disalbe Right click

Friday, August 10, 2018

மனைப் பிரிவு ஆவணங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை


மனைப் பிரிவு ஆவணங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை
அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளின் ஆவணங்களைப் பதிவு செய்யும் போது என்ன செய்ய வேண்டும்? என்பது  தொடர்பான புதிய நடைமுறை வரும் 13.08.2018 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது சம்பந்தமாக பதிவுத் துறைத் தலைவர் திரு ஜெ.குமரகுருபரன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை என்னவென்றால்,
கடந்த 20.10.2016-ம் தேதிக்கு முன்பாக வீட்டு மனையாகப் பதிவு செய்யப்பட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட மனைகளாகப் பதிவு செய்யலாம் என்று பதிவுத்துறையால் ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சார்பதிவகத்தின் பதிவு அலுவலர்கள் சரியாகச் செயல்பட்டுள்ளார்களா என்பதைச் சரிபார்த்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் (தணிக்கை) அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த புதிய நடைமுறை எதற்காக?
மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது இரண்டாவது பதிவு போன்ற விவரங்களைச் சரிபார்த்து அனுப்புவது ஒவ்வொரு மாவட்டப் பதிவாளர்களின் கடமை ஆகும். இவ்வாறு சரிபார்ப்பதற்கு மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்ட உத்தரவின் நகலை ஒவ்வொரு சார்பதிவக பதிவு அலுவலரிடம் இருந்தும் மாவட்டப் பதிவாளர்கள் (தணிக்கை) கேட்டுதான் பெற வேண்டியுள்ளது. அந்த நகலை சார்பதிவக பதிவு அலுவலர் அளிக்காமல் போனாலோ அல்லது அவர் வேறு அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாலோ போதிய தகவல்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், அங்கீகரிக்கப்பட்ட மனையையும் அங்கீகரிக்கப்படாத மனையாகக் கருதும் நிலை உருவாகிறது.
இனிமேல் என்ன செய்ய வேண்டும்?
இதனைத் தவிர்ப்பதற்கு மனைகள் குறித்த ஆவணங்களை இனிமேல் பதிவுக்காகத் தாக்கல் செய்யும் போது அங்கீகார உத்தரவு நகல் ஒன்றை ஆவணத்துடன் இணைக்க வேண்டும். இந்த உத்தரவு நகல் பதிவு ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதால், அந்த நகலில் சம்பந்தப்பட்ட அனைவரும் கையெழுத்திட வேண்டும். அதேசமயம், அசல் உத்தரவினை ஆவணத்துடன் இணைக்கக் கோரி பதிவு அலுவலர் கட்டாயப்படுத்தக் கூடாது.
இதனால் யாருக்கு என்ன பயன் ஏற்படும்?
உத்தரவின் நகல் ஆவணத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்படுவதால் எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட சொத்தினை வாங்குபவர்களுக்கும், பதிவு அலுவலர்களுக்கும் அது பயனுடையதாக இருக்கும். இப்புதிய நடைமுறை வரும் திங்கள்கிழமை 13.08.2018 முதல் நடைமுறைக்கு வருகிறது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.08.2018 

Thursday, August 9, 2018

மகளிர் சிறப்பு மையம்

மகளிர் சிறப்பு மையம்
சென்னை - ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மகளிர் சிறப்பு மையம் ஒன்று  தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கப்படும் மற்றும், பெண்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்..
இந்த மையத்தை தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல் துறை மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகிய 4 இடங்களில் கடந்த 03.08.2018 வெள்ளிக்கிழமை அன்று புதிதாக தொடங்கியுள்ளது.
இந்த சிறப்பு மையத்தில் பெண்கள் வன்கொடுமையிலிருந்து மீண்டு வாழ உளவியல், சட்டம் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் அதைச் சார்ந்த சேவைகள்  வழங்கப்படும்.
பெண்கள் சிறப்புப் பிரிவின் பணிகள் என்ன?
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணர்வுப் பூர்வமான ஆதரவு கிடைக்க ஏற்பாடு செய்தல்,
பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பம் மற்றும் சமூகத்தை சந்தித்து உரையாடுவதன் மூலம் அவர்களுக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்தித் தருதல்,
தேவை ஏற்படும் பட்சத்தில் காவல் துறையின் உதவிக்கு ஏற்பாடு செய்தல்,
சட்ட ஆலோசனை, சட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தல்,
மகளிரின் விருப்பத்தின் பேரில் சம்பந்தப்பட்ட ஆண்களிடம் பேசி வன்முறையை தடுக்க வழிவகை செய்தல்,
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புகலிடம், தொழில்பயிற்சி போன்ற சேவைகளை பெறுவதற்கான நிறுவனங்களை பரிந்துரை செய்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பராமரித்தல், ஆய்வு மேற்கொள்ளல், ஆலோசனை வழங்குதல்.
மகளிர் சிறப்பு மையம் செயல்படும் நாட்கள்
டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற இரண்டு சமூகப் (பெண்) பணியாளர்கள் இதற்கென்று பணி அமர்த்தப் பட்டுள்ளார்கள். இவர்கள் திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும்  இந்த சிறப்பு மையத்தில் பணியில் இருப்பார்கள்.  செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இவர்கள் நகரத்தில் களப்பணிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள்.
மகளிர் சிறப்பு மையம் செயல்படும் நேரம்
காலை 10 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டும் 
(திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும்)
மகளிர் சிறப்பு மையத்தை தொடர்பு கொள்ள.......
பாதிக்கப்பட்ட பெண்கள் 94983-36002 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு இந்த மையத்தின் சேவைகளைப் பெறலாம்.
 உதவி கோரும் பெண்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும்.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 09.08.2018 

Monday, August 6, 2018

காவல்துறையினருக்கு வார விடுமுறை

காவல்துறை நமது நண்பன்
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டுமா? என்ற கருத்தை முன்வைத்து சமீபத்தில் ஒரு நாளிதளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதனை நான் படிக்க நேர்ந்ததால் இந்த கட்டுரையை எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது.
அவர்களும் மனிதர்கள்தான்!
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்க வேண்டுமா? என்ற கேள்வியையே நான் வெறுக்கிறேன். அவர்கள் என்ன மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கும் குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று நமக்கு உள்ளதுபோல் அனைத்தும் இருக்கிறது. மற்ற துறையினரைவிட காவல்துறையினர் எல்லா நாட்களிலும் பணிபுரிவதால் பண்டிகை நாட்களில் கூட தங்கள் குடும்பத்தாருடன் இருக்க முடிவதில்லை.
உள்நாட்டில் பாதுகாப்பு அளிப்பவர்கள்
எல்லையில் நமது இராணுவத்தினர் நாட்டுக்கு வெளியில் இருந்து நமக்கு வருகின்ற ஆபத்துகளை தடுக்க இரவென்றும், பகலென்றும் பார்க்காமல் பணிபுரிகிறார்கள். அதேபோல் உள்நாட்டில் உள்ள சமூக விரோதிகளிடம் இருந்து நம்மைக் காக்க உழைப்பவர்கள் காவல்துறையினர். அரசு நிர்வாக அதிகாரிகளும், காவல்துறை மேலதிகாரிகளும் கலந்து பேசி காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விடலாம். ஒரு வேளை அவர்களது விடுமுறை நாளில் எதிர்பாராவிதமாக வேலை எதுவும் பார்க்க நேர்ந்தால், அந்த நாளுக்கு பதிலாக வேறு ஒரு நாளை ஏற்பாடு செய்து அவர்களுக்கு அந்த விடுமுறையை அளிக்கலாம்.
குறைவான எண்ணிக்கை
காவலர்களின் எண்ணிக்கையை காவல்துறையில் அதிகப்படுத்த வேண்டும். தற்போது உள்ள காவலர்களின் எண்ணிக்கையை வைத்து அதன் மேலதிகாரிகள் நிர்வாகம் செய்யமுடியவில்லை. ஒரு முனையில் கலவரம் நடைபெறுகிறது என்றால், பல முனைகளில் இருந்து காவலர்கள் அங்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு சென்று இறங்கிய நிமிடத்தில் இருந்து பணி புரிய வேண்டும். இது அவர்களுக்கு பணிச்சுமையையும், உடல்சோர்வையும் கொடுக்கிறது. அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நியமிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
காவல்துறை நமது நண்பன்
காவல்துறை பணி என்பது மக்களிடம் நெருங்கிப் பழகும் பொறுப்பான பணி ஆகும். அரசுப் பணியாளர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் வழங்க வேண்டும். வெயிலானாலும், மழையானாலும் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை அவர்கள் செய்ய வேண்டியதுள்ளது. வாரம் முழுவதும் பணிபுரிவதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. குடும்பத்தை கவனிக்க நேரமில்லை.
குறைகள் கண்டிப்பாக மறையும்!
காவலர்களின் பணியில் பல குறைகள் இப்போது தெரிகிறது. அதனால் அவர்கள் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகின்றனர். ஆளுங்கட்சியினரின் தலையீட்டாலும், சில தவறான மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்களினாலும் அவர்கள் சரியான பதில் கூட அளிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். சுயமாக சிந்தித்து முடிவெடுக்க அவர்களால் முடியாததற்கு பணிச்சுமை முக்கிய காரணம்.
இவர்களுக்கு வாரவிடுமுறை அளித்தால், இந்தத்துறையில் இப்போது உள்ள குறைகள் கண்டிப்பாக மறையும் என்பது எனது கருத்து.
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 06.08.2018