disalbe Right click

Wednesday, June 6, 2018

நீதிமன்ற அவமதிப்பு - (Contempt of court)

நீதிமன்ற அவமதிப்பு - (Contempt of court) 
ஒரு நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கை அமைதியாகவும், நியாயமாகவும் நடக்க சட்டம் பயன்படுத்தப்படுகிறது. அதனை செயல்படுத்துவதில் நீதிமன்றம் பெரும் பங்காற்றுகிறது. குற்றம் செய்தால் நாம் தண்டிக்கப்பட நேரிடும் என்பதாலேயே பலர் குற்றம் தவிர்த்து வாழுகின்றனர். ஒருவருடைய உரிமையோ அல்லது சொத்தோ பறிக்கப்படுகின்றபோது அவர் அதனை பெறுவதற்கு நீதிமன்றத்தையே நாடுகிறார். நியாயமான தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்படும் என்று மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். நாட்டு மக்கள் அமைதியாக வாழ்வதற்கும், நீதிமன்றத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பதற்கும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் இயற்றியுள்ளார்கள்.
ஒருவர் நீதிமன்றத்தில் வேண்டுமென்றே நீதியரசர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதும், நீதிமன்றத்தின் அல்லது நீதிபதியின் செயல்பாட்டில் இடையூறு செய்வதும், அல்லது ஒருவர் வேண்டுமென்றே நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு கீழ்படியாமல் இருப்பதும், நீதிமன்ற அவமதிப்பிற்குரிய செயல்களாகக் கருதப்படுகின்றது.
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1952 (Contempt of court)
இந்த சட்டத்தின்படி நீதிமன்றம் மற்றும் நீதித்துறையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் செயல்படுகின்ற தனிநபர்கள், நிறுவனங்கள், அரசாங்கம் மட்டுமல்லாமல் வழக்கறிஞர்களும், நடுவர்களும், நீதிபதிகளும் தண்டிக்கப்படுவார்கள்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக நடவடிக்கை எடுப்பது, நீதிபதிகளை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக்குவது, சட்ட ஒழுங்கை பராமரிப்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமநீதியை நிலைநாட்டுவது போன்ற காரணங்களுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 
இச்சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களுக்கு மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்து தண்டணை வழங்கும் அதிகாரம் இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் பணியாளர்கள், நீதித்துறை நடுவர்கள் மட்டுமல்லாமல் நீதிபதிகளையும்  கூட இச்சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும்
சமீபத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ் கர்ணன் அவர்கள் 2017ம் ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு  ஆறு மாத கால சிறைத் தண்டணை அனுபவித்தார்

Image result for சி.எஸ்.கர்ணன்
C.S.KARNAN
பதவியிலிருக்கும்போதே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை பெற்ற முதல் உயர்நீதிமன்ற  நீதிபதி சி.எஸ். கர்ணன் அவர்கள்தான்! என்பது குறிப்பிடத்தக்கது. 
நீதிமன்ற அவமதிப்பு பற்றிய வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் நடைமுறைகள்
  • இந்த வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டணை வழங்கப்படுகிறது. 
  • குற்றம் சாட்டப்படுபவர்க்கு அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும்.  அந்த வழக்கில் அவர் எதிர்வாதம் செய்வதற்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  • குற்றம் செய்த நபரை தண்டணைக்கு உள்ளாக்குவதற்கு முன்னர் அவர் மீதுள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிரூபிக்க வேண்டும்.
  • இந்திய சாட்சிய சட்டம் இந்த வழக்கில் பொருந்தாது.
  • குற்றம் சுமத்தப்பட்ட நபர் விருப்பத்தின் பேரில், அவர்மீது சுமத்தப்பட்ட குற்றமானது எந்த நீதிபதியின் முன் நடந்ததோ, அவரைத் தவிர்த்து வேறு நீதிபதி முன் வழக்கை நடத்திக் கொள்ளலாம்.
  • வழக்கானது முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினர் காவலில் வைக்கலாம். அது போன்ற சமயங்களில் அவர் தகுந்த Bail Bond தாக்கல் செய்து, அதன் பேரில் பெயில் அப்ளை செய்தால் அவரை விடுவிக்கலாம்.
  •  குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகி விடாமல் இருக்க, அவரது சொத்துக்களை தற்காலிகமாக நீதிமன்றம் ஜப்தி செய்யலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டணை வழங்கப்படும்?
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் செய்தவருக்கு பொதுவாக ஆறு மாத காலம் சாதாரண சிறைத் தண்டணை அல்லது ரூ.2000/- அபராதம் விதிக்கப்படலாம்.
  • குற்றமானது கடுமையாக இருந்தால், சிறைத் தண்டணையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படலாம்.
  • குற்றம் செய்தவர் தனது தவறை உணர்ந்து, நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டால், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டணையை குறைப்பதற்கோ அல்லது விடுதலை செய்வதற்கோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.
தண்டணையை எதிர்த்து மேல்முறையீடு
  • தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இரு நீதிபதிகளுக்குக் குறையாத அமர்வு நீதிமன்றத்திற்கு, உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம்.
  • அமர்வு நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்திற்கு  அப்பீல் செய்யலாம்.
  • அப்பீல் செய்யப்பட்டு அதன் பேரில் விசாரணை செய்து தீர்ப்பு வரும் வரையில் ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டணையை நிறுத்தி வைக்கலாம். 
  • குற்றவாளி அப்பீல் செய்யும் முன்னர், தண்டணை வழங்கிய நீதிமன்றத்திற்கு,  அப்பீல் காலம் முடியும் வரை அந்த தண்டணை உத்தரவை நிறுத்தி வைக்கவும், அவரை பெயிலில் விடுவிக்கவும் அதிகாரம் உண்டு.
என்ன காரியங்கள் செய்தால் அவை உரிமையியல் அவமதிப்பு ஆகும்?
  • நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தீர்ப்பாணை, வழிகாட்டுதல் உத்தரவு, நீதிப் பேராணை, மற்றும் வேறு வகையான கட்டளைகளுக்கு கீழ்படியாமல் இருத்தல்.
  • நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறுதல்.
  • வேண்டும் என்றே நீதிமன்ற உத்தரவுகளுக்கு கீழ்படியாமை மற்றும் நீதிமன்றத்தில்  கொடுத்த வாக்குறுதியை மீறுதல்.
    என்ன காரியங்கள் செய்தால் அவை குற்றவியல் அவமதிப்பு ஆகும்?
    • எந்த ஒரு நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் அவதூறாக பேசுதல், எழுதுதல் அல்லது மதிப்பிழக்கச் செய்தல்.
    • நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுதல்.
    • நீதிபதியின் பணியில் குறுக்கிடுதல், நீதி நிர்வாகத்தில் நீதிபதிக்கு மிரட்டக் கடிதம் அல்லது தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுதல், பேச்சு, எழுத்து, குறியீடு அல்லது சைகை ஆகிய ஏதாவது ஒரு வகையில் நீதி நிர்வாகத்தில் தலையிடுதல்.
    வழக்கறிஞர்கள் செய்யும் நீதிமன்ற அவமதிப்பு
    • நீதிமன்றத்தில் வாதாடும்போது நடுவர்களை,  நீதிபதிகளை அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவது.
    • தனது கட்சிக்காரருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பதற்காக, தெரிந்த உண்மையான தகவல்களை மறைத்தல்.
    • நீதித்துறையை விமர்சனம் செய்தல்.
    • நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்துக்குள் கோஷம் எழுப்புதல், ஏதாவது ஒரு காரணத்திற்காக நீதிமன்றத்தை புறக்கணித்தல், நீதிமன்ற நிர்வாகத்தில் தலையுடுதல்.
    நீதிபதிகள் செய்யும் நீதிமன்ற அவமதிப்பு
    • பிற நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறுதல்.
    • காரணமில்லாமல் வழக்கறிஞரை நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றுதல்.
    அரசாங்கங்கள் செய்யும் நீதிமன்ற அவமதிப்பு
    • அரசாங்கத்திற்கு எதிராக வழங்கப்பட்ட உத்தரவுகளை அரசாங்கமோ, அதிகாரிகளோ மீறுவது.
    ******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 06.06.2018 

    Tuesday, June 5, 2018

    அவசர உதவிக்கு KAVALAN Dial 100

    அவசர உதவிக்கு KAVALAN Dial 100 
             பொதுமக்கள் அவசர காலத்தில் காவல்துறையை தொடர்புகொள்ள KAVALAN Dial 100 மற்றும் KAVALAN SOS  என்ற செயலிகளை தமிழக முதல்வர் இன்று (05.06.2018) தொடங்கிவைத்தார்.
    கொலை, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனால், பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. பொதுமக்களின் பயத்தைப் போக்கும் வகையில், அவசர காலத்தில் காவல்துறையை எளிதாகத் தொடர்புகொள்ள KAVALAN Dial 100 மற்றும் KAVALAN SOS  என்ற ஆப் கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள KAVALAN Dial 100 மற்றும் KAVALAN SOS  என்ற இந்த ஆப்பை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆபத்தான நேரத்தில் அவசரமாக உதவி தேவைப்படுகின்ற காலத்தில் “100” என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியை நாம் தொடுவதின் மூலம், நேரடியாக மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள இயலும். அப்போது, தொடர்புகொள்பவர்களின் முகவரியும், அவர்கள் அப்போது இருக்கின்ற இடமும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியும். மேலும், அவர்கள் அந்த ஆப்பில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள் அல்லது நண்பர்களின் செல்போன் எண்ணுக்கு இருப்பிடத் தகவலுடன் எச்சரிக்கை குறுஞ்செய்தியும் உடனடியாக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! என நம்பலாம்.
    ********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.06.2018 

    Saturday, June 2, 2018

    நம்பரும் போயிடும்… பணமும் திருடப்படும்!” எச்சரிக்கை!


    நம்பரும் போயிடும்பணமும் திருடப்படும்!” – டிஜிட்டல் திருடர்களின் புதிய வழி
    தொழில்நுட்ப வளர்ச்சியால், டிஜிட்டல் உலகில் நன்மைக்கு ஈடாகப் பல தீமைகளும் நாள்தோறும் நிகழ்கின்றன. டெக்னாலஜியை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் குற்றவாளிகள் தற்போது புதிதாக `சிம்-ஸ்வாப்(SIM-SWAP) என்னும் முறையைக் கையாள்கின்றனர்.
    ஹைதராபாத் சைபர் க்ரைம் காவல் நிலையம் சில நாள்களுக்கு முன்பு ஃபேஸ்புக் பதிவில் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் தற்போது சிம்-ஸ்வாப் என்ற புது வழியில் குற்றங்கள் நடைபெறுவதாகவும், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைத் திருடிப் பண மோசடியிலும் அவர்கள் ஈடுபடுவதாக அதில் குறிப்பிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர்.
    `சிம்-ஸ்வாப்மூலம் மோசடி எவ்வாறு நிகழ்கிறது?
    புதிதாக சிம் கார்டு ஒன்றை வாங்கி, ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளும் குற்றவாளிகள், தங்களை வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக அறிமுகம் செய்துகொள்கின்றனர். அவ்வாறு தொடர்பு கொண்டு, “தங்களின் மொபைல் எண்ணுக்கு 10 ஜிபி இன்டர்நெட் இலவசமாகக் கிடைத்திருக்கிறது. அதை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் சொல்லும் 16 இலக்கு எண்ணை 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் இலவச இன்டர்நெட் பேக் ஆக்டிவேட் செய்யப்படும்என்று கூறித் தொடர்பைத் துண்டிக்கின்றனர். அவர்களால் புதியதாக வாங்கப்பட்ட சிம் கார்டில் இருக்கும் எண்ணைத்தான் அவர்கள் 16 இலக்கு எண்ணாக நம்மிடம் சொல்வார்கள்.
    அதாவது நமது மொபைல் எண்ணை 3ஜி வசதியிலிருந்து 4ஜி வசதிக்கு மாற்றுவதற்கு இந்த முறையைத்தான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்கின்றன. உங்கள் கையில் ஒரு வெற்று சிம்கார்டைக் கொடுத்துவிடுவார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்ட புதிய சிம் கார்டின் 16 இலக்கு எண்ணை 121 என்ற எண்ணுக்கு உங்கள் மொபைலிலிருந்து குறுஞ்செய்தியாக அனுப்பிய பிறகு சில நேரத்தில் உங்கள் பழைய சிம் கார்டு செயலிழந்துவிடும். பிறகு உங்கள் கையில் கொடுக்கப்பட்ட புதிய சிம்கார்டை மொபைலில் போட்டுப் பயன்படுத்தலாம். அது 4ஜி வசதிக்கு மாற்றப்பட்டிருக்கும்.
    அவ்வாறு ஒரு சிம்கார்டை வாங்கிக் கொள்ளும் இந்த நூதனத் திருடர்கள், ரேண்டமாக ஏதோ ஓர் எண்ணை, (உங்கள் எண் என வைத்துக் கொள்வோம்) அழைத்து இலவச இன்டெர்நெட் இருப்பதாக ஆசை காட்டுகின்றனர். உங்களை அதற்கான குறுஞ்செய்தி அனுப்ப வைப்பதன் மூலம் உங்கள் எண் அவர்கள் கைக்கு மாறிவிடுகிறது. அந்த மொபைல் எண்ணில் நீங்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளுக்கான செயலிகள் (Apps) மீண்டும் வேறு மொபைலில் பதிவிறக்கப்படும்போது உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) கூட அவர்களுக்கே செல்வதால் உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைச் சுலபமாகத் திருடிவிட முடியும்.
    கொஞ்ச நேரம் ரீசார்ஜ் கடையில் நின்றால் போதும். ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் குறைந்தது 5 எண்கள் நம் காதில் விழுந்துவிடும். அதைக் குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். அந்த எண் ஏர்டெல்லா, வோடோஃபோனா என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்கிறார்கள். புது சிம் ஆக்டிவேட் ஆனதும் பேடிஎம் போன்ற பணப்பரிமாற்ற ஆப்களை அவர்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். .டி.பி மூலம் அதுவும் ஆக்டிவேட் ஆகிவிடும். அதன்பின் நம் பணமும் களவுபோகும். அதோடு பாதிக்கப்பட்டவரின் மொபைல் நம்பரை வைத்துப் பல குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளன.
    இந்த மாதிரியான ஒரு குற்றவாளியிடம் சிக்கிய மும்பையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் வங்கிக் கணக்கில் இருந்த 24,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இதுவரை 20,300 க்கும் மேற்பட்ட சிம்-ஸ்வாப் வழக்குகள் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர்கள், “எப்போதும் எங்கள் மையத்திலிருந்து எக்காரணம் கொண்டும் தங்களுக்கு இவ்வாறு 16 இலக்கு எண்களைக் கொடுத்து அனுப்பச் சொல்ல மாட்டோம். மேலும் தங்களுக்கு வரும் OTP எண்கள் எதையும் அனுப்புமாறும் நாங்கள் கேட்க மாட்டோம். எனவே, அவ்வாறு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ வந்தால் அதற்குப் பதில் அளிக்காமல் எங்களிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்என்றனர்.
    இதே போன்ற தொழில்நுட்பக் குற்றங்கள் பல நிகழ்ந்து வருவதால், தங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் இலவச இன்டர்நெட் பேக், புதிய பிரத்யேக ஆஃபர் என்ற செய்திகளையும் அழைப்புகளையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துத் தொடர்ந்தால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கலாம்.
    கொஞ்சம் உஷாராகத்தான் இருந்தாக வேண்டியிருக்கிறது.
     ச.அ.ராஜ்குமார்
    நன்றி : விகடன் செய்திகள் - 28.05.2018 - https://www.vikatan.com 

    Friday, June 1, 2018

    எக்கேடும் கெட்டுப் போங்க! எங்களுக்கென்ன!

    பிரச்சனைகளுக்கும், வழக்குகளுக்கும் பஞ்சமே இல்லாத நம் நாட்டில், அதற்கு பெருந்துணை புரிவதற்காக, 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும்,   திருமணம் செய்யாமல்,   சேர்ந்து  வாழலாம் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம்  அறிவித்து இருந்தது.  
    அதனடிப்படையில் கேரள மாநிலத்தில், 18 வயது ஆணும், 19 வயது பெண்ணும்,   திருமணம்   செய்யாமல்சேர்ந்து வாழ்வதற்குஅம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

    (நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2018)
    இது போன்ற வேளைகளில்  தீர்ப்பளிக்கும் போது, நீதிபதிகள் நம் நாட்டு  கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மனதில் நிறுத்திவைத்து தீர்ப்பளித்திருக்க வேண்டும். 
    ஆனால், அளிக்கப்பட்ட மேற்கண்ட தீர்ப்பானது, உச்சநீதிமன்ற நீதிபதிகள்,  தாங்களுக்கும், தங்களது துறைக்கும் வேலை வாய்ப்பு குறையாமல் பார்த்துக் கொள்வதற்காக  ஏற்பாடு செய்து கொண்டது போல்   இருக்கிறது. 
    மேற்கண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் யாராவது ஒருவர்,  தங்களது வீட்டில் உள்ள ஆணையோ அல்லது பெண்ணையோ வேறு ஒரு பெண்ணுடணோ அல்லது வேறு ஒரு ஆணுடணோ திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு அனுமதிப்பார்களா? அல்லது அப்படி வாழ்ந்த ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ அவர்கள் வீட்டின்  மருமகனாகவோ, மருமகளாகவோ  ஏற்றுக் கொள்வார்களா?
    மற்ற நாட்டு மக்களும் விரும்புகின்ற நமது கலாச்சாரத்திற்கு இந்த தீர்ப்பின் மூலம் ஆழமான குழி தோண்டிய பெருமை நமது நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளையேச் சாரும். அந்தக் குழியில் மக்கள் விழுவதற்கு , நமது நாட்டின் மாண்பை கெடுப்பதற்கு மற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தயாராகி விட்டார்கள்.
    ---------------------------------------------------- வருத்தத்துடன் செல்வம் பழனிச்சாமி, 02.06.2018