disalbe Right click

Tuesday, March 20, 2018

புரோ நோட்டு - வழக்கு - தீர்ப்பு

இந்த வழக்கில் வாதி என்ன சொல்கிறார்?
மருதாத்தாள், கே.மாரியப்பன் (பிரதிவாதிகள்) ஆகிய இருவரும் கணவன் மனைவி ஆவார்கள். இவர்கள்  இருவரும் தங்களுக்குள்ள சில்லறைக் கடன்களை தீர்ப்பதற்காகவும், குடும்பச் செலவுகளுக்காகவும் அவசர நிமித்தமாக பி.மணி என்ற என்னிடம், கடந்த 15.05.2005 அன்று 50,000/- ரூபாய் கடன் வாங்கினார்கள். இந்தத் தொகைக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.100/-க்கு ரூ.1/-வட்டி வீதம் செலுத்தி வருவோம்  என்றும், நான்   கேட்கும்போது  என்னிடமாவது  அல்லது நான் சொல்கிற யாரிடமாவது ரொக்கம் செலுத்தி  விடுவோம் என்று மேற்கண்ட  தேதியில் எனது  பெயருக்கு தாவா பிராம்சரி   நோட்டு (புரோ நோட்டு) ஒன்றை  எழுதிக் கொடுத்தார்கள். ஆனால்,  மேற்படி தொகை பெற்ற நாளில் இருந்து  பிரதிவாதிகள்  இருவரும்  எனக்கு எந்தவிதமான  அசலோ வட்டியோ  செலுத்தவில்லை.   தாவா   பிராம்சரி  நோட்டிற்குரிய அசல் வட்டித்தொகையைச் செலுத்திவைக்கும்படி  பிரதிவாதிகள் இருவரையும் பலமுறை நேரில் சென்று நான் கேட்டேன். ஆனால், பலனில்லை. ஆகையால், அவர்களுக்கு கடந்த 30.11.2007ம்   தேதி  வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினேன்.  மேற்படி  அறிவிப்பை பிரதிவாதிகள்   இருவரும்  பெற்றுக் கொண்டு, அதற்கு 03.12.2007  அன்று பதில் அறிவிப்பும் அனுப்பினார்கள். அதில் நான் கூறிய எல்லாவற்றையும் மறுத்துள்ளார்கள்.
1ம் பிரதிவாதி என்ன சொல்கிறார்? 
எங்களுக்கு பழனி தாலுகா கோதைமங்கலம் கிராமம் சர்வே எண். 391/1A1-ல்  மனை   எண்100, கதவு எண்.7/278 எனக்கு (மருதாத்தாள்)   பாத்தியப்பட்டு  அரசாங்கத்தால்  1994ம்  ஆண்டு  பட்டா வழங்கப்பட்டு, எனது பெயரிலேயே   வரியும் செலுத்தியும்   வருகிறேன்.  அந்த  இடத்தில்  கடந்த ஐந்து வருடங்களுக்கு (2002) முன்பு புது வீடு கட்ட ஆரம்பித்தோம். பணம்  இல்லாததால் அந்த வேலை பாதியில் நின்றுபோனது. இந்நிலையில்   கடந்த 2004ம்  ஆண்டு பழனி  தாலுகா .கலையம்புத்தூர்வண்டிவாய்க்காலில் இருக்கும் மணி (வாதி) அவர்களின்  மாமனாரான பழனி தாலுகா .கலையம்புத்தூர்,   வண்டிவாய்க்காலில் இருக்கும் ஆறுமுகம்          என்பவர் லேவாதேவி (வட்டிக்குக் கொடுக்கும்)  தொழில்       செய்து   வருவதாக  அறிந்த  நாங்கள், நின்றுபோன கட்டிடத்தைக் கட்டி  முடிப்பதற்காக  தேவைப்பட்ட ரூ.50,000/-த்தை  ஆறுமுகத்திடம் கடனாகக் கேட்டோம். அதற்கு அவர், கடன் வேண்டும் என்றால்,  தனது    மகனான தன்னாசித்துரையின் பெயருக்கு ரூ. 45,000/- க்கு பத்திர  அலுவலகத்திற்கு  வந்து பொறுப்புக்காக    கிரைய   உடன்படிக்கை   பத்திரம்  ஒன்று நாங்கள் எழுதித்தர  வேண்டும் என்றும், மேலும்  பொறுப்புக்காக   எழுதாத   பூர்த்தி  செய்யாத  பிராமிசரி  நோட்டுக்களில் கையொப்பம் கைரேகை செய்து   கொடுக்கக்   கேட்டுக்கொண்டனர். நாங்களும் வேறு வழியின்றி  அவசர நிமித்தம் காரணமாக பொறுப்புக்காக   கடந்த 28.6.2004ம் தேதியன்று ஓர் கிரைய உடன்படிக்கை பத்திரத்தை தன்னாசித்துரை பெயரில் எழுதிக்கொடுத்தோம். மேலும், பொறுப்புக்காக  எழுதாத பூர்த்தி செய்யாத  பிராம்சரி  நோட்டுக்களில் கையொப்பம் மற்றும் கைரேகையை செய்து அவர்களிடம்  கொடுத்தோம். அதில் 2-ம் பிரதிவாதியான எனது கணவர் 1ம் பிரதிவாதியான எனக்காக   ஜாமீன் கையொப்பமிட்டு உள்ளார். 
மேற்படி கிரைய  உடன்படிக்கை  பத்திரத்தின்படி  2 வருட காலக்கெடு    முடிவடைவதாக  27.6.2006 ல் பதிவு கெடு நீடிப்பு பத்திரம் ஒன்றை, தொகை எதுவும்   பெறாமல்   ஒரு வருட  காலத்திற்கு எழுதிக் கொடுத்தோம். அன்றைய தினம் ரூ.2,000/- நாங்கள்  கிரைய  முன்தொகையாக ரொக்கம் பெற்றக்கொண்டதாக எழுதி மேற்படி ரூ.2,000/- பத்திரச் செலவுகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஆறுமுகம் எங்களிடம் தெரிவித்தார்.,   அதன்பின்  ஆறுமுகம் வட்டிக்காக எங்களிடமிருந்து மாதம் தோறும் ரூ.1,800/- பெற்று வந்ததார்கள். 
இந்நிலையில் மேற்படி தன்னாசிதுரையையும்அவரது மாமனார் ஆறுமுகத்தையும்   கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அணுகி நாங்கள் பெற்ற ரூ.45,000/- அசலை திரும்ப செலுத்த 
தயாராக இருப்பதாகவும்அதனை பெற்றுக்கொண்டு கிரைய உடன்படிக்கை பத்திரத்தை ரத்து 
செய்து கொடுக்கும்படி, நாங்கள் கேட்டுக் கொண்டோம்.   பிராம்சரி நோட்டையும்   திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டோம். 
அதற்கு அவர்கள் மேற்படி பத்திரத்தை ரத்து செய்ய மேலும் ரூ.20,000/- நாங்கள்   தரவேண்டும் என்றும் 13.6.2007 ல் பொய்யும் புரட்டுமான வழக்கறிஞர் அறிவிப்பை எங்களுக்கு அனுப்பினார்கள். அதற்கு நாங்கள் 26.6.2007ம் தேதி பதில் அறிவிப்பு நாங்கள் கொடுத்தும், அவர்கள்,  பழனி உரிமையியல் நீதிமன்றத்தில் ..எண். 311/2007 ல் வழக்கு  தொடர்ந்து உள்ளார்கள். அதை  நாங்கள்    எதிர்வாதம்   செய்து  வருகிறோம்.    இதுசம்மந்தமாக  காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருக்கிறோம். 
புகாரிலிருந்து தப்பிக்கவும் தன்னாசித்துரையும்ஆறுமுகம் சேர்ந்து கொண்டு நாங்கள் பொறுப்புக்காக கொடுத்த பிராமிசரி நோட்டை தங்களுக்கு வேண்டிய சாட்சிகள் மூலம்  தங்கள் இஷ்டம் போல் ரூ.50,000/- க்கு பூர்த்தி செய்து அறிவிப்பு அனுப்பியுள்ளார்கள். அதற்கு 3.12.2007ம் தேதி உரிய பதில் அறிவிப்பை நாங்கள் அனுப்பியுள்ளோம். இவ்வழக்கு பிரதிவாதிகளை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
பி.மணி என்பவர் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்புகின்ற வரையில் அவரை எங்களுக்கு யாரென்றே தெரியாது. பின்னர் நாங்கள் அவரைப் பற்றி விசாரித்ததில்  பழனி தாலுகா.கலையம்புத்தூர்  வண்டி  வாய்க்காலில் இருக்கும் ஆறுமுகம்   என்பவரின்   மருமகன்   என்பது எங்களுக்கு தெரிய வந்தது.
வாதி வழக்குத் தொடுத்த காரணம் 
பதில் அறிவிப்பில் கண்டிருக்கும் சங்கதிகள் அனைத்தையும் மறுப்பதாகக் கூறி இந்த வழக்கை வாதி தாக்கல் செய்துள்ளார்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 21.03.2018

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், பழனி.
முன்னிலை: திரு. மா. பாலகுமார், பி.., எம்.எல்.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி, பழனி.
2013ம் ஆண்டு ஜுன் திங்கள் 27 ம் நாள், வியாழக்கிழமை
..எண். 29/2008
திரு. பி. மணி ... வாதி.
/எதிர்/
1. மருதாத்தாள்
2. கே. மாரியப்பன் ... பிரதிவாதிகள்.
 வாதுரைகளின் அடிப்படையில் கீழ்கண்ட வழக்கெழு வினாக்கள் எழுந்துள்ளது.
1. தாவா கடனுறுதிச்சீட்டு தகுந்த பிரதிபிரயோஜனத்திற்காக ஏற்படுத்தப்பட்டதா?
2. பிரதிவாதி தாவா தொகையை செலுத்த கடமைபட்டவரா?
3. வாதிக்கு கிடைக்கத்தக்க வேறு பரிகாரம் என்ன?
இந்த வழக்கில் வாதி தரப்பில் வா.சா.1 ஆக வாதி விசாரிக்கப்பட்டு அவர்மூலமாக 5 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. பிரதிவாதிகள் தரப்பில் மாரியப்பன் (2ம் வாதி) பி.வா.சா..1 ஆக சாட்சி விசாரிக்கப்பட்டு அவர் மூலமாக 8 சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.
வழக்கெழு வினா எண் 1 மற்றும் 2க்கான தீர்வு:
வழக்கானது வாதியால், வாதியிடமிருந்து, பிரதிவாதி தகுந்த பிரதிபிரயோஜனத்தின் பேரில் பெற்றுக்கொண்ட ரூ.50,000/- த்தை நிறைவேற்றக் கொடுத்த கடனுறுதிசீட்டின் பேரில் வட்டியுடன் கூடிய தொகையான ரூ.65,816/-ம் பின்வட்டியும் வசூலாகக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்காகும்.
வழக்கு மாற்றுமுறைச் சட்டத்தின்படியும், வா.சா.1 இல் சொன்னதன்படியும் பிரதிவாதிகள், வாதியிடம் 15.5.2005ம் தேதியில் ரொக்கம் ரூ.50,000/- கடன் பெற்றுக்கொண்டு மாதம் ஒன்றுக்கு ரூ.100/- க்கு ரூ.1.00/- வீதம் வட்டி செலுத்த ஒப்புக்கொண்டு வா.சா..1. கடனுறுதிச்சீட்டை எழுதிக்கொடுத்துள்ளனர் என்றும், பலமுறை கேட்டும் வாதி தொகை செலுத்தாத நிலையில் 3.12.2007ம் தேதி ஒரு பொய்யான பதில் அறிவிப்பு கொடுத்துள்ளதாகவும் மேற்படி பதில் அறிவிப்பில் உள்ள சங்கதிகள் பொய்யானவை என்றும் எனவே வாதிக்கு தொகை பிரதிவாதிகளால் செலுத்திவைக்க வேண்டும் என இந்த தாவா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதி தரப்பு நிலைப்பாடு.
வாதி தனது வழக்கறிஞர் மூலம் கொடுத்த சட்ட அறிவிப்பிற்கு பிரதிவாதிகள் தரப்பில் 3.12.2007ம் தேதியிட்டு கொடுக்கப்பட்ட பதில் அறிவிப்பில், வழக்கின் வாதியின் மாமனாரின் மகனான அதாவது வாதியின் மைத்துனரான ஒரு தன்னாசித்துரை என்பவரிடம் வழக்கின் பிரதிவாதிகள் இருவரும் அவர்கள் சொந்த வீடு கட்டியபோது பணத் தேவை ஏற்பட்டு அதற்காக மேற்படி தன்னாசித்துரையிடம் ரூ.50,000/- க்கு அவருக்கு பாத்தியப்பட்ட சொத்தை விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டு அதன்படி ரூ.45,000,- மட்டும் தொகை கொடுத்துவிட்டு ரூ.5,000/- த்தை பத்திர செலவுக்கென்று எடுத்துக்கொண்டதாகவும், அதுசம்மந்தமாக மேற்படி கிரைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக தன்னாசித்துரையால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் பழனியில் ..எண். 311/2017 தாக்கல் செய்யப்பட்டதாகவும் நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்சொன்ன கிரைய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட தேதியினை பரிசீலனை செய்தபோது 28.6.2004 ம் தேதியில் ஏற்படுத்தப்பட்டு இருப்பதனையும் முன்பணமாக ரூ.45,000/- கொடுத்திருப்பதாகவும், சொத்தின் தோராய மதிப்பு ரூ.45,000/- என்றும், பிரதிவாதி தரப்பு சான்றாவணம் 3 ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ள அசல் வழக்கு எண்.311/07 ன் வழக்கு உரையுடன் சேர்த்து வழக்காவணங்களை ஆய்வு செய்வதன் மூலமாக அறிய முடிகிறது.
8. இந்த தாவா கடனுறுதிச்சீட்டு நிறைவேற்றப்பட்டதனை பரிசீலனை செய்தபோது 15.5.2005ம் தேதியில் நிறைவேற்றப்பட்டதாக அறிய முடிகிறது. மேலும் மேற்சொன்ன தன்னாசித்துரை என்பவர் தான் இந்த வழக்கின் வாதியான மணி என்பவரின் மைத்துனர் என்பதனைப் பொறுத்தோ மேற்சொன்ன 28.6.2004ம் தேதியிட்ட கிரைய உடன்படிக்கையின்போது கொடுக்கப்பட்ட கடனுறுதிச்சீட்டை பயன்படுத்தி இந்த தாவா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதனைப் பொறுத்தோ தெளிவான சாட்சியம் மற்றும் சான்றாவணமோ பிரதிவாதிகள் தரப்பில் முன்நிறுத்தப்பட்டுள்ளதா? என பரிசீலனை செய்யும்போது வா.சா.1 தனது குறுக்கு விசாரணையில் என்னுடைய மாமனாருக்கு ஆண் வாரிசுகள் கிடையாதென்று மறுத்து சாட்சியமளித்துள்ளார். மேலும் மேற்சொன்ன ..எண். 311/2017 வழக்கு நடவடிக்கைகளுக்கான வழக்குமூலம் ஏற்பட்ட தேதியும், இந்த தாவாவிற்குண்டான கடனுறுதிச்சீட்டு சம்மந்தப்பட்ட வழக்குமூலம் வேறொரு தேதியாகவும் இருப்பதனை வழக்காவணங்களை பரிசீலனை செய்வதன் வாயிலாக அறிய முடிகிறது. எனவே மேற்சொன்ன வாதியின் மாமனாருடன் ஏற்பட்ட வரவு, செலவு உத்தரவாதத்திற்கு பொறுப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதென்ற நிலைப்பாடு மேற்கொள்ளும் பிரதிவாதிகள் அதனை அவரது தரப்பு சாட்சியம் மற்றும் சான்றாவணம் வாயிலாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதா? என்று பரிசீலனை செய்யும்போது தெளிவான சாட்சியமோ சான்றாவணமோ பிரதிவாதிகள் தரப்பில் எதுவும் முன்னிறுத்தப்படவில்லை. மாறாக அசல் வழக்கில் 311/2017 தனிப்பட்ட நடவடிக்கை என்பதும், இந்த வழக்கு நடவடிக்கை தனிப்பட்ட நடவடிக்கை என்பதும், முன்னர் கூறப்பட்ட ..எண். 311/2007 நடவடிக்கைகள் நிகழ்வுகாலம் வேறாகவும், இந்த நடவடிக்கைகள் நிகழ்வுகாலம் வேறாகவும் இருப்பது பரிசீலனையின் வாயிலாக அறிய முடிகிறது. வாதி தரப்பு கற்றறிந்த வழக்கறிஞர் தனது தரப்பில் கீழ்கண்ட முன்தீர்ப்புரையை சுட்டிக்காட்டி வாதிட்டார். அதன்படி
"1997 L.W.843
MADRAS HIGH COURT
4th February, 1997 / Civil Revision
Petition No. 819 of 1992.
T.N. Vallinayagam, J.
P. Talamalai Chetty /Vs/ Rathinasamy.
Negotiable Instruments Act, S.20 – Defendant admitting that he signed and delivered blank promissory note – Effect of S.20 – Dismissal of suit, held, not proper, and suit decreed.
" The instrument may be wholly blank or incomplete in any particular, in either case, the holder has the authority to make or complete the instrument as a negotiable one".
"The authority implied by a signature to a blank instrument is so wide that the party so signing is bound to a holder in due course even though the holder was authorized to fill for a certain amount, ad he in face inserts a greater amount, but it is necessary that the sum ought not to exceed the amount covered by the stamp".
பிரதிவாதி பதிவு செய்யப்படாத புரோநோட்டில் கையொப்பம் செய்து கொடுத்ததாக ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 20 -ன்படி மேற்சொன்ன கடனுறுதிச்சீட்டின் செல்லுதன்மை குறித்து சொல்லும்போது கடனுறுதிச்சீட்டை கையொப்பம் செய்த நபர், மேற்படி கடன் தொகையை செலுத்த கடமைபட்டவர் எனவும் குறிப்பிட்டு தாவா அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்புரைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி வழக்கின் பிரதிவாதி கடனுறுதிச்சீட்டிலுள்ள கையெழுத்து தனது மனைவியின் பெயர் என்றும் குறுக்கு விசாரணையில் 2-ம் பிரதிவாதி ஒப்புக்கொண்டு இருப்பதனை சுட்டிக்காட்டி, எனவே தனது கையொப்பத்தை ஒப்புக்கொள்ளும் பிரதிவாதிகள் தாவா கடனுறுதிச்சீட்டுத் தொகையை செலுத்த கடப்பாடுள்ளவர்கள் என்று வாதிட்டார். பி.வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்ட வழக்கின் 2ம்பிரதிவாதியின் சாட்சியத்தை பரிசீலிக்கும்போது கடனுறுதிச்சீட்டிலுள்ள தன்னுடைய கையெழுத்தையும் தன் மனைவியின் கையெழுத்தையும் ஒப்புக்கொண்டு சாட்சியம் அளித்து மேற்சொன்ன தீர்ப்புரை வழக்கின் பொருண்மைக்கு பொருந்துவதாகவே இந்நீதிமன்றம் கருதுகின்றது.
வாதி தரப்பு கற்றறிந்த வழக்கிறஞர் கீழ்கண்ட மற்றொரு முன்தீர்ப்புரையை சுட்டிக்காட்டி வாதிட்டார்.
'2002 – 1 – l.w. 541.
MADRAS HIGH COURT
23rd April, 2001/appeal No.1028 of 1986 (Appeal against the
decree of the Court of the subordinate Judge, Sankari in
Original Suit No.2-6/1985 dated 10.2.1986).
N.V. BALASUBRAMANIAN, J.Shanmugham
/Vs/
S. Rangasamy Gounder
Negotiable Instruments Act, Ss.118, 20 – Once execution of promissory note is admitted, the rule of presumption in S.118 operates – Burden shifts from Plaintiff to other side – weight to be attached to the recitals will vary according to circumstances – Plea by defendant that the recital as to consideration was not filled up, assuming that it is true, would only result in holding the document as inchoate stamped of the promissory note to make or complete it."
மேற்சொன்ன தீர்ப்புரையில் மாற்றுமுறை ஆவணச்சட்டம் பிரிவு 138 இன் கீழ் கடனுறுதிச்சீட்டின் நிறைவேற்றத்தை பொறுத்து ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் பிரிவு 138 இல் அனுமானம் உள்ளதைப் பொறுத்து குறிப்பிடப்பட்டுள்ள அவ்வாறு நிரூபிக்கும் பொறுப்பு வாதியிடமிருந்து பிரதிவாதிக்கு மாற்றம் செய்யப்படுகின்றதென்றும் எனவே அதன் அடிப்படையில் பரிசீலனை செய்யும்போதும் பிரதிவாதிக்கு இந்த கடனுறுதிச்சீட்டு நிறைவேற்றம் குறித்து ஒப்புக்கொண்டுள்ள நிலையில் கடனுறுதிச்சீட்டு தொகையும் செலுத்த கடப்பாடுடையவர் என்று வாதிட்டார்.
எனவே மேற்சொன்ன 2 முன்தீர்ப்புரைகளின் அடிப்படையில் பரிசீலனை செய்யும்போதும் பிரதிவாதிகள் தரப்பில் மேற்கொண்டுள்ள ..எண்.311/2007 வழக்கின் நடவடிக்கையின்போது உருவாக்கப்பட்ட பிரதிவாதி ஆவணங்களை சேர்த்து இந்த வழக்காவணம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை நிரூபணம் செய்யாத நிலையில் வாதி இந்த தாவாவில் அவர் கோரியுள்ளவாறு தொகையை பெற உரிமையுடையவர் என்றே தீர்மானிக்கப்பட வேண்டியிருக்கின்றது.
முடிவாக வழக்கு எண் 1 மற்றும் 2 பொறுத்தமட்டில் தாவா கடனுறுதிச்சீட்டு தகுந்த பிரதிபிரயோஜனத்தின் பேரில் ஏற்படுத்தப்பட்டதென்றும் பிரதிவாதிகள் தாவா கடனுறுதித் தொகையை திருப்பி செலுத்த கடமைபட்டவர் என்றும் தீர்வு காணப்படுகின்றது.
வழக்கெழு வினா எண் 3க்கு தீர்வு : வாதிக்கு கிடைக்கத்தக்க இதர பரிகாரம் இல்லை என்று தீர்வு காணப்படுகின்றது.
முடிவாக இந்த தாவா செலவு தொகையுடன் அனுமதிக்கப்படுகின்றது. பிரதிவாதிகள் வாதிக்கு தாவா தொகையான ரூ.65,816/- ம் அசல் ரூ.50,000/- க்கு பிராது தாக்கல் செய்த தேதியிலிருந்து தீர்ப்பாணைத் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடனும், தீர்ப்பாணைத் தேதியிலிருந்து தொகை முழுவதும் வசூலாகும் தேதி வரை 6% வட்டியுடனும் ,செலவுத்தொகையுடனும் சேர்த்து செலுத்த வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கப்படுகின்றது.
நன்றி http://www.tamiljudgements.org/ 

Friday, March 16, 2018

பி.எஃப் பேலன்ஸ் விவரங்களை செல்போன் மூலமாகப் பெற

பி.எஃப். பேலன்ஸ் விவரங்களை செல்போன் மூலமாகப் பெற என்ன செய்ய வேண்டும்?
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எஃப். கணக்கை வைத்துள்ளவர்கள் எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமாக பிஎப் பேலன்ஸ் விவரங்களை தற்போது பிராந்திய மொழிகளிலேயே எளிதாக பெற முடியும்.  இதற்கெல்லாம் ஸ்மார்ட்போன் வேண்டுமே என்று நீங்கள்  கவலை அடைய வேண்டாம். சாதாரண போனிலேயே இதனைப் பெறலாம். 

Universal Account Number - UAN

தங்களுடைய செல்போன் எண், ஆதார் எண் ஆகிய சுய விபரங்களை அளித்து  www.epfindia.gov.in  இணையதளத்தில், பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் 011-22901406 என்ற தொலைப்பேசி எண்ணை அழைப்பதன் (மிஸ்டு கால் கொடுப்பதன்) மூலமாக பிஎப் பேலன்ஸ் விவரங்களைப் பெறலாம். ஆனால்,   இந்த சேவையினை பெறுவதற்கு பி.எஃப். கணக்கு வைத்துள்ள தொழிலாளர்கள் தங்களது யூஏஎண் எண்ணை https://unifiedportal-mem.epfindia.gov.in/ memberinterface/ என்ற இணைப்பிற்குச் சென்று, முதலில் ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டியது அவசியம்..
Universal Account Number - UAN எண்ணை ஆக்டிவேட் செய்ய ....
மேற்கண்ட இணையதளத்திற்குச் சென்று தொழிலாளர்கள் தங்களது யூஏஎன் எண் அல்லது பி.எஃப். உறுப்பினர் ஐடி அல்லது ஆதார் எண் அல்லது பான்கார்டு எண்ணுடன் தங்களது பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அளிக்க வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாக பி.எஃப். பேலன்ஸ் விவரங்களை பெறுவது எப்படி?
யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்த பிறகு 7738299899 என்ற மொபைல் எண்ணிற்கு EPFOHO UAN Number என டைப் செய்து அனுப்புவதன் மூலம் பி.எப். பேலன்ஸ் விவரங்களை எஸ்எம்எஸ் வழியாகவும் தொழிலாளர்கள் தங்கள் மொபைல் எண்ணில் பெறலாம்.
தமிழில் பி.எஃப். பேலன்ஸ் விவரங்களை பெற என்ன செய்ய வேண்டும்?
பி.எஃப். சம்பந்தமான விவரங்களைத் தமிழ் ஆங்கிலம், இந்திய, பஞ்சாபி, மராத்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம், பெங்காலி என 10 பிராந்திய மொழிகளில் பெற முடியும். தமிழில் பெற "EPFOHO UAN Number TAM" என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம், தமிழில் தொழிலாளர்கள் பி.எஃப். பேலன்ஸ் குறித்த விவரங்களைப் பெறலாம்.
ஆனால், எஸ்எம்எஸ் சேவையினை தொழிலாளர்களின் யூஏஎன் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணின் வழியாக மட்டுமே பெற முடியும். மிஸ்டு கால் மற்றும் SMS போன்ற வழிகள் மட்டுமல்லாமல் உமங் செயலி மூலமாகவும் தொழிலாளர்கள் பி.எஃப். பேலன்ஸ் குறித்த விவரங்களைப் பெறலாம்.
***********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.03.2018