disalbe Right click

Thursday, September 27, 2018

காவல்துறை காவலர்கள் பரிதாப நிலையில் உள்ளார்களா?

காவல்துறை காவலர்கள் பரிதாப நிலையில் உள்ளார்களா?
எல்லா துறைகளிலும் தவறுகள் நடக்கின்றன. ஆனால், காவல் துறையில் நடக்கும் தவறுகளுக்கு மட்டும், ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. காவலர்களுக்கு ஆதரவாக பேச, இந்த நாட்டில் நாதியே இல்லை. காவலர்கள் மீதான தவறான புரிதலால் ஏற்படும் அதிருப்தி தான் இதற்கு காரணம்.
எங்களின் குரல், 'தினமலர்' நாளிதழில் வந்தால் தான், பலருக்கும் உண்மை நிலவரம் புரியும் என்பதால், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான நான், இந்த கட்டுரையை எழுதுகிறேன்காவலர்கள்உண்மையில்மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்பதைஇந்த கட்டுரையை படித்ததும் புரிந்து கொள்வீர்
அரசு வழக்கறிஞர்கள், 'அருமையானவர்!'

காவல் துறையினர் அனைவருமே யோக்கியவான்கள் என, சொல்லவில்லை. அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையுடன் தான் காவலர்கள், பணியில் சேர்கின்றனர். அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, பழக்கப்படுத்துவது, தவறுகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் பொதுமக்கள் தான்இரவு, பகல் பாராமல், வெயிலிலும், மழையிலும் போலீசார் செய்யும் சேவையின் மகத்துவம், சில போலீசார் வாங்கும், 50, 100 ரூபாயில் பறி போய் விடுகிறது.
அசம்பாவிதத்தை தடுப்பதற்காக, பொது இடத்தில் சட்ட விரோதமாக கூடுவோரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த பின், 'அவர்களை ஏற்றிச் செல்ல வாகனம், தங்க வைக்க மண்டபம், உணவு போன்ற ஏற்பாடுகளை செய்து விட்டீர்களா...' என, போலீசாரிடம் கேட்கும் உயரதிகாரிகள், 'அவற்றை எப்படி ஏற்பாடு செய்தீர்கள்' என, கேட்பதில்லைஇது போன்ற, மேலும் பல செலவுகளை சமாளிக்க, நேர்மையான காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், 'ஏரியா' பெரும்புள்ளிகளிடம் வளைந்து போக நேரிடுகிறது. இப்படி துவங்கும் பழக்கம், முடிவில் களங்கத்தில் முடிகிறது.காவல் நிலையத்திற்கு புகாருடன் ஒருவர் வருகிறார் எனில், கூடவே காவல் துறையினருக்கு ஒரு எதிரியும் வருகிறார் என்பதே யதார்த்தம். விசாரணை முடிவில், பாதிக்கப்படுபவர், விசாரித்த போலீஸ் அதிகாரிக்கு எதிரியாகிறார். அதுவே, பெரிய இடத்து பிரச்னை எனில், அச்சுறுத்தல்களையும் சமாளித்தாக வேண்டும்; சட்டத்திற்கும் பதில் சொல்லியாக வேண்டும்
இன்னும் பல பிரச்னைகளில், சில அமைப்பினரோ, வழக்கறிஞர்களோ, ஊடகத்தினரோ தலையிடுகின்றனர் எனில், அவர்களை சமாளிப்பது போலீசாருக்கு சுலபமான காரியமல்ல!அரசு மற்றும் நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும், காவல் துறைக்கு, அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், சட்டத்திற்கு உட்பட்டதே; அதை மீறி, அவர்களால் செயல்பட முடியாது; நீதிமன்றமும் சும்மா விட்டு விடாது.
தொடர் போராட்டம், கலவரம் போன்ற, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் போது, போலீசாருக்கு பணி நேரம் நீளும். அப்போது போலீசார், அதிலும், பெண் போலீசார் படும் கஷ்டங்களைப் பற்றி, பொது மக்கள் யாராவது யோசித்ததுண்டா? போலீசாருக்கும் வீடு, கணவன் - மனைவி, மக்கள் இருப்பர் என, நினைத்தது உண்டா
சினிமா என்பது அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக, இளம் வயதினரை கவரக்கூடியது. அதில் நகைச்சுவை காட்சிகள் என்றால், இருக்கவே இருக்கிறது காவல் துறை... எப்படியெல்லாம் களங்கப்படுத்தி காட்ட முடியுமோ, அந்த அளவுக்கு கேவலப்படுத்தி காட்டுகின்றனர்.
அரசின் உத்தரவுகளை அமல்படுத்துவதில், காவல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையிலும், தங்களின், விருப்பு - வெறுப்புகளுக்கும் சேர்த்து வேலை வாங்கும் ஆட்சியாளர்கள், அடுத்து எதிர்க்கட்சி ஆகும் போது, அரசின் கைப்பாவையாகி விட்டது என்றும் ஏவல் துறை என்றும் கொச்சைப்படுத்தி பேசுவது வழக்கமாகி விட்டது
நாட்டின் இறையாண்மைக்கும், சமூக பாதுகாப்புக்கும், எதிரான சில புல்லுருவி அமைப்புகள், ஆட்சியாளர்களுக்கும், போலீசாருக்கும் குடைச்சல் கொடுக்க நினைத்து, சில பிரிவினரையும், மாணவர்களையும் துாண்டி விடுகின்றனர்; சில அரசியல் தலைவர்கள், அவர்களை ஊக்குவிக்குகின்றனர். இச்செயலை, 'அரசியல் தந்திரம்' என, அவர்கள் கூறினாலும், பின்னாளில் அதுவே தீவிரவாதமாக உருவாகும் என்பதை, ஊக்குவிப்போர் உணர்வதில்லை.
அடாவடி அமைப்புகள், போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரும் போது, போலீசார் அனுமதி மறுத்தால், நீதிமன்றத்தை நாடி அனுமதி பெறுகின்றனர். அதன் பின் நடக்கும் கூட்டத்தில், தடை ஆணை பிறப்பித்த அப்பகுதி காவல் அதிகாரிகள், போலீசாரை கேவலமாக பேசுவதுடன், மிரட்டலும் விடுப்பது வழக்கமாகி விட்டது!எவ்வளவு கேவலமாக பேசினாலும், அவர்கள் கலைந்து செல்லும் வரை பாதுகாப்பு அளிப்பது போலீசாரே!
மேலை நாடுகளில் குற்றம் சுமத்தப்பட்டவர் தான், குற்றவாளி இல்லை என்பதை, நீதிமன்றங்களில் நிரூபித்தாக வேண்டும். ஆனால் இங்கு, போலீஸ் தரப்பு தான், நிரூபிக்க வேண்டி உள்ளதுதொடர்ந்து பல குற்றங்களை செய்வோர், மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சட்டத்தில் உள்ள ஓட்டை களை பயன்படுத்தி, குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர், சில வழக்கறிஞர்கள்.அந்த குற்றவாளிகளால் சிதைந்து போன குடும்பங்களின் நிலை பற்றி, வழக்கறிஞர்கள் சிந்திப்பதில்லை. சிறையும், விடுதலையும் சுலபமாவதால், குற்றவாளிகளுக்கு, சட்டம் மற்றும் போலீசார் மீதுள்ள அச்சம் போய் விடுகிறது; இவர்களுக்கு அரசியல்வாதிகளின் அரவணைப்பு வேறு... இப்படியிருக்க, 'ரவுடியிசம் அதிகரிக்க, போலீசார் தான் காரணம்' என்ற அவச்சொல், போலீசார் மீது பாய்கிறது.
வழக்கு பதியப்பட்டு, அதன் மீதான புலனாய்வு முடிவுற்ற நிலையில், அரசு வழக்கறிஞரின் வழிகாட்டுதல் படியே, புலனாய்வு அதிகாரியான போலீஸ் அதிகாரி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறார். தீர்ப்பு வரை, அவ்வழக்குக்காக வாதிடுபவர், அரசு வழக்கறிஞரே! அப்படியிருக்க, எதிர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து விட்டால், கண்டனங்கள் போலீஸ் அதிகாரியையே சேர்கிறது; கோட்டை விட்ட, அரசு வழக்கறிஞரை யாரும் வசை பாடுவதில்லை.
உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நக்சல்களை, போலீசார் கைது செய்தால், அவர்களுக்கு ஆதரவாக வரும், மனித உரிமை ஆணையம், நக்சலைட் தாக்குதலால், கொத்து கொத்தாக கொல்லப்படும் போலீசார் பற்றி கண்டுகொள்வதில்லை.'ஒட்டுமொத்த போலீசாருக்கும் ஒரு நாள் ஓய்வு கொடுத்துப் பாருங்கள்... நாடு என்னவாகும்...' என, சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதுவல்ல போலீசாரின் நோக்கம். நள்ளிரவு, அதிகாலை, மதியம் என, எந்நேரமும் கடமையாற்ற பணிக்கப்பட்டவர்கள் காவலர்கள்
நகை திருட்டு வழக்குகளில், குற்றப்பிரிவு போலீசார் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். திருடனை பிடித்து வரும் போலீஸ், 'டீம்' திருடிய நகைகளை அவன் விற்ற, பிற மாவட்ட எல்லைகளில் உள்ள அடகு கடைக்காரரை அணுகினால், 'திருட்டு நகைகளை வாங்கவில்லை' என, அவர் சாதிப்பார் அல்லது தலைமறைவாகி விடுவார்.அவருக்கு ஆதரவாக, 'பான் புரோக்கர்கள்' சங்கம் வரும்; பாதி அளவு நகைகளை தருவதாக, பஞ்சாயத்து பேசும். இதற்கு, குற்றப்பிரிவு டீம் மறுத்து, திருட்டு நகையை, தெரிந்தே வாங்கிய குற்றத்திற்காக, அடகு கடைக்காரரை கைது செய்ய முயலும்; உடனே, சங்கம் போராட்டம் அறிவிக்கும்அப்போது, அப்பகுதி போலீசார், 'எங்கள், 'லிமிட்'டில் பிரச்னை ஏற்படுத்தாதீர்கள்' என்பர். அவர்களை சமாளித்து, அடகுக்கடைக்காரரிடம் இருந்து, கிடைத்ததை வாங்கி வருவர்
இதற்காக அந்த திருடனை ஒரு வாரம், குற்றப் பிரிவு போலீசார் தான் வைத்திருக்க வேண்டியிருக்கும்.அவனுக்கு சாப்பாடு வாங்கி போட்டு, பாத்ரூம் அழைத்து சென்று, அவன் கூறும் இடங்களுக்கு எல்லாம் கூட்டிச் சென்று... தாவு தீர்ந்து விடும். ஆனால், அந்த சிரமங்கள் வெளியே தெரியாது. 'திருடனை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்' என, நாளிதழ்களில் செய்தி வரும்பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுடன், அவசர கதியில் ஆவணங்கள் தயார் செய்து, கைதியுடன் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்வர். 'கைது செய்து, 24 மணி நேரத்திற்கு மேலாகி விட்டது' என, காரணம் காட்டி, குற்றவாளி தரப்பில் போடப்படும் ஜாமின் மனுவுக்கு, போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தால், அதையே காரணம் காட்டி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க, மனித உரிமை கமிஷனுக்கு புகார் பறக்கும்.
விசாரணை முடிவில், திருடனை கைது செய்த காவல் அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யச் சொல்லி, நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும். இப்படி, திருடியவனுக்கும், திருட்டுப் பொருளை வாங்கியவனுக்கும், ஜாமின் போட்டவருக்கும், திருட்டு கொடுத்தவருக்கும் பகையாளியாக ஆகின்றனர், குற்றப்பிரிவு போலீசார்.
அனாதை சடலங்கள் மீதான போலீசாரின் பணி, அளப்பரியது. மனநலம் பாதித்தும், குடும்பத்தினரால் கைவிடப்பட்டும், அனாதைகளாக பொது இடங்களில் இறந்து கிடப்போருக்கு, சொந்த பந்தங்களே போலீசார் தான்தகவல் கிடைத்த உடன், அவ்விடம் சென்று உடலை பாதுகாப்பது; இறந்தவரை போட்டோ எடுத்து, அக்கம் பக்கம் விசாரிப்பது; விரல் ரேகைகளை எடுப்பது; உடலை, 'பேக்' செய்வது, பிரேதத்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது; பரிசோதனைக்குப் பின், பிணவறையில் வைக்கச் செய்வது, போலீசாரின் வேலைகள்!
அந்த நபரின் போட்டோவை, 'பிரின்ட்' போட்டு, துண்டு பிரசுரம் தயார் செய்து, மாவட்டத்தில் உள்ள பிற காவல் நிலையங்களுக்கு அனுப்புவது; மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அவற்றை ஒட்டச் செய்வது, போலீசாரின் அடுத்த வேலைகள்இறந்தவருக்கு யாரும் உரிமை கோராத நிலையில், சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று, கொள்ளி மட்டும் போடாமல், பிற அனைத்து வேலைகளையும், போலீசார் தான் செய்கின்றனர்
ராணுவம் மற்றும் பிற துணை ராணுவ படையினரின் சேவை, ஒப்பிட முடியாதது தான். ஆயுதம் தாங்கி வருவோர் மட்டுமே அவர்களுக்கு எதிரிகள். ஆனால், போலீசாரின் எதிரிகளுக்குத் தான் எத்தனை முகங்கள்... அத்தனையும் தாண்டி, எதிரிகளையும், பொதுமக்களாக பாவிக்கும் கடமை, போலீசாருக்கு மட்டுமே உள்ளது.போலீசாரால் நிம்மதியாக துாங்க முடியாது; குடும்பத்தை கவனிக்க முடியாது; தன் உடல் நலத்தை பேண முடியாது. அந்த அளவுக்கு பணிச்சுமை இருக்கும்.இப்படி, பல விதமான சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் போது, சிலவற்றில் சறுக்கினாலும், அதிலிருந்து மீண்டு, தெம்புடன் பயணிக்கும் காவல் துறையினரின் வெற்றிகள் கணக்கிடப்படுவதில்லை.மாறாக, தோல்விகளைத் தான் மிகைப்படுத்தி காட்டுகின்றனர்; எழுதுகின்றனர்
பாராட்ட வேண்டாம்; களங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும்!
- எஸ்.லிங்கேஸ்வரன்- -காவல் உதவி ஆய்வாளர் - பணி நிறைவு
- மெயில்:LINGS.1143@gmail.com
நன்றி :  தினமலர் நாளிதழ் - 23.09.2018 

Friday, September 21, 2018

எப்.ஐ.ஆர்., பதிவு கோரிய மனுக்கள்


எப்..ஆர்., பதிவு கோரிய மனுக்கள்
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
பல்வேறு வழக்குகளில், எப்..ஆர்., பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, 1004 மனுக்கள் மீது, உயர் நீதிமன்றக் கிளை நிர்வாக நீதிபதி, எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி, என்.சதீஷ்குமார் ஆகியோர்கள் கொண்ட அமர்வு முன், கடந்த 19.09.2018 அன்று பட்டியலிடப்பட்டன.  
நீதிபதிகள் போட்ட உத்தரவு
பாதிக்கப்பட்டவர்கள் முதலில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்.
அதற்கு நடவடிக்கை இல்லை எனில், காவல்துறையின் உயரதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
 அதற்குப்பிறகும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாவிட்டால், அந்தப் பகுதிக்குரிய கீழமை நீதிமன்றத்தை நாட வேண்டும்.
 பெரிய குற்றங்கள் மற்றும் துறை அதிகாரிகளின் தலையீடு உட்பட, அரிதிலும் அரிதான குற்றங்கள் தொடர்பாக மட்டுமே, எப்..ஆர்., பதிவு செய்ய உத்தரவிடுமாறு, உயர் நீதிமன்றத்தை நாடலாம்.
 காவல்நிலையம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்யாமல், நேரடியாக உயர் நீதிமன்றத்தை புகார்தாரர்கள் நாடக் கூடாது.
 காவல்நிலையத்தில் புகார் அளித்த, 15 நாட்களுக்கு பின் தான் உயர் நீதிமன்றத்தை புகார்தாரர்கள் அணுக வேண்டும்.
 புகார் அளித்த, ஏழு நாட்களில், அதன் மீது, எப்..ஆர்., பதிவு செய்யப்பட்ட விபரத்தை அல்லது புகார் முடிக்கப்பட்ட விபரத்தை, புகார்தாரரிடம் காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும்.
புகார் முடிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, நிவாரணம் தேடி, உயர் நீதிமன்றத்தை அணுகக் கூடாது.
 உரிய இடத்தில்தான் புகார்தாரர்கள் நிவாரணம் தேட வேண்டும்.
என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் – 20.09.2018 
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.09.2018