கைது, கையடைவு மற்றும் காவல் வைப்புக் கட்டளை - ஒரு அறிமுகம்!
கைது (Arrest)
கைது என்றால் காவல் துறை அதிகாரி அல்லது சட்டத்தால் அதிகாரம் பெற்ற ஒருவர் மற்றொருவரைத் தன்னுடைய கட்டுபாட்டில் கொண்டு வருவது.
காவல் வைப்புக் கட்டளை (remand)
ஒருவர் கைது செய்யப்பட்டபின் நீதிமன்றத்தில் அவரை ஒப்படைத்த பின்பு தான் remand என்ற பதம் சட்டத்தில் பயன்படுத்தபடுகிறது. Remand என்றால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றம் நீதிமன்ற காவலில் எடுத்துக்கொள்வது. காவல்துறை அதிகாரிகளுக்கு ஒருவரை Remand செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
கையடைவு (custody)
தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலே கையடைவாகும்.
கைது Arrest என்பதற்கும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது custody என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
Custody ல் கைது உள்ளது Arrest ல் custody இல்லை. அதாவது எல்லா Arrest ம் custody குள் வரும் எல்லா custody யும் Arrest க்குள் வராது.
ஒருவரை காவல்துறை கைது செய்தவுடன், இரண்டு வகையில் கைது செய்யப்பட்ட நபரை காவலில் வைக்கலாம். நீதிமன்ற காவல் (judicial custody) மற்றொன்று காவல் நிலைய காவல் ( Police custody) அல்லது காவலடைப்பு
காவல்துறை அதிகாரி குற்றம் சம்பந்தமாக ஒருவரைக் கைது செய்யும் போது கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் வைக்ககூடாது என்று CRPC section 57 குறிப்பிடுகிறது. 24 மணி நேரத்திற்கு மேல் ஒருவரை காவலில் அடைத்து வைப்பது மனித உரிமை மீறலாகும் அது அடிப்படை உரிமைக்கு எதிரானது என இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சரத்து 22 தெளிவுபடுத்துகிறது. அவ்வாறு யாரேனும் காவல்நிலையத்தில் சட்டத்திற்கு புறம்பாக அடைக்கப்பட்டால் அதற்கு illegal custody என்று பெயர். நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆனையாளர் ஒருவரை நியமித்து காவல் நிலையத்தில் அடைக்கப்பட்ட நபரைத் தேட... காவல் நிலையத்தை சோதனை செய்ய உத்தரவிடலாம் என குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 97 சொல்கிறது.
காவல் நிலையத்தில் சட்டத்திற்கு புறம்பாக அடைக்கப்பட்ட ஒருவரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தி கோயில் உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 226 ன் படியும் உச்சநீதிமன்றத்தில் சேர்த்து 32 ன் படியும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம்.
இந்த 24 மணி நேரம் அந்த வழக்கு சம்பந்தமாக புலன் விசாரணை செய்வதற்காக தானே தவிர அடித்து சித்திரவதை செய்வதற்கு அல்ல.
கைது செய்யப்படும் நபரை கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டுவர ஆகும் பயண நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
கைது செய்யப்பட்ட நபர் உடல் நிலை பாதிக்கப்பட்டவர் அல்லது கர்ப்பம் தரித்த பெண்ணாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதித்து காவல் துறை 24 மணி நேரம் தங்கள் கட்டுபாட்டில் வைத்து புலன்விசாரணை செய்யலாம் அதன் பின் நீதித்துறை நடுவரின் அனுமதி பெறவேண்டும்.
24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட நபரை நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற CrPC section 76 குறிப்பிடுகிறது.
கைது செய்யப்பட்டவரை நீதித்துறை நடுவரிடம் காவல்துறை ஒப்படைத்தவுடன் நீதிமன்றம் ஒப்படைக்கப்பட்டவரை நீதிமன்ற காவலில் எடுத்துக் கொள்ளும் section 167 CrPC.
அந்த வழக்கை புலன் விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நபரை மேலும் புலன் விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது எனக் காரணம் காட்டி மீண்டும் கைதுசெய்யப்பட்ட நபரை காவல் நிலைய காவலில் தங்களிடம் ஒப்படைக்க நீதித்துறை நடுவரிடம் மனு அளிக்கலாம்.
நீதித்துறை நடுவர் 15 நாட்களுக்கு மிகாமல் காவலடைப்பிற்கு உத்திரவிட முடியும் பெரும்பாலும் 15 நாட்கள் காவலடைப்பு கொடுக்கப்படுவதில்லை 7 நாட்களுக்கு உள்ளாகவே கொடுக்கப்படுகின்றன. பிணையில் விடும் குற்றங்களுக்கு காவல்நிலைய அடைப்பிற்கு உத்தரவிடமுடியாது.
காவலடைப்பு உத்தரவு வழங்கும் போது நீதித்துறை நடுவர் கைது செய்யப்பட்டவரிடம் ஆட்சேபனை ஏதும் இருக்கிறதா என்று கேட்கவேண்டும். கைது செய்யப்பட்ட நபர் காவல்நிலைய அடைப்புக்கு உத்தரவிட்டால் தான் சித்திரவதைக்கு உள்ளாகலாம்... காவல்நிலைய மரணம் கூட நிகழலாம் என்று கடுமையான ஆட்சேபனை தெரிவித்தால் காவலடைப்புக்கு உத்தரவிட மறுக்கலாம் அல்லது தேவையான நிபந்தனைகளின் பேரில் காவலடைப்பிற்கு உத்தரவிடலாம்.
காவலடைப்பின் போது வழக்கறிஞர் ஒருவர் உடன் இருக்கலாம். அவ்வப்போது நீதிமன்றத்தில் காவலடைப்பிற்கு உள்ளான நபரை ஆஜர் படுத்தவேண்டும். இரவு நேரங்களில் காவல்நிலையத்தில் வைக்கக்கூடாது என்று நிபந்தனைகளை நீதித்துறை நடுவர் விதிக்கலாம்.
கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலைய அடைப்பிற்கு காவல்துறை அதிகாரிகள் எடுப்பதற்கு காரணமே அடித்து சித்திரவதை செய்து உண்மையை கண்டறியத்தான் சில சமயங்களில் அடி தாங்காமல் செய்யாத குற்றத்தை தானாக ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவதால் ஏற்றுக்கொள்வதும் வாடிக்கையாக நடக்கிறது.
நீதிமன்றக் காவல் (Judicial custody)
நீதிமன்றக் காவல் என்பது கைது செய்யப்பட்டவர் காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் நீதிமன்றத்தின் கட்டுபாட்டில் இருப்பதாகும். நீதிமன்ற கட்டுபாட்டில் வைப்பது என்பது பெரும்பாலும் சிறைச்சாலையில் வைப்பதாகும்.
நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள ஒருவரை நீதிமன்ற அனுமதியின்றி காவல்நிலையங்களில் உள்ள சிறைக்கூடங்களில் வைக்கக்கூடாது.
நீதிமன்ற கட்டுப்பாட்டில் கைது செய்யப்பட்டவரை சிறையில் அடைக்க 15 நாட்கள் வரை மட்டுமே நீதிமன்றம் உத்தரவு அளிக்க முடியும். வழக்கின் புலன்விசாரணை முடியவில்லை என
காரணம் காட்டி நீதிமன்ற காவலை நீட்டிக்க அரசு தரப்பு கேட்டுக்கொண்டால் நீதிமன்றம் காவல் நீட்டிப்பை ஒவ்வொரு பதினைந்து நாளுக்கு ஒரு முறை நீட்டிப்பு செய்து உத்திரவிடவேண்டும்.
எப்படியாயினும் 90 நாட்களுக்குள் புலன்விசாரணை முடியவில்லை எனில் காவல் நீட்டிப்பு செய்ய நீதிமன்றம் மறுத்து கைது செய்யப்பட்டவரை பிணையில் விட வேண்டும்.பத்து ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படகூடிய குற்றத்திற்கு 60 நாட்களில் அரசுதரப்பு புலன் விசாரணை செய்து முடிக்கவேண்டும்.
இது தடுப்புக் காவல் சட்டத்திற்கு பொருந்தாது. தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை காவல் நிலையத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் வைக்கமுடியும். இதற்கு CrPC பொருந்தாது.
எம். ரஹ்மத்துல்லா, வழக்கறிஞர்.
By வழக்கறிஞர் சி.பி. சரவணன்
நன்றி : தினமணி நாளிதழ் - 03.09.2018