disalbe Right click

Sunday, April 8, 2018

அரசு ஊழியர் மீது வழக்கு!

அரசு ஊழியர்கள் யார்?
பொதுமக்களுக்கு இவர்கள் அதிகாரிகளா? அல்லது எஜமானர்களா?
இவர்களின் பணிதான் என்ன?
இவர்களின் கடமை தவறிய செயல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை, சட்ட விரோத காரியங்களை தட்டிக் கேட்பது எப்படி?
இதுபோன்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழாமல் இருக்க வாய்ப்பே இல்லை.
ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.
மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணி செய்வதற்காக பலதரப்பட்ட அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே!
மக்கள்தான் இவர்களுக்கு எஜமானர்கள்
மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
பணி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
அரசு அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களுக்கு பணிபுரியும் ஊழியர்கள்தானே தவிர அரசர்கள் அல்ல.
ஆனால் உண்மையில் அரசு ஊழியர்கள் எப்படி பொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் தங்களை அரசர்கள் போல நினைத்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் உள்ளது போல நினைத்துக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.
உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், நியாயத்தை கேட்கும் பொதுமக்கள் என அனைவர் மீதும், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக பொய் புகார் அளித்து காவல்துறையினர் உதவியுடன் வழக்கு பதிவு செய்கின்றனர்.
அரசு வழங்கும் ஊதியங்களையும், சலுகைகளையும் பெற்றுக் கொண்டு சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்கள் ஏழை, எளிய மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை கொள்வதில்லை. பொதுமக்களிடம் கையேந்தி லஞ்சம் என்னும் பிச்சை எடுக்கின்றனர்.
எத்தனையோ சட்டங்களின் இருந்தும் இதுபோன்ற அரசு ஊழியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? என்பதை யோசித்து பாரத்தால் அற்ப காரணங்களால் தான் தப்பி விடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக....
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 01.08.2014 ஆம் தேதி ரிட் மனு எண். 20527/2014 ல் உத்தரவு பிறப்பித்தது.
மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் 21.09.2015 ஆம் தேதி அரசாணை எண். 99 வெளியிட்டது.
ஆனால் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவையோ அல்லது அரசாணை எண் 99 யையோ  யாராவது மதிக்கிறார்களா?
அப்படி என்றால் இவர்களை எப்படி தண்டிப்பது?
மக்கள் பணி செய்யாத, செய்ய தவறுகிற அரசு ஊழியர்கள் அனைவரும் கடமை தவறிய கேடு கெட்ட அலுவலர்களே என்று சட்டம் கூறுகிறது. மேலும் இதுபோன்ற அலுவலர்களுக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 கூறுகிறது.
ஆனால் தண்டனை பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அற்ப காரணங்களின் அடிப்படையில் தான் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள். சட்டத்தில் உள்ள அந்த ஓட்டை என்ன?
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 தான் அந்த ஓட்டை.
Cr. P.C. sec 197 - Prosecution of judges and public servants
பொது ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் மத்திய அல்லது மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் கு. வி. மு. பிரிவு 197 கூறுகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 166(), 166(), 354, 354(), 354(), 354(), 370, 375, 376, 376(), 376(), 376(), 509 போன்ற குற்றங்களை ஒரு அரசு ஊழியர் செய்தால் அதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஊழல், பொய் ஆவணம் தயாரித்தல், பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக வழக்கு தொடரவும் அனுமதி பெற தேவையில்லை.
அரசு ஊழியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை பார்த்தால், அநேகமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 காரணம் காட்டி தப்பி சென்றிருப்பதாகவே துலங்குகிறது.
எனவே ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்யத் தவறினால் அவர்மீது வழக்கு தொடர அந்தந்த துறை செயலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டு பதிவுத் தபாலில் அனுப்பி அதன்பிறகு தான் குற்ற வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தவறு செய்த அதிகாரி ஈசியாக தப்பி விடுவார்.

விழிப்புணர்வுக்காக இந்த பதிவை பதிவேற்றம் செய்துள்ளேன்.  
நன்றி : வழக்கறிஞரும் எனது நண்பருமான  Dhanesh Balamurugan அவர்களுக்கு.

அரசு ஊழியர் மீது வழக்குத் தொடர்வது குறித்த செய்தி - தி இந்து தமிழ் நாளிதழ் - 09.10.2018



************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 08.04.2018 


Saturday, April 7, 2018

காவல் வட்ட ஆய்வாளருக்கு சட்ட அறிவிப்பு

வழக்கின் சாராம்சம் என்ன?
நான் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகள் 19.07.2015 அன்று நடைபெற்ற மகாசபைக் கூட்டம் குறித்து, போலி ஆவணம் தயாரித்துள்ளது பற்றியும், அதனை உண்மையானது போல பயன்படுத்திக் கொண்டிருப்பது பற்றியும், தகுந்த ஆவண சாட்சியங்கள் மூலம் எடுத்துக் கூறி, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய திருத்தங்கல் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ்,  பார்ட்டி இன் பெர்சன் ஆக, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சிவகாசியில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தேன். நீதிமன்ற நடுவர் அவர்கள், எனது குற்றச்சாட்டுகள் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்கள். 
போலி ஆவணம் பற்றி.....
ஷை சங்க நிர்வாகிகள் தயாரித்த போலி ஆவணத்தில் பல நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கையெழுத்துக்கள் செய்திருந்தார்கள். கூட்டத்திற்கு வராத உறுப்பினர்களின் பெயர்கள் வரிசையாக அந்த (கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடு) போலி ஆவணத்தில் எழுதப்பட்டு இருந்தது. மேலோட்டமாக நான் ஆராய்ந்து பார்த்ததிலேயே 40 கையெழுத்துக்கள் போலியாக இருந்தது.  அந்த போலி கையெழுத்துகளின் தொகுப்பு தங்களது பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



திருத்தங்கல் காவல் வட்ட ஆய்வாளர் அவர்களின் அறிக்கை 
திருத்தங்கல் வட்டக் காவல் ஆய்வாளர் அவர்கள் என்னிடமும், அவர்களிடமும் விசாரணை நடத்தினார். ஏற்கனவே என்னிடம் உள்ள ஆவணங்களை நான் கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டதால், நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,  அந்த மகாசபைக் கூட்டத்தில் ஆண்டு வரவு செலவு கணக்குகள் அடங்கிய (பேலன்ஸ் ஷீட்) ஒரு ஆவணம் கிடைத்தது. மொத்தமுள்ள 7 தாள்களில், நிர்வாகிகள் கையெழுத்து போட வேண்டிய 6 தாள்களில் ஒரு இடத்தில்கூட, நிர்வாகிகளின் கையொப்பம் இல்லாமல் அது இருந்தது.
சங்கத்தின் பைலா சொல்வது என்ன?
எங்களது சங்க பைலாவை பொருத்த அளவில், ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து கொடுத்த பிறகு, சங்க நிர்வாகிகள் அதனை நிர்வாக சபையில் வைத்து ஒப்புதல் பெற்று, அதன்பிறகு நடைபெறுகின்ற மகாசபையில் வைத்து உறுப்பினர்களிடையே அந்த வரவு செலவுகள் குறித்து விவாதம் செய்து அவர்களின் ஒப்புதல் பெற்று தீர்மானம் இயற்றப்பட வேண்டும். அதன் பிறகு அந்த ஆவணங்கள் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
மாவட்டப் பதிவாளர் அவர்களும் உடந்தை
மேற்கண்ட நடவடிக்கைகளில் அந்த வரவு செலவு அறிக்கை (சுமார் ஒன்பது கோடி ரூபாய்) நிர்வாகிகளின் கையெழுத்து இல்லாமலேயே பயணித்திருக்கிறது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப் பிரிவு மற்றும் விதிகளின்படி இது மோசடி குற்றமாகும். இதனை கண்டு கொள்ளாமல் மாவட்டப்பதிவாளர் அவர்களும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்திற்கு எதிராக, சட்டவிரோதமாக  அதனை கோர்வை செய்துள்ளார்.
குற்றம் சம்பந்தமான ஆவணங்களை வாங்க ஆய்வாளர் மறுப்பு
இதனை வட்டக் காவல் ஆய்வாளரிடம் தெரிவித்து அதன் நகல்களை சமர்ப்பித்தேன் அவர் அதனை வாங்க மறுத்ததால் அதனை பதிவுத்தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதனை பெற்றுக் கொண்ட அவர், சங்க நிர்வாகிகளை காப்பாற்ற வேண்டும் என்ற தவறான நோக்கத்தோடு, குற்றங்களை மறைத்து, தனது ஆய்வு அறிக்கையை உருவாக்கி, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் நகல்கள் கீழே காணலாம்.




இந்த அறிக்கையில் வட்ட ஆய்வாளர் அவர்கள் என்னிடமிருந்து கடிதம் மூலமாக பெற்றுக் கொண்ட ஆண்டு வரவு செலவு அறிக்கையினைப் பற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. அதனை பெற்றுக் கொண்டதாகக் கூட அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. 
சங்க நிர்வாகிகள் மூன்று பேர்களிடம் மட்டுமே இரண்டு கையெழுத்து போட்டது பற்றி விசாரித்துள்ளார். அவர்களும் இரண்டு கையெழுத்துகள் போட்டதை ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், குற்றம் நடைபெற்றுள்ளது, அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யலாம் என்பதை நடுவரிடம், வட்ட ஆய்வாளர் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், குற்றம் கூறிய என்மீதே குற்றம் சுமத்தியிருக்கிறார். உண்மைக்குப் புறம்பான சங்கதியை தாக்கல் செய்துள்ளதாக தனது அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.  
குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற எழுதப்பட்ட காவல் ஆய்வு அறிக்கை
என்னால் ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற காவல் ஆய்வாளர் அவர்கள், செய்யப்பட்ட குற்றத்தை மறைத்து, பல பொய்யான தகவல்களை இணைத்து, குற்றம் கூறிய என்மீதே குற்றம் சுமத்தியுள்ளார். இது இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 219ன் கீழ் குற்றமாகும். இதனால், வட்ட ஆய்வாளர் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளேன். அவருக்கு சட்ட அறிவிப்பும் அனுப்பிவிட்டேன். அந்த சட்ட அறிவிப்பு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




வட்ட ஆய்வாளர் அவர்கள் என்ன பதில் தரப்போகிறார்? காத்திருப்போம்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.04.2018


Friday, April 6, 2018

மருமகளுக்கு சொத்தில் பங்கு

கணவனை இழந்த ஒரு வயதான பெண்மணி. சுயசம்பாத்தியத்தில் அவருக்கென்று பல சொத்துக்கள் இருக்கிறது.  அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். துரதிருஷ்டவசமாக மகன் இறந்துவிடுகிறார். மருமகள் விதவை ஆகிறார். மகனுக்கென்று குழந்தைகள் இல்லை. இந்த சூழ்நிலையில்  எதிர்பாராவிதமாக அந்தப் பெண்மணியும் இறந்துவிடுகிறார். தான் சம்பாதித்து தனது பெயரில் வைத்துள்ள சொத்துகள் யார் யாருக்கு சேரவேண்டும் என்று எந்த ஒரு முன்னேற்பாடும் அந்தப் பெண்மணி செய்து வைக்கவில்லை. 
எனக்கும் பங்கு இருக்கிறது!
எனது கணவர் உயிரோடு இருந்தால் அவருக்கு சொத்தில் பங்கு கொடுப்பீர்கள்தானே! நான் அவருடைய வாரிசு என்பதால் எனக்கும் அந்த சொத்தில் உரிமை இருக்கிறது. அந்த சொத்தினை மூன்று சமபங்காக போட்டு, எனக்கு ஒரு பங்கு தர வேண்டும் என்று இறந்துபோன பெண்ணின் மருமகள் கேட்கிறார். கேட்பவர்களுக்கு இது நியாயந்தானே! என்று தோன்றும்.
சொத்து எங்களுக்கு மட்டும்தான்! 
இறந்துபோன பெண்ணின் மகள்கள் இருவரும், எங்கள் அம்மா பெயரில் இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே சொந்தம் என்று தங்களது அண்ணனின் மனைவிக்கு பங்குதர மறுக்கிறார்கள். இது அநியாயம், அந்தப் பெண்ணிற்கு ஒரு பங்கு கொடுத்தால் என்ன? அவருடைய கணவன் பங்கைத்தானே அவர் கேட்கிறார் என்று நமக்குத் தோன்றும். பிரச்சனை தீர ஊர் பெரியவர்கள் இறந்து போன பெண்ணின் மகள்களிடம்  பேசிப் பார்க்கிறார்கள். அவர்கள் ஒரே பிடிவாதமாக பங்கு தர மறுக்கிறார்கள். இந்த வழக்கு கோர்ட்டுக்குச் செல்கிறது. நீதிமன்றம் அந்த விதவை மருமகளுக்கு, மாமியாரின் சொத்தில் பங்கு இல்லை என்று தீர்ப்பளித்தது. 
சட்டத்தின் கொடுமை இது!
இதை கேட்பதற்கே நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? தனது பெற்றோரை, உடன் பிறந்தோரை, பழகிய பக்கத்து வீட்டு நண்பர்களை, சொந்த பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டு கணவனை மட்டுமே நம்பி, வாழ வந்த ஒரு பெண்ணுக்கு, கணவன் இறந்து போய்விட்ட சூழ்நிலையில் அவரது கணவனுக்கு உரிமையுள்ள சொத்தும் இல்லை என்றால், இது மிக மிக அநியாயமாக அல்லவா இருக்கிறது! 
சட்டம் என்ன சொல்கிறது?
மேற்கண்டது போல சுய சம்பாத்திய சொத்துக்கள் கொண்ட பெண் ஒருவர், அந்த சொத்துக்கள் குறித்து முன்னேற்பாடாக ஏதும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அந்த சொத்துக்கள் அவரது வாரிசுகளான, கணவர், மகன்கள், மகள்கள் ஆகியோருக்குச் சேரும் என்றும், ஒருவேளை மகனோ அல்லது மகளோ ஏற்கனவே இறந்துபோயிருந்தால் அவர்களது குழந்தைகளுக்குச் சேரும் என்று சட்டம் சொல்கிறது. மகனின் மனைவிக்கோ, மகளின் கணவனுக்கோ அந்த சொத்து சேராது. 
குறிப்பு: இந்த வழக்கு சம்பந்தமான விபரங்களை PROPERTY RIGHTS என்ற தலைப்பில் மரியாதைக்குரிய வழக்கறிஞர் திரு  த.இராமலிங்கம் அவர்கள் பேசி You Tube ல் பதிவு செய்துள்ள  வீடியோவில் இருந்து தெரிந்து கொண்டேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.04.2018