள் எனக்கு கல்விக்கடன் வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்
தனி நீதிபதி அளித்த தீர்ப்பு
இதனை விசாரித்த தனிநீதிபதி அவர்கள், மாணவியின் கோரிக்கையை பரிசீலித்து, அவருக்குக் கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்
மேல்முறையீடு செய்த வங்கி
இந்த உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை (23.02.2018) விசாரணைக்கு வந்தது
வங்கியின் வாதம்
ஷை வங்கியின் சார்பாக ஆஜரான  வழக்கறிஞர், கடன் கோரிய மானவியின் படிப்பு கடந்த 2015ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டதால், வழக்கு காலாவதி ஆகிவிட்டது. ஆகவே இந்த வழக்கில் தனி நீதிபதி அவர்கள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.
முடிவில் நீதிபதிகள், எந்தவித நிபந்தனையும் இன்றி, உத்தரவாதமும் இன்றி கோடீஸ்வர தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் வாரிக் கொடுக்கின்ற வங்கிகள், ஏழை மாணவர்கள் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தால் அவர்களை அலைகழித்து வருகின்றனர். அது போல  ஏழைகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் மறுக்கப்படுவதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியான போக்கையும், ஏழைகளுக்கு வேறு மாதிரியான போக்கையும் வங்கி நிர்வாகம் கடைபிடிப்பது கண்டனத்துக்குறியது. வழக்கைத் தொடர்ந்த மாணவி ஆர்.முத்தழகி-க்கு படிப்பை முடிக்கும் வரை கடன் வழங்காமல் இழுத்தடித்து இந்த வழக்கை வங்கி செல்லாததாக ஆக்கிவிட்டது
ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 48 ஆயிரம் கோடி வரை வாங்கிய கடனை முறையாக வங்கியில் திருப்பிச் செலுத்தாத நிலையில், கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என இதுவரை எந்த புகாரும் நீதிமன்றத்திற்கு வந்தது இல்லை
இதுபோல உரிய நேரத்தில் கல்விக்கடன் மாணவ, மாணவியர்களுக்கு மறுக்கப்படுவதால், நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய மிகச்சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கிடைக்காமல் போய் விடுகின்றனர். இதனால் அவர்களுடைய சேவை நாட்டுக்கு கிடைக்காமல் போகிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
 வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ஆகவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கல்விக்கடன் வழங்க மறுத்த வங்கி நிர்வாகத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படுகிறது
இந்த தொகையை மனுதாரருக்கு இரண்டு வாரத்துக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 24.02.2018. 

Personnel

5,80,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் 1400 க்கும் அதிகமான பயனுள்ள பதிவுகள் மற்றும் பல பயனுள்ள இணையதள இணைப்புகள் கொண்ட எனது இணையதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 23.02.2018

Thursday, February 22, 2018

எதிரிடை அனுபவப் பாத்தியம்


எதிரிடை அனுபவப் பாத்தியம்
அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி பல ஆண்டுகளாக  சிலர் குடியிருந்து வருவார்கள். திடீரென்று, ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளும்போது அவர்களது வீடு அகற்றப்படும். அவர்கள் இதுபோன்ற வேறு இடங்களைத் தேடிச் சென்று வீடு கட்டிக் கொள்வார்கள். 
எதிரிடை அனுபவப் பாத்தியம்
இதுபோல அரசு நிலங்களை அல்லது தனியார் நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து வீடு கட்டி வாழ்ந்து வருபவர்கள் அந்த நிலத்தினை தங்களுக்கு பாத்தியம் ஆக்கிக் கொள்ள முடியுமா? என்றால் முடியும்! இது போன்ற அனுபவப் பாத்தியத்திற்கு சட்டத்தில் எதிரிடை அனுபவப் பாத்தியம் என்று பெயர். 
சட்டம் இதைப் பற்றி என்ன சொல்கிறது?
ஒருவர் தனக்கு பாத்தியமில்லாத பிறருடைய சொத்தை, அந்த சொத்தின் உரிமையாளருக்குத் தெரிந்தே, ஊரறிய, எந்தவிதமான ஆட்சேபனை மற்றும் தடை இன்றி பல வருடங்களாக இடைவெளி ஏதுமின்றி அனுபவித்து வந்தார் என்றால், அவர் அந்த நிலத்திற்கு பாத்தியம் கோரலாம். இதைத்தான்  சட்டமானது எதிரிடை அனுபவப் பாத்தியம் என்று சொல்கிறது.
தனியாருக்கு சொந்தமான சொத்து என்றால்....?
மேற்கண்டவாறு ஒருவர் அனுபவித்து வருகின்ற சொத்து தனியாருக்குச் சொந்தமானது என்றால், அவர் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் அதனை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.  குத்தகையின் பெயரிலோ, அனுமதியின் பெயரிலோ, வாடகை கொடுத்து வந்தோ அதனை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதனை நிரூபிக்க ஆவணங்கள் மிகவும் அவசியம். இது போன்ற பாத்தியத்தை நீதிமன்றம் மூலமாக மட்டுமே பெற முடியும். 
அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்து என்றால்....?
மேற்கண்டவாறு ஒருவர் அனுபவித்து வருகின்ற சொத்து அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்றால், அவர் தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் அதனை அனுபவித்து வந்திருக்க வேண்டும்.

********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.02.2018