பெண் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தனியாக பயணம் செய்ய ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பெண் பயணிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வசதியாக, பாதுகாப்பாக மற்றும் பயணச் செலவு குறைவாக இருப்பதால் இப்போது பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆண்களது துணை இல்லாமல் தனியாகவோ அல்லது குழந்தைகளுடனோ அல்லது குழுவாகவோ பயணம் செல்வதற்கு பெண்களுக்கு மிகவும் ஏற்ற ரயில் பயணத்திற்கு டிக்கட் கிடைப்பது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது.
படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 6 இடங்கள்
தற்போது அந்த சிரமத்தை போக்குவதற்காக இரயில்வே நிர்வாகம் புதிய முடிவை அறிவித்துள்ளது. ரயில் பெட்டிகளில் ஒதுக்கப்படாத
படுக்கைகளை, பெண் பயணிக்கோ அல்லது பெண் பயணிகளின் குழுக்களுக்கோ முதலில் ஒதுக்குவது என்று முடிவு செய்திருக்கிறது. இதனால், படுக்கை வசதி கொண்ட ஒவ்வொரு ரயில் பெட்டியிலும்
6 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளை பெண் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால்,
"இந்த ஆறு படுக்கை வசதி கொண்ட இருக்கைகளும், தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கோ அல்லது ஒரே PNR எண்ணில் பதிவு செய்யப்படும் பெண் பயணிகளுக்கோ ஒதுக்கப்படும். ரயில் பயணத்தின் முதல் சார்ட் தயாரிக்கப்படும் வரை 6 படுக்கை வசதிகளும் முன்பதிவு செய்யப்படாத நிலையில், அது வெயிட்-லிஸ்ட்டில் இருக்கும் பெண் பயணி அல்லது குழுவாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஒதுக்கப்படும். அதற்கடுத்ததாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையினை ரயில்வே வாரியம் கடந்த 15.02.2018ம் தேதி மத்திய ரயில்வே தகவல் மையம் (சிஆர்ஐஎஸ்) மற்றும் ஐஆர்சிடிசிக்கு அனுப்பியுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதற்குத் தேவையான வகையில் மாற்றங்களை செய்யப்படுவதற்கு
ஏதுவாக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 02.03.2018