disalbe Right click

Friday, March 23, 2018

மதம் மாறுவதால் வாரிசு உரிமையை இழக்க நேருமா?

பழைய காலங்களிலிருந்த நிலைப்படி ஒருவர் வேறு மதத்திற்கு மாறுவதன் மூலம், தான் பிறந்த ஜாதியை விட்டு விலகிவிட்டால், அதன் காரணமாக மரபுரிமையின் கீழ் வாரிசாக தான் அடைய இருக்கும் சொத்துக்களை இழந்து விடுவார்.
ஆனால் 1850 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஜாதிக் குறைபாடுகளை போக்கும் சட்டத்தின் மூலம் இந்த சொத்துரிமையை இழக்கும் நிலைமைக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது.
மேற்படி ஜாதிக் குறைபாடுகளை நீக்கும் சட்டம் 1850 ( Caste Disabilities Removal Act 1850) ன், பிரிவு 1ன்படி, ஒரு நபர் தன்ன மதத்தை விட்டு விலகி வேறு மதத்திற்கு மாறியதால், அவர் முன்பிருந்த மதத்தின் படி அவருக்கிருந்த மரபுரிமைப்படி வாரிசாகப் பெறும் சொத்துரிமையை அவர் இழக்க நேரிடும் என நம் நாட்டில் ஏதாவது சட்டமோ அல்லது வழக்கமோ இருக்குமானால், அந்த சட்டத்தை அல்லது வழக்கத்தை எந்த நீதிமன்றத்தாலும் அமல்படுத்த முடியாது என்று கூறுகிறது.
சுருக்கமாக சொன்னால் ஜாதிக் குறைபாடுகளை நீக்கும் சட்டம் தன்னுடைய மதத்தை விட்டு விலகியவரை பாதுகாக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் " E. ரமேஷ் மற்றுமொருவர் Vs P. ரஜினி மற்றும் இருவர் (2002-MLJ-216)" என்ற வழக்கில், ஜாதிக் குறைபாடுகளை போக்கும் சட்டத்தின் பிரிவு 1ன்படி, ஒரு இந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதால், அவருக்கு தனது சொத்தை இழந்து விடுவார் என்பது தவறு என்று தீர்ப்பு கூறியுள்ளது.
ஆனால் இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 26 ஆனது இதை ஏற்கவில்லை.
இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 26 என்ன சொல்கிறது?
இந்த சட்டம் துவங்கும் முன்போ அல்லது துவங்கிய பிறகோ, ஒரு இந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதன் மூலம் இந்து அல்லாமல் போய்விடுகிறார். அவ்வாறு அவர் மதம் மாறிய பின், அவரது குழந்தைகளும், அடுத்த வாரிசுகளும், அவரது உறவினர்களிடமிருந்து வாரிசாக சொத்துக்கள் பெறும் உரிமையை இழந்துவிடுவர். ஆனால் அவர்கள் அந்த சொத்துக்களை வாரிசாக பெறும்போது இந்துவாக இருந்தால் அவ்வாறு உரிமையை இழக்க மாட்டார்கள்.
மேற்படி பிரிவை கவனமாக படித்து பார்த்தால் அந்த பிரிவு கூறுவது நன்றாக புரியும். அதாவது மதம் மாறியவருடைய வாரிசுகளுக்கு, அதிலும் அவர் மதம் மாறிய பின் பிறந்த குழந்தைகளும், அவர்களது வாரிசுகளும் மதம் மாறியவரின் உறவினர்களுக்கு வாரிசாகும் தகுதியை இழக்கிறார்கள். எப்படி இருந்தாலும் மதம் மாறியவரை பொறுத்தவரை, அவர் பழைய மதத்தை சேர்ந்த உறவினரின் வாரிசாக பெறும் உரிமையை பற்றி இந்த பிரிவு எதுவும் கூறவில்லை. அவருக்கு பிறக்கும் குழந்தைகள் மற்றும் அடுத்த வாரிசுகளை பற்றி மட்டும் தான் கூறுகிறது.
ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் இதனை உறுதி செய்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
"ஷாபனா கான் Vs சுலோக்சனா மற்றும் பலர் (2008-2-ALDB-18)" என்ற வழக்கில், மதம் மாறுவதால் வாரிசாகும் தகுதியை இழப்பது என்பது சம்பந்தப்பட்ட இந்துவிற்கும் அவர் மதம் மாறிய பின் பிறந்த குழந்தைகளுக்கும், அவர்களது வழித்தோன்றல்களுக்கும் தான் பொருந்துமே தவிர, மதம் மாறிய நபருக்கு பொருந்தாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.


நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan

Thursday, March 22, 2018

உடனடி மணியார்டர் பற்றி.....

பால் அலுவலகங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் வசதி நமக்கு ஏற்கனவே தெரியும். இதன் மூலம் அனுப்புகின்ற பணம் போய்ச் சேர்வதற்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை ஆகும். இதிலேயே தந்தி மணி ஆர்டர் என்ற சேவையில் நாம் விரைவாக மற்றவருக்குப் பணம் அனுப்ப முடியும்.. இதனால். ஒரு நாளிலேயே பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இணையதளம் மூலமாக.....
இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை IMO (Instant Money Order) இப்போது தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இரண்டு நபர்கள் இண்டர்நெட் மூலம் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சர்வீசில் 10 நிமிடத்திலேயே பணம் அனுப்பவும். பெறவும் முடியும்.
எவ்வளவு அனுப்ப முடியும்?
குறைந்த கட்டணத்தில் ரூ.50 ஆயிரம் வரை இணைய தளம் வழியாக பணம் அனுப்பலாம். பணம் அனுப்ப நினைத்து, அணுகும் நபருக்கு அஞ்சல் நிலையங்களில் உள்ள சேவை மையங்களில் பணத்தைச் செலுத்திய பிறகு, அவரிடம் ரகசியமாக 16 இலக்க எண் ஒன்று வழங்கப்படும். அந்த எண்ணை வழங்குபவருக்குக் கூட அந்த எண் எது என்பது தெரியாது. அவர் யாருக்கு பணம் அனுப்புகிறாரோ அவருக்கு அந்த எண்ணை மெயில் அல்லது செல்போன் மூலமாக அந்த எண்ணை தெரிவிக்க வேண்டும்.
பணத்தைப் பெறுபவர் தன் அடையாள அட்டை மற்றும் 16 இலக்க ரகசிய எண்ணை, தபால் நிலையங்களில் காண்பித்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த சேவையின் மூலம் அனுப்புவதும் பெறுவதும் மிகவும் எளிதானது.
கட்டணம் எவ்வளவு?
இந்த சேவையில் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரைக்கும் உடனடி மணியார்டர் அனுப்ப ரூ.100 கட்டணம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ரூ.110 கட்டணம். அதற்கு மேல் ரூ.50 ஆயிரம் வரை ரூ.120 கட்டணம் வசூலிக்கப்படுகிறது
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.03.2018

Wednesday, March 21, 2018

புரோ நோட் சம்பந்தமான வழக்கு

கடனுறுதிச் சீட்டை திரும்பப்பெற உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்!
மொதல்ல்ல வாதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம், வாங்க!
என்னுடைய பெயர் மாதவன். சீர்காழி நகரத்தில் வசித்து வருகிறேன். பிரதிவாதி சௌந்திரராஜன் அவர்களும் சீர்காழி நகரத்தில் வசித்து வந்தார். அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 10.10.2010ம் ஆண்டில் தன்னுடைய குடும்ப செலவுகளுக்காக மாதவன் என்ற என்னிடம் 80,000/- ரூபாய் கடனாக பெற்றார். மாதம் ஒன்றுக்கு 100/-ரூபாய்க்கு 1/-ரூபாய் வட்டி வீதம் செலுத்திவருவதாகவும், அசலையும் வட்டியையும் சேர்த்து நான் கேட்கும்போது என்னிடத்திலோ அல்லது நான் அதிகாரம் வழங்கியவரிடத்திலோ கொடுப்பதாக அவர் என்னிடம் ஒப்புக் கொண்டார். அதற்கு ஆதாரமாக ஒரு புரோ நோட்டிலும் அதனை எழுதித் தந்தார். ஆனால், வட்டியையோ, முதலையோ அவர் எனக்கு செலுத்தவில்லை. இந்த சூழ்நிலையில் அவர் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு வேலை மாறுதல் செய்யப்பட்டார். என்னுடைய வழக்கறிஞர் மூலமாக ஒரு அறிவிப்பை அவரது புதுக்கோட்டை முகவரிக்கு நான் கடந்த 08.10.2011 அன்று அனுப்பி வைத்தேன். ஆனால், அவர் அதனை பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டார். அவருக்கு சொந்தமாக மூன்று லட்சம் ரூபாய் பெறுமான வீடு உள்ளது. அவரது வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. ஆகவே கடன் நிவாரணச் சட்டப் பலன்கள் அவருக்கு கிடைக்கக் கூடியதல்ல. எனவே, பிரதிவாதி சௌந்திரராஜன் அவர்களிடமிருந்து தாவாத் தொகை 92,666/- ரூபாயை பின்வட்டி மற்றும் வழக்கு செலவுத்தொகையுடன் பெற்றுத்தர இந்த வழக்கை நான் தாக்கல் செய்துள்ளேன்.
பிரதிவாதி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம், வாங்க!
என்னுடைய பெயர் சௌந்திரராஜன். சீர்காழி நகரத்தில் வசித்து வந்தேன். . அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தேன். அந்த ஊரில் உள்ள மாதவன் என்பவரிடம் கடந்த 2007ம் வருடத்தில் 80,000/- ரூபாய் கடனாக பெற்றிருந்தேன். அதனை தவணை முறையில் 5,000/- ரூபாய் மற்றும் 10,000/- ரூபாய்களாக கொடுத்து அடைத்து விடுவதாகத்தான் கூறி அந்தக் கடனை பெற்றிருந்தேன். அந்தத் தொகையை அவரிடமிருந்து பெறும்பொழுது அவரிடம் ஏதும் நிரப்பப்படாத 2 புரோ நோட்டில் கையெழுத்துப் போட்டு கொடுத்திருந்தேன். அதில் சாட்சிக் கையெழுத்து யாரும் போடவில்லை. அந்த புரோ நோட்டில் இப்போது தேதி, தொகை மற்றும் சாட்சிகள் கையெழுத்துகளை நிரப்பி மோசடியாக இந்த வழக்கை மாதவன் தாக்கல் செய்துள்ளார் . அவரது உறவினர் துரைப்பாண்டி என்பவரிடம் எனது கையெழுத்து உள்ள மற்றோரு புரோ நோட்டைக் கொடுத்து அவர் மூலமாகவும் இது போன்ற ஒரு வழக்கை தொடுத்துள்ளார். வழக்கறிஞர் அறிவிப்பு எனக்கு வரவே இல்லை. நான் அலுவலகத்திலேயே இருந்து பணிபுரிபவன் அல்ல. நகராட்சியின் பல இடங்களுக்குச் சென்று மேற்பார்வை இடும் பணி செய்து வருகிறேன். சொசைட்டியில் லோன் போட்டு  கடந்த 06.10.2010 அன்று மாதவனிடம் 60,000/- ரூபாய் செலுத்தி அசலில் கழித்துவிட்டேன். அதனை வரவு வைத்து தருமாறு மாதவனிடம் கேட்டதற்கு புரோ நோட்டை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன், பிறகு வரவு வைத்து விடுகிறேன் என்று மாதவன் கூறியதை நம்பி பேசாமல் இருந்துவிட்டேன். இன்னும் நான் 20,000/- ரூபாய்தான் அசலில் தரவேண்டும்..வாங்கிய கடனுக்குக்காக வட்டியாக 4% வீதம் ஏற்கனவே  45,000/- ரூபாய் செலுத்தியுள்ளேன். நான் 2007ல் வாங்கிய கடன் இது. ஆகையால் காலாவதி ஆகிவிட்டது. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும். 
பிரதிவாதி செய்த தவறுகள்
பணம் திருப்பிக் கொடுத்ததற்கான ஆதாரம் ஏற்படுத்தவில்லை.
தான் கொடுத்த பணத்தை புரோ நோட்டில் மாதவன் வரவு வைக்கவில்லை என்பது தெரிந்திருந்தும், அதனை வரவு வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க முடியாததால் தீர்ப்பு பிரதிவாதிக்கு எதிரானது. 
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 21.03.2018 
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். சீர்காழி
முன்னிலை : திரு . செல்வராஜ்.¸ B.C.A., B.L.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி. சீர்காழி
2017-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 4-ம் நாள் புதன்கிழமை திருவள்ளுவராண்டு 2047. துர்முகி வருடம் மார்கழித்திங்கள் 20-ம்நாள்
அசல் வழக்கு எண். 38/2012
மாதவன் வாதி
.....எதிராக.....
சௌந்திரராஜன் பிரதிவாதி
வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
'வாதியிடம் 2007-ம் ஆண்டில்தான் பிரதிவாதி கடன் பெற்றார் என்பதையும். அந்தக்கடனை 2010-ம் ஆண்டில் வாதிக்கு பிரதிவாதி திருப்பிச் செலுத்திவிட்டார் என்பதையும் நிரூபணம் செய்ய வேண்டிய பொறுப்பு பிரதிவாதியையே சார்ந்தது ஆனால் பிரதிவாதி அவ்வாறு எவ்வித சாட்சியங்களையும். ஆவணங்களையும் தாக்கல் செய்து நிரூபணம் செய்யவில்லை. வாதியிடம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தியபின் கடனுறுதிச்சீட்டை திருப்பிக் கொடுக்கும்படி வாதியிடம் கேட்டும் அதனை வாதி திருப்பிக்கொடுக்கவில்லை என்று கூறும் பிரதிவாதி வாதியிடம் உள்ள கடனுறுதிச் சீட்டை திரும்பப்பெற உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே வாதியிடம் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்திவிட்டதாக பிரதிவாதி கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை. வாதிதரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முன்தீர்ப்பு நெறியில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பின்வருமாறு கூறியுள்ளது:-
“ CDJ - 2011 - MHC - 5091 , Siva Mohan -Vs- Jayabalan “
“ 5............... Further, it is highly unbelievable that the promissory note executed in the year 1992 was misused in the year 2001 as alleged by the appellant and no notice was issued by the appellant to the respondent calling upon the respondent to return the promissory note executed by him in the year 1992 after discharging the promissory note amount ...@
மேற்கண்ட முன்தீர்ப்பு நெறியின்படி வாதியிடம் பிரதிவாதி 2007-ம் ஆண்டில் கடன் பெற்றுக்கொண்டு கடனுறுதிசீட்டு எழுதிக்கொடுத்திருந்தால் 2010-ம் ஆண்டில் கடன் தொகையை திருப்பிச் செலுத்தியதாக கூறப்படும் தேதிக்கு பின் உடனடியாக பிரதிவாதி வாதிக்கு அறிவிப்பு அனுப்பி கடனுறுதிச்சீடடை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டிருக்க வெண்டும். அவ்வாறு பிரதிவாதி அறிவிப்பு அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை. வாதியிடம் பிரதிவாதி 10.10.2010 அன்று பெற்ற கடன் தொகையான ரூ.80.000/-த்தை பிரதிவாதி திருப்பிச் செலுத்தாததால் அத்தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும்படி அறிவிப்பு அனுப்பியுள்ளதை வாதி வா.சா..2 ஆவணம் மூலம் நிரூபணம் செய்துள்ளார். வாதியிடம் பெற்ற கடன் தொகையை பிரதிவாதி திருப்பிச் செலுத்தவிலலை என்பதை உரிய ஆவண வாய்மொழி சாட்சியங்கள்மூலம் நிரூபணம் செய்துள்ள வாதி தாவா தொகையை பிரதிவாதியிடமிருந்து பெறுவதற்கு உரிமை உடையவர் என்று இந்நீதிமன்றம் முடிவு செய்து எழுவினா-2-க்கு தீர்வு காண்கிறது.
நன்றி : http://www.tamiljudgements.org